செவ்வாய், 19 ஜனவரி, 2021

"ஹிந்துத்துவாவும், மதவெறி அபாயமும்!'' - ஆசிரியர் கி.வீரமணி

சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற பயிற்சி முகாமில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

சென்னை, ஜன. 17  ஹிந்துத்துவாவில் வேதங்கள் முக்கியம்; திராவிடத்தில் திருக்குறள் முக்கியம் என்றார்   திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

 ‘‘ஹிந்துத்துவாவும், மதவெறி அபாயமும்!''

10.1.2021 அன்று சென்னை பெரியார் திடலில், சென்னை மண்டல கழகத்தின் சார்பில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில்  ‘‘ஹிந்துத்துவாவும், மதவெறி அபாய மும்!''  என்ற தலைப்பில் திராவிடர் கழகத்  தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  காணொலி வாயிலாக உரையாற்றினார். அவரது உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

பாதியில் நுழைந்தது ஜாதி

ஆதிகாலத்தில் ஜாதி கிடையாது; பாதியில் நுழைந்தது ஜாதி. பார்ப்பனர்கள் வருவதற்கு முன்பு ஜாதி கிடையாது.

தமிழ்நாட்டு சங்க இலக்கியங்களில்கூட, பிற்காலத்து சங்க இலக்கியம் திருவள்ளுவர் காலத்தில் ஜாதி உள்ளே நுழைகிறது. அப்பொழுது அவருடைய கருத்தால், அதனுடைய மண்டையில் ஓங்கி அடித்தார்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்

அவனவன் செய்கிற தொழில் வெவ்வேறு. இவன் இவன் இன்னின்ன தொழில்தான் செய்யவேண்டும் என்று கருத்து உள்ளே நுழைகின்றபொழுது, அதைத் தடுத்து நிறுத்தக் கூடியது - ஹிந்துத்துவா கருத்து என்று சொல்லக் கூடிய ஆரியக் கருத்து படையெடுத்து உள்ளே நுழைகின்ற பொழுது, அதற்கு மக்கள் தெரிந்தோ தெரியாமலோ ஏமாறக்கூடிய ஒரு காலகட்டம் வந்தபொழுது, அதற்கு அவர்கள் தலையிட முடியாத அளவிற்கு மூளைக்கு விலங்கு போடுகின்ற நேரத்தில், அந்த விலங்கை எச் சரித்தது குறள்.

ஹிந்துத்துவாவில் வேதங்கள் முக்கியம்; திராவிடத்தில் திருக்குறள் முக்கியம்

எனவேதான், ஹிந்துத்துவா வலியுறுத்துவது

மனுதர்மம், புராணங்கள், இராமாயணம், பாரதம், சாஸ் திரங்கள், ஸ்மிருதிகள் இவை அத்தனையும்!

அதேநேரத்தில் திராவிடத்தை வலியுறுத்துவது,

திருக்குறள்

ஹிந்துத்துவாவில் வேதங்கள் முக்கியம்; மனுவும், இராமாயணமும், பாரதமும், பகவத்கீதையும் முக்கியம்

திராவிடத்தில் திருக்குறள் முக்கியம்.

ஹிந்துத்துவாவில், நம்பு, யாரும் கேள்வி கேட்கக் கூடாது. கண்ணை மூடி நம்பவேண்டும்; கேள்வி கேட்டால், அவன் நாஸ்திகன், அவனை நரகத்தில் தள்ளவேண்டும்.

திராவிடம்,

எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்

மெய்பொருள் காண்ப தறிவு

கேள்வி கேள், நம்பாதே! இதற்கு முன் யார் இதைச் சொன்னது - வேதத்தை மறுத்து சொன்னவர் புத்தர்.

எனவே, புத்தமும், திராவிடத் தத்துவம்தான்.

திராவிடத்திற்கு எல்லைக்கோடு போடக்கூடாது; சிந்துவெளி நாகரிகத்திற்கு நாம் எங்கே போகிறோம் -அதற்குக் கீழேதானே வருகிறது.

ஆகவே, திராவிடத் தத்துவம் என்பது சமத்துவம் என்றால், பவுத்தம் என்பது திராவிடத் தத்துவம். புத்தம் என்றால், அறிவு.

புத்தியைப் பயன்படுத்துகின்றவன் புத்தன்

பெரியார் மிக எளிதாக சொன்னார், புத்தியைப் பயன் படுத்துகின்றவன் புத்தன் என்று.

புத்தியைப் பயன்படுத்தாதே என்று சொன்னது ஹிந் துத்துவா.

வேதங்கள், கண்ணை மூடிக்கொண்டு நம்பு. உனக்குப் புரிகிறதோ, புரியவில்லையோ, சடங்கு சம்பிரதாயத்தை நம்பவேண்டும்.

பெண்கள், அடிமைகள்;

பெண்கள் சமத்துவமானவர்கள் என்பது திராவிடம்.

மானமும், அறிவும் மனிதருக்கு அழகு என்பதுதான் திராவிடம்.

மானமும், அறிவும் மனிதனுக்கு அடையாளம். மனிதன் மற்றவர்களுக்காக இருப்பவன்.

அறிவுச் சுதந்திரத்தோடு நடந்து பார்

என்பது திராவிடம்

ஆனால், நீ மானத்தைப்பற்றி கவலைப்படாதே - அறிவுக்கும் வேலை கொடுக்காதே என்பது ஹிந்துத்துவா.

அறிவுச் சுதந்திரத்தோடு நடந்து பார் - இது திராவிடம்.

சுதந்திரம் - சமத்துவம் - சகோதரத்துவம் இம்மூன்றும் திராவிடம்.

உனக்கு சுதந்திரம் கிடையாது -

வேதங்கள் என்ன சொல்லியிருக்கிறது -

சாஸ்திரங்கள் என்ன சொல்லியிருக்கிறது -

சம்பிரதாயங்கள் என்ன சொல்லியிருக்கிறது -

கடவுள் என்ன சொல்லியிருக்கிறார் -

அதைவிட முக்கியமானது பார்ப்பான் என்ன சொல்கிறான்? என்பதுதான் ஹிந்துத்துவா.

கடவுளுக்கும் மேலானவன் ‘பிராமணன்' என்பதுதான் ஹிந்துத்துவா!

‘பிராமணன்' தன்னை உயர்த்திக் கொள்வதற்காக, ஜாதியைப் பிரித்தது மட்டுமல்லாமல், ஹிந்துத்துவா தத்துவத்தில், மிக முக்கியமாக எந்த அளவிற்கு அவன் உயர்த்திக் காட்டியிருக்கிறான் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

தெய்வாதீனம் ஜகத் சர்வம்

மந்த்ராதீனம் துதெய்வதம்

தன்மந்த்ரம் பிரம்மணாதீனம்

தஸ்மத் பிரம்மணம் பிரபு ஜெயத்.

- ரிக் - 62 ஆவது பிரிவு 10ஆவது சுலோகம்

உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது

கடவுள் மந்திரத்திற்குக் கட்டுப்பட்டவர்

மந்திரம் பிராமணனுக்குக் கட்டுப்பட்டது.

எனவே, கடவுளை வணங்குவது முக்கியமல்ல - பிராம ணனை வணங்கவேண்டும். கடவுளுக்கும் மேலானவன் பிராமணன் இதை நடைமுறைப்படுத்துவதுதான் ஹிந்துத்துவா.

இராமன் பிராமணனை வணங்கினான் என்றார்கள்.

ஏன் பிராமணச் சிறுவன் இறந்து போனதற்குக் காரணம் சூத்திரன், சம்பூகன் தவம் செய்ததினால்தான் -ஆகவே, அவன் தலையை வெட்டு - அதுதான் இராமராஜ்ஜியம் - அதுதான் ஹிந்துத்துவம்.

அது தவறு; சமத்துவம் என்று சொல்வதும், சகோதரத்துவம் என்று சொல்வதும், அறிவுக்குச் சுதந்திரம் கொடு என்று சொல்வதும்தான் திராவிடம்.

திராவிடம் என்பது ரத்தப் பரிசோதனை செய்து நாம் பார்ப்பதில்லை. இரு வேறு தத்துவங்கள் - இரு வேறு பண்பாடுகள். நேர் எதிரானவை - விழுமியர்கள், ஒழுக்கங்கள்.

கருப்பு - வெள்ளை வண்ணங்கள் எப்படி நேர் எதிரானதோ அதுபோன்றதுதான்.

வெண்ணையும் - சுண்ணாம்பும் எவ்வளவு வித்தியாசமானதோ அதுபோன்றதுதான்.

- தொடரும்


பல வருடங்களாக ஒரு கிரிமினல் லா போன்றே மனுநீதி சமூகத்தை தன் கட்டுக்குள் வைத்திருந்தது

சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற பயிற்சி முகாமில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

சென்னை, ஜன. 18  பல வருடங்களாக ஒரு கிரிமினல் லா போன்றே மனுநீதி சமூகத்தை தன் கட்டுக்குள் வைத்திருந்தது என்றார்   திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

 ‘‘ஹிந்துத்துவாவும், மதவெறி அபாயமும்!''

10.1.2021 அன்று சென்னை பெரியார் திடலில், சென்னை மண்டல கழகத்தின் சார்பில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில்  ‘‘ஹிந்துத்துவாவும், மதவெறி அபாய மும்!''  என்ற தலைப்பில் திராவிடர் கழகத்  தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  காணொலி வாயிலாக உரையாற்றினார். அவரது உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

ஆகவே, மிகத் தெளிவாக நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். பண்பாட்டுப் படையெடுத்து, நம் மூளைக்கு விலங்கு போட்டு, மேற்கண்ட அத்தனையையும் செய்துவிட்டார்கள்.

எப்படி ஆரியர்கள் உள்ளே நுழைந்ததால்.

இதை யார் சொல்லுகிறார்கள் தெரியுமா?

நாம் சொல்லவில்லை. ஆதாரப்பூர்வமாக சொல்லியிருக்கிறார் ஒரு பார்ப்பனர்.

‘‘இந்து மதம் எங்கே போகிறது?'' என்ற தலைப்பில் எழுதிய நூலில், அக்னிஹோத்திரம் இராமானுஜ தத்தாச் சாரியார் எழுதியிருக்கிறார்.

அதில்,

உயர்ஜாதிப் பெண்களாக இருந்தாலும், பார்ப்பனப் பெண்களாக இருந்தாலும் அவர்கள் நமோ சூத்திரர்கள். அவர்களும் சூத்திரர்களுக்குக் கீழேதான்!

அம்பேத்கர் இதை மிக அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

முகத்தில் பிறந்தவன் பிராமணன்

தோளில் பிறந்தவன் சத்திரியன்

தொடையில் பிறந்தவன் வைசியன்

காலில் பிறந்தவன் சூத்திரன்

நான்கு ஜாதி வருணம்.

அவுட் கேஸ்ட் (Out Caste) - அவர்ணஸ்தர்கள் - வருணத்திற்கு அப்பாற்பட்டவர்கள் - இன்னும் கீழான வர்கள். அய்ந்தாம் ஜாதி பஞ்சமர்கள். இன்றைக்கு ஆதிதிராவிடர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் என்று சொல்லுகின்றோமே அவர்கள்.

சூத்திரர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றவர்கள்.

பஞ்சமர் என்றால், அய்ந்தாம் ஜாதி - இந்த அய்ந்து வருணத்திற்கும் கீழே  என்பது - எல்லா ஜாதிப் பெண்களும் என்றார்கள்.

எல்லா ஜாதிப் பெண்களையும், அவன் ஜாதிப் பெண்களையும் சேர்த்துதான் சொன்னான் என்றால், ஆரியர்கள் வரும்பொழுது பெண்களோடு வரவில்லை. ஆண்கள் மட்டும்தான் வந்தார்கள்.

அக்னிஹோத்திரம்

இராமானுஜ தாத்தாச்சாரியார்

இதை யார் சொல்கிறார் என்றால், அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார்.

‘‘நதிக்கு கரையில்லாத காலமது. காடு, மலை, விலங் குகள் இவற்றையெல்லாம் தாண்ட ஆரிய பெண்களுக் குத் தைரியம் இல்லை. பெண்கள் கோரிக்கை விடுத் தார்கள். அது புறக்கணிக்கப்பட்டது.

‘வரும் பெண்கள் வரலாம். வராதவர்கள் இங்கேயே இருக்கலாம்.’

ஆப்கானிஸ்தானைவிட்டு ஆரியக் கூட்டம் கிளம்பி இந்தியாவுக்குள் நுழைந்தபோது, கூட வந்த பெண்கள் கம்மி.வரலாற்றுக் கண்ணோட்டத்தில், இங்கு வந்த ஆண்களின் எண்ணிக்கையோடு, பெண்களின் எண் ணிக்கையை ஒப்பிட்டால் அது புறக்கணிக்கத்தக்கதுதான். ஆரியர்கள் பெண்களைத்தான் விட்டுவிட்டு வந் தார்கள்.

ஆனால், மனு ஸ்மிருதியை கையோடு கொண்டு வந்தனர்.

மனு வேதங்களை எல்லாராலும் படிக்க முடியாது. அஃதை விளங்கிக் கொள்ள அனைவருக்கும் அறிவு குறைவு.

அதனால் வேதம் வகுத்த கர்மாக்களை, கட்டளை களை விளக்கி, புரியும்படி சொல்கிறோம் என எளிமை என்ற பெயரில் செய்யப் பட்டதுதான் மனுதர்மம்.

பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் என வேதம் வகுத்த சமூக நிலைகளை ‘மனு’ பிளவாக்கியது.

கூடவே, இவர்களைத் தாண்டி ‘சூத்திரர்கள்’ என்ற பிரிவினரை உருவாக்கி அவர்களை வெறும் வேலைக் காரர்களாகவே ஆக்கியது மனு.

பிராமணனுக்கு தவம், வேத அறிவு, ஞானம், விஞ்ஞானம் உள்பட 11 குணங்களை வகுத்த மனு - சூத் திரனைப்பற்றி இப்படி எழுதியது.“சூத்திரனுக்கு அறிவு கொடுக்காதே, தர்மோ பதேசம் பண்ணாதே. சண்டை வந்தால் சூத்திரன் எந்தப் பக்கம் இருக்கிறானோ அந்தப் பக்கத்துக்கே தண்டனை கொடு. அவனை உதை” இப்படிப் போகிறது மனு.

வந்தேறிய இடத்தில் அனைவரும் சூத்திரர்கள் என்றும், அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும் என்றும் பிராமணர்கள் செய்த திட்டம் ‘நன்றாகவே’ வேலை செய்தது.

ஏற்கெனவே பிராமணர்களின் கட்டுப்பாட்டில் இருந்த க்ஷத்திரியர்களும், வைசியர்களும் சூத்திரர்களை வேலைக்காரர்களாக எடுபிடிகளாக வைத்திருப்பது என்ற பிராமணர்களின் கோட்பாட்டுக்கு குழைந்தனர்.

‘அடே,,, குழந்தாய் இந்தா பால். இதைக் குடித்து மகிழ்வாய் வாழு’ என்ற வேதத்தை மனு திரித்து, “இந்த பாலை இவன் குடிக்க வேண்டும், இவன் குடிக்கக் கூடாது. இவன் எச்சில் படாமல் குடிக்க வேண்டும். இவன் பால் கறக்கும் மாட்டை மேய்க்கவேண்டும்” என பிளவு செய்தது.

ஆரியர்கள் பெண்களை அழைத்து வரவில்லை என்று சொன்னேன் அல்லவா? இதற்குக் காரணம் என எடுத்துக்கொள்ள ஏதுவான மனு ஸ்லோகம் ஒன்றை பாருங்கள்.

“பால்யே பிதிர்வஸே விஷ்டேதுபாணிக்ரஹா யௌவ் வனேபுத்ரானாம் பர்த்தரீ ப்ரேதுநபஜேத் ஸ்த்ரீ ஸ்வ தந்த்ரதாம்”

“பெண்ணே, நீ குழந்தைப் பருவம் வரை அப்பன் சொன்னதை கேள். வளர்ந்து மணமானதும் கணவன் சொன்னதைக் கேள். உனக்கு குழந்தை பிறந்து தலையெடுத்ததும் உன் மகன் சொல்வதைக் கேட்க வேண்டும். உனக்கு இது தான் கதி. நீ சுதந்திரமாக வாழத் தகுதியவற்றவள், ஆண் சொல்படி கேள்.”

இப்படி ‘பெண்ணுரிமை’ பேசும் மனு இன்னொரு இடத்தில் சொல்கிறது.

“பெண்கள் அசுத்தமானவர்கள். உனக்கு விதிக்கப் பட்டுள்ள மந்த்ரோப தேச சம்ஸ்காரங்கள் அவளுக்கு கிடையாது. அவளை மதிக்காதே.” பிராமண ஆணுக்கு சொல்லுவதாய் வந்த கருத்து இது.

மனுவின் இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு ‘பூம் பூம்’ மாடுகள்போல தலையாட்டினார்கள் மற்ற வர்ணத்த வர்கள்.

வைதீக கட்டுப்பாடுகள் சர்வாதிகாரமாக விதிக்கப் பட்டன. “கடவுள் இப்படித்தான் செய்யச் சொல்லியிருக்கிறான். இதுபடி கேள். இல்லையேல் நீ பாபியா வாய்” என மந்த்ரங்களால் மிரட்டப்பட்டனர் மக்கள்.

பல நூறு வருடங்கள். ஒரு கிரிமினல் லா போன்றே மனுநீதி சமூக கட்டமைப்பை தன் கட்டுக்குள் வைத்திருந்தது. வைதீக கர்மாக்களை பிறருக்கு எடுத்துச் சொல்லி நீதி பரிபாலனம் செய்ய வேண்டிய பிராமணன், க்ஷத்ரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் எல்லோரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.

இப்படிப்பட்ட ஒரு ‘சாஸ்திர ஏகாதிபத்ய’ சூழ்நிலையில்தான் இன்றைய நேபாளத்திலிருந்து ஒரு குரல் புறப்பட்டது.“கடவுள் பெயரை சொல்லியும், கர்மாக்கள் பெயரைச் சொல்லியும் சிந்தனை வளராத அப்பாவி களை ஏமாற்றிப் பிழைக்கிறீர்களே?

உங்களுக்கு இந்த உரிமையை யார் கொடுத்தது? கடவுளா? அவன் எங்கே இருக்கிறான்?

வேதத்தை சாதத்துக்கு (பிழைப்புக்கு) பயன்படுத்தா தீர்கள். பேதம் வளர்க்காதீர்கள். கொடுமைதான் உங்கள் கொள்கை என்றால் வேதம் வேண்டாம். மனு வேண்டாம். கடவுள் வேண்டாம். கர்மாக்கள் வேண்டாம். மனித தர்மம் மட்டும் தான் வேண்டும்” என அந்த சூழ்நிலையில் மிகமிக வித்தியாசமான குரல் தொனித்தது. அது புத்தர் குரல்.''

அவர்களுடைய தத்துவம் நம்முடையதல்ல; வெளிநாட்டிலிருந்து படையெடுத்து வந்த தத்துவம்

ஆகவே, அவர்களுடைய தத்துவம் நம்முடைய தல்ல; வெளிநாட்டிலிருந்து படையெடுத்து வந்த ஒரு தத்துவம். இன்றைக்கு நம்மை ஆண்டு கொண்டிருக் கின்றது; நம்மை அடிமைப்படுத்திக் கொண்டிருக்கிறது; நம்மை அழிக்கவேண்டும் என்று துடிக்கிறது.

இதுதான் மிக முக்கியமான ஒரு அடிப்படையான கலாச்சாரப் படையெடுப்பு - மிக முக்கியமான பண் பாட்டுப் படையெடுப்பு.

தந்தை பெரியாரைப் போன்று தெளிவாக சொன்ன தலைவர் வேறு யாரும் கிடையாது.

அவர் சொன்னார்,

வெள்ளைக்காரன் வந்தான், ஆட்சியைப் பிடித்தான் என்பது  அரசியல் அடிமைத்தனம் - அது   கைகளில் போடப்பட்ட விலங்கு - அது பளிச்சென்று தெரியும்.

பொருளாதார அடிப்படை என்பது கால்களில் போட்ட விலங்கு. ஏழை - பணக்காரன்; ஆண்டான் - அடிமை;வர்க்கம் என்பது கால்களில் போடப்பட்ட விலங்கு, அதனை உடைத்துவிடலாம்.

ஆனால், பண்பாட்டு படையெடுப்பு என்பது இருக்கிறதே, அது மூளையில் போடப்பட்ட விலங்கு. அந்த மூளையில் போட்ட விலங்கு மிக ஆழமானதுதான் - அதற்கு அஸ்திவாரமான தத்துவம்தான் ஹிந்துத்துவா. பேதம் - அதனைச் சொல்லிக் கொடுப்பது வேதம்.

பெண்கள் அடிமைகள் அவர்களுக்கு.

ஆனால், பெண் வாழ்க்கைத் துணைநலம் நமக்கு. பெண்களை வித்தியாசமாகப் பார்ப்பதில்லை நாம்.

கருநாடகாவில் அரசு பணம் பார்ப்பனர்களுக்கு இறைக்கப்படுகிறது!

பி.ஜே.பி. ஆட்சி நடைபெறும் கருநாடகாவில் எவ்வளவு தைரியமாக செய்கிறார்கள் பார்ப்பனர்கள். அவர்களுக்கு அரசு பணம் கொடுக்கிறோம் என்கிறதே, மக்களின் வரிப் பணத்தை எடுத்து - இதனைத் தட்டிக் கேட்காமல் நம்ம ஆட்கள் அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார்களே, அதை நினைத்தால் நமக்கு ரத்தம் கொதிக்கிறதே!

ஹிந்துத்துவா என்கிற "ஆக்டோபஸ்" (எட்டுக்கால் பிராணி) தன்னுடைய கால்களை கொடூரமாக விரித்துப் பிடித்துக் கொண்டிருக்கின்றது.

அதேபோன்று சூத்திரர்களுக்கு எதைக் கொடுத் தாலும், படிப்பைக் கொடுக்காதே - அறிவைக் கொடுக் காதே என்று சூத்திரர்களுக்குக் கல்வியை மறுத்தார்கள்.

அதற்கு நேர் எதிரான திராவிடம் என்ன சொல்கிறது - அனைவருக்கும் அனைத்தும்.         எல்லோரும் சமம் என்பது மட்டுமல்ல - எல்லோருக்கும் சம வாய்ப்பு. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று சொல்வது திராவிடம்.

சட்டத்திற்கு முன் எல்லோரும் சமம் அல்ல என்று சொல்வது ஆரியம்.

எப்படி?

இங்கே திருக்குறள் -

அங்கே  மனுதர்மம்.

ஜாதியை மாற்ற முடியுமா என்றால், முடியாது!

ஒரு ஜாதிக்கு ஒரு நீதி; ஜாதியை மாற்ற முடியுமா என்றால், முடியாது. நீ என்னதான் முயற்சி செய்தாலும் மாற்ற முடியாது.

அதுமட்டுமல்ல, இன்றைக்கு டில்லியில் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

‘உழுவோர் உலகத் தேருக்கு அச்சாணி' என்று நினைத்த தத்துவமும், பண்பாடும் திராவிடம்.

‘விவசாயம் பாவகரமான தொழில்; அதைச் செய்பவர்களை ஒதுக்கவேண்டும்' - மனுதர்மம்.

இன்றைக்கு விவசாயப் பிரச்சினையை ஏன் அலட்சியப்படுத்துகிறார்கள் என்றால், ஹிந்துத்துவாதான் காரணம்.

எந்தக் காரணம் கொண்டும், கலப்பை எடுத்து ஏர் உழக்கூடாது பார்ப்பனன். வடுவூரில் ஏர் உழுத பார்ப்பனர்களை அந்த ஜாதிக்காரர்கள் கண்டித்தார்கள்; காந்தியார் வரைக்கும் அந்தப் பிரச்சினை சென்றது; இதில் யாருக்காவது சந்தேகம் இருந்தால், தமிழ்நாட்டில் காந்தி என்ற புத்தகத்தை வாங்கிப் படியுங்கள்!

ஆக, இப்படி எல்லாக் கருத்துகளையும் பார்த்தீர்க ளேயானால், ஒவ்வொரு கருத்திலேயும், அறிவு, அறிவுச் சுதந்திரம் இவை அத்தனையிலும் வித்தியாசமாக இருக்கக்கூடியதுதான் ஹிந்துத்துவா.

சமூகநீதி ஏன் தேவைப்பட்டது?

ஏன் திராவிட இயக்கம் தேவைப்பட்டது?

நம்முடைய மக்கள் அடிமைப்பட்டு இருந்தபொழுது, ஒரு 112 ஆண்டுகளுக்கு முன்பு, நம்முடைய இயக்கம் திராவிடர் இயக்கம் பிறந்தது. திராவிடர் இயக்கம் என்று நேரிடையான பெயர் இல்லை. பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்றுதான் இருந்தது.

இப்பொழுது  நாம் பாதிக்கப்பட்டுள்ள கரோனா தொற்று நோய்க்குத் தடுப்பு ஊசி கண்டுபிடிப்பது போன்று, அன்றைக்கு மிக அழகாக, மிக முக்கியமாக ஏற்படுத்தினார்கள். அதுதான் நீதிக்கட்சி, திராவிடர் இயக்கம்.

எங்களுக்கு நீதி தேவை? ஏனென்றால், சமூக அநீதி நடைபெறுகிறது. 100-க்கு மூன்று பேராக இருக்கின்ற பார்ப்பனர்கள் எல்லாவற்றையும் அனுபவிக்கிறார்கள், வெள்ளைக்காரர்களின் தயவினால்.

பார்ப்பனர்கள் என்ன சொன்னார்களோ, அதனை அப்படியே வெள்ளைக்காரர்கள் நம்பினார்கள்

கிழக்கிந்திய கம்பெனியில் இருந்து வந்த வெள்ளைக் காரர் ஆட்சிக்கு இங்கே வந்தவுடன், அவர்களின் நிர்வாக இயந்திரத்தை நடத்துவதற்கு ஆட்கள் தேவை. அதற்குப் படித்தவர்கள் தேவை. அன்றைக்கு யார் படித்திருந்தார்கள் என்றால், பார்ப்பனர்கள்தான். அவர்கள்தான் பதவிக்கும் போக முடிந்தது. நம்மாட்கள் மூட்டைதான் தூக்கமுடிந்தது. காரணம், நம்மாட்களுக்கு காலங்காலமாக படிப்பு மறுக்கப்பட்டதால்.

அந்த சூழ்நிலையால், வெள்ளைக்காரர்களும், பார்ப்பனர்களும் நெருக்கமாகி விட்டார்கள். நாங்கள் எல்லாம் தேவர்கள் - நாங்கள் எல்லாம் மேலே பிறந்த வர்கள் என்றார்கள். சமஸ்கிருதத்தை தேவ பாஷை என்றார்கள். பார்ப்பனர்கள் என்ன சொன்னார்களோ, அதனை அப்படியே வெள்ளைக்காரர்கள் நம்பினார்கள்.

18 ஆம் நூற்றாண்டிலேதான் ஜோதிபாபூலே போன்றவர்கள் இதனை எடுத்துச் சொல்கிறர்கள்.

ஆக நண்பர்களே,இது ஒரு பெரிய போராட்டமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. கல்வி வாய்ப்புகள், உத்தியோக வாய்ப்புகளை மூன்று பேராக மட்டுமே  இருப்பவர்கள் நூற்றுக்கு நூறு சதவிகிதம் அனுபவிக் கிறார்கள்; 97 பேராக இருக்கின்றவர்கள் வாய்ப்பில்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் வகுப்புவாரி  உரிமை. சமூகநீதி இவை அத்தனையும் வந்தது. அதனை செய்வதற்காகப் பிறந்த ஆட்சிதான்  நீதிக்கட்சி ஆட்சி.

சமூகநீதியை ஒழிப்பதற்காக, இந்திய அரசமைப்புச் சட்டத்தைக் காட்டி - அதிலிருந்த ஓட்டைகளைக் காட்டி -  அம்பேத்கர் போன்றவர்கள் அதனை சிறப்பாக செய்தாலும்கூட, அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய ஆறு பேரில், நான்கு பேர் பார்ப்பனர்கள் என்பதால்,  உள்ளுக்குள் போராடிக் கொண்டிருக்கும் நிலையில்தான் இருந்தார்கள்.

- தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக