
பிராமணர்களைத் துவேஷிக்கிறார்களாம், திரைப் படங்களில் கேலி கிண்டல்கள் செய்கிறார்களாம்.
தீண்டாமைக்கு ஆளாக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை அவமதித்தால் அத்தகையவர்கள்மீது நடவடிக்கை எடுக்க பி.சி.ஆர். சட்டத்தின் (Prevention of Civil Right Act 1955) அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
காஞ்சி சங்கர மடத்தின் புனிதத் தன்மையை இழிவுபடுத்துதல் போன்றவற்றைச் செய்தால் பி.சி.ஆர். சட்டம் போல புதிய சட்டம் கொண்டு தண்டிக்க வேண்டுமாம். அதற்காக ஆர்ப்பாட்டம் – பேரணிகளை நடத்தப் போகிறார்களாம்! (நவம்பர் 3ஆம் தேதியன்று சென்னையில்) இராமாயண காலத்திலிருந்து விபீஷணர்களும் சுக்கிரீவன்களும், அனுமார்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அயோத்தியிலிருந்து ராமனையும் சேர்த்து மூவர்தான் வனவாசம் சென்றார்கள்.
இந்த மூவரும் சேர்ந்தா திராவிட மாவீரன் இராவணனை வீழ்த்தினார்கள்? உடன் பிறந்தே கொல்லும் வியாதியான வீபிஷண ஆழ்வார்கள், அனுமார்கள் காட்டிக் கொடுத்துத்தானே அந்த வீழ்ச்சி நடைபெற்றது.
‘இன்று எனக்குள்ள குறையெல்லாம் தமிழர் சமுதாயத்தில் ‘‘விபீஷணப் பரம்பரை’’ வளர்ந்து வருவதுதான், என்றார் தந்தை பெரியார் (தந்தை பெரியார் பிறந்த நாள் 90ஆம் ஆண்டு ‘விடுதலை’ மலர் 17.9.1969)
அந்த நிலை இன்னும் நீடிக்கிறதே – வெட்கக் கேடு!
பிராமணர்களைப் பாதுகாக்கப் போகிறார்களாம்! அவர்களைப் ‘பிராமணர்கள்’ என்று சொல்லும்போதே – அப்படி சொல்லுகின்றவர்கள் தங்களைத் தாங்களே இழிவுபடுத்திக் கொள்கிறார்கள் என்ற அடிப்படை தெரியாத அறிவிலிகள் என்பதற்காகப் பரிதாபப்பட வேண்டியுள்ளது. இழிவில் சுகத்தைக் காணும் கேவலம்!
‘அவன் பிராமணன் என்றால் நீ யார்?’ சொல்! நீ சூத்திரன் என்று ஒப்புக் கொண்டு விட்டாயே!
பிர்மாவின் நெற்றியிலிருந்து பிறந்தவன் பிராமணன், தோளிலிருந்து பிறந்தவன் சத்திரியன் – தொடையிலிருந்து பிறந்தவன் வைசியன் – காலிலிருந்து பிறந்தவன் சூத்திரன் என்று ஹிந்து மதத்தின் மனுதர்மம் கூறியிருப்பதை – ஹிந்துத்துவாவவைக் காப்பதற்காகத் தொடை தட்டும் தன்மானமற்ற தக்கைகளுக்குத் தெரியுமா?
சூத்திரன் என்றால் யார்? அதையும் அதே மனுதர்ம சாஸ்திரம் தான் ஓங்கி அடித்துக் கூறுகிறது – இதுவரை தெரியாவிட்டாலும் இப்பொழுதாவது தெரிந்து கொண்டு போதை தெளியட்டும்!
‘சூத்திரன் ஏழு வகைப்படும்.
(1) யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன்.
(2) யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப்பட்டவன்.
(3) பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியஞ் செய்கிறவன்.
(4) விபச்சாரி மகன்.
(5) விலைக்கு வாங்கப்பட்டவன்.
(6) ஒருவனால் கொடுக்கப்பட்டவன்.
(7) தலைமுறை தலைமுறையாக ஊழியம் செய்கிறவன் (மனுதர்மம் அத்தியாயம் – 8; சுலோகம் – 415).
இவர்கள்தான் சூத்திரர்கள். ‘பிராமணர்’களுக்காக வரிந்து கட்டி வக்காலத்து வாங்கிக் கோதாவுக்குள் குதிக்கும் ஆசாமிகள் இந்த ‘இழிவை’யும் ஏற்றுக் கொண்டு மானத்தை விற்று இழிவுச் சேற்றில் கிடந்து உழலப் போகிறார்களா?
‘சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டடி!’ என்ற முழக்கத்தை திராவிடர் கழகம் கொடுத்த பிறகு தானே இப்பொழுது வெளிப்படையாக சூத்திரன் என்று சொல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
மறுபடியும் ‘பிராமணர்’களுக்காக மடிகட்டி நிற்கும் மட சாம்பிராணிகள் தங்களை விபச்சாரி மகன் என்று ஏற்றுக் கொள்ளத் துடிக்கிறார்களா?
பி.சி.ஆர். சட்டம் போல ‘பிராமணர்களை பழிப்பவர்களை தண்டிக்க சட்டம் கொண்டு வர’ வேண்டுமாம்.
நியாயமாகப் பார்க்கப் போனால் பி.சி.ஆர். சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருக்க வேண்டிய முதல் ஆசாமி காஞ்சி சங்கராச்சாரியார்தான்.
‘தீண்டாமை ேக்ஷமகரமானது என்ற எண்ணம் தமக்கிருக்கிறது’ என்று சொன்னவர் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதிதான் (ஸ்ரீ ஜெகத்குருவின் உபதேசங்கள்’’ இரண்டாம் பாகம்).
தீண்டாமை ஒழிப்புத் தொடர்பாக காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியை காந்தியார் பாலக்காட்டில் சந்தித்ததுண்டே! அப்பொழுது என்ன நடந்தது?
‘16.10.1927 அன்று பாலக்காட்டில் மாட்டுக் கொட்டகையில் சங்கராச்சாரியாரைச் சந்தித்த காந்தியாரிடம், சங்கராச்சாரியார் கூறுகிறார். ‘‘ஹரிஜன ஆலயப் பிரவேச விஷயத்தில்’’ சாஸ்திரங்களையும், பழைய வழக்கங்களையும் நம்பி இருப்பவர்கள் நம் நாட்டில் பெரும்பாலோர் இருக்கிறார்கள் என்றும், அவர்கள் மனம் நோகும்படிச் செய்யும் எந்த மாறுதலும் இம்சைக்கு ஒப்பாகுமென்றே தாம் முடிவுக்கு வர வேண்டியிருக்கின்றது என்றும் ஸ்வாமிகள் (காஞ்சி சங்கராச்சாரியார்) காந்தியடிகளிடம் தெரிவித்தார்.’’ (ஆதாரம்: ‘தமிழ்நாட்டில் காந்தி‘ பக்கம் 575,576).
சங்கரமடத்துக்கு வக்காலத்து வாங்கும் கூலிகள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
பி.சி.ஆர். சட்டத்தின்படி அந்த சங்கராச்சாரியார் கைது செய்யப்படாதது ஏன்? பதில் சொல்லுமா இந்த வாடகை ஒலி பெருக்கிகள்?
இந்த இலட்சணத்தில் காஞ்சி சங்கர மடத்தின் புனிதத் தன்மையை இழிவுபடுத்துகிறோமாம்.
இழிந்த குணத்தை இரத்தவோட்டமாகக் கொண்டவர்களால்தான் இப்படி எல்லாம் பேச முடியும்.
ஸ்திரிகளுக்குச் சொத்து பாத்யம் கொடுத்தால் – அவாளுக்கு சொத்துல பங்கு கொடுத்தால் என்ன ஆகும் தெரியுமா? இஷ்டப்பட்டவாகூட ஸ்திரிகள் ஓடிப் போயிடுவா’ என்று சொன்னவரும் சாட்சாத் அதே சங்கராச்சாரியார்தான்.
பார்ப்பனப் பெண்களையும் உள்ளடக்கி எல்லாப் பெண்களையும் ஒட்டு மொத்தமாக ‘நமோ சூத்திரா’ என்று சொல்லும் ஹிந்துத்துவாவுக்குப் பல்லக்குத் தூக்கும் பேர் வழிகளின் கூட்டத்தை என்ன சொல்லி நகைப்பது!
ஆண்டுக்கொருமுறை ஆவணி அவிட்டம் என்ற பெயரில் பூணூலைப் புதுப்பிக்கிறார்களே, பூணூல் கல்யாணம் செய்கிறார்களே – அதன் தாத்பரியம் என்ன? அவர்கள் துவி ஜாதிகளாம் – அதாவது இரு பிறவியாளர்களாம்.
‘சூத்திரன் பிராமண ஜாதிக் குறியை – பூணூல் முதலியவற்றைத் தரித்தால், அரசன் சூத்திரனின் அங்கங்களை வெட்டி விட வேண்டும்‘ (மனுதர்மம் அத்தியாயம் 9 – சுலோகம் 224).
‘பிராமணனுக்குத் தலையை முண்டிதம் செய்வது (மொட்டை அடிப்பது) கொலைத் தண்டனையாகும். மற்ற வர்ணத்தாருக்கு கொலை தண்டனை உண்டு’’ (மனுதர்மம் அத்தியாயம் – 8 சுலோகம் 379).
இந்த 2024லும் கூட மனுதர்ம சாஸ்திரத்துக்கு வக்காலத்து வாங்கும் வடிகட்டிய – மூளையை அடகு வைக்கும் ஆசாமிகளை எந்தப் பட்டியலில் சேர்ப்பது?
இந்த நிலையில் பிராமணர்களைப் பாதுகாக்கப் போகிறார்களாம்! இவர்களின் அடிமைப்புத்தியைப் புரிந்து கொள்வீர்!
பேரணியாம் – ஆர்ப்பாட்டமாம் – அனுமார் கூட்டம் ஆர்ப்பரிக்கிறது.
இது தந்தை பெரியார் மண் – திராவிடத் தத்துவ உரம் பதிந்த பூமி!
இந்த நிலையில் ‘பிராமணர்கள்‘ என்பதும் – அவர்களைப் பாதுகாப்போம் என்பதும் – ஆர்ப்பாட்டம் என்பதும் – எல்லாம் நூற்றுக்கு 97 விழுக்காடு மக்களைச் சீண்டுவதாகும். அவர்களைச் சூத்திரர்கள் (விபச்சாரி மக்கள்) என்று இழிவுபடுத்துவது என்று முனைந்தால், தன்மானமுள்ள பார்ப்பனர் அல்லாதார் திரண்டு எழுவார்கள்.
எச்சரிக்கை! எச்சரிக்கை!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக