ஞாயிறு, 1 செப்டம்பர், 2024

பகுத்தறிவுத் துறையில் பெரியார் செய்த புரட்சியை சமயத் துறையில் செய்தவர் குன்றக்குடி அடிகளார்!

 


விடுதலை நாளேடு

குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழாவில் கழகத் தலைவர் எழுச்சியுரை!

காரைக்குடி, செப்.1 தவத்திரு குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழாவில் கழகத் தலைவர் ஆசிரியர், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

காரைக்குடி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழா காரைக்குடியில் உள்ள கண்ணதாசன் மணிமண்டபத்தில் 31.08.2024 அன்று மாலை 6 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது. திராவிடர் கழகத்தின் காரைக்குடி மாவட்டக் காப்பாளர் சாமி திராவிடமணி தலைமையில் காரைக்குடி மாவட்டத் தலைவர் ம.கு.வைகறை அனைவரையும் வரவேற்றுச் சிறப்பித்தார்.

சாமி திராவிடமணி தனது தலைமை உரையில், காரைக்குடியில் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அடிகளார் கலந்துகொண்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை தரவுகளுடன் பட்டியல் இட்டார். நிகழ்ச்சியில் ‘‘தவத்திரு குன்றக்குடி அடிகளார் அறிவுப்பெட்டகம்’’ எனும் நூல் வெளியிடப்பட்டது. தி.மு.க.மாநில இலக்கிய அணி புரவலர் மு.தென்னவன் வெளியிட்டு உரையாற்றினார். முதல் பிரதியை காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி பெற்றுக்கொண்டார். தொடர்ந்து காரைக்குடி துணை மேயர் நா.குணசேகரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நூலைப் பெற்றுக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி, தவத்திரு குன்றக்குடி அடிகளாரை வாழ்த்தி உரையாற்றினார். தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடக்க உரை ஆற்றினார். நிறைவாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஏற்புரை வழங்கினார். காரைக்குடி மாவட்டச் செயலாளர் சி.செல்வமணி நன்றி கூறினார்.

காரைக்குடி மாவட்ட துணைத் தலைவர் கொ.மணி வண்ணன், மாவட்ட துணை செயலாளர் இ.ப.பழனிவேலு, சிவகங்கை மாவட்ட காப்பாளர் வழக்குரைஞர் ச.இன்பலாதன், நகர தலைவர் ந.செகதீசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தி.புரூனோ என்னாரெசு, மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் பிரவீன் முத்துவேல், தி.தொ.ச. மாவட்ட தலைவர் சி.சூரியமூர்த்தி, கல்லல் ஒன்றிய தலைவர் கொரட்டி வீ.பாலு, தேவகோட்டை நகர தலைவர் வீர.முருகப்பன், தேவகோட்டை ஒன்றிய தலைவர் வாரியன்வயல் ஜோசப், தேவகோட்டை நகர ப.க. அமைப்பாளர் சிவ.தில்லைராசா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வெளியிடப்பட்ட புத்தகத்தை பார்வையாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் மேடைக்குச் சென்று உரிய விலை கொடுத்து பெற்றுக் கொண்டனர். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், குன்றக்குடி மடத்தின் மறைந்த குன்றக்குடி அடிகளாரின் உதவியாளர் செல்வராஜ், பொன்னம்பல அடிகளாரின் உதவியாளர் சிங்காரவேலன் ஆகியோருக்கு சிறப்பு செய்தார். முன்னதாக பொன்னம்பல அடிகளாருக்கு ஆடையணிவித்து சிறப்பு செய்தார். பொன்னம்பல அடிகளாரும் மேடையில் வீற்றிருந்த ஆசிரியர் உள்ளிட்ட பெருமக்களுக்கு ஆடை யணிவித்து சிறப்பு செய்தார்.

நாம் காட்டும் நன்றித் திருவிழா!

தொடர்ந்து ஆசிரியர் பேசினார். அவர் தனது உரையில், ‘‘எங்களுக்கு வண்ணங்கள் முக்கியமல்ல, எண்ணங்கள் தான் முக்கியம்” என்று கருப்புச் சட்டை, காவி நிறமும் ஒன்றாக மேடையில் இருப்பதை சுட்டிக்காட்டித் தொடங்கினார். இந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தைச் சொல்ல வந்த ஆசிரியர், ‘‘இது தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு விழா மட்டுமல்ல, அவருக்கு நாம் காட்டும் நன்றித் திருவிழா” என்றார். தந்தை பெரியாரைப் பற்றி, அறிவுப் புரட்சி செய்தவர், சிந்தனைப் புரட்சி செய்தவர், கருத்துப் புரட்சி செய்தவர் என்றும் இவைகள் மூலம் சமூகத்தில் ரத்தமின்றி, யுத்தமின்றி பெரும் மாற்றங்களை நிகழ்த்தியவர் என்றும் குறிப்பிட்டுவிட்டு, ‘‘இப்படி பகுத்தறிவுத் துறையில் தந்தை பெரியார் செய்த புரட்சியை சமயத்துறையில் செய்து காட்டியவர் தவத்திரு அடிகளார் அவர்கள்” என்று இரண்டு தத்துவ கர்த்தாக்களையும் மிகச்சரியாக ஒப்பீடு செய்தார். மொழிப் போராட்டத்தில் அடிகளாரின் பங்கைக் குறிப்பிட்டுப் பேசிய ஆசிரியர், ‘‘இந்த நூற்றாண்டு விழாவை என் வாழ்நாளில் ஒரு திருவிழா போல எண்ணுகிறேன்” என்றார் நன்றிப் பெருக்குடன்.

குன்றக்குடி மடம்
சமத்துவத்துக்கான மடம்!

மேலும் அவர், ‘‘குன்றக்குடி மடம் சமத்துவத்துக்கான மடம். வேறு எந்த மடத்திற்குச் சென்றாலும் இந்த சமத்து வத்தைக் காண இயலாது” என்றார். ‘‘குன்றக்குடி மடம் வெறும் வயிற்றுப் பசியை மட்டுமல்ல, அறிவுப் பசியையும் தீர்க்கும்” என்றார். தவத்திரு பொன்னம்பல அடிகளார் அருகில் இருந்து ஆசிரியர் கூற்றை மிகவும் கவனமாக கேட்டுக்கொண்டிருந்தார். தந்தை பெரியாரின் மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு என்ற கூற்றின் விரிவை விளக்கிய ஆசிரியர், அதன் தாக்கத்தால் தான் அடிகளார் தந்தை பெரியாரிடம் ஈர்க்கப்பட்டார் என்று கூறினார். 1966 இல் சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட அடிகளாரை பெரியார், தவத்திரு குன்றக்குடி சந்நிதானம் என்று குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டி திராவிடர் இயக்கம் அடிகளாரை எப்படிப் பார்த்தது என்பதை விவரித்தார். அதைத் தொடர்ந்து இன்றைய சந்நிதானமும் அதே அளவுக்கு செயல்பட்டு வருவதை சேர்த்துச் சொன்னார்.

மண்டைக்காட்டில் ஜாதிக்கலவரம் நடந்தபோது களத்தில் நின்று போராடியவர் அடிகளார் என்றும், அங்கே ஒரு சிலர் மீன் விற்பனையைத் தடை செய்த போது, அதுவரை மீனை தொட்டறியாத அடிகளார் மீனை கையில் எடுத்து ஏலம் போட்டு விற்பனை செய்தவர் என்று அடிகளாரின் முழுப் பரிமாணத்தையும் இந்த ஒரு நிகழ்வின் மூலம் விளக்கினார். அதே போல், ‘‘தந்தை பெரியார் இறந்த பிறகு பெரியார் திடலுக்கு வந்த அடிகளார் தந்தை பெரியார் பயன்படுத்திய படுக்கையில் பெரியார் எழுதுவது போன்றிருக்கும் ஒரு படத்தின் முன் நின்று தேம்பித் தேம்பி அழுததை நேரில் பார்த்த சாட்சி நான்” என்று கூறி பெரியாருக்கும், அடிகளாருக்கும் இருந்த பிணைப்பை எடுத்துரைத்து, ‘‘அப்படிப்பட்ட புரட்சித் துறவிக்குதான் இங்கே நூற்றாண்டு விழா கொண்டாடுகிறோம்” என்று குறிப்பிட்டார். இறுதியாக ஆசிரியர், ”சொல்வதற்கு ஏராளமாக இருக்கிறது என்பதை நினைவூட்டி, தனக்கென வாழாமல் பிறருக்காக வாழ்ந்த அடிகளார் புகழ் ஓங்குக” என்று கூறி உரையை நிறைவு செய்தார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தவர்கள்

மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர் சுப.மதியரசன், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் சேங்கை மாறன், புதுக்கோட்டை மாவட்ட தி.மு.கழக பொறுப்பாளர் த.சந்திர சேகரன், மாநில கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், வி.சி.க. மாவட்ட செயலாளர் இளைய கவுதமன், ம.தி.மு.க. மாநில சட்ட திட்டக்குழு உறுப்பினர் சிற்பி சேது.தியாகராசன், ஏ.அய்.டி.யூ.சி. மாநிலக்குழு உறுப்பினர் பழ.இராமச்சந்திரன், தலைமைக்கழக அமைப்பாளர் மதுரை வே.செல்வம், அழகப்பா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் சொ.சுப்பையா, பொறியாளர் கரிகாலன், தொழில்நுட்பக் குழு ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில்வம், பேராசிரியர் ப.சுப்பிரமணியம், தாம்பரம் மாவட்ட தலைவர் முத்தையன், மாவட்ட செயலாளர் நாத்திகன், தாம்பரம் மோகன்ராஜ், சேத்பட் நாகராசன், திருவாரூர் மாவட்ட தலைவர் வீ.மோகன், திருவாரூர் சாமிநாதன், மாநில ப.க. துணைத் தலைவர் அ.சரவணன், மாநில ப.க. துணைப் பொதுச் செயலாளர் முனைவர் மு.சு.கண்மணி, அறந்தாங்கி மாவட்ட தலைவர் கைகாட்டி மாரிமுத்து, அறந்தாங்கி மாவட்ட செயலாளர் ஜெகதாப்பட்டினம் குமார், புதுக்கோட்டை மாவட்ட தலைவர் மு.அறிவொளி, புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பெ.வீரப்பன், மதுரை மாவட்ட தலைவர் சுப.முருகானந்தம், மதுரை மாவட்ட செயலாளர் இரா.லீ.சுரேசு, மாநில ப.க. எழுத்தாளர் மன்ற செயலாளர் அ.முருகானந்தம், சென்னை தங்கமணி, தனலெட்சுமி, மரு.ச.மலர்க்கன்னி, ச.கைவல்யம், கை. கலாவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக