சனி, 4 ஏப்ரல், 2020

பிரதமரின் தொலைக்காட்சி உரை ஏமாற்றம் அளிக்கிறது!

பொருளாதார நிபுணர்கள் - மருத்துவப் பேரறிஞர்கள் - சிந்தனையாளர்களின் ஆலோசனைகளைப் பெறுக!

உடனடித் திட்டம்: மருத்துவச் சேவைகள் - பொருளாதாரத் திட்டங்கள்பற்றி

ஆக்கப்பூர்வமாக அறிவிப்பதே இப்பொழுது முக்கியம்!

பிரதமரின் தொலைக்காட்சி உரை ஏமாற்றம் அளிக்கிறது; பொருளாதார நிபுணர்கள் - மருத்துவப் பேரறிஞர்கள் - சிந்தனையாளர்களின் ஆலோசனைகளைப் பெறவேண்டும் என்றும், மருத்துவச் சேவைகள், பொருளாதாரத் திட்டங்கள்பற்றி ஆக்கப்பூர்வமாக அறிவிப்பதே இப்பொழுது முக்கியம் என்றும் மத்திய அரசுக்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

பாலைவனத்தில் காணும் ‘ஓயாசிஸ்' ஊற்று

இன்றைய நிலவரத்தில் நாடெங்கும் கரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்தபாடில்லை; கூடுதலாகி வருகிறது. ஒரு பகுதியினர் குணமாகி வீடு திரும்பும் செய்திதான் இந்தப் பாலைவனத்தில் காணும் ‘ஓயாசிஸ்' ஊற்று ஆகும்.

பிரதமரின் உரை - ஏமாற்றத்தையே தந்தது!

நேற்று (3.4.2020) பிரதமர் மோடி அவர்கள் நாட்டு மக்களுக்கு சிறப்புரை ஆற்றப் போகிறார் என்ற செய்தி வந்த வுடன், மாநில முதலமைச்சர்கள் முதல் கடைக்கோடி மக்கள்வரை மிகுந்த எதிர்பார்ப்போடு இருந்தனர். அடுத்தகட்ட ஆக்கப்பூர்வ திட்டங்களின் - சிகிச்சைக்கு மருத்துவமனைகளின் விரிவாக்கம் - அதற் கேற்ப மாநில அரசுகளுக்கான கூடுதல் நிதி உதவி, மத்திய அரசே ஆங்காங்கு தனது சுகாதாரத் துறை, அறிவியல் ஆய்வுத் துறை, தொழில்நுட்பத்துடன், நிதித்துறை மூலம் மக்களின் அல்லல் அவதிகளைப் போக்கும் வகையில் பல புதிய தெம்பூட்டும் அறிவிப்புகளை அறிவிப்பார் என்ற எதிர் பார்ப்பு ஏமாற்றத்தையே தந்தது.

நாட்டில் இருக்கும் 1.2 கோடி சிறு வியாபாரிகளின் மளிகைக் கடைகள் போன்றவற்றில், சுமார் ஒரு கோடி கடைகள் மூடப்பட்டுள்ளன. - ஊரடங்கு காரணமாக.

ஊரடங்கு தேவைதான்- எனினும், இப்படி அனைத்தும் மூடப்பட்டதால், வேலை கிட்டாது ஏற்படும் பொருளாதார இழப்பினால் பாதிக்கப்படுபவர்கள் சிறு தொழில் நடத்து பவர்கள்தான்.

அவர்களுக்குப் போதிய மாற்று புது நம்பிக்கை தரும் திட்டம் இல்லையே என்ற ஏமாற்றம் உள்ளது.

மாநில அரசுக்கு

நிதி வழங்குவதில்

முன்னுரிமை முக்கியம்!

மாநில அரசுகள்தான் உண்மையில் மக்களிடம் நேரடித் தொடர்புடைய அரசுகள்; மத்திய அரசின் திட்டங்கள் எவையாயினும் மாநில அரசின்மூலம்தான் செயல்படுத்த முடியும் என்பது யதார்த்தம். எனவே, மாநில அரசுகளுக்கு நிதியை வழங்குவதில் முன்னுரிமை காட்டுதல் முக்கியம்.

பழைய பாக்கி - நிலுவைகளை அளிப்பது, மதிப்புக் கூட்டு வரி சில மாதங்கள் தள்ளல், ஜி.எஸ்.டி. பாக்கி, கூடுதலாக கரோனா தடுப்பு - ஒழிப்பு தற்காலிக மருத்துவமனைகள் - சோதனை மய்யங்கள் உருவாக்குவது - மருத்துவ ஓய்வாளர்களை மீண்டும் பணியமர்த்தி, அடுத்த கட்டத்திற்குத் தயார் நிலை போன்ற திட்டங்கள் ‘போர்க்கால அடிப்படை' என்று உச்சரிக்கையில் நிதி ஆதாரங்களைப்பற்றி அறிவிப்பு வந்திருந்தால், புது நம்பிக்கையை அது பெருக்கியிருக்கும். வெறும் ஒலி, ஒளிக்காட்சிகளின்மூலம் நாடே ஒன்றுபட் டுள்ளது என்பதை நாளை (5.4.2020) 9

மணிக்கு 9  நிமிடங்கள் இருட்டில் ஒளி பாய்ச்சுதல் என்பது ஒரு நல்ல அடையாள மாகக் கூட இருக்கலாம். ஆனால், இது அறிவியல்பூர்வமானது அல்ல. ஆக்கப் பூர்வ எதிர்ப்பார்ப்புகளை அது எந்த அளவில் நிறைவேற்ற உதவும் என்ற கேள்வி பல பக்கங்களிலிருந்து கிளம்புகிறது!

உடனடித் திட்டங்கள் அவசியம்!

பொருளாதார நிபுணர்கள், மருத்துவத் துறை பேரறிஞர்கள், சிறந்த சிந்தனை யாளர்கள் - இவர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு அமைத்து-  உடனடித் திட்டம், நிவாரணம், தடுப்புக்கான சிகிச் சைகள் - கூடுதல் மருத்துவ சேவையாளர் கள் அணி ஆயத்தம் - நீண்டகால அடுத்த கட்ட பொருளாதார சிக்கல் தீர்வு - விவ சாயிகளின் வாழ்வாதாரம் - வேலை வாய்ப்பு - விலைவாசி உயர்வு - நிதி நிலைமைபற்றி ஆக்கபூர்வ ஆலோசனை களை மக்களுக்குத் அறிவிப்பதே அவசரத் தேவையாகும்!

 

கி.வீரமணி,

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

4.4.2020


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக