வியாழன், 27 பிப்ரவரி, 2020

கோவை மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் போர் முழக்கம்

அரசமைப்புச் சட்ட முகவுரை, சுதந்திரம் - சமத்துவம் - சகோதரத்துவம் மூன்றையும் முத்திரை பொறிக்கிறது இம்மூன்றிற்கும் எதிரான ஜாதி நீடிக்கலாமா?

ஜாதி ஒழிப்புக்காக உயிரையும் கொடுக்கத் தயார்! தயார்!!

கோவை மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் போர் முழக்கம்

கோவை, பிப்.10  அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் இம் மூன்றுக்கும் உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மூன்றுக்கும் எதிரான ஜாதியை ஒழிக்க வேண்டாமா? ஜாதி ஒழிப்புக்காக உயிரையும் அர்ப் பணிக்கத் தயார் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்கி.வீரமணி அவர்கள் போர் முழக்கம் செய்தார்.

நேற்று (9.2.2020) பெரியாரியக் கூட்டமைப்பின்  சார்பில் கோவையில் நடைபெற்ற ஜாதி ஒழிப்பு மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

ஜாதி ஒழிப்பு மாநாடு - நீலச் சட்டை பேரணி

பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய இந்த சிறப்பான ஜாதி ஒழிப்பு மாநாடு, நீலச்சட்டைப் பேரணி என்ற சிறப்பான நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்று இருக்கக்கூடிய அருமை சகோதரர் கோவை கு.இராமகிருஷ்ணன் அவர்களே,

வரவேற்புரையாற்றிய அருமை நண்பர் குடந்தை  அரசன் அவர்களே, பங்கேற்று உரையாற்ற இருக்கக்கூடிய அருமை சகோதரர்கள், மார்க்சிய பொதுவுடைமை கட்சியின் மூத்த பெரியார் தொண்டர் ஆனைமுத்து அவர்களே, எனக்கு அடுத்து பின்னால்  உரையாற்ற இருக்கக்கூடிய எழுச்சித் தமிழர் அன் பிற்குரிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களே,

அதேபோல, அருமை நண்பர் சகோதரர் கொளத் தூர் தா.செ.மணி அவர்களே, உரையாற்றிச் சென்ற பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களே, திருமுருகன் காந்தி அவர்களே,  பொழிலன் அவர்களே, நாகை திருவள்ளுவன் அவர்களே, அதியமான் அவர்களே, வேல்முருகன் அவர்களே, தெகலான் பாகவி அவர் களே, செங்குட்டுவன் எம்.பி., அவர்களே, சட்டப் பேரவை உறுப்பினர் தனியரசு அவர்களே, வெள்ளம் போல் திரண்டு இருக்கக்கூடிய அனைத்து இயக்கத் தோழர்களே, தாய்மார்களே, நண்பர்களே, பெரியோர் களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன் பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மாநாடு ஜாதி ஒழிப்பு மாநாடு. ஜாதியை ஒழிக்கவேண்டும் என்று நினைத்த நேரத்தில், முதல் முறையாக அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய இந்த நீலச்சட்டையை முன்னிலைப்படுத்தி நடத்தக் கூடிய இந்த மாநாடும், இந்த நிகழ்வும், வெள்ளம்போல் கூடியிருக்கின்ற மக்கள் மத்தியில் ஒரு செய்தியை நினைவூட்டவேண்டும்.

‘‘ஜாட்பட் தோடக் மண்டல்''

1934 ஆம் ஆண்டு, நம்மைப்போன்ற பலர் பிறக் காத காலத்தில் அல்லது பிறந்திருந்தால், இளை ஞர்களாக இருந்த காலத்தில், அம்பேத்கர் அவர்கள் வெளிநாட்டிலிருந்து வந்த நிலையில், அவருடைய இயக்கத்தைக் கட்டிக்கொண்டு, ஜாதி ஒழிப்பிற்காகப் போராடிக் கொண்டிருக்கின்ற நிலையில், ‘‘ஜாட்பட் தோடக் மண்டல்'' என்று லாகூரில் இருக்கின்ற ஜாதி ஒழிப்பு அமைப்பின் சார்பாக நடைபெறுகின்ற மாநாட்டிற்குத் தலைமை தாங்க அம்பேத்கர் அவர் களை அழைக்கின்றது.

அம்பேத்கர் அவர்களும் மகிழ்ச்சியோடு அதனை ஒப்புக்கொண்டார்.  அம்பேத்கர் அவர்கள்  புரட்சிகர மான கருத்துகளை சொல்லக் கூடியவர். ஆகவே,  அந்த அமைப்பில் உள்ள சிலர்,  தேவையில்லாத கருத்தைப்பற்றி மாநாட்டில் உரையாற்றி ஆபத்தை ஏற்படுத்திவிடப் போகிறார் என்று கருதிய அவர்கள், ஒரு தந்திரம் செய்தார்கள்.

என்ன அந்த தந்திரம் என்றால், ‘‘உங்களுடைய பேச்சை புத்தகமாக அச்சிடவேண்டும்; உங்கள் உரையை நீங்கள் எழுதி அனுப்புங்கள்'' என்று சொன் னார்கள்.

அம்பேத்கர் அவர்களும், நல்லெண்ணத்தில்தான் கேட்கிறார்கள் என்று அவருடைய உரையை எழுதி அனுப்பினார்.

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற தமிழர் தலைவர் ஆசிரியருக்கு பயனாடை அணிவித்து, பெரியார் - அம்பேத்கர் உருவம் பொறிக்கப்பட்ட வெள்ளி டாலர் வழங்கப்பட்டது (கோவை, 9.2.2020).

‘‘Annihilation of Caste''

அதில், ஜாதியை ஒழிக்கவேண்டும் என்றால், ஜாதிக்கு அடையாளமாக, வேராக இருக்கக்கூடிய இந்து மதத்தை ஒழிக்கவேண்டும். அதற்கு ஆதாரமாக இருக்கின்ற கீதையை எதிர்க்கவேண்டும்; ஆதாரமாக இருக்கின்ற கடவுள்களை எதிர்க்கவேண்டும். இந்தக் கருத்துகளை உள்ளடக்கி, சமுதாயத்தில் தீண்டாமை என்பது இருக்கிறதே, அது ஜாதியினுடைய அங்கம். எனவேதான், தனியே தீண்டாமை ஒழிப்பு தேவை யில்லை, ஜாதியை ஒழித்தாலே, தீண்டாமை தானே ஒழியும். ஏனென்றால், அது நிஜம்; இது நிழல். அதை நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும் என்ற கருத்தை உள்ளடக்கி, ஆங்கிலத்தில் ‘‘Annihilation of Caste''  என்ற தலைப்பில் எழுதி அனுப்பினார்.

ஒழிப்பு என்றுகூட போடவில்லை. Annihilation  என்ற ஆங்கிலச் சொல்லுக்கு அழித்தல் என்று பொருள். அந்த உரையை 1934 இல் எழுதி அனுப்பி னார்.

அந்த அமைப்பைச் சேர்ந்த சிலர் என்ன சொன் னார்கள் என்றால், உங்கள் உரையில் சில பகுதிகளை நீக்கிவிட்டு, உங்களுடைய தலைமை உரையை நிகழ்த்தவேண்டும் என்று சொல்லி, அம்பேத்கர் அவர்களுக்குக் கடிதம் எழுதுகிறார்கள்.

உரையைத் திருப்பி அனுப்புங்கள்!

மற்ற  தலைவர்களாக இருந்தால் என்ன சொல்லியி ருப்பார்கள்?  வாய்ப்புக் கிடைத்தால் போதும் என்று நினைத்திருப்பார்கள். ஆனால், அம்பேத்கர் அவர் கள் அப்படி நினைக்கவில்லை.  என்னுடைய கருத்து உறுதியானது. இந்தக் கருத்தை நீங்கள் ஏற்றால்தான், அந்த மாநாட்டிற்கு வந்து தலைமை உரையை நிகழ்த்துவேனே தவிர, இல்லையானால் ஒருபோதும் அந்த மாநாட்டிற்கு நான் வரமாட்டேன் என்று சொல்லி, உரையைத் திருப்பி அனுப்புங்கள் என்றார்.

இது நடந்தது 1934 ஆம் ஆண்டு. இதை அறிந்த தந்தை பெரியார் அவர்கள், அம்பேத்கருக்குக் கடிதம் எழுதி, அந்த ஆங்கில உரையை அனுப்புங்கள் என்று சொல்லி, ‘‘ஜாதியை ஒழிக்க வழி!'' என்ற தலைப்பில், ஒரு சிறிய நூலை, நாலணாவிற்கு தந்தை பெரியார் அவர்கள், வெளியிட்டார் என்ற செய்தியை பல பேர் அறிந்திருக்கமாட்டார்கள்.

‘‘குரலற்றவர்களின் குரல்'' பத்திரிகையில் ...

அன்றைக்கு அவர்களுக்கு நேரிடையாகத் தொடர்பு. அதற்கு முன்பு, வைக்கம் போராட்டத்தைப் பாராட்டி, அம்பேத்கர் அவர்கள் ‘‘மூக்நாயக்'' என்று சொல்லக்கூடிய ‘‘குரலற்றவர்களின் குரல்'' பத்திரிகையில் எழுதினார்.

எனவேதான், அவர்களுடைய நெருக்கம் என்பது கொள்கை ரீதியான உறவு.

ஜாதி ஒழிப்பு என்பதில் அவர்கள் இரண்டு பேரும் அன்றைக்குத் தொடங்கிய பணி, இன்றுவரை சிறப்பாக நடைபெறுகிறது.

இன்றைக்கு மனுதர்மத்தை எரிக்கவேண்டும் என்று இங்கு தீர்மானம் போட்டிருக்கிறார்கள். இப்போது ஆளுவது மனுதர்ம்; வெறும் எழுத்தல்ல.

மனுதர்மம்தான் இந்த நாட்டை ஆளுகிறது

மனுதர்மம்தான் இந்த நாட்டை ஆளுகிறது என்று திருமுருகன் காந்தி அவர்கள் இங்கே உரை யாற்றும்பொழுது சொன்னார்.

தந்தை பெரியார் அவர்கள், சேரன்மாதேவி குருகுலப் போராட்டத்தை  நடத்திய நேரத்தில், காந்தியாரிடம் சமரசத்திற்குப் போனார்கள், 1924 ஆம் ஆண்டு.

அப்போது காந்தியார் ஒரு சமரசம் செய்தார்.

என்ன அந்த சமரசம் என்றால், உயர்ஜாதிக்காரர்கள், கீழ்ஜாதிக்காரப் பிள்ளைகள் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடலாம். ஆனால், சமையல்காரர்கள் பார்ப்பனர்களாக இருக்கவேண்டும் என்ற ஒரு தீர்வை காந்தியார் சொன்னார்.

ஆனால், நண்பர்களே! அதை வரதராஜூலு நாயுடு அவர்களோ, தந்தை பெரியார் அவர்களோ ஏற்கவிலலை.

சேலத்தில், 1924 ஆம் ஆண்டு போராட்டம் நடந்து கொண்டிருக்கின்றபொழுது, ஏப்ரல் 13 ஆம் தேதி ஒரு நிகழ்ச்சி.

தந்தை பெரியார் அவர்கள் காங்கிரசை விட்டு வெளியே வரவில்லை. காங்கிரசிலிருந்து ஜாதி ஒழிப் பிற்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்.

‘இந்து' பத்திரிகையின்

நூற்றாண்டு விழா மலரில்....

அப்போது பெரியார் பேசுகிறார்,

‘இந்து' பத்திரிகையின் நூற்றாண்டு விழா மலர் என்று ஒரு புத்தகம் வெளியிட்டு இருக்கிறார்கள். அந்தப் புத்தகத்தில் பெரியாருடைய உரை வெளி யிடப்பட்டு இருக்கிறது. ஆதாரத்தோடு உங்களுக்குச் சொல்கிறோம்.

சேலத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து கொண்டு பெரியார் பேசுகிறார்.

பெரியார் சொன்ன ‘‘பிராமிணோகரசி''

‘‘வெள்ளைக்காரர்கள் இந்த நாட்டை விட்டுப் போவதற்கு முன்பாக, பிரிட்டிஷ்காரர்கள் இந்த நாட்டை விட்டுப்போவதற்கு முன்பாக ஜாதி பிரச் சினை தீர்க்கப்பட்டாலொழிய வருங்காலம் இருண்ட தாக இருக்கும். ஆபத்தாக இருக்கும். அவர்கள் தீர்க்காமல் போய்விட்டால், அடுத்து என்ன நடக்கும் என்று சொன்னால், அடுத்து வரக்கூடிய ஆட்சி, ‘‘பிராமிணோகரசி'' - பார்ப்பன நாயகமாகத்தான் இருக்கும்'' என்று சொன்னார்.

இதுவரையில், டெமாகரசி என்ற வார்த்தைதான் ஆங்கிலத்தில் இருக்கிறது. பிராமிணோகரசி என்று ஆங்கில இலக்கியத்திற்கே ஒரு புதிய வார்த்தையை கொடுத்தவர் தந்தை பெரியார் என்பதை மறந்து விடாதீர்கள்.

மக்களுக்காக, மக்களின் நலனுக்காக, மக்களால் ஆளப்படுகிற மக்கள் அரசு. அதுதான் டெமாகரசிக் கும், ஜனநாயகத்திற்கும் விளக்கம்.

பார்ப்பனர்களால், பார்ப்பனர்களுக்காக, பார்ப்ப னர்களின் நலத்திற்காக நடக்கக்கூடிய அரசு பிராமிணோகரசி என்பதாகும்.

அதுதான் இன்றைக்கு நடைபெறுகிறது. அதுதான் ஆர்.எஸ்.எஸ். ஆட்சி.

ஆரியம் ஆட்டி வைக்கின்றது; இவர்கள் ஆடுகின்ற கருவிகளாக இருக்கிறார்கள்

நம்மாள் முட்டாள்தனமாக கேட்கிறார்கள், அமித்ஷா யார்? பார்ப்பனரா? மோடி பிற்படுத்தப் பட்டவர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாரே என்று.

இவர்கள் கருவிகள் அவ்வளவுதான்!

உத்தரவு எங்கே இருந்து வருகிறது, மோகன் பாகவத்;

உத்தரவு எங்கே இருந்து வருகிறது, ஆர்.எஸ்.எஸ்.சிலிருந்து வருகிறது.

எனவேதான், ஆரியம் ஆட்டி வைக்கின்றது; இவர்கள் ஆடுகின்ற கருவிகளாக இருக்கிறார்கள். இவர்கள் ஏவப்படுகின்ற அம்புகளாக இருக்கின் றார்கள். அதன் காரணமாகத்தான் நண்பர்களே, இந்த ஜாதி எல்லாத் துறைகளிலும் இருக்கிறது.

சமதர்மமா? குலதர்மமா?

அம்பேத்கர் அவர்களைப்பற்றி உரையாற்றும் பொழுது இங்கே சொன்னார்கள்.

இரண்டு பகுதி - முன்பகுதியில் அவருக்கு சுதந்திரம் கிடைத்தது: அடுத்த பகுதியில் அவருக்கு சுதந்திரம் இல்லை. அதைத்தான் ஆனைமுத்து போன்ற நண்பர்கள் சொன்னார்கள்.

‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!''

அரசமைப்புச் சட்டத்தை எடுத்துக்கொண்டால், பீடிகை என்று சொல்லக்கூடிய முன்பகுதி என்ன?

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் இம் மூன்றும் இருக்கிறது.

ஜாதிக்கு மேற்கண்ட மூன்றும் எதிரானது.

‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' என்று சொல் லக்கூடிய அந்த மகத்தான உணர்வை உருவாக்கியது நம்முடைய சமூகம்.

இன்னுங்கேட்டால், மற்றவர்கள் நினைப்பதற்கு முன்னால், ஆரியம் வருவதற்கு முன்னால், ‘‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்'' என்று அனைவரும் நமக்குள்ளே பேதமில்லை. பேதமில்லாத பெருவாழ்வு என்று கருதக்கூடிய ஒரு சூழ்நிலை இருந்தது நண்பர்களே!

இந்துத்துவா என்ற பெயரால் வந்திருக்கிறது

இதையெல்லாம் எதிர்த்துதான் வருணாசிரம தர்மம் வந்தது. எனவே, அந்த வருணாசிரம தர்மம் இன்றைக்கு எப்படி இருக்கிறது? இந்துத்துவா என்ற பெயரால் வந்திருக்கிறது.

இதோ இங்கே இருக்கிற கூட்டம்,  எந்த சட்டை அணிந்திருக்கிறோம் என்று நினைக்காதீர்கள். இங்கே வந்திருக்கின்ற இளைஞர்களைப் பாருங்கள், இங்கே வந்திருக்கின்ற மக்களுடைய உணர்வுகளைப் பாருங்கள்.

நாங்கள் பதவி தேடி ஓடிப் போகிறவர்கள் அல்ல; புகழ் தேடிக் கொண்டிருப்பவர்கள் அல்ல. இந்த இளைஞர்கள், இங்கே இன்றைக்குக் கூடியிருக்கின்ற இளைஞர்கள் - ஆட்சியாளர்களுக்குச் சொல்கிறோம், இதைத் தடுக்கலாம், பெரியாரிய உணர்வாளர்கள் இந்த மாநாட்டினை நடத்துவதற்கு அனுமதி கேட்ட பொழுது, மறுத்துவிட்டார்கள்; நீதிமன்றத்திற்குச் சென்று அனுமதி வாங்கிக் கொண்டு வரவேண்டிய அளவிலே இருக்கிறோம் என்று சொன்னால், எங்கே இருந்து இந்த ஒழுக்கக்கேடு நடந்தது?

இங்கே திருமுருகன் காந்தி, இராமகிருஷ்ணன் மற்றவர்கள்  பேசினார்களே, எது சட்டத்திற்கு விரோதம்? எது சமூகத்திற்கு விரோதம்? ஜாதி சமூ கத்திற்கு விரோதம்; ஜாதி, அரசமைப்புச் சட்டத்தி னுடைய பீடிகைக்கு விரோதம். அந்த ஜாதியை ஒழிக்கவேண்டும் என்றால், அரசு அல்லவா மேடை போட்டுக் கொடுக்கவேண்டும்.

ஜாதி ஒழிந்தால், உங்களுக்குத்தானே லாபம். ஜாதிச் சண்டை இருக்காதல்லவா! அந்த வேலையை நீங்கள் செய்யவேண்டும்; ஆனால், நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். அதற்காக என்ன பரிசா?

பெரியார் மண்ணின் குணாதிசயத்தை எந்தக் கொம்பனாலும் மாற்றிவிட முடியாது

அடக்குமுறையினால் இந்த உணர்வை அடக்கி விடலாம் என்று நீங்கள் நினைக்காதீர்கள். இந்த மண் பெரியார் மண் - இந்த மண்ணினுடைய குணாதி சயத்தை எந்தக் கொம்பனாலும் மாற்றிவிட முடியாது.

இங்கே வந்திருக்கின்ற முக்கால்வாசி  பேர் இளைஞர்கள்.  எதற்காக இங்கே  வந்திருக்கிறார்கள்? சட்டமன்றத்திற்கு அனுப்பி வைக்கிறோம் என்று சொல்லியா அழைத்து  வந்திருக்கின்றோம். ஒரு சிலர் போகட்டும் அங்கே - இருக்கவேண்டியவர்கள் இருக்கட்டும் அங்கே, அது வேறு செய்தி.

நாம் ஆயிரம் பேர் மறைந்தாலும்கூட, செத்தாலும்கூட, ஜாதி சாகடிக்கப்படவேண்டும்

ஆனால், நாங்கள் அழைத்துப் போவது, உங்களை சிறைச்சாலைக்கு அழைத்துப் போவோம்; தேவைப் பட்டால், தூக்குமேடைக்குக்கூட அழைத்துப் போவோம். காரணம் என்னவென்றால், நாம் ஆயிரம் பேர் மறைந்தாலும்கூட, செத்தாலும்கூட, ஜாதி சாகடிக்கப்படவேண்டும்; ஜாதியினுடைய அடை யாளம் இருக்கக்கூடாது. அதற்காக சர்வபரி தியாகம் செய்வதற்குத் தயாராக இருக்கவேண்டும். பேசிக் கொண்டிருப்பதில்  பயன் கிடையாது.

சுதந்திரம் அடைந்து 73 ஆண்டினுடைய அடையாளமா?

எங்களுடைய தோழர்கள் பேசிப் பேசி, காலமெல் லாம் பேசியிருக்கிறார்கள்.

ஒரு செய்தியை இன்று மாலையில் கேட்டேன். நாகப்பட்டினத்திற்குப் பக்கத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட தோழர்  இறந்தவுடன், அந்த சகோதரருடைய பிணத்தை எடுத்துக்கொண்டு சுடுகாட்டிற்குப் போக முடியவில்லை.  இட ஒதுக்கீடு சுடுகாட்டில்கூட கிடை யாது. ஜாதியினுடைய கொடுமை இது. ரத்தம் கொதிக்கிறது! இதுதான் சுதந்திர நாட்டினுடைய லட்சணமா? சுதந்திரம் அடைந்து 73 ஆண்டினுடைய அடையாளமா?

ஜாதி ஒழிப்பு என்பது மனிதநேயத்தைக் காப்பாற்றுவது

எனவேதான், ஜாதி ஒழிப்பு என்பது இருக்கிறதே, மனித தர்மத்தைக் காப்பாற்றுவது.

ஜாதி ஒழிப்பு என்பது மனிதநேயத்தைக் காப்பாற்றுவது - சமத்துவத்தை உருவாக்குவது.

இந்த அடிப்படையைத்தான் நீங்கள் உருவாக்கிக் காட்டவேண்டும் என்பதை இந்த நேரத்தில் சொல்லிக் கொள்கிறேன்.

ஒன்றைச் சொல்லி என்னுரையை முடிக்கின்றேன்.

ஜாதி ஒழிக்கும் வரையில் சமூகநீதி இருக்கவேண் டும். அடிப்படை வேண்டும் என்பதற்காகத்தானே போராடிக் கொண்டு, வகுப்புரிமை, சமூகநீதி என்று கேட்கிறோம்.

உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு கொடுக்கிறார்கள்,

தாழ்த்தப்பட்டவர்களுக்கு, மலைவாழ் மக்களுக்கு (எஸ்.சி., எஸ்.டி.,) பதவியில் உயர்வு கொடுக்கவேண்டிய அவசியம் கிடையாது என்பதுதான் அந்தத் தீர்ப்பு.

77 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் - அவர்களுக்குப் பதவி உயர்வு கொடுக்கவேண்டும் என்பதுதான். அன்றைக்கு 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு உறுதி செய்கிறது.

ஆனால், இன்றைக்கு 2 நீதிபதிகள் சொல்கிறார்கள் அவசியம் கிடையாது என்று. மனுதர்மம் ஆளுகிறது. மனுதர்மம் புத்தகத்திற்குள் மட்டும் இல்லை.

அதேபோல, இஸ்லாமிய சகோதரர்களை வேற்று மைப்படுத்திக் காட்டுகின்ற சி.ஏ.ஏ. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதனால், நாடு முழுவதும் கொந்தளித்துக் கொண்டி ருக்கின்றது.

ஆர்.எஸ்.எஸினுடைய  குருநாதர் கோல்வால்கர் எழுதிய நூலில்...

ஆர்.எஸ்.எஸினுடைய  குருநாதர் என்று சொல்லக் கூடிய கோல்வால்கர் எழுதிய ‘‘ஞானகங்கை'' என்ற நூலில் என்ன எழுதியிருக்கிறார் என்றால்,

‘‘ராமனை வணங்கினால், இஸ்லாமியர்கள் இந்த  நாட்டில் இஸ்லாமியர்களாக  இருக்கலாம்.

கிருஷ்ணனை வணங்கினால், கிறித்துவர்களாக இந்த நாட்டில், கிறித்துவர்களாக இருக்கலாம்'' என்று எழுதி வைத்திருக்கிறார்.

இந்துத்துவா என்று சொல்லக்கூடிய இந்துராஷ்டிரா - இந்து நாடு என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்களே -

‘‘இந்து வைஸ் மிலிட்டரி

மிலிட்டரி வைஸ் இந்து''

இதுதான் அவர்களுடைய வாசகங்கள்.

ராணுவத்தை இந்து மயமாக்கு. அது நடந்துவிட்டது. அதேபோன்று, இந்துவை ராணுவக்காரனாக்கு.

எங்களை நாங்களே  சட்ட ரீதியாகத் தற்காத்துக் கொள்ளப் போகிறோம்

எங்களுடைய பிள்ளைகள், டில்லியில் உள்ள மாணவர்கள் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை நோக்கி, காவல்துறையினர் தடியடி நடத்தவில்லை, துப்பாக்கி சூடு நடத்தவில்லை.  தனியாரிடம் துப்பாக்கியைக் கொடுத்து சுடச் சொல்கிறார்கள்.

இதுதான் சட்டம் - ஒழுங்கு நேர்மையா?

இதை நாங்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டி ருப்போமா?

இந்தக் கூட்டம் முடிவு செய்யவேண்டும் -  நாங்கள் பலியாகவும் தயாராக இருக்கிறோம்.

இனிமேல் எங்களை நாங்களே தற்காத்துக் கொள்ளப் போகிறோம். சட்ட ரீதியான முயற்சிகளை மேற்கொள்ளப் போகிறோம்.  அந்த உறுதி எங்கள் இளைஞர்களுக்கு வந்தாகவேண்டும்.

ஏனென்றால், எங்கள் உயிர் போவது நிச்சயம் - அது நல்ல காரியத்திற்காகப் போகட்டும்!

ஜாதி ஒழிப்பிற்காகப் போகட்டும் -

மனுதர்ம ஆட்சியை ஒழிப்பதற்காகப் போகட்டும்!

அதேநேரத்தில், மனுதர்மத்தை பல ரூபங்களில் கொண்டு வரலாம் என்று நினைத்து, நீங்கள் எங்களிடம் விளையாடலாம் என்று நினைக்காதீர்கள். நெருப்போடு விளையாடுகிறீர்கள்.

பெரியார் - அம்பேத்கர்மீது கை வைக்க முடியாது!

அம்பேத்கர் அவர்களைகூட நீங்கள் வித்தியாச மாகக் காட்டுகின்ற இந்த நேரத்தில், பெரியார் என்ற நெருப்பின்மீது கை வைக்கலாம் என்று நினைக் கிறார்கள். இந்த இரண்டு பேரின்மீதும் கை வைக்க முடியாது. மின்சாரத்தில் கை வைத்தவர்களின் கதிதான் அவர்களுக்கு ஏற்படும் என்பதை நன்றாக நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த மாநாட்டின் வெற்றிக்காக உழைத்தவர் களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

காவல்துறைக்குச் சொல்லுகிறோம், ஒரு சிறு அசம்பாவிதம் இந்தப் பேரணியில் உண்டா?

ஏதாவது கட்டுப்பாடு குலைந்து யாராவது நடந்து கொண்டார்களா?

இங்கே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், சட்டத்திற்கு விரோதமான தீர்மானம் இருக்கிறதா? என்பதை நீங்கள் எண்ணிப் பாருங்கள்.

காவல்துறையினரே யாருக்கோ நீங்கள் துணை போகாதீர்கள்!

எனவேதான், யாருக்கோ நீங்கள் துணை போகாதீர்கள்; நீங்கள் பொதுவாக இருக்கவேண் டியவர்கள். ஒரு பொதுவான மருத்துவர் போல  -  பொதுவான தீயணைப்பு நிலையம் போல - பொது வான பள்ளிக்கூடம் போல இருக்கவேண்டியவர்கள். தயவுசெய்து உங்களுடைய எஜமானர்களாக யாரையோ கருதாதீர்கள். இன்னும் ஓராண்டு காலம்தான், அதிகமாகப் போனால் - ஓராண்டிற்குப் பிறகு நிச்சயமாக மாற்றம் வரும். அப்போது உங்கள் நிலை என்ன? என்பதைப்பற்றி சிந்தியுங்கள்.

எனவே, நிதானமாக சிந்தித்து உங்களுடைய நிலையை முடிவு செய்யுங்கள் என்று சொல்லி, ஒரு பொ றுப்புள்ள அமைப்பினுடைய பொறுப்பாளன் என்ற முறையில் உங்களுக்கு சொல்லி,

வெற்றிகரமாக மாநாட்டினை, பேரணியை நடத்தியவர்களுக்கு வாழ்த்துகள்!

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதற்கு அடுத்தக ட்ட போராட்டம்!

மீண்டும் எழுச்சியோடு ஜாதி ஒழிப்புப் போராட் டமாக, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதற்கு - அடுத்த கட்டத்திற்கு நாம் கொண்டு செல்லக்கூடிய போராட்டமாக, ஜாதி ஒழிப்பை நடைமுறைப் படுத்துவோம் என்று கூறி முடிக்கின்றேன்.

வாழ்க பெரியார்!

வாழ்க அம்பேத்கர்!

வளர்க பகுத்தறிவு!

ஒழிக ஜாதிகள்!

நன்றி,வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.

- விடுதலை நாளேடு, 10.2.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக