திராவிடம் வெல்லும் - ஆரியம் புதைக்குழி செல்லும்!
'நாங்கள் ராமரை நிர்வாணமாகப் போடவில்லை. அவருக்குச் செருப்பு மாலை போடவில்லை. யாரோ எங்களைப் பார்த்து வீசிய செருப்பை எடுத்துத்தான் உங்கள் ராமரை அடித்தோம். எனவே ரஜினி கூறியது பொய்; அவர் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று கூறுகிறார் தற்காலிக ராம பக்தரான கி. வீரமணி. சேலம் ஆபாச ஊர்வலம் பற்றிய செய்தியை 'துக்ளக்' வெளியிட்டது என்றுதானே கூறினார் ரஜினி. எனவே 'துக்ளக்' வெளியிட்ட செய்தி உண்மையா - பொய்யா என்பதுதானே பிரச்சினை. ரஜினி பொய் கூறுகிறார் என்று எப்படி சொல்ல முடியும்?' என்று திருவாளர் குருமூர்த்தி தன் பெயரிலே 'டியர் மிஸ்டர் வாசகரே' பகுதியில் எழுதியுள்ளார்.
ஓ, அப்படியா? ரஜினி பொய் சொல்லவில்லை, துக்ளக்தான் பொய்யாக எழுதியது என்கிறாரா
கு. அய்யர்?
அடேயப்பா, ரஜினியைப் பாதுகாக்க 'துக்ளக்'கையே பலி கடாவாக்கத் துணிந்து விட்டாரே குருமூர்த்தி.
'துக்ளக்' என்ன குருமூர்த்தியால் துவங்கப்பட்டதா? சோ மறைவிற்குப் பிறகு அவர் குடும்பத்திலிருந்து அபகரிக்கப்பட்டதுதானே.
ஆக ரஜினியை வைத்து ஆட்டம் போட 'சர்வ பரித்தியாகம்' செய்ய முடிவு செய்து விட்டது அக்கிரகாரம் - இதற்கு இன்னொரு காரணம் உண்டு; ரஜினியின் வட்டாரமே அவாள்தானே!
கெட்டிக்காரன் புளுகுக்கே உச்ச வரம்பு எட்டு நாள். குருமூர்த்திகளுக்கு அவ்வளவு எல்லாம் தேவைப்படாது. 'துக்ளக்' இதழுக்குள்ளேயே அவரின் மூக்கை உடைக்க ஆள் இருக்கிறார் என்பதுதான் அந்தத் தமாஷ்.
'சோ' காலத்திலிருந்து 'துக்ளக்'கில் பணிபுரியும் தோழர் ரமேஷ் அளித்த ஒரு பேட்டியில் ராமன் சீதை படங்கள் நிர்வாணமாகக் கொண்டு வரப்பட்டது என்று 'துக்ளக்' வெளியிடவில்லை என்று கூறிவிட்டாரே!
அய்யோ, பாவம் குருமூர்த்திகள் - உரலுக்கு ஒரு பக்கம் இடி - இவாளுக்கு இரு பக்கமும் இடி! இடி!!
மீண்டும் சொல்லுகிறோம் - இராமன் சீதை படங்கள் நிர்வாணமாகக் கொண்டு வரப்படவில்லை; செருப்பு மாலை போட்டுக் கொண்டு வரப்படவுமில்லை. தந்தை பெரியாரோ, வீரமணியோ செருப்பாலடிக்கவில்லை என்பதைத் திரும்பத் திரும்ப உண்மையையே தான் கூறி வருகிறோம்.
செருப்பாலடிக்க அஞ்சியோ - தயங்கியோ, குருமூர்த்தி எழுதுவதுபோல ராமன்மீது பக்தியோ அல்ல - அந்த ஊர்வலத்தில் அந்தத் திட்டமும் கிடையாது. அந்த ஊர்வலத்தில் நடக்காததை நடந்ததாகக் கூறும் போது அந்த பூணூல்தனங்களை தோலுரித்துக் காட்டுவதுதான் எங்கள் நோக்கம்.
இன்னொன்றுக்கு இந்தக் கூட்டத்திடமிருந்து பதில் இல்லை; நாங்கள் திரும்பத் திரும்பக் கூறும் அந்த முக்கிய தகவல் பக்கம் தலை வைத்துப் படுக்காமல் இந்தக் கூட்டம் துண்டைக் காணோம் - துணியைக் காணோம் என்று ஓட்டம் பிடிப்பது ஏன்?
சேலம் ஊர்வலத்தை எதிர்த்துக் கருப்புக் கொடி காட்ட வந்த ஜனசங்கத்தினர் ஊர்வலத்தில் அழைத்து வரப்பட்ட பெரியாரை நோக்கி செருப்பை வீசியதுபற்றிய அந்தத் தகவல்தான் அது.
'துக்ளக்கும் சரி, துக்ளக் என்ற மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய ரஜினியும் சரி, செய்தியாளர்கள் எழுப்பிய அதுபற்றிய கேள்விக்கு பதில் சொல்லும் நாணயம் இல்லாமல், விழுந்தடித்து ஓடியது ஏன்?
செய்தியாளர்கள் சந்திப்பு என்ற நிலையில் பொய் யான தகவலை மட்டும் கூறிவிட்டு, செய்தியாளர்கள் எழுப்பும் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டிய தார்மீகப் பொறுப்பை புறந்தள்ளி, அவசர அவசரமாக வீட்டுக்குள் ரஜினி ஓடிப் பதுங்குவானேன்!
சேலம் நிகழ்வு சம்பந்தமாக அவாளுக்குள்ளேயே முரண்பாடுகள் முண்டா தட்டுகின்றன. 'விஜயபாரதம்' எனும் ஆர்.எஸ்.எஸ். இதழில் (31.1.2020). எஸ்.ஆர். சேகர் என்பவர் எழுதிய கட்டுரையில், ஜனசங்கத்தினர் அரசு அனுமதி பெறாமல் கருப்புக் கொடி காட்டியதாக எழுதி யுள்ளார். அவருடைய மொழியிலேயே கூற வேண்டுமா னால் அசல் ஜமக்காளத்திலேயே வடி கட்டிய பொய் இது.
கலைஞர் அரசு அனுமதி அளித்துதான் - அந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. காவல்துறை அனுமதி மறுத்து இருந்தால் ஜனசங்கத்தினரை ஆங்கே, கருப்புக் கொடி யுடன் கூட அனுமதித்து இருப்பார்களா!? ஆளைக் கண்டவுடன் 'அலேக்காக'த் தூக்கிச் சென்று இருக்க மாட்டார்களா?
கருப்புக் கொடி காட்ட பெருந்தன்மையாக முதல் அமைச்சர் கலைஞர் அரசு அளித்த அனுமதியைக் கூட இருட்டடிப்பது - உண்மையை மாற்றி எழுதுவது எதைக் காட்டுகிறது? ஒரு சின்ன விஷயத்தில்கூட அவாளுக்கு இருக்கும் துவேஷமும், ஆத்திரமும், காழ்ப்பும் எந்த அளவுக்குத் திமிரி நிற்கிறது என்பதற்கான அடையாள மாகும்.
'துக்ளக்'கில் சத்தியமாக, சத்தியம் பேசுவதில்லை என்ற முடிவுடன் 'சத்யா' என்ற பெயரில் ஒருவர் கட்டுரை தீட்டியுள்ளார்.
இதோ அவர் எழுதுகிறார்:
"போதாக் குறைக்கு வீரமணி அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றில், பெரியார் ராமனைச் செருப்பால் அடிப்ப தற்கு முன்பு தி.மு.க. 138 இடங்களில் வெற்றி பெற்றது. செருப்பால் அடித்த பிறகு 183 இடங்களில் வெற்றி பெற்றது என்று பெருமையுடன் கூறியுள்ளார். மேலும் 'இப்போதா பெரியார் இப்படிச் செய்கிறார்? முப்பது ஆண்டுகளாக இதைத்தானே செய்கிறார்?' என்று அப்போதைய பிரதமர் இந்திரா கூறியதையும் நினைவு கூர்கிறார்; செருப்பால் அடிக்கப்பட்டது என்று வீரமணி கூறியது பொய்யா? செருப்பால் அடிக்கவே இல்லை என்று சில தி.க.வினர் இப்பொழுது மறுப்பது பொய்யா என்பதை அவர்கள்தான் விளக்க வேண்டும்" என்று எழுதப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் உள்ள ஒன்றைக் கவனிக்க வேண்டும்.
"பெரியார் ராமனைச் செருப்பால் அடிப்பதற்கு முன்பு' என்று விஷமம் செய்கிறதே - பெரியார் ராமனை செருப்பால் அடித்ததாக வீரமணி எங்கே சொன்னார்"
இந்த விஷமத்துக்கு பெயர்தான் பூணூல் புத்தி என்று பொருள் ('சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றிக் கொண்டா லும் பார்ப்பனன் தன் பிறவிப் புத்தியை மாற்றிக் கொள் ளவே மாட்டான்' என்ற டாக்டர் டி.எம். நாயரின் பொருள் பொதிந்தபொன்மொழியை இந்த இடத்தில் நினைவு கூர்க!)
அடுத்த வரியைக் கவனியுங்கள் - அதைவிட அபத்தம் - 'அக்மார்க்' பொய் மூட்டை!
செருப்பால் அடிக்கப்பட்டது என்று வீரமணி கூறியது பொய்யா. செருப்பால் அடிக்கவே இல்லை என்று சில தி.க.வினர் இப்போது மறுப்பது பொய்யா என்பதைக் கவனிக்க வேண்டும் அவர்கள்தான் இதை விளக்க வேண்டும் என்று எழுதுகிறார் தோழர் சத்யா.
செருப்பால் அடிக்கவே இல்லை என்று திக.வினர் எங்கேயும் சொல்லாத ஒன்றை சொன்னதாக, தாங்களா கவே இட்டுக் கட்டிச் சொல்லுவது ஆரோக்கியமானது தானா - வேண்டுமானால் அற்பத்தனம் என்று கூறலாம்.
பெரியார்மீது வீசப்பட்ட செருப்பு - ராமன்மீது திரும்பியது என்பதே உண்மை.
அடுத்த பகுதி அதைவிட முக்கியமானது. அவாளின் முழு உருவமும் - அறிவுச் சூன்யமும் எந்தத் தரத்தில் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா?
"பொதுவாக நம் நாட்டில் சிறுபான்மையினர் மத அடிப்படையிலும், தீவிரப் பற்றுள்ள ஹிந்துக்கள் தவிர்த்த மற்ற ஹிந்துக்கள், கட்சி அடிப்படையிலும்தான் வாக்களிக்கின்றனர். ஹிந்து எதிர்ப்பு நடவடிக்கைகளை எப்போதுமே பெரும்பாலான ஹிந்துக்கள் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை; அவற்றைக் கோமாளித்தன மாகக் கருதி அலட்சியப்படுத்தியே வந்துள்ளனர். அப்படி, சீரியஸாகக் கருதியிருந்தால் கருணாநிதியின் ஹிந்து விரோதப் பேச்சுகளுக்கு திமுக டெபாசிட்டே வாங்க முடியாத நிலை பல முறை தோன்றியிருக்கும். ஒருமுறை அப்படி நடந்திருந்தாலே கருணாநிதி அப் படிப் பேசுவதை நிறுத்தியிருப்பார்" - இதுவும் அவரேதான்.
இது உண்மையா? 'துக்ளக்'கும், 'தினமணி'யும், 'இந்து'வும், 'இந்தியன் எக்ஸ்பிரசும்' செய்யாத பிரச் சாரமா? அதுவும் 'தினமணி'யில் சிவராமன் போடாத பெட்டிச் செய்தியா - வேண்டாத கடவுள்களா?
'சோ' ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்ய வில்லையா? முதிய வயதிலும் ராஜாஜி ஓடி ஓடிப் பிரச் சாரம் செய்யவில்லையா? இவற்றையெல்லாம் ஏன் மூடு திரை போட்டு மறைக்க வேண்டும்? தன்னை அறியா மலேயே ஒன்றை ஒப்புக் கொண்டு விட்டாரே!
இந்தப் பிரச்சாரம் எல்லாம் உண்மைதான். தமிழ் நாட்டு மக்கள் அவற்றை எல்லாம் குப்பைக் கூடையில் தூக்கி எறிந்து விட்டு, பெரியார் பக்கமே நின்றனர். கலைஞர் பக்கமே நின்றனர் என்பதை 'துக்ளக்' ஒப்புக் கொண்டு விட்டதே!
ஹிந்துக்கள் சிரீயஸாக எடுத்துக் கொள்ளவில்லை யாம். உண்மைதான் - ஹிந்து என்பதன் தத்துவமே பிறவியில் வருணபேதத்தைக் கருவாகக் கொண்டது. பார்ப்பான் பிர்மாவின் முகத்தில் பிறந்தவன் - அவன் கடவுளுக்கு மேலே, பெரும்பாலான மக்கள் சூத்திரர்கள் - அதாவது வேசிமக்கள் என்று கூறுவது தான் ஹிந்து தத்துவம்!
இராமன் என்பவன் சூத்திரன் சம்பூகன் தவமிருந்த தற்காக அவனை வாளால் வெட்டிய கொலைகாரன் - வருண தர்மத்தைக் காப்பாற்றிட அவதாரம் எடுத்ததாகக் கூறுவதுதான் ஹிந்து மதம் என்ற தந்தை பெரியாரின் உண்மைப் பிரச்சாரத்தை உள்வாங்கிக் கொண்ட காரணத்தால் அவாளின் ஹிந்துப் பருப்பு வேகவில்லை, என்பது நினைவில் இருக்கட்டும் - இப்பொழுதும்கூட பிஜேபி இந்த 'ஹிந்து' விஷயத்தைத் தலையில் தூக்கிக் கொண்டு தமிழ்நாட்டில் கூவிக் கூவி விற்றாலும் போனியாகவில்லை என்பதும் நினைவில் இருக்கட்டும்.
ஹிந்து மதம் என்பது பார்ப்பனத் தன்மையானது - அவாளின் ஆதிபத்தியத்தை மட்டுமே ஆழமாகக் கொண்டது என்று உணர்ந்ததாலும் 1971 சேலம் நிகழ்வை வைத்து ஆரியர் 'நிர்வாணமாக ஆட்டம் போட்டதாலும்' தானே கடவுள் நம்பிக்கையாளரான தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள்
"இன்றைய ஆஸ்திகம் என்பது சிறுபான்மையினர் நலம்; இன்றைய நாத்திகம் என்பது பெரும்பான்மையினர் நலம் - உங்களுக்கு எது வேண்டும்?' என்று குறள் போல இரத்தினச் சுருக்கமாக அறிக்கையினை வெளியிட்டார்.
ஏதோ ஹிந்துக்கள் ஹிந்து எதிர்ப்பு நடவடிக்கைகளை சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை அப்படி சீரியஸாக எடுத்திருக்கும் ஹிந்து விரோதப் பேச்சுகளுக்கு திமுக டெபாசிட்டே வாங்க முடியாத நிலை பல முறை தோன்றி யிருக்கும் என்று சப்பைக் கட்டுக் கட்டுகிறார் 'துக்ளக்' எழுத்தாளர்.
ஹிந்து முழக்கம் எல்லாம் முழங்கிப் பார்த்து முற்றாகத் தோல்வியைக் கட்டிக் கொண்டு புரண்ட நிலையில் - அவாளின் மூதறிஞர் ராஜாஜி தேர்தல் முடிவில் என்ன எழுதினார்?
"இனி தமிழகம் ஆஸ்திகம் வாழத் தகுதி இழந்து விட்டது. இந்த ராஜ்ஜியத்தை விட்டே வெளியேறிவிட வேண்டும் என்று சில மகா புருஷர்கள் உள்படப் பலர் எண்ணத் தொடங்கி விட்டனர்" என்று ராஜாஜி கையொப்பமிட்டுக் 'கல்கி'யில் (4.4.1971) எழுதினாரே? இதற்கு என்ன பதில் 'துக்ளக்'காரே?
ஹிந்து ஆஸ்திகம் தமிழ்நாட்டில் பெரியாரின் தத்துவக் கோட்பாடுகளுக்கு முன் மண்டியிட்டுத் தோற்று விட்டது என்று மண்டியிட்டு ஒப்புக் கொண்டதற்குப் பிறகு - குப்புற வீழ்ந்தாலும் பூணூலில் மண் ஒட்டவில்லை என்று எழுதுவது எல்லாம் அவாள் இன்னும் திருந்த வில்லை, ஆரிய மமதை அடங்கவில்லை; மேலும் மேலும் திராவிடத்தின் முன் ஆரியம் தோற்று, தோற்றுக் கொண்டே போய், புதை குழியில் வீழும் என்பதற்கான அடையாளம்.
திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி மீது அந்தக் கூட்டம் ஆத்திர அனலைக் கக்குகிறது - இட்டுக் கட்டி எழுதுகிறது என்றால், அதற்குக் காரணம் பெரியார் வழியில் அட்சரம் பிறழாமல் மானமிகு வீரமணி வீறு நடை போடுகிறார் என்பதற்கான நற்சான்றுகளே!
- விடுதலை நாளேடு, 3.2.20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக