திங்கள், 15 பிப்ரவரி, 2021

அரசனை விஞ்சிய விசுவாசியா அ.தி.மு.க. அரசு? -இட ஒதுக்கீடு குறைப்பு


மாநிலத்தில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டின் அடிப்படையில் உயிரி தொழில் நுட்பம் முதுநிலைப் படிப்பு சேர்க்கைபற்றி

பல்கலைக் கழக மானிய குழுவே அறிவித்தும்,

49.5% இடஒதுக்கீட்டை அதிமுக அரசு பின்பற்றுவதா?

அதே போல உயர்ஜாதி ஏழைகளுக்கு இடம் ஒதுக்குவதா?

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள கண்டனமும் - எச்சரிக்கையும்


தமிழ்நாட்டின் நான்கு பல்கலைக் கழகங்களில் உயிரி தொழில் நுட்பம் முதுநிலைப் பட்டப் படிப்புகளில் (M.Sc., Bio  Technology) தமிழ்நாட்டில்  நடை முறையில் உள்ள  69 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்கு மாறாக 49 புள்ளி 5 விழுக்காடு அளவில் இடங்களை அளித்தும், அதே போல பொருளாதாரத்தில்   நலி வடைந்த உயர் ஜாதியினருக்கு இடஒதுக்கீடு என்று இதுவரை தமிழ்நாடு அரசு பின்பற்றாத நிலையில், அதை இப்போது செயல்படுத்துவதும் சமூக அநீதியும், துரோகமும், சட்ட விரோதமும்  ஆகும். உடனே தமிழ்நாடு அரசு  இவற்றை ரத்து செய்து ஏற்கெனவே   தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும், இல்லையெனில் கடும் போராட்டத்தை சந்திக்க நேரிடும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ் நாட்டின் அரசுக் கட்டுப்பாட்டில் இருக்கும் நான்கு பல்கலைக்கழகங்களில் உயிரி தொழில்நுட்பம் முதுநிலை பட்டப்படிப்புகள் உள்ளன.

1. பாரதியார் பல்கலைக்கழகம்

2. மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்

3. தமிழ் நாடு வேளாண் பல்கலைக்கழகம்

4. காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம்.

இந்நாள் வரை எல்லா பட்டப்படிப்புகளுக்கும் 69% இடஒதுக்கீடு அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடந்து வந்துள்ளது .

இந்த ஆண்டு அரசு பல்கலைக்கழகங்களில் நடத்தப்படும்  உயிரி தொழில்நுட்பப் படிப்புகளுக்கு (M.Sc. Bio Technology) மத்திய அரசு நிதியுதவி அளிக்கிறது (UNESCO -Central).

பல்கலைக்கழக மானியக் குழு தெளிவாக அதன் அறிக்கையில் மாநில அரசு இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை இருக்க வேண்டும் என்று கூறினாலும்...

தமிழ்நாடு அ.இ.அ.தி.மு.க. அரசு தமிழ் நாட்டில் நடைமுறையில் உள்ள 69% இடஒதுக்கீட்டுக்கு மாறாக மத்திய அரசு பின்பற்றும் இடஒதுக்கீட்டை ஏற்று 49.5 விழுக்காட்டைப் பின்பற்றுவது கடும் அதிர்ச்சிக்கும் கண்டனத்துக்கும் உரியது. 

இவைகள் மத்திய அரசின் பல்கலைக் கழகங்கள் அல்ல; மாநில அரசின்கீழ் இயங்கும் பல்கலைக் கழகங்கள். மேலும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பொருளாதாரத்தில் நலிந்த மேல் ஜாதியினருக்கு 10% இடஒதுக்கீடு கொண்டு வர மாட்டோம் என்று வாக்குறுதி கொடுத்தது அதிமுக அரசு.

அதற்கு மாறாக இந்தத் தொகுப்பில் 10% இட ஒதுக்கீடை  உயர் ஜாதியினரில் பொருளாதாரத்தில் நலிந்தோர் (EWS) என்போருக்கு நடைமுறைப்படுத்தி யுள்ளது. அதுபற்றிய வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

இது சமூகநீதிக்கும், நடைமுறையில் உள்ள அரசின் கொள்கைக்கும், நடப்புக்கும் நேர் எதிரான, சட்ட விரோதமான சமூக அநீதியும் - துரோகமும் ஆகும். இதற்குத் தமிழ்நாடு அரசு துணைபோக வேண்டாம்.

தமிழ்நாடு அரசு சட்ட விரோத, சமூகநீதி விரோத ஆணையை ரத்து செய்து,  தமிழ்நாட்டில் ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வரும் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை சரியாக முழுமையாகப்  பின்பற்றுவதோடு பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கான (EWS) இடஒதுக்கீட்டையும் ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இல்லையெனில் மிகப் பெரிய போராட்டத்தை மாநில அரசு எதிர்நோக்க நேரிடும் என்று எச்சரிக்கிறோம்.

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், ஏன் ஜெயலலிதாவிற்குக் கூட செய்யும் துரோகத்தை  தந்தை பெரியார் பிறந்த சமூகநீதி - திராவிட மண் ஒருபோதும் ஏற்காது - ஏற்கவே ஏற்காது.

இதனை உடனே தடுத்து நிறுத்தி, 69 சதவிகிதத்தினை அப்பல்கலைக்கழகங்கள் அமல்படுத்தாவிட்டால் அதற்குரிய கடும் விலையை தமிழக ஆளும் கட்சியும், மத்திய அரசில் இடம் பெற்ற கட்சியும் கொடுக்க வேண்டி வரும் என்பதை நினைவூட்டுகிறோம்.

 

 

 கி. வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

5.2.2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக