எரிக்கப்பட்ட யாழ்ப்பாண நூலகத்தின் பழைய கட்டடமும் – புதுப்பிக்கப்பட்டு தற்போது செயல்பாட்டிலுள்ள யாழ்ப்பாண நூலகமும்
ஒர் இனத்தை அழிக்க, அதன் மொழி யையும், பண்பாட்டையும் அழித்தலும், வரலாற்றை மறக்கடித்தலும் முக்கியமான நடவடிக்கைகள். வரலாறு நெடுக இதுவே நடந்துவந்திருக்கிறது. தப்பாமல் இலங்கையில் நடைபெற்றதும் அதுவே!
யாழ் பொது சன நூலகம் 97,000 புத்தகங்களையும், ஓலைச் சுவடிகளையும், அரிய பல ஆவணங்களையும் கொண்டிருந்த இலங்கையின் மிகப்பெரிய நூலகம். ஆசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றும் கூட! 1933-ஆம் ஆண்டு இலங்கை நீதித் துறையில் அலுவலராகப் பணியாற்றியவரான க.மு.செல்லப்பா அவர்களின் தனிப்பட்ட சேகரிப்புகள், பொது மக்களின் பங்களிப்புடன் புத்தகங்கள் திரட்டப்பட்டுக் கட்டப்பட்ட ஒன்றாகும்.
யாழ்ப்பாண நூலகம் எரியூட்டப்பட்டு
சிதைக்கப்பட்ட கொடுமை!
1981-ஆம் ஆண்டு மே மாதம் 31-ஆம் நாள் சிங்களக் காவல்துறையினராலும், துணை ராணுவப் படையினராலும் யாழ்ப்பாணத்தில் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழர் அய்க்கிய விடுதலைக் கூட்டணித் தலைவருமான யோகேஸ்வரன் வீடு, தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகம், பல வணிக நிறுவனங்கள், கடைகள், தமிழர் வீடுகள் தீக்கிரையாகின. வீடுகளிலிருந்து நான்கு தமிழர்களைத் தெருவில் இழுத்து வந்து கொன்று போட்டனர். ஜூன் 1-ஆம் தேதி இரவு யாழ்ப்பாண நூலகத்திற்குத் தீ மூட்டினர் சிங்களப் காவல்துறையினரும், துணை ராணுவக் குழுக்களும்! வரலாற்று ஆவணக் காப்பகமாக, பண்பாட்டுப் பெட்டகமாகத் திகழ்ந்த யாழ் பொது சன நூலகம் முற்றிலும் சிதைந்தது. ஓர் அறிவுக் கருவூலம் அழிந்துபட்டது. இலங்கை அரசின் இனவாத நடவடிக்கைகளை உலகிற்கே பட்டாங்கமாய்க் காட்டியது யாழ் நூலகத்தில் எரிந்த தீ!

யாழ்ப்பாண நூலகத்தில் குழந்தைகளிடம் தமிழர் தலைவர் அளவளாவினார்.
‘பெரியார் பிஞ்சு’ இதழைக் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் குழந்தைகளிடம் வழங்கினார்.
1983 முதல் பல ஆண்டுகள் முயற்சித்து 2003 வரை பல கட்டங்களாக அந்நூலகத்தில் மீள் கட்டமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
உலகில் எங்கு சென்றாலும்
நூலகங்கள், புத்தகக் கடைகளுக்குச் செல்லுபவர் ஆசிரியர்
எங்கு பயணம் சென்றாலும், அங்குள்ள நூலகங்களையும், புத்தகக் கடைகளையும் ஆர்வத்துடன் சென்று பார்ப்பவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள். யாழ்ப்பாணப் பயணம் உறுதியானது முதலே, யாழ் நூலகத்துக்குச் செல்ல வேண்டும் என்பதில் கவனமாக இருந்து, பயணத் திட்டத்தில் அதனை இணைக்கச் செய்தார். அகத்தில் இருந்த உணர்வுப்பூர்வமான ஆர்வம் அவரது முகத்திலும் தெரிந்ததைக் காண முடிந்தது.

யாழ்ப்பாண பொது நூலகத்திற்குப் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன, திராவிடர் கழக வெளியீடுகளைத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வழங்கினார்.
உலக நாடுகளுக்குப் பயணப்படும்போது அங்குள்ள நூலகங்களில் தந்தை பெரியார், திராவிட இயக்க வரலாற்று நூல்கள் இடம்பெற வேண்டும் என்பதில் குறியாக இருப்பார். அப்படித் தான் சீனா, அமெரிக்கா, சிங்கப்பூர், ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் முதன்மையான நூலகங்களில் தந்தை பெரியார் சிந்தனைக் கருத்துகளைப் பன்மொழிப் புத்தகங்களாகக் கொண்டு சென்று வழங்கியுள்ளார்.

யாழ்ப்பாண பொது நூலகப் பொறுப்பாளர்கள் மற்றும் வாசகர்களுடன் தமிழர் தலைவர்
அதேபோல் தமிழ்நாட்டிலிருந்து யாழ்ப்பா ணத்திற்குக் கிளம்பும்போதே, தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், தமிழர் தலைவர் ஆசிரியர் உள்ளிட்டோர் எழுதிய புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டன.
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு உயிர்க் கொடை உத்தமர்கள் நினைவிடத்திலி ருந்து கிளம்பி, யாழ் பொதுசன நூலகத்திற்குச் சென்று நாம் இறங்கியது – அங்கிருந்த திருவள்ளுவர் சிலை அருகில்! உதவி நூலகர் அனிதா, நூலகர்கள் ஆனந்தராசா, இராணி, நூலக உதவியாளர் கோதை உள்ளிட்டோர் தமிழர் தலைவரை வரவேற்றனர். பொது நூலகத்தின் அனைத்துப் பிரிவுகளையும் ஆர்வத்துடன் சுற்றிக் காட்டினர். முக்கியச் செய்திகளை எடுத்துக் கூறினர்.
யாழ் பொது நூலகத்திற்குப் புத்தகங்கள்
வழங்கினார் தமிழர் தலைவர்

திருக்குறள் தமிழர்களின் மதம் என்று தந்தை பெரியாரால் போற்றப்பட்ட நூலாகும். காணுமிடமெல்லாம் திருவள்ளுவர் தான் யாழ் பொது நூலகத்தில்! நூலகத்தின் உள்புறத்தில் இருந்த திருவள்ளுவர் சிலை அருகிலும், இந்தியாவின் மேனாள் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் அவர்கள் சிலை அருகிலும் புத்தகங்களை நூலகப் பொறுப்பாளர்களிடம் வழங்கினார் தமிழர் தலைவர்.
அங்கிருந்த குழந்தைகள் பிரிவுக்குச் சென்ற ஆசிரியர், குழந்தைகளிடம் உரையாடினார். எல்லா குழந்தைகளிடமும் அவர் கேட்கும் கேள்வியான “வருங்காலத்தில் என்ன ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்?” என்ற கேள்வியையும் கேட்டார். மூன்றாம் வகுப்புச் சிறுவன் வருண் சொன்னார்: “நான் வெட்னரி டாக்டராகப் போகிறேன்.” சரியாகத் தான் சொல்கிறாரா என்று உறுதிப்படுத்தும் நோக்கில், ‘‘அப்படியென்றால், விலங்குகளுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவரா?’’ என்று கேட்டார் ஆசிரியர். ‘ஆம்’ என்றான் சிறுவன். ‘‘எப்படி அந்தத் துறையைக் குறிப்பாகச் சொல்கிறீர்கள்’’ என்று கேட்டார். “நாம் நமக்குத் தேவையானவற்றைக் கேட்டுச் சரி செய்து கொள்ள முடியும்.

சிதைக்கப்பட்ட யாழ்ப்பாண நூலகக் கட்டட நிழற்படங்களைத் தமிழர் தலைவர் பார்வையிடல்
விலங்குகளெல்லாம் மிகவும் கஷ்டப்படுகின்றன அல்லவா?” என்றார் வருண். அடடா… அவரது உயிர்நேயத்தைக் கண்டு மகிழ்ந்து தட்டிக்கொடுத்தார் ஆசிரியர். குழந்தைகள் பிரிவுக்குப் ‘பெரியார் பிஞ்சு’ இதழை வழங்கி, அவர்களுடன் கலகலப்பாகக் கலந்துரையாடினார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ். குழந்தைகள் பிரிவுப் பொறுப்பாளர் இராணி நன்றி தெரிவித்ததுடன், ‘‘குழந்தைகளுக்கு எமது வெளியீடுகளை அனுப்பி வைக்கிறோம்’’ என்று பொதுச் செயலாளர் உறுதி வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார். இந்தியாவில் இருந்து வெளிவந்த புத்தகங்களுக்கென தனிப்பிரிவில் ஏராளமான புத்தகங்கள் இடம்பெற்றிருந்தன.
அரிய கருத்துக் கருவூலங்கள்
அழிக்கப்பட்ட சோகம்
அடுத்து, தமிழர் தலைவரை ஆவணக் காப்பகப் பிரிவுக்கு அழைத்துச் சென்றனர் நூலகப் பொறுப்பாளர்கள். அப்பிரிவுக்குப் பொறுப்பாளரான தர்மிளா செந்தூரன் அவர்கள், நூலக உதவியாளர் ஜெஸ்டின் ஆகியோர் கடந்த 20 ஆண்டுப் பத்திரிகைகள் சேகரிக்கப்பட்டிருப்பதையும், ஓலைச் சுவடிகள் சிலவற்றைத் தேடித் திரட்டியிருப்பதையும் எடுத்துக் காட்டினார்கள். நூலகம் குறித்து அங்கும், பொதுப் பிரிவிலும் குறிப்பு எழுதினார் ஆசிரியர் அவர்கள்.

ஈழத் தந்தை செல்வா சென்னை வருகையின்போது எடுக்கப்பட்ட நிழற்படங்களில்
தந்தை பெரியாருடன் இருக்கும் படங்களை ஆவணக் காப்பகப் பொறுப்பாளர்கள் தமிழர் தலைவரிடம் சுட்டிக்காட்டினர்.
நாளிதழ் பிரிவுக்குச் சென்று பார்த்து, அங்கு தமிழ்நாட்டிலிருந்து இதழ்கள் வருவதற்கான வாய்ப்பையும் கேட்டு அறிந்தார். தமிழர் தலைவர் அவர்களின் வருகையைப் பார்த்து வியந்த வாசகர்கள் பலர் வணக்கம் தெரிவித்தும், ஒளிப்படங்கள் எடுத்துக் கொண்டும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நூலகத்திற்குத் தந்தை பெரியார் நூல்கள் உள்பட கழக வெளியீடுகளை விரைவில் அனுப்பி வைக்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வதாக உறுதியளித்தார் ஆசிரியர். தமிழ்நாட்டின் மூத்த தலைவர், 62 ஆண்டுகள் ‘விடுதலை’ ஏட்டின் ஆசிரியர், பல நூல்களின் ஆசிரியர் என்ற பெருமைக்குரிய தலைவர் தங்கள் நூலகத்திற்கு வந்ததைப் பெரு மகிழ்வுடன் எதிர்கொண்டனர் நூலகப் பொறுப்பாளர்கள். வெளியேவரும் இடத்தில், முந்தைய நூலகத்தின் ஒளிப்படம் இருந்தது. இத்தனைப் பெரிய நூலகத்தில் அன்றைக்கிருந்த அரிய கருவூலங்கள் அழிந்து பட்ட சோகத்தை மீண்டும் அந்தப் படம் நினைவூட்டியது. அமிர்தலிங்கம் அவர்களின் உதவியாளர் ஆர்.பேரின்பநாயகம் அவர்களும், எழுத்தாளர் தங்க.முகுந்தன் அவர்களும் உடனிருந்தனர்.

நூலகத்தின் முக்கிய விருந்தினர் குறிப்பேடுகளில் தமிழர் தலைவர் எழுதிய குறிப்பு
அடுத்தடுத்த இடங்களுக்குச் செல்ல வேண்டியிருந்ததால், அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு, அமிர்தலிங்கம் அவர்களின் சொந்த ஊரான பண்ணாகம் பகுதியில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப் பயணப்பட்டோம். வழி நெடுக ஈழப் போரின் வடுக்களை நினைவுகளில் சுமந்த கிராமங்கள். அந்தப் பெயர்களை எல்லாம் அடிக்கடி செய்திகளில் நாம் பதிவு செய்து கலங்கியிருக்கிறோம்.

ஆவணக் காப்பகக் குறிப்பேட்டில்
தமிழர் தலைவர் எழுதிய குறிப்பு
(நாளை தொடரும்)