
இலங்கையின் வடபகுதியில் அமைந்திருப்பது தான் யாழ்ப்பாண மூவலந்தீவு (தீபகற்பம்). இந்த மாகாணத்தில் வட்டுக்கோட்டை தொகுதி, வலிகாமம் மேற்குப் பிரிவில் சுழிபுரம், பண்ணாகத்தில் 1927 ஆகஸ்ட் 26 அன்று பிறந்தவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம். இளமைக் காலம் முதலே அரசியல் ஆர்வம் கொண்டிருந்து 1951-இல் வழக்குரைஞரான அமிர்தலிங்கம், 1952-இல் இலங்கை தமிழரசுக் கட்சியில் இணைந்து வட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டார். 1957-இல் நடைபெற்ற தேர்தலில் முதல்முறையாக வெற்றிபெற்று இலங்கை நாடாளுமன்றம் சென்றவர், 1977-இல் இலங்கை எதிர்க்கட்சித் தலைவரான முதல் தமிழர் என்னும் சிறப்பையும் பெற்றவர்.
செல்வாவோடு சென்னை பயணம்
ஈழத் தந்தை செல்வாவின் அடியொற்றி வளர்ந்தவர். தந்தை செல்வாவின் தமிழ்நாடு பயணத்தின் போது, தந்தை பெரியார், அன்றைய முதலமைச்சர் கலைஞர் உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்த போது அமிர்தலிங்கம் அவர்களும் வந்திருந்தார். அந்தத் தொடர்பு 1987-இல் அவர் மறையும் வரை தொடர்ந்தது. ஆசிரியர் கி.வீரமணி, கலைஞர், எம்.ஜி.ஆர். ஆகியோருடன் நட்பைப் பேணியவர். நூற்றாண்டு காணவிருக்கும் அவரது 97-ஆம் ஆண்டு பிறந்தநாளுக்குத் தான் அவரது நெடுநாள் நண்பரும், அரசியல் துறையில் தமிழ்நாட்டில் அவரது செயல்பாடுகளுக்கு உறுதுணையாகத் திகழ்ந்தவருமான திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அழைக் கப்பட்டிருந்தார்.
ஈழத்தில் நடந்த இனப் படு கொலையின் இறுதிக் கட்டமான 2009-க்குப் பிறகு, அரசு ரீதியாகத் தமிழ்நாட்டிலிருந்து பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மதவாதத்தைப் பரப்பும் முயற்சிகளும் தமிழ்நாட்டிலிருந்து சென்ற சிலரைக் கொண்டு நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால், ஈழத் தமிழர் உரிமைக்கான போராட்டங்களில் முன்னின்று வழிநடத்திய தலைவரான திராவிடர் கழகத் தலைவரின் இந்தப் பயணம் பொது நிகழ்வில் மக்களிடம் உரையாற்றும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்த நிகழ்வும் கூட!
அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையின் சார்பில் அறங்காவலர்கள் தங்க. முகுந்தன், க. கவுரிராஜன் ஆகியோர் நினைவுரையாற்றிய தமிழர் தலைவருக்கு சிறப்பு செய்தனர்
ஈழத்துத் தொப்புள் கொடி உறவுகளும்
திராவிடர் கழகமும்
திராவிடர் கழகம் தான் ஈழத் தமிழர் பிரச்சினையைத் தமிழ்நாட்டின் பட்டி தொட்டியெங்கும் கொண்டு சென்று இன உணர்வூட்டிய இயக்கம். தமிழ்நாடு ஈழத் தமிழர்களின் பின்னால் நிற்கிறது என்ற உணர்வை உருவாக்கியது தமிழர் தலைவரின் போராட்டங்களும், பேச்சும் தான். அன்றைய திராவிடர் கழகப் பொதுச் செயலாளரும், இன்றைய தலைவருமான ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தான் இந்தப் போராட்டக் களத்தின் முன்னோடியாகவும், இன்றும் களத்தில் நிற்பவராகவும் திகழும் ஒரே தலைவர். ஈழத் தமிழர் பிரச்சினையை அந்நிய நாட்டுப் பிரச்சினையாக, அண்டை நாட்டுப் பிரச்சினையாக மட்டுமே கருதிக் கொண்டிருந்த இந்திய ஒன்றிய அரசுகளுக்கு, அது இந்நாட்டில் வாழும் மக்களின் தொப்புள்கொடி உறவு கொண்ட மக்களின் பிரச்சினை என்பதைப் புரியவைத்து, இந்திய அளவிலான தலைவர்களின் கவனத்தை ஈர்த்து, அவர்களைச் சிந்திக்கச் செய்ததும், உலக அரங்கில் இப் பிரச்சினையைக் கொண்டு செல்ல, அய்.நா.வுக்கும், பிறநாட்டுத் தூதரகங்களுக்கும் தமிழ்நாட்டிலிருந்து
தமிழர் தலைவரின் உரையை செவி மடுத்த முக்கிய பிரமுகர்கள்
வேண்டுகோள் செல்ல வழிகாட்டியவரும் அவரே!
ஜனநாயக வழியில் உரிமைக் குரல்
இந்தப் பின்னணியில் இரு நாட்டு உறவுகளின் போக்கையும் தீர்மானிக்கக் கூடியதாகவும் திராவிடர் கழகத் தலைவரின் பயணம் இருக்கும் என்பதால், இரு நாட்டு அரசுகளாலும் மிகுந்த கவனமாகப் பார்க்கப்பட்ட பயணம் ஆகும். அதை… பயணம் முழுவதும் உணர முடிந்தது. ஜனநாயக வழியில் உரிமைக் குரலை எழுப்பி, போராட்டங்கள் நடத்தி அதில் வெற்றியும் கண்டுவரும் பொறுப்புணர்வு மிக்க ஓர் இயக்கத்தின் தலைவர் என்னும் உண்மையையும் அவர்கள் உணராமல் இருந்திருக்க முடியாது.
அமிர்தலிங்கம் சிலைக்கு மாலை
தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் சிலை அவர் பிறந்த பண்ணாகம் அருகில் உள்ள வலிகாமம் பிரதேச சபை வளாகத்தில் அமைந்துள்ளது. மாலை 3 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கவிருந்த சூழலில், பகல் 12 மணியளவில் அங்கு சென்றார் தமிழர் தலைவர். இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா அவர்களும் அங்கு வந்துவிட்டார்கள். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களும், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோரும் தலைவர் அ.அமிர்தலிங்கம் சிலைக்கு மாலையிட்டனர். அண்மையில் மறைந்த தமிழ்த் தேசியக் கூட்டணித் தலைவரும் அந்நாளைய எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் அவர்களால் 2018-இல் திறந்துவைக்கப்பட்ட சிலை அது. உடன் திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், ஆர்.பேரின்பநாயகம், தங்க.முகுந்தன், பெரியவர் கனகசபாபதி, கலை அமுதன் ஆகியோர் இருந்தனர்.
தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் சிலைக்கு
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மாலை அணிவித்தார்.
மாலை 3.30 மணிக்குத் தொடங்கியது அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் பிறந்தநாள் விழா. ரிம்மர் மண்டபம் என்று தமிழில் வழங்கப்படும் மண்டபத்தின் ஆங்கிலப் பெயர் Trimmer Hall என்பதாகும். யாழ்ப்பாணத்தில் முக்கிய நிகழ்வுகள் நடக்கும் மண்டபம் அது. திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர், யாழ் வருகை தந்துள்ள செய்தி, நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் பெற்றவர்கள் மட்டுமல்லாமல், ஊடகங்களில் வந்த செய்தி காரணமாகப் பரவலாகத் தெரிந்திருந்தது. அதனால் பல தரப்பினரும் நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்தனர். தமிழர் தலைவர் அவர்களின் அன்றைய உரை அவரது பழுத்த பொதுவாழ்வின் அனுபவத்திலிருந்தும், உலக அரசியல் நடப்பு புரிதலிலிருந்தும், தலைவருக்கான பொறுப்புணர்விலிருந்தும், மாறாத இன உணர்விலிருந்தும் விளைந்ததாகும்.
நிகழ்ச்சிக்கு முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் வந்திருந்தனர். மதத் துறையிலும், அரசுத் துறையிலும் பிறதுறைகளிலும் பணியாற்றி ஓய்வு பெற்ற மூத்தவர்கள், மகளிர், இளைஞர்கள் என பல தரப்பட்டவர்களும் வந்து உரையைச் செவி மடுத்தனர்.
ஆசிரியரின் உரையும் – ஊடகங்கள்
தந்த முதன்மையும்
ஈழத்தின் ஊடகங்கள் அனைத்தும் தமிழர் தலைவரின் உரை எந்தத் திசையில் இருந்தது என்பதைப் புரிந்து செய்தி வெளியிட்டிருந்தன. ஈழநாடு, உதயன், வீரகேசரி, ஈழ சுதந்திரன், காலைக்கதிர், மாலைக்கதிர் என ஏராளமான அச்சு, இணைய ஊடகங்கள் வழங்கியிருந்த தலைப்புகளும், காலைக்கதிர் ஏட்டின் தலையங்கமும், ஈழநாடு இதழில் வெளிவந்திருந்த கார்ட்டூனும் முதிர்ச்சி பெற்ற ஒரு தலைவரின் அறிவு சான்ற உரையை, நோக்கத்தைச் சரியாக வெளிப்படுத்தியிருந்தன. ஏறத்தாழ எல்லா ஊடகங்களின் தலைப்புகளும் ‘ஓரணியாகத் தமிழர்கள் ஒன்று திரள வேண்டும்’ என்ற தமிழர் தலைவரின் அறைகூவலை எதிரொலித்தன.
இந்த நிகழ்ச்சி மற்றும் அதில் ஆசிரியர் ஆற்றிய உரை ஆகியவற்றின் முக்கியத்துவமும், வரலாற்றுத் தேவையும் இனி வருங்காலத்தில் உணரக் கூடியதாக இருக்கும்.
தமிழ்நாட்டின் பங்களிப்பும், தமிழர் தலைவரின் பங்கெடுப்பும் – ஈழ மக்களின் நன்றிப் பெருக்கும்
ஆசிரியரின் உரைக்குப் பின்னர் தமிழ் மக்கள் நன்றிப் பெருக்குடன் தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டனர். ஈழ மக்களின் நலனுக்காகத் தமிழர் தலைவர் ஆற்றியிருக்கும் பணிகளை அறிந்தவர்கள் என்பதால், இன்றும் தாங்கள் இருக்கும் நிலையினின்றும் மேம்படுதற்குத் தமிழ்நாட்டின் பங்களிப்பும், அதற்கு இத் தலைவரின் செயல்பாடுகளும் அவசியம் என்பதை அவர்கள் வேண்டுகோளாகவே விடுக்கத் தயங்கவில்லை. நெடுநாள் பிரிவுக்குப் பின்னர் சந்திக்கும் உறவுகளின் மனநிலைதான் அங்கிருந்த அனைவருக்கும் இருந்தது – தமிழர் தலைவர் உள்பட!
பொறுமையாக அனைவருடனும் உரையாடிய பின்னர் தான் அங்கிருந்து கிளம்பினார் ஆசிரியர். காலையிலிருந்து தொடர்ந்து பல இடங்களுக்கும் சென்றுவந்து, பின்னர் உரையாற்றி, நிகழ்வில் பங்கேற்ற களைப்பிலும், கொக்குவில் கிழக்குப் பகுதியில் தங்கியிருந்த சத்க் இன் விடுதிக்கு வந்து சேர்ந்தோம். அடுத்த சில நிமிடங்களில் ஓர்
ஊடகவியலாளர் அங்கு வந்து சேர்ந்தார். தமிழ்நாட்டில் பயின்ற ஈழத்தைச் சேர்ந்த இளம் ஊடகவியலாளர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடம் பேசியிருந்ததாகத் தெரிவித்தார். அவருடைய வேண்டுகோளுக்காக அன்றும் ஒரு காணொளி நேர்காணல் – நிமிர்வு என்ற ஊடகத்திற்காக! ஈழத்திற்காகத் திராவிடர் கழகம் பெரும் பங்கு ஆற்றியிருப்பதை அறிந்தவர் அவர். அதனை இன்றைய இளைஞர்களுக்குச் சொல்ல வேண்டும், அப்போதுதான் தவறானவர்களிடம் அவர்கள் சிக்க மாட்டார்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். பெருமைக்காக அல்ல என்றாலும், சரியான வரலாற்றுப் புரிதலை உருவாக்குவதற்காகவேனும் அதனை நீங்கள் செய்தாக வேண்டும் என்று உரிமையுடன் அவர் விடுத்த வேண்டுகோளில் நியாயம் இருக்கவே செய்கிறது. இதுவரை ஈழத் தமிழர் உரிமைப் போரில் திராவிடர் கழகத்தின் பங்களிப்பு முழுமையாகப் பதிவு செய்யப்படவில்லை தான். விரைவில் அது நிறைவேறும் என்று நம்புகிறோம். முக்கால் மணி நேரத்திற்கும் மேலாக நடந்தது அந்தச் சந்திப்பு.
மறுநாள் காலையில் சில இடங்களுக்குச் சென்றுவிட்டு, சென்னை திரும்ப வேண்டும்.
(நாளையும் தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக