சீரிய பொதுவுடைமை - திராவிடச் சிந்தனையாளரும், முற்போக்கு இயக்குநருமாகிய எஸ்.பி.ஜனநாதன் அவர்கள் திடீரென மறைவுற்ற செய்தி பேரதிர்ச்சி தருவ தாகும். தனது முதல் படத் திலேயே தேசிய விருது பெற் றவர்; கொள்கை உணர்வும், அதை திரையில் வெளிப்படுத்தத் தகுந்த கலை நயமும், நுட்பமும் தெரிந்தவர் என்பது அவரது தனிச் சிறப்பாகும்.

எளிய குடும்பத்தில் பிறந்து, திரைத்துறையில் சிறந்து, நம்மால் 'பெரியார் விருது' வழங்கிச் சிறப்பிக்கப்பட்டவர் என்பதோடு, இளைய படைப்பாளிகளை உருவாக்கி, ஊக்குவிக்கும் பெரியார் சுயமரியாதை ஊடகத் துறையின் பணிகளிலும் அக்கறையோடு அவ்வப்போது பங்கேற்பவர். நம்மிடம் எப்போதும் அன்பு கொண்டவர்.

இயற்கை, ஈ, பேராண்மை, பொறம்போக்கு என்கிற பொதுவுடைமை ஆகியவற்றோடு தற்போது 'லாபம்' என்ற திரைப்படத்தை இயக்கி, அதன் இறுதிக் கட்டப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தபோது, மூளைப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டு, தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இரு தினங்கள் இருந்தும், மூளைச் சாவு ஏற்பட்டு மறைவுற்றதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மக்கள் பற்றும், சமூக அக்கறையும் கொண்ட நமது கலைஞர்களும், பல்துறைச் சான்றோர் பெருமக்களும் அளப்பரிய தங்கள் பங்களிப்பை நெடுங்காலம் வழங்க வேண்டும்; அதற்கு அவரவர் உடல்நலனிலும் போதிய அக்கறை செலுத்தி, உரிய ஓய்வும், மருத்துவச் சோதனைகளும் செய்துகொள்ளுதல் அவசியமாகும்; இது நமது அழுத்தமான வேண்டுகோளாகும்.

தோழர் இயக்குநர் ஜனநாதன் அவர்களுக்கு நமது வீரவணக்கம். அவரது உறவினர்கள், திரைப்படக் கலைஞர்கள் அனைவருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலும், ஆறுதலும்!

கி.வீரமணி 

 தலைவர்

திராவிடர் கழகம்

தஞ்சை            

14-3-2021