செவ்வாய், 12 டிசம்பர், 2023

சென்னை வெள்ளப் பேரிடர் மீட்புப் பணியில் அய்ந்து நாட்களில் 14,000 பேருக்கு நிவாரணப் பொருட்கள் பெரியார் தொண்டறம் அணித் தோழர்களால் வழங்கப்பட்டுள்ளன!


9-20-scaled

சென்னை, டிச.12, நேரிடையாகவும், மற்றவர்களின் உதவிகள் மூலமும், இன்னொருவரிடம் கொடுத்தனுப்புவதன் மூலமுமாக எனப் பல வகைகளிலும் பெரியார் தொண்டறம் அணியி னர் நிவாரணப் பொருட்களை ஓய்வில்லாமல் வழங்கி வருகின்றனர்.

நான்காம் நாளாக பேரிடர் மீட்புப் பணிகளில் பெரியார் தொண்டறம் அணியினர் ஈடுபட்டனர். இதற்காக, தாம்பரம் ரங்கநாதபுரம் 7 ஆவது தெருவிலும், பெரம்பூரில் உள்ள டான் பாஸ்கோ பள்ளியிலும், அமைந்தகரையில் திருவீதி அம்மன் கோயிலிலுமாக மூன்று இடங்களில் உணவு தயாரிப்புப் பணிகள் நடைபெற்றன. தன்னிச்சையாக நடைபெற்ற நிவாரணப் பணிகளில் அமைந்தகரையிலுள்ள திருவீதி அம்மன் கோயில் மற்றும் பெரம்பூர் டான் பாஸ்கோ கிறித்துவப் பள்ளி, தாம்பரம் ரங்க நாதபுரத்திலுமாக மூன்று இடங்களில் உணவு தயாரிக்கப்பட்டு, எண்ணூரில் அத்திப்பட்டு புதுநகரில் உள்ள மஸ்ஜிதே மதீனா மசூதி போன்ற பகுதிகளில் வைத்து கொடுக்கப்பட்ட அரிய வாய்ப்பு பெரியார் தொண்டறம் அணித் தோழர்களுக்கு இயற்கையாக அமைந்தது குறிப் பிடத்தக்கது. இந்த மூன்று இடங்களி லிருந்தும் 6.12.2023 லிருந்து 11.12.2023 வரையிலான அய்ந்து நாட்களில், 15,000 பேருக்கு உணவும் மற்ற உதவிகளும் கொடுக்கப்பட் டுள்ளன.

பெரியார் தொண்டறத் தோழர்கள் நேரிடை யாக செய்யும் பணிகளைத் தவிர இன்னும் பல பணிகளும் நடைபெற்றுவருகின்றன. இதில் விருகம்பாக்கம் வேம்புலியம்மன் கோயில் முதல் தெருவில் அடுக்குமாடிக் குடியிருப்பில், முதல் தளம் வரையிலும் தண்ணீர் ஏறிவிட்டதால், முதல் மாடியில் 3 பெண்கள் கைக் குழந்தையுடன் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்யமுடியுமா? என்று அந்தக் குடும் பத்தின் நண்பர் ஒருவர், பெரியார் தொண்டறம் அணி வெளியிட்டிருக்கக்கூடிய ”வாட்ஸ் ஆப்” குழுவில் பதிவிட்டிருக்கிறார். அதைப்பார்த்த வழக்குரைஞர் தளபதி பாண்டியன், அண்ணா நகர் துணை ஆணையர் உமையாள் அவர்களுக்கு தகவல் கொடுத்திருக்கிறார். அந்தக் குடும்பத்தைக் காப்பாற்றிவிட்டு, அவர் களை காவல்துறை வாகனத்திலேயே அழைத்து வந்துவிட்டதை ஒளிப்படம் எடுத்து தளபதி பாண்டியனுக்கு அனுப்பிவைத்திருக்கிறார் அண்ணா நகர் துணை ஆணையாளர் உமையாள். தளபதி பாண்டியன், அந்தப்படத்தை வாட்ஸ் ஆப் குழுவில் பதிவிட்டவருக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அவரும் மிகவும் நன்றி என்று பதில் அனுப்பியிருக்கிறார்.
அதே போல், அய்யப்பன் தாங்கலில் இருக்கும் Rehoboth Home for the Mentally Challenged Women என்ற அமைப்பிலிருந்து பெரியார் தொண்டறம் அணியினருக்கு அழைப்பு வந்தது. உடனடியாக 200 பேருக்கான உணவு, தண்ணீர் முதலியவற்றை அனுப்பி வைத்திருக்கிறார்கள். நாம் எதிர்பார்க்கவில்லை யென்றாலும் அவர்களே மனநல மாற்றுத் திறனாளிகள் சேர்ந்து உண்பதை படம் எடுத்து அனுப்பி நன்றி தெரிவித்திருக்கிறார்கள். குழந் தைகளுக்குத் தேவைப்படும் பிஸ்கட்கள் வியாசர்பாடி கலியாணபுரம் மூன்று தெருக்களில் வழக்குரைஞர் பா. மணியம்மை தலைமையில் வழங்கப்பட்டது. தாம்பரத்தில் 1000 பேருக்கு உணவு 3500 தண்ணீர் பாட்டில்கள் பா.முத்தையன் தலைமையில் வழங்கப்பட்டுள்ளன. அதே போல அமைந்தகரை, எழும்பூர், கொருக் குப்பேட்டை, கொடுங்கையூர் பகுதிகளிலிருந்து உணவு தேவைக்கான அழைப்பு வரப்பெற்று மற்றவர்கள் மூலம் உணவும், தண்ணீரும் அனுப் பப்பட்டிருக்கின்றன. நேற்றும் (11.12.2023) பல இடங்களில் இருந்து வந்த அழைப்புகளுக்காக அமைந்தகரையிலுள்ள திருவீதி அம்மன் கோயிலில் 2000 பேருக்கு உணவு தயாரிக்கப் பட்டு, தேவையான இடங்களுக்கு அனுப்பப் பட்டது.

ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஒருங் கிணைப்பில் வழக்குரைஞர்கள் தளபதி பாண் டியன், கெய்சர் பாண்டியன், திவாகர், துரை அருண் மற்றும் முரளிகிருஷ்ணன் சின்னத்துரை, பசும்பொன், மு.பவானி, ராம்குமார், ஆவடி ரவீந்திரன், ஆதினிபாக்யா, அறிவன் பாக்யா, நித்யகுமார், அரும்பாக்கம் சா.தாமோதரன், அழகிரி (எ) நரேஷ், பூவை தமிழ்ச்செல்வன், சாம்குமார், டேனியல், கோமதி, வந்தனா, சாந்தி, லூர்து, சாம்பீம் பெரியார், கருணா பாண்டியன் பாரதி, ராம், சிறீதர், ஆனந்தன், ரமா ஆ.கிசோர் நேற்றைய (11.12.2023) பெரியார் தொண்டரணி சார்பில் தொண்டாற்றினர்.

தொடரும் தொண்டறம்

பெரியார் தொண்டறம் அணி சார்பில் உணவு தயாரிப்புப் பணியை நிறுத்திவிடலாம் என்று முடிவு செய்திருந்தனர். ஆனால், ஏதேனும் ஓரிடத்திலிருந்து உணவுக்காக அழைப்பு வந்தவண்ணம் இருந்தது. ஒருவர் கூட பட்டினி கிடந்துவிடக்கூடாது என்பதால், தோழர் பிரின்சு தேவையிருந்தால் அழையுங்கள் என்று பதிவிட்டிருந்தார்.
இப்பதிவைக் கண்டு, முரளிகிருஷ்ணன் சின்னத்துரையின் நண்பர் கைலாஸ் சத்யா தொடர்பு கொண்டு 400 சாப்பாடு அவசியம் தேவைப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஈஞ்சம்பாக்கத்திற்கு 500 உணவு தேவை என்று அழைப்பு வந்தது. இன்னும் சில இடங்களில் அழைப்புகள் வந்தவுடன் அவசரமாக 2000 பேருக்கு உணவு தயாரிக்கும் பணிகள் தொடங்க முடிவு செய்யப்பட்டது. சமையல் தொடங்கும் போது மேக மூட்டத்துடன் தூறல் போடத் தொடங்கியது. களப்பணியாளர்கள் அதிகம் தேவைப்பட்ட சூழலில் திராவிடர் கழகத் தலைவரின் தள்ளிவைக்கப்பட்ட விடுதலை சந்தா வழங்கும் நிகழ்ச்சிக்காக வெளியூரில் இருந்து வந்திருந்த தோழர்கள் உணவுப் பொட்டலம் போடும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். நாங்கள் உறுதி செய்த எண்ணிக்கையை விட கூடுதலாக சமைத்ததால் யாருக்கேனும் உணவுத் தேவை இருக்கிறதா என அதிஷா, கிருத்திகா தரனிடம் கலந்துபேசி, கூடுதலாக அமைந்தகரையில் தயார் செய்த 2000 பேருக்கான உணவையும் தேவைப்பட்ட மக்களுக்கு சேர்க்கப்பட்டது. உணவை கொண்டு செல்லும் வண்டியை ஏற்பாடு செய்வதிலிருந்து பல இடையூறுகளைக் கடந்து, பிரின்சு, தமிழ் க.அமுதரசன், அன்சாரி, மில்லர் செல்வன், முரளிகிருஷ்ணன் சின்னத்துரை ஆகியோரின் ஒத்துழைப்போடு பெத்தேல் நகரிலும், அங்கிருக்கும் தோழர்கள் மூலம் இதுவரை யாரும் செல்லாத இடங்களுக்கெல்லாம் சென்று நிவாரணப்பணிகளை செய்துவிட்டு, அங்கிருந்த மக்கள் – பெரியார் தொண்டறம் அணித்தோழர்களிடம் காட்டிய உளப்பூர்வமான நன்றியைப்பெற்றுக்கொண்டு, மிகுந்த மனநிறைவுடன் தோழர்கள் இரவு 11:30 க்குப் பிறகு இருப்பிடங்களுக்குத் திரும்பினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக