வெள்ளி, 3 ஏப்ரல், 2020

நம் அனைவர் வாழ்வின் முக்கிய நேரம் - நாமும் வாழ்ந்து பிறரையும் வாழவைக்கவேண்டிய கடமையின் உச்சம்

மனிதன் தானாகவும் பிறக்கவில்லை; தனக்காகவும் பிறக்கவில்லை'' என்ற தந்தை பெரியாரின் உயர்கருத்துகளை உள்வாங்கிச் செயல்படுவீர்!

சமூகத்தை - உலகத்தைக் காக்க உன்னதமான கடமையாற்ற வாரீர்!

நம் அனைவர் வாழ்வின் முக்கிய நேரம் - நாமும் வாழ்ந்து, பிறரையும் வாழ வைக்கவேண்டிய கடமையின் உச்சம் இது. கட்டுப்பாடு காத்து, கருணை உள்ளத்தோடு ஒத்தறிவு கருதி, பெருந்தன்மையோடு சமூகத்தை - உலகத்தைக் காக்க உன்னதமான கடமையாற்ற வாரீர் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்

கரோனாவின் கொடூரம் இன்னும் சில வாரங்களில் உச்சக்கட்டத்திற்குச் செல்லக் கூடும்; ஆதலால், மக்கள் மிகவும் எச்சரிக் கையாக இந்த கரோனா தொற்று பரவாம லிருக்க மிகமிக, மிகப் பாதுகாப்புடன் இருக்கவேண்டும்.

அது யார் கையில் இருக்கிறது? நம் கையில், நம் முடிவில், நம் உறுதி யில்தான் தோழர்களே இருக்கிறது. எளிய வழி - மருந்துச் செலவுகூட இல்லை!

நம்மைத் தனிமைப்படுத்திக் கொள்ளு வதைக் கடைப்பிடிப்பதன்மூலம் நம்மையும் காப்பாற்றி, அடுத்த (சமுதாயத்து) மனிதர் களையும் காப்பாற்றும் பெருங்கடமையாற்று கிறோம்.

நன்றிக் கடனுக்குரியவர்கள்!

மருத்துவர்கள், செவிலியர்கள், மருத் துவ தொண்டறச் செம்மல்கள், இதனை ஒருமுகப்படுத்தும் ஆட்சியாளர்கள்  - பிரதமர் முதல் முதல்வர்கள், ஆளுவோர், எதிர்க்கட்சித் தலைவர்கள், தாராளமாக வாரி வழங்கிடும் நாடாளுமன்ற உறுப் பினர்கள், தனியார் நிறுவனங்கள் அனை வருமே சமூகத்தின் நன்றிக் கடனுக்குரிய வர்கள்.

டில்லியிலும் மற்ற இடங்களிலும் மருத் துவர்கள், மருத்துவத் துறையைச் சேர்ந்த வர்கள் பாதிக்கப்பட்டிருப்பது கவலைக் குரிய ஒன்று. அவர்களுக்குரிய மருத்து வமும், பாதுகாப்பும் அளிக்கப்படவேண்டி யது மிகவும் அவசியமாகும். நாட்டு மக்களின் நல்லெண்ணம் அவர்களின்பால் நிச்சயம் இருக்கிறது. அவர்கள் குணம் பெறவேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு!

மிகவும் நெருக்கடியான, மனவேதனை யும், பொருளாதார நெருக்கடியும், அதனால் ஏற்படும் மக்களின் மன அழுத்தமும் கூடும் இவ்வேளையில், கட்சி, ஜாதி, மதம், குரோத உணர்ச்சி, அரசியல் தூண்டிலைத் தூக்கி குட்டையைக் குழப்பி சிறு மீன், பெருமீன் கிடைக்காதா என்றெல்லாம் பார்க்கும் கயமை இவைகளுக்கு இடமில்லை.

அரசியல் ஆதாயம் தேட நினைப்பது

மிகப்பெரிய சிறுமைக்குணம்!

எவர் எந்த அளவு உதவினாலும், வாழ்த்தவேண்டும்; வரவேற்கவேண்டும். எல்லோரும் ‘‘அம்பானி, கிருபானிகளோ, அதானிகளோ, டாட்டாக்களோ அல்லது பெருமுதலாளிகளோ அல்ல. (அவர்களில் பலர் மக்கள் பணத்தை பல ஆயிரம் கடன் வாங்கி விழுங்கி ஏப்பம் விட்டு, வெளி நாட்டில் உல்லாச வாழ்வு வாழ்கின்ற சமுதாய அட்டைகள்). பிரதமர் நிதிக்கோ, முதல்வர் நிதிக்கோ, அவரவர் முடிந்த அளவுக்கு உதவுகிறார்கள்; இதை விமர்சனம் செய்வதோ, கேள்வி கேட்டு அரசியல் ஆதாயம் தேட நினைப்பதோ மிகப்பெரிய சிறுமைக்குணம்.

பா.ஜ.க., தி.மு.க.வை நோக்கி - நன்கொடை பற்றி எழுப்பும் கேள்வி மிகவும் கேவலமான - சுமூக சூழ்நிலையைக் கெடுப்பதாகும்.

ஒருவருக்கொருவர் பதில் சொல்லிக் கொண்டு இருப்பதற்கு இதுவா நேரம்?

மக்கள் அறிவார்கள், யார் உண்மையாக அழுகிறார்கள் என்பதை!

தமிழக அரசின் சிறப்பான செயல்பாடு!

தமிழக அரசைப் பொறுத்தவரை அவர்கள் குறிப்பாக மருத்துவத் துறை, காவல்துறை, வருவாய்த் துறை முதலியவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

பலரையும் அழைத்து கருத்துரைகள் - யோசனைகள் கேட்டு, போர்க் காலத்தில் ஏற்படும் கூட்டுப் பொறுப்பாக அனை வரையும் ஈடுபடுத்தினால், மிகப்பெரிய ஒருமையும், சீர்மையும் தழைத்தோங்கும் வாய்ப்பும் ஏற்பட்டிருக்கும்.

முதலமைச்சர் இது மருத்துவர்கள் பிரச்சினை என்று கூறியது ஏற்கத்தக்கதல்ல. என்றாலும், குறையோ, விமர்சனமோ செய்யத் தேவையில்லை.

மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும்!

1. ஓய்வு பெற்ற அதிலும் கடந்த ஆண்டு, இவ்வாண்டு ஓய்வு பெற்ற - அனுபவம் மிகுந்த - மருத்துவர்கள் மீண்டும் தற்காலிகமாகப் பணியில் சேர ஒரு பட்டியல் தயாரித்து தயார் நிலையில் - இரண்டாம் கட்டப் பணி - தற்காலிக மருத்துவ சோதனை நிலையில், மருத்துவ உதவிப் பணிகள் செய்வதற்கு.

2. அதுபோலவே தொடர்ந்து பணியாற்றி வருபவர்களுக்கு ஓய்வும், புத்தாக்க சக்தியும் தேவை என்பதால், அதனை மாற்றிவிட இத்தகைய முயற்சிகள் தேவை.

3. நிதி ஆதாரத்திற்கு மத்திய அரசு, மாநில அரசுக்குத் தரவேண்டிய ஜி.எஸ்.டி., பங்கு, மானிய பாக்கி, மத்திய அரசிடமிருந்து பெறவேண்டிய நிதிகள் பாக்கி இவற்றை உடனே மத்திய அரசு தர வேண்டும் என்பதை தமிழ்நாடு அரசு அனைத்து எம்.பி.,க்கள்மூலம் மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டியது அவசர, அவசியமாகும்!

ஒத்துழைப்புத் தரவேண்டிய தருணம் இது!

இப்போது அனைவரின் கவனமும் நம்மைத் தனிமைப்படுத்திக் கொண்டும், தூய்மைப்படுத்திக் கொண்டும் (அடிக்கடி கைகளைக் கழுவவேண்டும்; 20 நொடிகள் சோப்புப் போட்டுக் கழுவுதல், தும்மல் - இருமலின்போது மற்றவர்மீது படாது கைக்குட்டையால், காகிதத்தால் முகத்தை மூடுதல், முகக்கவசம், ஒரு மீட்டர் தள்ளி நிற்றல் - முதியவர்கள் முறைப்படி மருந்து களைத் தவறாது எடுத்துக் கொள்ளுதல் - ஆரோக்கிய எளிய உணவு) வாழ்ந்து ஒத்துழைப்புத் தரவேண்டிய தருணம் இது!

போர்க்கால அடிப்படையில் பணிகளை முடுக்கிவிட வேண்டும்.

சமூகத்தைப் பாதுகாக்கும்

காவல் அரண்கள்

காவல்துறையின் பணி மிகவும் பாராட்டத்தக்கது. காவல்துறையினருக்காக அல்ல ஊரடங்கு ஆணை - நமக்காக - நம் உயிர் காக்க. அவர்கள் நம் உயிர் காக்கும் தோழர்கள் - கால நேரம் பாராது தங்கள் உயிரைப் பணயம் வைத்து மருத்துவர் களும், காவல்துறையினரும், துப்புரவுத் தொழிலாளர்கள் என்ற தன்னல மறுப் பாளர்களும் நம் சமூகத்தைப் பாதுகாக்கும் காவல் அரண்கள்.

அவர்களது தொண்டுக்குத் தலை தாழ்த்தி வணங்கி நன்றி கூறுவோம்!

உங்கள் மனச்சாட்சி,

உங்களை மன்னிக்காது!

இந்நேரத்தில் சிலர் வாணிபத்தில் ஏழை, எளிய மக்களின் பசி தீர்க்க உதவும் உணவுப் பண்டங்கள், காய்கறிகளில் விலையேற்றி லாபம் தேட நினைக்காதீர்கள். இதைவிடப் பெரிய சமூக விரோதச் செயல் வேறில்லை. யார் மன்னித்தாலும், உங்கள் மனச்சாட்சி, உங்களை மன்னிக்காது!

கொள்முதல் கூடுதலானால் அரசிடம் உதவி கேளுங்கள் - தன்னார்வ நிறு வனங்களின் உதவி கேளுங்கள். ஏழை, எளியவர்களுக்கு பசி தீர ஒத்துழையுங்கள். ‘போதும்' என்ற ஒரு சொல் அந்தப் பசிக்குத் தரும் உணவுக்கு மட்டுமே உள்ள தனித்தன்மை - பெருந்தன்மை!

இந்நேரம் நம் அனைவர் வாழ்வின் முக்கிய நேரம் - நாமும் வாழ்ந்து, பிறரையும் வாழ வைக்கவேண்டிய கடமையின் உச்சம் இது.

சமூகத்தை - உலகத்தைக் காக்க

உன்னதமான கடமையாற்ற வாரீர்!

கட்டுப்பாடு காத்து, கருணை உள்ளத் தோடு - ஒத்தறிவு (empathy) - ‘பிறிதின் நோய் தன் நோய்போல்' கருதி, பெருந்தன் மையோடு சமூகத்தை - உலகத்தைக் காக்க உன்னதமான கடமையாற்ற வாரீர்!

ஆழ்ந்து சிந்தியுங்கள்! செயல்படுங்கள்!

வீட்டுக்குள் இருங்கள்!

சட்டத்தை மதிக்காத சமூகம் பாழ்பட்ட சமூகம்.

தந்தை பெரியார் சொன்னார், ‘‘மனிதன் தானாகவும் பிறக்கவில்லை; தனக்காகவும் பிறக்கவில்லை'' என்று. ஆழ்ந்து சிந்தி யுங்கள்! செயல்படுங்கள்! வீட்டுக்குள் இருங்கள்! அப்போதுதான் கரோனா கேட்டுக்குள்ளிருந்து விடுதலை பெற முடியும்!

மறவாதீர், ஒத்துழைப்பீர்!

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

3.4.2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக