செவ்வாய், 11 மே, 2021

இனமானப் போரில் திராவிடம் வென்றது!

May 03, 2021 • Viduthalai
          உழைப்பு - ஒருங்கிணைப்பு - உன்னத வாக்குறுதிகளுக்கான வெற்றி!

           வாக்குறுதிகளையும் - மக்கள் நம்பிக்கைகளையும் செயலாக்குவார் நமது தளபதி!

செயற்கரிய செயல் புரியவிருக்கும் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்குதாய்க்கழகத்தின் சார்பில் வாழ்த்துகள்!

வாக்களித்த பெருமக்களுக்கு நன்றி! நன்றி!!

திராவிடர் கழகத் தலைவரின் வாழ்த்தும் - விருப்பமும்!

தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கவிருக்கும் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகள்!- மக்கள் அவரிடம் எதிர்பார்ப்பனவற்றை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நடைபெற்ற தேர்தல் என்ற இனமானப் போரில், ‘திராவிடம் வெல்லும் - நாளைய வரலாறு இதைச் சொல்லும்‘ என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்; அது மக்கள் தீர்ப்பின்மூலம் நிரூபிக்கப்பட்டுவிட்டது.

நம் பிரகடனம் மெய்யானது!

முத்தமிழ் அறிஞர் கலைஞர் போன்ற தலைவர்கள் இல்லை என்பதால், ‘வெற்றிடம்‘ என்று கூறியவர்களுக்கு பெரியார் பூமியான இந்நிலத்தில் எப்போதும் வெற்றிடம் ஏற்படாது; அரசியலில் மற்றவர்கள் வந்து சேரவேண்டிய கற்றிடம் என்று கூறி, அந்தப் பெரும்பணியை, சுகமான சுமையாய்த் தாங்கிய நம் ஆற்றல்மிகு சகோதரர் - உழைப்பின் உருவம் - பண்பின் பெட்டகமான மானமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தி.மு.க.வின் தலைமையேற்று திறம்படக் கடமையாற்றுவார் என்றும் பிரகடனப்படுத்தினோம்!

அதைக் கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அவர்தம் தெளிந்த, கனிந்த அணுகுமுறையின்மூலம் அகிலம் அறியச் செய்து சரித்திர சாதனையைப் படைத்தார்.

உழைத்தார், உழைத்தார் - வென்றார், வென்றார்!

இந்த சட்டமன்றத் தேர்தல் அதற்கான பரிசோதனைக் கூடம் என்று சரித்திரம் வகுத்த -வைத்த தேர்வில், அவர் திட்டமிட்ட வியூகங்கள், திரண்ட உழைப்பின்மூலம், ஏச்சுகள், அவதூறுகள், அச்சுறுத்தல்களையெல்லாம் அவரது லட்சியப் பயிராம் கொள்கை விளைச்சலுக்கு உரமாக்கிக் கொண்டு உழைத்தார்; வென்றார் - புதிய சாதனை வரலாறு படைத்தார்!

வாக்குறுதிகள் வீண் போகாது!

‘‘வெறும் தேர்தல், அரசியல் கண்ணோட்டத் திற்கான கூட்டணி அல்ல எமது கூட்டணி’’ என்று அறிவித்து, அனைவரையும் அரவணைத்து, ஒருங்கிணைத்து போராட்டக் களங்களில் இலட்சியங்களுக்காக பூத்துக் காய்த்துக் கனிய வைத்து, பாதுகாத்தது - பரிபக்குவமாய் வேளாண்மை செய்யும் ஒரு தோட்டக்காரராக இருக்கும் இவரது வியூகம் - உலகம் வியக்கத்தக்கதும்; பாராட்டி எவரும் பாடம் கற்கவேண்டியதுமான அரசியல் வகுப்பும் ஆகும்!

காரணம், அவர் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் எல்லோருடைய பாடங்களையும் கற்றுணர்ந்த பண்பாளராக முதிர்ந்ததுதான்.

மக்களுக்கு அவர் கொடுத்த வாக்குறுதிகளும், மக்கள் அவரிடம் வைத்த நம்பிக்கையும் என்றும் வீண் போகாது; விரைவில் செயற்கனிகளாக, மக்களுக்கே சுவையைத் தரும் என்ற உறுதியோடு, தமிழ்நாட்டின் கடந்தகால இருட்டுக்கு விடை கொடுத்து, பகலவனின் வெளிச்சம் பாயும் தலைமை எம் ஆட்சி என்று செயல்பட்டு, புதியதோர் வரலாற்றை உருவாக்குவார் என்ற மிகுந்த நம்பிக்கையோடு நமது நல்வாழ்த்துகள் உரித்தாகுக!

மக்களின் தெளிவான தீர்ப்புக்காக முதலில் அவர்களைப் பாராட்டி, சமூகநீதி மண் - பெரியார் மண் என்பதை மீண்டும் உணர்த்திடும் வகையில் ஆட்சி அமைவதற்குக் காரணமான வாக்காளப் பெருமக்களுக்கு நமது நன்றியையும், மகிழ்ச்சியையும் உரியதாக்குகிறோம்!

தாய்க்கழகத்தின் வாழ்த்து

செயற்கரிய செயல் புரியும் ஆட்சி என்று செகத்தோர் பூரிப்படையும் ஆட்சியைத் தருவார்; அதன்மூலம் அனைவருக்கும் மீட்சியும் ஏற்படும் என்பது உறுதி! உறுதி!!

நம் தளபதிக்குத் தாய்க்கழகத்தின் வாழ்த்துகள், பூரிப்புடன்!

வெல்க திராவிடம்!

 கி. வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை       

2.5.2021              

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக