
சென்னை, செப்.11 தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்த நாள் மற்றும் அறிஞர் அண்ணாவின் 116 ஆவது பிறந்த நாள் விழாக்கள் ஜப்பானில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இவ்விழாக்களில் பங்கேற்பதற்காகத் திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நேற்று (10.9.2024) ஜப்பான் புறப்பட்டுச் சென்றார். ஜப்பான் செல்லுமுன் சிங்கப்பூருக்கு இன்று (11.09.2024) காலை சென்ற தமிழர் தலைவருக்குத் தோழர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
தமிழர் தலைவருக்கு சிறப்பான வரவேற்பு
இவ்வரவேற்பு நிகழ்வில் ‘செம்மொழி’ இதழின் ஆசிரியர் எம்.இலியாஸ், பெரியார் சமூகச் சேவை மன்றத் தலைவர் க.பூபாலன், பொறுப்பாளர்கள் இராஜராஜன், நா.மாறன், கவிதா, தமிழ்நாடு செய்தித் தொடர்பு கூடுதல் இயக்குநர் (ஓய்வு) ச.பாண்டியன், பா.பிரதாப், முகமது பர்வீஸ், தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகப் பொருளாளர் சி.தமிழ்ச்செல்வன், த.அகிலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஜப்பான், டோக்கியோ நகரில், ஃபுனாபொரி டவர் ஹாலில் 15.09.2024 அன்று நடைபெறும் நிகழ்வில், ‘‘அண்ணா கண்ட கனவு’’ எனும் தலைப்பில் மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா அவர்களும், ‘‘பெரியாரின் சமூகப் பார்வை’’ எனும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்களும் உரையாற்ற இருக்கிறார்கள்.
நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் வி. குன்றாளன், ச. கமலக்கண்ணன், ரா. செந்தில்குமார், அ.கோவிந்தபாசம் ஆகியோர் கூறுகையில், நிகழ்விற்கான அரங்கம் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட நிலையில், பங்கேற்பாளர்கள் அதிகம் வரும் சூழல் இருப்பதாகக் கூறினர்.
தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்த நாள் விழாவிற்காக சிறப்பான ஏற்பாடுகள்!
இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து நாளை (12.9.2024) இரவு புறப்பட்டு, 13 அன்று காலை ஆசிரியர் ஜப்பான் சென்றடைகிறார். ஆசிரியருடன் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தகவல் தொழில் நுட்பக்குழு மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில்வம் ஆகியோர் உடன் செல்கின்றனர்.
அதேபோல செப்டம்பர் 17 ஆம் தேதி சிங்கப்பூரிலும் பெரியார் பிறந்த நாள் நிகழ்வுகள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக