மு.வி.சோமசுந்தரம்

உலக மொழிகளில், இயல், இசை, நாடகம் என்ற முக்கூறுகளையும் தன்னிடத்தே கொண்ட ஒரே மொழி தமிழ் மொழி என்று அறிஞர் பெருமக்கள் கூறியுள்ளனர். இசை, மற்ற இரண்டு இயல்களுக்கும் தன் பங்களிப்பை அளித்து பெருமை சேர்ப்பது கண்கூடு. தமிழகத்து இசை வரலாற்றினை தொல்காப்பியத்திலிருந்து தொடங்க வேண்டும் என்பர். காலப்போக்கில், கலாச்சார படையெடுப்பால் கருநாடக இசை மேடையைப் பிடித்தது. தமிழிசை துக்கடா நிலைக்குத் தள்ளப்பட்டது. கருநாடக இசையின் குறியீடுகளாக உள்ள ச, ரி, க, ம-க்களுக்கு இணையாக குரல், துத்தம், கைக்கிளை உழை என்ற தமிழ்ப் பெயர்கள் உண்டு. சமஸ்கிருதம், தெலுங்கு, கலந்த கருமேகங்களாக கருநாடக இசை, இசை வானில் தவழ்ந்து வருகிறது.

‘விடுதலை' வெளிச்சத்தில்

கருநாடக இசைக்கு காப்பாளர்கள் போன்று பார்ப்பனர்கள் காட்சியளிக்கின்றனர். வருண பேதத்தை காக்கும் முறையில் கருநாடக இசைக்கலைஞர்கள் ‘கலப்படம்' இல்லாமல் அவர்கள் இசையை ‘தூய்மை‘யாக இருக்கத் தூங்காமல் பாதுகாக்கத் தவறுவதில்லை. இசைக்கலைஞர் யேசுதாசின் அனுபவம் ஒரு எடுத்துக்காட்டு. தற்போது கருநாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா அவர்கள் பார்வையில் சிக்கியுள்ளார். இதனை ‘விடுதலை' வெளியூர் 6.2.2020 இதழ் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது. அந்த வெளிச்சத்தில் மேலும் சில செய்திகள் பளிச்சிடுகின்றன.

ஊட்டியில் கிருஷ்ணாவின் பேட்டி

தமிழ்நாட்டின் ஊட்டியில், இதழ் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்த டி.எம்.கிருஷ்ணா சில உண்மைகளை போட்டு உடைப்பதைக் காண்போம்.

பார்ப்பனரின் ஆதிக்கத்தில் கருநாடக இசை

கருநாடக இசை தூய்மையானது என்ற கருத்து மறுப்பு தெரிவிக்கப்பட வேண்டிய ஒன்று. நாம் இஸ்லாமிக், பிரெஞ், பிரிட்டிஷ் மரபு வழியில் தாக்கத்திற்குட்பட்டவர்கள். தூய்மையோ, தூய்மை அற்றதோ, ஒரு கலையின் அடித்தளத்தைப் பற்றி விவாதிக்கப்பட வேண்டும் என்று கூறுவேன். தூய்மையானது என்று கூறுவது ஆபத்தான வலைப்பொறி. நம் சமூகத்தில் எந்த ஒரு கலையும் ஜாதி அடிப்படையிலும், ஆண், பெண் அடிப்படையிலும் வேறுபடுத்திப் பார்க்கும் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருக்கிறோம். கருநாடக இசை இதற்கு விதிவிலக்கல்ல, கருநாடக இசை பார்ப்பன இனத்தின் ஆதிக்கத்துக்குட்பட்டுள்ளது. அதனால் பெருமளவுக்கு, அவர்களுடைய அளவு முறையே கடைப்பிடிக்கப்படுகிறது. ஆதரிக்கப்படுகிறது. அந்த இனத்தாரால்  செவிமடுக்கப்படுகிறது. இதை எவரும் மறுக்க முடியாது. எந்த இசை நிகழ்ச்சிக்கும் போங்கள். அதை அங்கு நீங்கள் பார்க்கலாம். எதனால் இது ஏற்பட்டது என்பது அது தனிக்கதை.

கர்நாட்டிக் இசை, பல்வகை கலாச்சாரத்தைக் கொண்ட பல்வேறு மக்களால் இசைக்கப்பட வேண்டும். பலதிறப்பட்ட அடையாளங்களைக் கொண்டவர்களால், கலாச்சாரத்தை உடையவர்களால், வரலாற்றை, நம்பிக்கையைக் கொண்டவர்களால் இசைக்கப்பட வேண்டும். ஏன் பல மதப் பிரிவினரும் இசை நிகழ்ச்சி நடத்த வேண்டும்.

பக்திப் பாடலாக மாறிய கருநாடக இசை

கருநாட்டிக் இசை, பக்திப் பாடல்களிலிருந்து சிறிது மாறுபட்டது. நாம் பெரும்பாலும் பக்திப் பாடலாக மாற்றிவிட்டோம் கர்நாட்டிக் இசை பண்பியலானது (Abstraction). கர்நாட்டிக் இசை பக்தியை ஒட்டியது என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. பக்தி என்பதை, மத வழியில், ஆழ்ந்து அறியவேண்டியது. கர்நாட்டிக் இசை ஒரு கலை.

தோடி ராகம், ஈரான், பாரசீகம், துருக்கியில் இருந்து வந்தது. எங்கிருந்தோ வந்த ஒன்றை, காலப்போக்கில் மாற்றமடைந்த ஒன்றை தென்னிந்தியாவுக்கு உரியது என்று கூறுவது ஆச்சரியமாக இருக்கிறது.

(ஆதாரம்: ‘தி இந்து', 10.1.2017)

குடிசை சிறாரின் இசைக்கச்சேரி

இத்தகைய சிந்தனையோட்டமுள்ள இசைக்கலைஞர், தன் எண்ணத்தை செயலில் கொண்டு வந்தார். பின் தங்கிய பகுதியைச் சேர்ந்த ஏழைக் குடும்பப் பார்ப்பனரல்லாத சிறுவர், சிறுமிகளுக்கு கருநாடக இசை வகுப்பு நடத்தி, அவர்களைக் கொண்டு ஓர் இசை நிகழ்ச்சியையே நடத்திக்காட்டினார்.

பந்தாடப்பட்ட நிகழ்ச்சி

கலாசேத்திரா நிர்வாகிகளின் ஒப்புதல் பெற்று நிகழ்ச்சிக்கு நாள் குறித்து, எதிர்பாராத வகையில் கலாசேத்திரா பின்வாங்கியதால் பந்தாடப்பட்டு, குறித்த தேதியில், சென்னை ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம் கல்லூரி அரங்கில் இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, எழுதிய ஆய்வு நூல் ‘செபஸ்டியன் & சன்ஸ்' மிருதங்கம் செய்வோர் பற்றிய சுருக்கமான வரலாறு' (Sebastian & Sons: A brief history of mirdangam makers) எழுத்தாளர் ராஜ்மோகன் காந்தி, எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் ஆகியோர் பங்கேற்ற விழாவில். நூலின் ஆசிரியர் டி.எம்.கிருஷ்ணா, தான் முன்பு எழுதிய இரண்டு நூல்களைப் போன்று, இந்த நூலும் இசைக்கருவி தொடர்புடையது என்று குறிப்பிட்டார்.

தோல் இசைக்கருவி

எந்த இசை நிகழ்ச்சியும், நாட்டிய நிகழ்ச்சியும் இசைக்கருவிகளின் துணையின்றி எடுபடாது. இசைக்கருவிகள், துளைக்கருவி, தோல்கருவி, நரம்புக்கருவி என்ற வகையில் அமைந்துள்ளன. அண்மையில் டி.எம்.கிருஷ்ணா வெளியிட்ட நூல் மிருதங்கம் செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ள கைவினைஞர்களைப் பற்றியது. நாதஸ்வரம், வீணை போன்ற இசைக்கருவிகளை செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ள மக்களைப்பற்றி எழுதுவது போலிருந்தாலும், மிருதங்கம் செய்யும் முறை பற்றி எழுதிய நூல், பல சிக்கல்களையும், மறுப்பையும், கண்டனத்தையும் சந்திக்க வேண்டியதாயிற்று. காரணம், இது தோல் கருவி. - மாட்டின் தோல் இக்கருவியுடன் தொடர்புடையதே காரணம்.

இந்நூலைப் பற்றி அதன் ஆசிரியர் எழுதிய கட்டுரையையும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள, மிருதங்கக் கலைஞர் பாலக்காட் மணி அய்யர் குடும்பத்தினர் எழுப்பிய கண்டன குரலையும் அறியும் வாயிலாகத் தந்தை பெரியாரின் பணி தொடரவேண்டிய கட்டாயத்தை உணர முடிகிறது.

டி.எம்.கிருஷ்ணாவின் புத்தகம்

இனி டி.எம்.கிருஷ்ணா அவர்களின் கட்டுரைக்குள் (தமிழாக்கம்) செல்வோம்.

மிருதங்கம், பலா மரத்தில் செய்யப்படுகிறது. அதன் இரு முனைகளும் கூம்பியிருக்கும். அந்த முனைகள், பசு, எருது அல்லது வெள்ளாட்டுத் தோலால் மூடப்பட்டிருக்கும்.

பெரும்பாலான இந்தியர்கள் உட்பட, உலகளவில் இந்துக்கள் மாட்டிறைச்சி உண்ண மாட்டார்கள் என்ற பொதுவான நம்பிக்கை உள்ளது. ஆனாலும் வேதகாலம் தொட்டும், பிறகு பார்ப்பனரிடையேயும் மாட்டிறைச்சி உண்ணும் வழக்கம் இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. பல இந்துக்கள் மாட்டிறைச்சியை உண்பது தொடர்ந்து வருகிறது. குறிப்பாக தாழ்த்தப்பட்ட இன மக்கள் அவர்களுக்கு எந்த தடை விதிகளும் இல்லை. அதுமட்டுமல்லாமல் உலகில் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் அய்ந்து முன்னணி நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது தற்கால பிராமணீய தத்துவப்படி பசுவானது கொல்லத்தகாத புனித மிருகம், ஆனால் பெரும்பாலானவர்கள் இந்தக் கருத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயமில்லை. ஆனால், பார்ப்பன ஜாதி அதன் மக்கள் தொகையில் தனக்குள்ள எண்ணிக்கைக்கு மீறிய வகையில் கோட்பாடுகளில் கலாச்சார விதிமுறைகளில் அளவுக்கு மீறிய அதன் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. புனிதத்தன்மை என்ற உண்மை இல்லாத கருத்தை உலக அளவில் நிலைநாட்டிக் கொண்டதுடன், இந்திய அரசியல் சட்டத்திலும் இடம் பிடித்துக் கொண்டது.

மிருகத்துக்கு அடிப்படை உரிமையா?

இந்த ஏற்பாட்டின்படி, பசு பாதுகாப்பு பற்றி, மாநில அரசுகள் சட்டம் இயற்றும் உரிமைப் பட்டியலில் சேர்க்கப்பட்டாலும் நீதிமன்றத்தை அணுக முடியாத நிலைப்பாடுடையது. காலப்போக்கில் பல மாநிலங்கள் பசுவை கொலை செய்யும் தடைச் சட்டத்தையும் அத்தகைய செயல்களைக் கட்டுப்படுத்தும் சட்டத்தையும் இயற்றியுள்ளன.

(இந்திய நாடாளுமன்றத்தில், 1990ஆம் ஆண்டில், குமன் மால்லோத்தா, பசு பாதுகாப்புப் பற்றிய தீர் மானத்தை கொண்டு வந்தார். விவாதம் நடந்தது. சேத் கோவிந்ததாஸ் என்ற உறுப்பினர் பேசுகையில், பசு பாதுகாப்புப் பிரச்சினை, நீண்டகாலமாக உள்ள பிரச்சினை லார்ட் கிருஷ்ணா காலத்திலிருந்து இது முக்கியத்துவம் பெற்றுள்ளது. கிருஷ்ணனை இஷ்ட தேவதையாக வணங்கும் குடும்பத்தை சேர்ந்தவன் நான். பசு பாதுகாப்பு என்பது நமது மதசம்பந்தப்பட்டதோடல்லாமல், நம் கலாச்சாரத்தோடும் தொடர்புடையது. பசு பாதுகாப்பு சட்டம் அரசியல் அடிப்படை உரிமைப்பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும். அடிப்படை உரிமை. மனிதர்களுக்கு உண்டே தவிர மிருகங்களுக்கு இல்லை என்பதாலும், டாக்டர் அம்பேத்கர், இச்சட்டத்தை மாநிலச் சட்டம் இயற்றும் உரிமைப்பட்டியலில் சேர்க்க விரும்புவதாகவும் கூறினார்)

ராஜாஜியின் வழிகாட்டல்

பாரம்பரிய பாலக்காட்டு பார்ப்பன குடும்பத்தில் பிறந்தவர் பாலக்காட் மணி அய்யர். அவர் முரண்பாடுபட்ட ஒரு மனப்போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருந்தார். மிருதங்கம் அவருக்கு அவரின் உயிருக்குயிரான இசைக்கருவி. அதை உருவாக்க புனிதம் என்று கருதக் கூறிய மூன்று பசுக்களைக் கொல்லக்கூடிய கட்டாய நிலை இருந்தது. மிருதங்கம் ஒரு வேத வாத்யம் என்று அய்யர் உணர்ந்திருந்தாலும், பசுவை கொல்வது சரியா என்று தனக்குத் தானே கேட்டுக்கொண்டார். தனக்குள் மன உடன்பாடு ஏற்பட வழியைத் தேடினார். காஞ்சி மடத்து சங்கராச்சாரியாரை அணுகுவது என்ற முடிவெடுத்தார். அய்யர் தயங்கினார். இத்தனை ஒரு கேள்வியை மத குருவிடம் கேட்பது முறையற்ற செயலாகுமன்றோ என்று எண்ணினார். தடுமாற்ற மனநிலையில், மகாத்மா காந்தியால் தன் மனசாட்சிக் காவலர் என்று அழைக்கப்பட்ட சி.இராஜகோபாலாச்சாரியிடம் சென்று பேசுவது என்று முடிவெடுத்தார்.

தன் நண்பர்கள் மூலம் ராஜகோபாலாச்சாரியைச் சந்தித்து, அவர்களிடம் தன் கேள்வியைக் கேட்டார். ராஜாஜி அவரின் தன்மையில் பலன் அறியும் தத்துவ முறையில் ‘நதி மூலத்தையும், ரிஷி மூலத்தையும் தேடாதே', என்ற பழமொழியை பதிவாகக் கூறினார்.

மிருதங்கம் செய்பவர் ‘தீட்டு' பட்டவர்

மணி அய்யருக்கு அந்த பதில் மிக வசதியாய் போயிற்று. இசைக்கருவியை செய்பவர் கருவி தோற்றம் பெறும் முறையை திரையிட்டவராய், அவருக்கும் அய்யருக்கும் இடைப்பட்டவராகி விடுகிறார். இதன் மூலம் அய்யர் பழமொழியின் வழி நிறைவு காண வழியேற்பட்டது. தற்போது, பசுவானது, கலைஞர் ஒருவரின் பார்வையிலிருந்து விலக்கப்பட்டு விடுகிறது. பசுவைக் கொல்வதும், தோலை எடுப்பதும், அய்யருடைய அனுபவத்திற்கு அப்பாற்பட்டதாகிவிடுகிறது. அவர் அப்படி ஏதும் நடக்காதது போல் நடிக்கலாம், மிருதங்கம் செய்பவர். பசுவையும் பார்ப்பனரையும் தனிமைப்படுத்தி இடையில் வாசற்படியில் நிற்கின்றார். அதன்மூலம் பார்ப்பனர் தன் ‘தூய்மையை' பாதுகாக்க உதவுகிறார். எனவே மிருதங்கம் செய்பவர், மிருதங்க கலைஞருக்கு முக்கியத்துவம் பெற்றவராகி விடுகிறார். எனினும் மிருதங்கக் கலைஞர், மிருதங்கம் செய்பவரைத் தீட்டுப்பட்டவராகவும், சமத்துவம் பெறாதவராகவும்   மாற்றிவிடுகிறார்.

பசுவின் ரத்தத்தை எடுத்தவுடன், தோலை சுத்தம் செய்து, துண்டாக்கி, உலர்த்தி இறுதியாக மிருதங்கக் கலைஞரிடம் கொண்டுவரப்படுகிறது. மிருதங்கம் செய்வோரின் உழைப்பால், தோல் மாற்றமடைந்து, தேவைப் பொருளாக மாறிவிடுகிறது. மிருதங்கம் செய்யும் ரவிக்குமார் அவர்கள் பிய்த்தெடுக்கும் தோலுக்கும் உயிர் உண்டு என்று கூறினார். அதன் உண்மை என்னவென்றால் மிருதங்கம் செய்பவர்கள் தான், மாட்டுத் தோலுக்கு உயிர் கொடுப்பவர்கள். இதை நான் ரவிக்குமாருக்கு நினைவுபடுத்தினேன்.

பூஜை அறையின் மிருதங்கம்

மிருதங்கம் வாசிப்பவர் உணரத்தவறினாலும் மிருதங்கம் செய்பவர் ஒரு உண்மையை தவிர்க்க முடியாது. மிருதங்கம் செய்பவர் கூறியதாவது: “நாங்கள், பசு, ஆடு பற்றி பேசுகிறோம். பெரும்பாலான மிருதங்க கலைஞர்கள் பார்ப்பனர்கள். அவர்கள் தோலின் வாசனையை விரும்புவதில்லை. நாங்கள் எப்படி தோலைப் பதப்படுத்துகிறோம் என்பது பற்றி அவர்களுக்குத் தெரியாது. ஆனால் மிருதங்கம் மட்டும் அவர்கள் பூஜை அறையில் இருக்கும். அதே சமயத்தில் அதை செய்பவர்களுக்கு அந்த மரியாதை கிடையாது. மற்றுமொரு மிருதங்கம் செய்பவர் கூறியது, “நான் மிருதங்கம் செய்யும்போது, கால்களால் அதைப்பிடித்து செய்ய வேண்டும். அதே மிருதங்கத்தை நீர் பூஜை அறைக்கு எடுத்துச்சென்று பூஜை செய்கிறீர் (பார்ப்பனீய உலக கண்ணோட்டத்தில், கால்களும், பாதங்களும், சடங்கு, சம்பிரதாயப்படி தீட்டு உண்டாக்குபவை)

மிருதங்கக் கலைஞர்கள் தீட்டுப்படாதத் தன்மையை பாதுகாக்கத் தாங்கள் ஒதுங்கியே இருக்கவேண்டிய அவசியம் உள்ளது. அவர்களுடைய ரசிகர்களும் இதே நிலைப்பாட்டைக் கொண்டவர்கள். சபாக்களின் ஆச்சார ரசிகர்களும், பசு, ஆடு, தோலை உரிக்குமிடத்து வாசனையை அறியமாட்டார்கள்.

தரமான பசுத்தோலைக் கேட்ட மணி அய்யர்

மணி அய்யருக்கு வாழ்வில் ஒரு நெருக்கடியான நிலையை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டது. மிருதங்கம் செய்யும் தொழிலில் கோலோச்சிய பர்னாந்து என்பவரின் சகோதர முறை கொண்ட அல்கத்தான் என்பவர் தரமான மாட்டுத்தோலை தேர்ந்தெடுத்து நல்ல வார்களைத் தயாரிப்பதில் நிபுணர். அல்கத்தான் பர்னாந்துக்கு என்ன உறவு என்பதை தன்னால் உறுதி செய்ய முடியவில்லை. இத்தகைய சூழ்நிலையில் ஆங்கிலேயர் சொல் வழக்கில் உள்ள பொதுவான ‘கசின்' என்ற சொல் கை கொடுத்தது.

மனம் மாறிய மணி அய்யர்

அய்யர் அல்கத்தானுக்கு ஒரு வேலையை ஒப்படைத்தார். தனக்கு நல்ல கறவைப் பசுவின் தோல் வேண்டும். தரத்தில் சமரசம் கூடாது. பணத்தைப் பற்றி கவலை இல்லை என்று கூறினார். அதற்கான விலை ரூபாய் 100 ஆகும் என்று கூறினான். அய்யர் உடனே பணத்தைக் கொடுத்தார். பிறகு 3 அல்லது 4 மணி அளவில் உணவகம் ஒன்றிற்கு சென்றுவிட்டார். திரும்பி வந்தபோது அல்கத்தான் வீட்டுக்கு வெளியே ஒரு பசுவை கையில் பிடித்துக் கொண்டு நின்றிருந்தான். இதைப் பார்த்ததும் அய்யர் அதிர்ச்சியடைந்தார். இதன் தோல் தரமானதாக இருக்கும். ஆனால் மாட்டின் விலை ரூபாய் 120 என்றான். அய்யரின் சம்மதத்தைக் கேட்டு பேரத்தை முடிப்பதாகக் கூறினான். அய்யருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. பசுவைக் கொலை செய்வது பற்றியும், அதைத்தொடர்ந்து பிறகு ஏற்படும் விளைவுக்குப் பொறுப்பேற்பது பற்றியும் நினைத்து முடிவெடுக்கும் நிலையில் இருந்தார். அய்யருக்கு முதன் முறையாக ஏற்பட்ட அனுபவம். பசுவோடு அந்த இடத்தைவிட்டு போகும்படி அல்கத்தானிடம் அய்யர் கூறினார். அய்யர் வாழ்க்கையில் நடந்த இந்த நிகழ்ச்சி உலகில் எங்கும் நடக்கக் கூடியதே. எந்த ஒரு மிருதங்கக் கலைஞரும் இதை ஒத்த நிலையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள தயாராக இருக்க மாட்டார் என்பது உறுதி. அவர்களைப் பொறுத்தவரையில் தோல் வானத்திலிருந்து வருவதாக நினைப்பு.

மணி அய்யரும், பழனி சுப்பிரமணியம் பிள்ளை ஆகிய இருவரும் மிருதங்கம் செய்வோர் தோலை எப்படி தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதை அறிய முயற்சித்தவர்கள். அவர்கள் இன்றும், மிருதங்கம் செய்வோர் பயன்படுத்தும் பதப்படுத்தப்பட்ட தோலைத்தான் பார்க்கிறார்கள். ஆனால் தங்கள் மிருதங்க அறையில் பதப்படுத்தப்பட்ட தோலை பெரியளவில் வாங்கி சேகரித்து வைத்துக்கொள்ள துவங்கிவிட்டார்கள். குறிப்பிட்ட ஓசையை சிறந்த முறையில் எழுப்ப உதவும் தோலின் தேவையின் அடிப்படையில் இந்தத் தோல் சேகரித்து வைக்கும் அவசியம் ஏற்பட்டது என்பதை கூறத்தேவையில்லை.

நன்றி: 'தி இந்து' - 30.1.2020

மணி அய்யர் குடும்பத்தினரின் குற்றச்சாட்டு

இதற்கிடையில் டி.எம்.கிருஷ்ணாவின் புத்தகத்தைப் பற்றி அறிய வந்த மணி அய்யரின் பெயரன் திரு. ஆர்.ராம்பிரசாத் பதற்றம் அடைந்து கோபத்தொனியில், கிருஷ்ணா, தன் நூலில் வெளியிட்ட செய்திகள் கண்டனத்துக்குரியது என்று குற்றம்சாட்டி ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பதிவு செய்துள்ளதாவது:

"நூலின் ஆசிரியர், புத்தகத்தின் நோக்கம், என்ன என்பதை வெளிப்படுத்தாமல், அவர்களை ஏமாற்றிவிட்டார். “மணி அய்யர், மிருதங்கம் செய்வோருடன் கொண்டிருந்த தொடர்பு, அவர்களுடைய குடும்பம், மிருதங்கத்தைப் பராமரிப்பதில் அவரின் அணுகுமுறை பற்றி எங்களிடம் செய்தி சேகரிக்க வந்த கிருஷ்ணா, அவரின் புத்தகம், ஜாதி, மதம், அரசியல் பற்றியது என்று கூறவில்லை”. அவரின் தந்தையார் டி.ஆர்.ராஜாராமன், அவரின் சகோதரர் டி.ஆர்.ராஜாமணி ஆகியோர் கிருஷ்ணாவின் மேல் முழு நம்பிக்கை வைத்திருந்தனர்."

“அந்த நம்பிக்கையில், நாங்கள், விவரங்களை வெளிப்படுத்தினோம். புத்தகத்தில் கூறியுள்ள செய்திகள் மக்களுக்கு ஏற்கெனவே தெரியாததல்ல. அதன் ஆதாரத்திற்காக என் தந்தையாரையும், சித்தப்பாவையும் அணுகினார். புத்தகம் மிருதங்கம் செய்வோரைப் பற்றியது என்ற நம்பிக்கையில் செய்திகளைப் பகிர்ந்தோம். அவர் மாடுகள் கொலை செய்யப்படும் இடத்துக்கு சென்றதாகவும், தோல் விற்பவருடன் பேசியதாகவும் கூறினார். இது அவரின் ஆராய்ச்சிப் பற்றியது என்று நம்பினோம். ஆனால் அவரின் புத்தகம் ஜாதி பாங்குடையது என்று சொல்லவில்லை. குடும்பத்தினர் எவரும் இதுபற்றி வாக்குவாதத்தில் ஈடுபட விரும்பவில்லை.

நாங்கள் நூலைப் படித்ததிலிருந்து எங்கள் நம்பிக்கைக்கு குந்தகம் ஏற்படுத்திவிட்டார் என்பதை உணர்ந்தோம். பல சிறந்த செய்திகளை வெளிப்படுத்தியிருக்கலாம். கூறவேண்டுமென்றால் ஃபெர்னாண்டஸ் குடும்பத்துக்கு கிறிஸ்மஸ் தினத்தன்று தங்க சிலுவையை அன்பளித்தார். அவர் மிக உடல் நலமின்றி இருந்தபோது அவரின் மருத்துவ செலவை மணி அய்யர் ஏற்றுக்கொண்டார்.

பசு பெரும்பாலும் இறைச்சிக்காகத் தான் கொல்லப்படுகிறது. அதன் தோல் துணைப் பொருள் தான். அதை மிருதங்கம் செய்வதில் பயன்படுத்தப்படுகிறது."

- நன்றி: தி இந்து - 1-2-2020