* நீட் தேர்வை ரத்து செய்க! தேசிய கல்விக் கொள்கையைத் திரும்பப் பெறுக!
* ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்திடுக!
* சிறுபான்மையினருக்கும் இடஒதுக்கீடுக்கு வழி செய்க!
* குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் பதிவேட்டைக் கை விடுக!
சென்னையில் மார்ச் 10ஆம் தேதி
அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு விழா
மார்ச் 23 ஆம் தேதி ‘நீட்' மற்றும் புதிய தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து தமிழ்நாடெங்கும் உள்ள மத்திய அரசு அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டம்!

திருச்சி, பிப்.21 சென்னையில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு விழா உள்ளிட்ட 14 தீர்மானங்கள், திருச்சி பெரியார் மாளிகை, அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நினைவு அரங்கத்தில், (21.2.2020) திராவிடர் கழகச் செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு அவர்கள் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழு கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள் வருமாறு:
தீர்மானம் எண்: 1 இரங்கல் தீர்மானம்
இன்று (21.2.2020) திருச்சியில் நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட
இரங்கல் தீர்மானம்
உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதியும், திராவிட இயக்க ஆர்வலருமான ஜஸ்டிஸ் திரு.எஸ்.மோகன் (வயது 90, மறைவு 27.12.2019),
குஜராத் மாநில உயர்நீதிமன்ற மேனாள் தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் திரு.பி.ஆர்.கோகுலகிருஷ்ணன் (வயது 93, மறைவு 15.1.2020),
முதுபெரும் சுயமரியாதை வீரர் புரவலர் மதுரை ஆசிரியர் இராமசாமி (வயது 85, மறைவு 21.1.2020 - உடற்கொடை)
கோவை பாரதியார் பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் டாக்டர் கே.மாரிமுத்து (வயது 92, மறைவு 28.1.2020)
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் நெல்லை தோப்பில் முகமது மீரான் (வயது 74, மறைவு 10.5.2019),
சுயமரியாதை வீரர், மேனாள் மக்களவை உறுப்பினர் கோவை மு.இராமநாதன் (வயது 87, மறைவு 9.5.2019), சென்னை மாவட்ட தி.மு.க. மேனாள் செயலாளரும், மேனாள் மேலவை உறுப்பி னருமான ஆர்.டி.சீதாபதி (வயது 82, மறைவு 21.5.2019), புதுச்சேரி திராவிடப் பேரவை நிறுவனர் ‘மிசா' நந்திவர்மன் (30.5.2019), திராவிட இயக்க எழுத்தாளர் ஆங்கில நூல்களின் படைப்பாளர் பேராசிரியர் அ.அய்யாசாமி (வயது 78, மறைவு 16.6.2019), திருமருகல் ஒன்றிய மேனாள் பெருந்தலை வர் சுயமரியாதை வீரர் சற்குணம் (வயது 91, மறைவு 30.6.2019), பகுத்தறிவுப் பாவலர் காரைக்குடி புலவர் பழம்நீ (வயது 88, மறைவு 6.11.2029 - உடற்கொடை), சிகாகோ தமிழ் ஆர்வலர் புரவலர் ராம்மோகன் (மறைவு, 12.12.2019), மலேசிய திராவிடர் கழகத் தோழர் மோகன் இராமசாமி (வயது 45, மறைவு 28.12.2019),
திருச்சி பெரியார் நூற்றாண்டுக் கல்வி நிறுவனங் களின் ஒருங்கிணைப்பாளர் சி.தங்காத்தாள் அவர்க ளின் வாழ்விணையரும், சுயமரியாதைச் சுடரொளி யுமான இரா.சின்னப்பன் (வயது 71, மறைவு 28.1.2020),
பிரபல அறுவை மருத்துவரும் அரசு மருத்து வர்கள் சங்கத் தலைவருமான டாக்டர் லட்சுமி நரசிம் மன் (வயது 51, மறைவு 7.2.2020) ஆகிய பெருமக்களின் மறைவிற்கு இப்பொதுக்குழு தன் ஆழ்ந்த இரங்க லைத் தெரிவித்துக் கொள்கிறது.
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், சட்ட எரிப்புப் போராட்டம் உள்பட கழகம் நடத்திய பல்வேறு போராட்டங்களிலும் பங்கேற்றவரும், இளைஞர்களை இயக்கத்திற்கு ஈர்த்தவருமான - கழகப் பொதுக்குழு உறுப்பினர் மயிலாடுதுறை
கோ.அரங்கசாமி (வயது 93, மறைவு 25.10.2019 - உடற் கொடை), முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் நூற்றாண்டைக் கடந்தும் வாழ்ந்த திருச்சி ஞான செபஸ்தியான் (வயது 101, மறைவு 4.6.2019), முது பெரும் பெரியார் பெருந்தொண்டர், மேனாள் சிவகங்கை மாவட்டக் கழகத் தலைவர் பொறியாளர் சிவகங்கை எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் (வயது 90, மறைவு 6.6.2019), முதுபெரும் சுயமரியாதை வீராங் கனையும் எழுத்தாளர் ஓவியா அவர்களின் பாட்டியு மாகிய ஒரு நூற்றாண்டையும் கண்ட காந்திமதியம் மாள் (வயது 100, மறைவு 12.7.2019),
சுயமரியாதை இயக்க வீரர், பெரியார் பெருந் தொண்டர் மயிலாடுதுறை மா.க.கிருட்டினமூர்த்தி (வயது 84, மறைவு 19.8.2019 - உடற்கொடை), கழகச் செயல் வீரர் கபிஸ்தலம் தி.கணேசன் (வயது 73, மறைவு 3.10.2019), கழக வீராங்கனை - மகளிரணி செயற்பாட்டாளர் ஆசிரியர் பொன்.இரத்தினாவதி (வயது 83, மறைவு 6.11.2019 - உடற்கொடை), திருச்சி மாவட்டக் கழக மேனாள் செயலாளரும், இயக்கச் செயல்வீரருமான ‘உண்மை' கிருஷ்ணன் (வயது 92, மறைவு 24.12.2019), முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் ஓடாக்கநல்லூர் தன.திருமலை (வயது 94, மறைவு 10.1.2020), முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர், சட்ட எரிப்புப் போராட்ட வீரர், செந்துறை கருத்தமணி என்ற நாராயணசாமி (வயது 96, மறைவு 24.7.2019),முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் சட்ட எரிப்புப் போராட்ட வீரர் குடந்தை கோ.அரங்கநாதன் (வயது 98, மறைவு 5.2.2020),
திருச்சி மேலகற்கண்டார்கோட்டை கழகத் தோழர் ஜோசப் செல்வராஜ் (வயது 44, மறைவு 26.4.2019), தூத்துக்குடி கழக மாவட்ட மகளிரணி தலைவர் பெ.சாந்தி (வயது 53, மறைவு 1.5.2019 - உடற்கொடை), தூத்துக்குடி மாவட்ட புதூர் ஒன்றிய கழகத் தலைவர் சா.முத்துராஜ் (மறைவு 18.5.2019), கல்லக்குறிச்சி கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழக மேனாள் தலைவர் ப.கண்ணன் (மறைவு 27.5.2019), பண்ருட்டி திருவதிகை முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் து.செல்வராஜ் (வயது 78, மறைவு 31.5.2019), திருத்துறைப் பூண்டி கழக மாவட்டம் - விக்கிரபாண்டியம் கழகத் தலைவர் இரா.அழகேசன் (வயது 96, மறைவு 1.6.2019),
பிச்சாண்டார் கோவில் தோழர் செங்குளத்தான் (மறைவு, 20.6.2019), வேட்டவலம் பெரியார் பெருந்தொண்டர் ம.ஜெயராம் (வயது 82), ஆத்தூர் வாழப்பாடி பொறியாளர் பகுத்தறிவு (வயது 45, மறைவு 15.7.2019), பண்ருட்டி கோ.புஷ்பவல்லி (வயது 86, மறைவு 20.7.2019), முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் காஞ்சிபுரம் அ.கோவிந்தன் (வயது 97, மறைவு 6.8.2019), தஞ்சை மாவட்ட மேனாள் மாவட்டக் கழக இளைஞரணி தலைவர் நீடாமங்கலம் வழக்குரைஞர் வி.அருளரசன் (மறைவு 6.8.2019), திருவாரூர் மாவட்டக் கழக மேனாள் செயலாளர் கமலாபுரம் காமராஜ் (மறைவு 11.8.2019), சட்ட எரிப்புப் போராட்ட வீரர் லால்குடி ராஜா என்ற இன்னாசிமுத்து (வயது 93, மறைவு 11.8.2019), தஞ்சை பூதலூர் கழகத் தலைவர் சந்தானம் (வயது 96, மறைவு 31.8.2019), மணிகண்டம் ஒன்றியம் சோமரசம் பேட்டை கழக செயலாளர் முருகன் (வயது 69, மறைவு 29.8.2019), லால்குடி - மேலவாளாடி திராவிடர் கழக செயலாளர் க.மாரிமுத்து (வயது 73, மறைவு 17.9.2019),
கோவை மாவட்ட வெள்ளலூர் கழக செயலாளர் தி.க. மணி (மறைவு 30.9.2019), கரூர் மாவட்டக் கழக மகளிர்ப் பாசறை செயலாளர் ஜே.செயலட்சுமி (வயது 29, மறைவு 1.10.2019), புதுக்கோட்டை மாவட் டம் ஆலங்குடி கழக செயலாளர் கருப்பையா (வயது 75, மறைவு 21.10.2019), திருவாரூர் கிடாரங்கொண்டான் கழகத் தலைவர் கண்ணையன் (வயது 62, மறைவு 14.10.2019), தஞ்சை மாவட்டம் உடையார் கோவில் கழகத் தலைவர் சா.புகழேந்தி (வயது 60, மறைவு 11.11.2019), கும்பகோணம் கழக மாவட்டம் திருவிடை மருதூர் ஒன்றியக் கழக வீரர் பிச்சைமுத்து (மறைவு 27.11.2019), ஆவடி திருமுல்லைவாயில் எஸ்.பால கிருஷ்ணன் (வயது 83, மறைவு 1.12.2019), தஞ்சை பூதலூர் கோவிலடி பெரியார் பெருந்தொண்டர் சவுந்தரராசன் (வயது 81, மறைவு 2.12.2019),
கும்பகோணம் கழக மாவட்ட மகளிரணி அமை ப்பாளர் கலைச்செல்வி (வயது 60, மறைவு 4.12.2019), கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகர கழகத் தலைவர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் எஸ்.எம்.சாகுல் அமீது (வயது 92), புதுச்சேரி பெரியார் பெருந்தொண்டர் சு.இளங்கோவன் (வயது 78, மறைவு 1.1.2020), தோழர் பெங்களூர் பாண்டியன், கழக செயல் வீரர் வாண்டையார் இருப்பு இராம கிருஷ்ணன் (மறைவு 30.1.2020), கந்தர்வக்கோட்டை பெரியார் பெருந்தொண்டர் கோமாபுரம் இ.முரு கையா (மறைவு 30.1.2020), வடலூர் கழக வீரர் துரை.ஞானசேகரன் (மறைவு 13.5.2019 - உடற்கொடை),
வேலூர் மாவட்டம் - திருவலம் பெரியார் பெருந் தொண்டர் ‘தொண்டறச் செம்மல்' சி.எம்.சி.ராஜா (வயது 94, மறைவு 9.2.2020)
ஆகிய இயக்க வீரர்கள், வீராங்கனைகளின் மறைவுக்கு இப்பொதுக்குழு இரங்கலைத் தெரிவிப் பதுடன், அவர்களைப் பிரிந்து வாடும் குடும்பத்தி னருக்கு ஆறுதலையும் தெரிவித்து, அப்பெருமக் களின் அளப்பரியா, ஈடு இணையற்ற கழகப் பெருந் தொண்டுக்கு இப்பொதுக்குழு வீர வணக்கத்தைச் செலுத்துகிறது.
தீர்மானம் எண்: 2
அன்னை மணியம்மையாருக்கு
நூற்றாண்டு நிறைவு விழா நடத்துதல்
தந்தை பெரியார் அவர்களுக்குச் செயலாளராகவும், தாயாகவும், செவிலியராகவும் இருந்தவரும், அவர்களின் ஆயுள் நீட்சிக்கு முக்கிய காரணமாக இருந்தவரும், தந்தை பெரியார் மறைவிற்குப் பிறகு கழகத்தையும், கல்வி நிறுவனங்களையும் கட்டிக் காத்தவருமான அன்னை மணியம்மையார் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவினை வரும் மார்ச் 10 ஆம் தேதி சென்னையில் வெகு சிறப்புடன் நடத்துவது என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.
2020 மே 16 ஆம் தேதி அரியலூரில் திராவிடர் கழக மாநில இளைஞரணி மாநாட்டை எழுச்சியுடன் நடத் துவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் எண்: 3
நீட் மற்றும் நெக்ஸ்ட் (NEXT)
தேர்வை நிரந்தரமாக நீக்குக!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தொடங்கி சென்னை வரை தொடர்ந்து பதினொரு நாட்கள் தமிழர் தலைவர் தலைமையில் திராவிடர் கழகம் நடத்திய நீட் ரத்து, புதிய கல்விக் கொள்கையின் விபரீதம், 5 மற்றும் 8 ஆம் வகுப்புக்களுக்கான பொதுத் தேர்வுகளால் ஏற்படும் இடர்ப்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய விழிப் புணர்வுப் பயணம், கட்சிகளைக் கடந்து அனைத்து மக்களிடையேயும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. நீட் தேர்வின் காரணமாக ஒடுக்கப்பட்ட மக்களின் பாதிப் பைப் பொதுமக்கள் மத்தியில் பெரும் அளவில் கொண்டு சேர்த்தது.
சமூகநீதி வரலாற்றில் முக்கிய நிகழ்ச்சியான இந்தப் பரப்புரைப் பயணத்தினை மேற்கொண்ட கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்கும், சொற்பொழிவாளர்களுக்கும், பயண ஏற்பாட்டாளர் களுக்கும், கழகத் தோழர்களுக்கும் இப்பொதுக் குழு தனது பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.
ஆதரவு அளித்த பொது மக்களுக்கும் நன்றி தெரி வித்துக் கொள்ளப்படுகிறது.
வட நாட்டில், நீட் தேர்வு என்பது கண் துடைப்புக்கான தேர்வு, மோசடி என்பதை வட நாட்டுச் செய்தித்தாள்களே அம்பலப்படுத்தி வருகின்றன.
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளித்திடும் மசோதா குறித்து, மத்திய அரசின் கபட நாடகம் அம்பலம் ஆகியுள்ளது. தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து இந்த நீட் தேர்வு மற்றும் மருத்துவர் தகுதிக்கான நெக்ஸ்ட் (NEXT) தேர்வையும் நிரந்தரமாக ஒழித்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. நீட்டினால் ஒடுக்கப்பட்ட மக்களும், கிராமப்புற மக்களும் அரசுப் பள்ளிகளில் படிக்கும் இருபால் மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் என்பது பற்றிய புள்ளி விவரங் களே தெளிவாக உணர்த்துகின்றன. தனிப் பயிற்சி (Coaching) என்ற பெயரில் கார்ப்பரேட்டுகள் இலட்சக்கணக்கில் கொள்ளை அடிக்கின்றனர். ஏழை எளிய மக்கள் அத்தகு பயிற்சிகளில் சேர முடியாத நிலை. இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் நீட்டைத் தொடர்வது கண்டனத்திற்குரியது - மாநில அரசும் இப்பிரச்சினையில் போதிய அக்கறை செலுத்தவில்லை. இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரும் இரு மசோதாக்களையும் மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிட வேண்டும் என இப்பொதுக்குழு தமிழ் நாடு அரசை வலியுறுத்துகிறது.
‘நீட்'டை முழுவதுமாக ரத்து செய்யக் கோரும் வகை யில் மத்திய அரசு அலுவலகங்களின்முன், பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்ட மார்ச் 23 ஆம் தேதி மறியல் போராட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் எண்: 4
தேசிய கல்விக் கொள்கை வரைவு- 2019 - திரும்பப் பெறுக!
இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக, மாநில உரிமைகளைப் பறிக்கக் கூடிய, இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதிக்கு எதிரானதாகவும், சமஸ்கிருதமயமான கல்வியைத் திணிக்கக்கூடியதாகவும் முழுமையாக வணிக மயமாக்குகின்ற வகையிலும் வகை செய்யப் பட்டுள்ள இந்தப் புதிய தேசிய கல்விக் கொள்கை திரும்பப்பெறப்பட வேண்டும்.
இந்தியப் பன்முகப் பண்பாட்டிற்கு எதிரான இந்தி-சமஸ்கிருதத் திணிப்பு, ஒற்றைக் கல்விமுறை, ஒற்றைப் பண்பாட்டைத் திணிக்கும் இந்தப் புதிய தேசியக் கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை மக்கள் முழுமையாக நிராகரிக்க வேண்டும் என திராவிடர் கழகப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.
1976இல் நெருக்கடி காலத்தில் கல்வி மாநிலப் பட்டியலில் (State List) இருந்து ஒத்திசைவுப் பட்டி யலுக்கு (Concurrent List) கொண்டு செல்லப்பட்டது. இன்று மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பாஜக அரசு, கல்வியை முற்றிலும் மத்திய தொகுப்புக்கு மட்டும் உரியது போன்று தன்னிச்சையாகவே செயல்பட்டு வருகிறது.
இந்தியா போன்ற பன்மொழி, பல இனம், பல கலாச்சாரம், பல மதங்கள் மாறுபட்ட இயற்கைச் சூழல்கள் கொண்ட நாட்டில், கல்விக் கொள்கை என்பது அந்தந்த மாநில மக்களின் பண்பாடு, மொழி சார்ந்த அறிவியலை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்பட வேண்டும் என்பதுதான் சரியானதாக இருக்க முடியும் என்பதால், கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கே கொண்டு வருவதுதான் அனைத்து மக்களுக்கும் உரிய முறையில் கொண்டு செல்வதற்கான நியாயத் தீர்வாக இருக்கும். இதற்கான முயற்சியை அனைத்துக் கட்சி களும் எடுத்திட வேண்டும் என்றும் நாடாளுமன்றம் வாயிலாகவும் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண்: 5 (அ)
உயர்ஜாதியினரில் பொருளாதார அடிப்படையில் நலிந்தோர்க்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு எனும் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான மோசடி
சமூக நீதிக் கோட்பாட்டையே கேலிக்கூத்தாக்கும் வகையில், மத்திய அரசு பார்ப்பன உயர்ஜாதியினர்க்கு 10% இட ஒதுக்கீடு அளித்திடும் சட்டத்தை அவசர அவசரமாக நிறைவேற்றி அதனை அனைத்து மத்திய அரசின் துறைகளிலும் அமல்படுத்தி வருகிறது.
மத்திய அரசின் அனைத்துத் துறை சார்ந்த உயர் பதவிகளிலும் 75 விழுக்காட்டிற்கும் அதிகமாக ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் பார்ப்பன-உயர்ஜாதி யினர்க்கு, மேலும் இடஒதுக்கீடு என்பது சட்ட விரோத மான சமூகநீதிக்கு விரோதமான, நியாய விரோதமான செயலேயாகும். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் வழக்கு, பல அமைப்புகளால் தொடரப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் உரிய தீர்ப்பினை விரைவில் வழங்கி, சமூக நீதியைக் காத்திட வேண்டும் என பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது. இத்திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும், மாநில அரசுகளும் இந்த வகையில் வலியுறுத்த வேண்டும் என்றும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண்: 5 (ஆ)
யு.பி.எஸ்.சி., அய்.ஏ.எஸ். முதலிய மத்திய அரசு தேர்வுகள் எழுதுவதற்கு பிற்படுத்தப்பட்டோருக்கு இணையாக உயர்ஜாதி ஏழையினருக்கும் வயது வரம்பு சலுகை என்கிற அளவுக்கு மத்திய பி.ஜே.பி. உயர் ஜாதியினர்மீது பெரும் அக்கறை கொண்டு மேலும் மேலும் சலுகைகள் அளிப்பதை இப்பொதுக்குழு கண்டிக்கிறது. பிற்படுத்தப்பட்டோருக்கு இணையாக ஏற்கெனவே கல்வி, வேலை வாய்ப்புகளில் வளர்ந்த நிலையில் உள்ளவர்களை சமநிலையில் வைத்துப் பார்ப் பது சமூகநீதிக்கு எதிரானது என்பதை இப்பொதுக்குழு சுட்டிக்காட்டுகிறது.
இதனைக் கைவிடுமாறு மத்திய அரசை இப்பொதுக் குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண்: 6
மக்கள் தொகைக் கணக்கெடுப்பில்
ஜாதிவாரி அம்சம் கட்டாயம் தேவை
2021 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தாழ்த்தப் பட்டோர், பழங்குடியினரின் கணக்குகள்தான் எடுக்கப் படும்; பிற்படுத்தப் பட்டோரில் அடங்கியுள்ள ஜாதி வாரியான பட்டியல் எடுக்கப்பட மாட்டாது என்று ஒரு தகவல் வெளிவந்துள்ளது. பிற்படுத்தப்பட்டோர்களின் எண்ணிக்கை மக்கள் தொகையில் 75 விழுக் காட்டுக்கு மேலும் இருக்கக்கூடிய உண்மை நிலை வெளிச்சத்துக்கு வந்தால், 27 விழுக்காடுக்குப் பதிலாக அதிக விழுக் காட்டில் இடஒதுக்கீடு கேட்டு வலியுறுத்தும் நிலை பிற்படுத்தப்பட்டோர் மத்தியில் மூண்டு எழும் என்ற அச்சத்தின் காரணமாகத்தான், பிற்படுத்தப்பட்டோர் ஜாதிக் கணக்கெடுப்பை மேற்கொள்ள மறுக்கின்றனர் என்பதுதான் உண்மை.
ஜாதிவாரிப் பட்டியல் எடுக்கப்படும்போது, உயர் ஜாதியினரின் எண்ணிக்கையும் வெளிப்பட்டு, அவர் களின் எண்ணிக்கையைவிட பல மடங்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் ஆதிக்கம் செலுத்தும் உண்மை வெளிப்படும் என்பதால், ஜாதிவாரி கணக்கெடுப்பை ஆளும் வர்க்கம் -உயர்ஜாதி அதிகார வர்க்கம் தடுக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.
ஜாதியைப் பாதுகாக்கும் கொள்கையை அடிப்படை யாக ஒரு பக்கத்தில் வைத்துக் கொண்டு, இன்னொரு பக்கத்தில் ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிற்கான உண்மைப் புள்ளி விவரம் வெளியில் வராமலும் பார்த்துக் கொள்வது - அதன் கபடத்தனமான இரட்டை வேடத்தைத்தான் காட்டுகிறது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உரத்த குரல் கொடுத்து, ஜாதி வாரி கணக்கெடுப்பை எந்த காரணத்தை முன் னிட்டும் தவிர்க்கக் கூடாது; ஜாதி வாரி கணக்கெடுப்பை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் பொதுக்குழு அனைத்துக் கட்சி களையும் கேட்டுக் கொள்கிறது. மத்திய அரசு இந்தப் பணியை மேற்கொள்ளாவிட்டால், ஒடிசா மாநில அர சைப் போல, தமிழக அரசும் ஜாதி வாரிக் கணக்கெடுப்பை மேற் கொள்ளவேண்டும் என்றும் இப்பொதுக்குழு வற்புறுத்துகிறது.
தீர்மானம் எண்: 7
சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு
சிறுபான்மை மக்களாகிய முஸ்லீம் மக்களின் சமூகம், கல்வி, பொருளாதார நிலையை ஆராய்ந்து அது குறித்து அறிக்கையை நீதிபதி ராஜேந்திர சச்சார் தலைமையில் நவம்பர் 2006 இல் மத்திய அரசிடம் அளித்தது. ஆனால், இன்றுவரை அந்த அறிக்கையின் பரிந்துரைகள், அரசுத் துறையில் போதிய பிரதிநிதித்துவம் உள்ளிட்ட எத னையும் இன்றுவரை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. சச்சார் கமிட்டி பரிந்துரை விரைந்து நிறைவேற்றப் பட வேண்டும் எனஇப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண்: 8 (அ)
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை
தந்தை பெரியார் அவர்கள் இறுதியாக அறிவித்த அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற போராட்ட அறிவிப்பினைத் தொடர்ந்து, திமுக ஆட்சி யில் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களால் கொண்டுவரப்பட்ட சட்டம் செல்லும் என்ற அடிப்படை யில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கேரள மாநில இடது சாரி அரசால் 60-க்கும் மேற்பட்ட கோவில் களில் அனைத்து ஜாதியினரிலிருந்தும் அர்ச்சகர்களை நியமித்துள்ளது. தமிழ் நாட்டில் மதுரை தல்லாக்குளத்தில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு அர்ச்சகராக பிற் படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த திரு.மாரிசாமி என்ற ஒருவர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார். அர்ச்சகர் பயிற்சி பெற்ற மேலும் 200-க்கும் மேற்பட்ட அனைத்து ஜாதியினருக்கும் உடனடியாக பணி நியமனம் செய்யு மாறு பொதுக்குழு தமிழ் நாடு அரசை வலியுறுத்துகிறது. அனைத்து ஜாதியினருக்கும் அளிக்கப்பட்டு வந்த அர்ச்சகர் பயிற்சியைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை இப்பொதுக்குழு வலியுறுத் துகிறது.
தீர்மானம் எண்: 8 (ஆ)
பெரியார் நினைவு சமத்துவபுரங்களில் எந்த மத வழிபாட்டுச் சின்னங்களும் கூடாது என்ற அரசு ஆணை (நிலை) எண் 28 ஊரக வளர்ச்சி (மதிக) தெளிவாக இருந்தும் சில சமத்துவபுரங்களில் கோயில் கட்டப்பட்டிருப்பது சட்ட விரோதமாகும். இதனைத் தடுத்து நிறுத்திட தமிழ்நாடு அரசை பொதுக்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண்: 9
குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் பதிவேடு ஆகியவற்றைக் கைவிடுக!
நாடாளுமன்றத்தில் தனக்கு உள்ள பெரும்பான் மையை தவறாகப் பயன்படுத்தி நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டம் (CAA), மதரீதியாக மக்களைப் பிளவுபடுத்தும் செயலாகும். அரசமைப்புச் சட்டத்தின் மதச்சார்பின்மைக் கொள்கையை குழிதோண்டிப் புதைப் பதேயாகும். அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சி னையைத் திசைதிருப்பி, மக்களை மத ரீதியாக பிளவு படுத்தும் விபரீத செயலே என்று இப்பொதுக்குழு தெரிவிக்கிறது.
மேலும், தேசிய மக்கள் தொகைப் பதிவேடு (NPR) என்பதும், அதில் பெற்றோரின் பிறந்த சான்றிதழ் உள் ளிட்ட பல்வேறு ஆவணங்களைக் கேட்பதும், அனைத்து மக்களையும் துன்புறுத்தும் அலைக்கழிக்கவும் செய்யும் நடைமுறை சாத்தியமில்லாத செயல்பாடே ஆகும்.
அனைத்துத் தரப்பு மக்களும், இதன் ஆபத்தை உணர்ந்து, மத்திய அரசு இம்மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்துவதை அலட்சியப்படுத்தாமல், மக்களின் கருத்துக்கு மதிப்பு அளிக்கும்வகையில், மத்திய அரசு குடியுரிமை திருத்த மசோதா, தேசிய மக்கள் பதிவு ஆகியவற்றை உடனே திரும்பப்பெற வேண்டும் என இப்பொதுக்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண்: 10
ஜாதி ஒழிப்பு - பாலியல் வன்கொடுமைத் தடுப்பு - சட்டங்கள் தேவை

ஜாதி ஆணவக் கொலைகளும், பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளும் நாளும் பெருகி வருவது வெட்கக் கேடானதாகும். சுதந்திர நாடு என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு, உண்மை சுதந்திரத்துக்கு எதிரான ஜாதிய கட்டமைப்பு காப்பாற்றப்படுவது வேத னைக்குரியதாகும். அதேபோல பாலின பாகுபாடும் சுதந்திரத்துக்கும், சமத்துவத்துக்கும் சகோதரத்துவத் துக்கும் முற்றும் எதிரானவையே!
இந்த நிலையில் ஜாதி ஒழிப்புக்கான சட்டங்களும் திட்டங்களும் மத்திய மாநில அரசுகளால் இயற்றப் படுவதோடுகூட, அவற்றைத் துல்லியமாக செயல்படுத் துவதுதான் சுதந்திர நாடு என்பதற்கான அடிப்படை அடையாளம் என்று இப்பொதுக்குழு திட்டவட்டமாகவே தெரிவித்துக் கொள்கிறது.
அதுபோலவே ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்வோரை பெற்றோர்களே படுகொலை செய்வது என்பது மன்னிக்கப்படவே முடியாத மாபெரும் குற்றமாகும்.
சுடுகாட்டிலும்கூட ஜாதி வேறுபாடு கண்டிப்பாக நீக்கப்படவேண்டும். கையால் மலம் அள்ளும் கொடுமை உடனடியாகத் தடுக்கப்டவேண்டும் என்றும் இப்பொதுக் குழு வலியுறுத்துகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெண்கள் மீதான 576 வன்முறை வழக்குகள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாமலேயே நிலுவையில் உள்ளன. தமிழ் நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களிலும் பெண்களுக்கு எதிரான வழக்குகள் 14,545 நிலுவையில் உள்ளன. இதில் 1751 பாலியல் வல்லுறவு வழக்குகளுடன் 3181 பெண் களுக்குத் தொந்தரவு கொடுத்த வழக்குகளும் ஆகும்.
மாநிலக் குற்றவியல் பதிவுச் செயலகத்தின் பகுப் பாய்வுப் புள்ளி விவரம், தமிழ்நாட்டில் 82 விழுக்காடு பாலியல் குற்ற வழக்குகள் காவல்துறை மற்றும் நீதி மன்றங்களில் நிலுவையில் உள்ளதாகக் குறிப்பிடுகிறது!
இந்தியக் குழந்தைகளில் 53.22 விழுக்காடு பேர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதாகவும், இதில் 21.09 விழுக்காடு குழந்தைகள் மிகவும் கொடூரமாகப் பாதிக்கப்படுகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெருங்கிய உறவினர்களே இக்குற்றங்களில் ஈடுபடு கின்றனர் என்றும் தகவல்கள் கூறுகின்றன. மனித உரிமை ஆணையம், பெண்கள் ஆணையங்கள் என்று இருந்தும், மகளிருக்கென்றே தனிக் காவல் நிலை யங்கள்கூட இருந்தும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்வது வெட்கக் கேடானது.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பெண்கள் மீதான வன்கொடுமைகள் தொடர்பான வழக்குகள் முடிக்கப் பட்டு தீர்ப்புகள் வழங்கப்படுவதைக் கட்டாயமாக்கும் வகையில் கடினமான விதிகளை வகுக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி மரணமடைந்த நிர்பயா பெயரில் பெண்கள் வன்கொடுமையைத் தடுப்பதற்காக மத்திய அரசு ஓர் ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியிருந்தும், அந்த நிதியைப் பெரும்பாலான மாநிலங்கள் தமிழ்நாடு உள்பட பயன்படுத்தவில்லை என்பது வேதனைக்கும், கண்டனத்துக்கும் உரியதே. அந்நிதியைத் தக்க வகையில் பயன்படுத்திட முன்வர வேண்டும் என்று இப்பொதுக் குழு மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.
பெண்களுக்குத் தற்காப்புப் பயிற்சிகளையும் துப் பாக்கிப் பயிற்சியையும் அளிப்பதற்கும் வகை செய்ய வேண்டும் என்றும் இப்பொதுக்குழு மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.
கல்வி, உத்தியோகங்களில் பெண்களுக்கு 50 விழுக் காடு இடங்கள் அளிக்கப்படுவதற்குத் தேவையான சட்டத் திருத்தமும் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
மத்திய அமைச்சரவையில் 75 பேர்களுள் பெண் களுக்கான எண்ணிக்கை வெறும் ஒன்பது பேர்கள் மட்டுமே. நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் 33 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்கான சட்டத்தை நிறை வேற்றிட, தேவையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை இருக்கும் நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு (என்.டி.ஏ) இதனை நிறைவேற்றுவதில் காட்டும் தயக்கம், அதன் மீதான நம்பகத் தன்மையைக் கேள்விக்குறியாக்குகிறது.
பெண்களின் 50 விழுக்காடு வாக்குகள் மட்டும் தேவை; அதே நேரத்தில் அவர்களுக்கான உரிமை களைப் பெற்றுத் தருவதில் தயக்கமும், தடங்கலும் செய்யும் அரசியலைப் புரிந்து கொண்டு, 50 விழுக்காடு இடங்கள் என்பதை முன்னிறுத்தி வலியுறுத்தி அதன் அடிப்படையில் ஆதரவு தருவது - வாக்களிப்பது என்ற முடிவை மேற்கொள்ள வேண்டும் என்று பெண்கள் சமுகத்தை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் எண்: 11
இரயில்வே துறையில்
வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு
தமிழ்நாட்டுக்கான இரயில்வே திட்டங்கள் செயல் படுத்தப்படாமல் நீண்ட காலமாகவே நிலுவையில் உள்ளன. ரூ.15,000 கோடி அளவுக்கான திட்டங்கள் இவை.
2019 செப்டம்பரில் தமிழக நாடாளுமன்ற உறுப் பினர்கள் தென்னக இரயில்வே மேலாளரைச் சந்தித்து தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள திட்டங்களை செயல்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நேரில் வைத்தனர்.
ஆனால், நடப்பாண்டு நிதிநிலை அறிக்கையில் வெறும் பத்தாயிரம் ரூபாயை அறிவித்து தமிழ்நாட்டு மக்களின் உணர்வை கேலிக்குரியதாக ஆக்கி இருக்கிறார் மத்திய நிதி அமைச்சர்.
மத்திய அரசின் இந்த அலட்சியப் போக்கை இக் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள இரயில்வே திட்டங்களை உடனடியாக செயல்படுத்துமாறு இக்கூட்டம் வலியுறுத் துகிறது. தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று அழுத்தம் கொடுத்து தமிழ்நாட்டுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் முக்கியக் கவனம் செலுத்துமாறு இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண்: 12
இணைய வழி சூதாட்டம் என்னும்
பேராபத்தினைத் தடுத்து நிறுத்துக!
ஆன்லைன் ரம்மி எனப்படும் இணையவழி சூதாட்டம் விளையாடி தோற்பவர்கள் தாங்கள் கட்டிய பணத்தை பெருமளவில் இழக்கிறார்கள்; இதனால் லட்சக்கணக்கான குடும்பங்கள் சீரழி கின்றன. நாட்டு மக்களை சீரழிக்கும் வகையில், பல்வேறு வடிவங்களில் ஏராளமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் தற்போது இணையவழி சூதாட்டங்கள் மக்களின் பணத்தை மட்டுமின்றி, நிம்மதியையும் பறிக்கின்றன.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி எந்த அளவுக்கு சாதகத்தை ஏற்படுத்துகின்றனவோ, அதே அளவுக்கு பாதகத்தையும் ஏற்படுத்துகின்றன என்பதற்கு சிறந்த உதாரணம் இணையவழி சூதாட்ட மாகும். முகநூல் தொடங்கி செய்தி இணையதளங்கள் வரை எதைத் திறந்தாலும், அதில் வாசகர்களை கவரும் வகையில் பெரிய அளவில் தெரியும் விளம்பரங்கள் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களாகவே உள் ளன. அத்துடன், ஆன்லைன் சூதாட்டத்தில் பங் கேற்க விரும்புபவர்கள் அதற்காக எவ்வளவு தொகையை செலுத்தினாலும் சூதாட்ட நிறுவனத்தின் சார்பில் அதிகபட்சமாக ரூ.1500 வரை போனஸ் வழங்கப்படும் என்றும், அதைக்கொண்டு அதிக நேரம் விளையாடலாம்; அதிக பணம் சம்பாதிக்கலாம் என்றும் விளம்பரத்தில் வலை விரிக்கப்படுகிறது.
இதற்கு மயங்கி, ஆன்லைன் ரம்மி என்ற சூதாட்டத்தை விளையாடத் தொடங்குபவர்கள், தங்களின் பணத்தையும் இழந்து, சூதாட்டத்திற்கு அடிமையாகின்றனர். கணினி வசதி இருப்போர் மட்டும் தான் இணையதளங்களை பார்க்க முடியும் என்ற காலம் மாறி விட்டது. நவீன செல்போன்களின் வருகையால் பாமரர்கூட இணையத்தை பயன்படுத்த முடியும் என்பதால் மிகவும் எளிதாக இந்த சூதாட்ட வலையில் சிக்கிவருகின்றனர்.
ஆன்லைன் சூதாட்டத்தில் பணப் பரிமாற்றம் இணையதளம் மூலமாகவே நடக்கிறது என்பதால், எவ்வளவு பணத்தை இழந்தோம் என்ற நினைவு கூட இல்லாமல் இளைஞர்கள் தொடர்ந்து விளையாடி அரும்பாடுபட்டு ஈட்டிய வருமானத்தை இழந்து விட்டு தவிக்கின்றனர்.
பிரபலமடைந்து வரும் ஆன்லைன் ரம்மி இணையத்தில் நஞ்சு போன்று பரவி லட்சக்கணக் கானவர்களை பாதிக்கும் ஆபத்து உள்ளது. ஒருமுறை இதில் விளையாட ஆரம்பித்துவிட்டால், அதிலிருந்து மீள்வது மிகவும் கடினமாகும். கடந்த காலங்களில் தமிழகத்தில் பெருக்கெடுத்த பரிசுச் சீட்டுக்களால் லட்சக்கணக்கான குடும்பங்கள் சீரழிந்தன. மக்களின் பெரும் போராட்டத்திற்குப் பிறகு தமிழக அரசு அதற்குத் தடை விதித்தது.
தற்போது இணையவழி சூதாட்டம் தமிழகத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது.
2018 ஆம் ஆண்டு சென்னை தியாகராயர் நகரில் ‘மனமகிழ் மன்றம்' என்ற பெயரில் சூதாட்ட விடுதிகள் நடைபெறுவது குறித்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ரம்மி ஆடுவதும் சூதாட்டம் தான் என்றும், இது தடை செய்யப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.
ஆனால், அதை எதிர்த்து சூதாட்ட விடுதிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. அதில் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டி ஆன் லைன் ரம்மி நிறுவனங்கள் மனுத் தாக்கல் செய்தன. அதை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆன்லைன் ரம்மி சூதாட்டமா? என்ற வினாவே எழவில்லை என்று கூறி, தள்ளுபடி செய்து விட்டது. அத்தீர்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, ஆன்லைன் ரம்மி சூதாட்டம் இல்லை என்று கூறி, பல நிறுவனங்கள் அதை நடத்தி வருகின்றன.
தற்போது ஆன்லைன் ரம்மி விளையாட்டு பிரபல நடிகர்கள் மூலம் விளம்பரப்படுத்தப்படுகிறது. தொலைக்காட்சிகளிலும் இந்த விளையாட்டு விளம்பரப்படுத்தப்படுகிறது. ஒரு பொழுதுபோக்கு விளையாட்டாக விளம்பரப்படுத்தப்படவில்லை. ரம்மி விளையாடினால் பணம் சம்பாதிக்கலாம் என்ற அறிவிப்புடனே விளம்பரம் செய்யப்படுகிறது.
உண்மையில், சூதாட்ட விடுதிகளில் விளையாடப் படுவதைப் போன்றுதான் ஆன்லைனிலும் ரம்மி விளையாடப்படுகிறது. ஆன்லைனில் ரம்மி விளையாடி தோற்பவர்கள் தாங்கள் கட்டிய பணத்தை பெருமளவில் இழக்கிறார்கள்; ஆன்லைன் ரம்மி எனப்படும் சூதாட்டம் உடனடியாக தடுக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் மிகமோசமான சமூக, பொருளாதார பிரச்சினை கள் ஏற்படக்கூடும் என்று இப்பொதுக்குழு எச்சரிக்கிறது.
இந்த இணையவழி சூதாட்டம் காரணமாக சென்னை, கோவை, பெங்களூரு, போபால், டில்லி உள்ளிட்ட பெரு நகரங்களில் 15 தற்கொலைகள் நடந்துள்ளதாக பதிவாகியுள்ளன.
எனவே, இந்தச் சமூக அழிவு விஷ விளையாட்டைத் தடை செய்யவேண்டும் என்று இப்பொதுக்குழு மத்திய - மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண்: 13
‘ஸ்மார்ட் சிட்டி' என்ற பெயரால் கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவழிப்பதும், கிராமப்புற வளர்ச்சிகளில் கவனம் செலுத்தாமையும்!
‘ஸ்மார்ட் சிட்டி' என்று கூறி, ஆயிரக்கணக்கான ரூபாய்களைக் கொட்டுவதும், அதேநேரத்தில், கிராமப்புறங்களின் வளர்ச்சியில் அக்கறை செலுத்தாமையும் கண்டிக்கத்தக்கதாகும்.
நகரங்கள் என்றால் வருண தருமத்தில் பிராமணத்தன்மை கொண்டது போலும், கிராமப்புறங்கள் பஞ்சம, சூத்திர வருணத்தன்மை கொண்டதுபோலும் நிலவுவதை - தந்தை பெரியார் சுட்டிக்காட்டியதையும் இந்த இடத்தில் நினைவூட்டி, கிராமப்புற வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுத்து முன்னேற்ற திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தவேண்டும் என்று மத்திய - மாநில அரசுகளை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண்: 14
சென்னை மாநகரப் பள்ளி மாணவர்களுக்குக் காலை உணவு என்ற பெயரால் மதவாத அணுகுமுறையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
அமெரிக்காவின் ‘இஸ்கான்' அமைப்பு என்ற ‘ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா' என்ற அமைப்பின் துணை நிறுவனமான ‘அட்சய பாத்ரா' என்ற தனியார் தொண்டு நிறுவனத்தின்மூலமாக சென்னை மாநகரத்தில் உள்ள பள்ளிப் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் காலை உணவில் பூண்டு, வெங்காயம் தவிர்க்கப்பட இருப்பது - பார்ப்பனீய, இந்து, ஆர்.எஸ்.எஸ். கொள்கையே! உணவுப் பிரச்சினையில் மத நஞ்சைப் புகுத்துவதை ஏற்க முடியாது என்றும், இத்திட்டத்தைக் கைவிடவேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
உணவில் மத நஞ்சைப் புகுத்தும் இந்தத் திட்டத்தைக் கண்டித்தும், எதிர்த்தும் திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் சென்னையில் வரும் 25.2.2020 அன்று காலை ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.
கழகத் தோழர்கள்
கரவொலி எழுப்பி வரவேற்றனர்
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் களை கழகத் தோழர்கள் எழுந்து நின்று உற்சாகத்தோடு கரவொலி எழுப்பி வரவேற்றனர்.
திருச்சியில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள். (21.2.2020)

- விடுதலை நாளேடு 21.2. 20