வியாழன், 27 ஜனவரி, 2022

தமிழ்த்தாய் வாழ்த்து: ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் அவமரியாதை!


தமிழ்நாடு அரசு பிறப்பித்த ஆணையைப் புறந்தள்ளி ஆணவமாக நடந்துகொள்வதா?

தண்டனைக்குரியதே தவிர, மன்னிப்பதற்குரியது அல்ல!

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்படும்பொழுது எழுந்து நிற்கவேண்டும் என்று தமிழ்நாடு அரசு பிறப்பித்த ஆணைபற்றி ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்குத்  தெரியாமல் போனது எப்படி? இது தண்டனைக்குரியதே தவிர,  மன்னிப்பதற் குரியது அல்ல என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

நேற்று (26.1.2022) குடியரசு நாள் கொண்டாட்டம்; சென்னை ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் நடந்த நிகழ்வில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது, அங்குள்ள அதிகாரிகள் பலர் எழுந்து நிற்கவேண்டிய குறைந்தபட்ச அவை நாகரிகத்தைக் கடைப்பிடிக்காதது மட்டுமல்ல, எழ முயற்சித்தவர்களையும் இழுத்து அழுத்தி உட்காரச் சொன்னதும், இதுபற்றி செய்தியாளர்கள் அவர்களிடம் கேட்டதற்கு மேலும் ஆணவத்தோடும், அறியாமை யோடும், ''தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டியதில்லை என்று உயர்நீதிமன்றமே தீர்ப்பு கூறியுள்ளது'' என்று பதில் கூறியது மிகவும் வன்மையாகக் கண்டிக்க வேண்டியதும், தண்டிக்கப்படக் கூடிய அவமரியாதைச் செயலுமாகும்!

தமிழ்நாடு அரசு பிறப்பித்த ஆணைபற்றித் தெரியாமல் போனது எப்படி?

அதுமட்டுமல்ல; அதன் பிறகு அரசு ஆணை வந்தது எப்படி இந்த அதிகாரிகளுக்கு - பெரிய மனிதர்களுக்குத் தெரியாமல் போனது?

சமாதானம் கூறி தப்பிக்க முடியாது!

சட்டத்தில் 'Ignorance of Law is no Excuse' என்பது அடிப்படை அறிவு அல்லவா?  அதன்படி பிறகு வந்த ஆணை குறித்து எங்களுக்குத் தெரியாது என்றுகூட அவர்கள் சமாதானம் கூறி, தப்பிக்க முடியாதே!

இவர்கள்மீது உரிய நடவடிக்கை சட்டப்படி எடுக்கத் தயங்கக் கூடாது.

தண்டனைக்குரியதே தவிர - மன்னிப்பதற்கு உரியது அல்ல!

சட்டத்திற்குமுன் அனைவரும் சமம் என்பதால், பெரிய பதவியில் உள்ள சின்ன மனிதர்களுக்குப் பாடம் புகட்டுவது பல வகையிலும் பொது ஒழுக்கச் சிதைவைத் தடுக்க உதவும்.

அறியாமையைவிட, ஆணவ பதில் நிச்சயம் தண்டனைக்குரியதே தவிர, மன்னிப்பதற்கு உரியது அல்ல - காவல்துறை கடமையாற்றவேண்டும்.

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

27.1.2022

1 கருத்து: