எஸ்.வி.ராஜதுரை
ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க. இந்தியாவின் ஜாதிப் படிநிலையை வலுப்படுத்தி, அதன் உச்சத்தில் எப்போதும்போல பார்ப்பனர்கள் இருக்கிற இந்து இராஷ்டிரத்தை உருவாக்கும் திட்டத்தை 2014இல் ஆட்சிக்கு வந்த மோடியையும், அவரது அரசாங் கத்தையும் கொண்டு படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. இதற்கு உறுதுணையாக அண்மைக்காலங் களில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புகளும் அமைந்துள்ளன.
மாநில உரிமைகளைப் பறித்த மோடி அரசு
இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு மோடி அரசாங்கம் 2018இல் கொண்டுவந்த திருத்தம் மூலமாக இரண்டு பிரிவுகளைச் சேர்த்தது. பிரிவு 338பி, 1993ஆம் ஆண்டிலிருந்து செயல்படும் ‘தேசிய பிற்படுத்தப் பட்டோர் ஆணையத்’துக்கு அரசமைப்புச் சட்டத் தகுதியை வழங்குகிறது. பிரிவு 342ஏ, இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் 'சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும்' பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் யார் என்பதை அறிவிப்பு செய்யும் அதி காரத்தை குடியரசுத் தலைவருக்கும், இந்தப் பிற் படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலை மாற்றி அமைக் கும் அதிகாரத்தை நாடாளுமன்றத்துக்கும் அளிக்கிறது. இந்த அதிகாரத்தை வலுப்படுத்தும் விதமாக அரச மைப்புச் சட்டப்பிரிவு 366-லும் மாற்றங்களைச் செய் துள்ளது. அதாவது ‘சமூக, கல்விரீதியாகப் பிற்படுத்தப் பட்ட வகுப்பினர் யார்’ என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை மாநில அரசாங்கங்களிடமிருந்தும், யூனியன் பிரதேசங்களிலிருந்தும் பறித்துவிட்டது.
அரசமைப்புச் சட்டத்தை மீறும் திருத்தங்களை உச்சநீதிமன்றம் பரிசீலிக்காதது ஏன்?
மோடி அரசாங்கம் அடுத்ததாக நாடாளுமன்றத்தில் அரசமைப்புச் சட்டத்துக்கான 103ஆம் திருத்தத்தை நிறைவேற்றியது. இது ‘பொருளாதார ரீதியாகப் பிற் படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு’ 10 விழுக்காடு இட ஒதுக்கீடு செய்ய வழிவகுத்தது.
1990களில் மண்டல் குழு பரிந்துரைகள் தொடர்பான இந்திரா சஹானி வழக்கை விசாரித்த 9 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசமைப்புச் சட்ட ஆயம் (Constitutional Bench) இட ஒதுக்கீடு 50 விழுக் காட்டுக்கு மேல் இருக்கக் கூடாது என்று தீர்ப்பளித்தது. எனினும், சில விதிவிலக்கான சூழ்நிலைகளில் மாநில அரசாங்கங்கள் இந்த வரம்பை மீறலாம் என்றும் கூறியது. அரசமைப்புச் சட்டப்படி தாழ்த்தப்பட்டவர், பழங்குடியினர் ஆகியோருக்கான இட ஒதுக்கீடு தவிர, பிற இட ஒதுக்கீடு என்பது 'சமூகரீதியாகவும் கல்விரீதியாகவும்' பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கானதே. மேற்சொன்ன மூன்று பிரிவினருக்குமாகச் சேர்த்து 50 விழுக்காட்டுக்கு மேல் போகக்கூடாது என்று உச்சவரம்பு விதித்த வரம்பில் 10 விழுக்காட்டைப் பிடுங்கி ‘பொருளாதார ரீதியாகப் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு’ வழங்குவது அரசமைப்புச் சட்டத்தை மீறுவதாகும் என்று அதை எதிர்த்து தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளை உச்ச நீதிமன்றம் இதுவரை பரிசீலிக்கவில்லை. அரசமைப்புச் சட்டத்தை அப்பட்டமாக மீறும் இந்தத் திருத்தத்தின் கீழ் ஒன்றிய அரசாங்கப் பணிகளிலும் கல்வி நிறுவனங்களிலும் மட்டுமல்லாது பல மாநிலங்களிலும் ‘பொருளாதார ரீதியாகப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு’ அரசாங்கப் பணிகளிலும் கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. ‘பொருளாதாரரீதியாகப் பிற்படுத்தப்பட்டவர்கள்’ என்ற பெயரில் பெரிதும் பார்ப்பனர்களையே அரசாங்கப் பணிகளில் அமர்த்துவதும், உயர் கல்வி நிறுவனங்களில் பார்ப்பன மாணவர்களுக்கு அவர்களுக்கு இடம் ஒதுக்குவதும்தான் இந்த 10 சதவிகித ஒதுக்கீடு. மிக அண்மையில் உச்ச நீதி மன்றமும்கூட சமூகநீதிக் கோட்பாட்டின் எதிர்காலத்தை அச்சுறுத்துவதில் ஒன்றிய அரசாங்கத்துக்குக் காப்பரண் செய்துள்ளது. மராத்தா சமூகத்தினருக்கு 16 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மகாராஷ்டிர அரசாங்கம் பிறப்பித்த சட்டம், உச்ச நீதி மன்றம் முன்பு விதித்துள்ள உச்சவரம்பான 50 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது என்றும், எனவே அது செல்லாது என்றும், மண்டல் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தபடி, 50 விழுக்காட்டுக்கு மேற்பட்டு இட ஒதுக்கீடு அமையுமானால், அது தனி விதி விலக்குக்குரியது என்பதை - போதிய ஆதாரத்துடன் விளக்குவதாக இருந்தால் மட்டுமே - அனுமதிக்கலாம் என்ற நிபந்தனைக்கு உட்படும் வகையில் மகாராஷ்டிர அரசாங்கம், அது அமைத்த ஆணையத்தின் பரிந் துரையின் அடிப்படையில் பிறப்பித்த சட்டம் இருக்க வில்லை என்பதால் அது செல்லாது என்றும் அய்ந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசமைப்புச் சட்ட ஆயம் தீர்ப்புக் கூறியுள்ளது. மேலும், இந்திய அரசமைப்புச் சட்டம், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு போதுமான (Adequate) பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும் என்று கூறுகிறதேயன்றி விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தையல்ல என்று கூறியுள்ளது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பு கூறுவது என்ன?
சமூகரீதியாகவும் கல்விரீதியாகவும் பிற்படுத்தப் பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்ப்பதற்கும், விலக்குவ தற்குமான இறுதி அதிகாரம் குடியரசுத் தலைவருக்கே உண்டு என்றும், முதலில் வெளியிடப்பட்ட பட்டியலில் மாற்றங்கள் செய்வதற்கோ, ஒரு குறிப்பிட்ட ஜாதி யினரை விலக்குவதற்கோ நாடாளுமன்றத்துக்குத்தான் அதிகாரம் உண்டு என்றும் இத்தீர்ப்பு கூறுகிறது.
'சமூகரீதியாகவும் கல்விரீதியாகவும்' பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் காண்பதற்குக் குடி யரசுத் தலைவருக்கு அரசமைப்புச் சட்டப்பிரிவு 338பி-இன் கீழ் அமைக்கப்படும் ‘தேசிய ஆணையம்’ வழிகாட்டும் என்றும், மாநில அரசாங்கம் இட ஒதுக்கீடு தொடர்பான தன் கொள்கைகளை வகுப் பதற்கு மேற்சொன்ன ஆணையத்தின் அறிவுரைகளைக் கேட்க வேண்டும் என்றும், சமூகரீதியாகவும் கல்விரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட வகுப் பினரை அடையாளம் காண்பது தொடர்பாக மேற் சொன்ன ஆணையம் தயாரிக்கும் அறிக்கையை அரச மைப்புச் சட்டப் பிரிவு 338பி-இல் உள்ள விதிகளின்படி மாநில அரசாங்கம் கையாள வேண்டும் என்றும், ஆனால் இந்தப் பட்டியல் தொடர்பான இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கே உண்டு என்றும் இத்தீர்ப்பு கூறியுள்ளது
அரசமைப்புச் சட்டப் பிரிவு 338பி-இன் கீழ் அமைக்கப்படும் ஆணையம் தனது பணிகளைத் துரிதமாகச் செய்து இந்திய ஒன்றியம், மாநில அரசாங் கங்கள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றிலுள்ள பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை அறிவிக்க குடியரசுத் தலைவருக்கு உதவ வேண்டும் என்றும், அதுவரை இப்போதுள்ள ஒன்றிய, மாநில அரசாங்கப் பட்டியல் களின்படியான இட ஒதுக்கீடு தொடரலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தன் தீர்ப்பில் கூறியுள்ளது.
சமூகநீதிக்குப் பேராபத்து
சமூக நீதிக்குப் பேராபத்து விளைவிக்கும் வகையில் இத்தீர்ப்பு, மோடி அரசாங்கம் நிறைவேற்றிய, அரசமைப்புச் சட்டத்துக்கான 102ஆம் அந்தத் திருத்தத்திற்கு ஒப்புதல் வழங்கி, 'சமூகரீதியாகவும் கல்விரீதியாகவும்' பிற்படுத்தப்பட்டவர்களை அடை யாளம் கண்டு அதற்கேற்றவாறு இட ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் மாநில அரசாங்கங்களுக்கு இல்லை என்று கூறிவிட்டது. மாநில அரசாங்கங்களும் ஒன்றிய அர சாங்கங்களும் ‘கூட்டுறவு உணர்வுடன் கூடிய கூட்டாட்சித் தத்துவத்தை’ கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, இட ஒதுக்கீடு தொடர்பான நடைமுறைகளை (எந்தெந்த வகுப் பினருக்கு எவ்வளவு ஒதுக்கீடு என்பது போன்றவை) மேற்கொள்ளும் அதிகாரம் மாநிலங்களிடமிருந்து பறிக்கப்படவில்லை என்று கூறுகிறது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பட்டியலைத் தயாரிக்கும் அதிகாரம் முழுவதையும் ஒன்றிய அரசாங்கம் எடுத்துக்கொண்ட பிறகு, அந்த அரசாங்கம் தரும் பட்டியலின்படியே மாநில அரசாங்கங்கள் இட ஒதுக்கீட்டைச் செய்ய வேண்டும் என்பது இதன் பொருளா என்பது விளங்கவில்லை.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிடையே பிளவு உண்டாகக் காரணமாகும் செயல்கள்!
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் யார் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரத்தைப் பெற்றுள்ள மோடி அரசாங்கம் அந்த வகுப்பினரிடையே பிளவு ஏற்படுத்தும் வேலையை ஏற்கெனவே தொடங்கியிருந்தது. ஒன்றிய அரசாங்கப் பணியிடங்களுக்கும் ஒன்றிய அரசாங்க நிதியில் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களிலும் அவர்களுக்குள்ள 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை ”சமத்துவமான முறையில் பிரித்து வழங்குவதற்காக” ஒன்றிய அரசாங்கத்தால் 2017இல் நீதிபதி ரோஹிணி தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம், மத்திய அரசாங்கப் பட்டியலிலுள்ள 2633 ‘இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு’ ஜாதியினரை நான்கு பிரிவினராகப் பிரிக்க வேண்டும் என்றும், 1,2,3,4ஆம் பிரிவினருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் முறையே 2, 6, 9, 10 விழுக்காட்டைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற ஆலோசனையைக் கூறியுள்ளது. இப்படிப் பிரிப்பது, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் ‘ஆதிக்கம் செலுத்தும் ஜாதியினரே’ இட ஒதுக்கீட்டின் முழுப் பயன்களை அனுபவிக்க விடாமல் செய்வதற்குத்தான் என்று கூறுகிறது. இப்படி நான்கு உட்பிரிவுகளைச் செய் வதற்கு அது பயன்படுத்தியுள்ள அளவுகோல் ஒவ் வொரு ஜாதியும் இட ஒதுக்கீட்டினால் பெற்றுள்ள வேலைகளின் எண்ணிக்கையாகும். ஆனால், அந்த ஜாதியினரின் மொத்த எண்ணிக்கை அல்ல. எனவே ரோஹினி ஆணையம் நியாயமற்ற அடிப்படையிலேயே உட்பிரிவுகளை உருவாக்குகிறது. எடுத்துக் காட்டாக ‘அ’ ஜாதியைச் சேர்ந்தவர்களின் எண் ணிக்கை 10 லட்சம் என்றும், இட ஒதுக்கீட்டின் மூலம் அவர்கள் பெற்றுள்ள வேலைகளின் எண் ணிக்கை 10 என்றும், ‘ஆ’ ஜாதியைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் என்றும் அவர்கள் இட ஒதுக்கீட்டின் மூலம் பெற்றுள்ள வேலையின் எண்ணிக்கை ஒன்று என்றும் வைத்துக் கொள்வோம். அப்படியானால், அவர்கள் தத்தம் ஜாதியினரின் எண்ணிக்கைக்கு ஏற்பவே இட ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளனர். வேலையின் எண் ணிக்கை நிரந்தரமானது அல்ல; எனவே அதன் அடிப்படையில் உட்பிரிவுகளை ஏற்படுத்துவது தர்க்கரீதியானது அல்ல.
ஒன்றிய அரசாங்கம்,அரசமைப்புப் பிரிவு 342-பி தரும் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில், ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.கவுக்கு ஆதர வளிக்காத ஜாதியினரை இதர பிற்படுத் தப்பட்டோர் பட்டியலிலிருந்து நீக்கி விட்டு, அவர்களுக்குப் பதிலாக தனக்கு ஆதரவளிக்கக்கூடிய ‘ஆ’ ஜாதியினரை அந்தப் பட்டியலில் தக்கவைத்துக் கொள்ளலாம் அல்லது இதுவரை ‘இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பி னராக’ கருதப்படாத வேறு ஜாதியினரை இந்தப் பட்டியலில் சேர்க்கலாம்.
ஜாதிவாரியான விவரங்களை மூடி மறைக்கும் மோடி அரசு
மேலும், 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி ஒவ்வொரு ஜாதியின் எண்ணிக்கை எவ்வளவு என் பதை மோடி அரசாங்கம் இதுவரை வெளியிட மறுத்து வருகிறது. அந்த விவரங்களை வெளியிட்டால் பிற் படுத்தப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கை மண்டல் குழு உத்தேசமாகக் கணக்கிட்டிருந்த 52 சதவிகிதத்தைத் தாண்டி 70 - 80 சதவிகிதத்துக்குப் பக்கம் வந்துவிடும் என்பதாலும், அந்த எண்ணிக் கைக்கு ஏற்ப தங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அவர்களிடமிருந்து எழும் என்பதாலுமே 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சமூக பொருளாதார ஜாதிவாரியான விவரங்களை மோடி அரசாங்கம் மூடி மறைக்கிறது.
ரோஹினி ஆணையத்தின் ஆலோசனைகள், அரசமைப்புச் சட்டத்தின் 102ஆம் திருத்தம் ஆகிய வற்றைப் பயன்படுத்தி, மோடி அரசாங்கம் ஒன்றிய அரசாங்கப் பட்டியலிலுள்ள இதர பிற்படுத்தப்பட்ட ஜாதியினரைப் பிளவுபடுத்தி, ஜாதிப் படிநிலையில் பார்ப்பனர்களுக்குள்ள மேலாண்மையை வலுப் படுத்தும்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களது வழிகாட்டல்
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் அண்மையில் விடுத்துள்ள அறிக்கை கூறுவது போல "இந்த ஆபத்து - பேராபத்து மட்டுமல்லாது அரச மைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானமான 15(4) மற்றும் 16(4) உரிமைகளையே தகர்த்து, மாநிலங்களின் உரிமைகளைப் பறிமுதல் செய்யும் அதிர்ச்சிக்குரியது ஆகும். இதுபற்றிசமூகநீதி மண்ணான தமிழ்நாடுதான் முதல் கண்டனத்தை எழுப்பி, அப்பிரிவை நீக்கி, பழையபடி (Statusquo Ante) மாநிலங்களுக்குள்ள பிற்படுத்தப்பட்டோரை கல்வி ரீதியாகவும், சமூக ரீதியாகவும் அடையாளப்படுத்திடும் மாநில உரிமைகளை நிலைநாட்டி, அதனைப் பாதுகாக்க முன்வர வேண்டியது அவசரமான முன்னுரிமைப் பணிகளில் முதன்மையானதாகும்.
தமிழ்நாட்டில் மலர்ந்துள்ள விடியல் ஆட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியின் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண - கரோனாவுக்கு முன்னுரிமை கொடுப் பதைப் போல, இதற்கும் முக்கியத்துவம் கொடுத்து, வருகின்ற சட்டமன்றத் தொடரிலேயே ஒரு முக்கிய தீர்மானத்தை நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப் பிடும் பணியைச் செய்திட வேண்டும். மேலும் திமுக - தமிழ்நாட்டு எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிடவும், மற்ற மாநில முதல்வர்களிடையே இதுபற்றிய ஆபத்தினை விளக்கி, மாநில உரிமைப் பாதுகாப்பினை ஏற்படுத்தவும் உடனடியாக ஏற் பாடுகள் செய்து, காணொலி மூலமாகவாவது அனைத்துக் கட்சி கூட்டத் தினையும் கூட்டி, ஒருமித்த தீர்மானத்தையும் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பிட ஏற்பாடு செய்தல் வேண்டும். தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளுக்கு இப்பிரச்சினையில் மாறுபட்ட கருத்து இருக்க வாய்ப்பில்லை. எனவே அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு ‘மாநில உரிமை - சமூகநீதியினைப் பாது காப்போம்‘ என்ற குரலை வலிமையாக எழுப்ப வேண்டும்” என்கிறார்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது
இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், சட்ட அமைச்சர் கோ.ரகுபதியுடனும், அரசாங்கத் தலைமை வழக்குரைஞர் ஆர்.சண்முகசுந் தரத்துடனும் ஆலோசனை நடத்தியதாகவும், இந்திரா சாஹானி வழக்கு தீர்ப்பு வந்த பிறகே தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு வரம்பு 60 சதவிகிதத்துக்கு உயர்த்தப் பட்டதென்றும், அதற்கான சட்டத்தை அரசமைப்புச் சட்டத்தின் ஒன்பதாம் அட்டவணையில் சேர்த்ததன் மூலம் அரசமைப்புச் சட்டப் பாதுகாப்புப் பெறப் பட்டுள்ளது என்றும் அவர்கள் முதலமைச்சரிடம் கூறியதாகவும் ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
அரசமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்ட வணையில் சேர்க்கப்பட்ட சட்டங்கள் சில கடந்த காலத்தில் உச்ச நீதிமன்றத்தின் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டுள்ளன என்பதோடு, 102ஆம் திருத்தத்துக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில் திராவிடர் கழகத் தலைவர் தன் அறிக்கையில் கூறியுள்ள நடவ டிக்கைகளை முதலமைச்சர் மேற்கொள்ள வேண்டியது அவசர, அவசியக் கடமையாகும். இன்னும் பல சட்ட வல்லுநர்களின் கருத்துகளைக் கேட்டறிவதும் முக்கியமானது.
நன்றி: மின்னம்பலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக