சென்னை, அக்.4 மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த பொழுது இட ஒதுக்கீடுப் போராட்டங்களை ஆதரித்த துண்டா? அப்படி இருக்கும்பொழுது அவர் பிறந்த நாள் சமூகநீதி நாள் ஆனது எப்படி? பெரியாருடைய பார்வை உலகப் பார்வை - மானுடப் பார்வை என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
கடந்த 17.9.2021 அன்று காலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 143 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரையாற்றினார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் நிறைவுரை
அவரது நிறைவுரை வருமாறு:
மிகுந்த எழுச்சியோடு நடைபெறக்கூடிய, சிறப்புமிகுந்த, வரலாற்றுப் பெருமைமிகுந்த அறிவாசான் தந்தை பெரியார் அவர்களுடைய 143 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா விற்குப் பொறுப்பேற்று, சிறப்பாக நடந்து கொண்டிருப்பதற்கு முழுக் காரணமாக அமைந்திருக்கக்கூடிய கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,
வரவேற்புரையாற்றிய கழகத் துணைப் பொதுச்செய லாளர் அருமைத் தோழர் பொறியாளர் இன்பக்கனி அவர்களே,
இந்நிகழ்வில் சிறப்பான வகையில், ‘கற்போம் பெரியா ரியம்' என்ற புத்தகத்தை அருமையாக ஆய்வு செய்து, வெளியிட்டவரும், நம்முடைய குடும்பத்தில் ஒருவராக என்றைக்கும் திகழ்ந்து கொண்டிருக்கக்கூடிய அறிவியக் கத்தின் முன்னோடியும், தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் மதியுரைஞராக இருக்கக்கூடிய அருமைத் தோழர் மானமிகு பேராசிரியர் முனைவர் சுப.வீரபாண்டியன் அவர்களே,
இந்நிகழ்வில், தந்தை பெரியார் 143 ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலரை வெளியிட்டு, ஒரு சிறப்பான எதார்த்தமான உரையை இங்கு ஆற்றி அமர்ந்துள்ள, நாடாளுமன்றம் பெருமைப்படும் வகையில், ஒரு சிறந்த நாடாளுமன்றவாதியாகவும், மனித உரிமைகளுக்கு ஆபத்து ஏற்படக்கூடிய காலகட்டத்தில், அந்த ஆபத்துகள் எங்கு நேர்ந்தாலும் துணிச்சலாக எதிர்கொள்ளக் கூடிய வராகவும் இருக்கக்கூடிய அருமைத் தோழர் ஜோதிமணி எம்.பி., அவர்களே,
இந்நிகழ்வில் கலந்துகொண்டு ‘கற்போம் பெரியாரியம்' என்ற நூலின் ஆய்வுகளை சிறப்பாகச் செய்து உரையாற்றிய உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பொறுப்பாளர்களில் ஒருவருமான பேராசிரியர் சுலோசனா அம்மையார் அவர்களே,
இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்ற அருமை இயக்கப் பெரியோர்களே, பொறுப்பாளர்களே, கழகப் பொருளாளர் அவர்களே, கழகப் பொதுச்செயலாளர்களே, தோழர்களே, தாய்மார்களே, கழக உறவுகளே, பெரியார் பற்றாளர்களே, இந்நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிவிட்டு விடைபெற்றுச் சென்றிருக்கக்கூடிய மாண்புமிகு அமைச்சர் உள்பட அனைத்து சான்றோர் பெருமக்களே, உங்கள் எல்லோருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகம் முழுவதும் கொண்டாடப்படும் விழா - இந்த ஆண்டினுடைய சிறப்பு
இன்றைக்குத் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா என்பது - திராவிடர்த் திருவிழாவாக அருமையாக நம்மால் இங்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் கொண்டாடப்படக் கூடிய விழாவாக அமைந்திருப்பது இந்த ஆண்டினுடைய சிறப்பாகும்.
ஒவ்வொரு ஆண்டும், எவ்வளவு எதிர்ப்பு இருக்கிறதோ, அவ்வளவு பெருமையும் இருக்கிறது. அதுதான் அவரு டைய தனிச் சிறப்பு.
ஒரு தத்துவஞானிபோல தந்தை பெரியார், சிறப்பான ஒரு கருத்தைச் சொன்னார்.
சுயமரியாதை இயக்கம் என்பதை, எப்படி அவர் தனியாக உருவாக்கியதைப்பற்றி பேராசிரியர் சுப.வீ. அவர்கள் அழகாக எடுத்துச் சொன்னார்களோ, அதுபோல, மனிதநேயத்தைப்பற்றிச் சொல்கின்றபொழுது, மிக எளிமையாகச் சொன்னார்.
பெரியாருடைய பார்வை - உலகப் பார்வை - மானுடப் பார்வை
அவருடைய பார்வை உலகப் பார்வை - மானுடப் பார்வை - அதுதான் இன்றைக்கு உறுதிமொழியில் எடுக்கப்பட்டதும்கூட.
மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று இரண்டே சொல்லில் சொன்னார்.
திராவிடரா? தமிழரா? ஜப்பான்காரரா? ஜெர் மன்காரரா? என்றெல்லாம் ஏன் ஆராய்ச்சிகளை செய்யவேண்டும்?
மனிதன் என்று யார் தன்னை நினைக்கிறானோ, அவனுக்கு என்ன இலக்கணம்?
மானம், அறிவு என்பதுதான் மிக முக்கியம்.
இந்த மானத்தையும் பழிவாங்கினார்கள், பறிமுதல் செய்தார்கள். அறிவையும் தடுத்தார்கள். இதுதான் சமூக அநீதி.
அந்த சமூக அநீதியிலிருந்து வெளியே வருவதற் காகப் போராடினார்கள் அல்லவா - போராடி வெற்றி பெற்றார் அல்லவா, அதுதான் சமூகநீதி.
‘‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்’’
அதற்காகத்தான் பெரியாருடைய பிறந்த நாளை - ‘‘சமூகநீதி நாள்'' என்று பொருத்தமான அளவிலே அறிவித்திருக்கிறார் நம்முடைய முதலமைச்சர். ‘‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்'' என்று நம்மால் நன்றியுணர்வோடு பாராட் டப்படக் கூடிய தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் இன் றைக்கு வரலாறு படைத்திருக்கிறார்கள்.
இதைக் கேட்டவுடன், யாரோ சிலருக்கு எரிச்சல். அவர்களால் தாங்க முடியவில்லை. சமூகநீதி நாள் என்று சொல்லாமல், வேறு எதைச் சொல்லுவது?
சமூகநீதி என்று வரும்பொழுது, நீதி கேட்கிறோம் என்று வந்தாலே, அதனுடைய இன்னொரு பகுதி என்ன?
அதனுடைய இன்னொரு பகுதி, அநீதி நடந்திருக்கிறது என்று அர்த்தம். அநீதி நடந்திருக்கிறது.
நம்முடைய அரசமைப்புச் சட்டத்தில் ஒரு சிறப்பான பகுதி உண்டு.
அரசுகள் எப்படி இயங்கவேண்டும் என்பதற்கு வழி காட்டு நெறிமுறை - அதற்குப் பெயர் Directive Principle of the State Policy என்று பெயர்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 46 ஆவது பகுதி!
அதில் மிக முக்கியமாக இருக்கக்கூடிய ஒரு பகுதியில், 46 ஆவது பகுதியில்,
The State shall promote with special care the educational and economic interests of the weaker sections of the people, and, in particular, of the Scheduled Castes and the Scheduled Tribes, and shall protect them from social injustice and all forms of exploitation.
இந்த அரசமைப்புச் சட்டத்தில், social justice என்பதும் இடம் பெற்றிருக்கிறது. social justice என்று சொல்லக்கூடிய சமூகநீதியை ஏன் தேடுகிறோம்? ஏன் தேவைப்படுகிறது? என்று சொல்லுகின்ற நேரத்தில், அதில் விளக்கம் இதிலேயே தெளிவாக இருக்கிறது.
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் போராடி, சில செய்திகளை உள்ளே போட்டார். அப்படி அவர் போராடி உள்ளே போட்ட நேரத்தில், அந்த அரசமைப்புச் சட்டத்தில்தான் நண்பர்களே, இது அறிவார்ந்த அரங்கம் - உலகம் முழுவதும் இருக்கக்கூடிய நண்பர்கள் இதைக் கேட்டுக்கொண்டும், பார்த்துக் கொண்டும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில், தெளிவுபடுத்தவேண்டிய செய்தி என்னவென்றால், அரசமைப்புச் சட்டத்தில் இன் னொரு பகுதியில், அரசாங்கங்களுடைய கடமை என்ன? என்று வருகின்ற நேரத்தில்,
பலகீனமான மக்களாக இருக்கக்கூடியவர்களைப் பாதுகாக்கவேண்டும். எப்படி பாதுகாக்கவேண்டும்? ஏன் பாதுகாக்கவேண்டும்? என்று சொன்னால் நண்பர்களே, மிக முக்கியமான குறிப்பைச் சுட்டிக்காட்டுகின்றார்.
promote education and economic interests for members of Scheduled Caste, Scheduled Tribe and other weaker sections.
The State shall promote with special care the educational and economic interests of the weaker sections of the people, and, in particular, of the Scheduled Castes and the Scheduled Tribes, and shall protect them from social injustice and all forms of exploitation.
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர், எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. மற்றும் சிறுபான்மையினர் எல்லோரும் அதில் அடக்கம்.
தனியே சொல்லவேண்டுமானால், இதில் மகளிர் மிக முக்கியமாகப் பங்களிக்கக் கூடியவர்கள்.
வருணாசிரம தருமத்தில், பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர என்று வரும்பொழுது, இவர்கள் எல்லாம் வருணஸ் தர்கள்.
பஞ்சமர் - அவர்ணஸ்தர்கள்.
இவர்கள் எல்லாவற்றிற்கும் கீழே, படிக்கட்டு ஜாதிமுறை என்று அம்பேத்கர் சொன்னார் பாருங்கள், அதில் கடைசியாக யார் இருக்கிறார்கள் என்றால், அடித்தளத்திலும், அடியில் யார் இருக்கிறார்கள் என்றால், பெண்கள் - அத்தனை ஜாதிப் பெண்கள்.
பெண்களைப் பொறுத்தவரையில், மேல்ஜாதி, கீழ்ஜாதி என்கிற பிரச்சினைகளே கிடையாது.
அரசமைப்புச் சட்டத்தின் 46 ஆவது பிரிவின் தமிழாக்கம்:
‘‘பட்டியலில் கண்ட ஜாதியினர், பட்டியலில் கண்ட பழங்குடியினர், பிற நலிந்த பிரிவினர் ஆகியோரின் கல்வி, பொருளியல் நலன்களை வளர்த்தல்; மக்களில் நலிந்த பிரிவினர், குறிப்பாக, பட்டியலில் கண்ட ஜாதி யினர், பட்டியலில் கண்ட பழங்குடியினர் ஆகியோரின் கல்வி, பொருளியல் நலன்களை அரசு தனிப் பொறுப் புணர்வுடன் வளர்த்தல் வேண்டும். மேலும், சமுதாய அநீதியிலிருந்தும் அனைத்து வகைப்பட்ட சுரண்டல் களிலிருந்தும் அவர்களைப் பாதுகாத்தலும் வேண்டும்.''
வாழ்நாள் பணியாக செய்த தலைவர் தந்தை பெரியார்
இதை தன்னுடைய வாழ்நாள் பணியாக செய்த தலை வர் தந்தை பெரியாரைத் தவிர, இந்தியாவில், உலகத்தில் வேறு யாராவது இருக்கிறார்களா?
சுயமரியாதை இயக்கம் என்று தந்தை பெரியார் அவர் கள் பெயர் வைத்ததைப்பற்றி சகோதரர் சுப.வீ. அவர்கள் அந்த நூலிலிருந்து எடுத்துக்காட்டினார்?
பிறவி பேதம் கூடாது என்று நாம் இன்றைக்கு உறுதி எடுத்து இருக்கிறோம். பிறவி பேதம் என்று சொல்லும் பொழுது, ஒரே சொல்லில் தந்தை பெரியார் அவர்கள் மிக எளிதாக எடுத்துச் சொல்வார்.
பிறவி பேதம் என்றால்,
உயர்ந்த ஜாதி - தாழ்ந்த ஜாதி,
தொடக்கூடியவன் - தொடக்கூடாதவன்,
படிக்கக் கூடியவன் - படிக்கக் கூடாதவன் என்பவைபற்றி மட்டுமே வருணாசிரம தர்மம் சொல்லவில்லை.
அதற்கடுத்து, அய்யாதான் சொன்னார், பிறவி பேதம் என்று சொல்லும்பொழுது, ஆண் உயர்ந்தவன் - பெண் தாழ்ந்தவள் என்று சொல்லுகின்ற ஆதிக்க மனப்பான்மை - ஒருவர் எஜமானன் - இன்னொருவர் அடிமை என்கிற பிறவி பேதம்தான்.
எனவேதான், எனக்கு பெண்ணுரிமை மிக முக்கியம். சமூகநீதி என்பதற்கு இரண்டு வாய்ப்புகள் உண்டு. இரண்டு விரிவான பகுதிகளை இணைத்தார்கள்.
எனவே, பெரியாருடைய அந்த நிலை - யாருக்கோ புரியவில்லை - அவருடைய பிறந்த நாளை - சமூகநீதி நாளாக ஏன் அறிவித்தார்கள் என்று அங்கலாய்க்கிறார்கள். பொதுவாக, அந்தப் பத்திரிகைகளை நாங்கள் பார்ப்பதை தவிர்த்து வருகிறோம்.
திருக்குறளைத் தடை செய்யவேண்டும் என்று சொன்ன மிகப்பெரிய புத்திசாலிகள்!
ஏனென்றால், அவை அதிகமாக மக்களுக்குக் கிடைப்ப தில்லை. மக்கள் பத்திரிகைகளை மட்டுமே நாங்கள் பார்க்கி றோம். ஏனென்றால், திருக்குறளைத் தடை செய்யவேண்டும் என்று சொன்ன மிகப்பெரிய புத்திசாலிகள் எல்லாம் அங்கே இருக்கிறார்கள்.
நம்முடைய சமுதாயத்தில், நாம் எல்லோருக்கும் இடம் கொடுக்கிறோம். சகிப்புத்தன்மை நமக்கு அதிகம். ஏனென் றால், நாமெல்லாம் பகுத்தறிவுவாதிகள். பல கருத்துகள் இருந்துவிட்டுப் போகட்டுமே, அவர்களையும் மக்கள் அடையாளம் கண்டு புரிந்துகொள்ளட்டுமே என்பதற்காக.
அந்த வகையில் பார்க்கும்பொழுது நண்பர்களே, நீங்கள் நினைத்துப் பாருங்கள் - பெரியார் அவர்களின் பிறந்த நாளை - சமூகநீதி நாளாக அறிவித்ததில் என்ன தவறு?
இன்றைக்கு உறுதி மொழி எடுத்துக் கொண்டதில்கூட யாருக்கும் சங்கடம் இல்லை.
சமூகநீதி என்றால் - ‘அனைவருக்கும் அனைத்தும்‘’ என்பதுதான்!
1938 இல் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கும் பொழுது தந்தை பெரியார் அவர்கள் இரண்டே வரியில் எழுதினார். சமூகநீதி என்றால் என்ன? என்று கேட்டால், இரண்டே சொல்லில் சொன்னார். ‘‘அனை வருக்கும் அனைத்தும்'' என்றுதான்.
இது புரியவில்லை என்றால், என்ன செய்வது?
அனைவருக்கும் அனைத்தும் என்று யாராவது சொல்லியிருக்கிறார்களா?
இன்றைக்குப் போராட்டமே எதற்காக - அனை வருக்கும் அனைத்துமா? இன்னாருக்கு இதுதான் என்பதற்காகப் போராட்டமா?
சமூக அநீதி என்றால் என்ன?
கல்வியா, கூடாது!
பெண்கள் படிக்கக்கூடாது என்பதுதான் சமூக அநீதி.
பெரியார்தான் கேட்டார், சமூகநீதி விளக்கம் சொல்லும் பொழுது மிக எளிமையாக சொல்வார். செங்கல்பட்டு மாநாட்டில், பெண்களுக்கு உரிமை வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றுகிறார்.
செய்தியாளர்களில் சிலர், பெரியாரை கிண்டல் செய்ய லாம் என்று நினைத்துக் கொண்டு கேள்வி கேட்கிறார்கள்,
‘‘ஏங்க, பெண்களுக்கு உரிமை வேண்டும், உரிமை வேண்டும் என்று சொல்கிறீர்களே, எந்த அளவிற்கு உரிமை வேண்டும் என்று சொல்வீர்களா?'' என்று.
அவர்கள் கிண்டலாகக் கேட்கிறார்கள் என்று பெரியார் அவர்கள் புரிந்துகொண்டு,
‘‘எந்த அளவிற்கு என்றுதானே கேட்கிறீர்கள்; ஆண் களுக்கு எந்த அளவிற்கு உரிமை இருக்கிறதோ, அந்த அளவிற்குக் உரிமை கொடுத்தால் போதும்'' என்றார்.
பாலியல் அநீதியையும் அகற்றவேண்டும்!
ஆகவேதான், பாலியல் நீதி உறுதிபட வேண்டும் என்பது போன்று - பாலியல் அநீதியையும் அகற்றவேண்டும் என்பதுதான் சமூகநீதி என்பதாகும்.
அனைவருக்கும் அனைத்தும் என்று சொல்லும் பொழுதே, பெரியாரால் பயன்படாதவர்கள் யாராவது, தமிழ் நாட்டில் உள்ள வீடுகளில் ஒருவரைக் காட்ட முடியுமா?
பெரியார் கொள்கையால், பெரியார் தொண்டால் பயன்படாதவர்கள் யாராவது இருக்கிறார்களா?
உடனே நீங்கள் சொல்வீர்கள், பார்ப்பனர்கள் இருக் கிறார்களே, என்று.
அவர்கள்தானே பெரியாரால் அதிகம் பயன்பட்டு இருக்கிறார்கள். அதை அவர்களே சொல்லியிருக்கிறார்களே.
இவ்வளவு பெரிய சிறுபான்மைச் சமுதாயம், இவ்வளவு காலமாக சுரண்டி, ஆதிக்கம் செலுத்திக்கொண்டு, இன்ன மும் நாங்கள் மட்டுமே தகுதி உள்ளவர்கள் - அவர்களே சொல்கிறார்கள் - நீட் தேர்வா? எல்லோரும் படிக்கக்கூடா துங்க - தகுதி, திறமை உள்ளவர்கள்தான் படிக்கவேண்டும் என்று.
தகுதி வேண்டும், திறமை வேண்டும் என்று சொல்லு கிறார்கள். யார் வேண்டுமானாலும் டாக்டராகலாமா? என்று கேட்டார்கள்.
பச்சைத் தமிழர் காமராசர்
பச்சைத் தமிழர் காமராசர் அவர்கள் ஓங்கி மண்டையில் அடிப்பதுபோன்று அவர் சொன்ன வார்த்தையை சொல்கிறேன்.
ஜாதி வார்த்தை என்று யாரும் தவறாக எண்ண வேண்டாம் - மக்களுக்குப் புரிகின்ற மொழியில்தான் அவர் பேசுவார்.
அவர் சொன்னார்,
‘‘பறையனை டாக்டராக்கினேன்; அவன் ஊசி போட்டு எவன் செத்துப் போனான். அவனை என்ஜினியராக்கினேன், அவன் கட்டிய எந்தப் பாலம் இடிந்து விழுந்திருக்கிறது; உன் தகுதியும் தெரியும், உனக்குச் சொல்லிக் கொடுத்தவன் தகுதியும் தெரியும் போ!'' என்றார்.
தாழ்த்தப்பட்டவன் படிக்கக்கூடாது என்று சொல் கிறீர்கள்; இன்னமும் தகுதி, திறமையைப் பேசிக் கொண்டி ருக்கிறீர்கள். நேற்றுவரை நான்கு பிள்ளைகள் பலியாகி இருக்கின்றன. நினைத்துப் பார்த்தால், எங்கள் ரத்தம் கொதிக்கிறது. இவ்வளவு நாள்களாக நாம் போராடி, போராடி, நம்முடைய வரிப் பணத்தில், நம்முடைய நாட்டில், நம்முடைய மண்ணில் உருவாக்கப்பட்ட மருத்துவக் கட்டுமானத்தை, நம்முடைய பிள்ளைகள் அனுபவிப்பதற்கு நமக்கு உரிமையில்லை.
யாரோ ஆள் மாறாட்டம் செய்து, கேள்வித் தாளை 35 லட்சம் ரூபாய்க்கு வாங்குபவன், ஊழலுக்கு அப்பாற்பட்ட இவர்கள்தான் ஊழலை ஒழிப்பதற்காக அந்த முறையைக் கொண்டு வந்திருக்கிறார்களாம்!
தகுதி, திறமை என்றால் என்ன?
தகுதி, திறமைபற்றி பேசுகிறார்களே,
கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன், தகுதி, திறமை வேண்டும் என்று நீங்கள் சொல்வதைக் கேட்டுத் தான், பாரம்பரியமான அர்ச்சக முறையை வேண்டாம் என்று ரத்து செய்துவிட்டு, நீங்கள் சொன்ன ‘தகுதி - திறமை' வேண்டும் என்று சொல்லி, ஆகமம் கட்டாயம் படிக்க வேண்டும்; வைகனாச ஆகமமா? பாஞ்சராத்ரா ஆகமமா? சைவ ஆகமமா? சிவ ஆகமமா? தாராளமாகப் படிக்க வேண்டும். அதைப் படித்து வருகிறவர்கள், பயிற்சி பெற்று வருகிறவர்கள் அர்ச்சகர் ஆகவேண்டும் என்றார்.
அப்படியென்றால், தகுதி, திறமை என்றால் என்ன? எனக்கு எதுவோ, அதுதான் தகுதி, திறமையின் அளவுகோல்.
சமூக அநீதியைப் போக்குவதற்குத்தான் பெரியார் போராடினார். அதில் வெற்றியும் பெற்றார். அதனால்தான், பெரியாருடைய பிறந்த நாளை - சமூகநீதி நாள் என்று சொல்லப்படுகிறது.
பார்ப்பனர்கள் நன்றாக சிந்தித்துப் பார்க்கவேண்டும். பெண்கள் அனைவரையும் நாங்கள் சமதளத்தில் வைத்து தான் பார்ப்போம். பெண்கள், தமிழ்நாட்டின் கண்கள்.
நூறு ஆண்டுகளுக்கு முன்பு என்ன நிலை? என்று வயதானவர்களுக்குத் தெரியும்; இன்றைய இளைஞர் களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
நாங்கள் இருந்த வீட்டிற்கு அருகில் அக்கிரகாரம் இருந்தது. எழுத்தாளர் ஜெயகாந்தன் குடியிருந்தது அந்த அக்கிரகாரத்தில்தான்!
அக்கிரகார வீட்டின் முன் ஒரு திண்ணை இருக்கும்; அந்தத் திண்ணையில் பெண்களை வெளியில் உட்கார வைத்திருப்பார்கள். அதுபோன்ற காட்சிகள் இன்றைக்கு உண்டா? அதற்குமேல் நான் விளக்கம் சொல்ல விரும்ப வில்லை, அது கொஞ்சம் சங்கடமான விஷயம்.
இன்றைக்கு எங்கேயாவது மொட்டைப் பாப்பாத்தியை பார்க்க முடிகிறதா?
அதுமட்டுமல்ல, மொட்டைப் பாப்பாத்தி என்ற வார்த்தை ஒன்று உண்டு. மொட்டைப் பாப்பாத்தி எதிரே வந்தால், அபசகுனம் என்று சொன்னார்கள். மொட்டைப் பாப்பாத்தியைப் பார்க்கக் கூடாது என்று சொல்வார்கள். இன்றைக்கு அந்த நிலை இல்லையே! காரணம், இன்றைக்கு மொட்டைப் பாப்பாத்தியே கிடையாது. இன்றைக்கு மொட்டை அடிப்பதும் கிடையாது; வெள்ளை சேலை உடுத்துவதும் கிடையாது.
இது யாரால் வந்தது?
பெரியாரால் வந்தது - பெரியாரின் சமூகநீதியால் ஏற்பட்ட விளைவுதான்.
எனவே, அனைவருக்கும் அனைத்தும்.
பெரியாரால், பார்ப்பனர்கள்தான் அதிகம் பயன்பட்டு இருக்கிறீர்கள்.
காவல்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன்
காவல்துறை ஆணையராக ராதாகிருஷ்ணன் என்ற நண்பர் ஒருவர் இருந்தார். அவர் பார்ப்பனர்.
திராவிடர் கழகத் தலைவராக அன்னை மணியம்மை யார் அவர்கள் இருந்தபொழுது, காவல்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் மகளுக்கு அமெரிக்காவில் திருமணம் நடந்தது; திருமண வரவேற்பு சென்னை ஏ.வி.எம். திருமண மண்டபத்தில் நடந்தது. எனக்கும், அன்னை மணியம்மை யாருக்கும் அழைப்பிதழ் கொடுத்திருந்தார்.
நாங்கள் அந்த மணவிழா வரவேற்பிற்குச் சென்ற பொழுது, எங்களை அன்போடு வரவேற்றார். மணமக் களுடன் ஒளிப்படம் எடுத்துக்கொண்டோம்.
நாங்கள் புறப்படும்பொழுது, ‘‘நீங்கள் வந்தது எனக்குப் பெருமையாக இருந்தது. அம்மா, சில பேர் நினைத்துக் கொண்டிருப்பார்கள், பெரியார் அய்யா, பார்ப்பனர்களுக்கு எதிரி என்று. அதுபோன்று கிடையாது, நான் அதை உணர்ந்து சொல்கிறேன். பெரியாரால் அதிகம் பயன்பட்டது நாங்கள்தான். ஏனென்றால், திருமணம் என்ற பெயரால், நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தோம். இன்றைக்கு அந்த நிலை இல்லை; பெரியாரின் சிந்தனை யால்தான்'' என்றார்.
சமூக அநீதியினுடைய கொடுமைகளை ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொருவரும் அனுபவித்து இருக்கிறார்கள்.
காந்தியார் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டவுடன், காந்தியாரைக் கொன்றவன் கோட்சே என்ற மராத்தி பார்ப்பான் என்ற செய்தி பிறகுதான் வந்தது. முதலில், காந்தியாரை சுட்டுக்கொன்றவன், முஸ்லிம் என்று ஒரு வதந்தியைக் கிளப்பிவிட்டார்கள். அது உண்மை இல்லை என்று அய்யா அவர்கள் வானொலியில் உரையாற்றினார்.
அப்பொழுது மொரார்ஜி தேசாய் பம்பாயில் உள்துறை அமைச்சராக இருக்கிறார். அவருடைய ஆட்டோ பயா கிரபி என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.
காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி அறிந்தவுடன், நாசிக் போன்ற பல இடங்களில் கலவரங்கள் ஏற்பட்டன. அக்கிரகாரங்கள் தீ வைத்துக் கொளுத்தப் பட்டன. கோட்சே, மராத்தி பார்ப்பனன் என்பதற்காக.
ஆனால், தமிழ்நாட்டில் ஒரு சிறு கலவரம் நடந்ததா? காரணம் என்ன? பெரியார்தான் காரணம்.
தனிப்பட்டவர்களைப் பார்த்து நாம் கோபப்படவேண்டிய அவசியமில்லை
கலைஞர்கூட கொஞ்சம் வேகமாகப் பேசியபொழுது கூட, பெரியார் சொன்னார், ‘‘தனிப்பட்டவர்களைப் பார்த்து நாம் கோபப்படவேண்டிய அவசியமில்லை. எங்கேயாவது துப்பாக்கியைத் தண்டிப்பீர்களா?'' என்று கேட்டார்.
துப்பாக்கியை தண்டிப்பது உண்டா? துப்பாக்கியைப் பிடித்த கை, யாருடைய கை என்பதைப் பாருங்கள். மதவெறி - அந்த மதவெறியை ஒழிப்பதற்கு என்ன வழி என்று யோசனை செய்யுங்கள் என்றார்.
அன்றைக்கு அந்த சமூகத்தைக் காப்பாற்றினார் தந்தை பெரியார் அவர்கள்.
எங்கள் இயக்கத்தினால், யாருக்காவது ஆபத்து ஏற்பட்டிருக்கிறதா?
இந்த இயக்கத்தினால், யாருக்காவது வன்முறை யினால் ஆபத்து ஏற்பட்டது என்று சொல்ல முடியுமா?
மதவெறியின் காரணமாக, கடப்பாரையைத் தூக்கிக் கொண்டு போய் பாபர் மசூதியை இடித்தவர்கள் யார்?
இன்னுங்கேட்டால், கடவுள் இல்லை என்று சொல் கிறவர்கள், இதுவரையில் எந்தக் கோவிலையும் இடித்தது இல்லை.
கடவுள் உண்டு என்று சொல்பவர்கள்தான், கடப் பாரையைத் தூக்கிக் கொண்டு போகிறார்கள். என் கடவுள் இங்கே பிறந்தார், அங்கே பிறந்தார் - என் கடவுள்தான் முக்கியம் என்று சொல்லி.
மூன்று பேருக்கு என்ன பங்கோ அதை அனுபவியுங்கள்!
ஆகவேதான், பெரியாருடைய சமூகநீதி சிந்தனை என்பது அனைவருக்கும் அனைத்தும் என்பதாகும்.
பார்ப்பனர்களா?
அவர்களுக்கும் பங்கு உண்டு.
நூற்றுக்கு மூன்று பேர் இருக்கிறீர்கள் அல்லவா, மூன்று பேருக்கு என்ன பங்கோ அதை அனுபவியுங்கள் என்றார் அய்யா.
97 பேருடைய பங்கை நாங்கள் அனுபவிப்போம் என்றால், exploitation - Social Monopoly சமூகத்தில் நீங்கள் ஆதிக்கம் செலுத்துகிறீர்கள் என்று அர்த்தம் என்று சொன்னார்.
எனவேதான், சமூகநீதி என்பது இருக்கிறதே, அது சமூக அநீதியை விரட்டி - அதற்கு மாற்று. அதைத்தான் தந்தை பெரியார் இட ஒதுக்கீடாக செய்தார்.
அந்த இட ஒதுக்கீடு ஒவ்வொரு காலகட்டத்தில், ஒவ் வொரு வகையாக இருந்தது; இன்றைக்கு அது தொடர்ந்து வருகிறது. இதை அவர்களால் தாங்க முடியவில்லை. அவ் வளவுதானே தவிர, இன்னமும் அவர்களுடைய எண் ணிக்கை குறைந்தபாடில்லை. இன்னமும் ஆதிக்கம் இருக்கிறது.
ஒன்றிய அரசில், 27 சதவிகிதத்தைப் போராடிப் பெற் றோம். ஆனால், நடைமுறையில் 27 சதவிகிதம் வர வில்லையே. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்மூலம் தெரிந்துகொண்டோம். காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன் சிங் அவர்கள் பிரதமராக இருந்தபொழுது அந்தச் சட்டம் வந்தது. ஆகையால், அந்த விளக்கங்கள் கிடைத்தன.
ஆனால், 27 சதவிகிதம் கொடுக்கவேண்டிய இடத்தில், அதேமாதிரி 23 சதவிகிதம் எஸ்.டி., எஸ்.சி. பிரிவினருக்குக் கொடுக்கவேண்டிய இடத்தில், 4 சதவிகிதம், 5 சதவிகிதம் தானே கொடுத்திருக்கிறார்கள். அதற்காகப் போராட்டம் நடத்தவேண்டுமா? இல்லையா?
ஆகவேதான், அவர்களுடைய கோபம் என்னவென் றால், பெரியார் பிறந்த நாளை சமூகநீதி நாளாக அறிவித்தது மட்டுமல்ல - நேற்று நம்முடைய முதலமைச்சர் ஒன்றை அறிவித்திருக்கிறார்.
சமூகநீதி எந்த அளவிற்கு செயல்படுகிறது என்பதற்காக ஒரு கண்காணிப்புக் குழு!
அது என்னவென்றால், சமூகநீதியை அறிவித்தால் மட்டும் போதாது; இட ஒதுக்கீட்டை அறிவித்தால் மட்டும் போதாது. அந்த சமூகநீதி எந்த அளவிற்கு செயல்படுகிறது என்பதற்காக ஒரு கண்காணிப்புக் குழு அமைக்கப்படும் என்று அறிவித்தார். இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை - திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியினுடைய ஒப்பற்ற சாதனை.
இதுவரையில் ஏட்டு சுரைக்காயாக இருந்தது 27 சத விகிதம். ஆனால், 69 சதவிகிதம் அமுலானதா? இல்லையா? என்று பார்க்கவேண்டாமா?
சமைத்தாகி விட்டது, சமைத்தாகிவிட்டது என்று சொல்லி, போய்விட்டு வாருங்கள் என்று சொன்னால், நியாயமா?
பந்தியில் அமர வைத்து பரிமாறவேண்டும் என்பது தானே முக்கியம். 27 வகையான கறியை சமைத்து வைத்திருக்கிறேன் என்று சொன்னால் மட்டும் போதுமா? இது என்னங்க ஏமாற்று வேலை?
ஏமாற்று வேலைக்கு முற்றுப்புள்ளி வைப்பதுதான் திராவிட மாடல்!
இந்த ஏமாற்று வேலைக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற இயக்கத்திற்கும், ஆட்சிக்கும் பெயர்தான் திராவிட ஆட்சி - திராவிட மாடல்.
இதனால்தான், அவர்களுக்கு எரிகிறது - கொதிக் கிறார்கள்.
அமெரிக்காவில் சமூகநீதிக்குப் பெயர் அபெர்மெட்டிவ் ஆக்சன்.
மலேசியாவில், மண்ணின் மைந்தர்கள் என்பவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கிறார்கள். ஒவ்வொரு நாட்டில், சமூகநீதி ஒவ்வொரு பெயரால் இருக்கிறது.
இன்னொரு நாட்டில், காம்பன்சேட்ரி சோசியல் ஜஸ்டிஸ் என்று சொல்கிறான். ஏற்கெனவே இழந்ததை, சமப்படுத் துவதற்காக என்று சொல்கிறார்கள்.
எனவே, எல்லா இடங்களிலும் அந்தப் பிரச்சினைகள் வரக்கூடிய அளவிற்கு, இன்றைக்கு வாய்ப்புகள் வந்திருக் கின்றன.
எனவேதான், உறுதி மொழி எடுத்துக்கொண்டு, நம்மு டைய பயணம் தொடரும் - பயணங்கள் முடிவதில்லை.
சுருக்கமாக உங்களுக்குச் சொல்கிறேன், சமூகநீதி நாள் என்பது இருக்கிறதே, அது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அடுத்ததாக, நம்முடைய கோரிக்கைகள் இந்தியா முழுவதும் ஒலிக்கும்.
நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், வாய்ப்பு கிடைக்கும்பொழுது இதை நிச்சயம் பதிவு செய்வார்கள்.
குஜராத் முதலமைச்சராக இருந்த மோடி இட ஒதுக்கீடு போராட்டத்தை ஆதரித்தாரா?
என்னிடம் ஒருவர் கேட்டார், ‘‘மோடி கூட 17 ஆம் தேதி தான் பிறந்தார். அப்படியென்றால், அவர் பிறந்த நாளும், சமூகநீதி நாள்தானே'' என்றார்.
அதற்கு நான் பதில் சொன்னேன், குஜராத்தில் அத்தனை ஆண்டுகாலம் முதலமைச்சராக இருந்தாரே, இட ஒதுக்கீடு போராட்டத்தை ஆதரித்தாரா? அப்படி ஆதரித்திருந்தால், அவருடைய பிறந்த நாள் சமூகநீதி நாள்தான். அதி லொன்றும் சந்தேகமேயில்லை.
சரி, அது இருக்கட்டும்; 2014 இல் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தாரே? அவருடைய அமைச்சரவையில் பிற்படுத் தப்பட்டவர்கள் எத்தனை பேர் இருந்தார்கள்? எத்தனை பேர் தாழ்த்தப்பட்டவர்கள் இருந்தார்கள்? இல்லவே இல்லையே!
சரி, 2014 ஆம் ஆண்டை விட்டுவிடுங்கள்; 2019 இல் ஆட்சிக்கு வந்தாரே, அரசமைப்புச் சட்ட கல்வெட்டை கும்பிட்டுவிட்டு வந்தாரே, அப்பொழுது அவருடைய அமைச்சரவையில் எத்தனை பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் அமைச்சர்களாக இருந்தார்கள்?
இப்பொழுது என்ன, பிற்படுத்தப்பட்டவர்களின் மேல் ஒரு பெரிய காதல். சமூகநீதி மேல் என்ன பெரிய ஆசை.
உத்தரப்பிரதேசத்தில், ஆதித்யநாத் என்ற சாமியார் முதலமைச்சராக இருக்கிறாரே, அவர் முன்னேறிய சமூ கத்தைச் சேர்ந்தவர். அவர் இப்பொழுது பிற்படுத்தப்பட்ட வர்களுக்காக ஒரு மாநாட்டை நடத்துகிறார். இதுகுறித்து ‘விடுதலை'யில் தலையங்கம் எழுதப்பட்டு இருக்கிறது. பிற்படுத்தப்பட்டவர்கள் மாநாட்டை யார் நடத்துவது? நண் டைச் சுட்டு நரியைக் காவலுக்கு வைப்பதா? தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள்.
வாக்கு வங்கிக்காக சமூகநீதி பேசுகிறார்கள்!
ஏனென்றால், அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் வருகிறது.
வாக்கு வங்கிக்காக சமூகநீதி பேசுவது வேறு;
லட்சியத்திற்காக சமூகநீதி பேசுவது வேறு.
இது உண்மையாக அழுவது - அது கிளிசரின் போட்டுக்கொண்டு அழுவது.
திரைப்படங்களிலும், நாடகங்களிலும் திடீரென்று அழுவார்கள் - இன்னுங்கேட்டால், உண்மையாக அழு வதைவிட, கிளிசரின் போட்டுக்கொண்டால், மிக நன்றாக அழுவார்கள்.
யாருக்காக அழுகிறார்கள்?
அதுபோல, அரசியலுக்காக அவர்கள் அழுகிறார்கள்.
ஜெயகாந்தன் அவர்கள் ‘‘யாருக்காக அழுதார்கள்?'' என்ற தலைப்பில் எழுதியிருப்பார்.
யாருக்காக அழுகிறார்கள் என்பதுதான் மிக முக்கியம். அந்த அடிப்படையில் பார்த்தீர்களேயானால், இன்றைக்கு நாம் செல்லவேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. எதைப் பார்த்தும் ஏமாந்துவிடக் கூடாது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர், இட ஒதுக்கீடே கூடாது; பெண்கள் தங்கள் அமைப்பில் உறுப்பினராகச் சேரக் கூடாது என்பவர்கள்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தொடங்கப்பட்டது 1925 இல். முதன்முதலாக அவர்கள், பெண்களை உறுப்பினராக ஆக்கலாம் என்று ஒப்புக்குச் சொன்னார்கள். ஆனால், அவர்களுக்கு எந்தப் பொறுப்பையும் கொடுக்கக் கூடாது என்று முடிவெடுத்தார்கள்.
ஜோதிமணி அவர்கள் இருக்கிறார்கள், இன்றைக்கு எம்.பி.,யாக இருக்கிறார். நாளைக்குத் தலைவராக வரக் கூடிய வாய்ப்புகள் கூட இருக்கிறது. காங்கிரஸ் கட்சியிலும், மற்ற கட்சிகளிலும் இந்த நிலை உண்டு.
ஆனால், ஆர்.எஸ்.எஸ்.சில் இதுபோன்று நினைத்துப் பார்க்க முடியுமா? சித்பவன் பார்ப்பனர்கள் என்று சொல் லக்கூடியவர்களைத் தவிர, இதுவரையில், அந்த அமைப்பிற்கு தலைவராக வந்திருக்கிறார்களா என்றால், ஒரே ஒருவர் வந்தார், ராஜேந்திர சிங் என்பவர். அவர் சிறிது காலம் இருந்தார், அவரே ராஜினாமா செய்துவிட்டுப் போகக்கூடிய சூழ்நிலையை உருவாக்கினார்கள். அன்றையிலிருந்து ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களின் அமைப்புதானே! இல்லை என்று மறுக்க முடியுமா?
தேர்தல் மூலம்கூட தலைவரைத் தேர்ந்தெடுப்பது கிடையாது. இன்றைய தலைவர் போனால், அடுத்தவரை நாமினெட் செய்துவிட்டுப் போவார். ஒரு பெண் தலைவராக வர முடியாதே!
ஒரு நாத்திக இயக்கத்திற்கு ஒரு பெண் தலைமை தாங்கினார் இங்கே!
நம்முடைய இயக்கம் எப்படிப்பட்ட இயக்கம் என்ப தைத் தெரிந்துகொள்ளுங்கள். ஒரு நாத்திக இயக்கத்திற்கு ஒரு பெண் தலைமை தாங்கினார் என்று சொல்லக்கூடியது இங்கே.
முதன்முதலாக இந்த நாட்டின் பிரதமராக வந்தவர் இந்திரா காந்தி அம்மையார். அந்தக் கட்சிக்குத் தலைவராக இருந்தார். ஆனால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் அது போன்ற நிலை இல்லையே!
எனவேதான், சமூக அநீதி எங்கெல்லாம் இருக் கிறதோ, அங்கெல்லாம் சமூக நீதியைக் கேட்டாக வேண்டும். சமூக நீதியினுடைய குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும். சமூகநீதி செயல்படுத்தப்படவேண்டும்.
அந்த அடிப்படையில் நண்பர்களே, இன்னும் நாம் செல்லவேண்டிய தூரம் என்பது நீண்ட தூரமாகும்.
இந்த அரங்கத்தின் மூலமாக வைக்கக்கூடிய முதல் கோரிக்கை என்னவென்றால், எப்படி தமிழ்நாட்டில், தமிழ் நாடு அரசு சமூகநீதி கண்காணிப்பு குழு என்று போடு கிறதோ, அதையே பின்பற்றி, ஒன்றிய அரசும், ஒவ்வொரு துறையிலும், சமூகநீதி கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும். இந்த அரங்கம் அதை முதல் தீர்மானமாகக் கொள்கிறது.
இதுதான் பெரியார் பிறந்த நாளின் சூளுரையாகும்.
அடமானம் வைப்பதற்காகவே ஒரு துறை
இரண்டாவது, மோடி வித்தை. அந்த வித்தை சாதாரணமானதல்ல. பண மதிப்பிழப்பு. அதற்கடுத்ததாக, இப்பொழுது பணத்தைத் தேடுகிறார்கள். துறைகளை விற்பதற்கென்றே வாஜ்பேயி பிரதமராக இருந்தபொழுது, ஒரு அமைச்சர் இருந்தார். மினிஸ்டர் ஃபார் டிஸ்இன் வெஸ்ட்மெண்ட். இன்றைய பிரதமர் மோடி அதிலிருந்து வளர்ச்சி அடைந்திருக்கிறார்; எப்படி என்றால், அடமானம் வைப்பது. விற்பது இல்லை - அடமானம் வைப்பது.
சேட்டுக் கடைகளில் நம்மாள்கள் நகையை வைத்தால், மீட்பதே கிடையாது. அதுபோல, அடமானம்.
நாம் தன்மானத்தைப்பற்றி பேசிக்கொண்டிருக்கின்ற நேரத்தில், அவன் நாட்டில் அடமானத்தைப்பற்றி பேசக் கூடிய கட்டாயத்தை உருவாக்கி விட்டார்கள்.
பொருளாதாரக் கண்ணோட்டத்தோடுதான் மேடை களில் பேசுவார்கள். எல்லாவற்றையும் விற்றுவிட்டால், அம்பானிக்குப் போகும்; அதானிக்குப் போகும் என்று சொல்வது அவர்களின் ஓர் அம்சம்.
ஆர்.எஸ்.எஸினுடைய
உள்நோக்கம் - உள்ரகசியம்!
அதைவிட இன்னொன்று, ஆர்.எஸ்.எஸினுடைய உள் நோக்கம் என்னவென்றால், பொதுத் துறை நிறுவனங் களையெல்லாம் தனியார்த் துறை ஆக்கு வதன் உள் ரகசியம் என்னவென்றால், இட ஒதுக் கீட்டை, சமூகநீதியை அழிக்கவேண்டும் என்பதற் காகத்தான்.
காலங்காலமாக இட ஒதுக்கீடு வங்கியில் கிடை யாது. காலங்காலமாக ஒன்றிய அரசாங்கத்தில், அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். இட ஒதுக்கீடு எல்லாம் கிடையாது. கீரைக்காரி முத்தம்மா, முனியம்மா பிள் ளைகள் எல்லாம் இன்றைக்கு அய்.பி.எஸ்., அய்.ஏ.எஸ். ஆனதெல்லாம் மண்டல் கமிசன் வந்த பிறகுதான்.
ஆகவே, வங்கியை பொதுத் துறையிலிருந்து தனியார்த் துறைக்கு விற்கவேண்டும். பகுதி பகுதியாகப் பிரித்து விற்கிறார்கள். விளையாட்டு மைதானத்தை வாடகைக்கு விடுகிறார்கள்.
இதுபோன்ற நிலை - பொதுத் துறையை தனியார் துறையாக ஆக்குகின்ற சூழல்கள் மிக வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதற்கு மாற்று வழி ஆட்சி மாற்றம் என்பது கடைசியான ஒரு வாக்கியம். அது நடக்கவேண்டிய நேரத்தில் நடக்கும் - உருவாகவேண்டிய காலகட்டம் - காலத்தின் கட்டா யம் வரட்டும்.
இதற்கிடையில், நிரந்தரமாக சமூகநீதிக் கண் ணோட்டத்தோடு நாம் பார்க்கவேண்டும் என்றால் நண்பர்களே, என்ன செய்யவேண்டும்?
தனியார்த் துறையிலும் இட ஒதுக்கீடு தேவை!
நீண்ட நாள்களுக்கு முன்பாக திராவிடர் கழகம் எச்சரித்த செய்தி என்னவென்றால், தனியார்த் துறையிலும் இட ஒதுக்கீடு கேட்கவேண்டியது - சமூகநீதி கேட்க வேண்டியது இரண்டாவது தீர்மானமாகும்.
இதில் மிகவும் மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், அகில இந்திய கட்சியான காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி மற்றவர்கள் எல்லாம் தனியார்த் துறையில் இட ஒதுக்கீட்டை ஒப்புக்கொள்வோம் என்று சொல்லி யிருக்கிறார்கள்.
இதற்கென ஒரு மாநாட்டை நடத்தி, தமிழ்நாடுதான் அதற்கு வழிகாட்டும். அவர்களையெல்லாம் அந்த மாநாட்டிற்கு அழைப்போம்.
எனவே, தனியார்த் துறையிலும் இட ஒதுக்கீடு தேவை என்பது இரண்டாவது தீர்மானம்.
மூன்றாவதாக,
சமூகநீதி, சமூகநீதி என்று வரும்பொழுது, சமூகநீதி என்றால் ஆண்களுக்கு மட்டும் என்று பேசுகிறார்கள். வெறும் சமூகநீதி என்று சொல்லக்கூடாது. பாலியல் நீதி கடந்த சமூகநீதி என்று சொல்லவேண்டும்.
அதற்கு ஒரு உதாரணம் சொல்லவேண்டுமானால், நீதிபதிகள் எல்லாம் பிற்படுத்தப்பட்டவர்கள் இல்லையே, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு வாய்ப்பு இல்லையே என்று கேட்டால்,
நாங்கள் பெண் நீதிபதிகளை நியமிக்கிறோம் என்று சொல்லி, உயர்ஜாதி பெண்களையே நியமிக்கிறார்கள்.
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்களில் வழக்குரைஞர்கள் இல்லையா? மாவட்ட நீதிபதிகள் இல்லையா? அவர்கள் பக்கம் திரும்ப மறுக்கிறார்களே!
பாலியல் நீதியை உள்ளடக்கிய
சமூகநீதி தேவை
ஆகவேதான், சமூகநீதி என்று சொல்லும்பொழுது, பாலியல் நீதியை உள்ளடக்கிய சமூகநீதி தேவை என்கிற கோரிக்கை வைக்கப்படவேண்டும்.
பெண்கள் நீதிபதியாகவும் இருக்கட்டும்; அவர்கள் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை சமூகத்தி லிருந்து வரவேண்டும். நாடு முழுவதும் தேடுங்கள்.
இது மூன்றாவது தீர்மானமாகும்.
கடைசியாக நான்காவது, உச்ச, உயர்நீதிமன்றங்களில் இட ஒதுக்கீடு கிடையாது. மாவட்ட நீதிமன்றங்கள் வரை இட ஒதுக்கீடு உண்டு.
பெரியார்தான் கேட்டார், ‘‘தலைக்கு ஒரு சீயக்காய்; தாடிக்கொரு சீயக்காயா?'' என்று.
சீயக்காய் போட்டால், ஒரே சீயக்காயைப் போட வேண்டியதுதானே. உயர்நீதிமன்றத்திற்கு இட ஒதுக்கீடு பொருந்தாது; உச்சநீதிமன்றத்திற்கு இட ஒதுக்கீடு பொருந் தாது என்று வியாக்கியானம் செய்கிறார்கள்.
எல்லோரும் பாடுபட்டு, நாடாளுமன்றத்தில் தமிழ் நாட்டைச் சேர்ந்த உறுப்பினர்கள் உள்பட குரலெழுப்பி, விவாதம் நடத்தி நிறைவேற்றினால்,
அதேபோன்று, சட்டமன்றங்களிலும் மிகப்பெரிய அளவில் சட்டங்களை நிறைவேற்றினால்,
அங்கே அமர்ந்திருக்கின்ற உயர்ஜாதிக்கார ஆதிக்கக் காரர்கள் ஒரு சிவப்புக் கோட்டினை மிக சுலபமாகப் போட்டு விடுகிறார்கள்.
மக்கள் பிரதிநிதித்துவம் பெற்ற, மக்கள் பிரதிநிதித்துவம் உள்ள மக்களாட்சியில் இவர்களால் என்ன செய்ய முடியும்? அந்த அளவிற்கு சக்தி வாய்ந்தது - இறுதி நிலை அதுதான் - நீதிமன்றங்களை நாம் மதிக்கவேண்டும். நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு நாம் கட்டுப்படவேண்டும்.
தந்தை பெரியாரின் கருத்து!
பெரியார் மிக அழகாகச் சொன்னார், ‘‘உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்பது இறுதியானது என்று ஏன் சொன்னார்கள்? உலகத்தினுடைய கடைசி அறிவாளி அங்கேதான் அமர்ந் திருக்கிறான் என்பதற்காக அல்ல - அதற்கு மேல் அப்பீல் செய்ய முடியாது'' என்பதற்காகத்தான்.
ஆகவேதான், அங்கே சமூகநீதி இருக்கவேண்டும். மொத்தம் 34 நீதிபதிகளா?
அதில் எத்தனை பேர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்?
எத்தனை பேர் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்?
நாம் ஒன்றும் அதிகம் கேட்கவில்லை. அவரவர் பங்கை அவரவர்களுக்குக் கொடுக்கவேண்டும். உங்களுடைய பங்கை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்கிறோம்.
அனைவருக்கும் அனைத்தும் -
இந்த அனைவருக்கும் அனைத்தும் என்பது உச்சநீதிமன்றத்திற்குப் பொருந்தாதா?
அனைவருக்கும் அனைத்தும் உயர்நீதிமன்றங்களுக்குப் பொருந்தக் கூடாதா?
இதுதான் எங்கள் கேள்வி.
இதையெல்லாம் தாண்டி, இப்பொழுது வேகமாக செய்ய வேண்டிய பணி - எங்கள் பிள்ளைகளை பலிகடாக்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்களே, அதற்குக் காரணமான நீட் தேர்வை எதிர்த்து மிகப்பெரிய மக்கள் இயக்கத்தைக் கட்டவேண்டும் என்பதற்காக - வருகின்ற 21 ஆம் தேதி ஒத்தக் கருத்துள்ள அமைப்புகளை அழைத்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தினை நடத்தவிருக்கின்றோம்.
கரோனா காலகட்டம் என்பதால், எல்லாம் முடங்கிப் போனதுபோன்ற ஒரு சூழ்நிலை இருந்தது. ஆகவே, வேகமாக நடக்கவேண்டிய போராட்டங்கள் நடைபெற வில்லை. அதை செய்யவேண்டும். நீட் தேர்வின் கொடு மையை எதிர்த்துப் போராட்டம் நடத்தவேண்டும். முறைகேட்டை ஒழிப்பதற்காக நீட் தேர்வை கொண்டு வருகிறோம் என்று சொன்னார்களே, அது நிறைவேறியதா?
நீட் தேர்வின்போது ஆள் மாறாட்டம் ஆங்காங்கே நடைபெறுகிறது; ஒரு கேள்வித்தாள் விலையாக 35 லட்சம் ரூபாய் கொடுக்கிறார்கள் என்றால், அவர்கள் ஏழையா? அதற்காக எங்கள் பிள்ளைகள் தூக்கில் தொங்குவதா?
இதுதான் தகுதி, திறமையா?
ஒரு மாபெரும் இயக்கத்தைக் கட்டவேண்டும்
இதையெல்லாம் மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லி, ஒரு மாபெரும் இயக்கத்தைக் கட்டவேண்டும் என்ற அவசியம் இருக்கிறது.
எனவே, சமூகநீதி நாளில் நாம் சூளுரைக்கிறோம். எஞ்சிய இந்தத் திட்டங்களையெல்லாம் செயல்படுத்துவதற்கு மாபெரும் மக்கள் இயக்கத்தை உண்டாக்குவோம்.
பெரியார் மக்களை நம்பினார் -
மக்களோடு மக்களாக இருந்தார்கள் -
மக்களுக்காக வாழ்ந்தார்கள் -
நாமும் அந்தப் பயணத்தைத் தொடருவோம் என்று சொல்லி, அனைவருக்கும் நன்றி என்று சொல்லி,
அனைவருக்கும் உணவு இருக்கிறது - அருள்கூர்ந்து செவிக்கு உணவில்லாதபொழுது, சிறிதல்ல, நிறையவே உணவு ஈயப்படும் என்று சொல்லி, விடைபெறுகிறேன்.
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!
நன்றி வணக்கம்!
இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரையாற்றினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக