வியாழன், 15 செப்டம்பர், 2022

அண்ணாவுக்குச் சூட்டும் புகழ்மாலை‘திராவிட மாடல்' ஆட்சியின் புகழைப் பரப்புவதே!தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

அண்ணாவுக்குச் சூட்டும் புகழ்மாலை

‘திராவிட மாடல்' ஆட்சியின் புகழைப் பரப்புவதே!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

அண்ணாவின் 114 ஆம் ஆண்டுப் பிறந்த நாளில், அவர் வழிகாட்டிய வகையில் ஆட்சி நடத்தும் ‘திராவிட மாடல்' ஆட்சியின் புகழைப் பரப்புவதே அவருக்குச் சூட்டும் புகழ் மாலை  என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கூறிள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

இன்று (15.9.2022) அறிஞர் அண்ணாவின் 114 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா!

இது ஒரு திராவிடர்த் திருவிழா! காரணம், தந்தை பெரியாரின்  தலைமாணாக்கராக இருந்து அண்ணா எழுதிய எழுத்துகளும், பேசிய பேச்சுகளும், ஆட்சியைப் பிடித்து ‘திராவிட மாடல்' ஆட்சிக்கு அடித்தளமிட்டுச் செய்த சாதனைகளும், அவர்தம் போதனைகளும் என்றென்றும் நிலைத்து நின்று, பின் வந்த ஆட்சிகளுக்குக் கலங்கரை விளக்கமாக ஒளியூட்டிக் கொண்டிருக்கிறது!

தந்தை பெரியாரிடம் கற்ற பாடங்களை தனது வாழ்நாளில் கடைப்பிடித்து, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற ஆயுதங்களுடன் தனது பொது வாழ்க்கையை நடத்தியவர்.

ஆட்சி என்பது காட்சியல்ல; திராவிடப் பேரினத்தின் அடிமை வாழ்விலிருந்து ஏற்படவேண்டிய மீட்சி என்பதனை நன்கு புரிந்து, ஓராண்டு கால ஆட்சி என்பதில் முப்பெரும் நிலைத்த சாதனைகளைச் செய்து, சாகா சரித்திரம் படைத்தவர்.

இன்று பலருக்கு அண்ணா வெறும் படம் - சிலைக்கு மாலை சூட்டிவிட்டு சிலர் அண்ணாவின் பகுத்தறிவு, சுயமரியாதை, பண்பாட்டுப் புரட்சியை மறந்துவிடுகின்றனர்!

சீலம் முக்கியம்; செயல்திறன் மூலம் இன்றைய ‘திராவிட மாடல்' ஆட்சி அதைச் சாதித்து சரித்திரம் படைக்கிறது!

ஆரிய அலையில் 

சனாதன சுறா

அண்ணா அன்றே எச்சரித்தார்:

‘‘ஆரிய அலையிலே சனாதனம் என்ற சுறா மீன்கள் உலவுகின்றன. வருணாசிரமம் என்ற வாயகன்ற திமிங்கலங்களும்,  மீன்களும் உள்ளன'' என்று.

இன்று அது ‘‘விஸ்வரூபம்'' எடுத்து, தனது பெருஉருவைக் காட்டி ‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' தத்துவத்தை அழிக்க ஆலவட்டம் சுற்று கிறது. அந்த ஆரிய மாயையை வீழ்த்தும் பொறுப்பு உண்மையான அண்ணாவின் தம்பிகட்கும், சீடர் களுக்கும் விடியலை விரும்பும் அனைவருக்கும் தேவை!

அண்ணா வாழ்க!

அண்ணாவின் ‘திராவிட மாடல்' ஆட்சியின் சரித்திர புகழ் திக்கெட்டும் பரவுவதே - பரப்புவதே அறிஞர் அண்ணாவுக்குச் சூட்டும் வாடா மாலை!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

15.9.2022


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக