தமிழ்ச் சமூகத்திற்கு மட்டுமல்ல, உலக அளவில் மனிதநேயமுள்ள ஒரு சமுதாயத்தைக் கட்டமைக்கவேண்டுமானால் திராவிடர் கழகமும் - தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையும் தேவை!
அமெரிக்க மாநாட்டில் தொல்.திருமாவளவன் எழுச்சியுரை
வாசிங்டன், செப்.24 தமிழ்ச் சமூகத்திற்கு மட்டுமல்ல, உலக அளவில் மனிதநேயமுள்ள ஒரு சமுதாயத்தைக் கட்டமைக்கவேண்டுமானால், திராவிடர் கழகத்தின் இருப்பும், அய்யா ஆசிரியர் அவர்களின் தலைமையும் தேவைப்படுகிறது என்றார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமா வளவன்.
கடைசி நேரத்தில் விசா கிடைத்தது!
22.9.2019 அன்று அமெரிக்கத் தலைநகர் வாசிங்டனில் நடைபெற்ற இரண்டாம் நாள் மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு சிவா அவர்கள் எனக்கு அன்பு கட்டளையிட்டிருந்தார். விசா எனக்குக் கிடைத்தால் நிச்சயமாகக் கலந்துகொள்வேன் அய்யா என்றேன். அண்ணன் சோம.இளங்கோவன் அவர்களும் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) அனுப்பியிருந்தார். 18 ஆம் தேதி வரையில் எனக்கு விசா கிடைப்பதில் சிக்கல் இருந் தது. 18 ஆம் தேதி இரவு விமானத்தில் புறப்படுவதற்கான ஏற்பாடுகளையெல்லாம் செய்தாகிவிட்டது. ஆனால், அன்று பிற்பகல் 5 மணிவரைக்கும் உறுதி செய்யப்படாமல் இருந்தது. எனவே, நான் மயிலாடுதுறை சிவா அவர்களுக்கும்கூட அமெரிக்காவில் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்பது குறித்து உறுதிப்படுத்தவில்லை.
17 ஆம் தேதி தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளின்போது, பெரியார் திடலில் ஆசிரியர் அய்யா அவர்களை நான் சந்தித்தேன். விசா இன்னும் கிடைக்க வில்லை; விசா கிடைத்தால் நான் வந்துவிடுவேன் என்று அய்யாவிடம் கூறியிருந்தேன். என்ன காரணமோ விசா கிடைப்பதற்குக் காலதாமதம் ஆனது. 5 மணிக்குமேல் தான் எனக்கு விசா உறுதி செய்யப்பட்டது. ஆனால், அது டில்லியிலே வழங்கப்பட்டது. எப்படி சென்னைக்கு அந்த விசாவை கொண்டு வருவது என்ற தடுமாற்றம் ஏற்பட்டது. கடைசியாக, ஒருவர் டில்லியிலிருந்து விமானத்தில் வந்து, சென்னை விமான நிலையத்திலே என்னிடம் அந்த விசாவினை ஒப்படைத்தார். பிறகு விமானத்தில் இங்கே வந்தோம். இந்த நிகழ்வில் பங்கேற்பதில் பெருமகிழ்ச்சி.
இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய பெரியார் இன்டர்நேசனல் அமைப்பிற்கு என் நெஞ்சார்ந்த நன்றியை முதலில் காணிக்கையாக்குகிறேன்.
நியூயார்க்கில் நடைபெற்ற
பார்லிமெண்டரியேன் ரவுண்ட் டேபிள்
நியூயார்க், நியூஜெர்சி ஆகிய இரண்டு இடங்களிலும், நேற்றும், நேற்றைக்கு முந்தைய நாளும் ‘‘International Congress on Discrimination Based on Work and Descent'' என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 20 ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெற்ற பார்லிமெண்டரியேன் ரவுண்ட் டேபிள் என்ற நிகழ்வில் நான் பங்கேற்றேன்.
10 நாடுகளிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்தியாவிலிருந்து நான் மட்டும் அதில் பங்கேற்கின்ற வாய்ப்பைப் பெற்றேன். அது அய்.நா. பேரவைக்கு இணையான ஒரு அமர்வு.
ஜாதி பிரச்சினை குறித்து அய்.நா. ஒரு ஞிமீநீறீணீக்ஷீணீtவீஷீஸீ செய்யவேண்டும் என்று வலியுறுத்தக் கூடிய ஒரு அமர்வு.
நேபாள், பங்களாதேஷ், இலங்கை போன்ற பல நாடுகளிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்தி ருந்தார்கள். நேற்று அதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி கொலம்பியா பல்கலைக் கழகத்தோடு இணைந்தி ருக்கின்ற பெர்னாட் கல்லூரியில் நடைபெற்றது.
இன்றைக்கு நடைபெறும் அந்த அமர்வில் பல பேர் உரையாற்றக்கூடிய நிகழ்ச்சிகள் நியூஜெர்சியில் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.
நம்முடைய தமிழர் தலைவர் அவர்களின் அழைப்பை ஏற்று, அண்ணன் சோம.இளங்கோவன் அவர்களின் அழைப்பை ஏற்று, இந்த நிகழ்வில் பங்கேற்கவேண்டும் என்பதற்காக, அவர்களிடம் ஒரு ஒப்புதலைப் பெற்றுக்கொண்டு, விடைபெற்று இந்த நிகழ்விற்கு வந்து சேர்ந்தோம்.
மனிதநேயத்தை, சமூகநீதியை
உலகமெங்கும் தழைக்கச் செய்ய...
இந்த மாநாடு ஒரு தொலைநோக்குப் பார்வையோடு, மனிதநேயத்தை, சமூகநீதியை உலகமெங்கும் தழைக்கச் செய்யவேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்தோடு, ஒருங்கிணைக்கப் பெற்று, வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது.
ஜெர்மனியில் பன்னாட்டு பெரியார் இயக்கம் ஏற்பாடு செய்த மாநாட்டின்போதும், கவிஞர் அவர்களும், அய்யா ஆசிரியர் அவர்களும் அந்த மாநாடு குறித்து என்னிடம் விளக்கினார்கள். எனக்கு அப்பொழுதே அந்த மாநாட்டில் கலந்துகொள்ளவேண்டும் என்கிற ஆசை இருந்தது. நேரம் ஒதுக்க இயலவில்லை. அந்த மாநாட்டிற்கு வாழ்த்துச் செய்தி அனுப்பச் சொல்லி கவிஞர் அவர்கள் என்னிடம் கேட்டுக்கொண்டார். நான் சுற்றுப்பயணத்தில் இருந்தபொழுது அந்த மாநாட்டிற்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினேன்.
மாநாட்டில் பங்கேற்பது குறித்து பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சியடைகிறேன்
இரண்டு ஆண்டுகள் கழித்து அமெரிக்காவில் நடைபெறுகின்ற இந்த மாநாட்டில், நான் நேரிடையாக வந்து பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்தது எண்ணி நான் உள்ளபடியே பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சியடை கிறேன்.
இந்த மண்ணில், தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் உள்ளிட்ட மனிதநேயத்திற்காக சமூகநீதிக் காக பாடுபட்ட தலைவர்களைப்பற்றிய கருத்துகள் பகிர்ந்துகொள்ளப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது.
இந்த மாநாட்டின் சிறப்புபற்றி அய்யா அவர்கள் சொன்னார்கள். ஜெர்மனியில் நடந்த மாநாடு பெரியார் பன்னாட்டு அமைப்பு மட்டும் ஒருங்கிணைத்த மாநாடு. இந்த மாநாடு, அமெரிக்காவில் இயங்கிக் கொண்டி ருக்கின்ற ஏ.எச்.ஏ. என்ற அமைப்பு. மிகப்பெரிய புகழ் பெற்ற ஒரு அமைப்பாகும். அந்த அமைப்பும், பெரியார் பன்னாட்டு அமைப்பும் இணைந்து நடத்துகின்ற மாநாடு இந்த மாநாடு. இந்த மாநாடு ஒரு வரலாற்று சிறப்பு வாய்ந்த மாநாடாகும் என்று என்னிடம் கூறினார். அந்த அமைப்பின் செயல் இயக்குநரையும் எனக்கு அறிமுகப்படுத்தினார்.
இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த மாநாட்டின் இறுதி அமர்வில் உங்களிடையே உரையாற்றுகின்ற வாய்ப்பு எனக்கு மிகுந்த பூரிப்பை தருகிறது.
2500 ஆண்டுகளுக்கு முன்பே,
இந்தியாவில் சிந்தித்திருக்கின்றோம்
19 ஆம் நூற்றாண்டில்தான் மேற்குலக நாடுகளில், மனிதநேயம் குறித்த விவாதம் உரையாடல் நடந்திருக் கிறது. இதை வரலாற்றுக் குறிப்புகளில் இருந்து நம்மால் அறிய முடிகிறது. ஆனால், நமக்கு மனிதநேயம் குறித்த சிந்தனை என்பது, நம்முடைய வரலாற்றுக் குறிப்புகளில் இருந்து பார்க்கின்றபொழுது, கவுதம புத்தரிலிருந்தே தொடங்குகிறது. ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கு முன்பே, மனிதம் குறித்து, மனிதநேயம் குறித்து, சமத்துவம் குறித்து நாம் சிந்தித்திருக்கின்றோம். நமக்கு அந்தப் பாரம்பரியம் இருக்கிறது.
கவுதம புத்தர் சமத்துவம் என்கிற கோட்பாட்டை முன்மொழிந்த ஒரு முதல் புரட்சியாளர்
மேற்கு உலக நாடுகளில், 19 ஆம் நூற்றாண்டுகளில் சிந்திக்கத் தொடங்கிய ஒன்றை, 2500 ஆண்டுகளுக்கு முன்பே, இந்தியாவில் சிந்தித்திருக்கின்றோம். கவுதம புத்தர் ஆன்மிகம் சொல்ல வந்த ஒருவரல்ல. அவர் சமத்துவம் என்கிற கோட்பாட்டை முன்மொழிந்த ஒரு முதல் புரட்சியாளர்.
சமத்துவம் மனிதர்களுக்கிடையில் உருவாகவேண் டுமானால், அதற்கு அடிப்படையான முன் நிபந்தனை - மனிதநேயம் என்பதுதான்.
மனிதநேயம் இல்லாமல்,
சமூகநீதியை வென்றெடுக்க முடியாது;
சமத்துவத்தை வென்றெடுக்க முடியாது;
சகோதரத்துவத்தை வென்றெடுக்க முடியாது.
சுதந்திரத்தை வென்றெடுக்க முடியாது.
சமத்துவம் என்கிற ஒரு மகத்தான தேடல்; இது வெறும் சொல்லாகப் பார்த்தால், அதன் நுட்பத்தை நம்மால் உணர முடியாது. இது ஒரு மாபெரும் விடுத லைக்கான முழக்கம். சமத்துவம் என்பது ஆதிக்கம், ஒடுக்குமுறை, சுரண்டல் ஆகியவற்றுக்கு எதிரான ஒரு விடுதலை முழக்கம் அது.
பெரியாருடைய போராட்டமும் சமத்துவத்திற்கானது; அம்பேத்கரின் போராட்டமும் சமத்துவத்திற்கானது.
2500 ஆண்டுகளுக்கு முன்பு கவுதம புத்தரின் மூன்று சொற்கள் சமத்துவத்தை நமக்குப் போதிக்கிறது.
உலக மானுடத்திற்கு வழங்கியிருக்கிறார் திருவள்ளுவர்!
உலகம் முழுவதும் மனிதர்களாக இருந்தாலும் அல்லது வேறு எந்த உயிரினங்களாக இருந்தாலும், பெண்ணிலிருந்துதான் பிறப்பு என்பது நிகழ்கிறது. பிறப்பு என்பது சமமான ஒரு வாழ்வியலை நமக்கு உணர்த்துகிறது. இதை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், அய்யன் திருவள்ளுவன், உலகச் சமூகத்திற்கு, உலக மானுடத்திற்கு வழங்கியிருக்கிறார். தமிழ்ச் சமூகத் திற்கு மட்டுமல்ல, உலக மானுடத்திற்கு வழங்கி யிருக்கிறார்.
உலக மானுடத்திற்கு வழங்கிய சமூகம், தமிழ்ச் சமூகம்; அதை திருவள்ளுவரின் குறளில் இருந்து இதை நாம் உணர முடிகிறது. அதற்குப் பின்னர், 19 ஆம் நூற்றாண்டில் நாம் வள்ளலாரைப் பார்க்கலாம். வள்ளலார் ஆன்மிகத்தைப் போதிக்கக்கூடிய ஓர் அடையாளம். ஆனாலும், வள்ளலார் ‘‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்'' என்று சொல்கிறார்.
மனிதநேயம் என்பது உயிர்நேயத்தோடு தொடர்புடையது!
‘‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்'' என்பது மனிதநேயத்தின் உச்சம் என்று சொல்லலாம். மனிதநேயம் என்பது மனிதனுக்கு மனிதன் காட்டுகின்ற அன்பு; மனிதனுக்கு மனிதன் காட்டுகின்ற கருணை என்று நாம் புரிந்துகொள்கிறோம். இல்லை, அது உயிர்நேயத்தோடு தொடர்புடையது. மாந்தநேயம் என்பதுகூட உயிர் நேயத்தோடு தொடர்புடையது.
எந்த உயிரும் பாதிப்புக்குள்ளாகக் கூடாது; எந்த உயிரும் வாட்டத்திற்குள்ளாகக் கூடாது என்று வள்ளலா ருடைய கருத்து நமக்கு ஒரு போதனையைத் தருகிறது.
ஆகவே, தமிழ்ச் சமூகம் எப்படி ஒரு விரிந்து பரந்த சிந்தனை உள்ள சமூகமாக இருக்கிறது என்பதற்கு இன்னொரு சான்றை நாம் சொல்ல முடியும்.
உயர்ந்த, பரந்த, விரிந்த சிந்தனை!
கணியன்பூங்குன்றன் அவர்களின் ‘‘யாதும் ஊரே, யாவரும் கேளீர்'' என்ற சொற்கள்தான் அது.
இதைவிட சமத்துவத்திற்கான முழக்கம் வேறு என்ன இருக்க முடியும்?
என் ஊர், என் மாவட்டம், என் மாநிலம், என் நாடு, என் மதம், என் ஜாதி என்று மனிதர்கள் தங்களுக்கிடை யிலேயே ஒரு வளையத்தைப் போட்டுக்கொண்டு சுருங்கிக் கிடைக்கின்ற நிலையில், ஒரு மனிதன் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய வாழ்விடங்களை யாதும் ஊரே, யாவரும் கேளீர். எல்லோரும் எனக்கு உறவினர் கள்தான்; எல்லா ஊரும் என் ஊர்தான். இது எவ்வளவு ஒரு உயர்ந்த, பரந்த, விரிந்த சிந்தனை. இது மனிதநேயம் இருந்தால்தான், இப்படி சிந்திக்க முடியும். சமத்துவப் பார்வை இருந்தால்தான் இதை வெளிப்படுத்த முடியும்.
மகத்தான ஆளுமைகள்தான் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரும், புரட்சியாளர் அம்பேத்கரும்.
பெரியார், சமத்துவத்திற்காகப் போராடிய ஒரு மகத்தான போராளி
ஒரு நீண்ட நெடிய, பாரம்பரியம் இருக்கிறது. அந்தப் பாரம்பரியத்தின் தற்கால அல்லது சம காலத்து ஒரு மாபெரும் ஆற்றல் அல்லது மகத்தான ஆளுமை தந்தை பெரியாரும், புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களும்.
பெரியாரை நாம் ஏதோ கடவுள் எதிர்ப்பாளர் அல்லது பார்ப்பனர் எதிர்ப்பாளர் என்று சுருக்கி, அவரை ஒரு குண்டு சட்டிக்குள்ளே அடைத்துவிடக் கூடாது.
பெரியார், சமத்துவத்திற்காகப் போராடிய ஒரு மகத்தான போராளி. சமத்துவத்தை வென்றெடுப் பதற்கு எவையெல்லாம் தடையாக இருக்கிறதோ, அவையெல்லாவற்றையும் மூர்க்கமாக எதிர்த்த போராளி.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் முன்னிலையில், எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு நினைவுப் பரிசாக, பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் சார்பில் வெளிவரும் ‘‘காமன் சென்ஸ்'' இதழை திருமலை ஞானம் வழங்கினார். உடன் கண்ணபிரான் ரவிசங்கர், மயிலாடுதுறை சிவா உள்ளனர்.
சமத்துவத்தை மறுப்பதற்கு
எது காரணமாக இருக்கிறது?
சமத்துவத்தை எது மறுக்கிறது இந்திய சமூகத்தில்? குறிப்பாக இந்து சமூகம்தான் சமத்துவத்தை மறுக்கிறது. இந்து சமூகத்தில் சமத்துவத்தை மறுப்பதற்கு எது காரணமாக இருக்கிறது? இதை மிக நுட்பமாகக் கண் டறிந்து சொன்ன தலைவர்கள்தான் தந்தை பெரியாரும், புரட்சியாளர் அம்பேத்கரும்.
இந்து சமூகம் ஒரு சமூகமே இல்லை என்கிறார்
புரட்சியாளர் அம்பேத்கர். சமூகம் என்று சொன்னால், ஒரு சொசைட்டி தேவை; அங்கே ஒரு சிஸ்டம் ஆஃப் ஜஸ்டிஸ் தேவை. இவை இரண்டுமே இல்லாத சமூகம்தான் இந்து சமூகம்.
இதை மிகச் சரியாக, நுட்பமாக உணர்ந்து அதை மக் களிடத்திலே அம்பலப்படுத்தக்கூடிய ஆற்றல் வாய்ந்த தலைவர்கள்தான் தந்தை பெரியாரும், புரட்சியாளர் அம்பேத்கரும் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
சமூகநீதி என்பது இட ஒதுக்கீட்டிற்கான கோட்பாடு என்று பார்க்கக்கூடாது சமூகநீதி என்பது சமூகத்தில் சமத்துவத்தை நிலைநாட்டுவதற்கான ஒரு வழிமுறை.
ஒவ்வொரு மனிதனுக்கும்
சமத்துவம் தேவை!
ஆகவே, இங்கே ஒரு சொசைட்டியை உருவாக்க வேண்டும் என்றால், மனிதநேயத்தின்மூலம்தான் உருவாக்கவேண்டும். மனிதநேயம் எதன்மூலம் கட்டமைக்கப்படும் என்றால், லிபர்ட்டி, ஈக்வாலிட்டி, ஃபெர்ட்டனிட்டி. ஒவ்வொரு மனிதனுக்கும் சுதந்திரம் தேவை; ஒவ்வொரு மனிதனுக்கும் சகோதரத்துவம் தேவை; ஒவ்வொரு மனிதனுக்கும் சமத்துவம் தேவை.
இந்து சமூகத்தின் பின்னால், மனுஸ்மிருதி என்கிற ஒரு கோட்பாடு இருக்கிறது.
அந்தக் கோட்பாடு என்ன சொல்கிறது என்றால், ‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' என்பதை மறுக்கிறது.
அந்தக் கோட்பாடு என்ன சொல்கிறது என்றால், ‘‘யாதும் ஊரே, யாவரும் கேளீர்'' என்பதை மறுக்கிறது.
அந்தக் கோட்பாடு பிறப்பின் அடிப்படையில் உயர்வு - தாழ்வு உண்டு என்கிறது.
பிறப்பால் ஒருவன் உயர்ந்தவன்; பிறப்பால் ஒருவன் தாழ்ந்தவன். அதை புரட்சியாளர் அம்பேத்கரும் கண்டுணர்ந்து என்ன சொல்கிறார் என்றால்,
இன்-ஈக்குவாலிட்டி என்பது எல்லா சமூகத்திலும் உண்டு. ஆனால், இந்து சமூகத்தில் கிரேடைடு இன் ஈக்குவாலிட்டி. படிநிலை சமத்துவமின்மை.
பார்ப்பனர், சத்திரியர், வைசியர், சூத்திரர்.
இதிலே ஒவ்வொரு ஜாதியும், தன்னை உயர்வாகக் கருதவும் முடியும். தன்னைக் கீழாகவும் கருத முடியும். அப்படி ஒரு உளவியல் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது.
சத்திரியனுக்கு பிராமண எதிர்ப்பு
தேவையில்லாமல் போகிறது
எல்லோருக்கும் மேலான ஜாதி பிராமணன். எல்லோருக்கும் அடிமை ஜாதி அல்லது கீழான ஜாதிகள் சத்திரியர், வைசியர், சூத்திரர்.
பார்ப்பனர்களுக்கு அடிமைப்பட்டு இருப்பவர்கள், கீழானவர்கள். பார்ப்பனர்களுக்கு கீழானவர்கள் சத்தி ரியர். அவனுக்கு மேலான ஒரு உளவியலும் கட்டமைக்க இந்த சமூகம் அமைப்பு வாய்ப்பு தருகிறது. வைசியனுக்கு மேலானவன் என்கிற அந்த உளவியலையும் தருகிறது; அவனை சமரசப்படுத்துகிறது. அவன் இதனை எதிர்த்துப் போராட முடியாத அளவிற்கு.
அப்படியென்றால், அவனுக்குக் கீழே ஒரு கீழ்ஜாதி இருக்கிற உளவியல் கட்டமைக்கப்பட்டதினால், அவன் தனக்கு மேலாக இருக்கிற ஆதிக்க ஜாதியை எதிர்த்துப் புரட்சி செய்ய வேண்டிய தேவையில்லாமல் போகிறது.
சத்திரியனுக்கு பிராமண எதிர்ப்பு தேவையில்லாமல் போகிறது.
வைசியனுக்கு, தனக்கு மேலான ஜாதி சத்திரியன் உண்டு என்று எண்ணினாலும், தனக்கு கீழான ஒரு ஜாதி, சூத்திர ஜாதி இருக்கிறது என்கிற ஒரு சமரசம் வழங் கப்படுகிறது. அதனால், அவன் பிராமண எதிர்ப்பையோ, சத்திரிய ஆதிக்கத்தையோ எதிர்க்கவேண்டும் என்கிற தேவையற்றவனாக மாறிவிடுகிறான்.
ஏன் பிராமண எதிர்ப்பு இங்கே வலுப்படவில்லை என்பதற்கான காரணத்தை புரட்சியாளர் அம்பேத்கர் சொல்கிறார், கிரேடைடு இன் ஈக்குவாலிட்டி என்பது ஒரு சமரசத்தைத் தருகிறது. அதனால், இது நீண்டகாலமாக தக்க வைக்கப்பட்டு இருக்கிறது, பாதுகாக்கப்பட்டு இருக்கிறது.
கடவுள் எதிர்ப்பு எங்கே
இருந்து வருகிறது?
ஆகவேதான் தந்தை பெரியார், சமத்துவத்திற்கு மனுஸ்மிருதி என்கிற கோட்பாடுதான் எதிராக இருக்கிறது. அந்த மனுஸ்மிருதி யாருக்கு இங்கே ஆதிக்கம் செய்கிற செய்வதற்கான வாய்ப்பைத் தந்திருக்கிறது; ஒடுக்குமுறை செய்வதற்கான வாய்ப்பைத் தந்திருக்கிறது; சுரண்டலைச் செய்வதற்கான வாய்ப்பைத் தந்திருக்கிறது என்றால், பிராமணர் என்கிற வருணத்திற்குத்தான் அது தந்திருக் கிறது. எனவேதான், பிராமண எதிர்ப்பை உயர்த்திப் பிடிக்கிறார். ஜாதி வெறுப்பல்ல; வெறும் பிராமணர் என்கிற ஜாதிக்கு எதிரான ஒரு நடவடிக்கையாக அதைப் பார்க்கக்கூடாது; மனுஸ்மிருதி தருகிற வாய்ப்பை, அந்த ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டம். அப்படித்தான் தந்தை பெரியார் அதை முன்னிறுத்துகிறார்.
ஜாதி அமைப்பை எதிர்க்கவேண்டுமானால், ஜாதி யைத் தகர்க்கவேண்டுமானால், ஜாதி கட்டமைப்பைத் தகர்க்கவேண்டுமானால், அதைப் பாதுகாக்க, அதைக் காப்பாற்ற காரணமாக இருக்கின்ற மதத்தை எதிர்க்க வேண்டும். இந்து மதம் அல்லது இந்துத்துவம் அல்லது பிராமணியம் அல்லது சனாதனம் என்கிற கோட்பாடு.
இதை எதிர்க்கவேண்டுமானால், இதைக் காப்பாற்ற ஓடிவருகிற கடவுள், விதி ஆகியவற்றை எதிர்த்தாக வேண்டும்.
சமத்துவம் வேண்டும் என்கிற போராட்டத்தில், மனுதர்மத்தை எதிர்க்கவேண்டிய தேவை!
ஆகவே, கடவுள் எதிர்ப்பு எங்கே இருந்து வருகிறது என்றால், சமத்துவத்திற்கான தேவையிலிருந்துதான் வருகிறதே தவிர, அவர் வெறுமனே கடவுளை எதிர்க்க வேண்டும் அல்லது இந்துக்களைப் புண்படுத்தவேண்டும் என்பதல்ல அவருடைய நோக்கம்.
தங்களை இந்துக்களாக எண்ணிக் கொண்டிருக்கக் கூடிய வருணத்தைச் சார்ந்தவர்களுக்கும் பாதுகாப்பு வேண்டும்; அவர்களுக்கும் சமத்துவம் வேண்டும் என்கிற போராட்டத்தில், மனுதர்மத்தை எதிர்க்கவேண்டிய தேவை வருகிறது; மனுதர்மம் கட்டமைத்திருக்கின்ற ஜாதி அமைப்பை எதிர்க்கவேண்டிய தேவை வருகிறது. ஜாதி அமைப்பைக் கட்டிக் காப்பாற்றுகிற இந்துத்துவம் அல்லது இந்து மதத்தை எதிர்க்கவேண்டி இருக்கிறது. இந்து மதத்தைக் கட்டிக் காப்பாற்றிக் கொண்டிருக்கின்ற கடவுள், மற்றும் விதி, தலைவிதி ஆகியவற்றை விமர்சிக்கவேண்டிய தேவை வருகிறது.
எனவேதான், தந்தை பெரியர் அவர்கள்,
கடவுள் இல்லை
கடவுள் இல்லவே இல்லை
கற்பித்தவன் முட்டாள்,
பரப்பியன் அயோக்கியன்
வணங்குகிறவன் காட்டுமிராண்டி
என்று அவர் மூர்க்கமாக சொல்லவேண்டிய தேவை வந்தது.
மனிதனை சிந்திக்கவிடாமல்
தடுப்பது எது?
அவர் தனிப்பட்ட முறையில் ஒரு ஜாதியை அல்லது தனிப்பட்ட முறையிலே இந்து சமூகத்தைக் காயப்படுத்த வேண்டும் என்பதற்காக அல்ல. அதற்குள் மூழ்கிக் கிடப்பவனை மீட்கவேண்டும் என்பதற்காக - இவனை சிந்திக்கவிடாமல் தடுப்பது எது? இவனை சிந்திக்க விடாமல் கட்டிப் போட்டிருப்பது எது? அதிலே கை வைக்கிறார். அந்த முடிச்சை அவிழ்ப்பதற்கான ஒரு போராட்டத்தை கையிலெடுக்கிறார்.
அப்படிப்பட்ட ஒரு மகத்தான மனிதநேய போராளி பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்கள்.
பெரியாருக்குப் பின்னால்,
50 ஆண்டுகாலமாக...
இந்தக் கருத்தியலை மக்களிடையே 50 ஆண்டுகால மாக பெரியாருக்குப் பின்னால், இன்றைக்கு வலுவாகப் பரப்பி வருகிறவர் தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள்.
தந்தை பெரியாருக்குப்பின்னால், நம்முடைய தமிழர் தலைவர் இல்லை என்றால், எண்ணிப் பாருங்கள். இந்தக் கருத்தியலைக் கொண்டு செல்வது யார்? இதைத் தக்க வைப்பதற்கு யார்? நமக்கு இருக்கிறார்கள்.
இந்த இயக்கம், இந்தத் தலைமை எந்த அளவிற்கு தமிழ்ச் சமூகத்திற்கு மட்டுமல்ல, உலக அளவில் மனிதநேயமுள்ள ஒரு சமுதாயத்தைக் கட்டமைக்க வேண்டுமானால், திராவிடர் கழகத்தின் இருப்பும், அய்யா ஆசிரியர் அவர்களின் தலைமையும் தேவைப்படுகிறது. இதை நான் அவர் மேடையில் இருக்கிறார் என்பதற்காக சொல்லவில்லை. மனமாரச் சொல்கிறேன். தேர்தல் அரசியலில் வெற்றி - தோல்வி வரும் போகும். ஆனால், மனிதநேயமுள்ள ஒரு சமூகத்தைக் கட்டமைக்கவேண்டும். சமத்துவத்தை மானுடத்தில் நிலைநாட்டவேண்டும். அதற்கு நாம் கருத்தியல் புரிதலோடு போராட வேண்டிய தேவையிருக்கிறது. அதற்காகத்தான் இந்தப் பதவி, அதற்காகத்தான் இந்த அரசியல் அதிகாரமே தவிர, வெறும் பதவி, பவுசு என்பது சொகுசான வாழ்வுக்கானது அல்ல. பெரியாரின் கனவை நனவாக்குவதற்கும், புரட்சி யாளர் அம்பேத்கர் கண்ட கனவை நனவாக்குவதற்கும் இந்தக் களத்திலும் நமக்கான ஒரு தேவை இருக்கிறது.
பன்னாட்டு மனிதநேய சுயமரியாதை மாநாட்டில் பங்கேற்றோர்
பெரியார்தான் காரணம்;
பெரியார் இயக்கம்தான் காரணம்
பெரியார் என்கிற மாமனிதர் தோன்றியதால்தான், திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற ஒரு அரசியல் இயக்கமும் உருவாக முடிந்தது. பேரறிஞர் அண்ணா, பெரியாரின் சீடராக இருந்து, இதே வழியில் அரசியல் களத்திலும் ஒரு மகத்தான பங்களிப்பை செலுத்தினார் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. அந்தக் களத்தில், அவர் தலைமையேற்ற காலத்திலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தை எப்படியாவது அழித்து ஒழித்துவிடவேண்டும்; தி.மு.க. - தி.க. இந்த இரண்டு அமைப்புகளையும் தமிழகத்திலிருந்து அப்புறப்படுத்தி விட்டால், சனாதனவாதிகளுக்கு இந்தியா முழுவதும் மிக இலகுவாக வெற்றி பெற முடியும். தமிழ்நாட்டில் மட்டும் அவர்களால், காலூன்ற முடியவில்லை, வேரூன்ற முடியவில்லை, வெற்றி பெற முடியவில்லை என்பதற்கு பெரியார்தான் காரணம்; பெரியார் இயக்கம்தான் காரணம். இது கருத்தியல் ரீதியாகப் பார்ப்பவர்களால் மட்டும்தான் புரிந்துகொள்ள முடியும். வெறும் மொழி உணர்ச்சியால், இன உணர்ச்சியால் தந்தை பெரியாரையும், திராவிடர் கழகத்தையும் சேர்த்து விமர்சிக்கக்கூடியவர்களால் புரிந்துகொள்ள முடியாது.
சனாதன சக்திகளை வீழ்த்தவேண்டும் என்கிற அடிப்படையில்தான்!
மொழி உணர்ச்சியும், இன உணர்ச்சியும் மட்டுமே தமிழ்த் தேசியம் ஆகாது. தமிழ்த் தேசியம் என்பது சனாதன எதிர்ப்பில்தான் அடங்கியிருக்கிறது. சனாதன எதிர்ப்பு என்பது இந்துத்துவ எதிர்ப்பில்தான் அடங்கியி ருக்கிறது. இந்துத்துவ எதிர்ப்பு என்பது இன்றைய பொருளில் பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட மதவெறி சக்திகளை வீழ்த்துவதில்தான் அடங்கியிருக் கிறது. அவர்களோடு உறவாடுவதில் இல்லை; அவர்களை ஆட்சியமைக்க அனுமதிப்பதில்லை. இன்றைக்கு அய்யா பிறந்த நாளில், அவரைக் கொச்சைப்படுத்துகிற வகையில் செயல்பட்டதைப்போல, அண்மையில் ஒரு வாட்ஸ்அப் செய்தி வந்தது. தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளில், அவருக்கு சாணத்தைக் கேக்காக வெட்டி ஊட்டுகிற காட்சியை சில மூடர்கள் செய்திருக்கிறார்கள். அவனும் தலைநிமிர்ந்து நடக்கவேண்டும் என்பதற்காகப் போராடிய ஒரு போராளிதான் புரட்சியாளர் தந்தை பெரியார் அவர்கள். அதை இன்னும் அவன் உணராமல் இருக்கிறார். இந்த நிலை இன்றைக்கு ஏன் வந்தது என்றால், அம்பேத்கர் சிலையை தகர்ப்பது என்பது புதிதல்ல. தமிழ் மண்ணில் பெரியார் சிலையையும் சேதப்படுத்துகின்ற துணிச்சல் வந்திருப்பதற்குக் காரணம், அவர்களுக்கு இடம் கொடுக்கக்கூடிய நிலை தமிழக அரசியலில் - சிவப்புக் கம்பளம் விரிக்கக்கூடிய சூழல் தமிழக அரசியலில் இன்றைக்கு உருவாகியிருக்கிறது. அதை எப்பாடுபட்டாவது தடுக்கவேண்டும் என்கிற அடிப்படையில்தான், சனாதன சக்திகளை வீழ்த்தவேண்டும் என்கிற அடிப்படையில்தான் தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று தமிழகம் முழுவதும் இந்த வயதிலும் சுற்றிச் சுழன்று, பம்பரமாய்ச் சுழன்று பணியாற்றியதை நாம் அறிவோம். அது வெறும் தி.மு.க. வெற்றி பெறவேண்டும் என்கிற நட்பு அடிப்படையிலான பிரச்சாரம் அல்ல. சனாதன சக்திகள் இங்கே வேரூன்ற விடாமல் தடுக்கப்படவேண்டும் என்றால், தி.மு.க. தலைமையிலான கூட்டணிதான் வெற்றி பெறவேண்டும். இல்லையேல், அவர்கள் மிக இலகுவாக இங்கே வேரூன்றி விடுவார்கள் என்கிற தொலைநோக்கு பார்வையோடுதான் அந்தக் களப்பணிகளை அவர் சிரமேற்கொண்டு செய்தார். அவர் விரும்பியதைப்போல், திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. அதில் நானும் ஒருவன், உங்கள் வாழ்த்துகளோடு.
மனிதநேயமே உலகின்
தலைசிறந்த கொள்கை!
உங்கள் வாழ்த்துகள் என்னுடைய வெற்றிக்குப் பயன்பட்டது என்பது ஒருபுறம் மகிழ்ச்சி அளித்தாலும், நாம் அனைவரும் சேர்ந்து பெரியாரின் கனவை, புரட்சியாளரின் அம்பேத்கரின் கனவை நனவாக்குவதற்கு உறுதியேற்போம். அதுவே இந்த மாநாட்டின் செய்தியாக அமையட்டும் என்று சொல்லி, வாய்ப்புக்கு நன்றி கூறி, நிறைவு செய்கிறேன்.
மனிதநேயமே உலகின் தலைசிறந்த கொள்கை
மனிதநேயமே உலகின் தலைசிறந்த கொள்கை
பெரியாரியம் என்பது வேறல்ல, மனிதநேயம்
அம்பேத்கரியம் என்பது வேறல்ல, மனிதநேயம்
இதை நாம் புரிந்தால், நம்முடைய பயணம் எவ்வளவு தூரம் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும் என்று சொல்லி என்னுரையை நிறைவு செய்கிறேன்.
நன்றி, வணக்கம்!
இவ்வாறு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் உரையாற்றினார்.
- விடுதலை நாளேடு, 24. 9. 19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக