• Viduthalai
தி.மு.க. ஆட்சியிலோ தமிழ்நாட்டை நோக்கியே தொழிற்சாலைகள்!!
பரவலாக அனைத்துப் பகுதிகளிலும் உருவாக்கப்படுவது வரவேற்கத்தக்கது!
கடந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் தொழிற்சாலைகள் தொடங்கப்படுவதில் இடர்ப்பாடுகள், லஞ்ச லாவண் யத்தால் வெளிமாநிலங்களுக்குச் சென்றன. தி.மு.க. ஆட்சியில் 200 நாட்களில் தமிழ்நாட்டை நோக்கியே தொழிற்சாலைகள் குவியத் தொடங்கியுள்ளன. அத் தகு தொழிற்சாலைகள் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக உருவாக்கப்படுவது வரவேற்கத்தக்கது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கை வருமாறு:
சுமார் 200 நாள்கள் ஆட்சியிலேயே இந்தியாவின் முதல் மாநிலம் என்ற பெருமையை எட்டிப் பிடித்து, தொழில் துறையில் முதலிடத்தைப் பெற்றுள்ளது என்பதை ‘இந்தியா டுடே' போன்ற ஏடுகளின் ‘சர்வே' மூலம் உலகத்திற்கு அறிவித்திருப்பது, தமிழ்நாட்டில் ‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது தலைமை யிலான ஆட்சி சாதனையின் சிகரத்தில் ஏறி சிறப் படைந்துள்ளதற்கான தக்க சான்றாகும்.
எல்லாத் தொழிற்சாலைகளும் தமிழ்நாட்டை நோக்கியே!
‘எல்லா சாலைகளும் ரோம் நகரை நோக்கியே' என்பது ஒரு முந்தைய ஆங்கிலப் பழமொழி; ஆனால், இந்தியத் துணைக் கண்டத்து மாநில ஆட்சிகளைப் பொறுத்தவரை - ஒன்றிய ஆட்சியைப் பொறுத்தும், எல்லா (தொழிற்)சாலைகளும் தமிழ்நாட்டை நோக்கியே என்ற புது மொழியை தி.மு.க. பொற்கால ஆட்சி உருவாக்கி, விடியலைத் தந்து கொண்டுள்ளது!
கடந்த 6 மாத காலத்தில் 109 திட்டங்கள்; ரூ.52 ஆயிரம் கோடி முதலீட்டில் புதிய வேலை வாய்ப்புகளை உரு வாக்கியுள்ளது. அந்தந்தப் பகுதிகளையொட்டி குறு வளர்ச்சி, பொருளாதார செழிப்பு அதன்மூலம் பெருகிடும் வாய்ப்புள்ளது.
உலகெங்கும் உள்ள முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டை நோக்கியே வந்து குவிவதற்கு மூல காரணம், தமிழ்நாட்டில் லஞ்சம், ஊழல், தொழிற்சாலைகளை அனுமதிப்பதில், இயங்க வழிவகை செய்வதில் இல்லை என்பதோடு, ‘‘சிவப்பு நாடா'' என்ற காலதாமதம் - கோப்புகளை ஊறுகாய் ஜாடியில் ஊற வைத்து பேரம் பேசுதல் இவற்றை எல்லாம் கடந்த 10 ஆண்டுகாலத்தில் நாடு கண்டது - ‘சர்வம் ஊழல் மயம்' என்ற நிலை தொழில் வளர்ச்சியை கானல் நீராக்கிற்று!
கடந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின் பேரமும், லஞ்சமும்!
தமிழ்நாட்டில் ரஷ்ய அரசு சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனம் - அதன்மூலம் பல நூற்றுக்கணக்கான தமிழ் நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும், தமிழ்நாட்டுப் பொருளாதார வளமும் பெருகிடவேண்டிய திட்டத்தைத் தொடங்க அனுமதி வழங்க முந்தைய (அ.தி.மு.க.) அரசு லஞ்சம் கேட்டது - தர மறுத்த ஒரு நிறுவனத்திற்கு அளித்த அனுமதியை அ.தி.மு.க. அரசு ரத்து செய்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ரஷ்ய தொழில் நிறுவனமே வழக்குப் போட்ட கதையெல்லாம் பழைய கதை!
பல நாள் காத்திருந்தும் முந்தைய முதலமைச்சர் ஜெ.யின் நேர்காணல் கிட்டாமையால், காத்திருந்த ஏமாற்றத் தினால் வேறு மாநிலம் சென்ற தொழிற்சாலைகளும் உண்டு.
ஆனால், இப்போது அப்படிப்பட்ட நிலை இல்லை; மக்கள் முதலமைச்சர் இருகரம் கூப்பி வவேற்கிறார்! தொழில் முனைவோரை அடையாளம் கண்டு, தமிழ்நாட்டு மண்ணையும், மக்களையும் வளப்படுத்த, பல தொழில் நிபுணர்கள் தன்னார்வலர்களாக முன்வந்திருப்பது தாய்மண்ணுக்கு அவர்கள் செய்யும் நன்றிக் கடனாகவே கருதுகிறார்கள்.
ஒவ்வொன்றிற்கும் தக்காரை அடையாளம் கண்டு, தனித்த குழுக்களை, அறிஞர்களை, அத்துறையில் முத்திரை பதித்த முதிர்ச்சியாளர்களைத் துணைக் கொண்டு, ஒரு ‘புதிய தமிழ்நாடு' உருவாக நாளும் ‘உழைப்புத் தேனீ'யாக நமது முதலமைச்சர் அவர்கள் செயலாற்றுகின்றார்; அவர்தம் அமைச்சர் பெருமக்களோ ‘எள் என்பதற்குள், எண்ணெய் இதோ' என்று விரைந்து செயல்பட்டு வியக்க வைக்கின்றனர்!
அமைதிப்பூங்காவாக தமிழ்நாடு திகழுகிறது. அங்கொன் றும் இங்கொன்றுமாக நடைபெறும் கூலிப்படைகளின் கொலைகளும், வழிப்பறிகளும் கூட இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட்டு, முகில் மறைக்காத முழு மதியாய் தி.மு.க. ஆட்சி ஏறுநடை போட்டு, ‘திராவிட மாடல்' ஆட்சியின் மாட்சியும், தமிழ்நாட்டின் - மக்களின் மீட்சியும் எப்படி அன்றாடச் செயல்களாக பூத்துக் குலுங்குகிறது என்று காட்டும் ஆட்சியின் சாதனை சரித்திரம்.
இது முடிவல்ல - ஒரு தொடக்கம்தான்!
பரவலாக நாடெங்கும்தொழிற்சாலைகள்!
தொழிற்சாலைகளைக்கூட பரவலாக வாய்ப்பும், வளமும் வட்டாரத்திற்கேற்ப தொடங்கப்பட திட்டமிட்டு தமிழ்நாடு அரசும், முதலமைச்சரும் முடிவு எடுப்பது சரியான அணுகுமுறையாகும்!
வளர்ச்சி என்பது அனைத்துப் பகுதிகளிலும் ஏற்படவேண்டும்; சில பெருநகரங்களில் மட்டும் ஏற்பட்டால், அது வளர்ச்சி என்பதைவிட, ‘வீக்கம்' என்றே கருதப்படும். ஆதலால், சமன் செய்து பரவலாக தொழில் வளம் பெருகுவதும் அவசியம், அவசரம்!
முன்னேற்றம் தொடரட்டும்!
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
29.11.2021
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக