ஞாயிறு, 5 ஜனவரி, 2020

சொர்க்கவாசல் திறப்பு குறித்து தந்தை பெரியார்

மார்கழி மாதம் வந்தால், வைகுண்ட ஏகாதசி என்று கூட்டம் கூட்டமாய் சீரங்கம் முதலிய ஊர்களுக்குப் பணச் செலவு செய்து கொண்டு போவதும், பொய்யையும் புளுகையும் காவடிக் கதையாய்ச் சொல்வதும், அறுத்துச் சமைத்த பாம்பும், கோழியும், மீனும் உயிர் பெற்று விட்டது என்பதும், மண் சர்க்கரை ஆகிவிட்டது என்பதும், வெட்டித் துண்டாக்கப்பட்ட குழந்தை உயிர் பெற்று விட்டது என்பதும் இதுபோல் இன்னும் பல பொய்களை வெட்கமில்லாமல் சொல்வதும், அழுக்குக் குட்டைகளில் குளித்தும், குடித்தும் பஞ்சாமிர்தம் எனும் அசிங் கத்தை உண்டும், அதனால் காலரா போன்ற கொடிய நோய்க்கு இரையாவதும் நாம் கண்டதுதானே! அசிங்கம், ஆபாசம், அறி யாமை இவைதானே நமது பண்டிகைகளாக இருந்து வருகின்றன!
சீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு என்று கதை அளக்கிறார்களே, அதன் தாத்பரியத்தைக் கேளுங்கள்:
நாகப்பட்டினத் தில் இருந்து ஜைனக் கோயிலின் பொன்விக்கிர கத்தைத் திருடி வந்து, அதை உருக்கி எடுத்துப் பணமாக்கி, திருமங்கை ஆழ்வார் என்ற நாமக்காரன் சிறீரங்கம் கோயிலின் மதில்களைக் கட்டினான். ஆனால், அக்கோயிலின் மதில்களையும் கட்டடங்களையும் கட்டிய தொழிலாளிகட்கோ அந்தக் கோயிலின் சின்னத்தையே - அதாவது நாமத்தையே சாத்திவிட்டான். கூலி கேட்ட தொழிலாளர்களை ஓடத்தில் ஏற்றி, திரவியம் தருகிறேன் என்று கூறி, காவிரி தீரத்தில் கொண்டு போய்க் கவிழ்த்துக் கொன்று விட்டான் - ஓடக்காரன் துணையோடு!
அவர்களை ஆற்று வெள்ளத்தில் தள்ளி, படுகொலை செய்த இடத்திற்குக் கொள்ளிடம் என்றும், அந்தத் துறைக்குப் பார்வானத்துறை (பார்வானம் - சுடுகாடு, பார்வணம் - சிரார்த்தம் செய்யும் இடம்) என்றும் பெயரிட ஆண்டவனிடம் இறைஞ்ச, அவ்வாறே அளிக்கப்பட்டு, அன்று கொல்லப்பட்டவர்களுக்கெல்லாம் முக்தியும் அளிக்கப்பட்டதாம்! (திருமங்கை ஆழ்வார் வைபவம் என்ற நூல் ஆதாரப்படி).
சிறீரங்கம் வைகுண்ட ஏகாதசியின்போது திறக்கப்படுகின்றதே சொர்க்காவல் - அது எங்கே செல்லுவது தெரியுமா? திருமங்கை ஆழ்வார் கொள்ளிடக்கரையில் தொழிலாளர்களைக் கொன்று சிரார்த்தம் செய்த அந்தப் பார்வானத்துறைக்கு! சொர்க்கவாசல் மகிமை புரிகிறதா?
- விடுதலை நாளேடு, 5.1.2020

மார்கழி மாதப் பஜனைகள் மூலம் பீடைகள் நீங்கி விடுமா?

மார்கழி மாதம், பீடை மாதம்; அமங்கலமான மாதம்; ஆகையால் இந்த மாதத்தில், விடியற்காலத்தில் பஜனைகள் செய்ய வேண்டும்; கடவுள் என்பவர் மேல் தோத்திரங்கள் செய்ய வேண்டும்; காலையில் பொங்கல்கள் செய்து சாமிகளுக்குப் படைக்க வேண்டும்; நாமும் வயிறு நிரம்பச் சாப்பிட வேண்டும்; வீடுகள்தோறும் கோலம் போடவேண்டும்; வாயிற் படியில் புஷ்பங்கள் பரப்ப வேண்டும்; இரவில் தாதன் ஊர் முழுதும் சுற்றிப் பாட்டுப் பாட வேண்டும்; சேமக்கலம் கொட்டவேண்டும்; தப்புத்தட்ட வேண்டும். இப்படியெல்லாம் செய்தால்தான் பீடை நீங்கும் என்று செய்து வருகின்றனர்.
கோயில்களிலும் இந்த மார்கழி மாதத்தில் அதிகாலையிலேயே மேளதாளங்கள் முழங்குகின்றன; பூசைகள் நடைபெறுகின்றன; பொங்கல்கள் நைவேத்தியம் பண்ணப்படுகின்றன, கோயில் அர்ச்சகர்களும், வேலைக்காரர்களும் பொங்கலைப் பங்கு போட்டுக் கொள்கின்றனர். மூக்கால் மூன்று பருக்கை விழும்படி வயிற்றுக்குள் கொட்டுகின்றனர். வண்ணான் சாலைப் போல் வயிற்றைப் பெருக்க வைக்கின்றனர். பின்பு அஜீரணத்தால் அவதி அடைகின்றனர். வைதீகர்கள் வீடுகளில் காலையில் எழுந்தவுடன், சைவர்களாயிருந்தால், திருவாசகத்தில் உள்ள திருவெம்பாவை என்னும் பாடல்கள் ஓதப்படுகின்றன. வைணவர்களாயிருந்தால் நாலாயிரப் பிரபந்தத்தில் உள்ள ஆண்டாள் பாடிய திருவெம்பாவைப் பாடல்களை ஓதுகின்றனர். இவை மட்டும் அல்ல, மற்றொரு அதிசயமும் உண்டு. அது மிக வேடிக்கையான விஷயம்.
வைணவர்கள் பஜனை மடம் வைத்திருந்தால் அவர்கள் விடியற்காலை 4 மணிக்கே எழுந்திருப் பார்கள். வாலிபர்கள் மாத்திரம் அல்ல, சிறு குழந் தைகளும், வயதானவர்களும், வாலிபர்களும் விழித்துக் கொண்டு எழுவார்கள். குளிரைப் பொருட்படுத்தமாட்டார்கள்; பனியைப் பாராட்ட மாட்டார்கள்; கால் கைகள் குளிரி னால் உதறும்; பற்கள் கப்பிரோட்டில் ஜட்கா வண்டி போவதுபோல் கடகட வென்று குளிரினால் ஆடும். அப்படியிருந்தும், பக்தியென்னும் முட்டாள்தனம், அவர்களை எழுப்பி விடுகிறது. இவர்களில் சிலர் குளிப்பார்கள்; குளிருக்கு அதிகமாகப் பயந்தவர்கள் கால் கைகளைச் சுத்தம் பண்ணிக் கொண்டு பட்டை நாமங்களைத் தீட்டிக் கொள்வார்கள். தாளம், மிருதங்கம், தம்பூரு அல்லது ஆர்மோனியத்தையும் தூக்கிக் கொள் வார்கள், தெருத்தெருவாக பஜனை செய்து கொண்டு வருவார்கள். இதைப் போலவே சைவ பஜனை மடம் வைத்திருக்கின்ற ஊர்களில் சைவர்கள் விபூதியைப் பட்டையடித்துக் கொள்வார்கள். ருத்திராக்கங்களைச் சுமந்து கொள்வார்கள். தங்களுடைய முஸ்தீப்புகளுடன் பாடிக்கொண்டு புறப்பட்டு விடுவார்கள். இந்த பஜனைக் கோஷ்டியினர் அரிசிப் பிச்சை வாங்குவதும் உண்டு. இக்காட்சிகள், நாகரிகமுள்ள நகரங்களிலும் நாட்டுப் புறங்களிலும் நடைபெறுகின்றன. இப்பொழுது இவைகள் எல்லாவிடங்களிலும் இல்லை என்றாலும் சில இடங்களில் இருக்கின்றன. எந்தக் காலத்திலும் பைத்தியக்காரர்கள் இருந்துதானே தீருவார்கள்? அதற்கு நாமென்ன செய்ய லாம்? நமக்குத் தெரிந்த மருந்தைக் கொடுக்கலாம். இவ்வளவுதான் முடியும். இச்செயல்களால், சாதாரண மக்களின் மனத்தில் உண்டாகும், பக்தியும், விசுவாசமும் அதிகம். அவர்கள் இந்தப் பஜனைக் கோஷ்டியாரைப் பக்த சிரோன் மணிகளாகக் கும்பிடுவார்கள்! நமஸ்கரிப் பார்கள். என்ன அறிவு! எவ்வளவு கேவலம்!
இது போகட்டும், இவர்கள் காலையில் எழுந்து தண்ணீரில் விழட்டும்; சன்னிபிறந்து சாகட்டும்; விடியற் காலத்தில் பொங்கல் சோற்றையும், பலகாரங்களையும் உண்ணட்டும்; அஜீரணத்திற்கு உள்ளாகட்டும்; காலரா நோய்க்கு ஆளாகட்டும்; பிறருக்கும் அந்நோயைப் பரவ வைக்கட்டும்; எந்தச் சந்தியிலாவது போகட்டும்; அதைப் பற்றி நமக்குக்கவலையில்லை. இதன் மூலமாக மக்கள் மனத்தில் முட்டாள்தனத்தை ஊட்டுகிறார்களே என்றுதான் கவலைப்படுகிறோம்.
மார்கழி மாதச் சனியன் இவ்வளவோடு விட்டதா! இல்லை! இல்லை! திருவிழாவுக்காக, வைகுண்ட ஏகாதசிக்காக, ஆருத்திரா தரிசனத்திற்காக, சீரங்கத்திற்கு ஓடச்செய்கிறது, சிதம்பரத்திற்கு ஓடச் செய்கிறது. குளிர்காலத்தில் பனிக்காலத்தில் காலராக் காலத்தில் எவ்வளவு தொல்லை! எவ்வளவு அலைச்சல்! எவ்வளவு பணச்செலவு! எவ்வளவு மூட நம்பிக்கை! எவ்வளவு முட்டாள்தனம்! எதற்காகச் சீரங்கப் பயணம், எதற்காகச் சிதம்பர யாத்திரை! எல்லாம் மோட்சம் பெறத்தான்; மோட்சத்திற்கு இவ்வளவு கஷ்டம் ஏன்? மோட்சம் என்றால் சாவு என்றுதானே அர்த்தம்! இதற்கு ஒரு சாண் கயிறு கிடைக்கவில்லையா? அல்லது நமது அழகர் சொல்லுவது போல அரையணாவுக்குக் கவுரி பாஷாணம் கிடைக்கவில்லையா?
இதுவும் இல்லா விட்டால், ரயில் தண்டவாளத்தில் போய்ப் படுத்துக் கொள்வதுதானே! இந்த மாதிரி சுகா தாரமற்ற பருவ காலத்தில் யாத்திரை செய்வதால் என்ன பலன் கிடைக்கிறது! பணம் செலவாகிறது; உடல் நலம் குன்றுகிறது, காலம் வீணாகிறது, தொற்று வியாதிகள் வருகின்றன; இவைதானே லாபம்! வேறென்ன? அறிவிருந்தால் ஆலோசித்துக் கொள்ளுங்கள்.
இம்மாதிரியான துன்பங்கள் ஏன் வருகின்றன? காரணம் என்ன? யோசித்துப் பார்த்தீர்களா? நீங்கள் யோசிக்காவிட்டாலும் நான் யோசித்துப் பார்த்தேன், சொல்லுகிறேன். மதம் என்னும் மடத்தனம், பக்தி என்னும் முட்டாள்தனம், மோட்சம் என்னும் கிறுக்கு, முன்னோர் வழக்கம் என்னும் மயக்கம், இவைகளால் தான் நாம் கெட்டலைகிறோம்! சீரழிகிறோம்! நான் சொல்லுவதைப் பற்றி திடீரென்று கோபித்துக் கொள்ள வேண்டாம். புத்தியைக் கொஞ்சம் செலவழியுங்கள்! மூளையைக் கொஞ்சம் உருகச் செய்யுங்கள்! விளங்கும். மார்கழி மாதத்தில் மேற்படி காரியங்களைச் செய்வதால் சந்தோஷமாகக் காலம் போக்குகிறோம் என்று சொல்ல வரலாம். சந்தோஷமாகக் காலம் போக்க இதுதானா வழி! முட்டாள்தனத்தையும், குருட்டு நம்பிக்கையையும் உண்டாக்கக் கூடிய செயல்களைப் புரிந்துதானா சந்தோ ஷப்பட வேண்டும்? சந்தோஷப்படுவதற்கு வேறு அறிவு வளர்ச்சியோடு கூடிய வழிகள் இல்லையா?
மார்கழி மாதக் கடைசியில், தை மாத முதலில் பொங்கல் பண்டிகையொன்று! அதற்கு எவ்வளவு தொல்லை! மனிதனுக்கு மாத்திரமா பொங்கல்! பொங்கல் நாலு நாள்.
பொங்கலுக்கு முதல் நாள் போகிப் பண்டிகையாம்! பொங்கலாம்! மாட்டுப் பொங்கலாம்! கன்னிப் பொங்கலாம்! இந்தப் பொங்கல்களில் நடக்கும் ஆர்ப்பாட்டங்களை என்ன சொல்லுவது? புதுஉடைகள் வாங்கி அணிந்து கொள்வார்கள் பலர்! சம்பந்தி வீடுகளுக்கு வரிசை அனுப்புவார்கள் பலர்! இவைகளில் ஆகும் செலவு அளவு கடந்தவை. வரிசை கொடுக்கும் வகையில் ஒருவர்க்கொருவர் சொந்தக்காரர்களுக்கு ஏற்படும் மனவருத்தங்கள் பல. எங்கும் படையல், சர்க்கரைப் பொங்கல் வேறு வெண் பொங்கல் வேறு. ஏழைகள் குடும்பங்களில் இந்தப் பொங்கல் சோறுகளை இரண்டு மூன்று தினங்களுக்கு வைத்துக்கொண்டு தின்று வியாதி யடைவது வேறு. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வண்ணான், அம்பட்டன், தோட்டி, வேலைக்காரன் வீடுகள் தோறும் சோற்றுப் பிச்சைக்காக அலையும் பரிதாபமான காட்சி வேறு; இவ்வாறு பல வகையில் பொங்கல் பண்டிகை தொல்லைகளை உண்டாக்கி விடுகிறது. போதும் போதாமைக்கு ஆஸ்பத்திரிகளில் மருந்துச் செலவு அதிகம். டாக்டர்களுக்குத் தொல்லை. அட அப்பா! எவ்வளவு தொல்லை! பாழும் பொங்கல் பண்ணுவதைப் பாருங்கள்!
மார்கழி மாதச் சனியன் இம்மாதிரி பல வகையில் மக்களை அல்லோல கல்லோலப் படுத்தி விடுகின்றது, படுத்தி விட்டது; என்ன பரிதாபம்! நமது மக்கள் மூடத் தனத்தால், குருட்டுத்தனத்தால் எவ்வளவு துன்பத்திற்கு ஆளாகின்றனர். எல்லாவற்றையும் யோசித்துப் பாருங்கள். இவை பயனில்லாத காரியங்கள்; வீணான காரியங்கள் என்று விளங்காமல் போகாது. இவைகளை நடத்தாவிட்டால் என்ன முழுகிப் போய்விடும். பூமி நடுக்கம் உண்டாகி நாம் பாதாளத்திற்குப் போய்விடுவோமா? கடல் புரண்டு வந்துவிடுமா? ஒன்றுமில்லையே.
அப்படியிருந்தும் ஏன் பண்டிகைகளென்றும், விரதங் களென்றும் திரு நாட்களென்றும் அலைகின்றீர்கள். அந்நியர்கள், நாகரிமுடையவர்கள் நகைக்க இடம் கொடுக்க வேண்டாம். பயனுள்ள காரியங்களைச் செய்யுங்கள்! அறிவோடு செய்யுங்கள்! நாம் மற்ற நாட்டினரைப் போலப் பெருமையடையலாம்! சுதந்திரமடையலாம்! செல்வ மடையலாம்! சமத்துவமடையலாம்! இது உறுதி! உண்மை!
நிச்சயமாக நம்புங்கள்! நம்பாவிட்டால் எக்கேடு கெட்டாவது போங்கள்! மேலே சொல்லிய நமது விரதங் களையும், நமது பக்திகளையும், நமது பஜனைகளையும், நமது பண்டிகைகளையும், பிறர் பார்த்தால் சிரிக்க மாட்டார்களா? நாமே நினைத்துப் பார்த்தால் சிரிப்பு வரவில்லையா? கேலிக்கு இடமாகத் தோன்றவில்லையா? வைதீகக் கண்ணுக்குப் பரிசுத்தமாகத் தோன்றலாம்! உண்மையாகத் தோன்றலாம்! தெய்வீகமாகத் தோன்றலாம்! அதைப் பற்றிக் கவலை இல்லை. நாகரிகக் கண்ணால் பாருங்கள்! அறிவுக் கண்ணால் பாருங்கள்! உண்மை விளங்கும். நான் பொய் சொல்லவில்லை; உண்மையாகச் சொல்கிறேன். உறுதியாகச் சொல்கின்றேன்; நான் ஒரு 'ஸ்க்குரூஉலூஸ்' என்று அலட்சியம் செய்ய வேண்டாம். வந்தனம், பிறகு சந்திக்கிறேன்.
ஸ்க்ரூஉலூஸ் என்ற புனைப்பெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை -  'குடிஅரசு', 27-12-1931
- விடுதலை நாளேடு, 5.1.2020 

சனி, 4 ஜனவரி, 2020

வீ.மு.வேலு நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை ரூபாய் நாணயம் (பெங்களூரு, 29.12.2019)

மூத்த பெரியார் பெருந்தொண்டர் வீ.மு.வேலு அவர்களின் நூற்றாண்டு  விழாவில், அவருக்கு பெங்களூரு  மாநில திராவிடர் கழகத்தின் சார்பில், ‘வீரவாளினை' தமிழர் தலைவர் வழங்கினார்.  ‘வாழ்நாள் சாதனையாளர் விருது'' பெற்ற தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை ரூபாய் நாணயம் (ரூ.16 ஆயிரம்) மாநில தலைவர் மு.சானகிராமன், மாநில செயலாளர் இரா.முல்லைக்கோ, மாநில பொருளாளர் கு.செயகிருட்டிணன், குணவேந்தன், முத்துச்செல்வன், தங்கம் ராமச்சந்திரன், புரா.கஜபதி, சொர்ணா அரங்கநாதன், இரா.இராஜாராமன், வெ.நடராசன், வி.கிருபாநிதி, சி.சக்ரவர்த்தி, அமுதபாண்டியன், வே.கண்ணியம், வே.பாவேந்தன், வீ.மு.வேலு, ஊமை.செயராமன், பேராசிரியர் கோவிந்தராசன், ஆர்.டி.வீரபத்திரன் ஆகியோரால் வழங்கப்பட்டது.   (பெங்களூரு, 29.12.2019).

பெங்களூரில் தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை பொருட்கள் வழங்கினர் (29.12.2019)

கருநாடக மாநில திராவிடர் கழகத்தின் சார்பில் கயத்தாற்றிலிருந்து வாங்கப்பட்ட கருப்பட்டி வெல்லம், ஊட்டியிலிருந்து வாங்கப்பட்ட காபி கொட்டை ஆகியவற்றை பலத்த கழகக் கொள்கை முழக்கத்திற்கிடையே தராசில் தமிழர் தலைவர் அமர வைக்கப்பட்டு வழங்கினர்.

பெங்களூரு திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை ஒன்பது வகையான காய்கறிகளை வழங்கினர். நூற்றாண்டு விழா காணும் மூத்த பெரியார் பெருந்தொண்டர் வீ.மு. வேலுவிற்கு திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர், மோகனா வீரமணி ஆகியோர் பயனாடை  அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தனர்.

வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற தமிழர் தலைவருக்கும், மோகனா வீரமணி அம்மையாருக்கும் கருநாடக திராவிடர் கழகத்தின் சார்பில் மு. ஜானகிராமன், இரா. முல்லைகோ ஆகியோர் பொன்னாடை அணிவித்து மாலை அணிவித்தனர். உடன்: ஆர்.டி. வீரபத்திரன், வந்தியதேவன் (ம.தி.மு.க.) உள்ளனர்.

கருநாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் மேனாள் தலைவர் மூத்த வழக்குரைஞர் ரவிவர்மகுமார் தமிழர் தலைவரை சந்தித்தார்.

கருநாடக மாநில பிற்படுத்தப் பட்டோர் நல ஆணையத்தின் மேனாள் தலைவர் எச். காந்தராஜா   தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்தார்.

பிறந்தநாள் காணும் சாமிசமதர்மம், (76 வயது) ஒசூர் கண்மணி ஆகியோருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்துவாழ்த்துக்களை தெரிவித்தார்.

பெங்களூரு  கழகக் கொள்கை விழாவினை  சிறப்பாக நடத்திய மு. ஜானகிராமன், இரா. முல்லைகோ, ஆர்.டி. வீரபத்திரன் ஆகியோருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டினர்.

கருநாடக மாநில திமுக அமைப்பாளர் ந. இராமசாமி மற்றும் தோழர்களும் தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்து வரவேற்றனர்.

80ஆம் ஆண்டு பிறந்தநாள் காணும் பெரியார் பெருந்தொண்டர் ஒசூர் துக்காராமுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

கருநாடக மாநிலம் கோலார் தங்கவயல் பகுதியை சேர்ந்த திமுக பொறுப்பாளர்கள் தமிழர்  தலைவரை சந்தித்து பயனாடை  அணி வித்து   மணவிழா அழைப்பிதழை வழங்கினர்.

- விடுதலை நாளேடு, 30.12.19

பெண் விடுதலையே பெரியாரின் பெருங்கனவு

பெண் விடுதலை குறித்து தந்தை பெரியார் பெரும் கனவு கண்டவர். தமிழகத்தில் பெரியார் போல் பெண்களின் எதிர்காலம் குறித்துத் தீவிரமாகச் சிந்தித்தவர்கள் வேறு எவருமில்லை . பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கம் பெண்களின் உரிமைகள் குறித்து மிக விரிவாகப் பேசியது. மதம் எவ்வாறு பெண்களை ஒடுக்குமுறைக்கு ஆளாக்குகிறது, மதச் சடங்குகள் ஏன் பெண்கள் மீது வலிந்து திணிக்கப்படுகின்றன, ஜாதியின் கூறுகளும் அதில் எவ்வாறு சேர்ந்தே பங்காற்றுகின்றன என்பது பற்றி யெல்லாம் 1929-ம் ஆண்டு செங்கல்பட்டில் நடத்திய முதல் மாநாட்டில் விளக்கியதுடன், அவற்றை எதிர்த்துத் தீர்மானங் களும் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமான ஒரு தீர்மானம் பெண்களுக்குச் சமமான சொத்துரிமையை அளிக்க வேண்டும் என்பதாகும்.

நம் சமூகத்தில் காலங் காலமாகப் பெண்ணுக்குச் சொத் துரிமை மறுக்கப்பட்டே வந்துள்ளது. நம்மை அடிமை களாக்கி ஆண்ட பிரிட்டிஷ் காலனிய அரசும் கூட தான் இயற்றிய சட்டத்தின் மூலமாக, இங்குள்ள பெண்களின் இரண்டாம் படிநிலையையே உறுதி செய்தது. நாடு விடுதலை பெற்ற பின்னர் சுதந்திர இந்தியாவிலும் பெண்ணுக்கான பொருளாதாரச் சுதந்திரத் துக்கு வழி பிறக்கவில்லை. பிரிட்டிஷ் காலனி ஆட்சி யாளர்கள் கொண்டு வந்த அதே சட்டத்தைத் தொடர வேண்டும் என்றே இந்து சனாதன சக்திகள் விரும்பின. இந்திய அரசியல் சட்டத்தை இயற்றிய அண்ணல் அம்பேத்கர் நடத்திய நீண்ட நெடிய போராட்டத்தில் பரம்பரைச் சொத்தில் மகள்களுக்கும் சொத்துரிமை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். ஆனால், அவரது முயற்சி விழலுக்கு இறைத்த நீராயிற்று. அவரது விருப்பம் நிறைவேறவில்லை . ஆனால், பரம்பரைச் சொத்தில் பெண்ணுக்குப் பங்கு இல்லாவிட்டாலும், தந்தை சுயமாகச் சம்பாதித்த சொத்தில் மகளுக்கும் வாரிசுரிமை உண்டு என்பதைச் சட்டம் அனுமதித்தது.

பின்னர், பெரியார் வழியில் ஆட்சியமைக்க முன்வந்த தி.மு.க அரசு இந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. அதன்படி பரம்பரை வாரிசுரிமை (சொத்துரிமையிலும்) சம உரிமைகள் இருக்கும் வகையில் இச்சட்டம் (இந்து வாரி சுரிமை தமிழ்நாடு திருத்தச் சட்டம், 1989) நிறைவேற்றப்பட் டது. பெண்களைப் பொறுத்தவரை உண்மையிலேயே இது ஒரு முன்னோடிச் சட்டம் என்றால் அது மிகையில்லை . 1989-ல் இச்சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு, 1929-ல் பெரியார் நடத்திய செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டுத் தீர்மானம் ஒரு முன்னோடி என்றால் அது மிகையில்லை. பெரியார் இயற்றிய தீர்மானம் நடைமுறைக்கு வர 60 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது.

தங்களுக்குத் தாங்களே வழி காட்டிகள்

அதற்கு அடுத்த ஆண்டில் ஈரோட்டில் நிகழ்த் தப்பட்ட இரண்டாவது மாநாட்டில் பெண்களுக்கென தனி மாநாடு நடத்தியது பெரியாரின் பெரும் பங்களிப்பு. இதற்கு முக்கியமான காரணம், 'எலியின் விடுதலைக்குப் பூனை எங்காவது முயற்சி செய்யுமா?' என்று பெரியார் குறிப் பிடுவது வேடிக்கை போல் தோன்றினாலும், பெண்களின் விடுதலைக்காக ஆண்கள் பேசுவதை விட, தங்கள் விடு தலைக்காக, சுய மரியாதைக்காகப் பெண்களே முன்னின்று பேசுவதும் உழைப்பதும் சிறந்தது என்பதைத்தான். அதற் கான செயல் வடிவமே ஒரே மாநாட்டு அரங்கில் தனித் தனியாக நடத்தப்பட்ட இளைஞர்கள் மாநாடும் பெண்கள் மாநாடும். தங்களுக்கான மாநாட்டைத் தாங்களே முன் னின்று உற்சாகத்துடன் நடத்திக் காட்டினர் பெண்கள். இந்த மாநாட்டின் தீர்மானங்கள் பெண்களுக்கு 16 வயது வரை கண்டிப்பாகக் கல்வி அளிக்க வேண்டும் என வலியுறுத் தியது. பெண்களைக் கோயிலுக்குப் பொட்டுக்கட்டி விட்டு தேவதாசி களாக்கும் நடைமுறைக்கு எதிர்ப்பு, கைம் பெண்கள் மறுமணம், தேவதாசிப் பெண்களை இளை ஞர்கள் மணம் முடிக்க வேண்டும் என்ற அறை கூவல் போன்றவை என ஒவ்வொரு மாநாட்டிலும் பெண்களின் நலன் முன் வைக்கப் பட்டது.

அனைத்து மாநாடுகளிலும் பெண்கள் பங்கு பெற வேண்டும் என்பதை பெரியார் முதன்மைப் படுத்தியதுடன் வலியுறுத்தவும் செய்தார். அத னால்தான் குடும்பத்துடன் மாநாட்டில் பங் கெடுக்க வேண்டுமென்பதை அவர் வலியுறுத் தினார். மாநாட்டின் தொடக்க உரைகளைப் பெண்களே நிகழ்த்த வேண்டும் என்ற நடைமுறையை அவர் வழக்கமாக்கினார். சுயமரியாதை இயக்க மாநாடு களில் பெண்கள் பங்கெடுப்பதும் தொடக்க உரை நிகழ்த்துவதும் வெற்றுச் சம்பிரதாயமாக இல்லாமல், தொடர் நிகழ்வுகளாக மாறின.

பெண் விடுதலை குறித்துப் பெரியார் முன்னிறுத்தும்  அடையாளங்கள்

1. ஆணும் பெண்ணும் சமம்; அதில் வேறுபாடில்லை

2. பெண்ணின் சுயமரியாதை மதிக்கப்பட வேண்டும்.

3. பெண்ணின் தாழ்வுக்குக் கற்பு, தாலி போன்ற மூட நம்பிக்கைகளும் முக்கிய  காரணங்கள்.

4. பெண்ணுக்குப் பொருளாதார சுதந்திரம் வேண்டும்: சொத்துரிமையில் இரு பாலருக்கும் சமத்துவம் வேண்டும்.

5. பெண்ணுக்குக் கர்ப்பப்பை என்று ஒரு அங்கம் இருப்பதாலேயே கற்பு என்ற தடையும் உள்ளது; அதை நீக்கி விட்டால் கற்பு என்ற கருத்தும் அழிந்து போகும்.

6. குழந்தை பெற்றுக்கொள்வதா வேண்டாமா என்ப தையும் ஒரு பெண்தான் தீர்மானிக்க வேண்டும்;

7. ஆணாதிக்க மனப்பான்மை, ஆண்மை, பெண்மை போன்ற பாகுபாடுகள் களையப்பட வேண்டும்.

ஆனால், இப்போதும் ஆண் பெண் என்ற பாகுபாடு உச்சத்தில் இருக்கிறது. அதனால்தான் முன்பை விட கல்வியறிவு பரவலாகி இருந்தபோதும், பெண்ணின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகி இருக்கிறது. பாலியல் தொந்தரவுகளும் வன்முறைகளும் வரைமுறையற்றுப் பெருகிப் போயிருக்கின்றன. பெரியாரின் கனவுகள் நனவாக நாம் இன்னும் நீண்ட தொலைவு பயணிக்க வேண்டியிருக்கிறது.

பெண்களால் பெரியார் ஆனார்

1937-இல் சென்னை மாகாண பிரதம அமைச்சர் ராஜாஜி இந்தி மொழி கட்டாயமாக்கப்படும் என்று அறிவித்ததைத் தொடர்ந்து இந்தி எதிர்ப்புப் போராட்டம் வலுப்பெற்று, 1938-இல்

"சமையலறைக்குள்ளே மட்டும் முடக்கப்பட்ட பெண்கள் இன்று மேடையேறிப் பேசுகிறார்கள், பொது மக்கள் பிரச்சனை பற்றி விவாதிக்கிறார்கள்,. ஆண் களோடு சரிநிகர் சமமாக நின்று சமூகத் தொண்டாற்று கிறார்கள். இதற்கான பெருமைகள் எல்லாம் பெரியாருக் குத்தான் சேரும், இந்த இயக்கத்தில் இருப்பது போல் பேச்சாற்றல் மிக்க பெண்களை வேறு இயக்கங்களில் பார்ப்பது மிகவும் அபூர்வம்."

- தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் சிங்காரவேலர்

உச்ச நிலையை எட்டியது. பெண்கள் பலரும் அதில் கலந்து கொண்டு குழந்தைகளுடன் சிறை சென்றார்கள். தினந்தோறும் போராட்டமும் கைதுகளுமாய் நீண்டது. அதனைத் தொடர்ந்து தர்மாம்பாள், மீனாம்பாள் சிவராஜ், நாராயணி அம்மாள் போன்ற பெண்கள் பேசி முடிவெடுத்து, 1938-ம் ஆண்டு நவம்பர் 13 அன்று சென்னையில் மீனாம்பாள் சிவராஜ் கொடியேற்றித் தொடங்கி வைக்க, நீலாம்பிகை அம்மையார் தலைமை உரை நிகழ்த்த, நடைபெற்ற முற்போக்கு பெண்கள் சங்க மாநாட்டில் கொடுத்த 'பெரியார்' என்ற பட்டத்தை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார்.

பெண் ஏன் அடிமையானாள் என்பதையும் பெண்ணுக்குப் புரிய வைத்தவர். 'உன் விடுதலைக்குத் தடையாக இருக்கும் கூந்தலை நறுக்கு, ஆறு கெஜம், ஒன்பது கெஜம் புடவைக்கு மாற்றாக பேண்ட் அணிந்து கொள், பிள்ளைப்பேறு உன் முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கும் என்றால், கருப்பையையும் அறுத்துப் போடு' என்றெல்லாம் பெரியார் ஒருவர் மட்டுமே துணிச்சலுடன் பேசினார். ஆனால், இதை மட்டுமே அவர் பெண்களுக்குச் சொல்லவில்லை என்பதையும் நன்கு உணர வேண்டும்.

தன் வாழ்நாளில் தான் எப்போதாவது அமைச்சராக நேர்ந்தால், பெண்களின் கல்விக்காக மட்டுமே மொத்தப் பணத்தையும் செலவழிப்பேன் என்றும் அவர் பேசி யிருக்கிறார். பெண்களின் துரதிருஷ்டம் அவர் ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்கவும் இல்லை . அமைச்சர் ஆகவும் இல்லை , சமூக நீதியும், எளியவர்களுக்கான கல்வியும் இன்று பெரும் கேள்விக்குறியாகி இருக்கும் நிலையில் பெரியாரை நினைக்காமல் இருக்க முடியுமா? உயர் கல்வி மறுக்கப்பட்டு, கல்வி நிறுவன வளாகங்களில் நிகழும் தற்கொலைகளுக்குப் பிறகு நம் குழந்தைகளின் உயர் கல்வி மற்றும் எதிர்காலம் குறித்து யோசிக்கும்போது தவறாமல் நினைவில் எழும் சமூக நீதிக் காவலரை பெரியார் என்றழைத்த பெண்கள் போற்றத்தக்கவர்கள். தன் வாழ் நாள் கடந்தும் அவர் பெரியாராகவே நிலைத்து வாழ்கிறார். பெரியார் சிலைகள் வன்மம் கொண்டு உடைத்து நொறுக் கப்பட்டபோதும், அவர் எழுப்பிய கேள்விகளும் சிந் தனைகளும் உயிர்ப்புடன் எல்லை கடந்து நிற்கின்றன.

- பா.ஜீவசுந்தரி

நன்றி: 'தினசெய்தி' 24.12.2019

- விடுதலை நாளேடு, 29.12.19

பாசிச நகர்வுகளுக்கு எதிராக...

இன்று பெரியார் நினைவு தினம். பெரி யாரின் சமூக சீர்திருத்த கருத்துகள் இன்றும் வாழ்கின்றன. பெரியாரின் கருத்துகளை முற் போக்காளர்கள் முன்வைப்பதில் மட்டுமல்ல; சங் பரிவாரத்தினர் பெரியாருக்கு எதிராக வெளிப்படுத்தும் நஞ்சிலும் இது தெளிவாகிறது. பெரியாரின் பெயரை கேட்டாலே எச்.ராஜாவி லிருந்து ராம்தேவ் வரை அவர்களுக்கு கோபம் தலைக்கேறிவிடுகிறது. நவம்பர் மாதம் ரிபப்ளிக் டிவிக்கு பேட்டி அளித்த ராம்தேவ் கீழ்கண்ட வாறு கூறினார்:

“என் காலத்தில் பெரியார் இருந்திருந்தால் அவரை செருப்புகளால் விளாசியிருப்பேன். அவர் உயிரோடு தப்பித்திருக்க முடியாது. என்ன செய்வது! அன்று நான் இல்லாமல் போய்விட்டேன்” என்று கூறினார். "லெனின், மார்க்ஸ், மாவோ ஆகியோரின் கருத்துகள் நமக்கு அந்நியமானவை" என கூறிய ராம்தேவ், பெரியாரும் அம்பேத்காரும் “சித்தாந்த பயங்கரவாதிகள்” எனவும் கூறினார். சங்பரி வாரத்தினருக்கு பொதுவுடைமை கருத்துகளும், பெரியார் மற்றும் அம்பேத்கர் கருத்துகளும் கடும் கோபத்தை ஏற்படுத்துகின்றன.  ஏனெ னில் இன்று “இந்து ராஷ்ட்ரா”வை நிர்மாணிப் பதில் இந்த, கருத்தாக்கங்கள்தான் அவர் களுக்கு மிகப்பெரிய தடைக்கற்களாக உள்ளன. மோடி 2014ஆம் ஆண்டு பதவியேற்ற பொழுது ரூ.100 கோடிக்கும் குறைவான வணிகம் செய்த பதஞ்சலி நிறுவனம் இன்று சுமார் ரூ.11000 கோடிக்கு அதிபதியாக மாறியுள்ளது. இந்த விரிவாக் கத்திற்கு இந்துத்துவா ஆதரவு நிலை முக்கிய காரணம். எனவே இந்துத்துவாவின் எதிர் கருத்தாக்கங்களை இழிவுபடுத்தவும், முடிந்தால் அழிக்கவும் ராம்தேவ்களுக்கு தேவையாக உள்ளது.

பெரியாரின் தேசியம்

இந்திய விடுதலை போராட்டத்தின் பொழுது மூன்றுவித தேசிய கருத்தாக்கங்கள் தோன்றின. அவை காங்கிரஸ் பிரதிநிதித்துவப் படுத்திய முதலாளித்துவ ஆதரவு விடுதலைக் கான தேசியம், உழைக்கும் மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்ட பொதுவுடைமை இயக்கம் முன்வைத்த தேசியம், ஜின்னா தலைமையில் முஸ்லிம் மதவாதம் மற்றும் சாவர்க்கர்/ஆர்.எஸ்.எஸ். முன்வைத்த இந்துத் துவா அடிப்படையிலான மதவாத தேசியம் ஆகியவை. இவை மட்டுமல்லாது ஒடுக்கப் பட்ட சமூகங்களின் குரலாய் ஜார்நிலை தேசிய கருத்தாக்கங்களும் முன் வந்தன. அவற்றில் மிக முக்கியமானது பெரியார் முன்வைத்த திராவிட கருத்தியல் ஆகும்.

பொருளாதார விடுதலைக்கு முன்பு ஜாதிய விடுதலை தேவை என பெரியார் கருதினார். பிரிட் டிஷார் ஆட்சிக்கு எதிராக போராடிய பொதுவுடைமை இயக்கம் ஜாதிய ஒழிப்பையும் தனது வேலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக கொண்டிருந்தது. ஆனால் காங்கிரஸ் ஜாதிய ஒழிப்பை பற்றி கவனம் கொள்ளவில்லை. எனவே பெரியாரின் கருத்தாக்கம் ஒரு பிரிவு மக்களின் ஆதரவை பெற்றது.  பெரியார் முன்பு ஒரு கேள்வி எழுந்தது. யார் முக்கிய எதிரி? பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமா? ஜாதியத்தை தூக்கிப் பிடிக்கும் பிராமணியமா? ஜாதியத்தை தூக்கிப் பிடிக்கும் பிராமணியம்தான் முக்கிய எதிரி எனும் முடிவுக்கு பெரியார் வந்தார். (பெரியார் முன் வைத்தது பிராமணிய எதிர்ப்புதானே தவிர பிராமணர்கள் எதிர்ப்பு அல்ல என்பதை நினைவில் நிறுத்துவது அவசியம்.)

எனவேதான் அவர் தேசப் பிரிவினையின் பொழுது இந்துஸ்தான், பாகிஸ்தான் போல திராவி டஸ்தான் தேவை என கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையை பிரிட்டிஷார் பரிசீலிக்கும் அளவிற்கு மக்கள் ஆதரவு இருக்கவில்லை. எனினும் விடுதலை நாளை துக்க நாளாக பெரியார் அறிவித்தார். இதுவும் வேறு சில காரணங்களும் இணைந்து  திரா விடர் கழகத்திலிருந்து அண்ணா தலைமையில் தி.மு.க. உருவானதில் முடிந்தது. விடுதலைக்கு பின்பும் தனி தமிழ்நாடு கோரிக்கையை பெரியார் கைவிடவில்லை.

பெரியாரின் திராவிட தேசியம் பின்னர் தமிழகத்தில் மட்டுமே இயங்கும் ஒரு கருத் தாக்கமாக சுருங்கியது.  தனி திராவிட அல்லது தமிழ் தேசம்  என்பது மக்களின் ஆதரவு பெறவில்லை. எனினும் பெரியார் முன்வைத்த சில கருத்துகள் இன்றும் முக்கியத்துவம் பெறுகின்றன. ஆர்.எஸ்.எஸ். வழி காட்டலில் இயங்கும் மோடி ஆட்சியில்  இந்துத்துவா எனும் ஒற்றை சிமிழிக்குள் அனைத்து பன்முக கருத்தாக்கங்களையும் அடக்கி வைக்க கடுமை யான முயற்சிகள் நடக்கின்றன. இதற்கு எதிர்ப்பு களும் எழுகின்றன. காஷ்மீரில், அசாமில், ஏனைய வடகிழக்கு மாநிலங்களில் இன்று இவை பிரதி பலிக்கின்றன.  இந்துத்துவா தாக்குதலின் இலக்கு களில் ஒன்று தமிழ் மொழியும் பண்பாடும் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த சூழலில் தமிழ் மொழி மற்றும் பண்பாடு குறித்து பெரியார் முன் வைத்த கருத்துகளின் முக்கியத்துவம் அதிகரித்துள் ளது எனில் மிகை அல்ல!

ஜாதியத்திற்கு எதிராக

பெரியாரின் வாழ்நாள் போராட்டங்களில் ஒன்று ஜாதியத்திற்கு எதிரானது ஆகும். வர்ணாசிரமத்துக்கு எதிராக தொடக்கத்தி லிருந்தே பெரியார் களம் கண்டார். வர்ணா சிரமம் எனும் அதர்மத்தை தமிழ கத்தின் மூலை முடுக்கெல்லாம் அம்பலப்படுத்திய தில் பெரியாருக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. இந்தியாவில் ஜாதியத்திற்கு எதிரான போராளி களில் பெரியாருக்கு இணை மிகச் சிலரே எனில் மிகை அல்ல.

தன் வாழ்நாளிலேயே ஜாதியம் பல பரிணா மங்களை எடுத்தது என்பதை பெரியார் உணர்ந்து இருந்தார். வர்ணாசிரமத்தை கண்டித்து பிராமணிய எதிர்ப்பு அடிப்படையில் உருவான ஜாதிய எதிர்ப்பு சில சவால்களை பெரியார் முன்பு நிறுத்தியது. குறிப்பாக சில இடைநிலை ஜாதிகளுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் உருவான முரண்பாடு புதிய சவாலாக உருவெடுத்தது. பிராமணிய எதிர்ப்பு இயக்கம் சில இடைநிலை ஜாதியினரை சமூகரீதியாக மட்டுமல்ல; பொருளாதார ரீதியாகவும் முன்னேற வழிவகுத்தது. சிலர் தேசிய முதலாளி களாகவும் உருவாயினர். ஆனால் தலித் மக் களுக்கு எதிராக ஒடுக்குமுறைகள் தொடர்ந் தன. இதனை பெரியார் அவருக்கே உரித்தான பாணியில் கண்டித்தார். இடைநிலை ஜாதி யினரிடமும் பார்ப்பனியம் அதாவது ஜாதிய அடக்குமுறை சிந்தனை உருவாவதை சுட்டிக் காட்டி அதனை எதிர்த்தார்.

பெரியார் தான் மறைவதற்கு முன்பு அகில இந்திய வானொலிக்கு ஒரு பேட்டி அளித்தார். அதில் ஜாதியத்திற்கு எதிரான தனது போராட் டம் என்பது ஒரு மலையை கயிறு கட்டி இழுப்பது போல அமைந்துவிட்டது எனக் கூறி னார். நான் எது சரி என நினைத்தேனோ அதனை எனது சக்திக்கு உட்பட்டு செய் துள்ளேன் எனக் கூறினார். ஜாதியத்திற்கு எதிரான போராட்டம் எவ்வளவு சவால் மிக்கது என்பதையே பெரி யாரின் கூற்று தெளிவு படுத்துகிறது.

ஜாதியத்தின் புதிய சவால்

ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டும் மோடி ஆட் சியில் ஜாதியம் மீண்டும் வர்ணாசிரமத்தையும் இணைத்து முன்னுக்கு வருகிறது. நாடு முழுதும் தாழ்த்தப்பட்ட மக்கள் தாக்குதலுக்கு உள்ளா கின்றனர். கொலையும் செய்யப்படுகின்றனர். பெரு முதலாளிகள் கொள்ளை அடிக்க வனங் களில் வாழும் பழங்குடியின மக்கள் விரட்டப்படு கின்றனர்.  அதே சமயத்தில் பிற்படுத்தப்பட்ட மக்க ளுக்கும் அநீதி இழைக்கப்படுகிறது. உயர்கல்வி நிலையங்களில் அவர்களின் இட ஒதுக்கீடு பறிக்கப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் பல கிராமங்களில் உயர்ஜாதி யினரான ராஜபுத்திரர்கள் மட்டுமே திரும ணத்தின் பொழுது மண மகன் குதிரை சவாரி செய்ய முடியும். பிற்படுத்தப் பட்ட பார்மர் சமூகத்தை சேர்ந்த ஒரு இளைஞர் தனது திருமணத்தின் பொழுது குதிரையில் சவாரி செய்ததற்காக கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். மோடி ஆட்சியில் உயர் ஜாதியினர் தமது ஆதிக்கத்தை மேலும் கெட்டிப்படுத்த ஆரம் பித்துள்ளனர் என்பதையே இது காட்டுகிறது.

அதே சமயத்தில் மோடி - அமித்ஷா கூட்டணி முன்வைப்பது பிராமணரல்லாத இந்துத்துவா என ஒரு கருத்தாக்கம் உருவாக்க முயற்சிகள் நடக்கின்றன.  இது சிறுபான்மை மக்களுக்கு எதிராக பிற் படுத்தப்பட்ட மக்களை இந்துத்துவா விஷ வட்டத்திற்குள் இழுக்கும் முயற்சியே! ஜாதிய வேறுபாடுகளை களை யாமலேயே பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களை தனது செல்வாக்கின் கீழ் கொண்டு வர இந்துத்துவ சக்திகள் முயல்கின்றன. ஜாதிய எதிர்ப்பு சக்திகள் சந்திக்கும் புதிய சவால் இது!

பெரியாரின் ஜாதிய ஒழிப்பு போராட்டங்களி லிருந்து கற்றுக்கொள்வதற்கு நமக்கு நிறைய உள்ளது.  ஜாதிய ஒழிப்பு இல்லாமல் ஜனநாயக புரட்சி இல்லை; அதே சமயத்தில் ஜனநாயக புரட்சி எனும் களத்திற்கு வெளியே ஜாதிய ஒழிப்பு சாத்தியமில்லை.

பாலின சமத்துவம், அறிவியல் முன் னேற்றம், மூட நம்பிக்கை எதிர்ப்பு, கடவுள் மறுப்பு என பல தளங்களில் பெரியார் இயங்கினார். பெரியா ருக்கும், பொதுவுடமை கருத்துகளுக்கும் வேறு பாடுகளே இல்லை என கூற இயலாது. எனினும் இன்று முன்னிலைப்படுத்த வேண்டியது பெரியார் கருத்துகளுக்கும் பொதுவுடைமை கருத்துகளுக்கும் உள்ள ஒற்றுமைதான்! பாசிச நகர்வுகளுக்கு எதிராக இந்த ஒற்றுமை மிக மிக அவசியம் எனில் மிகை அல்ல.

நன்றி: 'தீக்கதிர்' 24.12.2019

- விடுதலை நாளேடு, 29.12.!9

திரிநூலால் கூற முடியுமா?

மூடத்தனத்தில் மூழ்கிய மக்களைத் திருத்துவது தான் பகுத்தறிவாளர்களின் சீர்திருத்தக் காரர்களின் பணி . சுலபத்தில் அவர்கள் திருந்தமாட்டார்கள் என்பதற்காக சீர்த்திருத்தவாதிகள் தங்கள் பணி களை விட்டு விடுவதில்லை. காலம் தாழ்ந்தாலும், பகுத்தறிவும் விஞ்ஞானமும்தான் வெற்றி பெறும்.

'தினமலர்' எழுதுவதைப் பார்த்தால் மூடத்தனம் நிலைக்க வேண்டும் -அதன் மூலம் பார்ப்பனரின் புரோகிதத் தொழில் கொழுக்க வேண்டும் என்று கருதுவதை புரிந்து கொள்ள முடியும்.

தீண்டாமையை எதிர்த்துப் பெரியார் வைக்கம் வரை சென்றுகூடப் பேராடி வைக்கம் வீரரானார்.

இப்பொழுது "தினமலர்"க் கும்பல் தாழ்த்தப்பட்ட வரைப் பார்த்து தொடாதே - நெருங்காதே என்று சொல்லட்டுமே பார்க்கலாம் - கம்பி எண்ண வேண்டியதுதான்- திராவிடர் கழகத் தலைவரின் - கிரகண மூடநம்பிக்கைக்கு எதிரான செயல் தவறு என்று திரிநூலால் கூற முடியுமா?  - மருத்துவ மனைகள் பெருகி என்ன பயன் - நோய்கள் பெருகத்தானே செய்கின்றன என்று எழுதுமா தினமலர் திரிநூல்!

- விடுதலை நாளேடு, 29.12.19

வியாழன், 2 ஜனவரி, 2020

தந்தை பெரியார் நினைவு நாளில் உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் சூளுரை

பார்ப்பன சக்திகளிடமிருந்து மீள பெரியார் தேவை

தந்தை பெரியார் நினைவு நாளில் உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் சூளுரை

அய்தராபாத், டிச.29 பார்ப்பன ஆதிக்க சக்திகளிடமிருந்து விடுதலை பெறவும், பிஜேபி, ஆர்.எஸ்.எஸ். _ இந்துத்துவா பாசிச சக்திகளை வீழ்த்தவும் தேவை தந்தை பெரி யாரே என்று ஆந்திர மாநிலம் உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் சூளுரை ஏற்றனர்.

தெலங்கானா நாத்திக சங்கம், அறிவியல் மாணவர் கூட்டமைப்பு, அகில இந்திய மாணவர் சங்கம், உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து பெரியார் நினைவு நாளில் உறுதி ஏற்றனர்.

மாணவர்களிடையே தெலங்கானா நாத்திக சங்கத் தலைவர் ஜி.டி.சாரய்யா பெரியார் கொள்கைகளை விளக்கி உரையாற்றினார். "தந்தை பெரியார் கொள்கைகளை கிராமங்களிலும், மாணவர்களிடத்திலும் கொண்டு செல்ல வேண்டும். பெரியார் கொள் கைகளை பரப்ப வேண்டும். அதன்மூலம் மட்டுமே பார்ப்பனர்களின் ஆதிக்கத்தைத் தகர்த்தெறிய முடியும். பாஜக, ஆர்.எஸ்.எஸ். _ இந்துத்துவா பாசிச அமைப்பினரிடமிருந்து பெரியார் கொள்கைகளால் மட்டுமே நாட்டை அழிவிலிருந்து காப்பாற்ற முடியும். வேறு தீர்வு ஏதும் கிடையாது. தந்தை பெரியார் கொள்கை வழியில் நாத்திக வழியில் நடைபோடுவோம்" என்றார்.

அறிவியல் மாணவர் கூட்டமைப்பின் தலைவர் ஸ்பார்டகஸ் பேசுகையில், "தந்தை பெரியார்தலைசிறந்த மனிதநேயர். பெண் ணுரிமையாளர், மாபெரும் சமூக புரட்சிக் காரர். அவர் ஒருவர் மட்டுமே பார்ப்பனரல்லா தாருக்காக, சுயமரியாதைக்காக இயக்கம் கண்டவர்.

ஒடுக்கப்பட்ட மக்கள், பெண்கள் கல்வி, உரிமைகளுக்காக தொண்டாற்றியவர். பார்ப்பனர் அல்லாதார் அரசியல் உரிமைகள் பெற வும், சமூக நீதிக்கான இடஒதுக்கீடுக்காகவும் அருந்தொண்டாற்றியவர்.

பார்ப்பனக் கொள்கைகளுக்குக் கடும் எதிரி.

இன்றைக்கு  ¢பாசிச இந்துத்துவ பாஜக, ஆர்.எஸ்.எஸ்.  அமைப்பினருக்கு எதிராக மாணவர்கள்போராடி வருகின்றனர். ஆனால், நினைத்துப்பார்க்க முடியாத அள வுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பாகவே கிராமங்கள் தோறும் பயணங்கள் செய்து இந்துத்துவ பாசிசத்துக்கு எதிராகக் களம் கண்டவர் தந்தை பெரியார்.

நாம் செய்ய வேண்டியதெல்லாம் தந்தை பெரியார் கொள்கைகளை பரப்புவதுதான்.

வாழ்க பெரியார், வளர்க அவர்தம் கொள்கை

வெல்க திராவிடர் கழகம்"

இவ்வாறு ஸ்பார்டகஸ் பேசுகையில் குறிப்பிட்டார்.

- விடுதலை நாளேடு, 29.12.19