பெண்களையும், பார்ப்பனரல்லாதாரையும் இழிவுபடுத்தும் மனுதர்மம் - மக்களின் ஒருமைப்பாட்டுக்கு எதிரானதே!
-------------------------------------------------------------
மனுஸ்மிருதி - ஜாதியை, பெண்ணடிமையை வற்புறுத்திப் பாதுகாக்கும் அறத்திற்கும், சமத்துவத்திற்கும், அறிவுச் சுதந்திரத்திற்கும் எதிரான ஒரு நூல் என்பதை, அய்ரோப்பிய யூனியன் நாடுகள் சார்பில் கடந்த செப்டம்பரில் (25, 26), அங்கே நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கருத்தரங்கில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மானமிகு தொல்.திருமாவளவன் எம்.பி., அவர்களது உரையைத் திரித்து வெளியிட்டதோடு, அதன் காரணமாக அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றெல்லாம் பா.ஜ.க.வினர் - வேறு அரசியல் மூலதன சரக்கு தி.மு.க. கூட்டணிக்கு எதிராக ஒன்றும் கிடைக்காததால், இதனை வைத்துப் பிரச்சாரம், சிற்சில இடங்களில் போராட்டம் என்ற கூத்தும் நடைபெற்றன!
வழக்கைத் தள்ளுபடி செய்த நீதிபதிகள்!
ஒரு வழக்குரைஞர் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில், திருமாவளவனை நாடாளுமன்றப் பதவியிலிருந்து நீக்கவேண்டும் என உத்தரவிடவேண்டும் என்று வழக்கு ஒன்றையும் தொடுத்தார்; அது விசாரணைக்கு வந்தபோது, அதனை விசாரித்து, தள்ளுபடி செய்த நீதிபதிகள் அமர்வு (ஜஸ்டீஸ் சத்திய நாராயணன், ஜஸ்டீஸ் ஹேமலதா) முக்கியமான சில கருத்துகளைத் தெரிவித்து, சில கேள்விகளையும் எழுப்பியது. அதற்கு உரிய முறையில் வழக்குப் போட்டவர்கள் பதிலளிக்க முடியாத நிலையில், அவகாசம் கேட்ட நிலையில், அதற்கு மறுத்த நீதிபதிகள் வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளனர்.
நீதிபதிகள் எழுப்பிய கேள்விகள்!
1. திருமாவளவனின் கருத்துரிமை, பேச்சுரிமைக்கு நாங்கள் தடை விதிக்க முடியாது; ஆட்சேபகரமாக இருந்தால், அதுபற்றி யோசித்து நடவடிக்கை எடுப்பது அரசின் பொறுப்பாகும்.
2. இதுபோன்ற வழக்குகள் போடுவதன்மூலம் நீதிமன்றத்தை அரசியல் பிரச்சாரமாக, பிரச்சினைக்குத் தீர்வு காண நீதிமன்றத்தை களமாக்குவதை ஒருபோதும் ஏற்க முடியாது.
3. அரசமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவின்கீழ் திருமாவளவனை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று கோருகிறீர்கள்?
என்று எழுப்பிய கேள்விகளுக்கு எவ்வித தெளிவான பதிலும் அளிக்க முடியாமல் வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது!
அண்மைக் காலத்தில் தமிழ்நாட்டில் ‘மிஸ்டு கால்’மூலம் தங்கள் கட்சியை வளர்க்க முயன்ற பா.ஜ.க.வினர் அதில் வெற்றி பெற முடியாத நிலையில், இப்படி திட்டமிட்டே, திரிபுவாதம், அழிவழக்குகள் போடுவதை ஒரு அச்சுறுத்தல் உத்தியாகவும், அரசியல் பிரச்சாரம், கட்சி மேலிடத்தின் செல்வாக்கை உண்டாக்கி, அதன் பார்வை விழுந்தால் தாங்கள் ஏதாவது பதவி பெறலாமே என்பதற்காக (மத்திய ஆட்சி பா.ஜ.க. வசம் இருப்பதால், பல மத்திய அரசு நிறுவனங்களில் இவர்கள் இடந்தேடிகளாகவும் ஆகும் வாய்ப்புகள் உள்ளன) இப்படி ஒரு முயற்சியில் ஈடுபடுவதும், தமிழ்நாட்டில் உள்ள தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், திருவள்ளுவர், எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு இரவோடு இரவாக காவி பூசுதல், சிலரைக் காட்டி (லெட்டர் பேட் அமைப்புகள்மூலம்) விளம்பரம் தேடிடும் வித்தைகளையும் கையாளும் மலிவான ‘புஸ்’வாண வேடிக்கை விட்டுப் பார்க்கிறார்கள்.
வல்லடி வழக்கு - வம்பு வளர்ப்புகள்
அசைத்துவிட முடியாது!
கடற்பாறைகளான கொள்கை லட்சிய மாவீரர்களை, பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர், கழக வழி நிற்கும் மற்றும் முற்போக்குச் சிந்தனையாளர்களானவர்களையும் இத்தகைய வல்லடி வழக்கு, வம்பு வளர்ப்புகளும் ஒன்றும் அசைத்துவிட முடியாது!
மாறாக, இது காவிகளுக்கு எதிராகவே இளைஞர்கள் மத்தியில் திரும்பும்; திரும்பிக் கொண்டிருப்பது உறுதி!
வழக்குப் போட்டவர்களால் எவ்வளவு பலவீனமான வாதம் - அந்த உயர்நீதிமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது என்பதை படித்தால், எப்படி சிரிப்பது என்றே தெரியவில்லை.
‘‘2 ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்டுள்ள மனுஸ்மிருதிக்கு (இதுவே கடைந்தெடுத்த புளுகு) விளக்கமளிக்க திருமாவளவன் சமஸ்கிருதப் புலமை பெற்றவர் அல்ல; அவர் கருத்துத் தவறானது. அவர்தாம் கூறியதை நியாயப்படுத்தி பேசி வருகிறார்; எனவே, நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டுள்ள திருமாவளவனை தகுதி நீக்கம் செய்யவேண்டும்‘’ என்று கோரிக்கை வைத்தது எவ்வகையிலாவது பொருத்தமான வாதம் ஆகுமா?
ஒருமைப்பாட்டுக்கு நேர் எதிரானது இல்லையா?
(1) சமஸ்கிருத நூல்களைப்பற்றி சமஸ்கிருதம் தெரிந்தவர் மட்டும்தான் பேசவேண்டும் என்றால், அசல் மனுதர்ம மொழி பெயர்ப்புகள் சமஸ்கிருத சுலோகத்தோடு இணைத்து போடப்பட்டு, அச்சிடப்பட்டு, நூறாண்டுகளுக்கு முன் வந்த பதிப்பு - ஆதாரமில்லையா?
(2) டாக்டர் அம்பேத்கர் அவர்கள் சமஸ்கிருதம் படித்த அறிஞர், சமஸ்கிருதப் பண்டிதர்கள் கருத்தையெல்லாம் கரைத்துக் குடித்து மனுதர்ம நூலைப் படித்து 1927 இல் பகிரங்கமாகக் கொளுத்தினார் - அவர்தான் அரசமைப்புச் சட்டம் உருவாகவே மூலகர்த்தா என்பதை மறந்துவிட்டு, இப்படி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, அதனை அரசியல் மேடையாக்கிட முயலலாமா?
(3) நாட்டு மக்களின் ஒருமைப்பாட்டுக்கு விரோதம் மனு என்பதால்தானே, மனித தர்மத்தில் நம்பிக்கையுள்ள அனைவரும் மனுதர்மத்தை எதிர்க்கின்றனர்!
(4) நாட்டில் உள்ள மக்களின் எண்ணிக்கையில் சரி பகுதியாக உள்ள பெண்களை, சம உரிமைக்கும், சுதந்திரத்திற்கும் லாயக்கானவர்கள் அல்ல என்றும், இழிவுபடுத்தியும் எழுதியிருப்பது ஒருமைப்பாட்டுக்கு நேர் எதிரானது இல்லையா?
‘‘வள்ளுவர்செய் திருக்குறளை மறுவற நன்கு உணர்ந்தோர் உள்ளுவரோ மனுவாதி ஒரு குலத்துக்கொரு நீதி’’ என்ற மனோன்மணியம் சுந்தரனார் கூற்றை மறுக்க முடியுமா?
காவிகளே, உருப்படியான அரசியலை
நடத்திட முன்வாருங்கள்!!
எனவே, ஆழந்தெரியாமல் காலை விட்டு, அவதிப்பட்டு, அவமானத்தைச் சுமக்கின்ற காவிகளே, உருப்படியான அரசியலை நடத்திட முன்வாருங்கள்!!
கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்
10.11.2020
சென்னை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக