அரசமைப்புச் சட்ட முகப்பு 5 அம்சங்களை வலியுறுத்துகிறது; அதனை அழிப்பதுதான்
பா.ஜ.க.வின் பணி!
* உலகில் எந்த நாட்டு அரசமைப்புச் சட்டத்திலும் சமூகநீதி என்ற சொல் இல்லை
சமூகநீதி வெல்ல போராடுவோம்!
திருச்சி, பிப்.22 அரசமைப்புச் சட்ட முகப்பு 5 அம்சங் களை வலியுறுத்துகிறது. அதனை அழிப்பதுதான் பாரதீய ஜனதாவின் பணி. உலகில் எந்த நாட்டு அரசமைப்புச் சட்டத்திலும் சமூக நீதி என்ற சொல் இல்லை. இறையாண்மை, சமதர்மம், மதச்சார்பின்மை, ஜனநாயகம், குடியரசு இவை சிதைக்கப்படுகிறது என்றார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
நேற்று (21.2.2020) திருச்சி உழவர் சந்தையில் பொன் மாலைப் பொழுதில் சமூகநீதி மாநாடு நடைபெற்றது. மைதானம் ஒளி வெள்ளத்தில் திளைத்தது. கழகத் தோழர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் இருக்கையை நிறைத்தனர். மாநாடு தொடங்குவதற்கு முன் எழுச்சி யூட்டும் பறை இசை எங்கும் பரவியது. லால்குடி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வால்டேர் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். கழகக் கொடியேற்றிய அம்பிகா கணேசன் சுருக்கமான உரையாற்ற, மேடையில் சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெற்றன.
தமிழர் தலைவர் தம் உரையில் செங்கல்பட்டில் நடை பெற்ற முதலாவது சுயமரியாதை மாகாண மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நினைவுபடுத்தினார். மண விழாவின் சிறப்பை சுருக்கமாக எடுத்துரைத்தார்.
தமிழர் தலைவர் நிறைவுரை
தமிழர் தலைவர் தம் நிறைவுரையில்,
மார்ச் 23ஆம் தேதி முற்றுகைப் போராட்டம் என்று அறிவித்தார். இரண்டு அணிகளுக்கு இடையே நடைபெறும் போராட்டம் என்றார். அரசமைப்புச் சட்ட முகப்பு 5 அம்சங்களை வலியுறுத்துகிறது. அதனை அழிப்பதுதான் பாரதீய ஜனதாவின் பணி. உலகில் எந்த நாட்டு அரசமைப்புச் சட்டத்திலும் சமூக நீதி என்ற சொல் இல்லை.
இறையாண்மை, சமதர்மம், மதச்சார்பின்மை, ஜனநாயகம், குடியரசு இவை சிதைக்கப்படுகிறது. இந்திய நிறுவனங்கள் எல்லாமே விற்கப்படுகின்றன.
கூட்டாட்சிக்கு விடை தரப்படுகிறது. ஒரே ஆட்சி ஆர்.எஸ்.எஸ்.சின் திட்டம் நடைமுறைபடுத்தப்படுகிறது.
அமைதிப் பூங்காவாக இருந்த தமிழ்நாடு, போராட்ட பூமியாக மாறி இருக்கிறது என்பதை ‘ஆனந்த விகடன்' கட்டுரை மூலம் விளக்கினார்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தைக் காப்பவர் களுக்கும், அதை எதிர்ப்பவர்களுக்கும் போராட்டம் நடைபெறுகிறது என்றார்.
நாங்கள் அறவழி நடப்பவர்கள் - வன்முறைக்கு எதிரான வர்கள் என்பதை தெளிவுபடுத்தினார்.
பிரதமர் மோடி பதவி ஏற்றவுடன் இந்திய அரசமைப் புக் கல்வெட்டைக் கட்டி அணைத்து மரியாதை செலுத் தினார். ஆனால் வள்ளுவர், ‘‘தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்'' என்றார். கோட்சே, காந்தியை சுடுவ தற்கு முன்பு கும்பிட்டு விட்டே சுட்டான். இந்திய அர சமைப்புச் சட்டம் அடிக் கட்டுமானம் உருவி எறியப்படு கிறது என்று தமிழர் தலைவர் உரைத்தார். ராமர் கோவில் கட்டும் அறக்கட்டளை உறுப்பினர்களாக, பாபர் மசூதியை இடித்தவர்கள் இரண்டு பேர் நியமிக்கப்படுவது கொடுமை என்றார். சமூகநீதி வெல்லப் போராடுவோம் என்றார்.
இரா.முத்தரசன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத் தரசன் அவர்கள் மாநாட்டை திறந்து வைத்து உரை நிகழ்த்தும் போது, திராவிடர் கழகப் பொதுக்குழு நிறைவேற்றிய தீர்மா னங்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது என்றார்.
தாய்மொழி நாளில் மாநாடு நடைபெறுவது சிறப்பிற்குரியது. பல மொழிகள் செம்மொழி அந்தஸ்து பெற்றிருக்கிறது.
ஆனால் தமிழ் மொழிக்கு கடந்த மூன்றாண்டுகளில் ஒதுக்கப்பட்ட தொகை ரூ.22 கோடி. ஆனால் சமஸ்கிருத மொழிக்கு ஒதுக்கப்பட்ட தொகை 643 கோடி ரூபாய். மத்திய அரசாங்கம் பாரபட்சமாக செயல்படுகிறது என்று குற்றஞ் சாட்டினார். மார்க்ஸ் - ஏங்கல்ஸ் அறிக்கை வெளியான நாள் இன்று என்று பெருமிதம் கொண்டார். குடியுரிமை திருத்தச் சட்டம், தேசியக் கல்விக் கொள்கை, சமூக நீதி, பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்குத் தாரை வார்த்தல் என்று பல்வேறு செய்திகளை முத்தரசன் அடுக்கினார்.
துரை.சந்திரசேகரன்
கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் உரையாற் றும்போது, காஷ்மீர் பிரச்சினை, அஸ்ஸாம் பிரச்சினை, முத்தலாக் தடைச் சட்டம், குடியுரிமை பறிப்பு முதலியவற்றை எடுத்துரைத்தார்.
அப்துல் சமது
மனிதநேய கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் சமது உரையாற்றும்போது, தமிழ்நாடு சமூகநீதியின் முகவரி என்று வருணித்தார். இந்தியாவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. காரணம் குடியுரிமை திருத்தச் சட்டம் என்றார். இந்து ராஷ்டிரம் அமைப்பது பாரதீய ஜனதா கட்சியின் இலக்கு என்றார்.
இது மனுநீதிக்கும் சமூக நீதிக்கும் இடையே ஆன போராட்டம் என்றார். முஸ்லீம் சமூகத்தை நிர்மூலமாக்கி இருக்கிறார்கள். எந்தவித அதிகாரத்திலும் இஸ்லாமி யர்கள் இல்லை. அதிகாரம் இல்லை என்றால் அடிமை யாகத்தான் வாழ முடியும். தமிழ்நாட்டில் 56 லட்சம் இஸ்லாமியர்கள் வாழ்கிறார்கள். ஆனால் அவை மதிப்பு இழந்த வாக்குகள் என்றார். கல்வி பறிக்கப்படுகிறது. சமூகநீதி பறிக்கப்படுகிறது. மாநில உரிமை மட்டுமல்ல மாநிலமே பறிக்கப்படுகிறது என்றார். இந்து ராஜ்ஜியம் என்பது பார்ப்பன ராஜ்ஜியம் என்று குறிப்பிட்டார்.
பவுத்தர்களையும், சமணர்களையும் அழித்து ஒழித் தது பார்ப்பனியம் என்றார். நாடாளுமன்றம் நிறைவேற் றிய சட்டத்தை 11 மாநிலங்கள் எதிர்க்கின்றன என்றார். தொடர்ந்து போராடுவோம் என்று முழங்கினார்.
கனகராஜ்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மாநிலக் குழு உறுப்பினர் தோழர் கனகராஜ் உரையாற்றும்போது, இந்திய அரசமைப்புச் சட்டம் மாநிலங்களின் ஒன்றியம் என் கிறது. மொழிவாரி மாநிலங்கள் போராட்டத்தின் மூலமே உருவானது. இந்தியாவை உருவாக்கி இருக்கிற இணைப் புக்கயிறு கூட்டாட்சித் தத்துவம், மதச் சார்பின்மை என்றார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல இந்துக்களுக்கும் எதிரானது என்றார்.
தொல்.திருமாவளவன்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உரையாற்றும் போது, திராவிடர் கழக தீர்மானங்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரிப் பதாக அறிவித்தார். உச்சநீதிமன்றம் சமூகநீதிக் கொள் கைக்கு எதிராக தீர்ப்பு அளிக்கிறது. மண்டல் கமிஷனுக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் பாரதீய ஜனதா சங்பரிவாரக் கும்பல். அயோத்தி தீர்ப்பு என்பது அவர்கள் விரும்பிய தீர்ப்பு என்றார். இடஒதுக்கீட்டிற்கு எதிராக உச்சநீதிமன் றம் தீர்ப்பு எழுதியபோது மக்கள் கொதித்து எழுந்திருக்க வேண்டும். மதத்தை அளவு கோலாகக் கொண்டு குடியுரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
பாரதீய ஜனதாவின் நீண்ட காலத் திட்டங்கள் முத்தலாக் சட்டம், காஷ்மீர் 370ஆம் பிரிவு நீக்குதல், ராமர் கோவில் கட்டுதல், இஸ்லாமியர்களின் வாக்குக ளைப் பறித்தல் என்று அடுக்கினார்.
திருச்சி சிவா
மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா அவர்கள் உரையாற்றும்போது, இன்றுதான் பேச வேண்டிய இடத்திற்கு வந்திருக்கிறேன் என்று பெருமையாக கூறினார். மதிப்பிற்குரிய ஆசிரியர் முன்னிலையில் பேச வேண்டும் என்று விரும்பினேன். இங்கு பேசினால் கருத்து சரியாக சென்று சேரும் என்பது எனக்குத் தெரியும் என்றார். அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையில் ஒரு வாக்கில்தான் இந்தி ஆட்சி மொழி ஆனது. உயர்ந்த தத்துவங்களுக்கு பாரதீய ஜனதா கட்சி முடிவு கட்டிக் கொண்டிருக்கிறது. பேராபத்துகள் நம்மை சூழ்ந்து கொண்டிருக்கின்றன. நாம் யாரையும் எதிர்த்துப் போராடவில்லை. நம்மை பாதுகாத்துக் கொள்ளப் போராடுகிறோம். எதிர்க் கட்சியின் ஒற்றுமையின்மைதான் பாரதீய ஜனதாவின் வெற்றி என்றார். முத்தலாக் தடைச் சட்டம் இஸ்லாமிய ஆண்களுக்கு எதிரானது என்றார்.
விதவைப் பெண்களுக்கு ஆதரவாக தனி நபர் மசோதா கொண்டு வந்த போது எதிர்த்தவர்கள் பாரதீய ஜனதா கட்சியினர் என்று குற்றம் சாட்டினார். காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து 370ஆம் பிரிவு, ரத்து செய்ய காரணம் இஸ்லாமியர்கள் அதிகம் வசிப்பதுதான். பாரதீய ஜனதாவின் பாதகத்திற்கு ஆதரவு தருவது அதிமுகதான் என்றார். திராவிடர் கழகம் எல்லோருக்கும் தாய்வீடு என்று புகழ்ந்தார்.
சமூக நீதி மாநாடு இரவு 10 மணிக்கு நிறைவுற்றது.
கழக பொதுக் குழு
திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வரவேற்று, தோழர்கள் எழுந்து நின்று கரவொலி எழுப்பினர் (திருச்சி, 21.2.2020)
காலையில் திருச்சியில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட்டத்திற்கு பிப்ரவரி 21 ஆம் தேதி காலை பெரியார் மாளிகையில் கருஞ்சட்டைத் தொண்டர்கள் திரண்டனர். தமிழகத்தின் வடக்குக்கும், தெற்குக்கும் மத்திய பகுதியான தந்தை பெரியார் நேசித்து, விரும்பித் தங்கிய திருச்சி மாநகரில் கூடினர். பொதுக் குழுக் கூட்டம் தொடங்கு வதற்கு முன்பு இயக்கப் பொறுப்பாளர்கள் தமிழர் தலைவர் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்து பணிவன்பான வணக்கத்தைத் தெரிவித்து மகிழ்ந்தனர். காலை 10.30 மணிக்கு அரங்கத்திற்குள் வருகை புரிந்த தமிழர் தலைவர், கழகத் தோழர்கள் அமர்ந் திருக்கும் பகுதிக்கு வந்து, ஒவ்வொருவரையும் நலம் விசாரித்து அன்பைப் பரிமாறிக் கொண்டார்.
திராவிடர் கழக மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன் கடவுள் மறுப்புச் சொல்ல, கூட்டம் இனிதே தொடங்கியது. செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு தலைமையில், கழகத் தலைவர் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்ட கழகத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் சுருக்கமாய் வரவேற்புரை நிகழ்த்தினார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் முதலாவதாக இரங்கல் தீர்மானத்தை வாசித்தார். மறைந்த சுயமரியாதைச் சுடரொளிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில், இரண்டு நிமிடம் மவுனம் கடைப்பிடித்து வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டது பொதுக் குழுக் கூட்டம்.
சு.அறிவுக்கரசு
செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு தம் தலைமையு ரையில், நாடு நெருக்கடியான நிலையில் இருக்கும்போது கூடும் பொதுக்குழு இது. பாரதீய ஜனதா கட்சி தமது கொள்கைகளை திணித்துக் கொண்டிருக்கிறது. சமூகநீதி குழிதோண்டி புதைக்கப்படுகின்றது. மாநில ஆட்சி எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்கிறது. இது சிறை நிரப்பும் போராட்டத்தை அறிவிக்கும் பொதுக்குழு. தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்போது தோழர்கள் கரவொலி எழுப்பி வரவேற்கவேண்டுமாய் கேட்டுக்கொண்டார்.
பெரியார் வீர விளையாட்டுக் கழகத் தலைவர் ப.சுப்பிர மணியம் அவர்கள் தம் உரையில் சிறுகனூரில் அமையவுள்ள பெரியார் உலகம் அமைய 10 அமைப்புகளிடமிருந்து தடையில்லா சான்று பெற்றுள்ளதை விளக்கினார்.
‘‘திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் தடையில்லா சான்று வழங்கவேண்டும் - அது மட்டும் நிலுவையில் இருக்கிறது. அரசுதான் அனுமதி வழங்கவேண்டும் என்று காரணம் காட்டுகிறார்கள். ஆட்சி மாற்றம்தான் இதற்கு வழிவகுக்கும், அதற்கும் தயார்'' என்று அறிவித்தார்.
வீ.அன்புராஜ்
திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் மானமிகு வீ.அன்பு ராஜ் அவர்கள் தம் உரையில் கடந்த ஓராண்டில் திராவிடர் கழகம் செய்த பணிகளைப் பட்டியலிட்டார்.
தஞ்சை மாநாடு, மணியம்மையார் நூற்றாண்டு விழா வினைத் தொடங்கியது, பெரியார் 1000 சிறப்பாக நடை பெற்றமை, அமெரிக்காவில் நடைபெற்ற பன்னாட்டு மனித நேய சுயமரியாதை மாநாடு, ‘விடுதலை' நாளிதழ் தரமாக வெளிவருவது, (விளம்பரம் வந்தால் மேலும் சிறப்பாக இருக்கும்), ‘விடுதலை', ‘உண்மை', ‘தி மாடர்ன் ரேசனலிஸ்ட்' வாசகர் வட்டம் உருவாக்குவது, சுயமரியாதைத் திருமண நிலையத்தில், கடந்த ஆண்டு 461 திருமணங்கள் நடை பெற்றன. அதில் ஜாதி மறுப்பு திருமணங்கள் 420. வேறு மாநிலத்தவர் இணையேற்பு 13. பார்ப்பனர்கள் விரும்பி செய்த திருமணங்கள் 9; மணமுறிவுத் திருமணங்கள் 19.
கிராமப்புறப் பிரச்சாரத் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு முழுவதும் சிறப்பான பிரச்சாரம், வேறு யாராலும் செய்ய முடியாத அளவிற்கு புத்தக விற்பனை, பெரியாரியல் பயிற்சி வகுப்புகள், சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக பவள விழா மாநாடு, தமிழர் தலைவர் அவர்கள் கலந்துகொண்ட 371 நிகழ்ச்சிகள் என்று நடைபெற்ற ஏராளமான பணிகளை விளக்கி உரையாற்றினார்.
கவிஞர் கலி.பூங்குன்றன்
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தம் உரையில்:- இயக்கம் வலிமையாக இருக்கிறது. தொண்டர்கள் ஆர்வமாய் இருக்கிறார்கள் என்பதை உணரமுடிகிறது. கழகப் பொறுப்பாளர்களுக்கு காவல்துறையுடன் இணக்கமான நட்பு இருக்க வேண்டும். சமூகநீதி, மதச்சார்பின்மை இரண்டும் முக்கியமான பிரச் சினைகள். நாம் இடைவிடாது உழைப்போம். எல்லைவரை செல்வோம். பெரியாரின் தத்துவம்தான் தீர்வு. பெரியார் படமும், அம்பேத்கர் படமும் மட்டும்தான் போராளிகளின் கையில் பதாகையாக ஏந்தியிருக்கிறார்கள். இந்த எழுச்சியை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மண்டலப் பொறுப்பாளர்களின் பணி கேள்விக்குறியாக இருக்கிறது. அரசியல் கட்சிக்காரர்களுக்கு இருக்கக்கூடிய தன்மை நமக்கு இருக்கக்கூடாது. கழகத் தோழர்கள் கண்டிப்பாய் விடுதலை சந்தா உறுப்பினர் ஆக வேண்டும். மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு விழா சிறப்பாக நடைபெற ஏற்பாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
பிற அமைப்பைச் சார்ந்தவர்கள் நடத்துகின்ற பெரியாரி யல் கூட்டங்களில் கலந்து கொள்ள விரும்பும் தோழர்கள் தலைமையிடம் தகவல் தெரிவித்து அனுமதி பெறுங்கள். முகநூலில் எழுதுங்கள். தலைமைக் கழகம் அறிவித்தால் மட்டுமே கூட்டம் நடத்தும் நிலை கூடாது. தலைவர் உரையில் அறிவிப்புகள் வரும். உங்கள் ஆசை பூர்த்தியாகும் என்று உரை நிகழ்த்தினார் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள்.
திராவிடர் கழகப் பொதுக்குழுத் தீர்மானங்களை கழகப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் கணீரென்ற குரலில் அழுத்தந்திருத்தமாக வாசித்து முடிக்க தோழர்கள் அனைவரும் எழுந்து நின்று பலத்த கரவொலி எழுப்பி வரவேற்றார்கள்.
அன்னை மணியம்மையாரின் நூற்றாண்டு நிறைவு விழாவினை ஒட்டி மணியம்மையார் அவர்களின் அஞ்சல்தலை வெளியிடுவது தொடர்பாக கழகப் பொருளாளர் வீ.குமரேசன் அவர்கள் சில விளக்கங்கள் அளித்தார். ஓர் அட்டையின் விலை ரூ. 500 என்றும், அஞ்சல்தலை
மார்ச் 10 அன்று வெளியிடப்படும் என்றும் அறிவித்தார்.
கழக மகளிரணி பொறுப்பாளர் இன்பக்கனி கடந்த ஆண்டில் மகளிரணி செயல்பாடுகள் குறித்து சுருக்கமாக உரை நிகழ்த்தினார். ஒவ்வொரு அணியின் பொறுப்பாளர்கள் தத்தம்துறை தொடர்பான கருத்துரை வழங்க கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் அழைத்தார். தொழிலாளர் அணியின் சார்பாக மகளிர் பாசறை செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, பகுத்தறிவாளர் கழக கலைத்துறை செயலாளர் சித்தார்த்தன், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மா.அழகிரிசாமி, வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி, அமைப்புச் செயலாளர் வே.செல்வம், மாணவர் கழக செயலாளர்கள் சுரேஷ், பிரின்சு என்னாரெசு, மாநில அமைப்பாளர் இரா.குண சேகரன், கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், கழகப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் கருத்துகளை வழங்கினார்கள்.
பொதுக்குழுவில், கழக காப்பாளர்களும், மகளிரணி பொறுப்பாளர்களும், மாவட்ட பொறுப்பாளர்களும் அறிவிக் கப்பட்டனர்.
கழகத் தலைவர் நிறைவுரை
கழகத் தலைவர் உரையாற்றத் தொடங்கும்போது தோழர்கள், கழகப் பொறுப்பாளர்கள் வரிசையில் நின்று விடுதலைச் சந்தாக்களை வழங்கி மகிழ்ந்தார்கள். கழகத் தலைவர் 45 நிமிடம் வழிகாட்டுதல் உரை நிகழ்த்தினார். அவர்தம் உரையில், பெரியார் வாழ்கிறார், துடிப்போடு வாழ்கிறார், என்றென்றும் வாழ்வார் என்பதை நீங்கள் உணர்வீர்கள். ஆனந்த விகடன் எழுதிய செய்திக்கட்டுரையினை மேற்கோள் காட்டி எதிரிகளை உலக மகா பைத்தியக்காரர்கள் என்றார். பெரியாரும், அம்பேத்கரும் போராட்டக் கருவிகள் என்றார். போராட்டத்தைத் தூண்டி விட்டது மோடியும், அமித்ஷாவும் என்றார். படித்தவர்கள் கூலித்தொழிலாளர்களாக அலைகிறார்கள். குடும்பம் குடும்பமாக தற்கொலைகள் நிகழ்கின்றன.
கொள்கை, கொள்கை என்று லட்சியப் பயணம் செய்த வர்கள் இப்போது காப்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள் ளனர். தந்தை பெரியார் அவர்கள் 90 வயதுக்கு மேல் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளின் எண்ணிக்கையை பட்டியலிட்டார். தோழர்கள் வியந்து கேட்டனர். சுற்றுப்பயணத்தால் நான் தளர்ச்சி - சோர்வு அடையவில்லை என்றார். இயக்கப் பொறுப்பாளர்கள் ஒரு வாரத்தில் ஒரு நாளையாவது இயக்கப் பணிக்கு ஒதுக்குங்கள் என்றார். மகளிர் அணி தொடங்க மணியம்மையாருக்குக் கூட தயக்கம் இருந்தது. ஆனால் சிறப்பாக எந்தவித குற்றமும் இல்லாமல் சிறப்பாக நடை பெறுகிறது.
கருப்புச்சட்டை இன்று பேஷனாக கருதப்படுகிறது. நம்முடைய கருப்புச்சட்டை - கொள்கை சாயம் போகாத கருப்புச்சட்டை. கருப்புச்சட்டைக்காரர்கள் உலகில் எதற்கும் பயப்படத் தேவையில்லை. தன் வாழ்வுக்கு யாரையும் எதிர்பார்க்கக்கூடாது, சுயநலத்திற்கு என்று எந்தக் காரியத்தையும் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது. தந்தை பெரியார் தனி வாழ்க்கை வைத்துக் கொண்டதில்லை. அதுபோல எனக்கும் தனி வாழ்க்கை கிடையாது. அண்மைக் காலத்தில் வெளிவந்த நல்ல நூல் பழ.அதியமான் எழுதிய வைக்கம் போராட்டம். ஒவ்வொருவர் வீட்டிலும் இடம்பெற வேண்டும். தோழர்கள் படிக்க வேண்டும்.
இந்த நூலைப் படித்த போது எனக்கு உற்சாகம் ஏற்பட்டது. நாகம்மையார் மொழி தெரியாத நாட்டில் திருவாங்கூரில் போராட்டம் நடத்துகின்றார். பெரியாரின் போராட்ட குணம் இந்நூலில் வெளிப்படுகிறது. பெரியார் விடுதலை பெற்றவுடன் மீண்டும் போராட்டத்தில் குதிக்கின்றார். கடுங்காவல் தண் டனை பெறுகிறார். வைக்கம் போராட்டத்தில் கலந்து கொள் ளக்கூடாது என்பதற்காக பெரியார் கதர்ப் பிரச்சாரத்திற்காகக் கைது செய்யப்படுகிறார். நாகம்மையார் வருத்தப்படுகிறார் வைக்கம் போராட்டத்திற்கு போகமுடியவில்லை என்று, எனவே நாம் போராட்டத்திற்கு தயங்காதவர்கள்.
பொறுப்பு மாறி மாறி வரவேண்டும். 1960இல் தந்தை பெரியார் இதே இடத்தில் என்னைப் பொதுச் செயலாளர் ஆக்கினார். என் வாழ்நாள் இயக்க வளர்ச்சிக்கு - கொள் கைக்கு பயன்பட வேண்டும். பிரச்சாரம் - போராட்டம் நம் இயக்கப் பண்பு, ஒழுக்கம் - கட்டுப்பாடு - நாணயம் - நமது தனித்தன்மை.
தோழர்கள் நடந்து கொள்ள வேண்டிய நெறிமுறைகளை தமிழர் தலைவர் தெளிவுற எடுத்துரைத்தார். திருச்சி மாவட் டச் செயலாளர் தோழர் மோகன்தாஸ் நன்றி கூற பொதுக்குழுக் கூட்டம் நிறைவுற்றது.
தொகுப்பு: பேராசிரியர் நம்.சீனிவாசன்
சமூகநீதி மாநாட்டில் தமிழர் தலைவர் உரை கேட்கத் திரண்டிருந்தோர் (திருச்சி, 21.2.2020)
திருச்சி சமூகநீதி மாநாட்டில் ஜாதி மறுப்பு மணவிழா
திருச்சி சமூகநீதி மாநாட்டு மேடையில் குடிகாடு அழகேசன் - இலஞ்சியம் ஆகியோரின் மகன் ஆனந்தராஜுக்கும், உங்களாபாடி துரையரசன் - ரமலா ஆகியோரின் மகள் மாயாவதிக்கும், ஈரோடு மாவட்டம் ரெட்டிப்பாளையம் ப.ஆறுமுகம் -
ஆ. ஜோதி ஆகியோரின் மகன் தேவராஜுக்கும், ஈரோடு மாவட்டம் பெ.மேட்டுப்பாளையம் அ. பாட்டுச்சாமி- பெ. மல்லிகா ஆகியோரின் மகள் பா.ம. தேன்மொழிக்கும் ஜாதி மறுப்புத் திருமணத்தை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்.
உடன்: மாநிலங்களவை தி.மு.க குழுத் தலைவர் திருச்சி சிவா எம்.பி., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன், சி.பி.எம். மாநில குழு உறுப்பினர் கனகராசு, மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் அப்துல்சமது, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன், திருச்சி மாவட்ட தலைவர் ஞா. ஆரோக்கியராசு மற்றும் மணமக்கள் குடும்பத்தினர் உள்ளனர். (21.2.2020)
- விடுதலை நாளேடு 22.2. 20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக