பிறப்பின் அடிப்படையிலேயே பேதம் கற்பிக்கிறதே - ஒரு குலத்துக்கொரு நீதி பேசுகிறதே மனுஸ்மிருதி - பெண்களை விபச்சார தோஷம் உள்ளவர்கள் என்று ஒட்டு மொத்தமாகக் கேவலப்படுத்துகிறதே - நான்கு வருணங்களைக் கடவுள் பிர்மாவே படைத்தார், அதில் நான்காம் வருணத்தவரான சூத்திரன் விபச்சாரி மகன் என்று கூறுகிறதே என்று ஆதாரத்தோடு சுட்டிக் காட் டினால் அறிவு நாணயமாகப் பதில் சொல்ல வாக்கற்ற கோழைகள் வேறு பக்கம் திசை திருப்புகிறார்கள்.
தொல்காப்பியம் போன்ற சங்க நூல்களைக் கொளுத்துவீர்களா என்று 'துக்ளக்' குருமூர்த்தி அய்யர் எதிர் கேள்வி எழுப்புகிறார். இதன் மூலம் 'ஆம் நாங்கள் மனுஸ்மிருதி பேர்வழிகள் தான் - அதில் எள்ளளவும் யாருக்கும் அய்யப்பாடு வேண்டாம்' என்று 'காப்புக் கட்டி' சத்தியம் செய்து விட்டார்கள் என்று பொருள்.
இனி யாராவது 'பார்ப்பனர்கள் முன்புபோல் இல்லை - எவ்வளவோ திருந்தி விட்டார்கள்' என்று நாக் கூசாமல் சொல்ல முன் வருவார்களேயானால், அவர் களை பைத்தியக்கார மருத்துவமனைக்கு அனுப்பி, 'சங்கிலி போட்டுக்' கட்டி வைக்க வேண்டியதுதான்.
தொல்காப்பியம் குறித்து தந்தை பெரியார் தம் கருத்தினைப் பதிவு செய்துள்ளார் என்பதை ஒப்புக் கொள்கிறோம்.
"தமிழர்களிடத்தில் இல்லாதிருந்த அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற நால்வகைச் ஜாதி முறையை ஆரியர் மெல்ல மெல்ல நாட்டி விட்டனர்” என்று பேராசிரியர் பரிதிமாற்கலைஞர் (சூரிய நாராயண சாஸ்திரி) 'தமிழ்மொழியின் வரலாறு' எனும் நூலில் எழுதுவதும் உண்மையே!
அதே நேரத்தில் தொல்காப்பியத்தில் பெண்கள் விபச்சார தோஷம் உள்ளவர்கள் என்றோ, சூத்திரன் என்றோ, அவன் விபச்சாரி மகன் என்றோ சொல்லப் பட்டிருந்தால் 'துக்ளக்' பூணூல் கூட்டம் எடுத்துக்காட்ட வேண்டும்.
ஆண்களுக்குச் சமத்துவமாகப் பெண்கள் இல்லை என்பது வேறு. அந்தப் பெண்களே விபச்சார தோஷம் உள்ளவர்கள் என்று இழிவுபடுத்துவது வேறு.
இழிவுபடுத்துவதும், உரிமை மறுப்பதும் ஒன்றல்ல; உரிமை மறுப்பு என்பது கருத்துக்குக் கருத்து மோதல் - எதிர்த்துப் போராடுதல் ஆகும். ஆனால் இழிவு படுத்துவது என்பது எதுவாக இருந்தாலும் எரிக்கப்பட வேண்டியது என்பதை சுயமரியாதை உள்ளவர்கள் எவரும் ஏற்றுக் கொள்வார்கள்.
"எதிர்ப்பதற்குத் தேவையான காரணங்கள் வேறு - எரிப்பதற்குத் தேவையான காரணங்கள் வேறு; இரண்டும் ஒன்றல்ல; ஆனால் பகுத்தறிவு என்றாலே, அது பித்தலாட்டம்" ('துக்ளக்' 4.3.2009) என்று கருதுகிற கூட்டத்திடம் இதனை எதிர்பார்க்க முடியாதல்லவா!
மனிதன் என்றாலே ஆறாவது அறிவு - அது பகுத்தறிவு என்பது அறிவியல் ரீதியானது- மானுடவியல் கூறுமாகும்.
அதையே பித்தலாட்டம் என்பவர்களை அய்ந்தறி வுப் பட்டியலில் வைக்க வேண்டியதுதான்; நாம் யாரா ரிடமெல்லாம் போராட வேண்டியிருக்கிறது என்பதை எண்ணிப் பார்த்தால் வெட்கப்படத்தான் வேண்டும். மனுதர்மத்திற்கு வக்காலத்து வாங்கும் 'சோ'வே கடைசி வரை அதைக் காப்பாற்ற முடியவில்லையே!
"சூத்திரர்கள் வேதம் கற்கக் கூடாது என்று ஒருபுறம் கூறுகிறது மனுதர்மம் - பிராமணர் அல்லாதார்களிட மிருந்து போதனை பெறும் அனுமதியையும் பிராமண னுக்கு அளிக்கிறது. பிராமணர் அல்லாதவன் எனும் போது, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தவர் அனைவருமே அடங்குகிறார்கள் அல்லவா?
இந்த முரண்பாடு - அதாவது மேற்கண்ட விதிக்கு சூத்திரர்கள் வேதம் கற்கக் கூடாது என்ற முரண்பாடு மனுஸ்மிருதியில் இருக்கத்தான் செய்கிறது"
('துக்ளக்' 8.11.2000)
என்று உண்மையை வேறு வழியின்றி ஒப்புக் கொண்டவர்தான் குருமூர்த்தி அய்யரின் குருநாதர் திருவாளர் சோ. ராமசாமி.
இதற்கெல்லாம் அவர் களிடம் பதிலை எதிர்பார்க்க முடியாது. அடுத்த இதழில் வேறு பக்கம் தாவி விடுவார்கள் - பகுத்தறிவை வெறுக்கும் இந்த அறிவுக் 'கொழுந்துகள்(?)'
நன்றி விடுதலை நாளிதழ் - Viduthalai Daily Paper, 6.11.20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக