திங்கள், 15 பிப்ரவரி, 2021

தந்தை பெரியாரின் கருத்துகள் காலத்தை வென்றவை: ஜாதிக் கலவரங்களைக் குறைக்க, ஜாதியை ஒழிக்க ஜாதி மறுப்புத் திருமணங்களே - கலப்பு திருமணங்களே சிறந்த தீர்வு


உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பை வரவேற்கிறோம் - பாராட்டுகிறோம்

ஜாதிக் கலவரங்களைக் குறைக்க, ஜாதியை ஒழிக்க ஜாதி மறுப்புத் திருமணங்களே -  கலப்புத் திருமணங்களே சிறந்த தீர்வு என்று உச்சநீதிமன்றத்தில்  வந்துள்ள இறுதித் தீர்ப்பை பாராட்டுகிறோம் - வரவேற்கிறோம் என திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்  கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ஜாதி மறுப்புத் திருமணங்கள் செய்யும் இளைய தலைமுறைக்கு இனிப்பான, வரவேற்று மகிழத்தக்க இரண்டு செய்திகள் வெளி வந்துள்ளன இந்நாளில்!

ஒன்று: ஜாதிக் கலவரங்களைக் குறைக்க, ஜாதியை ஒழிக்க  ஜாதி மறுப்புத் திருமணங்களே - கலப்புத் திருமணங்களே சிறந்த தீர்வு என்று உச்சநீதிமன்றத்தில் இறுதித் தீர்ப்பு ஒன்று வெளியாகியுள்ளது மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.

பெங்களூருவிலிருந்து டில்லிக்கு வந்த ஒரு எம்.பி.ஏ. படித்த மாணவி, ஒரு எம்.டெக் படித்த உதவிப் பேராசிரியரை விரும்பி திருமணம் செய்து கொண்டது தொடர்பான வழக்கொன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்துத் தீர்ப்புக் கூறியவர் உச்சநீதிமன்ற நீதிபதி ஜஸ்டீஸ் சஞ்சய்கிஷன்கவுல் அவர்கள் ஆவார்.  (அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பல ஆண்டுகள் நீதிபதியாக இருந்தவர்; அத்துடன் தி.மு.க. ஆட்சியில் அறிஞர் அண்ணா முதலமைச்சராக வந்து நிறைவேற்றிய  தந்தை பெரியாரின் சுயமரியாதைத் திருமணங்களைச் செல்லுபடியாக்கும் இந்து சட்டத் திருத்தத்தை எதிர்த்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு அச்சட்டம் செல்லாது என்று வழக்குரைஞர் ஒருவரை விட்டு வழக்குப் போட வைத்தனர். அச்சட்டம்  செல்லும் என்று தீர்ப்பு வழங்கி வரலாறு படைத்தவர் இதே நீதிபதி ஜஸ்டீஸ் சஞ்சய் கிஷன்கவுல் அவர்கள். அவருடன் அமர்வில் ஜஸ்டீஸ் சிவஞானம் அவர்களும் இடம் பெற்று அந்தத் தீர்ப்புக்குக் காரணமானவர் என்பது நினைவு கூரத்தக்கது).

புரட்சியாளர் அம்பேத்கர்  கருத்து....

"ஜாதி மறுப்புத் திருமணங்களால் மட்டுமே ஜாதியை ஒழிக்க முடியும்" என்ற புரட்சியாளர் அம்பேத்கர் கருத்தை அத்தீர்ப்பில் வெளிப்படையாக நீதிபதி அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

1936இல் பஞ்சாப்பில் நடைபெற்ற ஜாதி ஒழிப்பு சங்க மாநாட்டில், ஜாதியை ஒழிக்க வழிகோலும் தமது தலைமை உரையை டாக்டர் அம்பேத்கர் அவர்கள் படிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. சில பகுதிகளை நீக்க, மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் கூறியதால், அதனை டாக்டர் அம்பேத்கர் திட்டவட்டமக மறுத்து விட்டார்; தந்தை பெரியார் இதனைக் கேள்விப்பட்டு, அப்போதே அம்பேத்கருடன் கடிதப் போக்குவரத்து நடத்தி அந்த ஆங்கில உரையை வரவழைத்து, "ஜாதியை ஒழிக்க வழி" என்ற தலைப்பில் 4 அணாவுக்கு 1936இல் புத்தகத்தை வெளியிட்டார். இந்தியாவில் டாக்டர் அம்பேத்கரின் ஆங்கில நூல் தமிழில்தான் தந்தை பெரியாரின் முயற்சியில் முதல் பிறமொழி ஆக்க நூலாக வந்தது என்பது வரலாறு படைத்த செய்தியாகும்!

தீர்ப்பின் இரண்டு முக்கிய அம்சம்

இந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பில் இரண்டு முக்கிய அம் சத்தை மத்திய, மாநில அரசுகள் பார்க்கத் தவறக் கூடாது.

காவல்துறையும் வழக்கமான 'வழ வழ கொழ கொழா' கட்டப் பஞ்சாயத்து செய்வதுபோலவே நடந்து கொள்ளுகின்றது. வயது வந்தோர் தங்களது துணையைத் தாங்களே தேர்வு செய்யும் பக்குவம் பெற்றவரே என சட்டமே ஒப்புக் கொள்ளும் நிலையில், "உங்கள் பெற்றோர் சம்மதம் இருக்கிறதா?" என்று கேட்பதும், குறிப்பாக பெண்களிடம் "உங்கள் பெற்றோருடன் நீங்கள் சென்று விடுங்கள்" என்று காவல்துறை அதிகாரிகள் அறிவுரை என்று வழிகாட்டுவதும் அதிகப் பிரசங்கித்தனம் மட்டுமல்ல; சட்ட விரோத அடவாடித்தனமும் ஆகும்!

மனப்பக்குவ அறிவுரைப்

பயிற்சி அளிக்க வேண்டும்

 அதுபற்றி உச்சநீதிமன்றத் தீர்ப்பில் நீதிபதி தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதோடு, அத்தகைய மனப்பாங்குள்ள காவல்துறையினருக்கு "நல்ல மன வளப் பயிற்சி தரும் ஏற்பாடுகளை செய்ய வேண்டும். விசாரணை அதிகாரிகளுக்கு மனப்பக்குவ அறிவுரைப் பயிற்சி அளிக்க வேண்டும். சமூக ரீதியான உணர்ச்சி பூர்வ வழக்குகளாக வரும் இவற்றை மனோதத்துவ ரீதியில் எப்படி சிறப்பாக எதிர் கொள்ளுவது என்பதைச் சொல்லிக் கொடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

வயது வந்தோர் ஒருவரை ஒருவர் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் முழு உரிமை சட்டப்படி உள்ள நிலையில் - மண ஒப்பந்தத்தில் இருவர் முழு மனதோடு ஈடுபட்ட நிலையில் பெற்றோரின் ஒப்புதலோ, அந்த ஜாதியினரின் ஒப்புதலோ, குடும்பத்தின் ஒப்புதலோ தேவையற்ற ஒன்று என்பதை உச்சநீதிமன்றத் தீர்ப்பு வலியுறுத்தியுள்ளது  - வைர வரிகள்.

தந்தை பெரியார் கருத்துகள்

சரித்திர சான்று!

தந்தை பெரியார் பல ஆண்டுகளுக்கு முன் ஆணியடித்தது மாதிரி சொன்னார்: 'மூன்றாம் நபர் இந்த ஒப்பந்தத்தில் குறுக்கிடுவதே அதிகப் பிரசங்கித்தனம்' என்றார். அக்கருத்து உச்சநீதிமன்றத்தில் அப்படியே இன்று தீர்ப்பாகப் பிரதிபலிக்கிறது. பெரியார் கருத்துகள் காலத்தை வென்றவை என்பதற்கு சரியான சரித்திர சான்று அல்லவா! இந்த தீர்ப்பை பாராட்டுகிறோம்; வரவேற்கிறோம்.

தமிழ்நாடு அரசும் ஜாதி மறுப்புத் திருமணங்கள் செய்பவர்களுக்கு, அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு, தாய் அல்லது தந்தை ஜாதியை (இடஒதுக்கீடு அல்லது பிற வாய்ப்புகளுக்கு மட்டும் பயன்பட) தேர்ந்தெடுத்துக் கொள்ள ஓர் ஆணையின் மூலம் தேர்வு செய்யும் உரிமை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. (G.O. MS. No8 - dated 9.2.2021  பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்  மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை) இது மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.

முன்பு தி.மு.க. ஆட்சியில் கலைஞர் முதல்வராக இருந்தபோதே இப்படி ஒரு சுற்றறிக்கை வெளிவந்ததை புதுப்பிப்பதாகவே இது அமைந்துள்ளது.

இந்த கால கட்டத்தில்

இது முக்கியமானதும்கூட!

மேலே கண்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையே இனி மேலும் "ஜாதி ஆணவக் கொலைகள்" நடைபெற இடம் தராது. தமிழ்நாடு காவல்துறை ஒரு தனிப்பிரிவையே

(க்யூ பிரான்ஞ்ச் மாதிரி) உருவாக்குதல் அவசர, அவசியமானதாகும். ஜாதி மறுப்புத் திருமண வாழ்விணையர்களுக்குப் பாதுகாப்பும், வேலை வாய்ப்புகளில் முன்னுரிமையும் தருவது ஜாதிஒழிப்பை விரைவுபடுத்த மேலும் உதவக் கூடும் என்பதால் மத்திய - மாநில அரசுகள் இதனை முக்கியமாகக் கருதி செயல்படுவது காலத்தின் கட்டாயமாகும்.


கி. வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

13-2-2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக