சனி, 3 டிசம்பர், 2022

தமிழர் தலைவர் ஆசிரியருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி பிறந்த நாள் வாழ்த்து!


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (2.12.2022) தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 90 ஆவது பிறந்தநாளையொட்டி, அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்குப் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்து, அவருடைய வாழ்விணையர் மோகனா அம்மையாருக்கும் பொன்னாடை அணிவித்தார். நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ வேலு, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெகத்ரட்சகன், முரசொலி செல்வம் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியருக்குப் பொன்னாடை போர்த்தி பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். உடன்  திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் (சென்னை, 2.12.2022).

-------++++---++-+---++ 

தாய்க் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா நீடு வாழ்க!

தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி!


நேரில் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தார் (சென்னை, 2.12.2022)

சென்னை, டிச.2- திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 90ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க.தலைவர் முதலமைச்சர் மாண்புமிகு மானமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் "தாய்க் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா நீடு வாழ்க!" என்று குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு:-

'திராவிட இயக்கத்தின் திருஞான சம்பந்தர் என்ற பேரறிஞர் அண்ணாவின் புகழுரைக்கேற்ப, 10 வயது முதல் தந்தை பெரியாரின் இலட்சியத்தை முழங்கத் தொடங்கி, தொண்டறத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு, இளை யோருக்கு நிகராக சமூகநீதிப் போர்க்களத்தில் சளைக்காமல் போராடி, பகுத்தறிவு இனமான உணர்வினை ஊட்டி வரும் தாய்க் கழகமாம் திராவிடர் கழகத்தின் தலைவர் மானமிகு ஆசிரியர் அய்யா அவர்களுக்கு அகவை 90 என்பதில் அகம் மிக மகிழ்கிறேன். ‘திராவிட மாடல்' அரசின் சமூகநீதிக் கொள்கை சார்ந்த அனைத்துத் திட்டங்களுக்கும், சட்டப் போராட்டங்களுக்கும் உறுதுணையாய் வழிகாட்டியாய்த் திகழும் ஆசிரியர் அய்யா அவர்கள் நூறாண்டு கடந்தும் நலமோடு வாழ்ந்திட நெஞ்சார வாழ்த்துகிறேன்.

-இவ்வாறு திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக