வெள்ளி, 27 செப்டம்பர், 2019

வாகை சூடிய வாசிங்டன்



கலி. பூங்குன்றன்



பன்னாட்டு மனிதநேய சுயமரியாதை மாநாட்டின் 2ஆம் நாளில் கருத்துக்களம் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமெரிக்கத் தமிழர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நினைவுப் பரிசுகளை வழங்கிச் சிறப்பித்தார். இடமிருந்து: அமெரிக்கத் தமிழர்கள் சங்கரபாண்டி,செந்தில் முருகன், நாஞ்சில் பீட்டர், முனைவர் கண்ணபிரான் ரவிசங்கர், கருத்துக் களத்தை ஒருங்கிணைத்த ஊடகவியலாளர் ப.திருமாவேலன், குழந்தைவேல் ராமசாமி, மேரிலாந்து மணிக்குமார், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, துரைக்கண்ணன், சுந்தரக் கண்ணன், பொறியாளர் ம.வீ.கனிமொழி, அகத்தியன் பெனடிக்ட், சரோஜா இளங்கோவன், சிகாகோ செல்வி அகிலா, பன்னீர் செல்வம் ராஜமாணிக்கம், வேல்முருகன் பெரியசாமி, சிகாகோ சரவணக்குமார் ஆகியோர். (22.9.2019)
ஜெர்மன் - கொலோன் பல்கலைக் கழகத்தில் பெரியார் சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு  மாநாடு 2017 ஜூலை 27 முதல் 29 முடிய மூன்று நாள்கள் தந்தை பெரியார்தம் கருத்துக் கருவூலமாய் நடைபெற்றது.
உலக அளவில் இத்தகைய மாநாட்டைத் தொடங்கிக் கொடுத்த பெருமை இம்மாநாட்டுக்குண்டு.
அந்த  மாநாட்டில் முக்கியமான தீர்மானம் ஒன்று  நிறைவேற்றப் பட்டது.
தந்தை பெரியார் சிந்தனைகளான சுயமரியாதை  - மனிதநேய வாழ்க்கை முறை பரந்து பட்ட உலகளாவிய அளவில் உணரப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில், சுயமரியாதையுடன் எல்லா வகையிலும் சமத்துவம் மிக்க வாழ்க்கை முறையினை வலியுறுத்தும் தந்தைபெரியாரின் மானுட நேயத்துடன் கூடிய சுயமரியாதைப் பகுத்தறிவுத் தத்துவத்தை உலகமயமாக்குவது எனப் பெரியார் சுயமரியாதைப் பன்னாட்டு மாநாடு தீர்மானிக் கிறது என்ற வரலாற்றுச் சீலமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்த மாநாட்டின் சிறப்பு என்பது ஜெர்மனியின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கல்லூரிகளில், பல்கலைக் கழகங்களில் படித்து வந்த இந்தியத் துணைக் கண்டத்து இருபால் மாணவர்களும் ஆர்வத்துடன் பங்கேற்று மகிழ்ந்தனர்.
அந்த மாநாட்டில் மற்றொரு முக்கிய முடிவு - ஒவ்வொரு இரண்டாண்டுகளுக்கும் ஒரு முறை இத்தகு மாநாட்டினை வெவ்வேறு நாடுகளில் நடத்துவது என்று அறிவிக்கப்பட்டது.
அதனுடைய நீட்சியாகத்தான் தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் திங்களில் 21, 22 சனி ஞாயிறுகளில் வாசிங்டன் மேரிலாண்டில் விஷீஸீtரீஷீனீமீக்ஷீஹ் கல்லூரியின் வளாகத்தில் கம்பீரமாக நடைபெற்றது.
தமிழ்நாட்டிலிருந்து தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில் பேராளர்கள் பங்கு கொண்டனர்.

பிரான்சு உட்பட மலேசியா முதலிய நாடுகளிலிருந்தும் கலந்து கொண்டனர்.


'மகிழ்ச்சியான வாழ்வு' என்ற தலைப்பில் உரையாற்றிய அமெரிக்க மனிதநேயர் சங்கத்தின் மேனாள் செயல் இயக்குநரும், 'தி ஹியூமனிஸ்ட்' ஆங்கில ஏட்டின் மேனாள் ஆசிரியருமான பிரட் எட்வர்ட்ஸ் அவர்களுக்குத் தமிழர் தலைவர் நினைவுப் பரிசாக புத்தகங்களை வழங்கினார்.  (22.9.2019)

தமிழ்நாட்டிலிருந்து  பங்கு கொண்டவர்களுள் மேனாள் துணைவேந்தர்கள், கல்வியாளர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் கருஞ்சட்டைத் தோழர்கள் என்று பல்வகைப்பட்ட வர்களும் இடம் பெற்றனர். இதில் மகளிர் பன்னிருவர் ஆவர்.


"மனித நேயர்களின் பொறுப்புகள்' என்ற தலைப்பில் உரையாற்றிய அமெரிக்க மதச்சார்பற்ற கூட்டணி அமைப்பின் பொறுப்பாளர் டெபி ஆலன் அவர்களுக்கு தமிழர் தலைவர் அவர்கள் நினைவுப் பரிசினை வழங்கினார். (21.9.2019

இம்மாநாடு அமெரிக்காவின் மனிதநேயர் சங்கமும்(American Humanist Association) பெரியார் பன்னாட்டு அமைப்பும்  (Periyar International) இணைந்து இந்த ஈடு இணை யற்ற எழிலார்ந்த மாநாட்டை நடத்தின.
அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மனிதநேயர்கள், மனித உரிமையாளர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், தமிழ்ச் சங்கத்தினர்கள்,  அறிவியலாளர்கள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் என்று பலதரப்பு அறிஞர் பெரு மக்களும் அறிவியல் - பகுத்தறிவு  - நாத்திகக் கருத்துகளை காரிருள் கிழித்த கதிர் ஒளியாகப் பாய்ச்சினர்.


அமெரிக்கத் தமிழர்கள் மத்தியில் தொடர்ந்து சிறப்பாகப் பணியாற்றிவரும் திரு.குழந்தைவேல் ராமசாமி, மருத்துவர் சரோஜா இளங்கோவன், முனைவர் ஜெயந்தி சங்கரபாண்டி ஆகியோருக்கு சேவை விருதுகளை வழங்கினார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். (22.9.2019)

பெண்ணியம், மனிதநேயம் என்ற திசையில் முற்போக்கு முத்துக்களை வாரி இறைத்தனர்.
பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்டத்தினரும் தங்கள் பங்குக்குக் கருத்து மாரி  பொழிந்தனர்.
குழந்தைகள், இளைஞர்கள் இல்லாமலா எதிர்காலம்? எனவே அவர்களுக்கான இடமும் அளிக்கப்பட்டிருந்தது.
ஜாதியை எதிர்த்து சண்டமாருதம் நடந்தது. ஜாதிக்கென்று தனிக் குருதிப் பிரிவு உண்டா என்ற வினாக் கணை தொடுக்கவும் பட்டது.
பசியை எதிர்த்துப் போர் என்ற மனிதநேயக் குரலும் ஓங்கி ஒலித்தது.
திருக்குறளும், மனிதநேயமும் என்ற தலைப்பிலும் டாக்டர் ஆர். பிரபாகரனின் உரை அவையைக் கவர்ந்து ஈர்த்தது.
"இயற்கைக்கு மேலான எந்த சக்தியும் உலகில் கிடையவே கிடையாது. ஏதாவது மானுட வளர்ச்சிக்கு நல்லது நடக்க வேண்டு மானால் அது மனிதர்களான நம்மால் தான் முடியும்" என்றார் டெபி ஆலன்.
சமூகநீதிக்கான வீரமணி விருது
பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பில் சமூகநீதிக்காக உழைக்கும்பெரு மக்களுக்கு சமூக நீதிக்கான வீரமணி விருது ஆண்டுதோறும் அளிக்கப்பட்டு வருகிறது. விருதுடன் ஒரு இலட்ச ரூபாயும் வழங்கிச் சிறப் பிக்கப்படுகிறது.
மேனாள் பிரதமர் வி.பி.சிங், மேனாள் முதல் அமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞர், மேனாள் உ.பி. முதல் அமைச்சர் மாயாவதி,  மேனாள் அ.இ. காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரி, மேனாள் மத்திய அமைச்சர் சந்திரஜித் யாதவ், பீகார் முதல் அமைச்சர் நிதீஷ்குமார், கருநாடக மாநிலத்தைச் சேர்ந்த சட்ட நிபுணர் மேனாள் அட்வகேட் ஜெனரல் இரவிவர்மக் குமார், மக்கள் தலைவர் ஜி.கே. மூப்பனார், அகில இந்திய  அளவில் பிற்படுத்தப்பட்டோரை ஒருங்கிணைத்து சமூக நீதித் தளத்தில் தடம் பதித்த தோழர் கோ. கருணாநிதி  முதலியோருக்கு சமூகநீதிக்கான வீரமணி விருது அளிக்கப்பட்டு சிறப்புச் செய்யப்பட்டது.
அந்த வரிசையில் ஜெர்மனியில் கொலோன் பல்கலைக் கழகத்தில் பெரியார் சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநாட்டை மகத்தான முறையில் நடத்துவதற்கு முக்கிய மூலாதாரமாக இருந்தவரும் ஜெர்மன்  மொழியில் தந்தை பெரியார்பற்றி நூல் எழுதியவரும் தமிழ்நாட்டில் மிகவும் ஒடுக்கப்பட்ட மக்களான இருளர் மக்கள் பற்றி  கள ஆய்வு நடத்தியவருமான பேராசிரியர் முனைவர் உல்ரிக் நிக்லஸ் (Ulrike Niklas) அவர்களுக்கு இவ்வாண்டுக்கான (2019) சமூகநீதிக்கான வீரமணி விருதும், ரூபாய் ஒரு லட்சமும் - பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் பேராசிரியர் முனைவர் இலக்குவன் தமிழ் அவர்களின் பாராட்டு உரையைத் தொடர்ந்து வி. சீனிவாசன் அவர்களால் பலத்த கரஒலிக்கு இடையே வழங்கப்பட்டது.
ஏற்புரை வழங்கிய பேராசிரியை உல்ரிக்  நிக்லஸ் அவர்கள் நெகிழ்ச்சியுடன் சிறிது நேரம் உரையாற்றி, அதற்கு மேல் பேச இயலாமல்  நா தழுதழுக்க தன் உரையை முடித்துக் கொண்டார்.
முதல் நாள் நிகழ்ச்சியின் முத்தாய்ப்பு இரவு 7 மணிக்கு தொடங்கி  நடைபெற்ற கலை விருந்து என்ற கலக்கலாகும்.


ஜெர்மனி நாட்டின் பேராசிரியர் முனைவர் உல்ரிக் நிக்லஸ் அவர்களுக்கு பெரியார் பன்னாட்டமைப்பின்

2019-ஆம் ஆண்டுக்கான "சமூகநீதிக்கான வீரமணி விருது' வழங்கப்பட்டது. முனைவர் வி.சீனிவாசன் விருதினை வழங்கினார். பரிசுத் தொகை ரூ.1 லட்சத்தினை பெரியார் பன்னாட்டமைப்பின் இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவன் வழங்கினார். உடன் விருதுத் தெரிவுக் குழுத் தலைவர் பேராசிரியர் முனைவர் இலக்குவன் தமிழ், தமிழர் தலைவர் ஆசிரியர் ஆகியோர் உள்ளனர். (21.9.2019)

பறை இசை தூள் கிளப்பியது. அமெரிக்க வாழ் தமிழர்கள் தமிழ் மண்ணின் மணத்தை மறக்காமல் மூடநம்பிக்கையைக் கிழிக்க, ஜாதியின்  வேரைச் சுட்டெரிக்க, பெண்ணடிமைத்தனத்தின்  மூலப் பலத்தை முறியடிக்க, மண்ணும், விண்ணும் அதிர  பறை முழக்கம் கேட்டது - இப்பொழுதுகூட கேட்டவர் களின் காதுகளில் ஒலி இரைந்து கொண்டே இருக்கிறது.
கரகாட்டம் என்ன, பொய்க்கால் குதிரை என்ன, ஒயிலாட்டம் என்ன, பரத நாட்டியம் என்ன, பாட்டிசை என்ன அப்பப்பா.. சொல்லும் தரமன்று! காலை முதல் கருத்து மழையில் குளித்த மக்களுக்கு நரம்புகளை முறுக்கும் கலை நிகழ்ச்சிகள் இதமாகவே இருந்தன.
பெரியார் பன்னாட்டு அமைப்பின் பொறுப்பாளர்கள் குறிப்பாக டாக்டர் சோம. இளங்கோவன் உள்ளிட்டோர் அடுக்கடுக்கான நிகழ்ச்சிகளை நேரத்தின் மேலாண் மையைக் கட்டுக்குள் கொண்டு வந்து நடத்திய சாதனை - நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு ஒரு கையேடாக இருந்தது என்றே சொல்ல வேண்டும்.
(நாளையும் பார்ப்போம்)
விடுதலை நாளேடு, 24. 9 .19
வாழ்நாள் சாதனையாளர் என்ற விருது தமிழர் தலைவருக்கு வழங்கப்பட்ட அந்தத் தருணம்!
கலி.பூங்குன்றன்
இயக்க வரலாற்றில் பல நாள்கள் - பல நிகழ்வுகள் முக்கியத்துவம் பெற்றன. அந்த நாள்கள் - நிகழ்வுகளின் பட்டியலில் செப்டம்பர் 22 (2019) முக்கியமான இடத்தை வகிக்கிறது என்பதில் அய்யமில்லை.
அந்த நாளில் தான் அமெரிக்காவின் தலைநகரமான வாஷிங்டன் - மேரிலாண்டில் பெரியார் பன்னாட்டு அமைப்பு - அமெரிக்கன் மனிதநேய சங்கமும் சேர்ந்து மனித நேயம் மற்றும் சுயமரியாதை தத்துவ மாநாடு நடத்தியது.
அமெரிக்கன் மனித நேய சங்கம்(American Humanist Association) திராவிடர் கழகத் தலைவர் - 'விடுதலை‘ ஆசிரியர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்கு 2019ஆம் ஆண்டுக்கான "வாழ்நாள் சாதனையாளர் விருது" (Humanist Lifetime Achievement Award) அளித்து மகிழ்ந்தது. இந்த விருதினை அமெரிக்கன் மனித நேய சங்கத்தின் செயல் இயக்குநர் ராய் ஸ்பெக் ஹார்ட் (Roy Speckhardt) வழங்கியபோது அரங்கமே குலுங்கிய வண்ணம் கரஒலி எழுந்தது.
தந்தை பெரியார் வாழ்க, ஆசிரியர் வாழ்க என ஒலி முழக்கம் எங்கும் - எங்கும்!
இந்தத் தருணம் மிக முக்கியமானது - அங்கீகாரத்தன்மை கொண்டது என்பதில் அய்யமில்லை.
இதற்கு முன் பால் கர்ட்ஸ்(Paul Kurtz) மற்றும் கார்ல் சாகன் (Carl Sagan) ஆகியோர்க்கு இத்தகைய விருது அளிக்கப்பட்டது.
தந்தை பெரியார் அவர்களுக்குப் பிறகு அவர் யாத்த மனித நேய - சுயமரியாதைத் தத்துவத் தொண் டினை வியப்புறு வகையில் ஆற்றிவரும் மகத்தான தலைவருக்கு மிகப் பொருத்தமான வகையில் அமெரிக்கன் மனித நேய அமைப்பு விருது வழங்கி பெருமைப்படுத்தியது, பெருமையும் பெற்றது.
திராவிடர் கழகத்தின் பவள விழா (1944-2019) சேலத்தில் வெகு நேர்த்தியுடன் - மிகச் சிறப்பான பேரணியுடன் நடைபெற்றது (27.8.2019).
இந்த 75 ஆண்டில் 29 ஆண்டுகள் தந்தை பெரியார் தலைமையேற்று நடத்தினார். மூன்று ஆண்டுகள் அன்னை மணியம்மையார் தலைமையேற்று நடத்தித் தந்தார்கள். மீதி 43 ஆண்டுகள் மானமிகு ஆசிரியர் தலைமையேற்று தலைநிமிர்ந்து நடக்கும் வகையில் நடத்தி வருகிறார்.
பெரியார் அறக்கட்டளைக்கு அளிக்கப்பட்ட அத் தனை நெருக்கடிகளுக்கும் முகம் கொடுத்து சட்ட ரீதி யாகவும், தீர்ப்புகள் வழியாகவும் நிலை நிறுத்தியுள்ளார்.
தந்தை பெரியார் தம் பகுத்தறிவு, சமூகநீதி, சமத்துவத் தொண்டின் ஒளிக் கீற்றுகளை நாடு தழுவிய அளவில் கொண்டு செல்ல இயக்க ஏடாம் “விடுதலை"யினை நவீன யுக்திகளைப் புகுத்தி பலவண்ணத்தில் - நான்கு பக்க ஏட்டினை - எட்டுப் பக்கங்களாகப் பொலிவுறச் செய்தார்.
சென்னையில் மட்டுமே இருந்த 'விடுதலை' பதிப்பினை விரிவாக்கி திருச்சியிலும் ஒரு பதிப்பை ஏற்படுத்தி, பிரச்சாரத் தடத்தில் புதிய மைல் கல்லினைப் பொறித்தார்.
தமிழ்நாட்டில் முதன்முதலாக இணைய தளம் வழியாக உலகெங்கும் சென்ற ஏடு 'விடுதலை' என்ற சாதனை ஒளிறும் பெருமையினை ஈட்டித் தந்தார்.
உயர் எண்ணங்கள் மலரும் சோலையாம் தந்தை பெரியார் தம் தத்துவங்களை, மனிதநேயச் சிந்தனைக ளைக் கொண்டு சேர்ப்பதில் விரிவுபடுத்தும் வகையில் எண்ணற்ற நூல்களை பல மொழிகளிலும் வெளியிடும் பணியை வேகப்படுத்தியுள்ளார்.
குழந்தைகளுக்கும் தந்தை பெரியார் தம் பகுத்தறிவுக் கெள்கைப் பணியினை ஊட்டிட "பெரியார் பிஞ்சு" இதழைப் பல வண்ணத்தில் மணக்கச் செய்துள்ளார். தந்தை பெரியாரால் 1970ஆம் ஆண்டு மாதம் ஒரு முறை இதழாகத் தொடங்கப்பட்ட 'உண்மை' இதழை மாதம் இரு முறை இதழாக்கி அறிவுத் தேன் சொரியச் செய்துள்ளார்.
தமிழைத் தாண்டி, தந்தை பெரியார் தம் கருத் தொளிப் பரவும் வகையில் 'தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்' ஆங்கில இதழைப் பொலிவாக்கித் தந்துள்ளார்.
இந்தியத் தலைநகரான புதுடில்லியில் பெரியார் மய்யத்தை உருவாக்கி, உலகப் பரப்பில் தந்தை பெரியார் தம் மண்டைச் சுரப்பினைக் கொண்டு செல்லும் பணியையும் மேற்கொண்டுள்ளார்.
பெரியார் பன்னாட்டு ஆய்வுகளை உருவாக்கி உலகெலாம் ஓதற்கரிய அய்யாவின் கருத்தினை ஊடுருவச் செய்துள்ளார்.
பெரியார் வலைக்காட்சியை உருவாக்கி உலகப் பார்வையை தந்தை பெரியார் மீது அழுத்தமாக விழும் ஆக்கப்பணியும் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.
பெரியார் ஆயிரம் ஒன்றை உருவாக்கி இருபால் மாணவர்கள் மத்தியில் தொண்டு செய்து பழுத்த பழமான தந்தை பெரியார் தம் பகுத்தறிவு ஒழுக்க நெறியின் வெளிச்சத்தை வாரி இறைத்து வருகிறார்.
இயக்கத்தை இளைஞர்களின் பாசறையாக்குவதில் நாளும் வெற்றி பெற்று வருகிறார்.
இயக்க அமைப்பில் இளைஞரணி, மாணவர் கழகம், மகளிர் அணியினரை, மகளிர்ப் பாசறையை வலுவாக்கி, அடுத்த தலைமுறையின் தடத்திலும் தந்தை பெரியார் தம் தத்துவம் பரவிட ஆக்கரீதியான அணுகுமுறைகளை நாளும் மேற்கொண்டு வருகிறார்.
கல்விப் பணியின் மூலம் கண்ணொளியாம் தந்தை பெரியாரின் தத்துவக் கருவூலங்களைத் தலைமுறைத் தாண்டி கொண்டு செல்லும் பணியின் பெரும் பாய்ச்சல் நடந்து கொண்டு இருக்கிறது. தந்தை பெரியார் காலத்தில் ஒரு தொடக்கப் பள்ளியும், ஆண்களுக்கும் பெண்களுக்குமாக இரு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியும் என்ற நிலையிலிருந்து பல்கலைக்கழகம் வரை வானோங்கி வளர்ந்து நிற்பது கண்கொள்ளப் பெரும் காட்சியே!
நாகம்மையார் அனாதை இல்லமாக இருந்ததை நாகம்மையார் காப்பகமாக்கி மனித நேயத்தின் மாட்சிமையை மலரச் செய்திருக்கிறார். புதுப் பொலிவுடன் அந்த விடுதி பூத்துக் காணப்படுகிறது.
இயக்கத்தின் ஈடில்லாப் பணிகளில் ஈடுபட்டு விலைமதிக்க முடியாத தியாகத் தழும்புகளை ஏற்ற முதுபெரும் பெரியார் தொண்டர்களை அரவணைக்கும் காப்பகத்திற்குப் பெயர்தான் கைவல்யம் முதியோர் காப்பகம்!
அடுக்கிக்கொண்டே போகலாம்... அடுக்கி மாளாது; எழுதிக் கொண்டே போகலாம்... எழுதி மாளாது.
"தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டதே. மிருகங்கள் போல் நடத்தப்படுகிற பாட்டாளி கூலி ஏழை மக்கள் தான் எனக்குக் கண் வலியாய் இருப்பவர்கள். அவர்களை சம மனிதர்களாய் ஆக்குவதே என் கண்ணோய்க்கும் பரிகாரம்" ('விடுதலை', 15.10.1967) என்று சொன்ன உலகத் தலைவரை - தந்தை பெரியார் அல்லாமல் வேறு எங்குக் காண்பது?
"இவ்வளவுப் பாடுபட்டும், இன்னும் இக்காலத்தில் பார்ப்பான் இருக்கிறான், சூத்திரன் இருக்கிறான், பறையன் இருக்கிறானே! உலகெலாம் மார்க்சியம் பரவின இந்தக் காலத்திலா இத்தகைய பேதங்கள் இருப்பது? ... இதை நினைத்தால் எனக்கு இரத்தக் கொதிப்பு ஏற்படுகிறது" (10.9.1952 - பொன்மலையில் எஸ்.ஆர்.எம்.யூ. தொடக்க விழா உரையிலிருந்து) என்று சொன்ன மாந்த நேயத் தலைவரை பெரியாரல் லால் வேறு எங்குப் போய்தான் தேடிட முடியும்?
"ஒரு தாய் வயிற்றில் பிறந்த பிள்ளைகளில் இளைத்துப் போய், வலிவு குறைவாய் இருக்கிற குழந்தைக்கு அதிகமான போசனையை அந்தத் தாய்க் கொடுக்கிறாரே, அதுபோலத்தான் வலுக் குறைவான பின் தங்கிய மக்களிடம் நான் காட்டிக் கொள்ளும் உணர்ச்சிகள்" ('விடுதலை', 1.1.1962) என்று சொல்லும் ஆணாகப் பிறந்த தாய் அல்லவா தந்தை பெரியார்!
"பெண்களின் உடலழகைப் பற்றி விரிவாக எழுதத் தெரிந்த புலவர்களுக்கு அவர்களின் உரிமைகள் பற்றி நான்கு வரிகள் எழுதத் தெரியாமல் போனது ஏன்?" என்ற அய்யாவின் பெண்ணுரிமை மீதான இரக்கத்தை எங்கே போய்த் தேட முடியும்?
இந்தத் தளங்களையும், தடங்களையும் உள்வாங்கித் தான் அமெரிக்காவின் மனிதநேய சங்கம், பெரியாருக்குப் பின் அதே பணியில் அல்லும் பகலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு அயராது பணியாற்றும் தந்தை பெரியாரின் தலை மாணாக்கராம் நமது ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களை அடையாளம் கண்டு இந்த "வாழ்நாள் சாதனையாளர்" விருதினை வழங்கி மகிழ்ந்துள்ளது.
அந்த விருதினைப் பெற்ற நிலையில்கூட "எனக்காகக் கொடுக்கப்பட்ட விருதல்ல. தந்தை பெரியார் உயிரோடு இல்லாத நிலையில் என்னை அடையாளப்படுதி அளிக்கப்பட்ட விருது" என்று சொன்னாரே ஆசிரியர் - இது அருமை அய்யாவிட மிருந்து பெற்றுக் கொண்ட, கைவரப்பெற்ற பெரும் பண்பின் உருவகம் அல்லவா!
அந்த நிகழ்ச்சியில் இன்னொன்றையும் யாரும் எதிர்பாரா நிலையில் அறிவித்தாரே... அருமைத் தலைவர் ஆசிரியர் பெருமகன்.
தன் வாழ்வின் ஊனாகவும் உயிராகவும் இருந்து - ஊட்டச் சத்தாகவும் இருந்து - தந்தை பெரியாரின் பொதுத் தொண்டை தோளின் மீது போட்டுக் கொண்டு உழைப்பதற்கு ஒல்லும் வகையில் உறுதுணையாக இருந்து வரும் அவருடைய வாழ்விணையர் மானமிகு மோகனா அம்மையாரை மேடைக்கு அழைத்தார். ஆசிரியர் ஆற்றும் சமுதாயப் பணிக்கு ஏதோ ஒரு வகையில் உறுதுணையாக இருந்துவரும் கழகப் பொறுப்பாளர்களையும் மேடைக்கு அழைத்தார்.
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன் றன், பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் இன்பக்கனி, மண்ணச்சநல்லூர் மூதாட்டி அரங்கநாயகி அம்மையார் ஆகியோரும் கழகத் தலைவரால் மேடைக்கு அழைக்கப்பட்டது ஆசிரியர் அவர்களின் பெருந்தன்மைக்கும், சகப் பணியாளர்களை கவுரவிக்கும் கண்ணியம் மிகுந்த உணர்வின் வெளிப்பாடே!
இன்னொரு மிகப்பெரிய சாதனையை நடத்தி முடிக்கும் ஒப்பரும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். அதுதான் திருச்சி - அரியலூர் முக்கிய சாலையில் சிறுகனூரில் உருவாக்க இருக்கும் "பெரியார் உலகம்". 140 அடி உயரத்தில் தந்தை பெரியாரின் முழு உருவச் சிலை, நூலகம், ஆய்வகம், பூங்கா, தந்தை பெரியார் பற்றிய வரலாற்றுப் பதிவுகளை உள்ளடக்கிய பெரியார் உலகை உருவாக்கி முடிக்கும் சவாலான பணியில் ஈடுபட்டுள்ளார்.
எந்தப் பணியையும் தொடங்கும் நிலையிலும் பொருளாதாரத்தை கையில் வைத்துக் கொண்டு தொடங்கப்பட்டதில்லை. ஆனால் அவை எல்லாம் வெற்றி மணியாகத் தான் ஒலித்திருக்கிறது. இப்பவும் அப்படித்தான் அமையப் போகிறது.
சமூகநீதித் தடத்தில் தமிழர் தலைவர் பொறித்த கல்வெட்டுகள் அசாதாரணமானவை. எம்.ஜி.ஆர். கொண்டு வந்த பிற்படுத்தப்பட்டவருக்கான பொருளாதார அடிப்படை இட ஒதுக்கீடு ஒழிப்பு - அதன் காரணமாக பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு 50 விழுக்காடாக உயர்வு - 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து உச்சநீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக (இந்திரா சஹானி வழக்கு) ஏற்பட்ட விபத்திலிருந்து காத்தருளியது - மண்டல் குழுப் பரிந்துரையை அமல்படுத்தியே தீருவது என்று கடுமுயற்சியில் இந்திய அளவில் ஆற்றிய பணி (42 மாநாடுகள், 16 போராட்டங்கள்) - அதில் வெற்றி பெற்று, இந்தியா முழுமைக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மத்திய அரசுத் துறைகளில், கல்வி, வேலை வாய்ப்புகளில் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பெற்றுத் தந்தது - இப்படியே அடுக்கிக் கொண்டே போகலாம் - ஆசிரியர் பெருமகனாரின் சாதனைகளை!
‘நீட்' தேர்வு எதிர்ப்பு, புதிய கல்விக் கொள்கை என்று சமூகநீதிக்கு எதிராக மத்திய பாரதீய ஜனதா கட்சி கத்தியைத் தீட்டும் இந்தக் காலகட்டத்தில் அனைத்துக் கட்சியினரையும் ஒருங்கிணைத்து முறியடிக்கும் முனைப்பு - அரசியல் அதிகாரங்களுக்கு அப்பால் நின்று மக்களிடம் சென்று, மக்களிடம் எடுத்துச்  சொல்லிச் சொல்லி மக்கள் மன மாற்றம் என்ற எழுச்சிப் புயலின்மூலம் அதிகார பலத்தோடு கொண்டு வரப்படும் சமூக அநீதி - பிற்போக்குச் சழக்குகளை சாய்க்கும் உத்தியைத் தந்தை பெரியாரிடம் பெற்வர் நமது தலைவர் ஆசிரியர் அவர்கள். அதுதான் தந்தை பெரியார் தந்த புத்தி என்பது.
பி.ஜே.பி.யைத் தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள அத்தனைக் கட்சித் தலைமைகளும், சமூகநீதிக்கும், மதச் சார்பின்மைக்கும் தலைமையேற்று நடத்தி வழிகாட்டவேண்டும் திராவிடர் கழகத் தலைவர் என்று மனம் ஒப்பி வேண்டுகோள் விடுக்கும் நிதர்சனத்தை நாடு கண்டுகொண்டுதானிருக்கிறது.
தந்தை பெரியார் அவர்கள் நமது தலைவர் ஆசிரியர் அவர்களை நம்பியும், கணித்தும் சொன்னவற்றை மீள் பார்வைக்குக் கொண்டு வந்து பார்ப்பது பொருத்தமானதாகும்.
இதோ தந்தை பெரியார் எழுதுகிறார்:
‘‘இந்த நிலையில், வீரமணி ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவராகவும் இருந்து வந்தவர். இந்த நிலையில், சுயநலமில்லாது, எவ்விதப் பொருள் ஊதியத்தையும் கருதாமல் பொதுத் தொண்டு செய்ய ஒருவர் வந்தார் என்றால், இதுபோல மற்றொருவர் வந்தார், வருகிறார், வரக்கூடும் என்று உவமை சொல்லக் கூடாத ஒரு மாபெரும் காரியம் என்றே சொல்லவேண்டும். அப்படிப்பட்ட ஒருவரை நாம் தக்கபடி பயன்படுத்திக் கொள்ளாவிட்டால், அது நம்முடைய அறியாமையாகவே முடியும் என்ற எண்ணத்தின்மீதே அவரை நம் இயக்கத்தின் தலைமைப் பிரச்சாகரராகவும், நமது ‘விடுதலை' ஆசிரியராகவும் பயன்படுத்திக் கொள்ள முன்வந்து, அவருடைய ஏகபோக ஆதிக்கத்தில் ‘விடுதலை'யை ஒப்படைத்துவிட்டேன்.'' (‘விடுதலை', 6.8.1964) என்று தந்தை பெரியார் எழுதினார் என்றால்,  அறிவு ஆசான் அய்யாவின் முழு நம்பிக்கையும், அங்கீகாரமும் ஆசிரியர் மானமிகு கி.வீரமணிக்கு அல்லால் வேறு யாருக்கும் கிடைத்திலதே!
தந்தை பெரியாரின் தொலைநோக்கு எப்படி இருந்தது என்பதற்கு இதோ ஓர் எடுத்துக்காட்டு:
"கூட்டத்தின் தலைவர் அவர்கள் (சிவகங்கை வழக்குரைஞர் இரா.சண்முகநாதன்) தனது உரையில், எனக்குப் பின் எனது புத்தகங்களே வழிகாட்டும் என்று குறிப்பிட்டார்கள். இந்தத் தொண்டும், பிரச்சாரமும் அறிவை மட்டும் சேர்ந்ததல்ல; உணர்ச்சியையும் சேர்ந்தது. அந்தப் பக்குவம் உள்ள ஒருவன் இருந்தால், அவன் அடுத்து தலைமை ஏற்க வருவான்... அறிவும், உணர்ச்சியும், துணிவும் உள்ள யார் வேண்டுமானாலும் வரலாம்."
(சிவகங்கை உரை, ‘விடுதலை', 23.4.1965, பக்கம் 3).
தந்தை பெரியாரின் இந்தக் கணிப்பை நமது தலைவர் ஆசிரியருக்கல்லாமல் வேறு யாருக்கும் பொருத்திப் பார்க்கவும் முடியுமோ!
நமது ஆசிரியரின் திருமணம் தந்தை பெரியார் ஏற்பாட்டில் அவரே திருச்சியில் நடத்திய நேரத்தில், புரட்சிக்கவிஞர் பாடிய கவிதை இங்கு கூர்ந்து நோக்கத்தகுந்தது.
‘‘இளமை  வளமையை விரும்பும் என்பர்
இளமை எளிமையை விரும்பிய புதுமையை
வீரமணியிடம் நேரில் கண்டுள்ளேன்
தொண்டு மனப்பான்மை அந்தத் தூயவனை
கொண்டது குழந்தைப் பருவத்திலேயே
தமிழன் அடிமை தவிர்த்து குன்றென
நிமிர்தல் வேண்டும் என்று நிகழ்த்தும்
பெரியார் ஆணை ஒன்றே பெரிதெனக்
கருதிய வீரமணியை
வீண்செயல் எதிலும் வீழ்த்தவில்லை.''
- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
(மானமிகு கி.வீரமணி - மோகனா வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழாவின்போது, 1958)
புரட்சிக்கவிஞரின் கணிப்பும் பொய்க்கவில்லை.
"பெரியார் ஆணை ஒன்றினை பெரிதெனக் கொண்டவர்" என்ற வரியின் இலக்கியப் பண்புக்கு இலக்கணச் சுடராக ஒளிவீசுபவர் மானமிகு வீரமணி அவர்கள்தானே! தந்தை பெரியார் தந்த புத்தி சபலம் அறியாது என்பதால் அந்த நுணுக்கமான ஒன்றை நுண்மாண் நுழைபுலத்தோடு பற்றிக் கொண்டார்.
இப்பொழுது அவரைத் தேடி விருதுகள் வருகின்றன என்றால், மேலே எடுத்துக்காட்டிய அனைத்துச் சிறப்புக்கும், சாதனைக்கும் உரியவர் என்பதால்தான்!
வாழ்நாள் சாதனையாளர் விருது - இன்னொரு முக்கிய நாட்டின் அமைப்பால் வழங்கப்பட்டது என்றால், அது சாதாரணமானதல்லவே!
ஒவ்வொரு பகுத்தறிவாளனும், மனித உரிமையாள னும், முற்போக்கான சமத்துவவாதியும், சுயமரியாதை சூள் கொண்டவனும், பேதமற்ற உலகைக் காணத் துடிக்கும் உள்ளத்தானும், தாம் வரித்துக்கொண்ட கோட்பாட்டுக் கும், தலைவருக்கும் மாபெரும் உலக அங்கீகாரம் என்றே பீடுறக் கருதுவான் - இது உலக வரலாற்றுச் சிலாசாசனம் - கல்வெட்டே!
 - விடுதலை நாளேடு, 25. 9.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக