சனி, 28 செப்டம்பர், 2019

அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் பாடத்திட்டத்தில் பகவத் கீதை திணிப்பு

கண்டனம்


சென்னை, செப்.28 - அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் பாடத்திட்டத்தில் பகவத் கீதைத் திணிப்பைத் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் கண்டனம் செய்துள்ளது.
அதன் தலைவர் முனைவர் அ.ராமசாமி, செய லாளர் முனைவர் ந.க. மங்களமுருகேசன் ஆகியோர் நேற்று (27.9.2019) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
அனைத்திந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் (ஏ.அய்.சி.டி.யு.) 2018 ஆம் ஆண்டு நாடு முழுமையிலும்  உள்ள பொறியியல்  பல்கலைக்கழகங்களுக்குச் சுற்ற றிக்கை ஒன்றினை அனுப்பியது.
அதில், பொறியியல் பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும் எனவும் பொறியியல் படிப்புகளுடன் ஹூமானிட்டீஸ் (Humanities), சமூக அறிவியல் (Social science), நிருவாகம் (Management) ஆகியவற்றில் 32 பாடங்களைப் பட்டியலிட்டு, அதன் எட்டு செமஸ் டர்களில் 4,5 பாடங்களை கட்டாயம் நடத்த வேண்டும் எனவும், குறிப்பாகத் தத்துவ இயல் படிப்பில் பகவத் கீதை, வேதம், உபநிடதம் முதலிய பாடங்களை  நடத்த வேண்டும் என்று கூறியது.

கல்வி ஓடையில் ஆர்.எஸ்.எஸ். காவி முதலைகளின் நுழைவு அடையாளம் இது. இதனடிப்படையில் ஆர்.எஸ்.எஸ். பின்னணியில் வந்தவரும் ஆளுநராலே நியமனம் பெற்ற துணைவேந்தர் சூரப்பா இக் கல்வியாண்டில் அண்ணா பல்கலைக்கழக சி.ஈ.ஜி., ஏ,சி.டி., எஸ்.ஏ.பி.,  குரோம்பேட்டையில் உள்ள எம்.அய்.டி. ஆகிய நான்கு கல்லூரிகளின் பி.டெக்., எம்.டெக்., படிப்புகளில் பகவத் கீதை முழுதுமாகப் பாடத் திட்டமாகச் சேர்த்துள்ளார். காலஞ்சென்ற சுஸ்மா சுவராஜ் பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்கவேண்டும்  என்று முயன்றபோது தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் பெரும் எதிர்ப்பு அலை பரவியதால் வாலை சுருட்டிக் கொண்டு விட்டனர்.
பகவத் கீதை ஒரு கொலை நூல். பகவத் கீதையினை இந்துக்களில் ஒரு பிரிவினரான சைவர்கள் ஏற் பதில்லை. பகவத் கீதை வருண பேதம் உருவாக்கும். கிருஷ்ணனே ’சதுர் வர்ணம் மயா சிருஷ்டம்’ அதாவது நான்கு வருணப் பாகுபாட்டை உருவாக்கியதாக கூறும் நூல். மேலும் பெண்கள், வைசியர்கள், ஏவலர்கள் எனும் சூத்திரர்கள் அதாவது பார்ப்பனர் அல்லாதவர் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள் என இழிவு படுத்தும் நூல். சூரப்பாவின் இத்தகு மோசமான ஒரு சமயச் சார்புடைய நூலைப் பொறியியல் பாடத்தில் சேர்த்திருப்பது கல்வியாளர்களுக்கும், மதச்சார்பின்மையில் நம்பிக்கை உள்ளவர்களுக்கும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்துகிறது.
பொறியியல் பாடம் உருவாக்கம் (கிரியேசன்)பற்றியது. கீதையோ அழிவுக்கு வழிவகுப்பது (டெஸ்ட்ரக்சன்). தமிழக அமைச்சர் மா.பாண்டி யராஜன், ‘‘கீதை பண்பாட்டு நூல்'' என்கிறார். யாருடைய பண்பாட்டு நூல்; அது ஆரியருடைய பண்பாட்டு நூல். அண்ணா பெயரில் இயங்கும் ஒரு கட்சியின் அமைச்சர், அண்ணாவின் கருத்துக்கு எதிராகக் கூறுவது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.
சில பார்ப்பனச் சிசுக்கள் பகவத் கீதையில் நிருவாக இயல் இருப்பதாகவும், ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் பாடமாக இருப்பதாகவும் ஊடகங்களில் கதை பேசுகின்றன. நிருவாக இயலுக்கு ஆயிரம் நூல்கள் இருக்கின்றன. திருக்குறள் இருக்கிறது. எனவே, மத நூல் கல்விக் கூடத்தில் நுழையக் கூடாது.
குறிப்பிட்ட மதத்தின் அடையாளமாகியுள்ள பகவத் கீதையைப் பாடமாகச் சேர்ப்பது கடுமையான கண்டனத்திற்குரியது. இது போன்ற நடவடிக்கைகள் இந்நாட்டில் ”இந்துத்வா'' கொள்கைகளை மாண வரிடத்தில் திணிப்பது ஆகும்.  அண்ணா பல் கலைக் கழக அறிக்கையின் படி பொறியியல் இரண் டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்குத் தத்துவ இயல் பாடப்பிரிவும் கட்டாயமக்கப்பட்டுள்ளது. தத்துவ இயல் பாடப்பிரிவின் கீழ் பகவத் கீதையும்  இடம் பெற்றுள்ளது. ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க மய்யத்தில் ஆட்சியைக் கைப்பற்றிய 2014 ஆண்டு முதல் கல்வி பண்பாடு ஆகிய துறைகளில் சமஸ்கிருதத்தையும், பார்பனீயப் பண்பாட்டையும், உயர் கல்வி நிறுவனங் களைக் கைப்பற்றவும் தீவிரமான முயற்சிகள் செய்து வருவதை திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் கண்டித்தே வந்துள்ளது. பா.ஜ.க.  அரசின் கீதைத் திணிப்பு இன்றைய முயற்சி மட்டும் இல்லை.
2015 ஆம் ஆண்டு அப்போதைய அமைச்சர் ஸ்மிருதி இராணி ஆணையின் பேரில் மய்ய மனித வள மேம்பாட்டு அமைச்சகம், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. இக்குழுவின் நோக்கம் சமஸ் கிருதத்தையும்  வேதங்களையும்  வளர்ப்பதென்பதாகும். இக்குழு பத்தாண்டுத் திட்டமொன்றைத் தயாரித்தது.   அதேபோல 2016 இல் தேசியக் கல்விக்கொள்கையினை உருவாக்கித் தந்த டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் குழுவின் பரிந்துரையிலும் இத்திட்டம் உள்ளது.
இப்படிப்பட்ட நீண்ட கால மோசடித் திட்டத்தின் அடிப்படையில் மோடி அரசு அய்.அய்.டி,பொறியியல் பல்கலைக்கழகங்கள் முதலியவற்றில் சமஸ்கிரு தத்தையும் வேத புராணங்களையும்  புகுத்தி வருகிறது.  ஆர்.எஸ்.எஸ். ஆதரவினரையே துணைவேந்தராக நியமித்தனர். அவர்களிலொருவர் தான் அண்ணா பல்கலைக்கழகத்  துணை வேந்தர் சூரப்பா. அவர் பதவி ஏற்றதிலிருந்தே,தனியார் மய நடவடிக்கைகளும், காவி மய நடவடிக்கைகளும் பெருகியுள்ளன.
இன்று பகவத் கீதை,வேத புராணக் குப்பைகளை பாடமாக  வைப்பார்கள்.  நாளை அதைக் கற்றுக் கொடுப்பதற்கு  என்று ஆர்.எஸ்.எஸ்.ஊழியர்களை நியமிப்பார்கள். இத்திட்டம் நிறைவேறியதும் அடுத்து மருத்துவக் கல்வி,கலை அறிவியல் கல்வியில் இத் திணித்தல் தொடரும்.
எனவே இம்முயற்சி முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டியது என்பது கல்வியாளர் சமய சார்பின்மையில்  நம்பிக்கை உடைய எம் போன்றோர் கருத்தாகும்.
இதனை உணர்ந்தே எதிர்க்கட்சித்தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முதலான அரசியல் இயக்கங்களும் கண்டனம் தெரிவித்துள்ளன. திராவிடர் கழகம் இத்திணிப்புகள் எதையும் என்றும் எதிர்த்துப் போராடி வருகின்றது.
மேலும் மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் பொறியியல் படிப்பிற்கும், பகவத் கீதைக்கும்,வேத புராணங்களுக்கும் என்ன சம்பந்தம் என்று ஓங்கிக் குரல் கொடுத்துள்ளன.
இந்நிலையில் துணை வேந்தர் சூரப்பா தத்துவயியலில் பகவத் கீதை உள்ளிட்டவை விருப்பப் பாடமாக வழங்கியுள்ளதாகவும், விரும்பியவர்கள் மட்டுமே படிக்கலாம் எனும் கண் துடைப்புப் பதிலை வெளியிட்டுள்ளார்.
நமது கண்டனமும் வேண்டுகோளுமே தத்துவ இயல் பாடமே பொறியியல் மாணவர்களுக்கு வேண்டாதது முழுமையாக நீக்கப்படவேண்டும் என்பதே. கல்வியில் இந்தப் பா.ஜ.க அரசின் குறுக் கீடனைத்தையும் கடுமையாகக் கண்டிக்கிறோம்.
இவ்வாறு திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது.
- விடுதலை நாளேடு, 28. 9. 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக