வியாழன், 3 அக்டோபர், 2019

இதுதான் நவராத்திரி விரதமாம்!

அபிதானசிந்தாமணி கூறுகிறது

நவராத்திரி விரதம் - 1. ருதுக்களில் வசந்தருது, சரத்ருது என்னும் இரண்டு ருதுக்களும் மனிதருக்கு ரோகத்தை விளைத்து நோய் செய்வதால் யமனுடைய இரண்டு கோரப்பற்களுக்குச் சமானமாகக் கூறப்பட்டி ருக்கின்றன. ஆகையால், அவற்றால் உண்டாகும் துன்பத்தினின்றும் நீங்க வேண்டிய மனுஷர் இந்த நவராத்திரி விரதத்தை செய்தல் வேண்டும்.

பூஜைக்கு வேண்டியவைகளை அமாவாசை தினத்திலேயே சேகரித்துக் கொண்டு அன்று ஒரு வேளை போஜனத்துடன் உபவாசியாய் இருந்து மறுநாள் பிரதமை முதல் பூஜைக்கு ஆரம்பித்தல் வேண்டும்.

நான்கு முழ நீளமும் ஒரு முழ உயரமுள்ள வேதி கையமைந்த அலங்கரித்த மண்டபத்தில் அமைத்துத் தான் வேதம் உணர்ந்த வேதியர் ஒன்பதின்மர் அல்லது அய்வர், மூவர், ஒருவருடன் மண்டபத்திற்குச் சென்று ஆசனத்தில் சங்கு, சக்ர, கதா பத்மத்துடன் கூடிச் சதுர்ப்புஜத்துடன் ஆயினும், பதினெண்கரத் துடன் கூடியவளாகவே தேவியின் திருவுருவத்தைத் தாபித்து அலங்கரித்துக் கும்பபூஜையின் நிமித்தம் கலசம் தாபித்து அதில் கங்கை முதலிய புண்ணிய தீர்த்தங்களை நிரப்பி மாவிலை முதலிய அய்ந்து வகைத் தளிர்களை மேலே வைத்துப் பூஜித்தல் வேண்டும்.

பின் சங்கற்பஞ் செய்துகொண்டு வாசனைத் திரவி யங்களாலும்; பலவகை மண மலர்களாலும் தேவியைத் தூபதீபங்களால் மந்திரபூர்வமாய் விதிப்படி பூசித்து நவாவரண பூஜையுஞ் செய்து அர்க்கியங் கொடுத்துப் பலவகை நிவேதனங்கள் செய்தல் வேண்டும்.

பின் ஹோமார்த்தமாய் யோனிகுண்டம் அமைத் துத் தண்டிலம் இட்டு ஓமத்தைப் பூர்த்தி செய்தல் வேண்டும். பூஜிப்போன் சயன சகாதிகளை விட்டுத் தரையில் படுத்து உறங்க வேண்டும். பிரதமையில் அஸ்த நக்ஷத்திரங் கூடில் விசேஷமென்றும் அத்தி னத்தில் தேவியைப் பூஜிக்கின் சகலாக்ஷ்டங்களையுந் தருவள் எனக் கூறுவர்.

கும்ப பூசைமுதல் ஓமாந்தம் வரையிற் செய்யத் தருவனவற்றைச் செய்து பின் கன்னிகைகளைப் பூஜித்தல் வேண்டும். கன்னிகைகள் யாவரெனின் இரண்டு வயது முதல் பத்து வயது அளவுள்ளவர்களாம். இக்கன்னியர்களுக்கு முறையே குமாரி, திரிமூர்த்தி, ரோகணி, காளிகா, சண்டிகா, சாம்பரா, துர்க்கா, சுபத்திரா என்று ஒவ்வொரு பெயராகும். இவர்களை வேத மந்திரங்களால் பூஜித்தல் வேண்டும். மேற் சொன்ன கன்னிகையரைத் தினம் ஒவ்வொருவராக வேனும், அல்லது முதனாள் தொடங்கி ஒவ்வொன்று அதிகமாகவேனும், பூஜை நடத்தல் வேண்டும். ஒருவன் நவராத்திரி முழுதும் பூசிக்க அசந்தனாவனேல்  அஷ்டமியில் அவசியம் பூஜித்தல் வேண்டும். என்னென்னின் பூர்வம் தக்ஷயாகத்தை அழித்த பத்திரகாளி தோன்றிய தினமாகையால் என்க. அசக்தரானோர் சப்தமி, அஷ்டமி, நவமி இம்மூன்று தினத்திலும் பூசிப்பரேல் ஒன்பது தினத்திலும் பூசித்த பலனை அடைவர். இவ்விரதத்தை மேற்கொண்டவ ரெல்லாச் செல்வங்களையும் அடைந்து உயர்பதம் அடைவர். இதனை அநுட்டித்தோர் சுசீலன் சுகேது முதலியோர்.

2. விரதங்களில் ஒன்று. இது புரட்டாசி மாதம் பூர்வ பக்ஷப் பிரதமை, முதல் திரிதிகை வரையில் உருத்திரியையும், சதுர்த்தி முதல் ஷஷ்டி வரையில் இலக்குமியையும், சப்தமி முதல் நவமி வரையில் சரஸ்வதியையும், பூசித்துத் தசமியில் முடிப்பது. இதனை சுகேது என்னும் அரசன், அரசாட்சி யிழந்து வருந்தியதால் அவன் மனைவியாகிய துவேதியை ஆங்கீரச முனிவர் இவ்விரதம் அநுட்டிக்கக் கற்பித் தனர். அவ்வகை அவள் அநுட்டிக்க அவ்வநுட்டானத் திற்குப் பின் அவள் வயிற்றில் பிறந்த குமரனாகிய சூரியபிரதாபன் இழந்த நாட்டைப் பகைவரிடமிருந்து மீட்டனன் என்பர்.

இவ்வாறு அபிதானசிந்தாமணியில் கூறப்பட்டுள்ளது.

ஜாதியின் பெயரால் பிறவி பேதங்களைக் கற்பித்து மக்களை ஒன்றுபட விடாமல் செய்து, தன்னைத்தானே உயர்ந்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் பார்ப்பனர்களின் ஆதிக்கம் நிலைகொண்டிருப்பதற்கு காரணம் மக்களின் அறியாமையே. நம் மக்களின் அறியாமைக்கு காரணம் அவர்களை சூத்திரர்களாகவும், பஞ்சமர்களாகவும் ஆக்கிவிட்டு, கல்வி உரிமையை மறுத்துவந்ததே முதன்மையான காரணமாகும்.

கடவுள், மதம், பக்தியைக் காட்டி, அப்பாவி பாமர மக்களை அச்சுறுத்தியே பார்ப்பனர்களின் சுரண்டல் தொடர்ந்துகொண்டிருக்கிறது. சுரண்டிப் பிழைத்து வருவதற்கான  அறுவடையின்மீதே பார்ப்பனர்கள் கவனமாக இருந்து வருகிறார்கள்.

சவுண்டிப் பார்ப்பனர் முதல் சங்கராச்சாரி பார்ப் பனர்வரை வருணாசிரமத்தைப் பாதுகாப்பதிலேயே குறியாக இருந்து வருகிறார்கள். மனுதர்மம், பகவத் கீதை உள்ளிட்டவற்றை வருணாசிரமத்தை பாது காக்கும் கருவிகளாகக் கொண்டுள்ளார்கள்.

நம்மக்கள் விழிப்படைந்துவிட்டால், தங்களின் ஆதிக்கபுரி தகர்ந்துவிடும் என்பதாலேயே வஞ்சகப் பார்ப்பனர்கள், அவ்வப்போது வீடணர்களை உருவாக்கி வந்துள்ளனர்.

உழைக்கும் நம் மக்களை சிந்திக்க விடாமல், காலம், பொருள் உள்ளிட்ட அனைத்தையும் வீணடிக்கும் படியாக ஆண்டு முழுவதும் விநாயகன், ராமன், கிருஷ்ணன் என பிறக்காத கடவுள்களுக்கும் பிறந்த நாளைக் கொண்டாடச் செய்வது மற்றும் பிற பண்டிகைகளைக் கொண்டு பார்ப்பனர்களின் சுரண்டல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

பண்டிகைகள், மதச்சடங்குகள், சாஸ்திர, சம்பிர தாயங்கள் என கடவுள், மதம், பக்தியின் பெயரால்  அறிவுக்கு ஒவ்வாத கருத்துகளை நம் மக்களிடையே மூடத்தனத்தை தொடர்ச்சியாக பார்ப்பனர்கள் பரப் பியே வந்துள்ளனர்.  அந்த வகையில்தான் மாதந் தோறும் பண்டிகைகள் தொடர்ந்து கொண்டிருக் கின்றன. அனைத்தையும் திட்டமிட்டு பரப்பிக் கொண்டு இருக்கிறார்கள்.

நவராத்திரிக்குச் சொல்லப்படும் கதை கொஞ்சமாவது அறிவுக்குப் பொருந்துமா? கள் குடித்த பைத்தியக்காரன் உளறுவது போல் இல்லையா?

பகுத்தறிவு வெளிச்சக்கீற்று நம் மக்களிடையே வெள்ளமென பாய்ந்தால், பஞ்சகச்சங்கள் ஓட்டம் பிடித்துவிடும்.

- விடுதலை நாளேடு, 3. 10. 19

பாஸ்டனில் பெரியார் - அம்பேத்கர் வாசகர் வட்டத்தின் சார்பில் அய்யா விழா

‘‘என்னால் தோற்றுவிக்கப்பட்ட சுயமரியாதை இயக்கத்தின் விசையிலிருந்து உலகத்திற்கே அதன் பலாபலன்கள் பரவும்!''


தந்தை பெரியாரின் இந்தக் கருத்தை எடுத்துக்காட்டி  பாஸ்டனில் தமிழர் தலைவர் சங்கநாதம்




பாஸ்டன், அக்.3  தந்தை பெரியாரால் தொடங்கப்பட்ட சுயமரியாதை இயக்கத்தின் பலன்கள் உலகம் முழுவதும் சென்றடையும் என்று தந்தை பெரியார் கூறிய கருத்தினை எடுத்துக்காட்டி பாஸ்டனில் கடந்த 29.9.2019 ஆம் தேதி பெரியார் - அம்பேத்கர் வாசகர் வட்டத்தின் சார்பில் நடத்தப்பட்ட விழாவில், ‘‘வாழ்நாள் சாதனை யாளர்'' விருது பெற்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

‘‘பெரியார் என்ற போர்க் கருவி''


29.9.2019 அன்று பெரியார் - அம்பேத்கர் படிப்பு வட்டத்தில், ‘‘பெரியார் என்ற போர்க் கருவி'' என்ற தலைப்பில் உரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர்.

அவரது உரை வருமாறு:

தமிழர் தலைவர் உரை


அருமைத் தோழர்களே, அனைவருக்கும் வணக்கம்.

அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் நமக்கு புரட்சிக்கவிஞர் அவர்கள் சொன்னதைப்போல,

ஆயிரம் ஆண்டெனும் மூதாட்டி

அவர் அணிந்திராத அணியாவார்

அறிந்திராத அறிவாவார்

என்று சொன்னார்.

எனவே, ஆயிரம் ஆண்டுகளில் கிடைக்க முடியாத ஒரு தனிப்பெரும் தலைவர், வழிகாட்டி, புரட்சியாளர் பெரியார் என்ற அந்த மாபெரும் அறிவாசான் தன்னு டைய வாழ்நாளிலே சாதித்துக் காட்டியது என்பது வியக்கத்தக்க ஒன்றாகும்.

சுயமரியாதை இயக்கம் கண்ட ஞானசூரியன்


மற்ற தலைவர்களுக்கெல்லாம் இல்லாத ஒரு தனிச் சிறப்பு தந்தை பெரியாரைப் பொறுத்தவரையில் அவர் கள் பெரிய அளவிற்கு பல்கலைக் கழகப் பட்டங்களைப் பெற்றவரல்ல. ஏன்? கல்லூரி வாசல்களுக்குக்கூட சென்றவரில்லை. அதைவிட, பள்ளிகளுக்கே செல் லாமல், திண்ணைப் பள்ளிக்கூடத்தில் நான்காம் வகுப்போடு முடித்துக்கொண்ட ஒரு மாமனிதர் ஒப்பற்ற சுயசிந்தனையாளராக தன்னை மாற்றிக்கொண்டு, தன்னை ஆக்கிக்கொண்டு, உருவாக்கிக்கொண்டு, தன் பெண்டு, தன் பிள்ளை, தன் வீடு, தன் குடும்பம் என்ற அளவில் வாழாமல், உலகமே தன்னுடைய எல்லை - மானுடமே தன்னுடைய விரிந்த பார்வை - எனவேதான்,

அகண்ட பார்வையால் விழுங்கு உலகத்தை -

அறிவு விரிவு செய், அகண்ட மாக்கு

என்ற அந்தத் தத்துவத்தை, மனித குலத்திற்குப் போதிப்பதையே தன்னுடைய வாழ்நாள் பணியாக ஆக்கிக் கொண்டவர். அவர் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். பெரிய அளவிற்கு உள்ளூரிலே மதிக்கப் பட்டவர்.

இதுவரையில், எந்தத் தலைவருடைய வாழ்நாளிலும் கேட்டிராத ஒரு அற்புதமான ஒரு வாய்ப்பை, நம்முடைய அறிவாசான் சுயமரியாதை இயக்கம் கண்ட ஞானசூரியன் தெளிவாகப் பெற்றார்கள்.

அந்த வாய்ப்பு என்னவென்றால், அவர்கள் ஈரோட்டிலே செல்வந்தக் குடும்பத்தில் பிறந்து, சிறந்த ஒரு வணிகராகத் திகழ்ந்து, வணிகர் சங்கத்திற்கே ஒரு பெரிய தலைவராகி, 1916 இல் ஒரு அறக்கட்டளை போன்று உருவாக்கித் தந்தவர் அந்தக் காலகட்டத்தில், ஒரு நிறுவனத்தை உருவாக்கித் தந்தவர்.

நாணயம் அவரது வாழ்க்கையின் நடைமுறையாக இருந்தது. அவர்கள் எதைச் சொன்னாலும், அதிலிருந்து அவர் மாறியதில்லை.

வயதில் அறிவில் முதியார்

வாய்மைப் போருக்கு என்றும் இளையார்

உயர் எண்ணங்கள் மலரும் சோலை

என்று புரட்சிக்கவிஞர் அவர்கள் சொன்னார்கள் அல்லவா! வாய்மைப் போர் என்பது அவருக்குப் பொதுவாழ்க்கையில் வந்த பிறகு அமைந்ததில்லை. இயல்பாகவே, அதுதான் அவர் ஒரு விசித்திர மாமனிதர் என்று நாம் சொன்னோம். இயல்பாகவே, அவர் அதற்குத் தயாராக இருக்கிறார்கள்.

தன்னுடைய தந்தையாரை அவர் மிகப்பெரிய அளவிற்கு நேசித்தவர் என்றாலும், இவருடைய சிறந்த ஆற்றலினாலே, சிறுவயதிலே, தந்தை பெரியார் அவர்கள் ஈ.வெ.ராமசாமியாக இருந்த நேரத்தில், மஞ்சள் மண்டி வியாபாரம் செழித்தோங்கிக் கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில், தந்தையாரே பார்த்து, வெங்கட்ட நாயக்கர் மண்டி என்று பெயர் இருந்ததை, ராமசாமி மண்டி என்று இளைய பிள்ளைக்காக ஆக்கினார். மூத்த பிள்ளை கொஞ்சம் செலவாளி. அவ்வளவு அதிகமாக இவரைப் போல் பொறுப்பாகவும், அதேநேரத்தில், வாணிபத்தை மிகச் செழிப்பாகவும் நடத்தக்கூடிய ஆற்றல் இந்த அளவிற்கு இல்லை என்று அடையாளம் கண்டு சொன்ன நேரத்தில், தங்களுடைய சொத்துக் களையெல்லாம் பாதுகாக்க, பெருமுயற்சி எடுத்து, அதனை விரிவுபடுத்திய தந்தை பெரியார் அவர்களு டைய வாழ்நாளில் ஒரு செய்தி இருக்கிறது.

பெரியார்மீது மோசடிப் புகார்!




தந்தைக்குப் பதிலாக மகன் அந்தப் பணியை செய்கின்ற காலகட்டத்தில் நடைபெற்ற நிகழ்வு என்ன வென்றால், தந்தையினுடைய கையெழுத்தை சில நேரங் களில், அவருடைய காசோலையில் கையெழுத்தைப் போடுவது வழக்கம்; அக்காலத்தில் அது சர்வ சாதாரணம்தான்.

ஆனால், அதை ஒருவர், இவருடைய அரசியல் எதிரியாக உள்ளூரில் இருக்கக்கூடிய ஒருவர் அதனைப் பயன்படுத்தி, கையெழுத்தை மாற்றிப் போட்டு இருக்கிறார்; மோசடி செய்திருக்கிறார் என்ற குற்றச் சாட்டை சுமத்தி, இவர்மீது புகார் கொடுத்தார்.

அதனால், இவர் நீதிமன்றத்திற்குச் செல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டது. கிரிமினல் குற்றத்திற்காக நீதிமன்றத்திற்கு, அதுவும் இவ்வளவு பெரிய செல் வந்தருடைய பிள்ளை, அதுவும் ஊரிலேயே எல்லோ ராலும் மதிக்கக்கப்படக்கூடிய பிள்ளை செல்கிறார் என்றவுடன், அவருடைய தந்தையார் கண்ணீர்விட்டு அழுகிறார். அது ஒரு அவமானம். எனவே, தங்களுடைய தகுதிக்கு மிகக்குறைவு. அதுவும் மோசடிக் குற்றத்திற்காக தன்னுடைய பிள்ளை நீதிமன்றத்திற்குச் சென்றார் என்றால், அது மிகப்பெரிய கொடுமை என்று சொல்லக் கூடிய அந்தக் காலகட்டத்தில்,

கையெழுத்து  என்னுடையது அல்ல


என்று மட்டும் சொன்னால் போதும்


ஒரு பிரபலமான வக்கீலை, ஒரு பார்ப்பன வக்கீலை, அந்தக் காலத்தில் அவர்கள்தான் வழக்குரைஞர்கள்; எனவே, அவரை அழைத்து இந்த வழக்கிலே வாதா டும்படி கேட்டுக்கொண்டவுடன், அவரும் அதற்குத் தயாராக வருகிறார்.

அந்த வழக்குரைஞர், தந்தை பெரியாரிடம், ‘‘அந்தக் கையெழுத்து  என்னுடையது அல்ல என்று மட்டும் சொன்னால் போதும்'' என்றார் அவர்.

இந்தக் காலத்தில் அரசியல்வாதிகள், மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று எல்லோருக்கும் தெளி வாகத் தெரியும். அதை நான் சொல்லி, நீங்கள் புரிந்து கொள்ளவேண்டிய அவசியமில்லை.

தந்தை பெரியார் அதுபோன்று சொல்ல மறுக்கிறார். இன்னுங்கேட்டால், சிறைச்சாலைக்குச் சென்றால், தனக்குக் களிதான் கொடுப்பார்கள்; கீழேதான் படுக்க வேண்டும் என்பதற்காக, வைரக் கடுக்கணும், தோடும் அணிந்து கொண்டிருப்பவர்; பெரிய செல்வந்தராக, வெல்வேட் மெத்தையிலேயே படுத்துப் பழக்கப்பட்ட வரான அவர், வெறும் தரையிலேயே படுத்து பழகிக் கொள்கிறார்; கஞ்சியையும், களியையும் சாப்பிட்டு தயாராகிக் கொண்டார்; தண்டனையை ஏற்கவேண்டும் என்ற அளவிற்கு வருகின்றபொழுது,

மோசடிக் குற்றத்திற்காகவோ, அல்லது யாரையும் ஏமாற்றுவதற்காகவோ போடவில்லை!


நீதிமன்றத்தில், பிரபலமான பார்ப்பன மூத்த வழக் குரைஞர்  வாதாட ஆரம்பித்த நேரத்தில்,

‘‘மன்னிக்கவும்; இவர் எனக்காக வாதாடுவதை ஏற்றுக்கொள்ளவில்லை. நான் உண்மையைச் சொல்ல விரும்புகிறேன். என்னுடைய கையெழுத்துதான் அது. நான் என்னுடைய தந்தையாருக்காக, அவருடைய கையெழுத்தை நான்தான் போட்டேன். இது வழமையாக நடக்கக்கூடிய ஒன்று. இதிலே யாருக்கும் எந்தவிதமான சங்கடமும் இல்லை. நான் எந்தவிதமான மோசடிக் குற்றத்திற்காகவோ, அல்லது யாரையும் ஏமாற்றுவ தற்காகவோ போடவில்லை. இது நீண்ட காலமாக வணிகத்திலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற மரபான ஒரு செய்திதான்'' என்று திருச்சி நீதிமன்றத்தில் இருந்த வெள்ளைக்கார நீதிபதியிடம் சொல்கிறார்.

அந்த நீதிபதிக்கு மிகவும் வியப்பாக இருந்தது.

‘‘வழக்குரைஞர் சொல்வதை ஏற்றுக்கொள்ளமாட் டேன். உண்மையைச் சொல்கிறேன் உங்களிடம். அதற்காக நீங்கள் என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள்'' என்று நீதிபதியிடம் சொன்னவுடன்,

அந்த வழக்கை விசாரித்த வெள்ளைக்கார நீதிபதி வியப்படைகிறார், அதிர்ச்சி அடைகிறார்.

வியப்படைந்த வெள்ளைக்கார நீதிபதி


இப்படி ஒரு மனிதரா? ஒரு இளைஞன், அதுவும் செல்வாக்குள்ள ஒரு இளைஞன் இப்படி சொன்னவுடன், அவருக்கு அது வியப்பாக இருந்தது.

உடனடியாக தீர்ப்பு சொல்லும்பொழுது நீதிபதி சொன்னார், ‘‘அவர் உண்மையை ஒப்புக்கொண்டது மட்டுமல்லாமல், அதனால் யாருக்கும் எந்தவிதமான இழப்பும் இல்லை. மோசடி என்பதற்கு, கிரிமினல் சட்டத்தில் இருக்கின்ற ஒரு அடிப்படை என்னவென்றால், மோசடி செய்யவேண்டும் என்ற எண்ணத்தோடு அவர் செய்திருந்தால்தான், அது குற்றமாகுமே தவிர - வழமையாக நடப்பது, அதனால் மற்றவர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. ஆகவே, இவரை விடுதலை செய்கிறேன்'' என்று சொன்னார்.

இப்படிப்பட்ட ஒரு நாணயத்தை தன்னுடைய வாழ்நாளில் கொண்ட ஒரு தலைவர், அதனையே வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்தார். அவருடைய அச்சகத்திற்கு உண்மை என்று பெயரிட்டார். வாய்மைப் போர் என்பதாக.

அனுபவங்களை முழுக்க முழுக்க


அவர் பயன்படுத்திக் கொண்டார்




அந்த அளவிற்கு அவர் சமுதாயத்தில் சொந்தமாக சிந்தித்து, தன்னுடைய சுய சிந்தனையின்மூலமாக வந்தவர், தன்னுடைய வாழ்க்கை அனுபவத்தையே தத்துவமாகப் பெற்றவர்கள். அவர் எந்த நூலகத்திற்கும் சென்று ஆய்வு செய்யவில்லை; புத்தரைப் போல போதி மரத்தைத் தேடவில்லை. ஆனால், மாறாக மக்களோடு மக்களாக கலந்து பேசிய நேரத்தில், ஒவ்வொரு அனு பவமும், அவருடைய வீட்டு அனுபவமாக இருந்தாலும் சரி, நாட்டு அனுபவங்களாக இருந்தாலும், அந்த அனுபவங்களை முழுக்க முழுக்க அவர் பயன்படுத்திக் கொண்டார்.

எடுத்துக்காட்டாக, அவருடைய வீட்டில், 7, 8 வய திலே பெரியாருடைய தங்கை மகளுக்கு குழந்தைத் திருமணம் செய்து வைத்திருந்தார்கள். அதாவது 1908 ஆம் ஆண்டு. எண்ணிப் பார்க்க முடியாத காலகட்டம் அது. இன்றைக்கு 110 ஆண்டுகளுக்கு முன்பாக நடை பெற்ற ஒரு சம்பவம். அவருடைய குடும்பம் மிகப்பெரிய வைதீகக் குடும்பம்; இன்னுங்கேட்டால், முத்திரை பெற்ற வைஷ்ணவர்கள் என்று தனித்தகுதி பெற்ற குடும்பம். அந்தக் குடும்பத்தில் நடைபெற்ற குழந்தை மணத்தால், அவருடைய தங்கை மகள் விதவையாகிறார்.

அந்த இடத்தில், பெரியார் காலில் விழுந்து கதறுகிறார் அந்தக் குழந்தை. ‘‘பெண் ஏன் அடிமையானாள்?'' என்ற புத்தகத்தில், பெரியார் அவர்கள் இதைப்பற்றி சொல்லும் பொழுது, அதனை நாம் படிக்கும்பொழுது நம்முடைய கண்களிலிருந்து கண்ணீர் வந்துவிடும்.

பெரியார் நடத்தி வைத்த திருமணம்!


பெரியாருடைய காலில் விழுந்து, ‘‘மாமா, நான் இந்தத் திருமணத்தைக் கேட்டேனா? என்னை இப்படி ஆக்கி வைத்துவிட்டீர்களே?'' என்று சொன்னபொழுது,

பெரியார் அவர்கள் அவருடைய எழுத்திலேயே எழுதுகிறார்: ‘‘நான் அந்தக் குழந்தையைத் தூக்கி நிறுத்தும்பொழுதே அதற்கு மறுமணம் செய்து வைக்க வேண்டும்; புது வாழ்வு கொடுக்கவேண்டும் என்ற உறுதியுடன் தூக்கி நிறுத்தினேன், அந்த மன உறுதியோடு தூக்கி நிறுத்தினேன்'' என்று அவர் மிகத் தெளிவாக சொன்னதோடு மட்டுமல்லாமல், எல்லோருக்கும் தெரியும், வெவ்வேறு வழியிலே தான் இருந்துகொண்டு, அந்தத் திருமணத்தை நடத்தி வைத்தார்கள்.

எனக்கு ஒரு பெரிய வாய்ப்பு, ஈரோட்டிலே நான் இருந்தபொழுது, அந்த அம்மையார் ஒரு பாட்டியாக வந்து நின்ற நேரத்தில், ‘‘வீரமணி, பெரியாரைக் கவனித்துக் கொள்'' என்று சொன்னபொழுது, எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது.

‘‘பெண் ஏன் அடிமையானாள்?''


ஆகவே, விதவை மணத்திற்கு இன்றைக்கே கூட பல பேர் தயங்குகின்ற நேரத்தில், அன்றைக்கு அவர் துணிவோடு செய்தார்கள்.

எனவே, இந்த அனுபவம் அவருக்குக் கொள்கையாக, சுயமரியாதை இயக்கம் பரிமளிக்கத்தக்க அளவிற்கு, ‘‘பெண் ஏன் அடிமையானாள்?'' என்று சிந்திக்கக் கூடிய அளவிற்கு, பிறவி பேதம், ஜாதி பேதம்; ஆண் உயர்ந்தவன் - பெண் தாழ்ந்தவள் என்ற பிறவி பேதம் இவை அத்தனையும் கூடாது என்பதை மிகத் தெளிவாகக் கொண்டுவரக் கூடிய அளவிற்கு அந்த வாய்ப்பைப் அவர்கள் பயன்படுத்தினார்கள்.

பெண்கள் சுதந்திரத்திற்கு மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தவேண்டும்; கர்ப்ப ஆட்சி தேவை!


அதேபோல, மிகப்பெரிய அளவிற்கு, பெண் களுக்கு சுதந்திரம்  தேவை என்று சொல்லுகிற பொழுது,


ஒரு கணவன் குடித்துவிட்டு, தன்னுடைய மனை வியைக் கொடுமைப்படுத்தியபொழுது, இவருடைய வீட்டிற்கு வந்து அந்தப் பெண் அழுத நேரத்தில், அந்தக் கணவனைக் கண்டித்தார்.


பெண்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்கிற எண்ணம் எப்படி  வந்தது? என்று ஒரு வானொலி பேட்டியில் கேட்டபொழுது, அய்யா அவர்கள் விளக்கிச் சொல்கிறார்.


‘‘குடித்துவிட்டு கணவன் அடித்த அந்தப் பெண் சொன்னார்,  கணவனுடைய கொடுமை தாங்க முடியவில்லை. 3, 4 குழந்தைகளைப் பெற்றிருக்கி றேனே, இந்தக் குழந்தைகளை யார் காப்பாற்று வார்கள் என்று சொன்னார்.


அப்பொழுதுதான் நினைத்தேன், தேவையில் லாமல், குழந்தைகள் என்பது இவருடைய சுதந் திரத்திற்கு, சுக வாழ்விற்கு எவ்வளவு பெரிய போட்டியாக இருக்கிறது'' என்று தெளிவாக எடுத்துச் சொல்லக்கூடிய நிலையில், அவரை உடனே தூக்கி நிறுத்தி ஆறுதல் சொன்னேன், கவலைப்படாதீர்கள் என்று சொன்னேன். அப்பொழுதுதான் அந்த எண்ணம் எனக்கு வந்தது - பெண்கள் சுதந்திரத்திற்கு மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தவேண்டும்; கர்ப்ப ஆட்சி தேவை என்பதை எடுத்துச் சொல்லி விட்டு, இன்னொன்றையும் பொதுக்கூட்டத்தில் பேசும்போது சொல்வார்,


பகவான் என்ன முட்டாளா?


‘‘பகவான் கொடுத்தார், பகவான் கொடுத்தார் என்று சொல்கிறீர்களே, பகவான் என்ன முட்டாளா? அல்லது அயோக்கியனா? பிள்ளையை மட்டும் கொடுத்துவிட்டு, உணவைக் கொடுக்காமல், உடை யைக் கொடுக்காமல், அந்தக் குழந்தைகளுக்கு உரிய கல்வி வசதியைக் கொடுக்காமல் இருந்தால், அந்த பகவான் யோக்கியனா? அல்லது முட்டாளா?'' என்று தெளிவாகக் கேட்பார்; மக்கள் சிந்திப்பார்கள்.


ஆகவே, அவரால் ஒரு பெரிய சமுதாய மாற்றம் ஏற்பட்டது. இன்றைக்கு இந்தியாவிலே தமிழ்நாட்டில்தான் மக்கள் தொகை  பெருக்கம் குறைவு என்று வந்திருக்கிறது என்றால், அய்.நா. சபையிலேயே அந்த வாய்ப்புகளை அவர்கள் வைத்திருக்கிறார்கள் என்று சொல்லக்கூடிய ஒரு கட்டத்தில், உலகளவில் அது பதிவாகியிருக்கிறது.

எனவே, சுயமரியாதை இயக்கம் தந்தை பெரியார் அவர்கள் உருவாக்கிய இயக்கம் என்பது மிகப்பெரிய ஒரு வாய்ப்பாகும்.

அடுத்தபடியாக, 1899  - சென்னையில் லட்சுமி விலாஸ் தியேட்டர் - ஒற்றைவாடை என்று பிறகு மாற்றப்பட்டது. அதிலே, அபிராம சுந்தரி சரித்திரம் என்ற ஒரு நாடகத்திற்காக மிகப்பெரிய விளம்பரம் செய்யப்பட்டது.  அந்த விளம்பரத்தில், கதையின் சுருக்கத்தைப் போட்டு, பெஞ்ச் ஒரு ரூபாய், தரைக்கு நாலணா என்றெல்லாம் போட்டுவிட்டு, அதற்குக் கீழே ‘‘பஞ்சமர்களுக்கு இடமில்லை'' என்று போட்டிருந்தார்கள்.

பெரியார் இயக்கம் செய்ததினுடைய விளைவு, இன்றைக்குத் தீண்டாமை ஒழிப்புச் சட்டம் வந்திருக்கிறது


பண வசதி இருந்தாலும்கூட, டிக்கெட் வாங்கக்கூடிய வசதி இருந்தாலும், சென்னையில், அதுவும் தலைநகராக இருக்கக்கூடிய ஒரு இடத்தில், ஏறத்தாழ 120 ஆண்டு களுக்கு முன்பாக, எப்படிப்பட்ட சூழல் இருந்தது நம்முடைய நாட்டில் என்பதை இன்றைய இளைஞர்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.

பெரியார் என்ன செய்தார்?

திராவிட இயக்கம் என்ன செய்தது?

சுயமரியாதை இயக்கம் என்ன சாதித்தது? என்று கேட்கக்கூடியவர்கள், இந்த வரலாற்றினுடைய அடி களை, சுவடுகளைத் திரும்பிப் பார்க்கவேண்டும். அப்பொழுதுதான் அவர்களுக்குப் புரியும்.

உடனடியாக தந்தை பெரியார் அவர்கள், அவரு டைய இயக்கம் செய்ததினுடைய விளைவு, இன்றைக்குத் தீண்டாமை ஒழிப்புச் சட்டம் வந்திருக்கிறது. எப்பொழுது வருகிறது? 1950 இல் இந்திய அரசமைப்புச் சட்டம். சுயமரியாதை இயக்கம் எப்பொழுது தோன்றியது? 1925 ஆம் ஆண்டு.

காங்கிரசில் இருந்தபொழுதே அவர்கள், தீண்டாமை, நெருங்காமை, பாராமை, நடக்க உரிமையில்லை என்று சொன்ன நேரத்தில், காந்தியாருடன் வைக்கம் போராட் டத்திற்காக சண்டை போட்டவர் என்கிற வரலாறு இன்றைய இளைஞர்களுக்குத் தெரியவேண்டும்.

தந்தை பெரியாருக்கு


காந்தியார் எழுதிய கடிதம்!


வைக்கம் போராட்டத்தின்பொழுது, பெரியாருக்குக் காந்தியார் ஒரு கடிதம் எழுதுகிறார்.

‘‘நாயக்கரே, நீங்கள் ஏன் கேரளாவிற்குச் சென்று ரகளை செய்கிறீர்கள்; உயர்ஜாதிக்காரர்களான நம்பூதிரி கள் எனக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். நீங்கள் அங்கே செல்லவேண்டாம் என்று'' அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

காந்தியாருக்கு


தந்தை பெரியார் எழுதிய கடிதம்!


அதற்கு மிகவும் மரியாதையோடு, தன்னுடைய தலைவராக ஏற்றுக்கொண்ட காந்தியாருக்கு ஒரு கடிதம் எழுதுகிறார் பெரியார்.

‘‘நான் ஒன்றைச் சொல்கிறேன். நான் இங்கே வந்து பார்க்கும்பொழுது, நாயும், பன்றியும், கழுதையும் தெருக் களில் ஓடுகின்றன. அவைகள் என்ன சத்தியாகிரகம் செய்தா அந்த உரிமையைப் பெற்றன. ஆனால், மனிதன், அதுவும் ஆறறிவு உள்ள மனிதன், அவன் கீழ்ஜாதி என்கிற ஒரே காரணத்திற்காக அந்தத் தெருவில் நடக்கக் கூடாது என்று சொன்னால், அது எவ்வளவு பெரிய கொடுமை? நீதிமன்றம் அந்தத் தெருவில் இருக்கும் பொழுது, அந்த சமுதாயத்தைச் சார்ந்த மாதவன் என்ற ஒரு வழக்குரைஞர் நீதிமன்றத்திற்குச் சென்று வாதாடச் சென்ற நேரத்தில்தான், அவர் தடுக்கப்படுகிறார், அடித்து விரட்டப்படுகிறார் என்று சொன்னார், அது எவ்வளவு பெரிய கொடுமை'' என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் தந்தை பெரியார்.

ஒருமுறை அல்ல இரண்டு முறை போராட்டத்தினை நடத்தினார் தந்தை பெரியார், ஆறுமாதம் சிறைத் தண்டனை பெற்றபொழுது, இவரை ஒழிப்பதற்காக சத்ரு சங்காரம் யாகம் செய்த நேரத்தில், மன்னன் இறந்து விட்டார் என்றவுடன், மக்களுக்கே ஒரு நம்பிக்கை ஏற்பட்டு விட்டது - மக்கள் மூடநம்பிக்கையில் இருப்பதி னால், ராஜாவையே எதிர்த்து அந்த பூதம் கிளம்பிவிட்டது என்று நம்பினார்கள் என்று வேடிக்கையாக பெரியார் சொல்வார்.

இன்றைக்கு அதே வைக்கத்திலிருந்து, அதே ஈழவ சமுதாயத்தைச் சார்ந்த நாராயணன் அவர்கள் குடியரசுத் தலைவராக இருந்து, பெரியாருடைய தொண்டைப் பாராட்டி, எங்களிடமெல்லாம் பேசினார். அவர்தான் அண்ணா அறிவாலயத்தைக்கூட திறந்து வைப்பதற்காக அழைக்கப்பட்டவர் என்பது இந்த நேரத்தில் குறிப் பிடத்தகுந்த ஒன்றாகும்.

ஆகவே, இப்படி பெரியார் அவர்கள் சிறப்பானவர் மட்டுமல்ல, சுய சிந்தனையாளர் மட்டுமல்ல, அவருடைய இயக்கம் சாதித்தது சாதாரணமானதல்ல.

மிகப்பெரும்பாலான மக்களுக்கு


படிப்பு கொடுக்கப்படவில்லை


சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும், கல்வியைக் கொடுக்காதே என்று சொன்னநேரத்தில், மிகப்பெரிய அளவிற்கு இந்த நாட்டில், சேரன், சோழன், பாண்டியன், பல்லவன் ஆகியோர் காலத்திலெல்லாம் வடமொழிப் படிப்பு கொடுக்கப்பட்டது, சமஸ்கிருத படிப்பு அதுவும் உயர்ஜாதிக்காரர்களுக்குக் கொடுக்கப்பட்டதே தவிர, ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்கு, மிகப்பெரும்பாலான மக்களுக்கு, பெண்களுக்கு அது கிடைக்கவேயில்லை.

ஆகவே, அப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில், அந்த இயக்கத்தைத் தொடங்கினார். தான் நேசித்த காந்தியாரிடம் அவருக்கு ஏற்பட்ட கருத்து மாறுபாடு  இரண்டு விஷயங்களில்.

காந்தியாருக்கும்,  பெரியாருக்கும்


கருத்து மாறுபாடு


வருணாசிரம தர்மத்தை காந்தியார் நம்பினார். அதுமட்டுமல்ல, தீண்டாமை ஒழிய வேண்டும் என்று சொன்னாலும், அவருடைய அணுகுமுறை இருக்கிறதே, அது வேறுபட்டது. காந்தியாருக்கும்,  இவருக்கும் கருத்து மாறுபாடு - ஏறத்தாழ அம் பேத்கர் அவர்களுக்கும் அதே உணர்வுதான் வடபுலத்தில் ஏற்பட்டது.


காங்கிரசில் இருந்தபொழுது, அரிஜன நல நிதி என்று சொல்லி, தனிக் கிணறு, தனிக் குளம் வெட்டிக் கொடுங்கள் அவர்களுக்கு என்று காந்தியார் சொன் னார்.


பெரியார் அவர்கள் காங்கிரசிலிருந்தபொழுதே, காந்தியாரிடம் மாறுபட்டார்.


நீங்கள் தனிக் கிணறு, தனிக் குளம், தனித் தெரு என்று ஆக்கினால், மீண்டும் அதே ஜாதியை, அதே தீண்டாமையை, அதே சமூக இழிவை நிலை நாட்டுகிறீர்கள். ஆகவே, அதுபோன்று இருக்கக் கூடாது. பொதுக் குளம்தான் இருக்கவேண்டும்; பொதுக் கிணறுதான் இருக்கவேண்டும்; எல்லோரும் அதில் தண்ணீர் எடுக்கவேண்டும் என்று சொல்லக் கூடியதில்தான் வேறுபாடு.


அதேபோல, எல்லோரும் கல்வி கற்கவேண்டும் என்று வரும்பொழுது, உங்களுடைய வருணாசிரம தர்மத்தில் இப்படியெல்லாம் இருக்கிறது. உயர் ஜாதிக்காரர்கள் மட்டுமே படித்தவர்களாக இருக் கிறார்கள் என்று சொன்னபொழுது, காந்தியார் வருணதர்மம் நல்லது என்று சொன்னார்கள்.


பிறகு, வகுப்புவாரி உரிமையைப் பொறுத்தவரையில், மற்றவர்கள் எல்லாம் சுட்டிக்காட்டிய நேரத்தில், ஓமந்தூரார் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில், பார்ப்பனர்கள் - ‘‘இப்படி எங்களை வதைக்கிறார்கள், வகுப்புவாரி உரிமையின்மூலம், எங்கள் வாய்ப்புகளை யெல்லாம் பறிக்கிறார்கள்'' என்று சொன்ன நேரத்தில்,

ஓமந்தூரார் புள்ளிவிவரங்களோடு


காந்தியாரிடம் சொன்னார்!




ஓமந்தூரார் தெளிவான புள்ளி விவரங்களைச் சொன்னார். வகுப்புவாரி உரிமைகள் மூலமாக நாங்கள் நடத்துவது, ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்கு முதல் தலைமுறை, இரண்டாம் தலைமுறை, மூன்றாவது தலைமுறையாக இப்பொழுதுதான் வருகிறார்கள். ஆனால், பலதலைமுறைகளாக உயர்ஜாதிக்காரர்கள் வந்திருக்கிறார்கள் என்று சொன்னபொழுதுதான்,

காந்தியாருக்கு 1947 காலகட்டத்தில் தெளிவான ஒரு சிந்தனை வந்தது; உண்மை புரிந்தது.

பிராமணர் சங்கம் என்ற பெயரில், பார்ப்பனர்கள் காந்தியாரை சந்தித்த நேரத்தில்,

கடுமையாகக் கோபித்துக்கொண்டு காந்தியார் சொன்னார், ‘‘வேதம் ஓதுவதுதானே வேதியர்க்கு அழகு; உங்களுக்கு எதற்கு டி-ஸ்கொயர்; நீங்கள் ஏன் மருத்துவக் கல்லூரிக்குப் போய் மருத்துவப் படிப்பு படிக்கவேண்டும்'' என்று கேட்டவுடன் கேட்ட ஒரு நூறு நாள்களுக்குள்ளாக காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற தகவலை, தந்தை பெரியார் தன்னுடைய டைரியில் பதிவு செய்து வைத்திருக்கிறார்.

வாழ்ந்த காந்தியார் வேறு;


மறைந்த காந்தியார் வேறு


‘‘மதச்சார்பின்மை என்பது தேவை என்று காந்தியார் சொன்னார்; வகுப்புரிமையை ஆதரித்தார். எனவே, நான் முதலில் எதிர்த்த காந்தியாரை, பின்னாளில் காந்தி நாடு, காந்தி தேசம் என்று இருக்கவேண்டும் என்று சொன்னேன் என்றால், அவருக்கு செல்வாக்கு இருந்தது என்பதால், நான் மாறிவிட்டேன் என்று நுனிப்புல் மேய்ந்தவர்கள் எழுதுகிறார்கள். அது உண்மையல்ல; வாழ்ந்த காந்தியார் வேறு; மறைந்த காந்தியார் வேறு.

வாழ்ந்த காந்தியார், வருணாசிரமத்தை வாழ வைக்க வேண்டும் என்று விரும்பினார்.

காந்தியாரை சுட்டுக் கொன்றது மதவெறி!


உணர்ந்த காந்தியார் பிறகு நம்முடைய சமூக வழிக்கு வந்தார். அந்த நேரத்தில், இனிமேல் இவரை விடக்கூடாது என்று கருதிய காரணத்தால்தான், அவரை சுட்டுக் கொன்றது மதவெறி. எனவே, காந்தியார் மதவெறிக்குப் பலியானார்'' என்று சொன்னார்.

அதேநேரத்தில், இன்னொன்றையும் சொல்லவேண் டும். இந்த இயக்கம் இப்படி எத்தனையோ சாதனைகள் - பெண்ணுரிமை, பெண்களுக்குச் சொத்துரிமை, பெண்களுக்குப் படிப்புரிமை, பெண்களுக்கு வாக் குரிமை, தெருவில் நடக்க உரிமை, படிக்க உரிமை, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒதுக் கப்பட்ட, பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாய்ப்புகளை யெல்லாம் ஆட்சி கொடுத்த ஒரு சூழ்நிலையில், மிகப்பெரிய அளவிற்கு  அந்த வாய்ப்பை அவர் நிர்ணயம் செய்தார்.

அதைக் காப்பாற்றவேண்டும் என்பதற்காக தன்னுடைய வாழ்நாள் முழுவதும் சமூகநீதிக்காகப் போராடினார்; பாலியல் நீதிக்காகப் போராடினார்.

ஆண்களை நம்பாதீர்கள் பெண்களே, நிச்சயமாக எலிகளுக்கு எங்கேயாவது பூனைகளால் விடுதலை கிடைக்குமா? என்று கேட்ட ஒரே தலைவர் அவர்.

பகுத்தறிவு என்பது வளர்ச்சி


கற்பு என்ற ஆயுதத்தை வைத்து, பெண்களை ஒரு வழிப் பாதையாக, அடிமைகளாக ஆக்கிக் கொண்டி ருக்கின்றபொழுது, நீங்கள் அதைப்பற்றி கவலைப் படாதீர்கள். எப்பொழுது அது ஆண்களுக்கும் பொது வாகிறதோ, அதுவரை அதனை தூக்கி எறிவதற்குத் தயாராக இருங்கள் என்று அவருடைய புரட்சிக் கருத்துகள் இருக்கிறதே,  அப்பொழுது அது அதிர்ச்சியை உண்டாக்கினாலும்கூட, பிற்காலத்தில் மிகப்பெரிய அளவிற்கு வந்தது.

அதுபோலவே, மூடநம்பிக்கைகள் விடுத்து - அறி வியல் நம்பிக்கையைப் பெறுங்கள் என்று சொன்னார். பகுத்தறிவு என்பது இருக்கிறதே, அது வளர்ச்சி.

திராவிடர் சமுதாயத்தைத் திருத்தி, மானமும், அறிவும் உள்ளவர்களாக நான் ஆக்குவேன் என்பதுதான் என்னுடைய லட்சியமே தவிர, வேறு எனக்கொன்றும் கிடையாது. வேறு யாரும் அந்தத் தொண்டை செய்ய முன்வரவில்லை. ஆகவே, நான் அதில் இறங்கியிருக்கிறேன் என்று சொன்னார்.

சுயமரியாதை இயக்கத்தைத்


தோற்றுவித்தது ஏன்?


தொடக்கம் திராவிட இயக்கம், சுயமரியாதை இயக்கம் என்று  தொடங்கினாலும், அவரே சொன்னார், இன்றைக்கு இங்கே இது தொடங்கப்படுகிறது. ஒரு மருந்து ஒரு நாட்டில் கண்டுபிடிக்கப்படுகிறது; ஒரு குறிப்பிட்ட நோய் அங்கே வருகிறபொழுது கண்டு பிடிக்கப்படுகிறது. உதாரணமாக அம்மை நோய்க்கான மருந்தை எட்வர்டு ஜென்னர் கண்டுபிடித்தார் என்று சொன்னால், அன்றைக்கு அந்த மருந்து அங்கே பயன்பட்டாலும், பிறகு உலகம் முழுவதும் அம்மை நோய் வருகிறபொழுது, அந்த மருந்து எப்படி பயன்படுகிறதோ, அதுபோல, பெரியார் சுயமரியாதை இயக்கத்தை, திராவிடர் இயக்கத்தை அங்கே இருக்கிற உரிமை பாதிப்புகள், மனித உரிமை பாதிப்புகளுக்கு எதிராகத் தொடங்கினாலும்கூட, சுயமரியாதை இயக்கத் தைத் தோற்றுவித்தது ஏன்? என்று சொல்லுகின்ற நேரத்தில், தந்தை பெரியார் மிகத் தெளிவாக, ஆழமாக சொல்லுகிறார்.

பெரியாருடைய கருத்துகள்


வெற்றி பெறுகின்றன


இது இன்றைக்கு இருந்தாலும், இந்த சுயமரியாதையை இயக்கத்தை தொடங்கிவிட்டேன். இனிமேல் இது வேகமாக உலகம் முழுவதும் சுற்றும். அதனுடைய விசையிலிருந்து பலன்கள் கிடைக்கும் என்றார்.

எனவேதான், அறிவியல் பெரியார் வெற்றி பெறுவார். பெரியாருடைய கருத்துகள் வெற்றி பெறுகின்றன.

அறிஞர் அண்ணா அவர்களின்


இரண்டு கருத்துகள்!


இன்னொரு சிறப்பு, வேறு எந்தத் தலைவருக்கும் இல்லாத ஒரு சிறப்பு - அறிஞர் அண்ணா அவர்கள் இரண்டு கருத்துகளை மிக அழகாக சொன்னார்கள். அமெரிக்காவில் அண்ணா அவர்கள் சிகிச்சை பெறும் நேரத்தில் சொன்னார்.

நீங்கள் சலிப்படைய தேவையில்லை தந்தை பெரியார் அவர்களே! நான் படித்த வரலாற்றில், உலக வரலாற்றில் எந்த ஒரு தலைவரும் தன்னுடைய வாழ்நாளிலேயே தன்னுடைய கொள்கை வெற்றி பெற்றதை தன் கண்களாலே பார்த்தவரில்லை. நீங்கள் சுயமரியாதைத் திருமண சட்டத்தைப் பார்த்தீர்கள்; உங்கள் நாட்டின் பெயர் மாற்றத்தைப் பார்த்தீர்கள். அதுமட்டுமல்ல, சமுதாயத்தில் ஜாதி, தொடக்கூடாத, நெருங்கக்கூடாத என்றிருந்த நிலையை மாற்றி, சமு தாயத்தில் பக்கத்தில் அமர வைக்கக்கூடிய நிலையைப் பார்த்தீர்கள்; உங்களுடைய தொண்டு பரவாத இடமில்லை. உங்களுடைய வெற்றியினுடைய களிப்பு ஏராளம் என்று சொல்லிவிட்டு,

செப்டம்பர் 17 ஆம் தேதி, திருச்சியில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் பொழுது அண்ணா அவர்கள் சொன்னார்,

‘‘பெரியாருடைய வேலை என்பது வியக்கத்தக்கது மட்டுமல்ல, நம்ப முடியாத ஒன்று.

ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு - Put to the Century in a capsules  என்று சொல்வார்கள். அதாவது, பல நூற்றாண்டுகளை ஒரு சிறு குளிகைக்குள் அடைப்பதைப்போல ஒன்று - அவ்வளவு பெரிய சாதனை'' என்று சொன்னார்.

பெரியாரின் சிக்கனம்,


தமிழ்நாட்டின் பொக்கிஷம்!


எல்லாவற்றையும்விட, சிக்கனமானவர் என்பதைப் புரிந்துகொள்ளாமல், கஞ்சன் என்று அவர்களை சொன்னார்கள்.  கையெழுத்து போட வேண்டுமானால்  நாலணா காசு கொடுக்கவேண்டும் என்று வாங்கினார்கள்.

ஆனால், ஒவ்வொருவரும் சிக்கனத்தைக் கடைப் பிடிக்கவேண்டும் என்று சொன்ன பெரியார், பெரியாரின் சிக்கனம், தமிழ்நாட்டின் பொக்கிஷம் என்று ஒரு நண்பர் சொன்னார். அதேபோல, அது பொக்கிஷமாகி, அந்தக் கருவூலம், தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் இருக்கிற அத்தனை பேருக்கும் பயன்பட்டது.

தந்தை பெரியார் கடவுள், புராணம்,


இதிகாசத்தை எதிர்த்தது ஏன்?


கடவுளை மற என்று சொன்ன தந்தை பெரியார்,

கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்று சொன்ன தந்தை பெரியார்,

அதேநேரத்தில், மனிதனை நினை என்று சொன்னார். எதிர்மறையாக மட்டும் அவர் சொல்லி நிறுத்திவிடவில்லை. ஏனென்றால், அந்தக் கடவுளைக் காட்டி, ஜாதியை நிலைநிறுத்தினார்கள். நான்தான் ஜாதியை உருவாக்கினேன் என்று கடவுள்கள் கூறியதாக, புராணத்தில் எழுதி வைத்தார்கள். எனவே, தந்தை பெரியார் அவர்கள் புராணத்தை எதிர்த்தார்கள். இதிகாசத்தில் உயர்ந்த ஜாதிக்காரன்தான் கடவுளைப் பார்க்க முடியும்; கீழ்ஜாதிக்காரன் தலைகீழாக நின்றால் கூட, அவன் கடவுளைப் பார்க்க முடியாது என்று சொன்னால், அவன் கழுத்தை வெட்டு என்பதுதான் ராமராஜ்ஜியம் என்று சொன்ன நேரத்தில், அந்த ராமாயணத்தை அவர்கள் எதிர்க்கத் துணிந்தார்கள்.

தன்னுடைய மனைவியை சந்தேகப்பட்டு கடவுள் அவதாரமே நெருப்பில் குதி என்று சொன்னான் என்று சொன்னால், அப்படிப்பட்ட பெண் உரிமைக்கு எதிரான ஒன்று தேவையா? என்று கேட்டார் தந்தை பெரியார்.

எனவேதான் நண்பர்களே, நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும். பெரியார் என்ற அந்த மாமனிதர், எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, கடைசியாக ஒன்றை சொன்னார். என்னை மகான் ஆக்கி விடாதீர்கள். நான் ஒரு மனிதன். மனிதத் தன்மைக்குமேல் எனக்கு எதுவும் கிடையாது என்றார்.

அறிவுப் பற்று, வளர்ச்சிப் பற்றைத் தவிர


வேறு எந்தப் பற்றும் எனக்குக் கிடையாது


எனவேதான், ‘‘என்னுடைய அறிவுக்கு எட்டியதை நான் சொல்கிறேன். நம்பினால் நம்புங்கள். ஏற்க விருப்பமில் லையானால், விட்டு விடுங்கள். என்னைப் பொருத்த வரையில், எனக்கு எந்த அபிமானமும் கிடையாது. தேசாபிமானம், மற்ற அபிமானங்கள் கிடையாது. ஆனால், மானாபிமானம் உண்டு.

அதுதான் மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு என்று சொன்ன நான், உங்களுக்கு ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். எனக்கு அறிவுப் பற்று, வளர்ச்சிப் பற்றைத் தவிர வேறு எந்தப் பற்றும் கிடையாது'' என்று சொன்னார்.

எனவேதான், நாங்கள் எல்லாம் பெருமைப் படுகிறோம்; நாமெல்லாம் பெருமைப்படவேண்டும்.

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு

என்று சொல்லக்கூடிய அந்தத் தத்துவத்திலே பெரியார் வழி நடப்போம்! பெரியாரு டைய கொள்கைகள் என்பது இருக்கிறதே, அது மிகப்பெரிய வெற்றியை தரும். அது ஒருபோதும் தோல்வி அடையாது. அவர் ஒரு போர்க் கருவியாக என்றைக்கும் திகழ்ந்து கொண்டிருக்கக்கூடியவர். அந்தப் போர்க் கருவி விசித்திரமான போர்க் கருவியாகும். பூமராங் போன்று சில நேரங்களில் இருக்கும்; சில நேரங்களில் ஊசியைக் குத்தி, அதன்மூலம் நோயைப் போக்கக்கூடிய அளவிற்கு அது மாறும். இது ஒரு விசித்திரமான போர்க்கருவி.

பெரியாரின் போர் முறை!


இன்னுங்கேட்டால், அண்ணா அவர்கள் அழகாகச் சொன்னதைப்போல,

மற்ற போர்க் கருவிகள் எல்லாம், போர்ப் படைகள் எல்லாம் எதிரே இருக்கின்ற எதிரிகளை மட்டும்தான் தாக்கும். மூல பலத்தைத் தெரிந்து, அதனை முறியடிப்பதுதான் பெரியாரின் போர் முறை என்று மிகத் தெளிவாக அண்ணா அவர்கள் சொன்னார்.

அந்த மூல பலம்தான், இன்றைக்கு எந்த ரூபத்தில் வந்தாலும், மதவெறியாக வந்தாலும், ஜாதி வெறியாக வந்தாலும், மாநில உரிமைகள் பறிப்பாக இருந்தாலும், மொழித் திணிப்பாக இருந்தாலும், வடமொழி ஆதிக்க மாக இருந்தாலும், கலாச்சாரத்தினுடைய படையெ டுப்பாக இருந்தாலும், அத்தனையையும் எதிர்க்கக்கூடிய போர்க் கருவியாக பெரியார் என்ற மருந்து இருக்கிறது.

நாடாளுமன்றத்தில்


‘‘பெரியார் வாழ்க!'' என்ற குரல்!


இதற்கு ஒரே ஒரு உதாரணம், அண்மையில் இந்திய நாடாளுமன்றத்தில் மற்றவர்கள் ஜெய்ராம் என்று சொன்னபொழுது, மற்றவர்களுக்கு எல்லாம் அஞ்சாமல், ‘‘பெரியார் வாழ்க!'' என்ற குரலை திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களும், தமிழ்நாட்டில் வெற்றி பெற்ற அத்தனை உறுப்பினர்களும் சொன்னபொழுது, அது தான் அவர்களுக்குக் கலக்கத்தைக் கொடுத்தது. இன் றைக்கும் அந்தக் கலக்கத்தைக் கொடுத்ததின் காரண மாகத்தான், இந்திதான் இந்தியாவின் அடையாளம் என்று சொன்னவர்கள், இல்லை நான் வேறு கருத் தைத்தான் சொன்னேன் என்று பின்வாங்கவேண்டிய அளவிற்கு வந்திருக்கிறது.

எனவேதான், இது முனை மழுங்காத போர்க்கருவி

சமரசம் இல்லாத போர்க் கருவி

எதிரிகளின் மூலபலத்தைத் தெரிந்துகொண்டிருக்கிற போர்க் கருவி.

பெரியாரை வாசியுங்கள்!


பெரியாரை சுவாசியுங்கள்!!


பெரியார் என்ற போர்க் கருவி இருக்கின்ற வரையில், நம்முடைய பயணங்கள் தொடரும்; நம்முடைய எதிரிகளிடமிருந்து எதிர்நீச்சல் அடித்து நாம் வெற்றி பெறுவோம்.

எனவே, பெரியாரைப் புரிந்துகொள்ளுங்கள்,

பெரியாரை வாசியுங்கள் என்று சொல்வதைவிட, பெரியாரை சுவாசியுங்கள்.

பெரியாரை, வாழ்க்கை நெறியாகக் கொள்ளுங்கள்.

சுயமரியாதை வாழ்வு சுகவாழ்வு!

நன்றி, வணக்கம்!

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

இந்நிகழ்வில் பெரியார் - அம்பேத்கர் படிப்பு வட்டத் தைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- விடுதலை நாளேடு, 3. 10. 19

புதன், 2 அக்டோபர், 2019

குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்திய வழக்கு ₹4 லட்சம் அபராதம்

பட்டறை உரிமையாளர்களுக்கு ₹4 லட்சம் அபராதம் விதிப்பு

செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவு

சென்னை , அக் 2 : குழந்தை தொழிலாளர்களை சட்டவிரோதமாக வைத்து வேலை வாங்கிய நகை பட்டறை உரிமையாளர்களுக்கு 4 லட்சம் அப் ராதம் விதித்து சென்னை செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . சென்னை ஏழுகிணறு பகுதியில் இயங்கி வரும் தங்க நகை செய்யும் பட்டறைகளில் வடமாநில சிறு வர்கள் பலர் , சட்ட விரோதமாக வேலை செய்து வருவதாக புகார் வந்தது . அதன்பேரில் , சென்னை மாவட்ட சட்ட பணிகள் ஆணை குழு செயலாளர் ஜெயந்தி , போலீசார் உதவியுடன் , அங்குள்ள பட்டறைகளில் சோதனை மோற்கொண்டார் . அப்போது 60 பேர் குழந்தை தொழிலாளர்களாக வேலை செய்து வருவது உறுதி செய்யப்பட்டது . இதனையடுத்து , அனைவரும் மீட்கப்பட்டு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர் . பின்னர் , இது தொடர்பாக நகை பட்டறை உரிமையாளர்கள் கணேஷ் கர் , சஹிப் ஷேக் , கவுதம் மைதி மற்றும் சமீன் ஜனா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர் . பின்னர் நீதிபதி ஜெயந்தி , மீட்கப்பட்ட வடமாநில குழந்தை தொழிலாளர்களை ரயில் மூலம் சொந்த மாநிலத்துக்கு அமைப்பி வைத்தார் . இந்த நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த 4 பேரும் , ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய் தனர் . இந்த மனு மாவட்ட முதன்மை நீதிபதி செல்வகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது . அப்போது மனுதாரர் தரப்பில் கூறுகையில் , நகை பட்டறைகளில் வேலை செய்வது குழந்தை தொழில் கொடுமையின் கீழ் வராது . இது திற மைக்கான தொழில் . இதில் வேலை செய்தால் பயிற்சி பெற்று , சொந்தமாக தொழில் செய்ய லாம் , என்று தெரிவித்தனர் . அப்போது , சட்டபணிகள் ஆணை குழு , மீட்கப் பட்ட சிறுவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி உற வினர்களிடம் ஒப்படைத்ததாக தெரிவிக்கப்பட்டது . இதனையடுத்து நீதிபதி 4 பேருக்கும் ₹10 ஆயிரம் பினைத்தொகையுடன் நிபந்தனை ஜாமீன் வழங்கினர் . மேலும் தலா ஒரு லட்சம் என 4 பேரும் ₹4 லட்சம் செலுத்த உத்தரவிட்டார் . அதன்படி ₹4 லட்சத்தை சென்னை மாவட்ட சட்டபணிகள் ஆணைய குழுவில் நகை பட்டறை உரிமையாளர்கள் செலுத்தினர் .
- தினகரன், 2 .10 .19

வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகளில் புகார் செய்தாலே கைது செய்யலாம் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி, அக்.2 எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கு களில் புகார் செய்தாலே, புகாருக்கு ஆளானவரை எந்தவித விசாரணையும் இன்றி கைது செய்யலாம் என்ற நிலை இருந்து வந்தது. ஆனால் இந்த சட்ட பிரிவு தவறாக பயன்படுத்தப்படுவதாக கூறி, அதற்கு எதிராக உச்சநீதி மன்றத் தில் ஒரு வழக்கு தொடரப் பட்டது.
அந்த வழக்கை நீதிபதிகள் ஆதர்ஷ் கோயல், யு.யு. லலித் ஆகியோர் விசாரித்தனர். முடிவில், வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகளில் விசாரணை நடத்தி, உரிய அதிகாரியின் அனு மதியைப் பெற்றுத்தான் கைது நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் தீர்ப்பு அளித்தனர்.
ஆனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 20-ஆம் தேதி வழங் கப்பட்ட இந்த தீர்ப்பானது, வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சி என கூறி, அதற்கு எதிராக பரவலாக போராட்டங்கள் நடைபெற்றன.
இதையடுத்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தை கடுமையாக்கி மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்தது. இதன்படி, இந்த வழக்குகளில் புகாருக்கு ஆளான வர்கள், முன் பிணை பெற முடியாத நிலை உருவா னது. அத்துடன், 2 நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய் யுமாறு மத்திய அரசு உச்சநீதிமன் றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மறு ஆய்வு மனுவை நீதிபதிகள் அருண் மிஷ்ரா, எம்.ஆர். ஷா, பி.ஆர். கவாய் ஆகியோர் அமர்வு விசாரித்தது. இந்த அமர்வின் முன், மறு ஆய்வு மனு கடந்த 18-ஆம் தேதி விசா ரணைக்கு வந்தது. அப்போது 2 நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பு குறித்து 3 நீதிபதிகள் அமர்வு கடு மையாக விமர்சித்தது.
இது தொடர்பாக நீதிபதிகள் குறிப்பிடுகையில், “இந்த தீர்ப்பு அரசியல் சாசனத்தின் நோக்கத் துக்கு எதிரானது. சட்டம் தவறாக பயன் படுத்தப்படுகிறது என்பதா லேயே அரசியல் சாசனத்துக்கு எதிராக ஒரு உத்தரவை பிறப்பிக்க முடியுமா?” என கேள்வி எழுப்பினர்.
அத்துடன் மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோ பாலிடம் நீதி பதிகள், “நாடு விடு தலை அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும்கூட, எஸ்.சி., எஸ்.டி., மக்களை அரசால் பாதுகாக்க முடியவில்லை. அவர்கள் பாகுபாடு மற்றும் தீண்டாமைக்கு ஆளாக்கப் படுகிறார்கள்” என வேதனை வெளிப்படுத்தினர்.
கே.கே.வேணுகோபால்,2018_இ-ல் வழங்கிய தீர்ப்பு அரசியல் சாசனத்துக்கு உகந்ததாக இல்லை என்று கூறி வாதிட்டார். தொடர்ந்து அனைத்து தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.
இந்த நிலையில், 2018-இம் ஆண்டு மார்ச் மாதம் 20-ஆம் தேதியன்று 2 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து, 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு நேற்று அதிரடியாக தீர்ப்பு அளித்தது.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகளில் இனி புகார் செய்தாலே, புகாருக்கு ஆளான வரை விசாரணையின்றி கைது செய்யலாம் என்ற நிலையை கொண்டு வந்துள்ளது.

-விடுதலை நாளேடு, 2.10.19

"இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழைப் பெருமைப்படுத்துங்கள்!" பிரதமர் மோடிக்கு தளபதி மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை,அக்.2, இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழைப் பெருமைப்படுத்துங்கள் என்று பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வேண்டு கோள் விடுத்துள்ளார்.
அவர் நேற்று (1.10.2019) விடுத் துள்ள அறிக்கையில் கூறியுள்ள தாவது:
சென்னை அய்.அய்.டி.யின் 56ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக வந்த இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள், விமான நிலையத்தில் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பின் போது, “உலகின் தொன்மையான மொழி தமிழ் என்று நான் பேசியது, அமெரிக்காவில் இன்னமும் எதி ரொலித்துக் கொண்டிருக்கிறது” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித் திருக்கிறார்.
அய்.நா. அவையில் உரையாற்றும் போது, செம்மொழித் தமிழின் உன்னத வரிகளான, கணியன் பூங்குன்றனார் எழுதிய ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பதையும் சுட்டிக்காட்டினார்.
பிரதமரின் இந்தச் சொற்கள் இங்குள்ள நம் எல்லோருக்கும் மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கெல்லாம் மகிழ்ச்சியும் பெருமிதமும் தரக்கூடியவை.
தமிழின் தொன்மை குறித்த பிரதமரின் கருத்துகளை உளமார வரவேற்றுப் பாராட்டுகிறோம்.
தொன்மையான மொழி
மிகவும் மூத்த, தொன்மையான மொழி தமிழ்தான் என்பதைப் பன்னெடுங்காலமாக மொழியியல் வல்லுநர்கள், தொல்லியல் ஆய்வா ளர்கள், வரலாற்றாசிரியர்கள், மேலை நாட்டறிஞர்கள் பலரும் அசைக்க முடியாத ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டி வந்த நிலையில், அந்தத் தமிழ் கூறும் மண்ணின் மீது, மக்களின் பேச்சு வழக்கிலேயே இல்லாமல் வழக்கொழிந்த  சமஸ் கிருதத்தையும், ஆதிக்க மனப்பான் மையுடன் இந்தியையும் திணிப்பதில், கடந்த 2014ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தது முதல் தீவிரமாகச் செயல் பட்டது திரு.நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான பா.ஜ.க. அரசு.
மத்திய  அரசின் திட்டங்கள் அனைத்திற்கும் இந்தி - சமஸ்கிருதப் பெயர்களே சூட்டப்பட்டதுடன், அவை குறித்து தமிழில் விளம்பரம் வெளியிடும்போதுகூட, இந்தி - சமஸ்கிருத உச்சரிப்பிலேயே, தமிழ் எழுத்துகளைப் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது.
என்ன திட்டம், அதன் பொருள் என்ன என்பதைக்கூட தமிழ் உள் ளிட்ட பிற மொழி பேசும் மக்கள் புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு; மத்திய பா.ஜ.க. அரசின் செயல் பாடுகள் தொடர்ந்து இருந்து வரு கின்றன.
'குரு உத்சவ்' என மாற்றுவது
ஆசிரியர் தினத்தை "குரு உத்சவ்" என்று மாற்றுவது, சமஸ்கிருத வாரத்தைகளை எல்லா இடங்களி லும் கட்டாயப்படுத்த முனைவது, ரயில்வே - அஞ்சலகம் - வங்கி உள் ளிட்ட துறைகளில் இந்தியை மட் டும் முன்னிலைப்படுத்தி, மற்ற மொழி பேசுவோரின் வேலை வாய்ப்பைப் பறிப்பது, இந்தியாவின் பொதுமொழியாக இந்திதான் இருக்க வேண்டும் என்ற குரலை அடிக்கடி ஒலிக்கச் செய்வது - இப்படி கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பா.ஜ.க. அரசு செயல்பட்டு வந்த நிலையில்; அதில் ஏற்பட்டுள்ள மகிழ்ச்சி தரத் தக்க  பெரிய மாற்றமாக, "தமிழ்தான் உலகின் பழைமையான மொழி" என்ற வரலாற்று உண் மையை இந்தியப் பிரதமர் அவர்கள் ஏற்றுப் போற்றியிருப்பது அமைந் திருக்கிறது.
அதுவும், கீழடி அகழாய்வுகளுக்கு மத்திய அரசின் நிதியை உரிய முறையில் ஒதுக்கீடு செய்யாமல், மத்திய தொல்லியல் துறையின் ஆய்வுகளை பா.ஜ.க. அரசு நிறுத்திவிட்ட நிலையில்; தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறை மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவுகள் மூலம், சங்ககாலத் தமிழர்கள், அப்போதே உருவாக்கிய நகர நாகரிகத்தின் சிறப்புகள் வெளியாகியுள்ள சூழ லில், தமிழின் பெருமை குறித்து இந்தியப் பிரதமர் பேசியிருப்பது, உலகத்தார் கவனத்தை ஈர்த்திருக் கிறது.
அங்கீகாரத்தை
அளிக்க வேண்டும்
தொன்மைமிக்கதும், பழம்பெரும் இலக்கிய - _ இலக்கண வளங்கள் செறிந்ததும், மூத்த நாகரிகமும் பண்பாடும் உடையதும், உலகம் தழுவிய அளவில் 8 கோடிக்கும் அதிகமான மக்களால் பேசப்படுவது மான தமிழ் மொழிக்குரிய அங்கீகாரத்தை அளிக்க வேண்டிய பொறுப்பு, திரு.நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு நிச்சய மாக இருக்கிறது.
எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் இந்தியா வின் ஆட்சிமொழிகளாக ஆக்கி அங்கீகாரம் வழங்கிட  வேண்டும் என்பதை தி.மு.கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
அந்த முயற்சியின் முதல் கட்ட மாக, அந்த மொழிகளிலெல்லாம் மூத்த மொழியான தமிழை, இந்தி யாவின் ஆட்சிமொழியாக ஆக்கிட வேண்டும் என்றும், திராவிட முன் னேற்றக் கழகம் தொடர்ந்து முன்வைத்திடும் கோரிக்கையின்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கிட வேண்டும் என்றும் பிரதமர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
பல நாடுகளில் தமிழ் ஆட்சி மொழி
தமிழ், அது பிறந்த இந்திய நாட்டைத் தவிர பிற நாடுகள் பலவற்றில், ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஏற்கெனவே அங்கீகாரம் பெற்றுள்ள உண்மையை, பிரதமர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.
தமிழர்களின் விருந்தோம்பல் சிறப்பு பற்றி சென்னை அய்.அய்.டி பட்டமளிப்பு விழாவில் பேசிய பிரதமர் அவர்கள், “இட்லி, தோசை,  வடை, சாம்பார் ஆகியவை சுவை யாக இருக்கும்” என்று குறிப்பிட் டுள்ளார்.
தமிழர்கள், விருந்தோம்பலுக்கு மட்டுமல்ல, நன்றியுணர்வுக்கும் நீண்ட காலமாகவே பெயர் பெற்ற வர்கள்.
எனவே பிரதமர் மோடி அவர்கள், இந்தியாவின் ஆட்சி மொழித் தகுதியைத் தமிழுக்குத் தருவதற்கு உளப்பூர்வமாக முயற்சி செய்து, உண்மையான முறையில் சட்டநடவடிக்கைகளை மேற் கொண்டு அதனை நிறைவேற்றினால், தமிழர்கள் அவருக்கு என்றென்றம் நன்றி பாராட்டுவார்கள்.
மத்தியில் தமிழ் ஆட்சி மொழியாக
மேலும், தமிழ் மொழியை மத்தியில் ஆட்சிமொழி ஆக்குவது, பேரறிஞர் அண்ணா முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் நினைவைப் போற்றும் அரிய செயலாகவும் அமையும்.
"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு"
- என்ற திருக்குறளை அறிந்துள்ள தமிழர்கள், பிரதமர் மோடி அவர்கள் தமிழ் மொழி  மீது காட்டும் இந்த ஆக்கபூர்வமான அக்கறையை, விரைவில் நடைமுறைச் செயலாக்கத் திற்குக் கொண்டு வருவார் என மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்பார்க் கிறார்கள்.
இவ்வாறு அறிக்கையில் தளபதி மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
- விடுதலை நாளேடு, 2.10.19

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணியின் 'வாழ்வியல் சிந்தனைகள்'- இரசித்த வரிகள்

'வாழ்வியல் சிந்தனைகள்' பாகம்-3இல் இருந்து இரசித்த வரிகள்
சுகன்யாயோகன்
Team Pratilipi எனும் பெயரில் ‘இன்றைய கதைகள் உங்களுக்காக’ எனும் தலைப்பில் கூகுள் குழுமம் இயங்கி வருகிறது. அதில் வாசகர்கள் பலரும் தங்களின் வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுகன்யா யோகன் எனும் வாசகர் தமிழர்தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதியுள்ள வாழ்வியல் சிந்தனைகள் 3ஆம் பாகத்தில் தான் படித்ததில் ரசித்த வரிகள் என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
அதன் விவரம் வருமாறு:
மனித வாழ்க்கையில் உடல் ஆனாலும், உடலை இயக்கும் மூளையானாலும் அவைகளும் இயந் திரங்கள் தானே! பழுது, தேய்மானம் அவற்றிற்கும் உண்டு என்பதனை ஏனோ நம்மில் பலர் அடிக்கடி மறந்து விடுகின்றோம்.
நீங்கள் சிரிக்கும் போது மட்டுமே உலகம் உங்களுடன் சிரிக்கிறது. நீங்கள் அழும் போது அது உங்களுடன் அழுவதில்லை.
அனுபவம் என்பது நல்ல பள்ளி தான்; ஆனால், அதற்கான கட்டணம் மிக அதிகம்.
புத்திசாலிகள் தம்முடைய தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்கிறார்கள்; ஆனால், அதி புத்திசாலிகள் பிறருடைய தவறுகளிலிருந்து கற்றுக் கொள்கிறார்கள்.
துணிச்சல் பெண்களுக்கு வருவதுதான் உண்மை யான விடியல்.
வாழ்க்கை என்பது கவர்ச்சியோ, உணர்ச்சியின் வடிகாலோ கிடையாது.
ஈடு செய்ய முடியாத இழப்புக்களும் உண்டு. இழப்புக்களுக்கு ஈடு செய்யவும் முடியும்.
அடிக்கடி உணர்ச்சி வசப்படாதீர்கள் உணர்ச் சிகளை நீங்கள் ஆளுங்கள்; உணர்ச்சிகள் உங்களை ஆள விட்டு விடாதீர்கள்.
நாம் ஒவ்வொருவரும் உலகத்தை மாற்றிவிட வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் ஒருவரும் அவரை மாற்றிக்கொள்ளத் தயாரில்லை.
நீங்கள் ஒரு சுதந்திரமற்ற அடிமையாக விரும் பினால், பிறர் மீது மனப்புழுக்கத்தை தேக்கி வையுங்கள்.
புத்தரை ஒருவன் இழிமொழிகளால் வசவுகளால் அர்ச்சித்த போது அவர் சொன்னாராம், "நான் பிச்சை வாங்கும் போது, போடும் உணவை ஏற்காவிட்டால் என்னவாகும்? அது பிச்சையிட முன்வந்தவருக்கே திரும்பும் அல்லவா! அதுபோல இழிமொழிகளை நான் ஏற்காதபோது எனக்கென்ன அதுபற்றிக் கவலை."
10 மணிக்குத்தான் என்னைச் சந்தித்தார். 12 மணிக்கெல்லாம் என்மீது உயிரையே விடுகிறாரே அவர் என்றால் அவன் 1 மணிக்கு உன் உயிரை வாங்கப் போகிறான் என்று பொருள்
ஏமாறுவது பெரும்பாலான 'படித்த பாமரர்கள்' உள்பட பலருக்கும் வழமை! ஏமாற்றுவது இந்த மூட நம்பிக்கை வியாபாரிகளின் முழு உரிமை.
மனைகளுக்கு சுவர் தேவை. மனங்களுக்கு சுவர் தேவையற்றது.
உலகம் முழுவதையும் அசைக்கும் ஆற்றல் உங்கள் உள் மனதில் உள்ளது.
வாழ்க்கையில் எல்லாம் சரியாக இருந்ததால்தான் வெற்றி பெற்றோம் என்று எண்ணுவது சரியல்ல.
உழைப்பு உழைக்கும் மக்களின் உடமை அல்லவா?
எதையும் மறைக்க மறைக்க அதனைத் தெரிந்து கொள்ளக் குறுக்கு வழி தேடல்கள் அதிகரிக்கும்.
மூன்றாமவர் கூறியதை முற்றாக உண்மை எனக் கொண்டு வெறுப்பையும், வேதனையையும் வளர்த்துக் கொள்ளாதீர்.
ஒருவர் ஒன்றைச் சொல்லி அதற்கு பொறுப்பு ஏற்கத் தயங்கினால், அவர் கோழை என்றே பொருள். அதற்கு மேல் அவரை நிர்பந்திக்க வேண்டியதில்லை.
வெறுங்கை என்பது மூடத்தனம்! விரல்கள் பத்து என்பது மூலதனம்.
வளமான பூங்காவை கூட அதில் அமர்ந்து கொண்டே பாலைவனத்துப் பயணம் போல் நினைப் பவர் எவராலும் எதுவும் சாதிக்க முடியாது.
சமுதாயத்தில் வேண்டிய மாற்றங்கள் சீராக நடக்க வேண்டும். அதற்கு வழி வேண்டும். அதை யாராவது தடுத்தால், கைதி வந்த பிறகு உணவை மூடினால் என்ன கதியோ அந்தக் கதிதான் நேரும்.
எவர்க்கும் உதவு முன், அவர்கள் ஏன் நம்மை நாடி வந்தார்கள் என்பதை கொஞ்சம் நின்று நிதானித்து தெளிவு பெற வேண்டும்.
மற்றவர்கள் பிரச்சினைகளுக்கு உடனே தீர்வு சொல்லாதீர்கள்; உங்கள் பிரச்சினைகளுக்கே உங் களால் எளிதில் விடை காண முடியாத நிலையில் ஏன் இந்த அதிகபிரசங்கத்தனம்?
நிறைவு, செம்மை என்பன பொருளற்ற ஆசையாகும், முழுமைக்கு ஏது எல்லை?
எந்தச் செயலை உங்களுக்கு பிறர் செய்யக் கூடாது என்று நீங்கள் கருதுகிறீர்களோ, அந்தச் செயலை நீங்கள் மற்றவர்களுக்குச் செய்யாதீர்.
திடீர்கள் வாழ்வில் நீண்ட காலம் நிலைக்காதவை.
நேற்று பற்றி எண்ணும் சுவையும், நாளை பற்றிய பயமும் இன்றைய சுகத்தைச் சுமையாக்கும்.
பிறரது துன்பத்தில் இன்பம் காணும் விசித்திர மனிதர்கள்! பொறாமை புழுக்களாகவே நிரந்தரமாக வாழ்தல்; தனக்குக் கிட்டும் வாய்ப்புக்களைக் கூட மற்றவர் அழிவுக்கே பயன்படுத்தும் இழிந்த மனி தர்கள். இந்த பிறவிகளைப் புரிந்து அடையாளம் கண்டு வாழ்ந்தால் பிறகு வருந்தி அழ வேண்டிய தில்லை எவரும்.

- விடுதலை நாளேடு, 2.10.19

செவ்வாய், 1 அக்டோபர், 2019

மறைமலை நகர் அடுத்த பேரமனூரில் கி.நீலகண்டன் - நீ.பவானி அவர்களின் இல்லத்திறப்பு


மறைமலை நகர் அடுத்த பேரமனூரில் 4.8.2019 மாலை 6.30 மணி அளவில் கழகத்தோழர் கி.நீலகண்டன் - நீ.பவானி அவர்களின் இல்லத்தை கழக பேச்சாளர் காஞ்சி கதிரவன் திறந்து வைத்தார்.
- விடுதலை நாளேடு, 1. 10. 19