ஆறு நாடுகளைச் சேர்ந்த அறிவுசார் இளைஞர்கள் முழக்கம்
நமது சிறப்பு செய்தியாளர்
22.5.2021 சனியன்று மாலை காணொலி மூலம் அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், நார்வே, சிங்கப்பூர், ஓமன் நாடுகளில் பணியாற்றும் அயலக திராவிடச் சிந்தனைச் செல்வர்கள் - திராவிட இயக்க உணர்வோடும், தந்தை பெரியார் தம் சிந்தனை உரத்தோடும் தெரிவித்த கருத்துக்களின் திரட்டுகள் இங்கே!
சிங்கப்பூர் இராஜராஜன்
சிங்கப்பூரில் வசிக்கும் இராஜராஜன், தகவல் தொழில் நுட்பத் துறையில் பணியாற்றி வருகிறார். திராவிட இயக்க சிந்தனையாளர். இரு சிறுகதை தொகுப்புகள், திராவிட நம்பிக்கை மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 6 புத்தகங்கள் எழுதியுள் ளார். திராவிட வாசிப்பு எனும் மாத மின்னிதழை செப் 2019 இல் இருந்து நடத்தி வருகிறார். திராவிட இயக்கக் கருத்துக் களைத் தொடர்ச்சியாகப் பேசியும், எழுதியும் வருபவர்! அன்னை மணியம்மையார் குறித்துச் சிறப்பிதழ் வெளியிட்டவர்.
“இணையத்தில் நமது பிரச்சார முறைகள்” என்கிற தலைப்பில் பேசும் பொழுது... மரியாதைக் குரிய ஆசிரியர் அவர்களுக்கும், தோழர்களுக்கும் வணக்கங்கள்! இந்த அருமையான நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து எனக்கு பேச வாய்ப்பளித்த அயலக திராவிட நண்பர்கள் குழுவிற்கும், தோழர் வில்வம் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இன்று நான் மிகவும் நெகிழ்ச்சியாக உணர்கிறேன். அதற்கான காரணத்தை சொல்ல என்னைப்பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும்.
நான் பிறந்து வளர்ந்தது தஞ்சாவூரில். என்னுடைய தந்தையார் பெயரை சொன்னால் ஆசிரியருக்கு நன்றாக தெரியும். தஞ்சாவூர் ரெட்கிராஸ் ராஜமகேந்திரன் அவர்களின் மூத்த மகன் தான் நான். எனது தந்தையார் ஆசிரியருடன் இணைந்து பல சேவைகளை செய்துள்ளார். 2009 ஆம் ஆண்டு எனது தந்தையார் காலமான போது, ஆசிரியர் எனது தந்தைக்கான இறுதி மரியா தையை செலுத்திவிட்டு, யார் அவரது பிள்ளைகள் எனக் கேட்டு, என்னிடமும் என் தம்பிகளிடமும் விசாரித்தார்.
நான் சில ஆண்டுகளாகவே, ஆசிரியர் அவர்களை நேரில் சந்தித்து, நாங்கள் நன்றாக இருக்கிறோம் என்று சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இன்று, இந்த நிகழ்ச்சியின் மூலமாக ஆசிரியரிடம் இதைத் தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்! திராவிட இயக்க வரலாறு நீண்ட நெடியது. திராவிட இயக்க வரலாற்றில் நாம் பல்வேறு இதழ்களை நடத்தி இருக்கிறோம், பல புத்தகங்கள் எழுதி இருக்கிறோம், நமது வரலாறு ஆவணங்களாக இருக்கிறது.
திராவிட இயக்கம் குறித்தான கேள்விகளுக்கும், அவதூறு களுக்கும் பெரியாரில் இருந்து பல தலைவர்கள் ஏற்கனவே பதில் அளித்து விட்டார்கள். எல்லாவற்றிற்குமான பதில்கள் ஏற்கெனவே இருக்கிறது.
அதை திரும்ப திரும்ப நாம் பல்வேறு வழிகளில் சொல்லிக்கொண்டிருப்பது தான் தேவையாக இருக்கிறது. சிறந்த பேச்சாளர்கள் நம்மிடம் தான் இருக்கிறார்கள். பேச்சால் வளர்ந்த இயக்கம் இது. நம் பேச்சு என்பது வெறும் அலங்காரமாக இருக்காது. அதில் பொருள் இருக்கும். வசவு மொழி இருக்காது. மானுடத்தின் மீதான அன்பு அதில் இருக்கும்! இன்று வெறுப்பை உமிழ்வதும், கத்துவதுமே மேடை பேச்சாக சிலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் எத்தனை கத்தினாலும் அவர்களின் குரல் எடு படாது. ஏனெனில் அவர்களின் குரலில் உண்மையில்லை.
ஆனாலும், நாம் அமைதியாக இருக்க முடியாது. ஒரு எடுத்துக்காட்டை சொல்கிறேன். மீனு என்றொரு பெண். சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கோரிக்கையுடன் வந்தார்..அவரது காணொலி ஒன்றை தந்து, இதைப்பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் என்றார். அது ஒரு கல்லூரி மேடை. ஆயிரக்கணக்கான மாணவர்கள் குழுமி இருந்தார்கள். மீனு அழகான தமிழில் ஒரு உரையை தந்திருந்தார். அந்த பேச்சில் போகிற போக்கில் இட ஒதுக்கீடு குறித்த ஒரு தவறான கருத்தை சொன்னார். அந்த கருத்திற்கு மாணவர்களிடம் பெரும் கரவொலி எழுந்தது.
நான் காணொலியை பார்த்துவிட்டு மீனுவிடம் பேசினேன். அவரது கருத்தில் இருக்கும் தவறை சுட்டிக்காட்டிவிட்டு, உங்களுக்கு பிடித்த மேடை பேச்சாளர் யார் என்று கேட்டேன். ஒரு பெண் பட்டிமன்ற பேச்சாளரின் பெயரை சொன்னார். நான் தோழர் அருள்மொழி அவர்களின் உரைகளை கேட்டுப்பாருங்கள் என்றேன். சில மாதங்கள் கழித்து மீனு பேசினார். தான் எத்தகைய அறியாமையில் இருந்தோம் என்பதை உணர்ந் தாகவும் இனி திராவிட பாதையில் செல்ல இருப்ப தாகவும் சொன்னார். இன்று அவர் திராவிட சுடராக விளங்கிக்கொண்டிருக்கிறார். ஆகவே, நாம் நமது ஆயுதமான பேச்சாளர்களை உருவாக்கிக்கொண்டு தான் இருக்க வேண்டும். நாங்கள் திராவிட வாசிப்பு என்றொரு மின்னிதழ் நடத்துகிறோம். அதில் அன்னை மணியம்மையாருக்கு சிறப்பிதழ் ஒன்று கொண்டுவந்தோம். அது பரவலாக வாசிக்கப் பட்டும், பாராட்டையும் பெற்றது. பிறகு, அதே நூலை திறனாய்வு செய்ய அய்ந்து பெண் களை அழைத்தோம். அதில் பெரும்பான்மையாக திராவிடம் குறித்து அறிமுகம் இல்லாத வர்கள் தான் கலந்துக்கொண்டார்கள். அவர்கள் இதழை வாசித்துவிட்டு சிறப்பாக உரை நிகழ்த்தினார்கள். ஆக, இன்றைய இளைஞர்கள் தேடிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களை நான் சென்று அடைய வேண்டும். அவ்வளவு தான்!
இணையத்தை பொறுத்தவரை நாம் கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாகவே செயல்படுகிறோம். நம்மிடம் அமைப்பின் பலம் இருக்கிறது. திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக்கழகம் என்று பெரிய அமைப்புகள் இருக்கிறது. அவர்களின் இந்த அமைப்புகளின் செயல்பாடுகள் ஒருபுறம் சிறப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. இன்னொருபுறம், அமைப்பு சாராமல் சமூக ஊடகங்களில் திராவிடம் சார்ந்து இயக்குபவர்களும் திராவிட இயக்கத்துக்கு பலமாக இருக்கிறார்கள்.
உலகம் முழுவதும் பறந்து வாழும் இவர்கள், திராவிட இயக்கத்தின் மீதுகொண்ட பற்றாலும், நன்றியாலும் இயங்கிக் கொண்டு இருப்பவர்கள்.
இப்படி அமைப்பு சாராத இளைஞர்கள் செய்யும் சிலவற்றை இங்கே தருகிறேன். திராவிட ஆய்வு குழுமம் - முகநூலில் சிறப்பான விவாதங்கள், கலந்துரையாடல் நடக்கும் குழு We Dravidians - திராவிட இயக்க கொள்கைகளை தமிழகம் தாண்டி பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல முனைப்புடன் செயல்படும் குழு திராவிட வாசகர் வட்டம் - திராவிட இலக்கியங்கள் குறித்தான வாசக குழு கிண்டில் எழுத்தாளர்கள் குழுமம் - கிண்டிலில் எழுத வருபவர்களுக்கு உதவும்/ ஊக்கப்படுத்தும் குழு.
5) Dravidian Quotes பெரியார், அண்ணா, கலைஞர், அம்பேத்கர் என பல்வேறு தலைவர் களின் பொன்மொழிகளை அழகான மீம்களாக உருவாக்கும் குழு. இப்படி நாம் பல்வேறு குழுக்களாக இயங்கி வருகிறோம். இன்னொரு புறம், நாம் செய்ய வேண்டிய விசயங்களும் நிறைய இருக்கிறது. இணைய புத்தகங்கள் () - திராவிட இயக்கம் சார்ந்த நிறைய புத்தகங்களை நாம் அமேசான் கிண்டிலில் பதிப்பிக்க வேண்டும். அது பலரை சென்றடைய உதவும்.
2) Dravidian FAQ Website திராவிட இயக்கம் குறித்தான அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்லும் வகையில், கேள்வி பதில் பாணியில் ஒரு இணையதளத்தை உருவாக்க வேண்டும்.
3) திராவிட இயக்கம் குறித்து தேடும் போது நமது இணையதளங்கள் முன்னே வரவேண்டும். அதற்கான என்று சொல்லப்படும் Search Engine Optimision வேலைகளை செய்ய வேண்டும்.
4) Distribution channels நமது சிந்தாந்த எதிரி களால், ஒரு பொய்யான செய்தியை இந்தியா முழுவதற்கும் ஒரு சில மணிநேரங்களில் கொண்டு செல்ல முடிகிறது. காரணம் அவர்கள் வாட்சாப் நெட்வொர்க்கில் பலமாக இருக்கிறார்கள். நாமும் நமது WhatsApp Distribution channels அய் பலப் படுத்த வேண்டும்.
5) Audio books - இன்று பல்வேறு புத்தகங்கள் ஒலிவடிவில் வெளியாகிறது. பெரியாரின் புத்தகங்கள், ஆசிரியரின் புத்தகங்கள், திராவிட இயக்க புத்தகங்கள் நிறைய ஒலி வடிவில் மாற்றப்பட வேண்டும். திராவிட இயக்கத்தினால் பயன்பெற்று, திராவிட இயக்கத்திற்காக உழைக்க என்னைப்போன்ற எண்ணற்றோர் இருக்கிறோம். தொழில்நுட்பத்தை முழுமையாக பயன்படுத்தி திராவிட இயக்க கொள்கைகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்த செல்ல, இணைந்து பயணிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று இராஜராஜன் பேசினார்.
ஸ்பெயின் குமார் பழனிச்சாமி
ஸ்பெயின் நாட்டில் வசிக்கும் குமார் பழனிச்சாமி ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப் பாளையத்தைச் சேர்ந்தவர். பள்ளிக் கல்வியைத் தமிழ் வழியில் முடித்து, அண்ணா பல்கலைக் கழகத்தில் முனைவர் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டார்.
முனைவர் பட்டம் பெற்ற பிறகு முது முனைவராக மூன்று ஆண்டு காலம் ஜப்பானில் ஆராய்ச்சி பணியினை தொடர்ந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் அறிவியல் விஞ்ஞானியாக இணைந்து தற்போது ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி துறையின் தலைவராகப் பணிபுரிந்து வருகிறார்.
செயல்முறை மற்றும் தொழிநுட்பக் கருவிகள் வடிவ மைப்பதில் மிகுந்தஆர்வம். அதை தாண்டி நீண்ட தூர பயணங்கள் மேற்கொள்வது, தற்போது வசித்து வரும் ஸ்பெயினின் கலாச்சாரங்களை தெரிந்துகொள்வதில் ஈடுபாடு கொண்டுள்ளார். இவர் “ஸ்பெயின் வளர்ச்சியில் சுற்றுலா துறையின் பங்கு” என்கிற தலைப்பில் பேசும் போது, முற்றிலும் மாறுபட்ட, அறிவார்ந்த இக் கலந்துரையாடலில் பங்குபெற்று தாய்மொழியில் பேசுவது உள்ள படியே மிகவும் மகிழ்ச்சி. எனக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு என்பதை விட நான் எடுத்துக் கொண்ட தலைப்பு என்பதே சரி. நான் பேச உள்ள தலைப்பு “ஸ்பெயின் வளர்ச்சியில் சுற்றுலா துறையின் பங்களிப்பு” அடுத்த 7 அல்லது 8 நிமிடங்கள் இதுகுறித்து நான் சேகரித்துள்ள பல சுவையான தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள உள் ளேன். ஸ்பெயின் நாடானது அய்ரோப்பிய ஒன்றி யத்தின் ஓர் உறுப்பு நாடாகும். மொத்த மக்கள் தொகை 4 கோடியே 73 லட்சத்து 51 ஆயிரத்து 567 இதில் வெளிநாட்டினர் எண்ணிக்கை சுமார் 54 லட்சத்து 7 ஆயிரத்து 822 பேர். (ஜனவரி 2021 புள்ளியியல் விவரப்படி).
இதில் இந்தியர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்து 795 பேர். இதன் மொத்த பரப்பளவு 5,05,990 சதுர கிலோமீட்டர்கள். இந்தியாவில் உள்ளதை போலவே ஸ்பெயினிலும் தன்னாட்சி அதிகாரம் பெற்ற பிராந்திய மாநிலங்களின் எண்ணிக்கை மொத்தம் 17. அலுவல் மொழியாக நான்கு உள்ளன.
அடுத்ததாக ஸ்பெயின் ஏன் அதிகமான சுற்றுலா பயணிகளை கவர்கிறது, அதற்கான முக்கிய காரணிகள் என்ன என்பதை பார்ப்போம்.
1. நட்பான வரவேற்பு, திறந்த மனதுடன் உபசரிப்பு. மேலும் அடிப்படையான ஸ்பானிஷ் வார்த்தைகளை பேசினால் கூடுதலாக வரவேற்பு.
2. பேசாட்டா நாணய முறையில் இருந்து அய்ரோப்பிய கூட்டமைப்பின் யூரோ முறைக்கு மாறிய போதும் அதனின் தாக்கம் விலையேற்றத்தில் அதிகரிக்காமல் பார்த்துக்க கொண்டதால் குறைந்த செலவில் நிறைவான சுற்றுலா அனுபவத்தை பெற முடிகிறது.
3 அடுத்த மிக முக்கிய காரணி ரம்மியமான தட்பவெப்ப நிலை. ஆண்டில் சுமார் 300 நாட்கள் சூரிய வெளிச்சம் கிடைக்கும் நாடு. பிரான்சில் இருந்து மேலே சென்றால் , ஜெர்மனி, சுவிட்சர் லாந்தில் அதிகமான குளிர் காலங்கள் வெயில் காலம் குறைவு. ஆதலால் மற்ற அய்ரோப்பிய நாடுகளில் உள்ள மக்கள் திரளாக கோடை கால சுற்றுலாவிற்கு இங்கு வருகின்றனர்.
4 மிகவும் அழகிய குட்டி தீவுகளை தன்னகத்தே கொண் டுள்ளது. malorrkka menorkka ibiza canary தீவுகள் மிகவும் பிரசித்தி பெற்றவை.
5. மிக அதிகமான நீலக் கொடி அங்கீகாரம் பெற்ற கடற்கரைகளை கொண்ட ( Blue Flag Beaches ) நாடு ஸ்பெயின். உலக அளவில் தொடர்ந்து பல ஆண்டுகளாக முதலிடம். மொத்த கடற்கரைகளின் எண்ணிக்கை 584.
நீலக்கொடி அங்கீகாரம் பெற கடுமையான மற்றும் தொடர்ந்து புதுப்பிக்க படும் விதிகளை பின்பற்ற வேண்டும். அதாவது, சுற்றுச்சூழலை பேணுவது, பயணிகளின் பாதுகாப்பு எளிதில் சுற்றுலா தளங்களை அடையும் வசதி, மேற்பார்வை தகவல் அலுவலகம் சுகாதார அமைப்பு அவசர கால உதவிகள் போன்றவற்றை மறுமதிப்பீடு செய்து கொண்டு இருக்க வேண்டும்.
மத்திய கடலை ஒட்டியுள்ள கடற்கரைகள், வெண்மையான மண், மிக தெளிவான சுகாதாரமான நீர் என உள்ளடக்கியவை. அதே போல் வடக்கு அட்லாண்டிக் கடலை ஒட்டியுள்ள கடற்கரைகள் தங்க நிற மணல் அமைப்பை கொண்டவை.
கடந்த 2019 ஆண்டு மட்டும் வந்த சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை சுமார் 84 லட்சம் பேர். அதில் முதல் இடம் இங்கிலாந்து, இரண்டாவது ஜெர்மனி மூன்றாவதாக பிரான்ஸ். இதன் மூலம் கிடைக்கப் பெற்ற வருமான சுமார் 178 பில்லியன் யூரோக்கள்.
பலதரப்பட்ட கலாச்சாரங்கள், ரோமானிய, கிரேக்க ஆட்சியின் வரலாற்று பொக்கிஷங்கள், சுவையான உணவு வகைகள் மற்றும் விசேடமான பண்டிகைகள் போன்ற காரணிகளாலும் பல்வேறு அய்ரோப்பிய நாடுகளிலிருந்தும், மற்ற நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த வண்ணம் உள்ளது.
நார்வே சேசாத்ரி தனசேகரன்
நார்வே நாட்டில் வசிக்கும் சேசாத்ரி தனசேகரன் கணிப்பொறியியலில் இளங்கலை பட்டம் அண்ணா பல்கலைக் கழகத்திலும், முன்கணிப்பு பகுப்பாய்வில் (Aredictive Analytics) முதுநிலை பட்டம் பெற்ற வெகு சிலரில் ஒருவர். செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி யாளர். நான்காம் தலைமுறை திராவிட பாரம்பரியத்தை சார்ந்தவர். நீதிக்கட்சியின் துவக்கக் காலத்தில் இருந்து பங்காற்றிய குடும்பத்தை சார்ந்தவர்.
தற்போது நார்வேயில் உள்ள ட்ரம்சோ பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக பணிபுரிகிறார். பகுத்தறிவு, சமூகநீதி கருத்துகளை தரவுகளுடன் இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் பணியை சமூக வலைதளங்கள் மூலமாக செய்து வருகிறார்.
இவர் தமிழகத் தேர்தலில் வெளிநாட்டினர் பங்கு எனும் தலைப்பில் பேசும் போது, ஆசிரியர் அவர்களுக்கும் திராவிட நண்பர்கள் அனை வருக்கும் வணக்கம். நீதி கட்சியின் வழி வந்த ஆற்காடு சகோதரர்களின் நான்காம் தலைமுறை இளைஞன் நான்.
எனக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு “தமிழகத் தேர்தலில் வெளிநாட்டினரின் பங்கு “. தலைப்பு சற்றே வித்தியாசமாக தோன்றலாம். ஆனால் இந்த தேர்தலில் குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளாக திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று பரப்புரை செய்யும் தம்பிகளுக்கு பதில் கூறவும் , அவர் களுக்கு உண்மை நிலையை புரிய வைக்கவும் பலர் இணையத்தில் உழைத்து கொண்டு இருக்கின்றனர். அதில் வெளிநாட்டினர் பங்கு இன்றியமையாதது.
சமீபத்தில் நெதர்லாந்து என்னும் சிறிய நாட்டை பாருங்கள். வெறும் மாட்டை மட்டுமே வைத்து கொண்டு எவ்வாறு முன்னேறி இருக் கிறார்கள். அங்கே 25% வரி விதித்தாலும், கல்வி மருத்துவம் இலவசமாக கிடைக்கிறது, இங்கே அப்படி இருக்கிறதா என பொய் பிரச்சாரம் செய்தார்கள். உண்மை நிலை என்னவென்றால் நெதர்லாந்து நாட்டில் பல்வேறு தொழில்கள் நடைபெறுகின்றன. இன்று உலகம் முழுதும் தடுப்பூசி உற்பத்தி செய்யும் பல நிறுவனங்கள் அங்கே தான் இருக்கின்றன.
மேலும் அங்கே வரி விகிதம் உங்களின் வருவாய்க்கு ஏற்ப 11%, 25%, 34%, 50% என வேறுபடுகிறது. எவ்வளவு அழகாக கால் உண்மை, முக்கால் பொய் கலந்து நமக்கு உரைத்து உள்ளனர். இது போன்ற Fact - checking மற்றும் பொய் செய்திகள் பரவுவதை உடைக்க வெளிநாடு வாழ் தமிழர்களின் தேவையும் , இருப்பும் அத்தியா வசியம். என்னுடைய பேராசிரியருடன் ஒரு நாள் பேசி கொண்டு இருக்கும்போது கூறினார் ,” எங்கள் நாட்டில் கடந்த 15 ஆண்டுகளாக பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு மதிய உணவு தருகிறோம் “ என்றார். நான் நம்முடைய பிட்டி தியாகராயரின் வரலாறை சொல்லி இந்த திட்டத்தை 1920இல் இருந்து தமிழகம் பின்பற்றுகிறது என கூற அவர் ஆச்சரியம் அடைந்தார்.
100 ஆண்டுகளுக்கு முன்னால் இப்படி தொலைநோக்கு சிந்தனை உடன் சிந்தித்து செயலாற்றியவர்கள் தான் நீதி கட்சி வழி வந்த திராவிடர் கழகம். இன்றைய தலைமுறைக்கு இதை எடுத்து செல்ல நாம் கடந்த 100 ஆண்டுகளின் சாதனையை தொகுத்து ஒரு ஓபன் சோர்ஸ் டிஜிட்டல் நூலகம் அமைக்க வேண்டும் என்று அய்யாவிடம் வேண்டுகோள் வைக்கிறேன்.
அமெரிக்கா ரோகிணி
அமெரிக்காவில் வசிக் கும் ரோகிணி, தமிழகத் திலும், சவுதியில் பல் மருத் துவராக பணிபுரிந்தவர், 2012 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா வில் வசிக்கும் இவர்- அமெ ரிக்காவில் உள்ள மாகாணத் தின் Certified Family Partner (CFP) Special Education-Domestic Violence Victims Advocacy, NRI Crisis Intervention போன்ற சமூகபணிகளில் அங்கு உள்ள குழுக் களுடன் இணைந்து செயல் பட்டு வருகிறார்.
திராவிட இயக்க கருத் துக்களைத் தொடர்ச்சியாக எழுதி வருபவர்!
இவர் அமெரிக்கா தொடக்கக் கல்வி சிறப்புக் குழந்தைகளைக் கண்ட றிதல் எனும் தலைப்பில் பேசும் பொழுது, குழந்தை பிறந்து 0-3 வயது வரை மாநில அரசின் பொறுப்பு, சிறப்பு குழந்தை களை கண்டு அறிந்து தேவையான சிகிச்சை அல்லது தெரபி வழங்குவது. 3-21 வயது வரை மாவட்ட பள்ளி கல்வியின் பொறுப்பு. அந்த அந்த வார்டு குழந்தைகள் அந்த வார்டு பள்ளியில் படிப்பது..
வீட்டுக்கு அருகிலே கல்வியை கொண்டு செல் லும் முறை..அந்த பள்ளி செயல்பாடு பொறுத்து அந்த பகுதி வீடு மதிப்பு கூட கூடும் குறையும்.. கரோனா நேரத்தில் அனைத்து குழந்தைக்கு தேவையான உணவை வீட்டுக்கு அருகிலே தரு வது.. இலவசமாக.
இது அனைத்தையும் நமது பால் வாடி போன்ற அமைப்பின் மூலமும் ஆசிரிய பயிற்சி பெறும் மாணவர் வழியும் நிறை வேற்ற வேண்டும்.. மருத் துவ துறை போல 3 மாதம் ஆறு மாதம் அந்த அந்த பகுதி பள்ளி, பால்வாடியில் பணியாற்றி பட்டம் பெறுதல் இருவருக்கும் உதவும்
பள்ளி, கல்லூரி மாண வர்கள் அரசு மருத்துவ மனை, அரசு பள்ளிகளில் தன்னார்வலராக பணியாற்றி கம்யூனிட்டி நேரம் பெறுவது பாட திட்டத்தில் கொண்டு வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
ஓமன் செந்தில்பாலன்
ஓமன் நாட்டில் வசிக்கும் செந்தில் பாலன், மதுரை மருத்துவக் கல்லூரியில் இள நிலையும், சென்னை மருத் துவக் கல்லூரியில் முட நீக்கியல் முதுநிலை பட்டயக் கல்வியும் பயின்றவர். தற் போது ஓமன் நாட்டில் மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறார்.
தொடர்ந்து மருத்துவம் தொடர்பான கட்டுரைகளை எழுதி வருகிறார். இவரது கட்டுரைகள் தமிழின் முன்னணி பத்திரிகைகளில் வெளியாகிறது. கரோனா பெருந்தொற்றின் போது இவர் எழுதிய பல கட்டுரை களில் சமூக வலை தளங் களிலும், பத்திரிகைகளிலும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன.
அமேசான் கிண்டில் நடத்திய பென் டு பப்ளிஷ் போட்டியில் வெற்றி பெற்று, சிறந்த புனைவாசிரிய ராகவும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளார். இவர் எழுதிய துப்பறிவாளர் கார்த்திக் ஆல்டோ தொடர் நாவல்களுக்கென தமிழ் புனைவுலகில் தனி வாசகர் பரப்பு உள்ளது.
பகுத்தறிவு, சமூகநீதிக் கருத்துகளை தன் கதை களிலும், சமூக வலைதளங் களிலும் தொடர்ந்து பேசி வரும் இவர், பெரியாரை தனது வழிகாட்டியாக ஏற்றுள்ளார்.
இவர் “கிண்டில் அறி முகம் நமது பங்களிப்புகள்” எனும் தலைப்பில் பேசும் போது, இந்த இனிமையான மாலைப் பொழுதில் எங்களுடன் இணைந்துள்ள மானமிகு ஆசிரியர் அய்யா அவர்களுக்கும், இந்த அருமையான நிகழ்வினை ஒருங்கிணைப்பு செய்துள்ள ஒருங்கிணைப் பாளர்களுக்கும், பங்கேற்றுள்ள நண்பர்களுக்கும் மாலை வணக்கம். பேச்சின் மூலமே வளர்ந்த இயக்கம், எழுத்தின் மூலமே வளர்ந்த இயக்கம் அப்படின்னு சொல்றோம்.
ஆதி மனிதனின் முதலில் குகையின் சுவர்களில் சித்திர எழுத்துகளால் எழுதினான். பின்னர் கல்வெட்டுகள், பனை ஓலைகளில் எழுதி னான். காகிதமும் அச்சும் கண்டுபிடிக்கப்பட்ட பின் அச்சடிக்கப்பட்ட காகிதப் புத்தகங்கள் வந்தன. இதன் அடுத்தகட்டமாக இப்போது மின் புத்தகங்கள், மென் புத்தகங்கள்.
ஓலைச்சுவடியில் படித்தவர்களுக்கு எப்படி காகிதப் புத்தகம் வித்தியாசமாக இருந்ததோ அதேபோல தற்போது கிண்டில் உள்ளிட்ட மென் புத்தகங்கள் வித்தியாசமாக உள்ளன.
அரசர்கள் மட்டும் எழுதக்கூடிய கல்வெட்டு களில் இருந்து அரசவைப் புலவர்கள் எழுதக்கூடிய ஓலைச்சுவடி வந்தது. அதன் பின் பதிப்பகம் இருந்தால் அச்சுப்புத்தகம் பதிப்பிக்கலாம் எனும் நிலை. இன்று செல்பேசி இருந்தாலே போதும். உங்கள் புத்தகத்தை மென் புத்தகமாக மாற்றி எந்த வித முதலீடும் இன்றி வெளியிடலாம். உலகம் முழுக்க இருக்கும் அனைவரும் அதை வெளியிட்ட அடுத்த நொடியே யார் வேண்டுமானாலும் தரவிறக்கி படிக்கலாம்.
இப்படி எழுதுவதும் பதிப்பிப்பதும் எளிதான தால் நிறைய பேர் எழுத வருவாங்க. நல்ல கருத்துகள் நல்ல புத்தகங்கள் அந்த இடத்தை நிரப்பாவிட்டால் மூடநம்பிக்கை பிற்போக்கு கருத்துகள் உடைய புத்தகங்கள் வரும். இதை நாம் சமூகவலைதளங்களிலும் யூட்யூப் உள்ளிட்ட வற்றிலும் இதை நாம் கண்கூடாகக் கான்கிறோம்.
இதனால் முற்போக்குச் சிந்தனை உடையவர்கள் கிண்டிலில் பதிப்பிப்பது மிகவும் அவசியமாகிறது. சமீபத்தில் ஏற்பட்ட கிண்டில் எழுச்சி- திராவிட இயக்கத்தின் இதுவரை 90 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
திராவிடச் சிந்தனை பதிப்பகங்கள் அதிகம் இல்லாத இந்தச் சூழலில் நம் போன்றோருக்கு மிகப்பெரிய நல்வாய்ப்பு. எந்த சமரசமும் இன்றி நாம் நினைத்த முற்போக்கு கருத்துகளை புத்தகத்தில் கொண்டுவர முடியும். முடிகிறது. இங்குள்ள பல தோழர்கள் அப்படி எழுதியுள்ளனர்
எப்படி மின்விளக்கு எனும் ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு ஆயிரக்கணக்கான பேய்களை விரட்டியதோ அப்படி ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்பும் மூடநம்பிக்கைகளை விரட்டி பகுத்தறிவை வளர்க்கும். அந்த விதமாக அறிவியலின் அடுத்த கண்டுபிடிப்பான கிண்டில் மூலம் மனித குல வளர்ச்சிக்கு நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
சமூக வலைதளங்களில் எழுதுவது கால ஓட்டத்தில் காணாமல் போகலாம். அதேநேரம் கிண்டில் போன்று பதிப்பிக்கப்படும் போது அவை காலம் கடந்து நிற்கின்றன. உதாரணமாக 3ஆம் வகுப்பு, 5ஆம் வகுப்பு பொதுத்தேர்வு. மணியம்மை சிறப்பிதழ் மூலம் பலரின் அவதூறை முறியடிக்க முடிந்தது.
எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் புதிய நூல்களை இயற்று வோம். பகுத்தறிவுக் கருத்துகளை கொண்டு செல்வோம்.
அதேமாதிரி தோழர்கள் கிண்டில் பயன்படுத்த வேண்டும். பெரியார் புதிய தொழில்நுட்பங்களை மிகவும் விரும்புவார் என கேள்விப்பட்டுள்ளேன். அதைப்போல நம் தோழர்களும் படிப்பதற்கு எளிதான கிண்டிலைப் பயன் படுத்த வேண்டும். மொபைல் செயலியிலும் படிக்கலாம். இதன் மூலம் எழுதுவோருக்கும் ஊக்குவிப்பாக இருக்கும். அதேபோல பரிசுகளாக கிண்டில் புத்தகங்களையும் பரிசளிக்கலாம்.
இது தொடர்பாக நிறைய பயிற்சிகளையும், கையேடுகளையும் திராவிட எழுத்தாளர் குழுமம் என்ற அமைப்பின் சார்பில் நடத்தியுள்ளோம். இனிமேலும் செய்வோம். நமது தோழர் களுக்கும் பதிப்பிக்க உதவிகள் தேவைப்பட்டால் பயிற்சிப் பட்டறைகளை நடத்தத் தயாராக உள்ளோம் எனக் கூறினார்.
பிரிட்டன் சுதாகர் பிச்சைமுத்து
6) பிரிட்டனில் வசிக்கும் சுதாகர் பிச்சைமுத்து இயற்பியல் துறையில் முனைவர் ஆராய்ச்சி பட்டம் பெற்றவர். தென் கொரியா, ஜப்பான், வடக்கு அயர்லாந்தில் உள்ள பல்கலைக் கழகங்களில் முது முனைவர் ஆராய்ச்சியாளராக பணியாற்றியவர்.
ஜப்பான் நாட்டின் ஆய்வு விருதையும், அய்ரோப்பிய ஒன்றியம் மற்றும் வேல்சு அரசின் கூட்டு விருதான “சர் கம்ரே ரைசிங் ஸ்டார் ( - )” விருதையும் வென்றவர்.
தற்போது பிரிட்டனில் உள்ள சுவான்சி பல்கலைக் கழகத்தில் நானோ டெக்னாலஜி குறித்த ஆய்வுக் குழுவின் தலைவராகவும், மூத்த ஆராய்ச்சியாளராகவும் பணியாற்றுகிறார். ஸ்காட்லாந்தில் உள்ள கெரியட் வாட் பல்கலையில் இணைப் பேராசிரியராக விரைவில் புதிய பணியை மேற்கொள்ள உள்ளார்.
இதுவரை 100 க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகளை பன்னாட்டு ஆய்விதழில் வெளியிட்டுள்ளார். தமிழில் அறிவியல், உயர்கல்வி ஆராய்ச்சி, பயணக் கட்டுரைகள் மற்றும் திராவிட ஆட்சிகளின் நன்மைகள் குறித்து சமூக வலைதளங்களில் எழுதி வருபவர். சமீபத்தில் இவர் எழுதிய கிண்டில் நூலான “அய்க்கிய வளநாடுகளின் வளம் குன்றா குறிக்கோள்கள் பார்வையில் திமுகவின் தேர்தல் அறிக்கை 2021” பலரது கவனத்தைப் பெற்றது. இவர் பிரித்தானியாவில் உயர்கல்விக் கட்டமைப்பில் சமூக நீதி எனும் தலைப்பில் பேசும்போது,
உலகின் வளர்ந்த முன்னோடி நாடுகளில் ஒன்று பிரிட்டன் எனப்படும் அய்க்கிய ராஜ்ஜியம். ஏறத்தாழ 130 பல்கலைக் கழகங்கள் உள்ளிட்ட 453 உயர் கல்வி நிறுவனங்கள் (கல்லூரிகள், உறுப்பு நிறுவன தகுதி பெற்றவை). பிரிட்டனில் ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 57,000 மாணவர்கள் உயர்கல்வி நிறுவ னங்களில் முதலாம் ஆண்டு பட்டப் படிப்பிற்கு சேர்கிறார்கள். பல லட்சம் மாணவர்கள் பயிலும் மாணவர்களின் கல்விக் கட்டணமே பிரிட்டனின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிப்பவை. இத்தகைய உயர்கல்வி நிறுவன கட்டமைப்பில் பெண்கள், கறுப்பின மற்றும் சிறுபான்மை இனக்குழுக்களுக்கான வேலை வாய்ப்பு பிரதிநிதித்துவம், மாணவர்களுக்கான கல்வி கட்டண சலுகைகள் இந்தியாவில் உள்ள இட ஒதுக்கீடு உரிமை போல் ஏதேனும் வாய்ப்புகள் உள்ளதா என்று முனைவர் சுதாகர் பிச்சைமுத்து ஒப்பிட்டு பேசினார்.
தமிழ்நாட்டை ஒப்பிடும் போது பிரிட்டனில் பேராசிரியர் பணியிடங்களில் 20 சதவிகிதத்திற்கும் குறைவாகவே பெண்கள் பணி வாய்ப்பினை பெறுகின்றனர். இந்த இடத்தில் திராவிட அரசுகள் முன்னெடுத்த பெண் கல்வி, உயர் கல்வி நிறுவனங்களில் பெண் வேலை வாய்ப்பு குறித்து பிரிட்டன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். மேலும் ஸ்காட்லாந்து நாடு தனது நிலப்பரப்பில் வசிக்கும் மாணவர்களுக்கு உயர் கல்வி நிறுவனங்களில் கல்விக் கட்டணத்தை இலவசமாக்கி இருக்கிறது. அதே நேரம் உலக தர வரிசைப் பட்டியலில் ஸ்காட்லாந்து பல்கலைக் கழகங்கள் முதன்மை இடத்தை பிடித்துள்ளது. மேலும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கான தேவையான கல்வி கட்டண சலுகைகளையும் பிரிட்டன் பல்கலைக் கழகங்கள் தருகிறது. இவை யாவும் கல்வியில் இட ஒதுக்கீட்டை போலவே சமூகப் படி நிலைகளில் சமூக மற்றும் பொருளாதாரப் படி நிலையில் பின் தங்கி இருப்பவர்களுக்கு கூடுதல் சிறப்பு திட்டங்கள் தருவது நீடித்த, நிலையான சமூக வளர்ச்சிக்கு முக்கிய காரணியாகும். பிரிட்டனை ஒப்பிடும் போது உயர்கல்விக்கான வாய்ப்புகள் பெண்கள் மற்றும் சமூக, கல்வி நிலையில் பின் தங்கி இருப்பவர்களுக்கு அரசே நேரடியாக பல வாய்ப்புகள் தருவதை பாராட்ட வேண்டும். அதே நேரம் பிரிட்டன் எவ்வாறு பெண்களை மய்யப்படுத்தி செயலாற்றுகிறது என்பதையும் நாம் கற்க வேண்டும்.
இட ஒதுக்கீடு சார்ந்த சமூக நீதி உரிமைகளை தவறு என நச்சுப் பரப்புரைகள் செய்பவர்களுக்கு உலக நாடுகள் எவ்வாறு அந்தந்த நாடுகளில் இதே போன்ற திட்டங்கள் உள்ளது என ஆவணப்படுத்த வேண்டும், மேலும் திராவிட நெறி கொள்கைகளை மேலும் வளர்க்க ஒருங்கிணைந்த அறிஞர் குழு ஒன்றும் அமைக்கவும் வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக