நிர,புவனாநாகராஜன், செம்பனார்கோவில்
கேள்வி: கடவுள் மறுப்புக் கொள்கையுள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளாராமே?
பதில்: வீரமணி, அவர் மனைவி மோஹனா இருவரும் கொரோனா வந்து, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள் என்று செய்தி படித்தோம். அவர்கள் நலமடைய, அவர் உடைத்த பிள்ளை யாரையே பிரார்த்திக்கிறோம். இது தொடர்பாக ஒரு செய்தி. 2018-ல் பெரியார் திடலில் வீரமணி பேரன் கபிலனுக்கும், மஹாலஷ்மிக்கும் நடந்த திருமண ஃபோட்டோவில் மணப்பெண், ஹிந்துக்கள் வணங்கும் மஹாலக்ஷ்மி போலவே நெற்றியில் பொட்டுடன் சர்வாலங்கார பூஷிதையாக இருப்பதைக் காணலாம். அவர் தாயாரும் அப்படியே தெரிகிறார். வீரமணி தம்பதிகளுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும், கடவுள் நம்பிக்கை உள்ளவர் போலத் தெரியும் அந்த மணப்பெண். அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வார். (ஃபோட்டோ கீழே) வேண்டுமானால் இணையதளத்தில் அதைப் பெரிதுபடுத்திப் பார்க்க.
ஒரு உபகதை. ஆண்களும் பெண்களும் ஒரே மாதிரியாக லுங்கி கட்ட வேண்டும். ஜிப்பா போட வேண்டும். நம் நாட் டுப் பெண்களின் முன்னேற்றத்தைத் தடுப்பது அவர்களது புடவை, நகை, துணி, அலங்கார வேஷங்கள்தான் என்பதை அவர்கள் உணர வேண்டும். பெண்கள் ஆறடி, ஏழடி கூந்தலை வளர்த்துக் கொள்வது அநாகரீகமும், தேவையற்ற தொல்லையும் ஆகும். ஆண்களைப் போலவே பெண்களும் கிராப் வைத்துக் கொள்ள வேண்டும்‘ என்று பெண்களுக்கு அறிவுரை கூறினார் ஈ.வெ.ரா. (2). வீரமணி மனைவி உள்பட ஃபோட்டோவில் உள்ள பெண்கள் ஈ.வெ.ரா கூறியதைக் குப்பையில் போட்டு விட்டுத்தான் ஃபோட்டோவில் நிற்கிறார்கள்.
(1)https://www.dailythanthi.com/News/State/2018/06/18013240/invitation-has-been-done-without-printing-K-Veeramani.vpf (2) https:\\newindian.activeboard.com/t64544642/topic-64544642
துக்ளக், 1.12.2021, பக்கம் 30
எதைச் சொல்லியாவது திராவிடர் கழகத் தலைவரைச் சீண்ட வேண்டும் - அப்படிச் சீண்டாவிட்டால் அவாளுக்கு தூக்கம் வராதே! இதனால் தான் இந்தப் பினாத்தல்!
உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒன்றை வைத்துக் கூட கிண்டலும் கேலியும் செய்யும் அளவுக்கு அவர்கள் மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகள் ஆகி விட்டார்கள். அவாளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!
ஓடுகாலி சங்கராச்சாரியார் மரணத்துக்குக்கூட இரங்கல் தெரிவித்தவர் திராவிடர் கழகத் தலைவர்.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும்போது கூட குத்துக் கல்லுபோல உட்கார்ந்திருந்த ஓர் ஆசாமி தானே அவர்களின் ஜெகத்குரு - அவர்களிடம் நாகரிகத்தை எதிர்பார்க்க முடியுமோ!
திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்களின் பேரன் - கடவுள் நம்பிக்கையுள்ள ஒரு வீட்டுப் பெண்ணை திருமணம் செய்து கொண்டாராம் - அதில் என்ன தப்பு?
யாரையும் வற்புறுத்திட வேண்டிய அவசியம் இல்லை. கால ஓட்டத்தில் அவர்களும் திருந்துவதற்கு வாய்ப்பு உண்டே - அதுதானே இப்பொழுது நடந்தும் இருக்கிறது.
இந்தப் பிரச்சினைக்கும் திராவிடர் கழகத் தலைவருக்கும், அவர் தம் இணையர்க்கும் கரோனா வந்ததற்கும் என்ன சம்பந்தம்?
எதையாவது உளறிக் கொட்டி ஆற்றாமையை வெளிப்படுத்த வேண்டும் என்கிற அரிப்பு நோய் - நாம் என்ன செய்ய!
சங்கர மடத்தைப் பழித்தார் கருணாநிதி. அவர் படுத்துண்டார் என்று சொன்ன நாகரிக மற்ற மனிதர்தான் அவர்களின் குலக்குரு.
புத்தி அப்படித்தானே இருக்கும்.
கூந்தலை வெட்டியும் கிராப் வைத்துக் கொள்ள வேண்டும், பெண்கள் லுங்கி கட்ட வேண்டும், ஜிப்பா போட வேண்டும் என்றார் ஈ.வெ.ரா. ஆனால் அதுமாதிரி அவர்களின் குடும்பப் பெண்கள் இல்லையே என்று பெரிய குற்றச்சாட்டைக் கண்டுபிடித்து விட்டார்.
தந்தை பெரியார் சொன்ன புரட்சிகரமான கருத்துக்கள் இன்று கூறி நாளையே நடந்து விடும் என்பதல்ல. காலவோட்டத்தில் அந்த மாறுதல் வந்தே தீரும் - வந்து கொண்டும் இருக்கிறது.
நாமும் கூட திருப்பி அடிக்கலாம், குருமூர்த்தி அய்யர் ஏன் அவுட்டுத் திரி வைக்கவில்லை. அவர் ஏன் பஞ்ச கச்சம் கட்டாமல் வெள்ளைக்காரன் கற்றுக் கொடுத்த பேண்ட்டை ஏன் போட வேண்டும்?
புருஷனை இழந்த அக்ரகாரப் பெண்கள் ஏன் மொட்டைப் போட்டுக் கொள்ளவில்லை? வெள்ளைப் புடவை கட்டி ஏன் மூலையில் ஒதுங்கிக் கிடக்கவில்லை?
குருமூர்த்தி அய்யர் ஏன் உஞ்சி விருத்தி செய்யவில்லை? நாலுதெரு சுற்றிப் பிச்சை எடுத்துத்தானே வயிறு கழுவ வேண்டும். காஞ்சி சங்கராச்சாரியார் சொன்னது போல கும்பகோணத்தில் பிச்சைக்கார பார்ப்பான் தெரு என்று இன்றும் இருக்கிறதே என்று காஞ்சி சந்திரசேகரன் (அதுதான் அந்த சங்கராச்சாரியார்) சொன்னதுண்டே!
இதுபோல் ஆயிரம் ஆயிரம் கேள்விகளை நம்மாலும் கேட்க முடியுமே!
மேலும் தகவல் வேண்டுமானால் எழுத்தாளர் சகோதரி சிவசங்கரி அவர்கள், திராவிடர் கழகத் தலைவரைக் கண்ட பேட்டி- காலங் கடந்து, வீரமணி சொன்னது சரிதான் என்று தம் அனுபவத்தின் அடிப்படையில் ஒப்புக் கொண்டதுமான தகவலை அவரிடமே கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக