கேரள மாநிலத்தில் தோஷம் நீக்க வேண்டி தனது ஆறுவயது மகனை கை, கால்களை கட்டி நரபலி கொடுத்துள்ளார் ஒரு கொடூர தாய். பள்ளி ஆசிரியரான அந்தத் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திரமாநிலம் திருப்பதி அருகே, ஒரு பேராசிரியர் குடும்பத்தினர் தெய்வீக சக்தி கிடைக்கும் என்று நம்பி புத்தி கெட்ட நிலையில், கடந்த மாதம் தங்களது இரண்டு மகள்களை கொடூரமாக அடித்துக் கொன்று நரபலி கொடுத்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியிருந்தது. அதே போன்ற ஒரு கொடூர நிகழ்வு கேரள மாநிலத்தில் தற்போது நடந்துள்ளது. ஆறு வயது மகனை பெற்ற தாயே நரபலி கொடுத்துள்ளார்.
கேரள மாநிலம் பாலக்காடு அடுத்த குளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் 40 வயதான சுலைமான். இவரது மனைவி 40 வயதான சபிதா. இந்த தம்பதிக்கு மூன்று மகன்கள் ஏற்கெனவே உள்ள நிலையில், சபிதா நான்கு மாத கர்ப்பமாக உள்ளார். சுலைமான் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், சபிதா தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இவர்களது மூன்றாவது மகன் 6 வயதான ஆமிலின் ஒன்றாம் வகுப்பு படித்துவந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பாலக்காடு தெற்கு காவல் நிலையத்துக்குத் தொடர்பு கொண்டுள்ளார் சபிதா. தனது மூன்றாவது மகனை கொலை செய்துவிட்டதாகவும், உடல் குளியல் அறையில் கிடப்பதாகக் கூறி இணைப்பைத் துண்டித்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த காவலர்கள் உடனடியாக சபிதா வீட்டிற்குச் சென்று பார்த்த போது, குளியலறையில் சிறுவன் கழுத்து அறுக்கப்பட்டு சடலமாகக் கிடந்துள்ளான். உடலை மீட்ட காவல்துறையினர் உடற்கூறாய்விற்காக உடலை பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணையைத் தொடங்கினர்.
மகனைக் கொன்றதாக தெரிவித்த தாய் சபிதாவிடம் விசாரணை நடத்தியதில் பலதிடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. சபிதா கடந்த சில நாட்களாக சோர்வான நிலையிலும், மனநிம்மதி இல்லாமலும் இருந்ததாகவும், அதற்குக் கடவுள் தோஷம் காரணம் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.
மேலும் தோஷம் நீங்க அவரது மூன்றாவது மகனை நரபலி கொடுத்தால் தோஷம் நீங்குவதுடன், மகனும் சிறிது நேரத்தில் உயிரோடு வந்து விடுவதாகவும் கனவு கண்டதாக அவர் தெரிவித்துள்ளார். அதனால் அதிகாலை தூங்கிக்கொண்டிருந்த தனது மகனின் கை மற்றும் கால்களை கட்டியுள்ளார். மகன் சத்தம் போடாமல் இருக்க வாயில் துணியைத் திணித்துள்ளார்.மகனை வீட்டில் உள்ள குளியலறைக்குத் தூக்கிச்சென்றவர், சமையலறையில் இருந்த கத்தியால் கழுத்தை அறுத்துக் கொடூரமாக கொலை செய்துள்ளார்.
இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து ஆமிலின் பரிதாபமாக இறந்தார். ஆனால் சிலநிமிடங்களில் மகன் உயிர்பெற்று வருவார் என்று கனவு கண்ட நிலையில் பல மணி நேரம் ஆகியும் மகன் உயிரோடு வரவில்லை .
அப்போதுதான் தனது மகனைக் கொன்றுவிட்டோமே என்ற உணர்வு அவருக்கு ஏற்பட்டுள்ளது. அதன் பிறகுதான் காவல்நிலையத்திற்குத் தொடர்பு கொண்டதாக சபிதா வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
சபிதாவைக் கைது செய்த காவல்துறையினர் அவரிடம், அவரை யாராவது நரபலி கொடுக்க வழி நடத்தினார்களா?அல்லது மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இது போன்று செய்தாரா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தோஷம் நீங்குவதற்காக பெற்ற மகனை, தாயே நரபலி கொடுத்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மூடநம்பிக்கைக்குச் சொந்தம் ஒரு குறிப்பிட்ட மதம் மட்டுமல்ல. எல்லா மதங்களும் இதில் போட்டி போடத்தான் செய்கின்றன. 2000மாவது ஆண்டில் உகாண்டாவில் 'டென் கமாண்ட்மென்ட்ஸ் ஆஃப் காட்' என்ற பிரிவைச் சேர்ந்த 250 பேர் சொர்க்கத்திற்குச் செல்லுவதாக, தங்களைக் கடவுளுக்கு அர்ப்பணித்துக் கொள்வதாக நினைத்துக் கொண்டு தீ வைத்துக் கொண்டு எரிந்து மாண்டனர்.
பெற்ற தாயே தான் பெற்றெடுத்த பிள்ளைகளைக் கொடூரமாகக் கொல்லும் அளவிற்குக் கடவுள் நம்பிக்கையும், மதநம்பிக்கையும், சாமியார்கள் வாக்கும் ‘பலம்' பொருந்தியவைகளாக இருக்கின்றன என்பதை எண்ணும் எவரும் பகுத்தறிவுப் பிரச்சாரத்தின் அதிமுக்கியத்துவத்தை உணராமல் இருக்கவே முடியாது.
ஆனால் இந்தக் கேடுகெட்ட நாட்டில் மூடநம்பிக்கையை எதிர்த்துப் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்தால் ‘அய்யோ, மதநம்பிகைகளில் தலையிடுகிறர்களே, இந்தக் 'கருப்பர் கூட்டத்தின்' மீது சட்டம் பாயாதா?' என்று ஓலமிடுகிறார்கள். ஊடகங்கள் வெட்கம் கெட்ட முறையில் இதில் முன் வரிசையில் நிற்கின்றன. விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றிருப்பது வெறும் ஏட்டுச் சுரைக்காய்த்தானா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக