திங்கள், 30 செப்டம்பர், 2019

பெண்ணுரிமைக் காவலர் பெரியார்!

முனைவர்


துரை சந்திரசேகரன்


பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்




இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சிந்தனையாள ரும், ஈடற்ற பெண்ணுரிமைக் காவலரும், சீரிய சுயமரியாதை வீரரும், பார் போற்றும் பகுத்தறிவுப் பகலவனும், ஆகச் சிறந்த மனித உரிமைப் பற்றாளரும், மாந்த நேயத்தின் மறு உருவும், ஈரோட்டு வேந்தரும், இனமானத் தந்தையுமான பெரியார்...

தலைவர்க்கும் தலைவர்

அறிஞர்க்கும் அறிஞர்

மனிதருள் மாமனிதர்

புத்துலகச் சிற்பி

ஈடற்ற பகுத்தறிவுப் பகலவன் ஆவார்!

அவர் மக்களின் அறிவு வளர்ச்சிக்கு அயராது உழைத் திட்ட ஆற்றலாளர். மூடநம்பிக்கைகளை முனை மழுங்கச் செய்திட்ட ஞானசூரியன். பகுத்தறிவின் திறவுகோல். பழைமையைச் சாடிய புத்தறிவாளர். ஜாதியை ஒழித்து சமத்துவம் காண போராடியவர். ஜாதிக்கு அடிப்படையான மதம், கடவுள் ஆகியவற்றின் கடும் வைரி! மக்களின் இருண்ட வாழ்வு வெளிச்சத்தை தரிசித்தது அவர்வரவால்... நாதியிலார் நாதிபெற 'நா' சுழன்றது... வீதியில் நடக்கவும் உரிமையற்றுக் கிடந்த மக்கள் உரிமை வாழ்வு பெற ஓயாது உழைத்தவர் அவர். அவரின் உரிமைப் போரால் உயர்ந்த வாழ்வினை மக்கள் துய்த்தனர்.

ஆம்! ஆயிரம் ஆண்டெனும் மூதாட்டி அணிந்திராத அணி அவர்! அறிந்திராத அறிவும் அவரே! அவர் இல்லை யென்றால் நாட்டில் அறிவில்லை... ஆக்கம் இல்லை! அறிஞர் தம் பிறப்பே இல்லை! அவர் வாழ்ந்திட்ட காலத்தில் வாழ்ந்தோம் என்பது நமக்குப் பெருமை. அவரால் நாட்டுமக்கள் அனைவரும் படிப்பு பெற்றனர்; பட்டம் பெற்றனர்; பதவி பெற்றனர்! ஏன்? அனைத்தும் பெற்றனர்.

சமுதாயத்தில் சரி பகுதியாய் இருக்கும் மகளிர்குலம் மானம் பெற - மாண்புகள் பெற அயராது உழைத்த அறிவாசான் பெரியாரே! தன் வாழ்நாள் முழுமையும் பெண்களைப் பற்றியே சிந்தித்த தலைவர். தன் சிந் தனையில், செயலில் சரிபாதியை பெண்கள் வாழ்வுரி மைக்காகவே பாடுபட்ட பெண்ணுரிமைக் காவலர் அவர். இதோ பெரியார் போற்றிய பெண்ணியம்...!

எங்கெங்கு ஏற்றத்தாழ்வுகள் வெளிப்பட்டதோ அங் கெல்லாம் பெரியார் தலையிட்டார். வேறுபாடுகளும், மாறுபாடுகளும் அவரின் போராட்டத்தால் வீழ்ந்தன. மனிதகுல சமத்துவம், மனிதகுல விடுதலை அவரின் எண்ணக் கனவு. மனித சமத்துவத்தில் அவசியமானதாக பெரியார் கருதியது பெண்கள் விடுதலை பற்றியதே! ஆண் - பெண் சமத்துவமே!  பெண்ணுரிமை பணியே தந்தை பெரியாரின் பெரும் பணியில் அரும்பணி!

உலகத்தில் - இந்திய துணைக்கண்டத்தில் - தமிழ் நாட்டில் பெண்ணினத்தின் வரலாறு புதுப்பிக்கப்பெற தந்தை பெரியாரின் பங்களிப்பு மகத்தானது. பெண்ணுரி மைக்காக பெரியார் அர்ப்பணித்த "யுகம்" என்றே சொல்லலாம்.

பெண்களின் ஆற்றலும், ஆளுமையும், வலிமையும், அறிவும் பெரியாரால் உணரப்பெற்ற அளவுக்கு மற்ற பெண்ணியவாதிகளால் உணரப்பட்டு இருக்குமா? என்பது கேள்விக்குறிதான்! நினைத்துப்பார்த்தால் வியப்பினை ஏற்படுத்துகிறது. எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக பெரியாரின் பெண்ணுரிமை பங்களிப்பு! ஒடுக்கப்பட் டோரிலும் ஒடுக்கப்பட்டவர்கள் பெண்கள் எனக்கருதிய பெரியார் பெண்ணடிமைக்கு எதிராகத் தொடுத்த போர் சம உரிமையை பெற்றுத் தந்தது பெண்களுக்கு!

தந்தை பெரியாரின் பெண் உரிமைப் போருக்கு முன்பு பெண்கள் வேதனையைத் தின்றார்கள்... விம்மிக் கிடந் தார்கள்! சுரணையற்ற ஜடப் பொருளாக அடிமைத்தனத்தை சுகமாக எண்ணி அறியாமைப் படுகுழியில் ஆழ்ந் திருந்தார்கள். பெண் எனும் பாலியல் வேறுபாட்டை மட்டும் காரணியமாக்கி எல்லா நிலைகளிலும் ஆதிக்கத் துக்கு உள்ளாகி தவித்துக் கிடந்தார்கள்!

பெரியார் வந்தார் - போராடினார்... எல்லாமும் தங் களுக்கு வந்ததைப் போல மகளிர் உணரத் தலைப் பட்டார்கள். ஆணாதிக்க கட்டமைப்பு அறிவுலக ஆசான் பெரியாரால் உடைத்து நொறுக்கப்பட்டது. 70 ஆண்டுகளில் பெரியார் போராடி பெற்றுத்தந்த பெண்ணுரிமைக்கான வளர்ச்சிப் படிநிலைகள் இனியும் தகர்க்க முடியாத வலுவான கட்டமைப்பாக உருப்பெற்றது!



"கல்வி, அறிவியல், கலை, விளையாட்டு, விடாமுயற்சி ஆகியவற்றில் வெற்றிபெற்ற நவீன பெண்களையே பெண்கள் உதாரணமாகக் கொள்ள வேண்டும் என்றும் - சங்கீதம், கோலாட்டம், மனையியல் ஆகியவற்றை பெண்கள் புறந்தள்ள வேண்டுமென்றும், பெண்களுக்கே உரிய காரியங்களையும், பதிவிரதைகளான சீதை, நளாயினி, சந்திரமதி, வாசுகி ஆகியோரின் வாழ்க்கை முன்னுதாரணங் களையும் பெண்கள் அலட்சியப்படுத்த வேண்டும்" என்றார் பெரியார். ('குடி அரசு' 22.1.1933).

பெண்கள் முன்னுக்கு வரவேண்டுமென்றால் தங்களுக்கு முன் உதாரணமாக யாரைப் பின்பற்ற வேண்டும்? யாரைப் பின்பற்றக்கூடாது? என்பதை தந்தை பெரியார் மேற்கண்டவாறு வரையறுத்தார்.

"ஆண் - பெண் வேறுபாடு இல்லாமல் ஒருவர் மற்றவரை அழைக்கும்போது 'தோழர்' என்றே அழைக்க வேண்டும். ஆண்கள் - பெண்கள் ஒரே விதமான உடைகளையே அணிய வேண்டும்" என்றார் பெரியார். "பெற்றோர்கள் பெண் குழந்தைகளை 'பெண்' என்று அழைக்காமல் 'ஆண்' என்றே அழைக்க வேண்டும்" ('குடி அரசு' 12.5.1935) என்று வலியுறுத்தியவர் பெரியார்.

குழந்தைகளுக்கு பெயர் வைப்பதில் கூட பெயரைக் கேட்ட மாத்திரத்தில் இது பெண் குழந்தை, ஆண் குழந்தை என்று தெரியாத வண்ணம் பெயர் வைக்க வேண்டும் என்று கூறியதுடன், அய்யாவிடம் பெயர் சூட்டும்படி கேட்டுக் கொண்டபோது அன்புமணி, அறிவுமணி, அழகுமணி, அருள்மணி, பண்பு, பகுத்தறிவு, நாத்திகம், குடி அரசு, விடுதலை, உண்மை, சமத்துவம், இரஷ்யா, தன்மானம், அறிவுக்கண்ணு, அருமைக்கண்ணு என்றே பொதுப்பெயர்களையே சூட்டியவர் பெரியார்!

"மனிதர்கள் இருக்கும்வரை அனுபவிக்க வேண் டியது இன்பமும், திருப்தியும்தான். இதற்கு ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் முக்கிய சாதனம்" என்றும் கூறியவர் பெரியார். ('குடி அரசு' 17.8.1930)

ஒரு பெண்ணின் அல்லது ஒரு ஆணின் அன்பு, ஆசை, காதல், காமம், நட்பு, நேசம், மோகம், விரகம் முதலியவைகளைப் பற்றி மற்றொரு ஆணோ, பெண்ணோ மற்றவர்கள் - மூன்றாமவர்கள் யாராயினும் பேசுவதற்கோ, நிர்பந்திப் பதற்கோ சிறிதுகூட உரி மையே கிடையாது என்றும் திருமணம் பற்றிய தமது மதிப்பீட்டை வெளிப்படுத் தியவர் பெரியார்.

சமுதாய சமத்துவத்துக்காகவும், மானுட மேன்மைக் காகவும் ஜாதி மறுப்பு திருமணங்களை, விதவை மறுமணங்களை ஊக்குவித்தவர் பெரியார். சடங்கு சம்பிரதாயங்கள் நீக்கப்பெற்ற, ஆண் - பெண் சமத்துவம் பேணக்கூடிய அறிவுக்கொத்த சுயமரியாதைத் திருமண முறையை ஏற்படுத்தி அதனை பரப்புரை நிகழ்வாக பொது விழாவைப் போல நடைபெறச் செய்தவர் பெரியார்.

வாழ்க்கைத் துணைநல ஏற்பு விழா, வாழ்க்கை ஒப்பந்த விழா என திருமணத்தையும், கணவன் - மனைவி என்பதை வாழ்க்கைத் துணைவர்களாகவும் மாற்றியவர் பெரியார். இன்றைய கால கட்டத்தில் வாழ்க்கை இணை நலம் ஏற்பு விழாவாக, வாழ்விணை யர்களாக சொல்லாட்சி மாற்றம் பெற்றுள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பெண்ணுரிமைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சுயமரியாதைத் திருமணத்தை வடிவமைத் தவர் பெரியார். கூட்டு வாழ்க்கையில் ஆணுக்கும், பெண் ணுக்கும் எவ்வித வித்தியாசமோ, உயர்வு - தாழ்வோ இல்லை என்பதும், சகல துறைகளிலும் பெண்களுக்கு சம சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும் என்பதை அடித் தளமாகக் கொண்டதே சுயமரியாதைத் திருமணம். திருமணம் என்பது பெண்ணும் ஆணும் சேர்ந்து வாழ்க் கையை நடத்த ஏற்படுத்திக்கொள்ளும் ஒப்பந்தமென்றும், அவ்வொப்பந்த விஷயம் பெண்ணையும் - ஆணையும் மாத்திரமே பொறுத்ததே ஒழிய வேறு எவ்வித கட்டுப் பாட்டுக்கும் சம்பந்தப்பட்டதல்ல என்று அறிவுறுத்தியவர் பெரியார்.

"திருமணம் செய்து கொள்வதற்கு முன் ஆணும், பெண்ணும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள வேண் டும். ஒருவரையொருவர் பழகிக்கொள்ளவேண்டும். ஒருவருடைய குணங்களை மற்றவர் தெரிந்து கொள்ள வேண்டும். இருவரும் சம்மதித்துக் கொண்டால் முடிந்தது திருமணம்" ('விடுதலை' 23.8.1956)

"வரதட்சணை கேட்பதும் கொடுப்பதும் குற்றம்" என்றார் பெரியார். சட்டமாக மலருவதற்கு எத்தனை ஆண்டுகள் தேவைப்பட்டன. "பெண்ணின் மூலம் கூடுமான அளவு சொத்தை சுரண்டலாம் என்று பெற்றோர்களும், ஆண் பிள்ளைகளும் திட்டமிடுவது மனிதத்தன்மையற்ற செய்கையே" என்றார்.

"படிப்பையும், காதலையும் விலைப் பொருள் களாக்குவதற்கும், கற்பை விற்பதற்கும் அடிப்படைத் தத்துவத்தில் வேற்றுமை இல்லை" ('விடுதலை' 1.4.1957) என்று பறைசாற்றியவர் பெரியார்.

'பிள்ளைப்பேறு' என்பது நடைமுறை வாழ்வில் பெண்ணை வேறு எந்த தளத்திலும் காலூன்ற முடியாதபடி தடைக்கல்லாய் அமைந்திருப்பதைக் கண்டு மனம் குமு றினார் அய்யா. அதேபோல் ஆண் - பெண் சேர்க்கையில் (தாம்பத்திய வாழ்வின்) ஒரே நோக்கமாகவும், இலட்சிய மாகவும் பிள்ளைப்பேறு ஆக்கப்பட்டு இருப்பதை பெரியார் ஏற்றுக்கொண்டாரில்லை. இனவிருத்தி, பிள்ளைப் பேறு வேண்டாமென்றால் மனித குலம் அழிந்து போகாதா? என்று கேள்வி தொடுப்போருக்கு மனித வாழ்க்கை என்பதே இயற்கையை மீறிய செயலாக இருக்கும்போது, மனிதகுலம் பெருகாமல் போனால் என்ன? இதுவரை ஏற்பட்ட மக்கள் பெருக்கத்தால் ஏற்பட்ட நன்மை என்ன? என்று கேட்டதுடன் பெண்களுக்கு அதனால் என்ன நட்டம் வந்து விடப்போகிறது? என்றும் இடித்துரைத்தார் பெரியார்.

கர்ப்பத்தடை பற்றி எவரும் சிந்திக்காத காலத்தில் பெரியார் 'கர்ப்ப' ஆட்சியை நூலாக்கித் தந்தவர். காதலுக்கு வழிவைத்து கருப்பாதைச் சாத்திட கதவொன்று கண்டறி வோம்... இதிலென்ன குற்றம்? சாவதற்கோ பிள்ளை... தவிப்பதற்கோ பிள்ளை? என்று நியாயங்களைப் தொடுத்தவர் பெரியார்.

"மதுவிலக்கு பிரச்சாரத்தைவிட, தொத்து வியாதிகளை ஒழிக்கும் பிரச்சாரத்தைவிட, இந்த கர்ப்பத்தடை பிரச்சாரம் மிகவும் முக்கியமானது" என்றார். ('குடி அரசு' 6.4.1930)

பல ஆண்டுகளுக்கு முன்பே இனவிருத்தி, மகப்பேறு என்பனவற்றை தீர்மானிக்கும் உரிமை, தங்கள் உடலின் மீது தாங்கள் மட்டுமே கட்டுப்பாடு செய்யும் உரிமை பெண்களுக்கு இருக்க வேண்டும் என்றவர் தந்தை பெரியார்.

உலகத்தில் ஆண்மை நிலைபெற்றிருக்கும் வரையிலும் பெண்களின் அடிமைத்தனம் வளர்ந்தே வரும். பெண் களால் 'ஆண்மை' என்ற தத்துவம் அழிக்கப்பட்டாலொழிய பெண் விடுதலை இல்லை என்று அவதானித்தவர் பெரியார். ஆண்கள் பெண்களின் விடுதலைக்குப் பாடுபடுவதால் பெண்களின் அடிமைத்தனம் வளர்வதுடன் பெண்கள் என்றும் விடுதலை பெற முடியாத கட்டுப்பாடுகள் பலப்பட்டுக் கொண்டுதான் போகும் என்றும் உண்மையை உணர்த்தியவர் பெரியார்.

"எங்காவது முதலாளிகளால் தொழிலாளிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது பூனைகளால் எலிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது நரிகளால் ஆடு கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது வெள்ளைக்காரர்களால் இந்தியர்களுக்கு செல்வம் பெருகுமா? எங்காவது பார்ப்பனர்களால் பார்ப்பனரல்லா தாருக்கு சமத்துவம் கிடைக்குமா? என்பதை யோசித்தால் இதன் உண்மை விளங்கும். அப்படி ஒருக்கால் ஏதாவது ஒரு சமயம் மேற்படி விஷயங்களில் விடுதலை உண்டாகிவிட்டாலும்கூட ஆண்களால் பெண்களுக்கு விடுதலை கிடைக்கவே கிடைக்காது என்பதை மாத்திரம் உறுதியாய் நம்பலாம்" - பெரியாரின் தொலைநோக்குப் பார்வை - தீர்க்கதரிசனம் எத்துணை நேர்மையானது, உண்மையானது என்பதை எவரே மறுப்பர்?

ஏனெனில் 'ஆண்மை' என்னும் பதமே பெண்களை இழிவுபடுத்திடும் முறையில் உலக வழக்கில் உபயோகப் படுத்தப்பட்டு வருகிறது என்பதைப் பெண்கள் மறந்து விடக்கூடாது அந்த 'ஆண்மை' உலகில் உள்ள வரையிலும் பெண்களுக்கு மதிப்பு இல்லை என்பதை பெண்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்.

எப்போதும் அடிமைதானா? பெண்கள் இளமையில் தந்தைக்கும், திருமணமான பிறகு கணவனுக்கும், முதுமை யில் மகனுக்கும் கட்டுப்பட்டவர்களாக இருக்கும்படியான நிலையே உள்ளது. மொத்தத்தில் பெண் என்பவர் எப் போதும் ஏதாவது ஒருவகையில் ஆண்களுக்கு அடங்கி, ஒடுங்கி வாழவேண்டிய நிலையே இருக்கிறது. நியாயமான நிலையா இது? என்று அய்யா பெரியார் கேட்பதைப் பாருங்கள்.

"பெண்கள் விலைபொருளாக மதிக்கப்படுகின்றனர். குழந்தைப்பருவம், இளமைப்பருவம், கல்யாணப்பருவம், வாழ்க்கைப் பருவம், முதுமைப்பருவம் ஆகிய எல்லா பருவங்களிலும் பெண்கள் அடிமைப்படுத்தப்படுகிறார்கள், இவைகளைப்பற்றி பழமை விரும்பிகளுக்கு நட்டமாய்த் தோன்றலாம். ஆனால் அப்படிப்பட்டவர்களுக்கு பெண் களாயிருந்து அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும்" என்றார் பெரியார்.

"உங்கள் மனைவிமார்களை நினைத்துக்கொண்டே யோசிக்காதீர்கள். உங்கள் தாய்மார்களையும், செல்வப் பெண் குழந்தைகளையும், அன்பு சகோதரிகளையும் மனதில் கொண்டு யோசித்துப் பாருங்கள். உங்கள் தாய்மார் சுதந்திரவாதிகளாயிருந்தால் நீங்கள் எப்படி இருந்திருப் பீர்கள்? என்பதையும் யோசித்துப் பாருங்கள்" தந்தை பெரியாரின் உருக்கமான - கனிவான வேண்டுகோளை எண்ணிப்பார்ப்போமா? ஏற்றம் தருவோம் பெண் குலத்துக்கு என்று எண்ணிட வேண்டாமா? அறிவுலக ஆசான் பெரியாரின் கேள்வியில் இருக்கும் நியாயத்தை உணர்ந்து செயலாற்றுவோம்.

அடிமைப் பெண்கள் வயிற்றில் பிள்ளைகள் பிறந்து இவர்களால் வளர்க்கப்பட்டால் அவற்றிற்கு மனிதத்தன்மை எப்படி ஏற்படும்? நமது மக்களுக்கு ஏன் மனிதத்தன்மை இல்லை -  சுயமரியாதை இல்லையென்றால் அவற்றிற் கெல்லாம் முக்கியத்திலும் முக்கியமான காரணம் இப்படிப் பட்ட தாய்மார்களால் பெறப்பட்டு வளர்க்கப்பட்டதேயாகும் என்கிறார் பெரியார். சுயமரியாதையும், மாந்தநேயமும் மிளிர பெண்ணுரிமையே முக்கியம் என்பதை நாம் உணர்வோமாக!

பெண்கள் சமுதாயத்தில் தலைகீழான புரட்சி ஏற்பட்டால் ஒழிய நாம் வேறு துறைகளில் எவ்விதமான பெரிய மாறுதல்களைக் கொண்டு வந்தாலும் எந்தப் பயனும் ஏற்படாது. பெண்கள் உண்மையான மனிதப் பிறவிகளாக நடமாட வேண்டுமானால் மூன்று காரியங்கள் உடனே செய்யப்படவேண்டும் என்றார் பெண்ணுரிமைப் போராளியான தந்தை பெரியார்.

"முதலில் அடுப்பங்கரையை விட்டு அவர்களை வெளியேற்ற வேண்டும். இரண்டாவது நகைப் பேயை அவர்களிடமிருந்து விரட்ட வேண்டும். மூன்றாவதாக இப்போதுள்ள திருமணச் சிக்கல்களைத் துண்டுதுண்டாக நறுக்கி விட வேண்டும். இவ்வளவுக்கும் அடிப்படையாய் இருப்பவை கல்வியும், சொத்துரிமையும். இவ்விரண்டையும் பெற்ற பெண்கள் அவரவர்களுக்குப் பிரியமான உத்தியோகங் களை ஏற்பதற்கு தடையில்லாமல் செய்ய வேண்டும். இந்த உதவியைத்தான் இங்குள்ள ஆட்சியாளர் செய்ய வேண்டும். பெண்கள் உத்தியோகங்களில் அமர்ந்து விடுவார் களேயானால், நாம் மேலே கூறிய மூன்று தேவைகளும் தாமாகவே படிப்படியாக நிறைவேறிவிடும்"

"நாளைக்கு நம் நிலை என்ன? என்ற கவலை இல்லாமல் உலகப் பெண்கள் எல்லோரையும்விட இன்பமாகவும், சுதந்திரமாகவும், முழு வாழ்க்கை வாழுகின்றவர்களாகவும் மாற வேண்டும். கல்வியையும், வேலையையும் தான் தங்கள் அழகாக கருத வேண்டும்" என்ற பெரியாரின் கனவை நனவாக்கிட நமது பெண்கள் தயாராக வேண்டாமா? நகையிலும், அணிமணிகளிலும், உடையிலும் அழகைத் தேடிக்கொண்டிருக்கலாமா? சிந் தித்து செயல்பட வேண்டிய பொறுப்பு பெண்களுடையதே!

மனித சமுதாயம் அடுத்தவனைச் சுரண்டாமல், தானும் சுரண்டலுக்கு ஆளாகாமல் சமத்துவத்தோடு, சுதந்திரத் தோடு சுயச்சார்போடு வாழவேண்டுமென்று ஆசைப் பட்டவர் அய்யா. அதனால் தான் பெண்ணடிமைத்தனம் ஒழிய வேண்டும், ஆணாதிக்கச் சிந்தனை அழிய வேண் டும் என்று விரும்பினார். ஆண் - பெண் பேதமற்ற சமுதா யத்தில்தான் உண்மையான சமத்துவத்தை காணமுடியும்.

பெண்ணினத்தின் தன் நிலையை, ஆளுமையை வளர்த்தெடுத்த தந்தை பெரியாரை தங்களின் உரிமைப் போராளியாக பெண்கள் அங்கீகரித்து - தந்தை பெரியாரே தங்களுக்கு முதன்மையான தலைவர் - முக்கியமான தலைவரும் ஆவார் என்பதை உணர வேண்டும். பெண்களுக்காக வாதாடுவதால், போராடுவதால் ஆண்கள் சமுதாயம் எதிர்க்குமே என்பதை பற்றியெல்லாம் கவலைப் படாமல் மகளிர் குலத்தை மன்பதையில் உயர்த்திப்பிடித்து உரிமைப் போரிட்ட பெருந்தலைவரே பெரியார் எனப் போற்றிட வேண்டும்.

கல்வி, வேலைவாய்ப்பு, சொத்துரிமை எனும் தடத்தில் வெற்றிக்கொடி நாட்டியுள்ள பெண்கள் நாடாளுமன்றத்தில் 33% இடஒதுக்கீடு எட்டப்பட முடியாமல் தவிப்பதை நினைத்தால் இன்னமும் பெண்கள் தங்களின் உரிமைத் தடத்தில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளதை மறுக்க முடியாது. உரிமைப்போர் தொடரட்டும்; ஆணுக்கு நிகரான அனைத்து உரிமைகளும் மலரட்டும்!

நீதி உரைத்திடும் நியாயவானாக நின்று பெரியார் தொடுத்த பெண் உரிமைக்கான போர்க்குரல், உலகில் வேறு எவராலும் சொல்லப்படாத குரலாக வெளிப்பட்டது என்பதே உண்மை.

அமெரிக்கா, வர்ஜினியா - தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில் படிக்கப்பட்ட கட்டுரை 17.9.2019.

- விடுதலை நாளேடு, 30 .9. 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக