புதன், 30 அக்டோபர், 2024

‘‘தீபாவளி’’யைக் கொண்டாடுபவர்களின் சிந்தனைக்குச் சில செய்திகள்!

விடுதலை நாளேடு

 ‘‘தீபாவளி’’ வந்தது திருமலை நாயக்கன் காலத்தில்தான் – சோழர் காலத்தில் கிடையாது!

ஒரே பண்டிகைக்குப் பல்வேறு கதைகள் ஏன்?
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை

‘தீபாவளி’ வந்தது திருமலை நாயக்கன் காலத்திலிருந்துதான், சோழர் காலத்தில் கிடையாது. ஒரே பண்டிகைக்குப் பல்வேறு கதைகள் வந்தது எப்படி? என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
‘தினத்தந்தி’யின் ஞாயிறு இதழில் வெளிவரும் இணைப்பான ‘தேவதை’ (27.10.2024) பகுதியில் இடம்பெற்றுள்ள ஒரு கட்டுரையில் உள்ள சில தகவல்களைப் படியுங்கள். அதன் பிறகு, அதன்மூலம் சிறிதும் விருப்பு வெறுப்பற்று, பகுத்தறிந்து, பொங்கலைப் போல, கொண்டாடத்தக்க யோக்கியதை இதற்கு உண்டா? என்று முடிவுக்கு வாருங்கள்.
‘‘அறியாமை என்பதைவிட, உலகின் மானுட வர்க்கத்திற்கு மிக மோசமான நோய் வேறு இல்லை’’ என்றார் அமெரிக்க நாட்டுப் பகுத்தறிவு மேதை இங்கர்சால் அவர்கள்.
இந்தத் தீபாவளியே அதற்குச் சரியானதொரு எடுத்துக்காட்டு.

மேலும் கொடுமையானது இது. ‘‘அசுரர்கள்’’ என்று ஆரியர்களால் பெயர் சூட்டப்பட்டு, அவதூறு சேற்றை அவர்கள்மீது பூசி, ‘தேவர்கள் வென்றார்கள், கொன்றார்கள்’ என்று கதைகள் புனைவுமூலம் நம் திராவிட இனத்தின்மீது நிகழ்த்தப்பட்ட பண்பாட்டுப் படையெடுப்பினை அடிப்படையாகக் கொண்ட ஒரு கட்டுக்கதைப் புராணம்.
தீபாவளிபற்றி அவ்வேடு வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையை முதலில் தருகிறோம், படியுங்கள்!
‘‘தீபாவளியை முதன்முதலில் கொண்டாடியவர்!’’
‘‘தீபாவளியை முதன்முதலாகக் கொண்டாடி யவன், நரகாசுரனின் மகனான பகதத்தன் என்கின்றன புராணங்கள்.
‘‘தமிழகத்தில் சோழர் காலம்வரை தீபாவளி கொண்டாடப்படவில்லை. திருமலை நாயக்கர் காலத்தில்தான் முதன்முதலாக தீபாவளி கொண்டாடப்பட்டது.’’

தீபாவளிப் பண்டிகை மிகத் தொன்மையான பண்டிகையாகும். வாத்சாயனர் எழுதிய நூலில் ‘யட்ஷ ராத்திரி’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இது கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று இரவில் கொண்டாடப்படுகிறது. இதை ‘சுகராத்திரி’ என்றும் சொல்வதுண்டு.
கைலாய மலையில் தீபாவளி நாளில் சிவனும், பார்வதியும் சொக்கட்டான் விளையாடியதாக ஒரு கதை உண்டு. அதை நினைவூட்டும் விதமாகவே குஜராத் மாநில மக்கள் தீபாவளி நாள் இரவில் சொக்கட்டான் ஆடும் பழக்கத்தை இன்றும் கடைப்பிடித்து வருகின்றனர்.
தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அதில் இருந்து முதலில் தோன்றி யவர் தன்வந்திரி. ஆயுர்வேத மருத்துவத்தைத் தோற்றுவித்த இவர் தோன்றிய நாளே தீபாவளி என்ற கருத்தும் உண்டு.

சிவபெருமானின் உடலில் பாதியை அடைய திருக்கேதாரத்தில் தவம் செய்தார் பார்வதி. சதுர்த்தசி நாளில் சக்திக்கு தன் உடலில் பாதியைத் தந்து அர்த்தநாரீஸ்வரர் ஆனார் சிவன். அதன் அடிப்படையில், கணவனுடன் எந்நாளும் சேர்ந்தே இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டு தீபாவளி நாளில் கேதாரகவுரி விரதம் இருக்கி்ன்றனர் பெண்கள். அப்போது அம்மியையும், குழவியையும் சிவசக்தியாக பாவித்து பூஜை செய்கின்றனர்.
தீபாவளியன்று விடியற்காலையில் நீராடி மகாலட்சுமியை பூஜை செய்து, தீபங்களை வீட்டில் பல இடங்களில் வைத்தால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்று விஷ்ணு புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.


சிறீரங்கத்தில் சிறீரங்கநாதருக்கு மிகச் சிறப்பான தீபாவளி கொண்டாட்டம் உண்டு. அன்று அவருக்கு விசேஷமாக ‘ஜாலி அலங்கார’ நிகழ்ச்சி நடைபெறும். ஆயிரம் ஒரு ரூபாய் நாணயங்களை இரண்டு துணிகளில் மூட்டையாகக் கட்டி, மேளதாளங்கள் முழங்க, நாகஸ்வர இசை ஒலிக்க, வேத பாராயணத்துடன் பெருமாள் திருவடிகளில் சமர்ப்பிப்பதே ஜாலி அலங்கார நிகழ்ச்சி ஆகும்.
குஜராத் மாநிலத்தில் வியாபாரிகள் புதுக் கணக்கு துவங்கும் நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. அன்று சிறுவர்கள் பட்டம் பறக்கவிட்டு மகிழ்வார்கள்.

புத்த பிரான் முக்தி அடைந்த நாளாக பவுத்தர்க ளும், மகாவீரர் முக்தி அடைந்த நாளாக ஜைனர்களும் தீபாவளி திருநாளை கொண்டாடுகிறார்கள்.
வாரணாசியில் ‘கார்த்திகை பூர்ணிமா’ என்ற பெயரில் தீபாவளி கொண்டாடப்படுகிறது.
பீகார் மாநிலத்தில் தீபாவளிக்கு இரு தினங்களுக்கு முன்னர் தன்வந்திரி பகவானுக்கு விழா எடுக்கின்றனர். இந்த விழாவுக்கு ‘தந்தேராஸ்’ என்று பெயர்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில், தீபாவளியன்று குபேர பூஜை செய்வதை முக்கியமானதாக கருதுகி்ன்றனர். அன்று செல்வத்தின் அதிபதியான குபேரனை வழிபட்டால், ஆண்டு முழுவதும் பணத் தட்டுப்பாடு ஏற்படாது என்பது அவர்கள் நம்பிக்கை.
உத்தரப்பிரதேசத்தில், சீதாதேவியை ராமர் மீட்ட திருநாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.


மேற்கு வங்காளத்தில் காளிதேவி வழிபாடாக ‘மகாநிசா’ என்ற பெயரில் தீபாவளியை கொண்டாடு கி்ன்றனர்.
கொல்கத்தாவி்ல் தீபாவளியையொட்டி, ‘பூவாணப் போட்டி’ நடைபெறுகிறது. எவரது வாணம் (பட்டாசு) வானில் அதிக உயரத்தில் சென்று வெளிச்சப் பூக்களைக் கொட்டுகிறதோ, அவரே வெற்றி பெற்றவர்!’’
இதுவே அக்கட்டுரையாகும்.

தீபாவளிப் பண்டிகையை முதன்முதலாகக் கொண்டாடியவன் நரகாசுரனின் மகனான பகதத்தன் என்கின்றனவாம் புராணங்கள்!
ஆதாரம் எது? புராணம் – புராணங்களே புளுகு மூட்டைகள் என்பது பலரும் ஒப்புக்கொண்ட ஒன்று.
‘‘இந்தப் புளுகு கந்தப் புராணத்திலும் இல்லை’’ என்பது கிராமியப் பழமொழி!
திராவிடர்களை சூழ்ச்சியால் கொன்றது மட்டுமல்ல, அதனை அவனையே கொண்டாடச் சொன்னான் என்றும், மகனையே கொண்டாடச் செய்தார்கள் என்பதும் எவ்வகை மூளைச்சாயம் பார்த்தீர்களா? பண்பாட்டுப் படையெடுப்பின் தத்துவம்!
இரணியன் மகனே பிரகலாதன், இராவணனின் தம்பி வஞ்சக விபீடணன், வாலியின் தம்பி சுக்கிரீவன், அவனை சாகடிக்க குரங்கு வகையான அனுமார். இப்படி ஆரிய எதிரிகளையே அப்போது வளைத்துப் போட்டு தங்களது ஆதிக்க வெற்றியை நிலை நிறுத்தினர் என்ற பொது உண்மையை அனைத்துப் புராண இதிகாசங்களின் இத்தகைய கதைகள்மூலம் அறிந்துகொள்ளலாமே!
இக்கட்டுரையாளர் கருத்துப்படி,

1. தமிழ்நாட்டில் சோழர் காலம்வரை (அதாவது 13 ஆம் நூற்றாண்டு வரை) தீபாவளி என்ற ஒரு பண்டிகையே கிடையாது. அதற்குப் பிறகுதான். இவ்வடபுலத்துப் பண்டிகையை யார் திணித்தது?
திருமலை நாயக்கர் மன்னர்கள் காலத்தில்தான் முதன்முதலில் கொண்டாடப்பட்டது என்று சொல்வதின் பொருள் என்ன?
ஒரு பண்பாட்டுப் படையெடுப்புதானே!
பழனி கோவில் அர்ச்சகர்களாக பார்ப்பனர்கள் வந்தது எப்படி?
பழனி கோவிலில் புலிப்பாணி சித்தர்களை, அர்ச்சகர் பொறுப்பிலிருந்து விரட்டிவிட்டு, கொடுமுடியிலிருந்து பார்ப்பனர்களைக் கொண்டுவந்து அந்தப் பொறுப்பில் வலுக்கட்டாயமாகத் திணித்தது திருமலைநாயக்கனின் அமைச்சரான இராமப்பையன் என்பது பல பதிவுகள்மூலம் தெரிய வருகிறது. (பழனி தலப் புராணம்)

இது பண்பாட்டுப் படையெடுப்பைத் தவிர, வேறு என்ன?
இதில் சுட்டிக்காட்டப்பட்ட கட்டுரையில், தொட்டுக் காட்டப்படவேண்டிய அளவிற்குப் புலப்படும் மற்றொரு உண்மை.
‘தீபாவளி’ என்ற வடமொழிச் சொல் பெயர் பெற்ற இப்பண்டிகைக்கான கதைகள் ஒரு வகையானதல்ல.
பல ஊர்களில், பல மாநிலங்களில், பலரால், பலவிதமான காரணங்களாக அமைந்து கொண்டாடப்படு கின்றன!
இதைப் பெருமையாக கருதுவோருக்கு இது ஏனோ புரியவில்லை!
இரண்யாட்சதன் பூமியைப் பாயாக சுருட்டி கடலுக்குள் ஒளித்து, பிறகு மகாவிஷ்ணு பன்றி அவதாரம் எடுத்து, அதை மீட்டான். மீட்ட பன்றி அவதாரத்திற்கும், ‘மகாவிஷ்ணுவுக்கும்’ – பூமாதேவிக்கும் பிறந்தவன் நரகா அசுரனாம்!
தேவன் – தேவி இருவருக்கும் பிறந்த பிள்ளை எப்படி அசுரன், ராட்சசன், அரக்கனாக முடியும்?
தேவன் –தேவி – பிள்ளையும் தேவர்கள் என்றுதானே அழைக்கப்படுதல் நியாயம்!
எவராவது சிந்தித்தார்களா?
என்ன குற்றம்?
ஆரியர்களின் யாகத்தை – பண்பாட்டை – படையெடுப்பைத் தடுத்தது குற்றமாம்!
அதற்கு வஞ்சகமாக கொலை நாளாம்!
அறிவுள்ளோர், உணர்வுள்ளோர் ‘தீபஒளி’ என்று அழைக்கலாமா? இதைக் கொண்டாடலாமா?
சிந்திக்கும் மனிதர்களாக மாறுங்கள்!

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை 
29.10.2024 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக