பொதுநல வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி
புதுடில்லி, அக்.22 இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருப்பதை விரும்பவில்லையா? என பொதுநல வழக்கில் மனுதாரர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமிக்கு உச்ச நீதிமன்றம் காட்டமான கேள்வியை எழுப்பி உள்ளது.
இ்ந்திய அரசமைப்பு சட்டம் உருவாக்கப்பட்ட போது அதன் முகப்புரையி்ல் ‘மதச்சார்பின்மை’ மற்றும் ‘சோசலிசம்’ என்ற வார்த்தைகள் இடம்பெறவில்லை. ஆனால்,இடையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு இந்த இரண்டு வார்த்தைகள் சேர்க்கப்பட்டன. எனவே, இந்திய அரசமைப்பு சட்டத்தின் முகப்புரையில் இருந்து மதச்சார்பின்மை மற்றும் சோசலிசம் ஆகிய வார்த்தைகளை நீக்க வேண்டும் எனக் கூறி மேனாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பாஜகவின் மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி, வழக்குரைஞர்கள் அஸ்வினி உபத்யாய், விஷ்ணு சங்கர் ஜெயின் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் பி.வி. சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (21.10.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருக்க விரும்பவில்லையா? என்றுநீதிபதி சஞ்சீவ் கன்னா கேள்வி எழுப்பினார்.
இதற்கு, இந்த வழக்கின் மனுதாரரான விஷ்ணு சங்கர் ஜெயின்”இந்தியா மதச்சார்பற்றது அல்ல என்று நாங்கள் இங்கு கூறவில்லை. அரசமைப்பு சட்டத் தின் முகப்புரையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தை மட்டுமே நாங்கள் எதிர்க்கிறோம். மேலும், சோசலிசம் என்ற வார்த்தையை சேர்ப்பது சுதந்திரத்தை குறைக்கும் என்பது அம்பேத்கரின் கருத்தாக இருந்தது” என்றார்.
மற்றொரு மனுதாரரான வழக்குரைஞர் அஸ்வினி உபத்யாய் வாதிடுகையில், “நாங்கள் எப்போதுமே மதச்சார்பற்றவர்கள். மக்களின் விருப்பத்தை கேட்காமல் அவர்கள் இந்த வார்த்தையை முகப்புரையில் சேர்த்துள்ளனர். நாளை ஜனநாயகம் என்ற வார்த்தை கூட நீக்கப்படலாம்” என்றார். மனுதாரர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கூறுகையில், “மதச்சார்பின்மை’ மற்றும்’சோசலிசம் ஆகிய வார்த்தைகளை இயற்றுவதற்கு இந்திய மக்களாகிய நாங்கள் சம்மதம் தெரிவித்துள்ளோம் என்று கூறுவது தவறு. எனவே முகப்புரையை நாம்இரண்டு பகுதிகளாக வைத்திருக்கலாம். ஒன்று தேதியுடன் மற்றொன்று தேதியில்லாமல்” என்றார். மனுதாரர்களின் வாதங்களை கேட்டபிறகு நீதிபதிகள் கூறியதாவது:
அரசமைப்பின் கட்டமைப்பு என்பது மதச்சார்பின்மைதான். பல தீர்ப்புகள் மதச்சார்பின்மையின் அடிப் படையில்தான் இந்த நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றம் மதச்சார்பின்மைக்கு எதிரான சட்டங்களை ரத்து செய்துள்ளது. சமத் துவத்துக்கான உரிமை, சகோதரத்துவம் என்ற வார்த்தைகள் மற்றும் பகுதி III-இன் கீழ் உள்ள உரிமைகளைப் பார்த்தால் அரசமைப்பின் முக்கியமான அம்சமாக மதச்சார்பின்மை உள்ளது தெளிவாக தெரியும். சோசலிசம் என்பது நாட்டின் அனைத்து வளங்களும், வாய்ப்புகளும் அனைத்து மக்களுக்கு சமமான முறையில் பங்கிட்டு வழங்கப்பட வேண்டும் என்பதுதான். மேலும், இது அரசமைப்பில் திருத்தம் செய்யப்பட்டு சேர்க்கப்பட்ட வார்த் தைகள் என்பதால் அடைப்புக் குறிக்குள் இடப்பட்டிருக்கிறது. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
மனுதாரர்கள் உரிய ஆவணங்களை ஆய்வுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி சஞ்சீவ் கண்ணா இந்த வழக்கு தொடர்பாக அறிவிக்கை அனுப்ப மறுத்து, வழக்கு விசாரணையை நவம்பர் 18-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக