புதன், 26 பிப்ரவரி, 2020

தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்குக்கோரி மார்ச் 23 ஆம் தேதி தமிழகத்தில் உள்ளமத்திய அரசு அலுவலகம் முன்முற்றுகைப் போராட்டம்

திருச்சியில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

‘நீட்' தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்குக்கோரி மார்ச் 23 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள

மத்திய அரசு அலுவலகம் முன்

முற்றுகைப் போராட்டம்;  அனுமதி மறுத்தால், மீறி நடத்தப்படும்!

திருச்சி, பிப்.22  ‘நீட்' தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்குக் கோரி மார்ச் 23 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள்முன் முற்றுகைப் போராட் டம் நடைபெறும்; அனுமதி மறுத்தால், மீறி நடத்தப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

திருச்சியில் நேற்று (21.2.2020) செய்தியாளர்களுக்கு  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அளித்த பேட்டி வருமாறு:

மாநாடுபோல்...

திருச்சியில், அன்னை மணியம்மையார் அவர்களு டைய நூற்றாண்டு விழா அரங்கத்தில், புதுப்பிக்கப்பட்ட அந்த அரங்கத்தில், திராவிடர் கழகத்தின் பொதுக்குழு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதில் மகளிரணி தோழியர்கள் உள்பட பல்வேறு பொறுப்பாளர்களும், மாநிலம் முழுவதும், கன்னியாகுமரி தொடங்கி திருத்தணி வரையில் எல்லா மாவட்டங் களிலிருந்தும் தோழர்கள், இருபால் தோழர்கள், பொறுப் பாளர்கள் அனைவரும் திரண்டு வந்திருக்கிறார்கள். ஏறத்தாழ 800 பேர் இந்தப் பொதுக்குழுவில் கலந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு மாநாடுபோல் இடமின்றி நடைபெற்றுக் கொண்டிருப்பதை நீங்களே பார்த்திருப் பீர்கள்.

அந்த அளவிற்கு சிறப்புமிக்க இந்தப் பொதுக்குழுவில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 14 தீர்மானங்கள் மிகச் சிறப்பான அளவிலே நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன.

14 தீர்மானங்கள்

அந்த 14 தீர்மானங்களும், மத்திய - மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்குகள், அதேபோல, சமூகநீதிக்கு ஏற்பட்டு இருக்கிற ஆபத்துகள், கல்வித்துறையில் இருக்கக்கூடிய மிகப்பெரிய கண்ணிவெடிகள் ஆகியன குறித்தவையாக உள்ளன.  மனுதர்மம் ஆட்சிக்கு வந்து, குலக்கல்வித் திட்டம் மீண்டும் வருமோ என்கிற அச்சம் இருக்கிறது.

ஏற்கெனவே ‘நீட்' தேர்வைப் பொறுத்தவரையில், 9 உயிர்கள் பலியாகியிருக்கின்றன. அதுபோலவே, நெக்ஸ்ட் தேர்வு என்று வாழ்நாள் முழுவதும் தேர்வு என்ற நிலை.

‘‘ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசிகள்!''

இதற்கு முன் 11 நாள்களாக தமிழகத்தில் கன்னியா குமரியில் தொடங்கி, திருத்தணி - சென்னைவரை பல மாவட்டங்களுக்குச் சென்று பிரச்சாரம் செய்து, கிளர்ச்சியை அறிவிப்போம் என்று சொன்ன நிலையில், பலதரப்பட்ட மக்களுக்கும் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டது. மாணவப் பிஞ்சுகளுக்கு 5 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு, 8 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழக அரசு ‘‘ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசிபோல'' ஏன் இருக்கிறீர்கள் என்று கேட்ட பிறகு, அதனை கைவிட்டு இருக்கிறார்கள். 5 ஆம் வகுப்பு, 8 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை கைவிட்டு இருக்கிறார்கள். அதனை நாங்கள் வரவேற்று இருக்கிறோம். அது இப்போது அரசு ஆணையாகக் கூட வெளிவந்திருக்கிறது. அது வரவேற்கத்தக்கதாகும்.

அதுபோலவே, ‘நீட்' தேர்வு என்பது இருக்கிறதே, ஏற்கெனவே நாம் அதிலிருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் என்று கேட்டிருக்கிறோம். விதிவிலக்கு ஏற்கெனவே தரப்பட்டும் இருக்கிறது.

நீட் தேர்விலிருந்து விலக்கு கொடுக்கமாட்டோம் என்று சொல்வது நீதிமன்றங்களுடைய வேலையல்ல. சட்டம் சரியா? இல்லையா? என்றுதான் சொல்ல வேண்டும்.

நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என்று கேட்பதற்கு மாநில அரசுக்கு உரிமை உண்டு. இதுவரை கல்வி, மாநிலப் பட்டியலிலிருந்து மாற்றப்பட்டாலும், ஒத்திசைவு பட்டியல் என்கிற கன்கரண்ட் பட்டியலில்தான் இருக்கிறதே தவிர, அது ஒன்றும், மத்திய அரசினுடைய ‘எக்ஸ்குளூசிவ் ரைட் ' என்று சொல்லக்கூடிய அந்தப் பட்டியலுக்குப் போகவில்லை.

ஆகவே, அதை வைத்துக்கொண்டு, நாங்கள்தான் நிர்ணயிப்போம், மாநில அரசு சொல்வதைக் கேட்க முடியாது என்று மத்திய அரசால் சொல்ல முடியாது.

ஆனால், அதைவிட பெரிய ஆபத்து, மருத்துவ மனைகள் இல்லாமல், மெடிக்கல் எஜூகேசன் என்று சொல்லக்கூடிய மருத்துவக் கல்வி இருக்க முடியாது. பொது சுகாதாரம் என்பவையெல்லாம் கூட மாநில அரசின்கீழ்தான் இருக்கிறது.

மாநில அரசு எதிர்த்து

முறியடிக்கவேண்டும்

ஆகவே, அண்மையில் இதனை நாங்கள் பிரச்சாரம் செய்துகொண்டு வரும்பொழுது, ஒரு பெரிய சூழ்ச்சிப் பொறி மற்றொன்று வைக்கப்பட்டு இருக்கிறது மத்திய அரசினாலே!

பொது சுகாதாரம், மருத்துவமனைகள், மாநிலங்களில் இருப்பது, குறிப்பாக தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இருப்பதை,  ஒத்திசைவு பட்டியலில் கொண்டு வந்து, தாங்களே அதை ஆதிக்கம் செலுத்தவேண்டும் என்று ஒரு முயற்சி நடந்திருக்கிறது. அதை மாநில அரசு தெளிவாக எதிர்த்து, அதனை முறியடிக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்தியிருக்கிறோம்.

மார்ச் 23 ஆம் தேதி மத்திய அரசு அலுவலகம்முன் முற்றுகைப் போராட்டம்

எனவேதான், இந்த ஆபத்து நாளுக்கு நாள் அதிக மாகக் கூடிய நிலை இருக்கிறது. எங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்களில், பல்வேறு தீர் மானங்கள் தமிழகத்தின் நலன் கருதி, மனித உரிமை களைக் கருதி, சமூகநீதி பாதுகாப்பை கருதி தீர்மானங் களை நிறைவேற்றினாலும்கூட, இதில் மிக முக்கியமாக சொல்லவேண்டுமானால், குறிப்பாக 3 ஆவது தீர் மானத்தில், நீட் தேர்வு, நெக்ஸ்ட் தேர்வுகளையெல்லாம் எதிர்த்து வருகின்ற மார்ச் 23 ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள்முன் முற்றுகைப் போராட்டம் நடைபெறும்.

அந்த முற்றுகைப் போராட்டத்தினை திராவிடர் கழகம் நடத்தினாலும்கூட, ஒத்தக் கருத்துள்ளவர்களும் அந்த முற்றுகை போராட்டத்தில் பங்கேற்பார்கள்.

தீர்மானத்தையே சட்டமாக ஆக்கி, மறுபடியும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்

‘நீட்' தேர்வை அடியோடு ரத்து செய்யவேண்டும் என்று ஒரு பக்கத்தில் இருந்தாலும், குறிப்பாக தமிழ் நாட்டிற்கு அது பொருந்தாது; தமிழ்நாட்டிற்கு விதி விலக்கு அளிக்கவேண்டும் என்ற தீர்மானத்தை மீண்டும் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றவேண் டும். அதற்கு அவர்கள் ஒப்புதல் கொடுக்க மறுத்தாலும், இன்னொரு முறை அந்தத் தீர்மானத்தையே சட்டமாக ஆக்கி, மறுபடியும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்.

காரணம், அரசமைப்புச் சட்டப்படி நமக்கு அது சலுகையல்ல; அது நமக்கு உரிமை என்கிற காரணத் தினால், அதனை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில், முற்றுகைப் போராட்டம் மார்ச் 23 ஆம் தேதி நடைபெறும் என்பது அந்தத் தீர்மானத்தின் மிக முக்கிய அம்சமாகும்.

அனுமதி மறுத்தால், மீறி முற்றுகைப்

போராட்டம் நடத்தப்படும்!

அந்த முற்றுகைப் போராட்டம் வழமைப்போல், திராவிடர் கழகம் அறப்போராட்டமாகத்தான் நடத்தும். திராவிடர் கழகம் நடத்தும் எந்தப் போராட்டத்திலும் பொதுச் சொத்துகளுக்கு நாசமோ, பொதுமக்களுக்கு இடையூறோ ஏற்பட்டதில்லை.

முற்றுகைப் போராட்டத்திற்கு அனுமதி இல்லை என்று சொன்னால், மீறி அந்த முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும்.

சமூகநீதி பாதுகாப்பு மாநாடு

இன்று மாலை சமூகநீதி பாதுகாப்பு மாநாடு உழவர் சந்தையில் நடைபெறவிருக்கிறது. அந்த மாநாட்டில், தோழமைக் கட்சியினர் பங்கேற்கவிருக்கிறார்கள்.

இட ஒதுக்கீட்டிற்கு அரசமைப்புச் சட்டப்படி கொடுக் கப்பட்ட, காலங்காலமாக நம்முடைய தலைவர்கள் நீதிக்கட்சி காலத்திலிருந்து போராடி பெற்ற வெற்றிகள், தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்கள் எல்லோருமே தொடர்ச்சி யாக திராவிட இயக்கம் கட்டிக் காத்த அந்த இட ஒதுக் கீட்டிற்கு இப்பொழுது ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது.

உயர்ஜாதியினருக்கு

வயது வரம்பில் சலுகையா?

அரசமைப்புச் சட்டத்தினுடைய அடிப்படையையே குலைக்கக் கூடிய அளவிற்கு, இட ஒதுக்கீட்டில், உயர்ஜாதியினரில் உள்ள ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு 10 சதவிகிதம் என்று உள்ளே நுழைத்து, மற்றவர்களுக்குக் கொடுத்த வயது விதிவிலக்கைக் கூட, உயர்ஜாதியினராக இருக்கக்கூடிய பார்ப்பனர்களுக்கும் சலுகை வழங்கியிருப்பதும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்ன வயது வரம்பில் சலுகையோ அதே சலுகையை உயர்ஜாதியினருக்கும் வழங்குவோம் என்று சொல்லி, வேண்டுமென்றே இவர்களுடைய உரிமையை பறிக்கக்கூடிய ஆபத்தும் அண்மையில் வந்திருக்கிறது இரண்டு நாள்களுக்கு முன்பு. அதையெல்லாம்கூட கண்டித்து தீர்மானமாகப் போட்டிருக்கின்றோம்.

ஆகவே, மாலையில் நடைபெறும் மாநாட்டில், அது தெளிவாக்கப்படும்.

எனவே, ஊடக சகோதரர்களாகிய நீங்கள் மாலை யிலும் வாருங்கள். அங்கே பல முக்கியமான அறிவிப்புகள் வெளிவரும்.

‘நீட்'டிற்கு ஏற்பட்ட விபத்து,

இதற்கு வரக்கூடாது

செய்தியாளர்: சட்டப்பேரவையில் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை சட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறதே, அதுபற்றி?

தமிழர் தலைவர்: முதலமைச்சர் அதை அறிவித்த வுடன், பலரும் வரவேற்றனர். நாங்கள் உள்பட! அதி லொன்றும் சந்தேகம் வேண்டாம். அந்த முயற்சி என்பது நல்ல முயற்சி என்றாலும், முழு முயற்சியாக அது அமையவேண்டும்.

‘நீட்' தேர்விலிருந்து விதிவிலக்குக் கோரி தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக சட்டம் நிறைவேற்றியும், பிறகு அதற்கு ஒப்புதல் கிடைப்பதில் எப்படி சிக்கல் வந்ததோ, அதுபோல இதற்கு சிக்கல் வரக்கூடாது.

அடுத்தபடியாக, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வலியுறுத்தியதுபோல, வேகவேகமாக அந்த சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றினோம் என் பதைவிட, இன்னும் கொஞ்சம் ஆழமாக அந்த சட்டத்தை விரிவுபடுத்தியிருந்தால், நல்ல வாய்ப்பாக இருந்திருக்கும்.

டெல்டா மாவட்டங்கள் என்று அய்ந்து மாவட்டங்கள் மட்டும் இருந்தால், மற்ற மாவட்டங்கள் பாலைவனமாகக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது என்ற அச்சம் எழுந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் ஒரு தொழிற்சாலை வருகிறது என்று சொன்னவுடன், அந்த மாவட்டத்துக் காரர்கள் அச்சப்படுகிறார்கள். அதுபோலவே, மற்ற இடங்களிலும் இந்த ஆபத்துகள் ஏற்படுகின்ற சூழல் இருக்கின்றது.

எனவேதான், முழுமையடைந்த ஒரு சட்டம் வர வேண்டும் என்று  நோக்கத்தோடு திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் சொல்லியிருக்கிறார்.

அந்த வகையில், இந்த சட்டம் இப்பொழுது நிறை வேற்றப்பட்டு இருக்கிறது சட்டமன்றத்தில். அது எப்பொழுது முழுமையாக சட்டமாக மாறும். இப்பொழுது மசோதா நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. சட்டம் வந்து விட்டது என்று சொல்ல முடியாது. அதற்கு ஒப்புதல் வாங்கவேண்டும். ஒப்புதல் வாங்கி, அதனை முழுமை யாக நிறைவேற்றி, அதனை செயல்படுத்தும்பொழுது, ‘நீட்'டிற்கு ஏற்பட்ட விபத்து, இதற்கு வரக்கூடாது என்பதை உங்கள் மூலமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜாதியில்லை என்பதுதானே

உங்களுடைய கொள்கை

செய்தியாளர்: ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சொல்லுகிறீர்கள்; ஜாதியில்லை என்பதுதான் உங்களுடைய கொள்கை. இது முரணாகத் தெரியவில்லையா உங்களுக்கு?

தமிழர் தலைவர்: இதைப்பற்றி தெளிவாக நாங்கள் எழுதியிருக்கின்றோம். ஏனென்றால், ஜாதி அரசமைப்புச் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டு இருக்கிறது. திருமணத்திற் காக விளம்பரம் கொடுக்கும்பொழுதே, இந்த ஜாதியில் தான் மணமகன் வேண்டும், மணமகள் வேண்டும் என்று வெளிப்படையாகப் போடுகிறார்கள்.

அதுமட்டுமல்ல, ஜாதியை ஒழிப்பதற்கு சட்டம் இல்லை. தீண்டாமையைத்தான் ஒழித்திருக்கிறோம் என்கிறார்கள், அதுவும் உண்மையாக ஒழிக்கவில்லை. தாழ்த்தப்பட்டவர்கள், சுடுகாட்டிற்குப் போவதற்குக்கூட பாதை கூட கிடையாது.

ஆகவேதான், அடையாளப்படுத்திக்கொண்டு, அரசமைப்புச் சட்டத்தில், Socially and  Educationally Backward Classes என்று வருகிறபொழுது, உயர்ஜாதிக் காரர்கள், மற்றவர்கள் என்று வரக்கூடிய இட ஒதுக்கீட் டைக் குறிக்கிறபொழுது, அதற்கு அடித்தளம் மிக முக்கியமானது.

யார்? யார்? பிற்படுத்தப்பட்டவர்கள், எவ்வளவு பேர் என்று தெரியும்.

ஆகவேதான், சில பேர் நினைக்கலாம், ஜாதி ஒழியவேண்டும் என்று சொல்கிறார்கள், இவர்களே ஜாதி வாரியாகக் கணக்கெடுக்கவேண்டும் என்று சொல் கிறார்களே, அது முரண்பாடு உள்ளதென்று கருதலாம்.

அது தோற்றத்தில்தான் முரண்பாடே தவிர, வேறொன்றுமில்லை - அரசமைப்புச் சட்டத்தில் ஜாதி ஒழிக்கப்பட்டது என்று முதலில் போடட்டும்.

பெரியார்தான் கேட்டார், ‘‘தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது'' என்று 17 ஆவது அரசமைப்புச் சட்டத்தில் இருக்கிறதே, அதனை எடுத்துவிட்டு, ‘‘ஜாதி ஒழிக்கப் பட்டு விட்டது'' என்று போடுங்கள் என்றார்.

தீண்டாமை என்பது ஜாதியினுடைய விளைவு. ஆனால், ஜாதி இருக்கும். தீண்டாமை மட்டும் ஒழிக்கப் படவேண்டும் என்று போட்டார்கள். ஜாதி என்ற வார்த்தை, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 18 இடங்களில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

எனவே, ஜாதி என்பது நடைமுறையில் இருக்கிறது. பிற்படுத்தப்பட்டவர்களையும், தாழ்த்தப்பட்டவர்களை யும் அதை வைத்துதான் அடையாளம் காண முடியும்.

பசியேப்பக்காரர்கள் வெளியே நிற்க, புளியேப்பக்காரர்களே விருந்து சாப்பிடக்கூடிய அபாயம்

ஆகவே, இப்பொழுது அதனை விட்டுவிட்டால், ஏற்கெனவே உயர்ஜாதிக்காரர்களுக்கு, ஏழைகள் என்ற பெயரால், பசியேப்பக்காரர்கள் வெளியே நிற்க, புளியேப்பக்காரர்களே அவர்களுடைய பங்கை முழு மையாக விருந்து சாப்பிடக்கூடிய அபாயம் ஏற் பட்டிருப்பது - இன்னும் விரிவாக்கப்படக் கூடிய பேரபாயம் அதன்மூலம் வரக்கூடும்.

ஆகவேதான், ஜாதி வாரியாகக் கணக்கெடுங்கள் என்று சொல்கிறோம். மதம் கூடாது என்றாலும், எந்த மதம் என்று போடும்பொழுது, அந்த மதத்தைப் போடுகிறார்கள் அல்லவா!

இட ஒதுக்கீடு என்பது, Socially and  Educationally Backward classes என்பதுதான்.

அதை அம்பேத்கர் அவர்கள் மிக அழகாக சொன்னார், Backward என்பது Nothing but Bundle of Caste  என்றார்.

இதை ஏற்கெனவே நாங்கள் வலியுறுத்தினோம்; சென்ற முறையே ஜாதிவாரியாகக் கணக்கெடுத்து வைத் திருக்கிறார்கள். ஆனால், அதை வெளியிடவில்லை. இந்த முறை அதனை தெளிவாக ஆக்கவேண்டும் என்பதைதான் இன்று திராவிடர் கழகப் பொதுக்குழு விலும் தீர்மானமாக நிறைவேற்றி இருக்கிறோம்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி செய்தியாளர்களிடையே கூறினார்.

 - விடுதலை நாளேடு, 22.2.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக