வியாழன், 18 மார்ச், 2021

கரோனா காலத்தில் பயணத்தைத் தவிர்க்கப் பலரும் தடுத்தும் - தேர்தல் சுற்றுப் பயணத்தைத் தொடங்குகிறேன்


‘மயக்க பிஸ்கெட்' தரும் எதிரிகளின் முக்காட்டைக் கிழித்திட - கடமையாற்றிட உயிரை நினைந்து நழுவுவது சரியல்ல!

பயணங்கள் - பாதைகள் தவறுவதில்லை - ஒத்துழைப்புத் தாரீர்!

கரோனா மீண்டும் அச்சுறுத்தும் ஒரு கால கட்டத்தில், தேர்தல் சுற்றுப்பயணத்தைத் தவிர்க்கு மாறு பலரும் வலிறுத்தியும், மக்கள் விரோத ஆட்சியை வீழ்த்தும் தேர்தல் களத்தில், விலகி நிற்பது சரியல்ல - கடமையாற்றப் புறப்பட்டுள்ளேன் - தோழர்களின் ஒத்துழைப்போடு என்று அம்மா விற்குப் பின் கழகத் தலைமைப் பொறுப்பேற்ற நாளில் (18.3.1978) திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

எனதருமை கழகக் குடும்பத்து உறவுகளே,

திராவிட உணர்வாளர்களே,

பகுத்தறிவாளர்களே,

நலம் விரும்பும் நண்பர்களே,

உங்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றி யையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நம் அன்னையாரின் மறைவிற்குப்(16.3.1978) பின் 18.3.1978 முதல் - அவரது விருப்ப ஆணையாலும், கழக முக்கிய பொறுப்பாளர்களின் ஒருமனதான தேர்வினாலும் இந்த ‘சிறு குருவியின்' தலைமீது - இயக்கம் - அறக்கட்டளை என்ற ‘பனங்காய்' வைக்கப் பட்டது!

பெரியார் என்ற மலையின் தோள்மீதுதானே!

முதலில் எனக்கு அச்சம் ஏற்பட்டது என்றாலும், நான் தனியே சுமக்கவில்லையே, இந்தக் ‘குருவி' அமர்ந்திருப்பது பெரியார் என்ற மலையின் தோள் மீதுதானே! எனவே பனங்காய் என்ன? பூசணிக் காயைக்கூட தூக்கிச் சுமக்கக்கூடிய வல்லமையும், துணிவும் அது அமர்ந்துள்ள இடம் காரணமாக பெரும் துணிவைத் தந்தது!

‘‘நாணயம் தவறாத தொண்டர்கள் எனது தொண் டர்கள்'' என்று நம் அறிவு ஆசான் பெருமையுடன் கூறும் பல கோடி பேரில் கடைசி வரிசையில் பணி செய்து கிடப்பவன் என்றாலும், இயக்கத்தை நோக்கிய எதிர்ப்புகள், சோதனைகள் இவற்றை நம்மால் எப் போதும் வென்றெடுக்க முடியும் என்ற திடசித்தத்துடன், அய்யாவின் அடிச்சுவடுகள் அமைந்த தடத்தில் நடைபோடுவதால், ஒழுக்கத் தவறுகள், நாணயக் கேடுகள், இரட்டை வேட மனப்பான்மை எப்போதும் நம்மை எட்டிப் பார்த்ததில்லை.

எனது பொதுவாழ்வில் ஒரே ஆசானிடம் படித்த பாடத்தைத்தான்!

‘‘எனக்குச் சொந்த புத்தி கிடையாது - எப்போதும் பெரியார் தந்த புத்தியைத்தான்  நான் பயன்படுத்துவது''  என்ற எளிமையான வழிமுறைமூலம்,  நான் பெற்றுக் கொண்டதைவிட, கற்றுக்கொண்டது எனது பொது வாழ்வில் ஒரே ஆசானிடம் படித்த இந்தப் பாடத்தைத்தான்!

நம் ஆசான் இதோ பாடமெடுக்கிறார்!

‘‘தன்னைப் பெரிதாகவும், தகுதிக்கு மேற்பட்ட சன்மானம் வேண்டும் என்று எண்ணிக் கொண்டி ருப்பவர்கள் எப்போதும் கஷ்டப்பட்டே தீருவார்கள்!

என்னை நான் சின்னவன் என்றும்,

குறைந்த செலவில் வாழ்வதற்குத் தகுதி உடை யவன் என்றும் எண்ணிக் கொண்டிருக்கின்ற கார ணத்தால், என் யோக்கியதைக்கு மீறின பெருமை உடையவனாகவும், தாராள செலவு செய்பவனாகவும் கருதிக் கொண்டிருக்கிறவனே தவிர, வேறொன்று மில்லை.'' - தந்தை பெரியார்

எங்கே எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளதோ அங்கேதான் ஏமாற்றங்கள் அதிகம் இருக்கும். நம்மி டம் எதிர்பார்ப்புகள் இயக்கம் தவிர, வேறு ஏதுமில்லை!

கட்டுப்பாடு மிக்க கருஞ்சட்டைக் கடமை வீரர்கள் எனது கவசமாக - கேடயமாக...

நம்மைப் பொறுத்தவரை, கட்டுப்பாடு மிக்க கருஞ்சட்டைக் கடமை வீரர்கள் எனது கவசமாக - கேடய மாக இருக்கையில், எனக்கென்ன தயக்கம்?

எனவேதான், எனக்கெல்லாமே இயக்கம்! இயக்கமே!

‘‘கரோனா கொடுந்தொற்று - மீண்டும் தமிழ் நாட்டில் ஒரு சுற்று வருகிறதோ என்று அஞ்சும் வகையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளும் கூடுதலாகி வருவதன் காரணமாக, ‘‘நீங்கள் தேர்தல் பிரச்சாரத்தைத் தவிர்த்தல் நலம்'' என்ற யோசனை - குடந்தை பொதுக்குழுவில் பல தோழர்களாலும், பொறுப்பாளர்களாலும் எனக்கு அன்புக் கட்டளை யாக இடப்பட்டது! வற்புறுத்தப்பட்டது!!

தேர்தல் பிரச்சாரத்தின்மூலம் செய்வது காலத்தின் கட்டாயமல்லவா?

கழகத்தவரின் அன்புக் கட்டளையை என்றும் ஏற்றுச் செயல்படும் உங்களின் சிப்பாயாகிய நான், இதில் உங்கள் யோசனையை ஏற்க மறுப்பதற்காக அருள்கூர்ந்து மன்னிக்க வேண்டுகிறேன்; காரணம், தனது 95 வயதிலும், ஒரு கையில் மூத்திர வாளியைத் தூக்கிக்கொண்டு, மறுகையில் கழகத் தோழர்களின் தோளினைப்பற்றிய நிலையிலும் பிரச்சாரம்! பிரச் சாரம்!! பிரச்சாரம்!!! என்று அலைந்த பெரியாரின் பணி முடிக்க வேண்டிய ஒருவன், இந்த இக்கட்டான தேர் தல் நேரத்தில், ‘மயக்க பிஸ்கெட்டுகள்' விநியோகம் மூலம், திராவிடத்தை அடைய விடாமல் ஏமாற்ற முனையும் முகமூடியர்களின் முக்காட்டை கிழிக்கும் பணி - தேர்தல் பிரச்சாரத்தின்மூலம் செய்வது காலத்தின் கட்டாயமல்லவா?

இப்பொறுப்பிலிருந்து உயிர் காக்க - நழுவி விடுவது ஒரு கொள்கைப் போர் வீரனுக்கு அழகா? கோழைத்தனமல்லவா?

நம் அன்னையார் ஒரு காலை சென்னை மருத்து வமனையிலும், மறு காலை பொதுத் தொண்டிலும் தானே வைத்திருந்தார் - இறுதி மூச்சடங்கும் வரை உழைத்தார்கள்.

அவர்களால் அப்பணி தொடர ஆணையிடப் பட்ட நான், எனது கடமையாற்றத் தவறலாமா?

போர்க் களத்தில் பணிபுரியும்போது இலக்கு மட்டும்தான் குறி!

எனவேதான், ‘‘எதுவரினும் ஏற்று, களத்திற்குச் செல்வதைத் தவிர்க்க விரும்பவில்லை'' என்று நான் பதிலளித்தேன்!

கட்டுப்பாட்டுடன் கவனமாகப் பிரச்சாரம் செய்வோம்!

போர்க் களத்தில் பணிபுரியும்போது இலக்கு மட்டும்தான் குறியே தவிர, வேறு சிந்தனை, பயம் - இருக்கவே கூடாதல்லவா?

எனவேதான்,  ‘‘நான் 43 ஆண்டுகளுக்குமுன்பு பொறுப்பேற்ற இதே நாளிலிருந்து (18.3.1978) எனது தேர்தல் களப் பிரச்சாரத்தைத் தொடங்க - தோழர் களின் துணையோடு - ஆயத்தமாகி விட்டேன்!

வாழுகின்ற இறுதி மூச்சுவரை

வளையாது கடமையாற்றுவது தானே நமக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்ட பாடம்-  இல்லையா?

இதுவரை நாம் கண்ணுக்குத் தெரிந்த எதிரி யோடுதான் போராடுகிறோம்!

கரோனாவும் சரி, மற்ற தொற்றுகளும் சரி கண்ணுக்குத் தெரியாத கிருமிகளுடன் போராடும் வாழ்க்கையையும் போதித்துள்ளன!

அதை எதிர்கொண்டே, இயக்க நடப்புகளும், நடவடிக்கைகளும் தொய்வின்றித் தொடர்கின்றன - அனைவரும் தரும் அயராத - தொடர் ஒத்து ழைப்பினால்!

‘‘திராவிடம் வெல்லும்'' என்று காட்டவேண்டிய மகத்தான பொறுப்பு நமக்குண்டு.

பெரியார் என்ற பேராயுதத்தைக் கையிலேந்தி வெற்றியைக் குவிக்க அணியமாவோம்!

இது திராவிட மண், பெரியார் பூமி,

சமூகநீதியின் கொடி தலைதாழாது பறக்கும் தன்னிகரில்லாத மண் என்பதை மீண்டும் உலகத்திற்கு நிரூபிக்க, பெரியார் என்ற பே(£)ராயுதத்தைக் கையி லேந்தி, கருத்திலேந்தி, களத்தில் வெற்றியைக் குவிக்க அணியமாவோம்!

தட்டிக் கொடுக்கும் தக்க சான்றோர் -

குட்டிச் சொல்லும் உரிமை படைத்த குரு போன்றவர்களுக்கும் எமது நன்றி! நன்றி!! நன்றி!!!

பயணங்கள் முடிவதில்லை -

பாதைகள் மாறுவதில்லை -

வெற்றி நமதே!

திராவிடம் வெல்லும் -

நாளைய வரலாறு இதைச் சொல்லும்!


உங்களின் தொண்டன்

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

17.3.2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக