வியாழன், 25 மார்ச், 2021

மாநில அரசுப் பணிகளுக்கு அகில இந்தியத் தேர்வா?


 மாநில அரசுப் பணிகளுக்குத் தகுதியான பணியாளர் களைத் தேர்வு செய்ய தேசிய அளவில் பொதுத்தேர்வு நடத்தலாம் என்றும், இதற்காக உருவாக்கப்படும் அமைப்புடன் மாநில அரசுகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்றும் மத்திய அரசு விஷமமான ஒன்றை அறிவித்துள்ளது.

மத்திய அரசின் பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை இந்த யோசனையை முன்வைத்துள்ளது. இது தொடர்பாக மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், மாணவர்கள் மற்றும் தனிநபர்கள் தங்களின் கருத்துகளை தெரிவிக்குமாறு கேட்டுள்ளது - உடனடியாக தமிழக அரசு இதனை எதிர்த்துக் கருத்தைத் தெரிவிக்க வேண்டும்.

இந்தத் திட்டத்தின்படி மாநில அரசின் பல்வேறு துறைகள், வங்கிகள், மத்திய, மாநில அரசுகளின் பொதுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் தொழில்நுட்பம் சாராத 'பி' மற்றும் 'சி' நிலைப் பணிகளுக்கு தேசிய அளவில் பொதுப் போட்டித் தேர்வு நடத்தப்படும். இத்தேர்வில் பங்கேற்போர் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேசிய அளவில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும். இந்தப் பட்டியல் 3 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகுமாம்.

மாநில அரசு மற்றும் பொதுத்துறை பணிகளில் சேர விண்ணப்பம் செய்பவர்களை, அவர்களின் தரவரிசை அடிப்படையில் தேர்வு செய்து கொள்ளலாம். ஒரு முறை தேர்வு எழுதியவருக்கு அடுத்த 3 ஆண்டுகளில் எந்த வேலையும் கிடைக்காவிட்டால், அவர் மீண்டும் தேர்வு எழுத வேண்டும். தரவரிசையை உயர்த்திக் கொள்ள விரும்புபவர்கள் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் ஒரு தேர்வை எழுதலாம். அதேநேரத்தில் ஒருவர் அவரது வாழ்நாளில் 3 முறைக்கு மேல் இத்தேர்வை எழுத முடியாது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு அரசமைப்பு சட்டத்திற்கு முற்றிலும் எதிரானதே! மாநில அரசுகள் அவற்றின் ஊழியர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள அவற்றுக்கு இந்திய அரசமைப்புச் சட்டம் அதிகாரம் வழங்கியுள்ளது.  அதற்காக அரசமைப்புச் சட்டத்தின்

14 ஆவது பகுதியில் 308 முதல் 323 வரை 16 பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் பணியாளர்கள் நியமனம், மத்திய, மாநில அரசுப் பணியாளர் தேர்வா ணையம் ஆகியவை பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளில் பணிகளின் தன்மைக்கு ஏற்ப ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், பொறியாளர்கள் தேர்வு வாரியம், மின்துறை பணியா ளர்கள் தேர்வு வாரியம் என ஏராளமான அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், அவை அனைத்தையும் கலைத்து விட்டு, பலவிதமான பணிகளுக்கு ஒரே அமைப்பை ஏற்படுத்தி, அனைத்து வேலைகளுக்கும் ஒரே தேர்வு என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டுவர உள்ளது.

 2016-ஆம் ஆண்டு அதிமுக அரசின் அரசாணைப்படி, தமிழ்நாடு மாநில வேலைவாய்ப்புக்கு யார்வேண்டு மானாலும் தேர்வெழுதலாம் என்ற திருத்தவிதியின் படி பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழக அரசுப் பணிகளில் சேர்ந்து வருகிறார்கள். அதனுடைய நீட்சியே, இது எனக் கருத வேண்டியுள்ளது. தமிழகத்தில் உள்ள மத்திய அரசுப் பணிகளில் கிட்டத்தட்ட 70% பிற மாநிலத்தவர் களால் அபகரிக்கப்பட்டுவிட்ட நிலையில், மாநில அரசுப் பணிகளும் வேறு மாநிலத்தவருக்குத் தாரை வார்க்கும்  சூழ்ச்சி இதில் பதுங்கியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை அனைத்து நிலை அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வையும் வயது வரம்புக்குட்பட்டு எத்தனை முறை வேண்டுமானாலும் எழுத முடியும். அய்ஏஎஸ், அய்பிஎஸ் போன்ற குடிமைப் பணிகளுக்கான தேர்வு களை பொதுப்பிரிவினர் 6 முறையும், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 9 முறையும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வயது வரம்புக்குட்பட்டு எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம். அவ்வாறு இருக்கும் போது பொதுப்போட்டித் தேர்வை 3 முறை மட்டுமே எழுத வேண்டும் என்பது அரசுப் பணிகளில் சேரும் வாய்ப்பை தட்டிப் பறிக்கும் செயலாகும்.

 4.12.2019 அன்று மத்திய அரசு இந்த திட்டத்தை

அறிவித்தது, அதன் பிறகு கரோனா பரவல் முழு முடக்கம் காரணமாக ஓராண்டு இந்த விவகாரத்தை அப்படியே வைத்திருந்து தற்போது அமித்ஷா மீண்டும் மேற்கு வங்கத் தேர்தலில் இந்த விவகாரத்தைக் கையி லெடுத்துள்ளார்.

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்ற முழக்கத்தின் பின்னணியில் மிகப் பெரிய சதி இருக்கிறது என்பதை இப்பொழுதாவது விளங்கிக் கொள்ளாவிட்டால், இதனை முறியடிக்கா விட்டால் தமிழ்நாடு தமிழர் நாடாக இருக்காது - மாறாக வடவர் நாடாக, ஆரியர் நாடாக முற்றிலும் மாறும் - ஆபத்து - எச்சரிக்கை! எச்சரிக்கை!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக