இதற்கென ஒரு தனிச்சட்டமே இயற்றப்பட்டு எல்லா ஊர்களிலும் சமத்துவ நிலையை உருவாக்க வழி செய்யவேண்டும்!
மனிதன் செத்தாலும் ஜாதி சாவதில்லை என்ற நிலையில், அந்த நிலையை மாற்றி அமைக்க, தனிச் சட்டம் இயற்றி, சமத்துவ நிலையை உரு வாக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கை வருமாறு:
நம் நாடு ‘‘சுதந்திரம்'' பெற்று 75 ஆம் ஆண்டைக் கொண்டாடும் நிலையில், இன்னமும் நம் மக்களிடையே சுடுகாடு, இடுகாட்டில்கூட ஜாதிவெறி தலைதூக்கி ஆடுவதோடு, மனிதர்கள் இறந்த பிறகு, ஜாதியும், வெறியும் சாகாமல் இருப்பது மட்டுமல்ல; மனிதத்தன்மை சிறிதுமற்ற முறையில், மயானங்களில் பேதம்; சுடுகாட் டிற்குச் செல்வதற்கு ஒழுங்கான பாதை வசதிகள் கிடையாது; கிராமப்புறங்களில் ஜாதிவெறி தெருக்களில் படமெடுத்தாடி, சவ ஊர்வலத்திலும்கூட ஜாதிச் சண் டைகள் நடைபெறும் அவலம் ஒரு தேசிய அவமானம் அல்லவா?
தமிழ்நாடு அரசின் அரசாணை - பாராட்டி வரவேற்கத்தக்கது!
தமிழ்நாட்டில் உள்ள 37 மாவட்டங்களில் ஒரு மாவட்டத்திற்கு 3 கிராமங்கள் வீதம் 111 கிராமங்களுக்குத் தலா 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையை - ஜாதிப் பிரிவினை காட்டாது முறையாக நடக்கும் ஜாதி வேறு பாடுகளற்ற மயானங்களைக் கொண்ட எடுத்துக்காட்டான கிராமங்களுக்கு அப்பரிசுத் தொகை வழங்கப்படும் என்பதோடு, அதற்கென ரூ.11 கோடியே 10 லட்சத்தை தமிழ்நாடு அரசு ஒதுக்கி அரசாணை வழங்கியுள்ளது - பெரிதும் பாராட்டி வரவேற்கத்தக்கதாகும்.
அதைவிட, மயானத்திற்குச் செல்லும் பாதைகளைக் கூட ஊரைச் சுற்றித்தான் - சில ஜாதித் தெருக்களில் செல்லக்கூடாது என்றெல்லாம் தடுப்பதனைத்தும் கடுமையான கிரிமினல் குற்றமாக்கப்பட்டு, அந்த கிராமத்திற்குரிய சலுகைகளைக் கூட ரத்து செய்து அபராதம் விதித்து, சமத்துவம் நிலைநாட்டப்பட வேண்டும்.
‘சமரசம் உலாவும் இடமே' என்று சுடுகாடுகள்பற்றி பாடினாலும்கூட, நடைமுறையில் இன்னமும் கிராமங் களில் பாதைகள் இல்லாததற்கு, தங்கள் வீதி வழியே ‘‘கீழ்ஜாதிக்காரர் சவம்'' செல்லக்கூடாது என்று சில வாழும் ‘செத்தாருள் வைக்கப்படவேண்டிய மனிதர் களின்' அநாகரிகச் செயல் வளர விடாது தடுக்கப்படல் வேண்டும்.
தனிச்சட்டம் கொண்டு வருக!
பரிசுகள் ஒருவகை என்றாலும், தனிச் சட்டமும் கொண்டுவரப்பட்டு, அரசமைப்புச் சட்டம் முகப்புரை யில் கூறியுள்ளபடி சமத்துவம், சுதந்திரம், சகோதரத் துவத்தை வாழ்நாளில் அனுபவிக்க முடியாதவர்கள் இறந்த பிறகாவது ‘‘சமத்துவத்தை அடைய'' அதைத் தவிர வேறு வழிதான் என்ன?
சில ஊர்களில் நீதிமன்றத் தீர்ப்புகளையும் மதிக்காமல், சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை உருவாக்கி, ஜாதிக் கலவரம் நடத்தி, குளிர்காயப் பார்க்கும் கீழமை இன்ன மும் இருப்பதைவிட அவலம் வேறு இருக்க முடியுமா?
திராவிடர் ஆட்சி அதைச் செய்யாவிட்டால்,
வேறு எந்த ஆட்சி செய்ய முடியும்?
சமூகநீதி, ஜாதி ஒழிப்பைக் கொள்கையாகக் கொண்ட இந்த திராவிடர் ஆட்சி அதைச் செய்யாவிட்டால், வேறு எந்த ஆட்சியில் செய்ய முடியும்?
எனவே, இதற்கு நமது முதலமைச்சரும், அவரது அரசும் தனிச் சட்டமே கொண்டு வந்து நடைமுறைப் படுத்தும் வழிமுறைகளையும் வகுப்பதற்கு ஆவன செய்யவேண்டுமென, உரிமையுடன் கேட்டுக் கொள் கிறோம்! ஜாதி ஒழிப்பில் முத்திரைப் பதிக்கும்.
உயிர் காக்கும் மருத்துவமனைகளில் இல்லாத - காட்டப்படாத பேதம், இறந்த பிறகு, சுடுகாட்டில் தேவையா? சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லும் பாதையில் அது தலைக்காட்டலாமா?
முதலமைச்சரின் மேலான கவனத்திற்கு...
கடந்த 21.11.2021 அன்று நடைபெற்ற மாநில பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் இதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதை, தமிழ்நாடு அரசின், குறிப்பாக முதலமைச்சரின் மேலான கவனத்திற்கு வைக்க விரும்புகிறோம்.
சென்னை
24.11.2021
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக