ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2023

"துரோணாச்சாரி காலமல்ல இது ஏகலைவன் காலம்!"- முதல்வர் ஸ்டாலின்


WhatsApp%20Image%202023-08-26%20at%2015.13.08

இந்தியாவில் இரண்டுவகை குழந்தைகள் உள்ளனர்.

ஒரு வகை உயர்ஜாதி பணக்கார  வீட்டுக் குழந்தைகள்! அவர் களின் காலை உணவே நெய்யில் இனிப்புச்சுவைகலந்து செய்யப்பட்ட பாதாம், பிஸ்தா, உலர் திராட்சை கலவைகள், இக்குழந்தைகள் பெரு நகரங்களின் உயர் குடியிருப்புகளில்  உள்ளனர். 

அதே நேரத்தில் 100க்கு 50 குழந்தைகளில் பெரும்பாலோர்களின் பெற்றோர்கள் பெரும் சுமைகளுக்கு இடையே குழந்தைகளுக்கு உணவு கொடுத்து தாங்களும் உணவைத் தயார் செய்து வேலைக்குச் செல்வார்கள். 

இதர 100க்கு 46 குழந்தைகளின் நிலை மிகவும் பரிதாபமானது. அவர்களுக்கு காலை ஆகாரம் என்பது தண்ணீரும் கடைகளில் கிடைக்கும் சிப்ஸும் பிஸ்கட்டும் தான். 

பெரும்பாலான தாய்மார்கள் நகரங்களிலும் கிராமங்களிலும் அதிகாலை வேலைக்குச் செல்லவேண்டிய நெருக்கடியில் குழந் தைகளுக்கு உணவு சமைத்துக் கொடுக்க நேரமின்மையால் பள்ளி செல்லும் பாதையில் உள்ள கடைகளில் கிடைக்கும் தின் பண்டங்களை வாங்கித்தந்து அதனை சாப்பிடச் சொல்லி சென்று விடுவார்கள். மதிய உணவு பள்ளிகளில் கிடைத்துவிடுகிறது. இரவு மட்டும் தான் வீட்டு உணவு; இதுதான் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்துக் குடும்பங்களிலும்!

தமிழ்நாட்டில் ஏராளமான ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட குழந்தைகள் கல்வி கற்று இன்று சமுதாயத்தில் உயர் பதவிகளை அலங்கரிக்க முக்கிய காரணமாக திகழ்ந்த மதிய உணவுத் திட்டம் தற்போது புதிய உருவம் பெற்று காலை சிற்றுண்டி திட்டமாக விரிவடைந்துள்ளது.

இந்தியாவில் இந்த ஜாதியினர்தான் படிக்க வேண்டும், இந்த ஜாதியினர் இந்த வேலைதான் செய்ய வேண்டும் என்று மேலோங்கி இருந்த ஜாதிய ஒடுக்குமுறையை தகர்க்க உருவானது நீதிக்கட்சி - அன்று சென்னை மாகா ணத்தில்  உயர்ஜாதியினரின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடியது.

கல்விக்கே ஜாதிய படிநிலைகளை தகர்த்து எறியும் சக்தி இருக்கிறது என்பதை உணர்ந்து பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாய சிறுவர்களுக்கு கல்வி வழங்க முடிவு செய்தது அன்றைய நீதிக்கட்சி அரசு. ஆனால், காலம் காலமாக இருந்த ஜாதி ஒடுக்குமுறைகளால் வறுமையில் வாடி கூலித்தொழில் செய்து வந்த மக்கள் தங்கள் பிள்ளைகளையும் வேலைக்கே அனுப்பி வந்தனர்.

முறையான உணவு கூட இல்லாத அவர்களின் வலியை உணர்ந்த நீதிக்கட்சியின் ஆட்சியாளர் சர்.பிட்டி தியாகராயர் மதிய உணவு திட்டத்தை தொடங்க முடிவு செய்தார். சென்னை ஆயிரம் விளக்கு மாநகராட்சி பள்ளியில் கடந்த 1920ஆம் ஆண்டு இதே செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி இந்தத் திட்டம் நாட்டிலேயே முதல் முறையாக தொடங்கப்பட்டது. இதற்கு கிடைத்த வெற்றியையடுத்து 4 பள்ளிகளுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப் பட்டது. ஒருவேளை உணவு கிடைத்த நிலையில் கஷ்டப்பட்ட குடும்பங் களைச் சேர்ந்தவர்கள்,   பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பி வைத்தார்கள். இப்படி அந்த ஏழைக் குழந்தைகளுக்கும் கல்வி கிடைத்தது.

இந்த உணவுத் திட்டத்தின் பலன்களை உணர்ந்த காமராஜர், தமிழ்நாடு முழுவதும் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகம் செய்தார்.  இவ்வளவுக்கும் அன்று முதல் இன்றுவரை ஒன்றிய அரசு பொருளாதார உதவிக் கரம் நீட்டவில்லை. இந்த திட்டத்தால் மாநிலம் முழுவதும் ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கல்வி கற்கத் தொடங்கினார்கள். அதன் பிறகு மேனாள் முதலமைச்சர் எம்ஜிஆர். திருச்சி பாப்பாக்குறிச்சியில் கடந்த 1982 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மதிய உணவு திட்டத்தை சத்துணவுத் திட்டமாக தரம் உயர்த்தினார். 

இந்தத் திட்டம் வெறும் .பசி தீர்க்கும் ஒன்றாக இருந்ததையும் குழந்தைகள் தொடர்ந்து ஊட்டச்சத்து குறைப்பாட்டால் பாதிக்கப்படு வதையும், அதற்காக பெரும் நிதி ஒதுக்கப்படுவதையும்  கவனத்தில் கொண்டு  ஊட்டச்சத்துடன் ஏழை மாணவர்கள் இருக்க, இந்த சத்துணவு திட்டத்தில் முட்டைகளை வழங்க முடிவு செய்தார் மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர். 

1989இல் 2 வாரத்துக்கு ஒரு முட்டை என்ற திட்டத்தை கொண்டு வந்த அவர், 1998 ஆம் ஆண்டு வாரம் ஒரு முட்டை, 2006 ஆம் ஆண்டு வாரம் 2 முட்டை, 2007 ஆம் ஆண்டு வாரம் 3 முட்டை என அதிகரித்து 2008 ஆம் ஆண்டு மாணவர்கள் பள்ளிக்கு வரும் 5 நாட்களும் முட்டை வழங்க உத்தரவிட்டார். முட்டை சாப்பிட விரும்பாத மாணவர்களுக்கு வாழைப்பழம் வழங்கினார்.

அவருக்குப் பின் வந்த ஜெயலலிதா. பள்ளி மாணவர்களுக்கு  கலவை சோறு திட்டத்தைக் கொண்டு வந்தார். இதனால் மாணவ மாணவிகள் தினசரி விதவிதமான கலவை கொண்ட உணவு வகைகளை  சாப்பிட்டனர். அதே போல் முட்டை உணவும் வெவ்வேறு வகையாக மாற்றம் செய்யப்பட்டது. 

அதன் பிறகு  தமிழ்நாட்டின் மதிய உணவுத்திட்டத்திற்கு இருண்ட காலம் வரத் துவங்கியது. உணவுத்திட்டத்தில் ஹிந்துத்துவ அமைப்புகளின் தலையீடு காரணமாக - ஏற்கெனவே வட இந்தியாவில் தோல்வி அடைந்த வருணாஸ்ரமத்தை தீவிரமாக ஆதரிக்கும் பிறரை கடைப்பிடிக்க வலியுறுத்தும் - இஸ்கான் அமைப்போடு சேர்ந்து  உணவுத் திட்டத்தை கொண்டு வர  முயற்சி செய்தனர். ஆனால் தமிழ்நாட்டில் மதவாதத்திற்கும் இட மில்லை மதவாதத்தை உணவில் திணிக்கும் திட்டத்திற்கும் ஆதரவில்லை - இதனால் அது முழுமைபெறவில்லை. 

அதன் பிறகு 2021 ஆம் ஆண்டு  திராவிட முன்னேற்றக்கழக ஆட்சி  சமூக நீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்தது, அதன் பிறகு மதிய உணவுத் திட்டம் மீண்டும் புத்துயிர் பெற்றது மட்டுமல்லாமல் புதிய வடிவம் எடுக்கத்துவங்கியது

2022 ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா பிறந்த நாளன்று காலைச் சிற்றுண்டித் திட்டத்தை அறிமுகம் செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.  இந்தத் திட்டம் தொடர்பான அறிவிப்பை சட்ட மன்றத்தில் வெளியிட்டபோதே இதற்கு வரவேற்பு அதிகரித்தது. தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு  இந்த காலை சிற்றுண்டித் திட்டம் பெரும் வாய்ப்பாக அமைந்தது. இந்தியாவில் தமிழ்நாடு மட்டும் தான்  மதிய உணவு அமைப்பாளர்களை பணியமர்த்தியுள்ளது. 

இதன் பலன்  ஆற்றல் மிக்க கல்வி அறிவு மிக்க ஒரு பெரும் தலைமுறையை தமிழ்நாடு கொண்டிருக்கும். எதிர் காலத்தில் இந்தியாவின் பிற மாநிலங்களை அனைத்து துறையிலும் பின்னுக்குக்குத்தள்ளி தமிழ்நாட்டை  முன்னேற்றப்பாதையில் கொண்டுவர - கல்வி அறிவு வளம் கூடிய பெரும் இளைஞர் படைகள் தெற்கிலிருந்து புறப்படும். முக்கியமாக சுகாதாரம் தொடர்பான நிதி குறிப்பாக ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு ஒதுக்கப்படும் தொகை வேறு நல்ல திட்டங் களுக்கு செல்லும் வகையில் ஆரோக்கியமான சமூகம் தெற்கில் உருவாகும்.

இதில் ஒரு விழுக்காடு முதலீடு செய்தால் பிற்காலத்தில் 9 விழுக்காடு பயன் கிடைக்கும் என்பது ஆய்வாளர்களின் கணிப்பு. 'ஏகலைவனுக்கு வில் கற்றுக் கொடுக்க மறுத்தார் துரோணாச்சாரி. ஆனாலும் தானாக முயன்று உழைத்து வில் வித்தை வீரன் ஆனான் ஏகலைவன். அதைக் கூடப் பொறுக்காமல் வர்ணாசிரமப் புத்தியோடு ஏகலைவனின் கட்டை விரலைக் காணிக்கையாக கேட்டுப் பெற்றார். துரோணாச்சாரியார். அதனைத்தான் பொருத்தமான நேரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் இது. துரோணாச்சாரி காலமல்ல - ஏகலைவன் காலம் என்றார். சமூகநீதித் திட்டம் என்றார். சமூகநீதிக்கான சரித்திர நாயகர் என்று முதலமைச்சரை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி பாராட்டியது தான் எத்தகைய தொலைநோக்கு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக