பூணூல் ஏட்டின் பூணூல்தனம்

* கலி. பூங்குன்றன்

துணைத் தலைவர், திராவிடர் கழகம்

இன்று (18.1.2021) வெளி வந்துள்ள 'இந்து தமிழ் திசை' நாளேட்டில் "தேர்தல் கூட்டணி என்பது கொள்கை சார்ந்ததா?" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளி வந்துள்ளது. எழுதியவர் மூத்த பத்திரிகை யாளராக இருந்துவிட்டுப் போகட்டும்.

(1) 1989இல் எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு, திராவிட கழகத்தினர் தஞ்சையில் பூணூல் அறுப்புப் போராட்டம் நடத்தினர் என்கிறது இந்தப் பூணூல் ஏடு.

அப்படி ஒரு போராட்டத்தை திராவிடர் கழகம் அறிவித்ததா? அறிவித்தது என்றால் எப்பொழுது அறிவிக்கப்பட்டது? எந்தெந்த ஊர்களில் அந்தப் போராட்டம் நடத்தப்பட்டது, எத்தனைப் பேர்களின் பூணூல்கள் அறுக்கப்பட்டன? பூணூலை அறுத்த எத்தனை  திராவிடர் கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டு   தண்டனை பெற்றனர்?

இன்று 'இந்து தமிழ் திசை' ஏட்டில் எழுதுவதற்கு இடமும், அவகாசமும் போதிய அளவில் இல்லை என்றால் நாளையாவது அறிவு நாணயத்தோடு எழுதினால் நல்லது.

பார்ப்பனர்கள் பூணூல் அணிந்திருப்பது தாங்கள் பிராமணர்கள் - பிர்மாவின் நெற்றியில் பிறந்தவர்கள், துவி ஜாதியினர் (இருபிறப்பாளர்கள்) என்ற பிறவி ஜாதி ஆணவ ஆதிக்கத் திமிருடன் தானே.

பார்ப்பனர் அல்லாத சூத்திரர்களுக்கு அந்தப் பூணூல் அணியும் உரிமை கிடையாது - காரணம் அவர்கள் நான்காம் வருணத்தவர்,  மனுதர்மப்படி வேசி மக்கள் என்பதை இந்த 2021லும் அறிவிக்கும் விளம்பரப் பலகைதானே இந்தப் பூணூல். ஆண்டு தோறும் ஆவணி அவிட்டம் என்ற ஒரு நாளையே அறிவித்துப் பூணூலைப் புதுப்பித்துக் கொள்வதும், குறிப்பிட்ட வயது பார்ப்பனச் சிறுவர்களுக்குப் பூணூல் கல்யாணம் நடத்துவதும்  எந்த அடிப் படையில்?

இதுபற்றி எல்லாம் சிந்திப்பதற்கும், எழுதுவதற்கும் இந்த வளர்ந்த, படித்த, உரிமை முழக்கமும், சுயமரியாதை உணர்வும் மேலோங்கி நிற்கும் கால கட்டத்தில்கூட முன் வராதது ஏன்?

உணவு விடுதிகளில் 'பிராமணாள்' என்ற பெயர் பலகையை அழிக்கும் போராட்டத்தை வெளிப் படையாக அறிவித்து அதில் வெற்றி பெற்றதும் திராவிடர் கழகமே.

அதே போல பூணூல், பார்ப்பனர்கள் - அதாவது பிராமணர்கள் அணியும் பூணூல் பெரும்பாலான பார்ப்பனர் அல்லாத 'சூத்திர' மக்களை இழிவுபடுத்தும் தன்மையை எதிர்த்துப் போராட்டம் நடத்துவதற்கு, மனித உரிமையின் அடிப்படையில் நிரம்ப நியாயம் உண்டு தான்.

அதனை எதிர்த்துப் போராட்டம் நடத்த வேண்டும் என்று திராவிடர் கழகம் முடிவு செய்தால், "இந்த நாளில், இத்தனை மணிக்கு அந்தப் போராட்டம் நடக்கும்" என்று முன்னதாகவே அறிவித்து, போராட்ட வீரர்களின் பட்டியலைக் காவல் நிலையத்திற்கும் கொடுத்து, அதன்படி வன்முறைக்கு இடம் இல்லாத வகையில்  நடத்தும் - திராவிடர் கழகம் நடத்தும் எந்தப் போராட்டமும் இந்த வழிமுறைப்படிதான் நடக்கும் என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள் கிறோம்.

ஆங்காங்கே ஒன்றிரண்டு இடங்களில் பூணூல் அறுப்பு நடக்கவில்லையா? என்ற கேள்வியை எழுப்பலாம். தனிப்பட்ட முறையில்  உணர்ச்சி கொண்டு சிலர் நடத்தியிருக்கலாம். ஆனால் திராவிடர் கழகம் கூறி நடந்தவை அல்ல.

தஞ்சையில் 'இந்து' ஏட்டின் செய்தியாளர் பூணூல் அறுக்கப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டு, கழகத் தோழர்கள்மீது பொய் வழக்குப் போடப்பட்டு,  நீதி மன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது என்பதெல்லாம் தெரியாதா?

விருதுநகர் மாவட்டம் நின்ற நாராயணப் பெருமாள் கோவிலுக்கு வந்து, குளப்படிக்கட்டில் ஒருவர் வழுக்கி விழுந்தது குறித்து, உரியவருக்குத் தகவல் கொடுக்க, தன் பணியாளரிடம் பின்வருமாறு சொல்லி அனுப்பி னாராம் ஒரு நிலக்கிழார்.

'திருக்குடந்தை திரு திரு லோக தாதாச்சாரி திருத்தங்கல் திருநின்ற நாராயணப் பெருமாள் திருமுகம் சேவிக்க திருக்கோவிலுக்கு வந்து, திருக் கோயில் வளாகத்தில் இருக்கக் கூடிய திருப்படிக் கட்டுகளில் இறங்கி திருத்துழாய் பிடுங்கிறச்சே திருக்குளத்துப் படிப்பாசிகள் வழுக்கி, திருக்குளத்தில் விழுந்து, திருக்காலில் ஹீனமடைந்தார்...!'னு போய் சொல்லிடு என்றாராம் என்பது போல, பாரம்பரியம் மிக்கது என்று சொல்லிக் கொள்ளும் 'இந்து' ஏட்டில் ஆதாரமில்லாமல் கட்டுரை எழுதுவது அல்லது எழுத வைப்பது எந்த வகையில் யோக்கிய தாம்சம் வாய்ந்தது? அதுவும் திராவிட கழகத்துக்கும், திராவிடர் கழகத்துக் கும்கூட வித்தியாசம் தெரியாமல் எழுதுகோல் பிடிப்பது பரிதாபமே!

(2) தி.மு.க. மீது அபாண்டமான குற்றப் பத்திரிகை இன்னொரு பக்கத் தில், தேர்தலில் கூட்டணி வைத்து வெற்றி பெற்ற காரணத்தாலேயே கூட்டணியைச் சேர்ந்த ஒரு கட்சி ஆட்சிப் பீடம் ஏறிவிட்டால் கூட்டணி யில் உள்ள ஒவ்வொரு கட்சியும் தன் கொள்கையை முழுவதுமாக நிறை வேற்ற வேண்டும் என்பது எதிர் பார்க்கக் கூடிய ஒன்றல்ல.

அதே நேரத்தில் கூட்டணியில் இருந்த நிலையில், சுதந்திர நாள் விழாவில் தேசியக் கொடியை ஏற்றும் உரிமையை தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல; இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் வாங்கிக் கொடுத்த சாதனையாளர் திமுக தலைவரும், தமிழ் நாடு முதல்வருமான கலைஞர் என்பதை வசதியாக 'இந்து தமிழ் திசை' ஏடு மறந்ததா - மறைக்கிறதா?

தமிழ்செம்மொழி உரிமையை காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில்  பெற்றது யார்? இதுவரை இந்தி இங்கே திணிக்கப்பட முடியாததற்கு யார் காரணம்?

அகில இந்திய அளவில் இந்தி பேசாத மக்கள் விரும்புகிறவரை இந்தி திணிக்கப்பட மாட்டாது என்ற உறுதிமொழியை பிரதமர் நேரு அவர்களிடமிருந்து பெற்றது யார்?

திமுக அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்த நிலையில் 'நீட்'டை எதிர்த்துப் போராடி வெற்றி பெறவில்லையா?

சுயமரியாதைத் திருமணச் சட்டம், சென்னை மாநிலத்துக்கு தமிழ்நாடு என்ற பெயர், இந்திக்கு இடமில்லை தமிழ்நாட்டில், தமிழும், ஆங்கிலமும்தான் என்று நிலை நிறுத்தப்படவில்லையா?

அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம், திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு அவர்களின் துறையில் அனுமதி கிடைத்து செயல்படக் காத்திருந்த போது - அதனைத் தடுத்து நிறுத்தியது மத்திய பா.ஜ.க. ஆட்சியும், தமிழக அதிமுக ஆட்சியும்தானே.

பழி சுமத்த வேண்டும் என்பதற்காக திமுகமீது 'இனத் துவேஷத்தில்' எதையும் கிறுக்கலாமா?

(3) தேர்தல் கூட்டணி என்பது கொள்கை சார்ந்ததா? என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

திமுக வெற்றி பெற்ற நிலையில் செய்தியாளர் களிடம் பேசிய அண்ணா அவர்கள், "நாங்கள் அமைத்திருந்தது. போட்டியிடும் இடங்களுக்கான தேர்தல் உடன்பாடுதானே (Electoral Arrangement) தவிர கூட்டணி அல்ல" என்று கூறிடவில்லையா?

(4) தமிழ்நாட்டில் 1967-இல் தேர்தல் கூட்டணி என்று முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் அண்ணா தானாம்!

இது உண்மைதானா? 1952 தேர்தலில் காங்கிரஸ் அல்லாத அய்க்கிய முன்னணி என்ற அமைப்பில் கூட்டணி அமைத்துப் பெரு வெற்றி பெறவில்லையா?

முதன் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரசை எதிர்த்து வெற்றி பெற்ற, 'காமன் வீல்' கட்சியினரை (மாணிக்கவேல் நாயகர்) தம் பக்கம் ஈர்த்து அவருக்கு அமைச்சர் பதவியையும் அளித்து அரசியலில் நேர்மையற்ற தன்மைக்குக் கால்கோள் விழாவை நடத்தியவர் ராஜாஜிதானே. இதெல்லாம் மறந்து விட்டதா அல்லது மறைக்கப்படுகிறதா?

'பூணூலைப் பிடித்துக் கொண்டு உதயசூரியனுக்கு ஓட்டுப் போடுங்கள்' என்று ராஜாஜி கூறியது - நயத்தக்க நாகரிகமன்று என்று எழுத 'தமிழ் இந்து' ஏட்டுக்கு மனத்தடை ஏன் என்பது புரிந்து கொள்ளத் தக்கதே.

(5) திமுகவின் அய்ம்பெரும் முழக்கங்கள்!

(1) அண்ணா வழியில் அயராது உழைப்போம்.

(2) ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம்.

(3) இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்.

(4) வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்.

(5) மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி.

இந்த அய்ந்து முத்தான திமுகவின் முழக்கங்களில் பெரும்பாலானவை தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களுக்கும் தேவையானவைதான்.

தமிழ் மண்ணில் சமூகநீதிச் சிந்தனை - மதச் சார்பற்ற கொள்கையில் முதல் நிலை - இவை திராவிட இயக்கச் சித்தாந்தங்களின் சிலிர்ப்புகள்தான் - இந்தியத் துணைக் கண்டத்துக்கே அளிக்கப்பட்டுள்ள விலை மதிக்க முடியாத கருவூலங்கள் தாம்.

"பெரியார் வாழ்க! வெல்க திராவிடம்!" என்று நாடாளுமன்றத்தில் எழுந்த முழக்கங்களும், இந்திய துணைக் கண்டத்தில் பெரும்பாலான மக்களான தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை யினருக்கான வெகு மக்களுக்கானது என்பது மட்டும் நினைவில் இருக்கட்டும்!

இது ஓர் அபாயமானதாக ஆதிக்கக்காரர்களின் கண்களைக் கருவேல் முள்ளாகக் குத்தலாம். ஆனாலும் இந்த நியாயமான - அரசமைப்புச் சட்ட ரீதியான தேவைக்கான முழக்கங்கள்- இதனை இந்தியத் துணைக் கண்டத்து வெகு மக்கள் தாவிப் பிடித்துக் கொள்ளும் காலம் வெகு தூரத்தில் இல்லை, வாழ்க பெரியார் - வெல்க திராவிடம்!