ஊட்டியில் தமிழர் தலைவர் பேட்டி
ஊட்டி, நவ.2 தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட வேண்டியது நவம்பர் ஒன்றா? ஜூலை 18 ஆம் நாளா? துணைவேந்தர்கள் நியமனம் ஆளுநரைச் சார்ந்ததா? போன்ற கேள்விகளுக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பதிலளித்தார்.
நேற்று (1.11.2021) காலை ஊட்டிக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவ்விவரம் வருமாறு:
தமிழ்நாடு நாள் என்று அரசு அறிவித்திருப்பது குறித்து...
செய்தியாளர்: நவம்பர் ஒன்றாம் தேதி தமிழ்நாடு தினத்தை கொண்டாடவேண்டும் என்று அரசியல் கட்சியைச் சேர்ந்த சிலர் சொல்கிறார்கள்; ஆனால், ஜூலை 18 ஆம் தேதி கொண்டாடுவோம் என்று அரசு அறிவித்திருக்கிறதே?
தமிழர் தலைவர்: ஏற்கெ னவே கடந்த ஆண்டே அவர்கள் அதை அறிவித்தவுடன், திராவிடர் கழகம் முன்பே இதுபற்றி சொல்லியிருக்கிறது.
தமிழ்நாடு நாள் - என் றைக்குத் தமிழ்நாடு என்று அறிவிக்கப்பட்டதோ, அன்றைய தினத்தை தமிழ்நாடு நாள் என்று கொண்டாடுவதுதான் உரிய முறையில் பொருத்த மானதாக இருக்கும்.
காரணம் என்னவென் றால், 1956, நவம்பர் ஒன்றாம் தேதி வந்தது மாநிலங்கள் சீரமைப்பு - மொழி வழி மாநிலங்கள். சென்னை ராஜ் ஜியம் என்றுதான் இருந்தது. அதிலிருந்து சில பகுதிகள் நீக்கப்பட்டன; சில பகுதிகள் இணைக்கப்பட்டன.
ஆகவே, முழுக்க முழுக்க அண்ணா அவர்கள் 1963 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபொழுது, ''Call My State as Tamil Nadu'' என்று மிக அழகாக, ஆணித்தரமாக வாதம் செய்தார்.
1961ஆம் ஆண்டிலேயே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் முதன் மையானவராக இருந்த பூபேஷ் குப்தா அவர்கள், சென்னை ராஜ்ஜியம் பிரிந்தவுடன், ''தமிழ்நாடு'' என்று அதற்குப் பெயர் இல்லை - வெறும் சென்னை ராஜ்ஜியமாக இருக்கிறது என்று சொன்னார்.
''தமிழ்நாடு'' என்று பெயர் சூட்டப்படவேண்டும் என்று 1956 இல் சொன்னார் தந்தை பெரியார்!
அதற்கு முன்பே 1956 இல் தந்தை பெரியார், ''தமிழ்நாடு'' என்று பெயர் சூட்டப்படவேண்டும் என்பதை முதன்முதலில் வலியுறுத்தினார்.
எனவே, பெரியார் வலியுறுத்தி, வடக்கேயும் மாநிலங்களவையில் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, வங்காளத்தைச் சேர்ந்த பூபேஷ் குப்தா அவர்கள் தமிழ்நாடு என்று பெயர் வைக்குமாறு கோரியதை அன்றைக்கு ஒன்றிய அரசினர் ஒப்புக் கொள்ள வில்லை.
மாநிலங்களவைக்குச் சென்றவுடன் அண்ணா அவர்கள் 1963 ஆம் ஆண்டு சொன்னதையும் அவர்கள் ஏற்கவில்லை.
அதே அண்ணா அவர்கள் முதலமைச்சரான பிறகு, 18.7.1967 இல் தெளிவாக தமிழ்நாடு என்று சட்டம் கொண்டு வந்து பெயர் மாற்றம் செய்தார். அப்படி செய்ததோடு மட்டுமல்ல, சட்டப்பேரவை வரலாற்றிலேயே ''தமிழ்நாடு'' என்று மூன்று முறை முதலமைச்சர் அண்ணா அவர்கள் சொல்ல, ''வாழ்க, வாழ்க வாழ்க'' என்று அத்தனை சட்டப்பேரவை உறுப்பினர்களும் கட்சி வேறுபாடின்றி சொல்லி அன்றிலிருந்து தமிழ்நாடு என்று பெயர் வந்தது.
எனவேதான், தமிழ்நாடு நாள் என்று கொண்டாடுகின்ற நேரத்தில், ''தமிழ்நாடு'' என்று என்றைக்குப் பெயர் சூட்டப்பட்டதோ, அன்றைய நாளைத்தான் கொண்டாடவேண்டும்.
மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதை நவம்பர் ஒன்றாம் தேதியில் கொண்டாடலாம்.
எல்லைப் போராட்ட வீரர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய்!
எல்லையில் சில பகுதிகள் சேர்க்கப்பட போராடிய எல்லைப் போராட்ட வீரர்களுக்கு நன்றி செலுத்தலாம். தமிழ்நாடு அரசு, அவர்களுக்கு ஓய்வூதியம் கொடுத்திருக்கிறது; அவர்களை சிறப்பாகக் கவுரவப்படுத்தவேண்டும் என்பதற்காக, ஒரு லட்சம் ரூபாயை நம்முடைய 'சமூகநீதிக்கான சரித்திர நாயகர்' இந்தியாவின் முதலமைச்சர்களில், முதல் முதலமைச்சர் என்கிற சிறப்போடு இருக்கின்ற மு.க.ஸ்டாலின் அவர்கள் அதை செய்திருக்கிறார்கள்.
ஆகவே, இரண்டும் முரண்பாடல்ல. ஜூலை 18 ஆம் தேதிதான் தமிழ்நாடு நாள் என்று வரலாற்று ரீதியாக கொண்டாடப்படும் என்று சொன்னது சரியான முடிவு. ஆகவே, மாநிலங்கள் சீரமைப்புக்கான நாளே அவர்கள் தரப்பில் கூறப்படும் நவம்பர் ஒன்றாம் தேதியாகும்.
எனவே, சென்னை ராஜ்ஜியம் பிறந்தது என்று சொல்லி, நவம்பர் ஒன்றாம் தேதியைக் கொண்டாடினால் சரி. ஆனால், தமிழ்நாடு நாள் என்று கொண்டாடவேண்டும் என்றால், இன்றைய தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ஜூலை 18 ஆம் தேதிதான் சரியானது என்பது எங்களைப் போன்றவர்களுடைய உறுதியான கருத்தாகும்.
மனித நேயத்தோடு நடக்கக்கூடிய ஆட்சி
செய்தியாளர்: தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றது?
தமிழர் தலைவர்: தமிழ்நாடு அரசின் செயல்பாடு சரியாக இருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர்களே சொல்லியிருக்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, இன்னொரு வேடிக்கை என்னவென்றால், சட்டப்பேரவை நடைபெறும்பொழுது, சட்டப்பேரவைத் தலைவர் சொல்கிறார், ''அ.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்களை நாங்கள் வெளியே போகச் சொல்லவில்லை; அவர்களே போய்விட்டார்கள்'' என்று.
இதுவரை வெளியேற்றித்தான் சட்டப்பேரவைத் தலைவருக்குப் பழக்கமே தவிர, ''வெளியே போகச் சொல்லவில்லை'' என்று சொன்னது இதுதான் முதல் முறை.
இதுவரை சட்டப்பேரவை வரலாற்றில், இப்படி ஓர் அருமையான நிகழ்ச்சி நடந்ததில்லை என்று, அ.தி.மு.க.வில் முக்கிய பொறுப்பில் இருந்த மேனாள் கல்வி அமைச்சராக இருந்தவர் சொல்லியிருக்கிறார்.
அதுமட்டுமல்ல, மனித நேயத்தோடு நடக்கக்கூடிய ஆட்சியாக இந்த ஆட்சி இருக்கிறது.
ஒவ்வொரு நாளும் சிறப்பான அறிவிப்புகள்
முதலமைச்சராகப் பொறுப்பேற்ற, 160 நாள்களுக்குள் இந்தியாவினுடைய முதல் முதலமைச்சர் என்று பெயர் எடுத்ததைப் பெருமையாகக் கருதுவதைவிட, தமிழ்நாடு முதல் மாநிலமாக இருக்கிறது என்று சொல்லப்படவேண்டும் என்று நம்முடைய முதலமைச்சர் சொன்னார்.
ஒவ்வொரு நாளும் சமூகநீதி நாள் - இட ஒதுக்கீடு சிறப்பான அறிவிப்புகள் என தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.
எல்லாவற்றிலும் ஆய்ந்து தெளிந்து, ''இதனை இவனால் இவன் முடிப்பான் என்றாய்ந்து'' யார் யாரைப் பொருத்தமாக நியமிக்கவேண்டும் என்று ஆய்வறிஞர்களோடு ஆலோசனை நடத்திச் செய்கிறார்.
எல்லாத் தரப்பு மக்களுக்கும் உரியதைச் சொல்லியிருக்கிறார், எங்களுடைய ஆட்சி ஒரு கட்சியினுடைய ஆட்சியல்ல - இது மக்களுடைய ஆட்சி என்றும் சொன்னார்.
நேற்ற முன்தினம்கூட ஒரு முக்கியமான அறிவிப்பு கொடுத்திருக்கிறார். அரசு அதிகாரிகள் பணிக்காலம் முடிந்து ஓய்வு பெறும் நாளன்று இடைநீக்கம் செய்யப்பட்டு, அவருடைய ஓய்வூதியம், பலாபலன்கள் எல்லாம் கிடையாது என்ற நிலை காலங்காலமாக எல்லா அரசுகளாலும் பின்பற்றி வந்த நிலையை நீக்கி, அதுபோன்ற நிலை இனி இருக்காது என்று சொல்லி, உத்தரவு போட்டிருக்கிறார்.
சிறப்பான ஆட்சி என்பதை எதிர்க்கட்சியினரும் ஒப்புக்கொள்கிறார்கள்
அரசு ஊழியர்களுக்கு ரகசிய குறிப்பேட்டு முறையை கலைஞர் ஆட்சிக் காலத்தில் ஒழித்ததுபோன்று, இந்த அறிவிப்பு மிக அற்புதமானது.
எனவே, எல்லா விஷயங்களிலும், கருணை நாளிலிருந்து, சமூகநீதி நாளிலிருந்து சிறப்பான ஆட்சி என்பதை எதிர்க்கட்சியினரும் ஒப்புக்கொள்கிறார்கள்.
இது மக்களுக்கான ஆட்சி - ஒரு கட்சிக்கான ஆட்சி என்பதல்ல.
விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் மாறுபடுகிறாரா?
செய்தியாளர்: தமிழ்நாடு நாள் என்று சொல்வதில், தி.மு.க. கூட்டணிக் கட்சியாகிய விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் மாறுபடுகிறார்; அதிகாரிகளோடு சேர்ந்துதான் நீங்கள் முடிவு செய்யவேண்டும்; இவ்வாறு அறிவிக்கக் கூடாது என்கிறாரே?
தமிழர் தலைவர்: அதுதான் ஜனநாயகம். திருமாவளவன் எல்லாக் கருத்தையும் ஒப்புக்கொள்ளவேண்டும் என்கிற அவசியம் இல்லை. அவர் இதில் மாறுபடவில்லை; மற்றவர்களுடைய கருத்தைக் கேட்கவேண்டும் என்று சொல்கிறார்.
வழிமுறைகளில் வித்தியாசப்படலாம். நான் ஊட்டிக்கு வரும்பொழுது ரயிலில் வந்தேன். வேகமாக வரவேண்டும் என்பதற்காக சிலர் விமானத்தில் வருகிறார்கள்; இன்னும் சில பேர் கார்களில் வருகிறார்கள். ஆனால், எல்லோரும் ஊட்டிக்குத்தான் வந்து சேர்ந்திருக்கிறோம். வருகின்ற வழிமுறைகளில்தான் வேறுபாடே தவிர, இலக்கு ஒன்றுதான்.
இல்லம் தேடிக் கல்வித் திட்டம் - முதலில் எதிர்ப்பு - பிறகு ஆதரவா?
செய்தியாளர்: இல்லம் தேடிக் கல்வித் திட்டம் என்பதற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த நீங்கள், பிறகு ஆதரவு தெரிவித்திருக்கிறீர்களே?
தமிழர் தலைவர்: முதலில் அந்தத் திட்டத்தில் எங்களுக்கு சில சந்தேகங்கள் இருந்தன. தேசிய கல்விக் கொள்கை என்று சொல்லக்கூடிய ஒன்றிய அரசின் கல்விக் கொள்கையில், சமூக ஆர்வலர்கள் என்ற பெயராலும், அல்லது குருகுலக் கல்வியை நாங்கள் உண்டாக்குகிறோம் என்ற பெயராலும், ஒவ்வொரு வீட்டிற்குச் சென்றும், மத நஞ்சைக் கலக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன என்ற சந்தேகம் இருந்தது.
முதலமைச்சரின் தெளிவான விளக்கம்
அதைப்பற்றி யோசித்து செயல்படவேண்டும் என்று சொல்லிய நேரத்தில்,
அதற்கான விளக்கத்தை முதலமைச்சர் அவர்கள் தெளிவான அறிக்கையின்மூலம் தெளிவுபடுத்தி இருக்கிறார்.
நேற்றுகூட தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், தெளிவாகச் சொல்லியிருக்கிறார். இது திராவிட கல்வித் திட்டம் என்று உறுதிபடுத்தியிருக்கிறார்.
எனவே, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக, பிள்ளைகள் பள்ளிக்கூடத்தையே மறந்திருந்த சூழல் இருந்தது. இன்றைக்குத்தான் (நவம்பர் 1) சிறப்பான நாள் - பள்ளிக்கூடங்களுக்கு பிள்ளைகள் உற்சாகமாகச் செல்கிறார்கள்; அவர்களைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
எனவே, இது ஒரு நல்ல முயற்சி.
எனவே, இதில் எந்த மத நஞ்சும், வேறு கருத்துகளும் பிஞ்சு உள்ளங்களுக்குள் புகாத அளவிற்கு இருக்கவேண்டும்.
அரசின் பழிவாங்கும் நடவடிக்கையா?
செய்தியாளர்: மேனாள் அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு நடத்துவது என்பது பழிவாங்கும் நடவடிக்கையா?
தமிழர் தலைவர்: மேனாள் அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு என்பது நீண்ட காலமாக நடைபெறும் சம்பவமாகும். அதை எப்படி பழிவாங்குவது என்று சொல்ல முடியும்? உண்மையை வெளிக் கொணருவதுதான் முக்கியம்.
உங்களுக்கே தெரியும், இங்கே கொடநாடு விவகாரத்தைத் தானே உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
இது ஒரு தனி நாடாகவே ஆகிவிட்டது. தமிழ்நாடு நாள் என்று பேசுகிறீர்கள்; கொடநாடு விவகாரம் அதைவிடப் பெரிய அளவில் இருக்கிறது.
அதனால், விசாரித்தால் அவர்களைப் பழி வாங்குவதாகாதா? என்று கேட்கிறீர்கள்.
பழிவாங்குவது அல்ல - உண்மையை வெளியே கொண்டுவருவது.
கீழடியில் எப்படி தமிழர் நாகரிகம் புதைந்திருக்கிறது - அதுபோன்ற நல்ல விஷயங்களை வெளிக்கொணர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதுபோன்று, கொடநாட்டில் வேறு விஷயங்கள் வெளியே வரப் போகிறது.
ஆகவே, அதனை செய்வது ஓர் அரசாங்கத்தினுடைய கடமை. சட்டம் தன் கடமையை செய்யும்பொழுது, அது பழிவாங்கும் நடவடிக்கை அல்ல!
கொள்ளைக்காரர்களை காவல்துறையினர் பிடிக்கிறார்கள் என்றால், காவல்துறையினர் எங்களைப் பழிவாங்கிவிட்டனர் என்று கொள்ளைக்காரர்கள் சொன்னால், அதை ஏற்றுக்கொள்ள முடியுமா? முடியாது.
மாநில அதிகாரிகளிடம் அறிக்கை கேட்கிறாரே ஆளுநர்!
செய்தியாளர்: ஆளுநர், மாநில அதிகாரிகளிடம் அறிக்கை கேட்கிறாரே?
தமிழர் தலைவர்: இந்திய அரசமைப்பு சட்டப்படி, ''பை தி ஆர்டர் ஆஃப் தி கவர்னர்'' என்று சொன்னால், எந்த மாநில ஆட்சியிலும் ஆளுநர் உத்தரவு போடுவதில்லை.
அரசமைப்புச் சட்டத்தில், ஆளுநர் என்பவர் ஒரு மாநிலத்தில் ஒன்றிய அரசின் பிரதிநிதியாக இருக்கக்கூடியவர்.
இன்னும் வெளிப்படையாகச் சொல்லவேண்டுமானால், டில்லிக்குத் தகவல் கொடுக்கவேண்டிய இடத்தில்தான் ஆளுநர் இருக்கிறார். டில்லியினுடைய முகவர்போன்றுதான் இங்கே அவர் இருக்கிறார்.
சட்டப்பேரவையில், ஆளுநர் பேருரை என்று படிக்கிறார் - அது ராஜ்பவனில் எழுதப்பட்டது அல்ல - அமைச்சரவை தயாரித்து என்ன கொடுக்கிறதோ அதைத்தான் அவர் படிப்பார்.
''It is the Policy of the Government - Read by the Governor - Not Written by Governor''
ஆகவேதான், இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கிறது. நானேதான் உரையை எழுதினேன் என்று சொன்னார் என்றால், அது ஜனநாயகத்திற்கு விரோதம் - அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதம்.
படிப்பதற்குத்தான் அவருக்கு உரிமை உண்டு. ஆனால், நானேதான், ஆளுநர் உரையை தயார் செய்வேன் என்று சொன்னால், அவர் அத்துமீறிவிட்டார் என்று அர்த்தம்.
அதேபோன்று, துணைவேந்தர்கள் நியமனங்களில்கூட, ex-officio Chancellor தான் அவர். துணைவேந்தர்களை நானே நியமனம் செய்வேன் என்கிற ஒரு தவறான நடைமுறை கடந்த அய்ந்தாண்டுகளாக இருக்கிறது. அந்த அணுகுமுறையை மாற்றவேண்டும்.
துணைவேந்தர் நியமன உரிமையை கடந்த ஆட்சியினர் பறிகொடுத்தனர் - அதனை திரும்பப் பெறவேண்டும்!
உண்மையாகவே துணைவேந்தர்களை அரசுதான் நியமிக்கவேண்டும்; ஆளுநர்கள் ஒப்புதல் தரவேண்டும் அவ்வளவுதான்.
இந்த அதிகாரத்தை கடந்த ஆட்சியில் இருந்தவர்கள் பறிகொடுத்தார்கள்; இந்த அரசு, அதனைத் திரும்பப் பெறவேண்டும்.
ஆகவேதான், ஆளுநருக்கு என்று அதிகாரம் உண்டு. அந்த எல்லையை அவர் தாண்டக் கூடாது.
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக