நம்ப வைத்து கழுத்தறுப்பதுதான் ஆர்.எஸ்.எஸ். ஆசிரியர் அய்யா அவர்களே, கவலைப்படாதீர்கள் - அய்யாவின் சுடரை இளைஞர்களிடம் நாங்கள் சேர்ப்போம்!
• Viduthalaiஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை நூல் வெளியீட்டு விழாவில் தயாநிதி மாறன் எம்.பி., கருத்து
சென்னை, செப்.18 நம்ப வைத்து கழுத்தறுப்பதுதான் ஆர்.எஸ்.எஸ். ஆசிரியர் அய்யா அவர்களே, கவலைப் படாதீர்கள் - அய்யாவின் சுடரை இளைஞர்களிடம் நாங்கள் சேர்ப்போம் என்றார் திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் அவர்கள்.
‘‘ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை’’ புத்தக வெளியீட்டு விழா!
கடந்த 8.9.2021 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற ‘‘ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை'' புத்தக வெளியீட்டு விழாவில், நூலை வெளியிட்டு திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் அவர்கள் சிறப்புரையாற்றினார்..
அவரது சிறப்புரை வருமாறு:
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் காட்டிய வழியில், இன்றைக்கும் உயிர்மூச்சாகக் கொண்டு தொண்டாற்றி வருகின்ற திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர் அய்யா அவர்கள் எழுதிய ‘‘ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை’’ நூல் வெளியீட்டு விழாவிற்குத் தலைமை வகிக்கும் திராவிடர் கழகத் துணைத் தலைவர் அருமை அண்ணன் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,
நூலினைப் பெற்றுக்கொண்டு உரையாற்றவிருக்கின்ற - சென்ற மாதம் பிறந்த நாள் அன்று வாழ்த்துகளைப் பெற்றிருப்பார்; அன்று முகத்தில் உள்ள தாடியை எடுத்துவிட்டு, எங்களைவிட இளைஞராகக் காட்சியளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் அருமை அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்களே,
எனக்கு முன் அருமையாக உரையாற்றிய மாநில செய்தித் துறை இணை செயலாளர் மற்றும் வழக்குரைஞர் அருமைச் சகோதரர் இரா.இராஜீவ் காந்தி அவர்களே,
வரவேற்புரையாற்றிய பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களே, வழக்குரைஞர் பா.மணியம்மை அவர்களே,
எனக்கு ஒரு வாய்ப்பினைக் கொடுத்து, எனக்குப் பெருமை தேடித்தந்த எங்களது மானமிகு ஆசிரியர் அய்யா அவர்களுக்கு என் முதல் வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்குப் பெரிய வருத்தம்!
நான், ஆசிரியர் அய்யா அவர்களை அடிக்கடிப் பார்த்திருக்கிறேன். இதுவரையில் ஆசிரியர் அவர்கள் எந்த நிகழ்ச்சிக்கும் என்னை அழைத்தது கிடையாது; எனக்குப் பெரிய வருத்தம்.
2019 இல்தான் நான் அய்யா ஆசிரியர் அவர்களுடைய கண்களுக்குத் தட்டுப்படுகிறேன். அதற்குக் காரணம், நாடாளுமன்றத்தில் நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது செயல்பட்ட விதம் அப்படி.
அதற்குப் பிறகு அய்யா ஆசிரியர் அவர்களை நாங்கள் சந்தித்தது இப்பொழுது இந்து அறநிலையத் துறை அமைச்சராக உள்ள சேகர்பாபு அவர்களுடன் வந்து, வாழ்த்து பெறுவதற்காக வந்தோம்.
அப்பொழுது அய்யா அவர்கள் சேகர்பாபு அவர் களைப் பார்த்து ஒரு கேள்வியை கேட்டார்,
‘‘தந்தை பெரியார் நெஞ்சில் உள்ள முள்ளை எப் பொழுது எடுக்கப் போகிறீர்கள்?'' என்று. அந்த நாள் நன்றாக இன்றும் நினைவில் இருக்கிறது.
அப்பொழுது எங்கள் அமைச்சர், எங்கள் மாவட்டச் செயலாளர், எங்கள் இந்து அறநிலையத் துறை அமைச்சர்சேகர்பாபு அவர்கள், அழகாகச் சொன்னார்,
அய்யா எனக்குத் தமிழும் தெரியும்!
‘‘அய்யா, பொறுங்கள்; எங்கள் தலைவர் தளபதி அவர்கள் ஒரு திட்டம் வைத்திருக்கிறார்'' என்றார்.
‘‘அப்படியா? அப்படியென்றால் சரியாக செய்வார்'' என்றார்.
ஆசிரியர் அய்யா அவர்களிடம் பேசிக் கொண்டி ருக்கும்பொழுது, கருத்துகள் அருவி போன்று கொட்டிக் கொண்டே இருக்கும்.
அப்பொழுது என்னிடம் உரையாற்றிய அய்யா ஆங்கிலத்திலேயே பேசினார்.
2019 இல் இருந்து ஆசிரியர் அய்யா என்னிடம் பேசும்பொழுது, ஆங்கிலத்தில்தான் பேசுவார்.
உடனே நான் அய்யாவிடம், ‘‘அய்யா நான் தமிழும் நன்றாகப் பேசுவேன்'' என்றேன்.
இல்லை, இல்லை, நாடாளுமன்றத்தில் நீங்கள் நன்றாக ஆங்கிலத்தில் பேசுகிறீர்கள் என்றார்.
அய்யா, நாடாளுமன்றம் வேறு; அங்கே அப்படிப் பேசினால்தான், எல்லோருக்கும் புரியும்; அதனால்தான் நான் ஆங்கிலத்தில் பேசுகிறேன் என்றேன்.
அப்படியா, தமிழில் பேசுவீர்களா? என்று கேட்டார்.
தமிழில் பேசுவேன், நிறைய பேசியிருக்கிறேன் என்று தமிழில் பேசுவேன் என்று வாக்குறுதியினை கொடுக்கின்ற அளவிற்கு நிலைமை உருவாயிற்று.
‘‘அய்யா, குறிப்பாக பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு, நாட்டில் மிகப்பெரிய பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கிறது. ஊடகங்கள் எல்லாம், அவர்கள் சொல்கின்ற கருத்துகளை மட்டுமே மக்களிடம் திணிக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல், இளைஞர் சமுதாயமும், நாம் சொல்வதும், செய்வதும் தவறாகக் கருதுகின்ற அளவிற்கு, அவர்களை மூளைச் சலவை செய்கின்றார்கள்.
அய்யா, ‘‘நீங்கள் இன்னும் அதிகமாகப் பிரச்சாரத்தினை செய்யவேண்டும்; இளைஞர்களை இன்னும் அதிகமாகக் கவரவேண்டும்'' என்று சொன்னேன்.
பார்த்தார் அய்யா, அப்படியென்றால், நீங்கள்தான் சரியான ஆள்; இதுபோன்ற புத்தகத்தை வெளியிடப் போகிறோம்; நீங்கள்தான் வந்து வெளியிடவேண்டும் என்று அன்றைக்கே சொன்னார்.
பெரியாரின் மடியில் அமர்கின்ற வாய்ப்பைப் பெற்றவன் நான்!
இதைவிட பெரிய பெருமை எனக்குக் கிடைக்காது. ஏனென்றால், நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களின் மடியில்தான். இன்னும் சொல்லப்போனால், எங்கள் தலைவர் தளபதி, ஆசிரியர் அய்யாவைத் தவிர, பெரியாரின் மடியில் அமர்கின்ற வாய்ப்பையும் பெற்றவன் நான் என்கிற உரிமையும், பெருமையும் எனக்கு உண்டு.
நாங்கள் குழந்தைகள்; பெரியார் அய்யா அவர்கள், கலைஞரைப் பார்க்க வருவார்கள்; காத்திருக்கின்ற அறையில், நாங்கள் எல்லாம் பெரியார் மடியில் அமர்ந் திருக்கிறோம். எம்.ஜி.ஆர். மடியிலும் அமர்ந்திருக்கின்றோம்.
அதேபோல், எங்களுடைய குடும்ப நிகழ்ச்சி ஒவ்வொன் றிலும் பெரியார் அய்யா அவர்கள் கலந்துகொள்வார்கள்; அப்பொழுதும் பெரியாரை சந்திக்கின்ற வாய்ப்பைப் பெற்றிருக்கிறோம். அப்பொழுதெல்லாம் பெரியாருடைய அருமை எங்களுக்குத் தெரியவில்லை.
சொல்வார்கள் அல்லவா, ‘‘இருக்கும்பொழுது அவர் களுடைய அருமை தெரியாது'' என்று.
ஆனால், இந்தக் காலத்தில்தான், இங்கே உரையாற்றிய பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்கள் சொன்னாரே, நாடாளுமன்றத்தில் பதவியேற்கும்பொழுது ‘‘வாழ்க பெரியார்'' என்று சொன்னார்கள் என்று. எங்களிடம் பலர் கேட்டார்கள், ஏங்க பெரியார் வாழ்க என்று சொன்னீர்கள் என்று.
அது எங்களை அறியாமலேயே வந்தது என்றேன்.
சற்று தடுமாற்றம் ஏற்பட்டது எனக்கு!
அண்ணன் திருமாவளவன் அவர்களும் இங்கே இருக்கிறார்கள். நாடாளுமன்றத்திற்குள்ளே செல்லும் பொழுது 300-க்கும் மேற்பட்ட பா.ஜ.க. உறுப்பினர்கள் இருந்தார்கள். நான் மக்களவைக்கு மூன்றாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன். சற்று தடுமாற்றம் ஏற்பட்டது எனக்கு. மிகப்பெரிய பலத்துடன் பா.ஜ.க.வினர் இருக்கிறார்களே, காங்கிரசில் தெரிந்த முகம் ஒன்றுகூட வெற்றி பெறவில்லையே! தமிழ்நாடு, கேரளாவைச் சேர்ந்த எம்.பி.,க்கள் மட்டும்தான் கூட்டமாக இருக்கிறார்களே!
சென்ற முறை தமிழ்நாட்டிலிருந்து திராவிட முன் னேற்றக் கழகத்தின் சார்பில் யாருமே வெற்றி பெற முடியாத சூழ்நிலை இருந்ததே!
ஒரு மாறுபட்ட சூழ்நிலையை நாங்கள் பார்க்கும் பொழுது, அங்கே முழக்கங்கள் எழும்பின. ஹிந்தியில்தான் அந்த முழக்கங்களும் இருந்தன. தவறில்லை, அவர்கள் தாய்மொழியில் அவர்கள் பேசுகிறார்கள்.
வேண்டுமென்றே, எங்களைத் தாழ்மைப்படுத்த வேண் டும் என்கின்ற உணர்வோடு, ‘‘ஜெய் சிறீராம், ஜெய் சிறீராம், ஜெய் சிறீராம்'' என்று சொன்னார்கள்; அது அவர்களுடைய உரிமை, சொல்கிறார்கள்.
எங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் கலனாக, அரணாக இருந்தது
அதை எதிர்த்துக் குரல் கொடுக்க - எங்களை அறியாமல் வந்ததுதான் ‘‘வாழ்க பெரியார்'', ‘‘வாழ்க கலைஞர்'', ‘‘வாழ்க தமிழ்'' என்பது. அதுதான் அவர்களை எதிர்த்து எங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் கலனாக, அரணாக இருந்தது. இன்றுவரை நாடாளுமன்றத்தில், பெரியார் பெயரைச் சொல்லித்தான், பெரியாரின் கொள்கையைச் சொல்லித்தான், அண்ணாவின் கொள்கைகளைச் சொல்லித்தான், கலை ஞரின் கொள்கைகளைச் சொல்லித்தான் நாங்கள் வாதாடு கிறோம், போராடுகிறோம்.
கம்ப்யூட்டர் வைரஸ் பெயர் என்ன தெரியுமா?
ஏனென்றால், இன்றைக்கு அய்யா ஆசிரியர் அவர்கள் புத்தகம் எழுதியிருக்கிறாரே, அது சரியான புத்தகமாகும். பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்கள் சொன்னார்களே, ‘எலன் ஆஃப் டிராய்'' என்ற திரைப்படத்தை நாங்கள் பார்த்திருக்கிறோம்; இந்தத் தலைமுறையினரில் எத்தனைப் பேர் பார்த்திருப்பார்கள் என்று தெரியவில்லை. அந்தக் காலத்தில் கிரீக் போரில் நடைபெற்ற காட்சிகளைக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். அந்தக் காலத்தில் காசினோ திரையரங்கத்தில் ஒன்றரை ஆண்டுகளாக வெற்றிகரமாக ஓடியது. கிரீக் போரின் வெற்றி - அது காலத்திற்கு ஏற்ப - இப்பொழுது சொன்னார்களே, கம்ப் யூட்டர் வைரஸ் பெயர் என்ன தெரியுமா? டிரோஜன் வைரஸ்தான்.
நம்ப வைத்து கழுத்தை அறுப்பதுதான்
ஆர்.எஸ்.எஸ்.
டிரோஜன் வைரஸ் என்றால் என்ன?
நம்ப வைத்து கழுத்தை அறுப்பது.
அதுதான் ஆர்.எஸ்.எஸ்.சின் நிலை.
இந்தப் புத்தகம் முழுவதையும் படித்துப் பார்த்தேன், ஒரு ஆராய்ச்சிக் கட்டுரைப் போன்று, மிகத் தெளிவாக, ஒவ்வொன்றையும் தெளிவாக ஆசிரியர் அய்யா அவர்கள் எழுதியிருக்கிறார்கள். படிக்கும்பொழுதே அந்த உணர்ச்சி எனக்கு ஏற்பட்டது. அந்த உணர்வு அனைவருக்கும் ஏற்படவேண்டும்.
மதவாத அரசியலுக்குப் பின்னால் இருப்பது யார்?
இன்று பா.ஜ.க. செய்கின்ற மதவாத அரசியலுக்குப் பின்னால் இருப்பது யார்?
ஆர்.எஸ்.எஸ்.தானே!
1989 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மண்டல் கமிசன் அறிக்கையை எதிர்த்து வடமாநிலங்களில் ஒரு பெரிய போர் - எதற்காக அந்தப் போர் என்றால், அந்த மண்டல் கமிசனை அமல்படுத்தக் கூடாது என்று. தமிழ்நாட்டில், அமல்படுத்து, அமல்படுத்து என்கிற போர்.
அப்பொழுது என் தந்தையிடம் கேட்கிறேன், ‘‘ஏன் இந்த கருத்து வேறுபாடு?'' என்று.
அப்பொழுது அவர் சொன்னார், ‘‘நீ படிக்கிறாயா?''
ஆமாம், நான் படிக்கிறேன்.
உங்கள் அப்பா என்ன படித்திருக்கிறார்?
எம்.ஏ. படித்திருக்கிறார்.
உங்கள் அம்மா என்ன படித்திருக்கிறார்?
எங்கள் அம்மா படிக்கவில்லை.
உனக்குப் படிப்பது சுலபமாக இருக்கிறதா?
இல்லை, கஷ்டமாகத்தான் இருக்கிறது.
ஆனாலும், உன்னுடைய அப்பா படித்ததினால், நீ சுலபமாகப் படிக்க வந்துவிட்டாய். அருகிலுள்ள குடிசை யில் வசிக்கின்ற மாணவன் என்ன படித்திருக்கிறான்?
பத்தாம் வகுப்புகூட தேர்வாகவில்லை அப்பா என்றேன்.
ஏன், பத்தாம் வகுப்புகூட தேர்வாகவில்லை? ஏனென் றால், அவனுடைய அப்பா படிக்கவில்லை; அவனுடைய அம்மா படிக்கவில்லை. இதுதான் பிற்படுத்தப்பட்டவர்களின் நிலைமை. இந்த நிலைமையை மாற்றுவதற்காகத்தான் மண்டல் கமிசன் அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சொல்கிறோம்.
இன்னும் எத்தனை பேர் வசதியில்லாமல், தெருவோர விளக்கின்கீழ் படித்து வருகிறார்கள் தெரியுமா? அவர் களுடைய வாழ்க்கை முன்னேற்றத்திற்காகத்தான் இந்த இட ஒதுக்கீடு - மண்டல் கமிசன் நடவடிக்கை.
3 சதவிகிதம் உள்ள மக்கள் மட்டும்தான் படிக்கவேண்டும்; மற்றவர்கள் அடிமைகளாக இருக்கவேண்டும்
சரி, அதை ஏன் எதிர்க்கிறார்கள்? அது நல்லதுதானே - அனைவரும் படித்தால், இந்தியா வல்லரசு ஆகுமே! படிப்பதானே அனைவருக்கும் முக்கியம் என்று சொல்கிறார்கள் என்று கேட்டபொழுது,
அதுதான் இந்தியாவின் கொடுமை.
என்ன கொடுமை?
வெறும் 3 சதவிகிதம் உள்ள மக்கள் மட்டும்தான் படிக்கவேண்டும்; மற்றவர்கள் எல்லாம் அவர்களுக்கு அடிமைகளாக இருக்கவேண்டும் என்கிற நிலைமையை மாற்ற, மாற்றம் வருகிறது. அந்த மாற்றத்தை ஏற்க மறுக்கின்ற 3 சதவிகித மக்கள் செய்கின்ற சூழ்ச்சிதான் அது என்றார்.
அப்பொழுது நான் கேட்டேன், ‘‘வெறும் 3 சதவிகிதம் உள்ள மக்கள்தானே; அவர்களைப் பார்த்து ஏன் நீங்கள் பயப்படுகிறீர்கள்? அவர்கள் என்ன செய்துவிடப் போகிறார்கள்?'' என்றேன்.
‘‘இந்த 3 சதவிகித மக்கள்தான் இரண்டாயிரம் ஆண்டு களாக நம்மை அடிமையாக்கி வைத்திருந்த சமுதாயத்தினர். அவர்களை எளிதில் நீ எதிர்க்க முடியாது. உனக்கு வயது வரவர நீ அறிவாய். நான் இருப்பதால், உனக்கு அந்தக் கஷ்டம் தெரியவில்லை. நீ தனியாகப் போய் நில், அப்பொழுது அவர்களுடைய தாக்கம் உனக்குத் தெரியும்'' என்றார். இன்று என்னுடைய தந்தை உயிரோடு இல்லை.
இன்று, அந்த 3 சதவிகித மக்களின் தாக்கம் என்மீது எவ்வளவு இருந்தது - அதை நான் எவ்வாறு போரிட்டு வெற்றி பெற்றேன் என்று எனக்குத்தான் தெரியும்.
பெரியாரின் சுடரை இளைய சமுதாயத்தினரிடம் கொடுக்கவேண்டும்!
ஆசிரியர் அய்யா அவர்களும், அண்ணன் திருமா அவர்களோடும் பேசிக் கொண்டிருந்தபொழுது, அய்யா அவர்கள் சொன்னார், ‘‘நாங்கள் பெரியார் என்கிற சுடரை கையில் எடுத்துக் கொண்டிருக்கிறோம்; அந்தச் சுடரை இளைய சமுதாயத்தினருக்குக் கொடுக்கவேண்டும்'' என்றார்.
நான் சொன்னேன், ‘‘அய்யா கவலையே படாதீர்கள்; இன்றைய இளைய சமுதாயத்தினருக்குப் பெரியாரை அக்கு வேறு, ஆணிவேராகத் தெரிகிறது. ஏனென்றால், நாம் எந்த அளவுக்குப் பெரியாரைப்பற்றி பேசுகிறோமோ, அந்த அளவிற்கு நம்முடைய இன எதிரிகள் திட்டித் திட்டித் பேசுகிறார்கள். பெரியார் அவர்கள் உடலால் மறைந்து கிட்டத்தட்ட 47 ஆண்டுகள் ஆகிவிட்டன; இன்னும் அவரை ஏன் திட்டுகிறார்கள் என்றால், அந்த 3 சதவிகித மக்களின் கோட்டையை நொறுக்குகின்ற அளவிற்கு, பெரி யாரின் செயல்பாடுகள் இருந்தது'' என்று குறிப்பிட்டேன்.
எனக்கு 40, 50 வயதிற்கு மேல்தான், பெரியாரின்மீது காதல் வந்தது. அவரைப்பற்றி படிக்கப் படிக்கத்தான் எனக்குப் புரிந்தது. அதிலும் குறிப்பாக, என்னுடைய பிள்ளைகளிடம் சொல்லும்பொழுதுகூட, அவர்களைக் கட்டாயப்படுத்த மாட்டேன். ஆனால், இது சரி, இது தவறு என்று உங்களுக்கே தெரியவேண்டும். நீ எந்தப் பாதையை தேர்ந்தெடுக்கின்றீர்களோ, அந்தப் பாதையிலே செல்லுங் கள் என்பேன்.
கலைஞர் அவர்கள் உயிரோடு இருந்திருந்தால்...
இன்று பார்த்தீர்களேயானால், தலைவர் தளபதி அவர் கள் சிறப்பான வகையில் ஆட்சி புரிகின்றார். கலைஞர் அவர்கள் உயிரோடு இருந்திருந்தால், என்னவெல்லாம் செய்திருப்பாரோ, அத்தனையையும் இன்று நம்முடைய தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் செய்துகொண் டிருக்கிறார்.
தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல மைச்சராகப் பதவியேற்கும்பொழுது, கரோனாவின் பாதிப்பு ஒரு நாளைக்கு 25 ஆயிரம் இருந்தது; 45 நாள்களில் 3 ஆயிரத்திற்குக் கொண்டு வந்தார். இன்று பார்த்தீர்களே யானால், ஆட்சிப் பொறுப்பேற்று 3 மாதங்கள் ஆகின்றன. இன்று, கரோனாவின் பாதிப்பு ஆயிரத்து சொச்சம்தான் - அந்த அளவிற்குக் கட்டுக்குள் வந்திருக்கின்றன.
மற்ற மாநிலங்கள் எல்லாம் நம்முடைய மாநிலத்தைப் பார்த்துப் பொறாமைப்படுகின்ற அளவிற்கு, சிறப்பான வகையில் தளபதி அவர்கள் ஆட்சி செய்துகொண்டி ருக்கிறார். அதுமட்டுமல்லாமல், கரோனாவைக் கட்டுக்குள் வந்திருக்கிறார்.
இது பொறுக்குமா அவர்களுக்கு?
என்ன சொல்கிறார்கள், எங்கள் பண்டிகையை கொண் டாட அனுமதி மறுக்கிறீர்களே? நாங்கள் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடியே தீருவோம் என்றார்கள்.
ஒன்றிய உள்துறை அமைச்சகம் என்ன சுற்றிக்கையை அனுப்பியிருக்கிறது?
கரோனா தொற்றின் இரண்டாம் அலைக்கு யார் காரணம்?
இது பண்டிகை காலம் - இந்தப் பண்டிகைக் காலத்தில் மக்கள் அதிகமாகக் கூடினால், கரோனா தொற்று அதிக மாகப் பரவ வாய்ப்பு இருக்கிறது. இரண்டாம் அலை முடிந்து, மூன்றாம் அலை தொடங்கவிருக்கிறது.
ஏனென்றால், அவர்களுக்குத் தெரியும் - கரோனா தொற்றின் இரண்டாம் அலைக்கு யார் காரணம்?
கும்பமேளா என்ற பெயரில், வடஇந்தியாவில் நடத்திய விழாவிற்கு இந்தியாவின் பல பகுதிகளிலும் இருந்து லட்சக்கணக்கானவர்கள் ஒரே இடத்தில் கூடினர். யாருமே கரோனா கட்டுப்பாட்டினைக் கடைப்பிடிக்கவில்லை. ஒருவருக்குக் கரோனா தொற்று வந்தால், அவர் மட்டுமா பாதிக்கப்படுகிறார்; அவருடன் தொடர்பில் இருந்த அனைவரும் பாதிக்கப்படுவார்கள் அல்லவா?
தலைவர் என்ன சொன்னார், இந்த ஆண்டு பொறுத்துக் கொள்ளலாமே? சென்ற ஆண்டு கொண்டாடினோமா, இல்லையா? அடுத்து ஆண்டு எல்லா பண்டிகைகளையும் கொண்டாடலாமே என்றார்.
இணைய தளத்தில் பொய்ப் பிரச்சாரத்தைக் கட்ட விழ்த்துவிடுகிறார்கள், ‘‘கிறித்துவர்கள் பண்டிகை கொண் டாடலாம்; இஸ்லாமியர்கள் பண்டிகைகளைக் கொண்டா டலாம்; ஆனால், ஹிந்துக்கள் மட்டும் பண்டிகை கொண் டாடக் கூடாது'' என்று முதலமைச்சர் ஸ்டாலின் சொன்னார் என்று.
அதுபோன்று அவர் சொல்லவேயில்லையே. அனைத்து மதப் பண்டிகைகளுக்கும் தடை என்றுதானே சொல்லியிருக்கிறார்.
இதை ஏற்றுக் கொள்ளும் மனநிலை அவர்களுக்கு இல்லையே. உங்களுடைய உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று சொல்வது தவறா?
விஷமத்தன பிரச்சாரம்
வேண்டுமென்றே, விஷமத்தனமாகப் பிரச்சாரத்தை கிளப்பிவிடுகிறார்கள். மீண்டும் கரோனா தொற்றை அதிகப்படுத்தவேண்டும் என்று நினைக்கிறார்கள். ஒன்றிய மோடி ஆட்சியைப் பார்த்துக் கேட்கிறேன், கரோனா கொடுந்தொற்று இருக்கும்பொழுது என்ன சொன்னீர்கள்? கவலைப்படாதீர்கள், கரோனா கட்டுப்பாட்டிற்குள் இருக் கிறது; எல்லோரும் மணி அடியுங்கள் என்று சொன்னீர்கள். மணி அடித்து ஊர்வலமாகச் சென்றீர்களே, கரோனா போயிற்றா? ‘‘கோ கரோனா, கோ கரோனா'' என்று டான்ஸ் ஆடிக்கொண்டு போனீர்களே? கரோனா ஒழிந்ததா? இல்லையே! அதற்குப் பிறகு என்ன சொன்னீர்கள், ‘‘எல் லோரையும் விளக்குப் பிடிக்கச் சொன்னீர்களே'', விளக்குப் பிடித்து கரோனா போயிற்றா? இல்லையே!
இன்று கரோனாவின் இரண்டாம் அலையைக் கட்டுப் படுத்த நம்முடைய முதலமைச்சர் எடுத்த சிறப்பான முயற்சியினால்தான், இன்று கட்டுக்குள் இருக்கிறது.
பாராட்ட மனமில்லாவிட்டாலும்கூட குறை சொல்லாதீர்கள்!
பக்கத்திலுள்ள கேரள மாநிலத்தைப் பாருங்கள்; கரோனா கட்டுக்குள் இருந்தது; ஓணம் பண்டிகையால் நாள்தோறும் 35 ஆயிரம் பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்படுகிறார்கள்; இதைப் பார்த்தவுடன், ஒரு நல்ல பொறுப்புள்ள முதலமைச்சருக்கு அச்சம் ஏற்படுமா? ஏற்படாதா?
அந்த நிலை தமிழ்நாட்டிற்கு வரக்கூடாது என்கிற நல்ல எண்ணத்தில்தானே, தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக் கைகளை மேற்கொள்கிறார். அதைப் பாராட்ட உங்களுக்கு மனமில்லாவிட்டாலும்கூட பரவாயில்லை, குறை சொல் கின்றீர்களே.
இன்றைக்கு எங்களுடைய தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள், பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை எடுத்திருக்கிறார். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று ஆணை போட்டிருக்கிறார்.
பெரியார் அவர்கள் உயிரோடு இருந்திருந்தால், மகிழ்ச்சியால் பூரித்துப் போயிருப்பார்
இன்று அய்யா பெரியார் அவர்கள் உயிரோடு இருந்திருந்தால், மகிழ்ச்சியால் பூரித்துப் போயிருப்பார். ஒரு பெண்ணை ஓதுவராக ஆக்கிப் பெருமைப்படுத்தியவர் யார் என்றால், எங்கள் தலைவர், உங்கள் முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் அல்லவா!
இதைப் பார்த்தால், நம்முடைய இன எதிரிகளுக்கு வயிறு எரிகிறது?
சரி, இதையே நான் வேறு விதமாகச் சொல்கிறேன், அனைத்து ஜாதி என்று சொன்னால்தானே உங்களுக்குக் கோபம் வருகிறது. அனைத்து ஹிந்துக்களும் அர்ச்சகர் ஆகலாம் என்பதற்காகத்தானே இதைச் செய்திருக்கிறார்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, நான் ஹிந்து; நான் அர்ச்சகர் ஆகக்கூடாதா? ஆகம விதிகளைப் படித்துவிட்டு, அர்ச்சகர் ஆகக்கூடாதா?
டிரோஜன் குதிரை என்றால் என்னவென்று சொன் னோமே, நம்ப வைத்து கழுத்தை அறுப்பது. எதற்காக நீட்டை கொண்டு வந்தீர்கள்?
சமஸ்கிருதத்திற்கும், மருத்துவப் படிப்பிற்கும் என்ன சம்பந்தம்?
மருத்துவர் ஆகவேண்டுமென்றால், சமஸ்கிருதம் படிக்கவேண்டும் என்று சொன்னீர்கள். சமஸ்கிருதத்திற்கும், மருத்துவப் படிப்பிற்கும் என்ன சம்பந்தம்? எதுவு மில்லையே!
ஏனென்றால், நீங்கள் மட்டும்தான் படிக்கவேண்டும்; நாங்கள் எல்லாம் படிக்கக்கூடாது என்கிற கெட்ட எண்ணம்தானே.
ஆனால், எங்கள் வீட்டுப் பிள்ளைகள் எல்லாம் படித்து, இன்றைக்கு உலகத்தில் உள்ள தலைசிறந்த மருத்துவர்கள் யார் என்றால், தமிழ்நாட்டைச் சார்ந்த மருத்துவர்கள்தான். அவர்கள் யாரும் நீட் தேர்வு எழுதியவர்கள் இல்லை.
நான் கேட்கிறேன், பிரதமர் மோடிக்கு மருத்துவம் பார்க்கும் டாக்டர் நீட் தேர்வு எழுதினாரா? குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு மருத்துவம் பார்க்கும் டாக்டர் நீட் தேர்வு எழுதினாரா? இல்லையே!
ஆர்.எஸ்.எஸ். செய்கின்ற சதி வேலைதானே!
எங்கள் பிள்ளைகள் வரக்கூடாது என்பதற்காக ஆர்.எஸ்.எஸ். செய்கின்ற சதி வேலைதானே இது! அதனை எதிர்க்கவேண்டாமா? அதை எதிர்க்கின்ற ஒரே தலைவர் யார் என்றால், நம்முடைய தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்தான்.
நாடாளுமன்றத்தில் நாங்கள் செம்மொழியான தமி ழுக்கு எவ்வளவு நிதி ஒதுக்குகிறீர்கள் என்று கேட்டோம்.
அதற்குப் பதிலளிக்கும்பொழுது, யாரும் பேசாத மொழி சமஸ்கிருதத்திற்கு 2011 ஆம் ஆண்டு, கணக்கெடுப்பின்படி, வெறும் 23 ஆயிரம் பேர் பேசுகின்ற மொழிக்கு 680 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறார்கள்.
ஆனால், கோடிக்கணக்கான மக்கள் பேசுகின்ற செம்மொழியாம் தமிழ் மொழிக்கு 60 கோடி ரூபாய்.
கோடிணக்கான மக்கள் பேசுகின்ற செம்மொழியான தெலுங்கு மொழிக்கு 60 கோடி ரூபாய்.
கன்னடத்திற்கு 30 கோடி ரூபாய்; மலையாள மொழிக்கு 40 கோடி ரூபாய்.
நான் கேட்கிறேன், 23 ஆயிரம் பேர் பேசுகின்ற சமஸ்கிருத மொழிக்கு இவ்வளவு நிதி கொடுக்கிறீர்களே, பேசப்படாத மொழிக்கு இவ்வளவு நிதி கொடுக்கிறீர்களே, இது தவறு அல்லவா! அனைத்து மொழிகளையும் நீங்கள் வளர்க்க வேண்டாமா? என்று கேட்டுவிட்டு வெளியே வருகிறேன்.
எனக்குத் தொலைப்பேசியில் திட்டி மெசேஜ் வருகிறது; யாரடா நீ? என் குடும்பத்தைக் கேவலப்படுத்திப் பேசிகிறாய் என்று! 10 பேர்தான்; வேறு வேறு தொலைபேசி எண்களிலிருந்து தொடர்பு கொண்டு அதை செய்தார்கள். அதற்கும் நான் பொறுமையாக பதில் சொன்னேன்.
பிறகுதான் எனக்குத் தெரிந்தது, இந்த முட்டாள்களிடம் பேசினால், நானும் முட்டாளாகிவிடுவேன் என்று.
நான் என்ன தவறாகச் சொன்னேன்; யாரும் பேசாத மொழிக்கு இவ்வளவு நிதி ஒதுக்கியிருக்கிறீர்களே - மக்களால் பேசப்படுகின்ற தமிழ் மொழிக்கு இவ்வளவு குறைவான நிதியா? என்று கேட்டது தவறா?
நாங்கள் பெரியாரின் கொள்கைகளைத்தான் பேசுகிறோம்!
நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு முறையும் நாங்கள் பெரியாரின் கொள்கைகளைத்தான் பேசுகிறோம்; அண் ணாவின் கொள்கைகளைத்தான் பேசுகிறோம்; கலைஞரின் கொள்கைகளைத்தான் பேசுகிறோம்.
இன்றுகூட நம்முடைய தலைவர் தளபதி அவர்கள், ஒன்றிய அரசின் குடியுரிமைத் திருத்தத்திற்கு எதிராக ஒரு தீர்மானத்தை தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றியிருக்கிறார்.
அந்தச் சட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் நான் உரையாற்றும்பொழுது, உள்துறை அமைச்சரைப் பார்த்துக் கேட்டேன்; நீங்கள் இந்தியாவிற்கு முழுவதும் உள்துறை அமைச்சர்; வட இந்தியாவிற்கு மட்டுமல்ல; நீங்கள் அனைவருக்கும் சமமாக இருக்கவேண்டும் என்று சொல்லிவிட்டு வந்தேன்.
எங்களுக்கு இஸ்லாமியர்கள் மாமன், மச்சான் முறைதான்
நான் உரையாற்றி வெளியே வந்த பொழுது, பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னை சூழ்ந்து கொண்டு, நீ நம்மாள் போன்று இருக்கிறாய்? நீ எதற்காக இஸ்லாமியர்களை ஆதரித்துப் பேசுகிறாய். அவர்கள் ஏன் உனக்கு மாமனா, மச்சானா என்று கேட்டார்கள்.
ஆமாய்யா, எங்களுக்கு இஸ்லாமியர்கள் மாமன், மச்சான் முறைதான். எங்கள் மாநிலத்தில், கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள், ஹிந்துகளுக்களுக்கிடையே பிரச்சி னைகள் கிடையாது. நாங்கள் எல்லாம் ஒற்றுமையாகத்தான் வாழ்கிறோம். எங்கள் வீட்டில் பண்டிகை என்றால், அவர் கள் வீட்டிற்குப் பலகாரம் போகும். இஸ்லாமியர்கள் வீட்டில் பண்டிகை என்றால், முதல் பிரியாணி எங்கள் வீட்டிற்குத்தான் வருகிறது. அந்த அளவிற்கு நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். நீங்கள் ஏன் பிரிக்கிறீர்கள் என்று கேட்டேன்.
உத்தரப்பிரதேசத்தில் டிரோஜன் குதிரை புறப்பட்டு விட்டது
நேற்று முன்தினம் பத்திரிகையைப் பார்த்தேன், உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் வருகிறது. நீங்கள் சொன்ன டிரோஜன் குதிரை புறப்பட்டு விட்டது; ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவாத் பேசுகிறார், இஸ் லாமியர்களும் ஹிந்துக்கள்தான்; பிறக்கும்பொழுது அவர்கள் ஹிந்துவாகத்தான் பிறந்தார்கள்; காலத்தின் அடிப்படையில் அவர்கள் இஸ்லாமியர்களாக மாறிவிட் டார்கள். அவர்களை நாம் இந்தியர்களாக மதித்து, ஹிந்துக் களாக மதித்து ஒன்றாக செயல்படவேண்டும்'' என்று பேசியுள்ளார்.
எதற்காக?
தேர்தல் வருகிறது, நீங்கள் ஓட்டுப் போட்டால்தான் நாங்கள் வெற்றி பெற முடியும். எங்களை நம்பி நீங்கள் ஓட்டுப் போட்டு, ஆட்சிக் கட்டிலில் அமர வையுங்கள். அதற்குப் பிறகு நாங்கள், உங்கள் கழுத்தை அறுப்போம் என்று சொல்கிறார்கள்.
ஆசிரியர் அய்யா இந்த புத்தகத்தில் எழுதியிருக்கும்படி, ஒவ்வொரு மாநிலத்திற்குள்ளும் உள்ளே நுழைந்து, அங்கே இருக்கும் பிரச்சினைகளுக்குள் அவர்களை ஈடுபடுத்திக் கொள்வது. அவர்கள்தான் காப்பாற்றுவார்கள் என்கிற ஒரு போலியான நம்பிக்கையை உருவாக்குவது. அதற்குள் மக்களை நம்ப வைத்து வரவழைப்பது. அவர்களுடைய காரியம் முடிந்ததும், மக்களைப்பற்றி கவலைப்படாமல் இருப்பதுதான் அவர்களுடைய நிலை.
எப்பொழுதுதான் அனைத்து மக்களும் அவர்களைத் தோலுரித்துப் பார்க்கவேண்டிய நேரம் வரும்?
ஆசிரியர் அவர்கள் எழுதிய இந்த புத்தகம் - காலத் திற்கு ஏற்ற புத்தகமாகும். ஆனால், என்னுடைய வருத்தம் என்னவென்றால், இந்தக் காலம் எப்பொழுதுதான் மாறும். எப்பொழுதுதான் அனைத்து மக்களும் அவர்களைத் தோலுரித்துப் பார்க்கவேண்டிய நேரம் வரும்.
ஏனென்றால், இந்தியா முன்னேற வேண்டும், இந்தியா முன்னேறவேண்டும் என்று சொல்கிறார்கள்; இன்றும் ஜாதி, ஜாதி என்று சொல்லி சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இன்று நாம் முன்னேற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். வல்லரசு, வல்லரசு என்று பேசுகிறாரே, நம்முடைய பிரதமர் - வல்லரசாக ஆகிவிட்டோமா? இல்லையே!
ஒரு குட்டைக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருக்கிறோம் - அந்த நிலை மாறவேண்டும் என்றால், அனைத்து இந்தியர்களுக்கும் படிப்புரிமை தேவை! அனைத்து இந்தியர்களுக்கும் வாழ்வுரிமை தேவை.
‘‘பெரியாரின் பிறந்த நாள் சமூகநீதி நாள்’’
நம்முடைய தலைவர் தளபதி சொன்னாரே, ‘‘பெரியாரின் பிறந்த நாள் சமூகநீதி நாள்'' என்று - அந்த சமூகநீதி வந்தால் மட்டுமே, இந்தியா ஒரு சிறந்த வல்லரசு நாடாக மாறும். அப்பொழுது நாமும் பெருமைப்படுவோம்.
அந்த நாள், நாம் இருக்கும்பொழுது நடக்கவேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் கூறி, இந்த வாய்ப்பு தந்த ஆசிரியர் அய்யா அவர்களுக்கு நன்றி கூறி, அடிக்கடி என்னை அழைக்குமாறு கேட்டுக்கொண்டு விடை பெறுகிறேன்.
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக