வெள்ளி, 23 ஏப்ரல், 2021

கோவிட் - 19 வைரசும் மூடநம்பிக்கைக் கிருமிகளும்


அதிவேகமாக பரவி வரும் கரோனா தாக்குதலுக்கு இதுவரை உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 கோடிகளைக் கடந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 30 லட்சமாக அதிகரித்துள்ளது.

 பாரதீய ஜனதா தலைவர்கள் தொடர்ந்து கரோனா நோய் பரவுதல் மற்றும் கட்டுப்படுத்துவது குறித்து வினோதமான அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.

மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வலே மும்பையில் ஒரு நிகழ்வில் ‘கோ கரோனா கோ’ முழக்கத்தை எழுப்பினார். 

மேலும், அசாம் பாஜக எம்.எல்.ஏ. சுமன் ஹரிப்ரியா, மாட்டுக் கோமியம் மற்றும் சாணத்தை கரோனா வைரஸை குணப்படுத்த உதவக்கூடும் என்று கூறினார். அதே போல்  அகில இந்திய இந்து மகாசபா கரோனாவை  தடுக்கும் பொருட்டு டில்லியில் ஒரு  மாட்டு கோமிய விருந்தையும்  நடத்தியது.

சமீபத்தில் சில அமைப்பினர் கரோனாவுக்கு மருந்தாக கோமியத்தைக் கொடுத்தால் சரியாகிவிடும் என்றும் மாட்டுச் சாணத்தை உடலில் பூசிக்கொண்டால் கரோனா அண்டாது என்றும் கூறினர்.

கரோனா வைரசை பயன்படுத்தி ஒரு சிலர் வியாபார தந்திரங்கள் செய்து வருகின்றனர். கொல்கத்தாவை சேர்ந்த மகபூப் அலி இரண்டு மாடுகள் வைத்திருப்பதாகவும் அந்த மாட்டின் கோமியம் மற்றும் மாட்டுச்சாணத்தையும் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாகவும் கூறி உள்ளார்.

 பசு மாட்டின் கோமியத்தைக் குடித்தால் கரோனா வைரஸ் தாக்கம் குணமடையும் என்று கூறும் இந்து அமைப்புகள் பசு மாட்டுக் கோமியத்தைக் குடிக்கும் நிகழ்ச்சிகளை பல இடங்களில் நடத்தி வருகின்றன. அதேபோல, மேற்குவங்க மாநிலம் - கொல்கத்தாவில் பா.ஜ.க. நிர்வாகி ஒருவர் கரோனாவைக் குணப்படுத்தும் என்று மாட்டு கோமியம் குடிக்கும் நிகழ்ச்சி ஒன்றையும் நடத்தியுள்ளார்.

அவர் வழங்கிய கோமியத்தை ஒருவர் வாங்கிக் குடித்துள்ளார். கோமியம் குடித்தவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவர் அளித்த புகாரின் அடிப்படையில் மாட்டுக் கோமியம் வழங்கிய பா.ஜ.க நிர்வாகி நாராயண் சட்டர்ஜி கைது செய்யப்பட்டுள்ளார். பா.ஜ.க., நிர்வாகி கைது செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள கொல்கத்தா மாநில பா.ஜ.க பொதுச் செயலாளர் சாயன்டன் பாசு, ‘நாராயண் சட்டர்ஜி, பசு கோமியம் என்று கூறியே அதனை வழங்கியுள்ளார். மக்கள் யாரையும் அவர் ஏமாற்றவில்லை. யாரையும் அவர் கட்டாயப்படுத்தி குடிக்கச் சொல்லவில்லை. பசுக் கோமியம் ஆபத்து விளைவிக்கக் கூடியது என்று இதுவரையில் நிரூபணம் செய்யப்படவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்திய வைராலஜிகல் சொசைட்டியின் டாக்டர் ஷைலேந்திர சக்சேனாபசு சிறுநீரில் வைரஸ் எதிர்ப்புப் பண்புகள் உள்ளன என்பதைக் காட்ட எந்த மருத்துவ ஆதாரமும் இல்லை.

"மேலும், பசுவின் சாணத்தைப் பயன்படுத்துவது எதிர் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் ஏனெனில் பசுவின்  மலம் சார்ந்த விஷயங்கள் ஒரு கரோனா வைரசைக் கொண்டிருக்கக்கூடும், இது மனிதர்களிடம் பரவலாம் என கூறி உள்ளார்.

மாட்டுச் சாணம் சோப்பைப் போலவே,  ஆல்கஹால் இல்லாத கை கழுவும் சானிடிசரை "நாட்டு மாடுகளிலிருந்து பெறப்பட்ட வடிகட்டிய மாட்டு சிறுநீருடன்" செய்து இணையத்தில் விற்பனை செய்யப்பட்டு  வருகிறது. தற்போது இது கையிருப்பு இல்லை என கூறப்பட்டு உள்ளது.

இதற்கிடையில், பிரபல இந்தி செய்தி சேனலில் யோகா குருவான ராம்தேவ், வீட்டில் மூலிகை கை கழுவும் சானிடிசர்களை உருவாக்கப் பரிந்துரைத்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பும், அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மய்யங்களும் (சி.டி.சி) ஆல்கஹாலை  அடிப்படையாகக் கொண்ட கை சுத்திகரிப்பு மருந்துகளைப் பயன்படுத்துவது முக்கியம் என்று கூறுகின்றன.

லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசினில் பேராசிரியர் சாலி ப்ளூம்ஃபீல்ட் கூறுகையில், ஓட்காவில் கூட 40 சதவீத  ஆல்கஹால் மட்டுமே இருப்பதால் வீட்டில் தயாரிக்கப்பட்ட எந்தவொரு கை சுத்திகரிப்பு மருந்துகளும் பயனற்றதாக இருக்கும் என கூறி உள்ளார்.

கடந்த வாரம், வட இந்தியாவில் அரியானா மாநில சுகாதார அமைச்சர் அனில் விஜ், மக்கள் இறைச்சி சாப்பிட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார். "சைவமாக இருங்கள்" என்று அவர் 'டுவீட்' செய்துள்ளார்.

"பல்வேறு வகையான விலங்குகளின் இறைச்சியை வைத்திருப்பதன் மூலம் மனிதகுலத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் கரோனா வைரஸ் போன்ற வைரஸ்களை உருவாக்கும் என கூறினார்.

ஆனால் கால்நடை   அமைச்சகம் இது முட்டை மற்றும் கோழி விற்பனையின் வீழ்ச்சிக்கு வழிவகுத்ததாகக் கூறிய பின்னர், இந்திய அரசாங்கத்தின் உண்மைச் சரிபார்ப்பு சேவை அந்தக் கோரிக்கையை மறுத்தது.

அதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறினார்.மீன், கோழி, முட்டை ஆகியவற்றை சாப்பிடுவதன் மூலம் கரோனா வைரஸ் பரவுவதில்லை. கோழி மற்றும் மீன்களைத் தவிர முட்டைகளின்   புரதம் முக்கிய சத்துக்களாகும், எனவே எந்த பயமும் இல்லாமல் இதை சாப்பிடுங்கள் என கூறினார்.

உயிர்க்கொல்லி என்று அஞ்சப்படும் ஒரு நோயைப் பயன்படுத்தி எத்தனை எத்தனை மூடநம்பிக்கைகள். தமிழ்நாட்டில் இத்தகு மூடநம்பிக்கைகள் போணியாவதில்லை - காரணம் இது பெரியார் மண் - திராவிடப் பூமி.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக