
சென்னை, பிப்.7 உலகளவில் சமூக மற்றும் பொருளாதாரச் சிந்தனைக்குப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய மாமேதை கார்ல் மார்க்ஸ்சின் பொருளாதாரச் சிந்தனைகளை மக்கள் அனைவரும் அறிந்திடும் வகையிலும், அவரது புகழுக்குப் பெருமை சேர்க்கின்ற வகையிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 3.4.2025 அன்று சட்டமன்றத்தில் விதி எண் 110-இன் கீழ் சென்னையில் கார்ல் மார்க்ஸ்சுக்கு புதிதாக உருவச்சிலை நிறுவப்படும் என அறிவித்தார்.
அதன்படி, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் ரூ.85 லட்சம் மதிப்பீட்டில் சென்னை கன்னிமாரா பொது நூலகம், எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள மாமேதை கார்ல் மார்க்ஸ்சின் உருவச்சிலையை நேற்று (6.2.2026) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கார்ல் மார்க்ஸ்சின் சிலை திறப்பு விழாவில் தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்தநிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
கார்ல் மார்க்ஸ் சிலை திறப்பால் சிவந்தது சென்னை. இழப்பதற்கு அடிமைச் சங்கிலிகளைத் தவிர ஒன்று மில்லை. அடைவதற்கோ பொன்னுலகம் காத்திருக்கிறது” என உலகத் தொழிலாளர்களை ஒன்றுதிரட்டிய பொதுவு டைமைத் தத்துவத்தின் பிதாமகன் கார்ல் மார்க்ஸ் சிலை கன்னிமாரா பொதுநூலக வளாகத்தில் நிலைகொண்டது. நல்லவை எங்கிருந்து வந்தாலும் வணங்கி ஏற்றுக் கொள்வோம். அல்லவை ஆதிக்கம் செலுத்தப் பார்த்தால் தடுத்து நிறுத்துவோம். இதுதான் ‘‘திராவிட மாடல்’’ என அதில் பதிவிட்டுள்ளார்.
விடுதலை நாளேடு, 7.2.26
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக