புதன், 1 ஏப்ரல், 2020

‘தினமலரின்' திமிரு...

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாட்டில் அசாதாரணமான சூழ்நிலை நிலவுகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக ஸ்தம்பித்துள்ளது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது ஏழை-எளிய மற்றும் விளிம்பு நிலை மக்கள் தான். குறிப்பாக அன்றாடம் காய்ச்சிகளான உழைப்பாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர்.

இந்தச் சூழ்நிலையிலும் கூட ‘தினமலர்' பத்திரிகை தன்னுடைய திமிரையும், வன்மத்தையும் வெளிப்படுத்துகிறது ‘தினமலர்' திருச்சி பதிப்பில்,

‘‘தீண்டாமை தேவைப்படற தேண்ணா!'' என்ற தலைப்பில் ஒரு டாக்டர் சொல்வதுபோல,

‘‘எட்ட நின்னு பேசுங்கோ,

ஜலத்தை அண்ணாந்து குடியுங்கோ,

வேற்றாள் தொட்ட பொருட்களை நல்லா ஜலம் விட்டு அலம்பி ஆத்துக்குள்ள கொண்டு போங்க,

வாயை கைக்குட்டையால் மூடிண்டு பேசுங்க,

யாராவது மேல பட்டா கை கால நல்லா சோப்பு போட்டு அலம்புங்க...

வெளியில் கண்டத சாப்பிடாதீங்கோ"

என்று எழுதி (கரோனா வராமல் தடுக்க வழிகள்) என்று கூறப்பட்டுள்ளது.

கரோனோ பரவலைத் தடுக்க சுகாதாரத்துறை அளித்துள்ள அறிவுரைகளை தன்னுடைய கேடுகெட்ட சித்தாந்தத்திற்கு ‘தினமலர்' பயன்படுத்திக்கொள்ள முயல்கிறது.

ஜாதி, மத அடிப்படையிலான தீண்டாமையை எந்த வகையிலேனும் கடைப்பிடிப்பது குற்றம் என்று அரசமைப்புச் சட்டம் கூறியுள்ள நிலையில், இது அப்பட்டமாக தீண்டாமையை நியாயப்படுத்தும் வகையில் உள்ளது. இதற்காக தினமலர் பகிரங்கமாக மன்னிப்புக்கேட்க வேண்டும். கரோனோ தற்காலிகமானது. ஜாதி-மத வெறியும், தீண்டாமையும் மனித சமூகத்தைப் பிடித்துள்ள நிரந்தர நோய்கள். இதை ஒரு போதும் பரவ அனுமதிக்கக்கூடாது.

- மதுரை சொக்கன்

-  விடுதலை நாளேடு 1 4 20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக