மருத்துவ படிப்புகளுக்கு ‘நீட்' தேர்வு கூடாது


சென்னை, மே 24 மருத் துவ படிப்புகளுக்கு 'நீட்' தேர்வு கூடாது, பழைய நடைமுறைப் படி மாணவர் சேர்க் கையை நடத்த அனு மதிக்க வேண்டும் என்று மத்திய அமைச் சர்கள் நடத்திய ஆலோசனை கூட்டத் தில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன் முடி வலியுறுத்தினார்.

ஜே.இ.இ. உள்பட மத்திய அரசு சார்ந்த படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகள் கரோனா நோய்த்தொற்று காரணமாக நடத்த முடியாமல் ஒத்திவைக்கப்பட்டு இருக்கின்றன. இந்த நிலையில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கரோனா நோய்த் தொற்று நிலையை கேட்பதற்காகவும், நுழைவுத்தேர்வு நடத்துவது தொடர்பாக ஆலோசனையை கேட்பதற்காகாவும், மத்திய அரசு உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை நேற்று (23.5.2021) நடத்தியது.

காணொலி காட்சி வழியாக நடந்த இந்த கூட்டத்துக்கு மத்திய ராணுவத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமை தாங்கினார். இதில் மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர்  ஸ்மிருதி இரானி மற்றும் மத்திய கல்வி வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கல்வித்துறை அமைச்சர்களும், செயலாளர் களும் கலந்து கொண்டனர்.

அந்த வகையில் தமிழகத்தின் சார்பில் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத் தில் மத்திய அமைச்சர்கள், நோய்த் தொற்றுக்கு மத்தியில் மத்திய அரசின் நுழைவுத்தேர்வுகளை நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தி னார்கள்.அப்போது தமிழக அரசு தரப்பில் கலந்து கொண்ட அமைச்சர் க.பொன்முடி சில கருத்து களை முன்வைத்தார். குறிப்பாக, மருத்துவ படிப்புகளுக்கு நடத்தப்படும் நுழைவுத்தேர்வான நீட் தேர்வை நடத்தக்கூடாது என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டை அவர் வலியுறுத்தினார். மேலும், நீட் தேர்வுக்கு பதிலாக, முன்பு மாநில அரசு பின்பற்றி வந்த நடைமுறையின்படியே மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கையை நடத்திக்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்திய கருத்துகளையும் முன்வைத்ததாக தகவல்கள் கூறுகின்றன.

உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி பேட்டி

இதையடுத்து கூட்டம் முடிந்து வெளியே வந்த உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தேசிய கல்வி கொள்கையை நாங்கள் ஏற்கெ னவே ஏற்க முடியாது என்று தெரிவித்துவிட்டோம். மத்திய அரசின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களில் உள்ள பொறியியல், விவசாய படிப்புகளில் சேரு வதற்கு நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல், 'நீட்' தேர்வும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் மருத்துவ கல்லூரிகளில் மட்டும் நடத்த வேண்டும். மாநிலத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் ஏற்கெனவே நாங்கள் 'நீட்' தேர்வுக்கு முன்பு பின்பற்றிய நடைமுறையின்படி, அனுமதிக்க வேண்டும் என்று முதலமைச்சர் கூறிய கோரிக்கையை வலியுறுத்தினோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து செய்தியாளர்கள், பொறியியல் படிப்புக்கும் நுழைவுத்தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறதே? என்று கேள்வியெ ழுப்பினர்.

அதற்கு அவர், அவர்கள் அப்படி பொறியியல் படிப்புக்கும் நுழைவுத்தேர்வு நடத்தினால் எதிர்ப் போம் என்று பதில் அளித்தார்.