- மின்சாரம்
கேள்வி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆண் பக்தர்களை சட்டை பனியன் கழற்றச் சொல்லுவது ஏன்?
பதில்: எளிமையான உடையில் பணிவோடு இறைவனை வணங்க வேண்டும் என்பதற்காக (ஆர்.எஸ்.எஸ். வார இதழான விஜயபாரதம் - 14.2.2020)
நமது பதில்: அப்படியா? எல்லாக் கோயில்களிலும் இந்த நடைமுறை இல்லையே! அப்படி என்றால் அங்கெல்லாம் பணிவு இல்லாமல் அகங்காரத்தோடு இறைவனை வணங்குகிறார்களா?
திருச்செந்தூரில் பெண் பக்தர்களின் நிலை என்ன? நிபந்தனைதான் என்ன? ஆண்களை விட பெண்கள் எப்பொழுதும் பணிவோடு இருப்பதாக விஜயபாரதம் பதில் சொல்லாத காரணம் அவர்களின் மனுதர்மம் பெண்களை என்னவென்று கூறுகிறது?
படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோகச் சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார்.
மனு - (அத்தியாயம் 9, சுலோகம் 17)
கேள்வி: சுவாமி படம் எதுவாக இருந்தாலும் வீட்டில் வைக்கலாமா?
பதில்: குறிப்பிட்ட படத்தை வைப்பதில் உங்களுக்கு சற்று உறுத்தல் இருக்குமானால் தவிர்த்து விடுவது நல்லது.
(இதுவும் அதே தேதி விஜயபாரதம்தான்)
நமது பதில்: ஒரு படத்தை வைப்பதில் உறுத்தல் இருக்குமானால் அது என்ன “சஸ்பென்ஸ்”?
பகவான் கிருஷ்ணன் கோபிகாஸ்திரிகளோடு கும்மாளம் அடிக்கும் அந்த படம்தானே. குளிக்கப் போன பெண்களின் ஆடைகளைத் திருடி மரத்தின் மீது வைத்துக் கொண்டு நிர்வாணமாகக் கரைக்கு வந்து கும்பிட்டுக் கேட்க வேண்டும் என்று சொன்ன அந்தப் படம்தானே.
விஜயபாரதத்துக்கே உறுத்தலாக இருக்கிறதே - நாம் என்ன செய்வது!
கேள்வி: டாக்டர் அம்பேத்கர் கிறிஸ்தவராகவோ, முஸ்லிமாகவோ மதம் மாறாமல் பவுத்தர்களாக மதம் மாறியது ஏன்?
பதில்: அவரை கிறிஸ்தவராகவோ, முஸ்லிமாகவோ, மதம் மாற்ற ஆசை வார்த்தைகள் கூறப்பட்டன. ஆனால் அவர் ஏமாறவில்லை. இஸ்லாமும், கிறிஸ்தவமும் வெளிநாட்டில் தோன்றிய அந்நிய மதங்கள். பவுத்தம் பாரதத்தில் தோன்றியது. அதனால்தான் பவுத்தத்துக்கு மாறினார். (விஜயபாரதம், 24.1.2020)
நமது பதிலடி: அண்ணல் அம்பேத்கர் இந்து மதத்தை விட்டு ஏன் மதம் மாறினார் என்று விஜயபாரதம் ஏன் சொல்லவில்லை? சொன்னால் விஷயம் விஷமாக தலையில் ஏறிவிடுமே.
“இந்துவாகப் பிறந்த நான், இந்துவாக சாகமாட்டேன்” என்று ஏன் அவர் சொன்னார்! சொன்னபடி அவர் ஏன் நடந்து காட்டினார்? பல லட்சம் மக்களோடு ஏன் பவுத்தம் தழுவினார்? இதற்குப் பதில் சொல்லுமா ஆர்.எஸ்.எஸ். வார இதழ்?
இந்து மதத்துக்கு முழுக்குப் போட்டு பவுத்தம் தழுவியபோது எடுத்துக் கொண்ட 22 உறுதி மொழிகள் என்னென்ன என்பது “விஜயபாரத”த்துக்குத் தான் நன்னா தெரியுமே, அதனை வெளியிட்டால் வெல வெலத்துப் போகாதா விஜயபாரதத்துக்கு?
1. பிரம்மா, விஷ்ணு, சிவன் மூன்றையும் கடவுளாகக் கருதி வணங்கமாட்டேன்.
2. ராமன், கிருஷ்ணன் இரண்டும் இறைவனின் அவதாரமென எண்ணி வணங்கமாட்டேன்.
3. கணபதி, ‘கவுரி’ மற்றும் இந்து தேவதைகளை தெய்வங்களாக ஏற்று வணங்கமாட்டேன்.
4. கடவுள் பிறந்ததாகவோ, அவதாரம் எடுத்ததாகவோ நம்ப மாட்டேன்.
5. மகாவிஷ்ணுவின் அவதாரம்தான் புத்தர் என்ற விஷமத்தனமான பிரச்சாரத்தை எதிர்த்து முறியடிப்பேன்.
6. இறப்பு நிகழ்ச்சியில் இந்துமதச் சடங்குகளை செய்யமாட்டேன்.
7. புத்தரின் போதனைகளையும் நெறி களையும் மீறமாட்டேன்.
8. பார்ப்பனர்களின் எந்தவொரு ஆச்சாரச் செயலையும் அனுமதிக்க மாட்டேன்.
9. மானுட சமத்துவத்தை நம்புவேன்.
10. சமத்துவத்தை நிலைநிறுத்த முழுமூச்சாக பாடுபடுவேன்.
11. புத்தரின் எட்டு வழிநெறிகளை நம்பிக் கையோடு பின்பற்றுவேன்.
12. புத்தரின் பத்து தம்ம போதனைகளை ஏற்று செயல்படுவேன்
13. எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் காட்டி, பாதுகாத்து, வாழவைப்பேன்.
14. பொய் பேச மாட்டேன்.
15. களவு செய்ய மாட்டேன்.
16. உடல் இன்பத்துக்காகத் தவறுகள் இழைக்க மாட்டேன்.
17. மது அருந்த மாட்டேன்.
18. புத்தரின் அன்பு, அறிவு, பரிவு ஆகிய உயரிய நெறிகளின் அடிப்படையில் என் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முயற்சி செய்வேன்.
19. மனித நேயத்துக்கு முரணான, சமத்துவம் இல்லாத கேடுகெட்ட இந்து மதத்தை விட்டொழித்து, இன்றுமுதல் மேன்மைமிகு பவுத்தத்தை தழுவிக் கொள்கிறேன்.
20. புத்தரும் அவர் தம்மமும் உண்மையான மார்க்கம் என்று உறுதியாக ஏற்கிறேன்.
21. இன்று மறுவாழ்வு பெற்றதாக நம்புகிறேன்.
22. புத்தரின் கொள்கை கோட்பாட்டுக்கு ஏற்ப இன்று முதல் செயல்படுவேன்.
அண்ணல் அம்பேத்கர் எடுத்த உறுதி மொழியை “விஜய பாரதங்கள்” மறைப்பது ஏன்?
கேள்வி: ஜாதி வெறி எவ்வளவு மோசமோ, ஜாதி போல மத வெறி என்பது உலகளாவிய நிலையில் புதுப்புது வடிவில் வருகிறது. அதற்கெல்லாம் மாமருந்து ஈ.வெ.ரா.தான் என்கிறாரே வீரமணி!
பதில்: வீரமணி சாடும் ஹிந்துமதம், நம்நாட்டில் மட்டும் தானே இருக்கிறது. உலகளாவிய அளவில் மதவெறி எந்த மதத்தால் என்றும், அதற்குப் பெரியார் எப்படி மருந்து என்றும் விளக்கிச் சொல்லலாமே வீரமணி!
(துக்ளக், 11.12.2019)
நமது பதில்: ஆக மதவெறி மதத்தில் இருக்கிறது என்பதை “துக்ளக்“ ஒத்துக் கொள்கிறது.
எந்த மதத்தில் வெறி அதிகம் என்று பட்டிமன்றத்தை வேண்டுமானால் ஜோராக நடத்தலாம்.
ஹிந்து மதத்தை மட்டுமல்ல - உலகில் எல்லா மதங்களையுமே எதிர்த்தவர் கண்டித்தவர்தான் தந்தை பெரியார்.
‘புரட்சி’ இதழை தந்தை பெரியார் தொடங்கிய போது, அதன் தலையங்கத்ததில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மனிதனுடைய சுயமரியாதைக்கு எதிரி - மதமே
மனிதனுடைய அறிவு வளர்ச்சிக்கு எதிரி - மதமே,
மனித சமூக சமதர்மத்துக்கு எதிரி - மதமே.
கொடுங்கோலாட்சிக்கு உற்ற துணை - மதமே
முதலாளி வர்க்கத்துக்குக் காவல்- மதமே
சோம்பேறி வாழ்வின் ஆதரவு- மதமே
உழைப்பவனைத் தரித்திரத்தில் ஆழ்த்தி, உழைக்காதவனை உச்சத்தில் வைப்பதற்கு உதவி மதமே என்கிற முடிவான பேரிலேயே புரட்சி தோன்றியிருக்கிறது.
(புரட்சி இதழ், 26.9.1933)
ஆம் தந்தை பெரியார் உலகில் உள்ள எல்லா மதங்களுக்கும் எதிரான மாமருந்துதான்.
திருப்பதி ஏழுமலையான் கடவுளுக்கும், பழனி முருகனுக்கும் தங்கத்தால் பூணூல் போட்டவர்தானே “ஜெகத்குரு” ஜெயேந்திர சரஸ்வதி.
கடவுள்களையே தங்கள் மத, ஜாதி வெறி வட்டத்துக்குள் அடைத்தவர்களை, ஹிந்து மதமின்றி வேறு எங்காவது காண முடியுமா?
- விடுதலை ஞாயிறு மலர் 15 2 20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக